வருடம் தொடங்கிய நாள் தொட்டு, சூரிய பகவான் அவர்கள் டியூட்டிக்கு வரவேயில்லை என்பதாலும், தொடர்ந்து வர்ணபகவானே இரவுபகல் ஓய்வு இல்லாமல் டியூட்டியில் இருந்ததாலும் மக்கள் எல்லோரும் சூரியனைச் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்த வாரம் அது.
போனால் போகுது இன்றொரு நாள் மட்டும் எட்டிப் பார்த்து விட்டு ஓடி வருவோம் என்கிற ரீதியில், அப்போது தான் மெல்ல எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தார் மிஸ்டர் சூரியபகவான் அவர்கள்.
துரை இன்று போனால் என்றைக்குத் திரும்பி வருவாரோ என்கிற பரபரப்பில், வீட்டுக்குள் உலர்ந்தும் உலராமலும் கிடந்த துணிகளை எல்லாம் வெளியே கொண்டு வந்து போடத் தொடங்கியிருந்தார்கள் யாழ்மக்கள்.
அதே நேரத்தில் தட்டுத்தடுமாறி நடந்தபடியே வந்து, தன் கையில் கிடந்த துணிகளை
“மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னுக்கு கசக்கும் பின்னுக்கு இனிக்கும் எண்டுறது யாருக்கு விளங்கப் போகுது.. ஒருத்தருக்கும் விளங்காது.. அப்போ அது எங்க இந்தக் காலத்துப் பிள்ளையளுக்கு மட்டும் விளங்கப் போகுது.. என்ன நல்லதுக்குச் சொன்னாலும் எதிரி நாட்டுக்காரனைப் பாக்குற மாதிரியே பாக்குறது.. என்னத்தைச் சொல்ல இப்புடிப் புலம்புறதே எனக்கும் வேலையாப் போச்சுது..”
என ஆதங்கப் பட்டுக் கொண்டே, காயப் போட்டுக் கொண்டிருந்தார் சிவஞானப்பிரகாசம்.
“தாத்தா.. இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு..”
என்று கொண்டே வேகமாக வந்து, அவருடைய கைகளில் கிடந்த துணிகளை மெல்ல இழுத்தாள் அவரின் பேர்த்தி விஷ்ணுவர்தனி.
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லேடியம்மா.. ஒரு பிரச்சனையும் இல்லை.. என்ர வேலையளை நானே பாத்துக் கொள்ளுறன்.. எனக்கு ஒருத்தரிந்த ஒத்தாசையும் வேண்டாம்..”
என்று கொண்டே, அவளிடம் இருந்து துணிகளைப் பிடுங்காத குறையாக வாங்கிக் காயப் போட்டு விட்டு உள்ளே போய் விட்டார் அவர்.
சாதாரணமாக நடக்கையில் மெல்லிய தடுமாற்றம் காணும் அவருடைய கால்கள், கோபம் வந்தால் மட்டும் வேகத்தைத் தத்தெடுப்பதைப் பார்த்ததும் பெருமூச்சு விட்டபடியே அவரைத் தொடர்ந்து போனாள் அவரின் பேர்த்தி.
இன்றைக்கு இவரைச் சாமாதானம் செய்து, காலை உணவைச் சாப்பிட வைத்து, மதிய உணவை அவருக்கு ஏற்றது போல எடுத்து வைத்து விட்டு அவள் வேலைக்குக் கிளம்புவதற்குள் அடுத்த நாளே வந்து விடுமே.
தாயிடம் கோபங் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்திருக்கும் சிறுபிள்ளை போல, முகத்தைத் தூக்கி வைத்தபடி தன்னுடைய கட்டிலில் அமர்ந்திருந்தார் சிவஞானப்பிரகாசம்.
அவரையே சில நொடிகள் ஒரு விதமான இயலாமையோடு பார்த்திருந்தவள், பின்னர் ஒரு முடிவோடு அவருக்கு முன்னால் போய் மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.
“எனக்கு ஒருத்தரும் ஒரு சமாதானமும் சொல்லத் தேவையில்லை.. என்னில மரியாதை இல்லாதவை எனக்கு விளக்கமும் சொல்லத் தேவையில்லை.. என்னோட ஒருத்தரும் கதைக்கவும் தேவையில்லை.. கதைச்சாலும் நான் கதைக்கவும் மாட்டன்.. “
என முறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார் போன வருடம் தான் தன் வயதுக்குப் பவளவிழா கொண்டாடிய விஷ்ணுவின் தாய்வழித் தாத்தா.
“இப்ப என்ன.. நான் இந்தக் கலியாணத்துக்குத் தலையை ஆட்ட வேணும் அவ்வளவு தானே.. சரி ஆட்டுறன் போதுமோ.. “
என்று சொன்ன பேர்த்தியைச் சட்டென்று திரும்பிப் பார்த்தவரோ
“மெய்யாவே.. பிறகு நீ பேச்சு மாற மாட்டியே.. “
என்று சந்தேகமாகக் கேட்டு வைத்தார்.
“மாற மாட்டன்.. ஆனா இப்ப சாப்பிட வாங்கோ..”
என்று கொண்டு எழப் போனவளது கையைப் பிடித்தவரோ
“இங்க பார் விஷ்ணு.. தாத்தாவைச் சாப்பிட வைக்கிறதுக்காக நீ பொய் சொல்லேலையே..”
என்று மீண்டும் சந்தேகமாகக் கேட்க,
“இன்னும் அஞ்சு நிமிசத்துல சாப்பிட வராட்டிக்குச் சொன்ன சம்மதத்தை வாபஸ் வாங்கீடுவன்.. எப்புடி வசதி..”
என்று கொண்டு அவள் போயே விட்டாள்.
அதற்கு பிறகும் உணவு எதிர்ப்புப் போராட்டம் செய்வாரா சிவஞானப்பிரகாசம், அடுத்த நிமிடமே சாப்பாட்டு அறைக்குள் ஆஜராகி விட்டார் அவர்.
பேர்த்தி தயாரித்து வைத்த அரிசிமாப்பிட்டையும் கத்தரிக்குழம்பையும் நன்றாகப் பிசைந்து சாப்பிட்டபடியே ஏதோ சொல்வதற்காகப் பேர்த்தியை நிமிர்ந்து பார்த்தார் அவர், அவளும் அவரைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீங்கள் பார்த்த மாப்பிள்ளையோட நான் கதைக்க வேணும் தாத்தா..”
“பழையபடி தொடங்க வேண்டாம் விஷ்ணு.. நீ என்ன கதைப்பாய் எண்டு எனக்குத் தெரியாதோ.. “
“சரி என்ன கதைக்கப் போறன் எண்டு தெரிஞ்சிட்டுது தானே.. அவரோட நான் கட்டாயம் கதைச்சே ஆக வேணும்..”
“வேண்டாம் விஷ்ணு.. ஏற்கனவே புரோக்கர் மூலமா எல்லாம் சொல்லியாச்சுது..”
“எல்லாம் சொல்லியாச்சுது எண்டால் என்ன அர்த்தம்.. எனக்கு விளங்கேல..”
“பொம்பிளைக்குப் பொறுப்பு எண்டு ஒண்டும் இல்ல எண்டு சொல்லச் சொன்னான்.. அதனால கலியாணத்துக்குப் பிறகு நீ அவையோட போய்த் தான் இருக்க வேணும்.. இந்த வீட்டையும் உன்ரை பெயருல எழுதீடுவன்.. “
“எழுதீட்டு..”
“இங்க கைதடியில ஒரு முதியோர் இல்லம் இருக்காம்.. நான்..”
எனச் சிவஞானப்பிரகாசம் சொல்லி முடிப்பதற்குள், சாப்பிட்ட பாதியில் எழுந்து விட்டிருந்தாள் விஷ்ணுவர்தனி.
“என்ன பிள்ளை.. சாப்பிட்ட குறையில எழும்பீட்டாய்.. இருந்து சாப்பிடு..”
“நெஞ்சுல கத்தியை விட்டுச் செருகிக் கொண்டு சாப்பிடு எண்டால் எப்புடித் தாத்தா சாப்பிடுறது.. எவ்வளவு சுயநலமா யோசிக்கிறியள் நீங்கள்..”
“இதுல எங்க பிள்ளை சுயநலம் இருக்குது.. எல்லாம் உன்ரை நல்லதுக்குத் தானே.. அதோட நான் என்ர கடமையைத் தான் செய்யிறன்.. “
“இருக்குது தாத்தா இருக்குது.. இதுக்குள்ள சுயநலம் மட்டும் தான் இருக்குது.. உங்கட கடமையைச் செய்யிறன் எண்டு சொல்லுறியளே.. அப்ப எனக்கெண்டு ஒரு கடமையும் இல்லையோ சொல்லுங்கோ..”
“பிள்ளை..”
“போதும் தாத்தா போதும்.. பாரன் பேத்திக்கு வீட்டைக் குடுத்துட்டு மனுஷன் போய் முதியோர் இல்லத்துல கிடக்குது எண்டு ஊர் உங்களைப் பெருமையாக் கதைக்க வேணும்.. அதே என்னை இப்புடிச் சொத்தை எழுதி வாங்கீட்டு அந்த வயசு போன மனுஷனைக் கைகழுவி விட்டிட்டாளே எண்டு சனம் காறித் துப்ப வேணும் அது தானே உங்கடை விருப்பம்.. இது சுயநலம் இல்லாமல் வேற என்ன.. “
என்று படபடத்தவள் வேகமாக எழுந்து போய்க் கைகளைக் கழுவி விட்டு, தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே போய் விட்டாள்.
இப்போது இருக்கும் மனநிலையில் வேலைக்குச் செல்ல முடியாது என்பதோடு விஷ்ணுவர்தனி விடுப்பு எடுப்பதும் குறைவு என்பதால், சட்டென்று அலைபேசியில் இன்று தான் விடுமுறை என்பதைத் தட்டி விட்டவள், கால் போன போக்கில் நடக்கத் தொடங்கியிருந்தாள்.
‘என்ன கதை கதைக்கிறார் இந்தத் தாத்தா..’
என அவளுக்கு உள்ளே எரிந்து கொண்டிருந்தது.
விஷ்ணுவர்தனி தாய் தந்தை இல்லாமல், தாய் வழித் தாத்தாவால் வளர்க்கப்பட்ட பெண்.
அவளுடைய உலகமே அவளுடைய தாத்தா சிவஞானப்பிரகாசம் தான், அவருக்கும் அவள் தான் உலகம்.
தாத்தாவின் வழிகாட்டுதலில் ஓரளவு திறமையாகப் படித்து, ஒரு தனியார் பாடசாலையில் ஆறு வருடங்களாகத் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவளுக்கு, அவருடைய தாத்தா கடந்த பத்து வருடங்களாகத் திருமணம் செய்து வைப்பதில் முனைப்பாக இருக்கிறார்.
வருபவர்கள் எல்லோரும் பெண்ணுக்கு அத்தனை நகை போடுங்கள், இந்தளவு பரப்புக் காணி எழுதிக் கொடுங்கள், கண்டிப்பாக வீடு எழுதிக் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற நிபந்தனைகளை முன் வைக்க, சிவஞானப்பிரகாசத்திற்கு மலைப்பாக இருந்தாலும் கூட, கடனை வாங்கியாவது மகள் வயிற்றுப் பேர்த்திக்கு ஒரு கல்யாணத்தைக் கட்டி வைத்து விட வேண்டும் என்று முழுமூச்சாக இறங்கித் தான் விட்டிருந்தார்.
திருமணம் என்றாலே அழகான விசயம் எனத் தன்னுள் ஒரு விதமான எண்ணத்தோடு இருந்த அவரது பேர்த்தியின் எண்ணத்தை அந்தப் பெண் பார்க்கும் படலம் லேசாக ஆட்டங் காண வைத்தது உண்மை.
தாத்தாவின் கஷ்டத்தையும் மனத் தவிப்பையும் மற்ற எல்லாவற்றையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள் அவள்.
அதன் விளைவாக விஷ்ணுவர்தனிக்குத் திருமணம் என்றாலே வெறுத்துப் போய் விட்டதைப் பாவம் அந்த வயதானவர் தெரிந்து கொண்ட நேரம் அவளுக்கோ வயது முப்பத்தாறைக் கடந்து விட்டிருந்தது.
எந்த வரன் தேடி வந்தாலும் சீதனம் என்கிற வடிவத்தில் ஏதாவது ஒரு பிசகு வந்து கொண்டேதானிருந்தது.
முதலில் லேசாகத் திருமணத்தை எதிர்த்தவள் தன் முப்பது வயதில் காலடியெடுத்து வைத்த வேளையில், திருமணத்திற்கு முழு மனதோடு எதிர்ப்புக் கொடி காட்டத் தொடங்கி விட்டிருந்தாள்.
அதற்கான காரணம் முதலில் சீதனம் பற்றிப் பேசத் தொடங்கிய மாப்பிள்ளை வீட்டார், சிவஞானப்பிரகாசத்தை இறுதிக் காலத்தில் பார்க்கின்ற பொறுப்பை லேசாகத் தட்டிக் கழிப்பது போன்று பேசி விட்டார்கள்.
அவ்வளவு தான் அது வரை சாந்த சொரூபியாக இருந்த பெண், பத்திரகாளியாக மாறி விட, வெளியேறிப் போன மாப்பிள்ளை வீட்டாரோ அவளுக்கு அடங்காப்பிடாரி என்கிற பட்டத்தை இலவசமாகக் கொடுத்து விட்டே தான் போயிருந்தார்கள்.
அதற்கெல்லாம் அசருபவளா அவள், எத்தனை கஷ்டங்களைக் கடந்து வந்தாயிற்று, தனக்கென்று ஒரு அழகான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்த தன்னுடைய தாத்தாவைத் தள்ளி வைத்துத் தான் தனக்கொரு திருமண வாழ்க்கை என்றால், அப்படியொரு திருமணமே தனக்கு வேண்டாம் என அவள் முடித்து விட்டாள்.
அப்படியென்ன அழகான வாழ்க்கையை அவர் உனக்குக் கொடுத்து விட்டார் என்று யாரேனும் கேட்டால், பெருமையாகப் பதில் சொல்லுவாள் விஷ்ணு.
தாய் தந்தை இல்லாத பெண்ணை ஆசிரமத்தில் கொண்டு போய்ச் சேர்க்காமல், அவளுக்கென்று படிப்பையும் ஒரு அழகான வீட்டையும் அத்தியாவசியமான அன்பையும் அவர் கொடுத்ததால் தான் அவள் இன்று யாரிடமும் கையேந்தாமல் தன் சொந்தக்காலில் நிற்கிறாள்.
அப்படியானால் அது அழகான வாழ்க்கை இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.
தாத்தாவுக்கும் பேர்த்திக்கும் பேர்த்தியின் திருமண விவகாரம் தான் அடிக்கடி பெரிய விவாதமாக வெடிக்கும்.
அதில் இறுதியில் ஜெயிப்பது என்னவோ விஷ்ணு தான் என்றாலும் கூட, தாத்தாவின் முகம் ஒளியிழந்து போவதைச் சில காலமாக அவளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
அதன் பிரதிபலிப்புத் தான் இன்று சம்மதம் என்று அவளைத் தலையாட்ட வைத்தது.
இப்போது வரப் போகிறவன் என்ன குண்டோடு வரப் போகிறானோ என்கிற எண்ணம் அவளை அலைக்கழித்தது ஒரு பக்கம் என்றால், தாத்தா போட்ட குண்டு அவளை உயிரோடு கொன்றது.
அதே எண்ணங்கள் சுற்றிச் சுழல நடந்து கொண்டேயிருந்தவளை
“விசுணுச்சீச்சர்..”
என்ற அழகான பிஞ்சுக்குரல் இழுத்து இந்த உலகத்துக்குக் கொண்டு வந்து சேர்க்கவே, சட்டென்று திருமபிப் பார்த்தாள் விஷ்ணு.
தன்னுடைய பெரியப்பனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, விழுந்தது போக மீதம் கிடந்த பற்கள் தெரியச் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள் குட்டிப்பெண் ஆருதி.
இரண்டு மாதங்களாக விஷ்ணுவிடம் வீட்டுப் பாடம் கற்க வருகின்ற விசேட தேவை உடைய ஐந்து வயதுப் பெண் குழந்தை அவள்.
குழந்தையைப் பார்த்ததும் அதுவரை அழுத்திக் கொண்டிருந்த அத்தனை அழுத்தங்களும் எங்கோ பறந்து போக, வேகமாகப் போய்க் குழந்தையைத் தூக்கிக் கன்னங்கள் இரண்டிலும் அழுத்தமாக முத்தம் வைத்தவளுக்கு, சில நொடிகளின் பின்னரே சுற்றுப்புறம் புரியத் தொடங்கியது.
அவளுடைய கால்கள் அது பாட்டில் பழக்கப் பட்டது போல, நல்லூர்க் கந்தசுவாமி கோவிலில் தான் அவளைக் கொண்டு போய் விட்டிருந்தது.
கோவிலை ஒரு கணம் பார்த்தபடி அப்போது தான் குழந்தையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தவனை மறந்து விட்டாமே என்று உணர்ந்தாள் அவள்.
சிறு சங்கடத்தோடு பக்கத்தில் நின்றிருந்த ஆருதியின் பெரியப்பாவை மெல்ல நிமிர்ந்து பார்த்த விஷ்ணுவை, அவனது வழமையான இறுகிப் போன முகம் தான் வரவேற்றது.
‘யாருடா சாமி நீ.. உனக்கு என்னடா பிரச்சனை.. உன்னையும் என்னை மாதிரி யாரும் கலியாணத்துக்குப் பிடிச்சுக் கட்டாயப் படுத்துறாங்களோ..’
என்பது போல அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள் விஷ்ணுவர்தனி.
