அத்தியாயம் – 1

அத்தியாயம்- 1

​”அம்மா! நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, வெளியூர் போகணும். இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன் மா,” என்று அயர்ச்சியான குரலில் கூறினாள் கண்மணி.

​”தூங்கி எந்திரிச்சு, குளிச்சிட்டு அந்த மெரூன் கலர் புடவையைக் கட்டிட்டு ரெடியாகு கண்ணா,” என்றார் சாரதா. 

அத்தனை அமைதியான முகம், அவர் குணமும் அப்படியே. அவர் கண்மணியின் அம்மா.

​”ஏன் மா? கோவிலுக்குப் போறோமா?”

​”இல்ல கண்ணா, உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க. நீ மாப்பிள்ளையை பாரு, மாப்பிள்ளை பையன்கிட்ட பேசு. உனக்கு பிடிக்காட்டி வேணாம், அம்மா கட்டாயப்படுத்த மாட்டேன். வயசாகிட்டே போகுதே கண்ணா. உன்னோட விருப்பம் இல்லாம எதுவுமே நடக்காது.” வாஞ்சையாய் அவள் தலையைத் தடவிய தாயிடம் மறுக்க முடியாமல், 

“சரி மா,” என்று ஒட்ட வைத்த புன்னகையை உதிர்த்தாள் கண்மணி.

​இரண்டு சோஃபாக்களுக்கு நடுவில் இருந்த டீப்பாயில், நான்கு டபரா செட்களில் ததும்பத் ததும்ப காபி சூடாக வைக்கப்பட்டிருந்தது. 

அதன் அருகே இனிப்புப் பலகாரமும், கார பூந்தியும் இருந்தன.

​”டேய் நண்பா! ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுடா. நீ வந்ததே லேட்டு, அந்தப் பொண்ணு வந்து காபி கொடுத்துட்டு உள்ளயே போயிருச்சு. எப்படியும் இந்தப் பொண்ணு வேணாம்னு தான் சொல்லப்போற, அந்த காபியை மட்டும் டேஸ்ட் பார்த்துக்கிறேன், அதுக்கப்புறம் உன்னோட முடிவைச் சொல்லிக்கோடா நண்பா,” என்று கபிலின் காதில் ரகசியமாக முணுமுணுத்தான் வெற்றி.

​”அல்பம்! குடிச்சுத் தொலை. உன்கூட எல்லாம் கூட்டு வச்சேன் பாரு, என்னைச் சொல்லணும்,” என்று தலைக்கு ஏறிய எரிச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் கபில் கூறினான்.

​”பொண்ணு எங்களுக்குப் பிடிச்சிருக்கு சம்மந்தி. நீங்களே ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்க, நிச்சயம் பண்ணிக்கலாம்,” என்று குடும்பத் தலைவராகத் தன் கடமையைச் சிறப்பாகச் செய்து முடித்தார் மாப்பிள்ளையின் தந்தை அன்பரசன்.

​”ஏதே…!” என்று அதிர்ந்தான் கபில்.

​”வாழப் போறவங்க அவங்கதான். அவங்களே பேசி முடிவெடுக்கட்டுமே. தம்பி, பொண்ணு அந்த ரூம்ல இருக்கு, பேசிட்டு வாரீங்களா?” என்று கபிலைத் தீர்க்கமாகப் பார்த்தார் கண்மணியின் தந்தை சிவராமன்.

​”போ கபிலா, போய் பேசிட்டு வா,” என்றார் அன்பரசனின் மனைவி மேகலை. சொல்லிவிட்டுத் தன் கணவரின் முறைப்பையும் பெற்றுக்கொண்டார்.

​”சென்று வா மகனே! உனக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியே காத்துக் கொண்டிருக்கிறது. சென்று வா,” என்று கிண்டல் செய்த வெற்றியை, “பைத்தியம் பாவம்…” என்பது போலப் பார்த்தவாறு பெண்ணின் அறையை நோக்கிச் சென்றான் கபில்.

​மூன்று ஆண்டுகளுக்கு முன்பு…

​பெங்களூரில் ஒரு சனிக்கிழமை இரவு. அந்தப் பப்பில் ஓரளவு கூட்டம் நிறைந்திருந்தது. கூட்டத்திற்கு இடையூறு இல்லாமல் ஒரு ஓரமாக நண்பர்கள் குழு அமர்ந்திருந்தது.

​”நாளைக்கு 5 மணிக்கு ரெடியா இருடா நண்பா, சொதப்பிடாத!” என்றான் வெற்றி.

​”மிட்நைட்ல சுச்சா போகக் கூட எந்திரிக்க மாட்டியேடா, அவ்வளவு காலைல என்னடா அப்படி முக்கியமான வேலை?” என்று ஜீவா வெற்றியை வம்புக்கு இழுத்தான்.

​”அட உனக்கு விஷயம் தெரியாதா? சார் ஒரு ‘5 மணி பூ’ கிட்ட மனசைப் பறிகொடுத்துட்டாரு,” என்றாள் சிவானி.

​”யாருடா அந்த ரோசா? அன்னைக்குச் சொன்னியே அந்த மல்லு ஆண்டியா?” என்றாள் சரண்யா.

​”டேய் போதும்டா! ஒரு கன்டன்ட் கிடைச்ச உடனே ஆரம்பிச்சுடாதீங்க. நாளைக்கு அம்மா சென்னை போறாங்க, அவங்களை வழிஅனுப்ப நானும் கபிலும் போறோம்,” என்றான் வெற்றி.

​”ஓ! ஆன்ட்டி கிளம்புறாங்களா? அப்போ நாளைக்கு ஸ்பாட் வெற்றி வீடுதான்!” என்று குதூகலமாய் பிளான் போட ஆரம்பித்தான் ஜீவா. 

தங்களின் நிலையை நினைத்து வெற்றி முகத்தைச் சுருக்க, மற்ற நால்வரும் பலமாகச் சிரிக்க ஆரம்பித்தனர்.

​இந்த ஐவர் கூட்டம் சேரும்போது அங்கு சிரிப்பிற்குப் பஞ்சமிருக்காது. 

ஆனால், அன்று ஏனோ கபில் அமைதியாக இருந்தான். அவன் பேச்சில் எதிலும் கலந்துகொள்ளவில்லை.

​”என்னடா டிஜே சும்மா செம்மையா கலக்கிட்டு இருக்காரு! வாங்க காய்ஸ் ஒரு ஆட்டம் போடுவோம்,” என்று உற்சாகமாய் சிவானி அழைக்க, கபிலைத் தவிர மற்ற மூவரும் இணைந்துகொண்டனர்.

​”ஹேய்! அங்க பார்த்தீங்களா? டிஜே பண்றது ஒரு பொண்ணு!” என்று சிவானி ஆச்சரியமாகக் கூற, கபில் அவளைப் பார்த்தான். 

அந்தப் புட்டி கண்ணாடி அவள் கண்களுக்கும் முகத்திற்கும் அத்தனை பொருத்தமாக இருந்தது. ஆரஞ்சுச் சுளைகளை அடுக்கி வைத்தது போன்ற உதடுகள். 

ஜெகின் பேன்ட்டும், கழுத்து வரை நீண்ட சட்டையும், அதன் மேல் முட்டி வரை நீண்ட ஸ்ரக் (Shrug) ஒன்றும் அணிந்திருந்தாள். இடை வரை நீண்ட முடியைப் பேண்ட் போட்டு இழுத்துக் கட்டியிருந்தாள். காதில் குட்டி வளையம். ஏனோ கபிலுக்கு கண்மணி அத்தனை அழகாகத் தெரிந்தாள்.

​”டேய்! பொண்ணுங்களையே பார்க்காத மாதிரி வழியாதீங்கடா. வண்டியைக் கட்டுங்க, கிளம்பலாம்,” என்று சரண்யா அவர்களைக் கிளப்பினாள். 

கபிலும் அவர்களுடன் சென்றான், ஆனால் அவளின் அந்த அழகிய முகமும் கண்களும் அவனுள் ஒரு மெல்லிய அதிர்வை ஏற்படுத்திக் கொண்டே இருந்தன.

​மீண்டும் நிகழ்காலத்தில்…

​”எனக்கு இரண்டு பிள்ளைங்க சம்மந்தி. மூத்தவளைப் பெங்களூர்ல கட்டிக் கொடுத்தாச்சு. கபில் அவனோட நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பெங்களூர்ல ஒரு கம்பெனி நடத்திட்டு இருக்காங்க. கூடிய சீக்கிரமே கபில் தனியா ஒரு கம்பெனி ஆரம்பிக்கப்போறதா சொன்னான். இப்போதான் இங்க வந்தான்,” என்று மகனின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தார் அன்பரசன்.

​”எங்களுக்கு ஒரே பொண்ணு கண்மணிதான். அவளும் பெங்களூர்லதான் இருந்தா, இப்போதான் இங்க வந்திருக்கா. இருந்தாலும் மாசத்துக்கு இரண்டு தடவையாவது அங்க போயிட்டு வந்துடுவா. அவ படிச்சது, வேலை பார்க்கிறது எல்லாமே அங்கதான். யசோதா அம்மா (பாட்டி) அங்கதான் இருக்காங்க, அவ பாட்டி செல்லம்,” என்று சிவராமன் கூறிக் கொண்டிருக்கும்போதே அன்பரசன் குறுக்கிட்டார்.

​”கபில் பேர்ல அங்க ஒரு வீடு இருக்கு சம்மந்தி. பிள்ளைங்களுக்கு அங்க இருக்க விருப்பம்னா கூட அங்கயே இருக்கட்டும். இவனுக்கும் அங்கதான் விருப்பம், என்னோட கட்டாயத்துலதான் இங்க இருக்கான்.”

​”அப்படியா சம்மந்தி? ரொம்ப சந்தோஷம். பிள்ளைங்க விருப்பம்தானே எல்லாமே!” என்று சிவராமனும் சம்மதித்தார்.

​”எனக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்குப்பா. எதுக்கும் அவங்ககிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க,” என்று கபில் வெளியே வந்து கூறினான்.

​”ஏதே! பொண்ணைப் பிடிச்சிருக்கா?” – அத்தனை நேரம் காபிக்கு அலைந்த வெற்றி அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

​”பொண்ணுக்கும் பையனைப் பிடிச்சிருக்காம்!” என்று உள் அறையிலிருந்து புன்னகையோடு வந்தார் யசோதா.

​”டேய்! என்னங்கடா நடக்குது இங்க? உள்ள போய் அப்படி என்னடா பேசின? தெரிஞ்சுக்கலைன்னா மண்டை வெடிச்சுடும். சொல்லுடா நண்பா!” என்று வெற்றியின் படபடப்பைக் கண்டு கபில் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

​”பர்சனல்டா மச்சான்,” என்று கபில் வெட்கத்துடன் சொல்ல, வெற்றிக்கு எரிச்சலாக இருந்தது.

​”டேய் நண்பா! என்ன வேணா பண்ணிக்கோடா, ஆனா வெட்கம் மட்டும் படாதடா! கண்ட்ராவி… சாரி, கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கச் சகிக்கலைடா. இப்போ சொல்லாட்டி முரட்டு சிங்கிள் பாவம் உன்னைச் சும்மா விடாதுடா!” என்று வீடு வரும் வரை நச்சரித்தான் வெற்றி.

​”சரிடா நில்லு, சொல்றேன்…”

​அந்த அறையில் நடந்தது இதுதான்:

​கபில் அந்த அறையின் கதவைத் திறந்தபோது, ஒருவரையொருவர் எதிர்பார்க்கவில்லை. 

சில நொடிகள் அதிர்ந்த கண்கள், இமைக்கக் கூட மறந்து நின்றன. அவளின் ஆழ்ந்த கண்களில் தொடங்கி, அவளின் இதழை நோக்கி அவன் கண்கள் செல்லும் முன்பு…

​”க்ம்ம்ம்…” என்று தொண்டையைச் சரிசெய்தபடி, கபில் தன் மனதை அடக்கிக்கொண்டு கேட்டான், “நீ இங்க என்ன பண்ற?”

​”எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. நீதான் எதாவது பண்ணி நிறுத்தணும்,” என்றாள் கண்மணி. அவளின் புடவை முந்தானை அவளின் கைகளில் சிக்குண்டு தவித்தது.

​”கேக்குற கேள்விக்கு பதில் சொல்ற பழக்கமே இல்லையா? ஆமா, நான் எதுக்கு நிறுத்தணும்? உனக்குத் தானே விருப்பம் இல்லை, நீயே நிறுத்திக்கோ,” என்று கைகளைக் கட்டிக்கொண்டு சட்டமாக நின்றான் கபில்.

​”அப்போ உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமா?”

​”ச்சே ச்சே… ஆனா வேற வழி இல்லை. தெரியாத்தனமா வாயை விட்டுட்டு இப்போ இங்க வந்து நிக்க வேண்டிய நிலைமை. உனக்கு ஏன் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை?”

​”நான் எதுக்கு உனக்குச் சொல்லணும்?”

​”உனக்கு ஏதாச்சும் உதவி பண்ணலாமேன்னு நினைச்சேன். ஆனா நான் எதுக்கு பண்ணணும்? உன் வீட்ல சொல்லி நீயே நிறுத்திக்கோ.”

​”அது… அம்மாவுக்குப் பிராமிஸ் பண்ணியிருக்கேன். அவங்க என்னை போர்ஸ் பண்ணல, ஆனா நான் அவங்களைக் கஷ்டப்படுத்துற மாதிரி இருக்கு. அதுவுமில்லாம கொஞ்சம் கமிட்மென்ட்ஸ் இருக்கு, ஒரு வருஷம் எதைப் பத்தியும் யோசிக்கக் கூட டைம் இல்லை. மோர் ஓவர் (Moreover), எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லை. அதுவும் உன்னை… நெவர் (Never)!” என்று மெதுவாய் முணுமுணுத்தாள்.

​”என்ன சொன்ன? இதுக்குக் கண்டிப்பா வருத்தப்படுவ ஃபியூச்சர்ல. உனக்கு எப்போதான் கமிட்மென்ட்ஸ் இல்லாம இருந்திருக்கு? கல்யாணத்துக்கு ரெடியாகு மை டியர் கண்மணி. சீ யூ சூன்!” என்று சொல்லிவிட்டு கபில் வெளியேறினான்.

​அவன் வெளியேறிய அடுத்த இரண்டு நிமிடங்களில் சாரதா மகளிடம் வந்தார். “கண்ணா, மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா? பேசினியா? உனக்கு ஓகே தானே?”

​தாயின் ஆதரவான குரலில் கண்மணிக்கு மறுக்கத் தோன்றவில்லை. 

“ம்ம்ம்… ஓகே மா,” என்றாள்.

​அடுத்தடுத்துத் திருமண வேலைகள் தடையில்லாமல் நடந்தன. 

மணமக்கள் இருவரைத் தவிர அனைவரும் உற்சாகமாகப் பங்கேற்க, 

இதோ திருமணமும் இனிதே முடிந்துவிட்டது!

 

❤️ Loading reactions...
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page