வெந்து தணிந்த இதயம்
எழுதுவது உங்கள் AY_84
அத்தியாயம் 1
இவ்வுலகின் ஆகச்சிறந்த வண்ணான், சூரியன். அவனுக்குத்தான் ஒருநாளில் எவ்வளவு வேலை! ஆறுமணிக்கே வானவேட்டியை அழுக்கு வெளுத்து, விருப்பத்திற்கேற்ப சாயம் போட்டு, அப்பப்பா! ஓடாகத் தேய்கிறான் அந்த ஒற்றைக்கிழவன்.
அவனுக்கு எஜமானி காலதேவன். உழைப்பு, உடைமை, உறவு என்று எதைத் திருடுபவனைக் காட்டிலும் இவ்வுலகின் ஆகச்சிறந்த திருடன் அவனே!
இல்லையெனில் ஒரு மாதத்திற்கு பிறகு தானே என்று சர்வஅலட்சியமாகத் திட்டமிட்ட ஒரு பிறந்தநாள் விழாவை நாளையென்ற நிலையில் கொண்டு வந்து தள்ளி, ஆனானப்பட்ட பத்ரவேல் பாண்டியனையே கதிகலங்கவிடுவானா?
அது பெரியவீட்டில் வசிக்கும் யாரோ ஒருவரின் பிறந்தநாள் என்றாலும் பரவாயில்லை. அவ்வீட்டின் ஆணிவேர், குறிஞ்சிகுளம் பிராந்தியத்தின் பஞ்சாயத்துத்தலைவர் ரத்னவேல் பாண்டியனின் பிறந்தநாள் என்றால் கேட்கவா வேண்டும்? வீடே அல்லோல கல்லோலப் படுகிறது.
வரவேற்பறையில் தோரணங்களுடன் நின்றிருந்த அடியாட்கள் இருவர் திடீரென, “பத்ரியண்ணே.. பத்ரியண்ணே” என்றார்கள்.
ஆம், பத்ரவேல் பாண்டியன் தான் அலைபேசியில் யாரிடமோ, “எல்லாம் ரெடியா?” என்று உறுமலாகக் கேட்டுக்கொண்டே மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான்.
அவன் இயல்பிலேயே ஆணகழன் எனினும் இன்று தன் அழகின் உச்சமாய் வெள்ளைநிற வேஷ்டி சட்டை அணிந்திருந்தது மிகக்கம்பீரமாக இருந்தது.
அவனின் தோரணையைக் கண்டு பெருமூச்சுவிட்ட வேலைக்காரப் பெண்மணி, டைனிங் டேபிள் அலங்காரக்கூடையில் பழங்களை அடுக்கி வைக்கவும் மறந்து, “இந்த தெய்வானைக்கு எங்க தான் மச்சம் இருக்கோ?” என்று யாருக்கும் கேட்காத வண்ணம் முனுமுனுத்தாள்.
ஆம், கடந்த வருடம் பத்ரி தனது இருபத்தொன்பதாவது வயதில் அடியெடுத்து வைத்தபோதே ரத்னவேல் பாண்டியன் கூறிவிட்டார், தெய்வானையின் படிப்பு முடிந்தக் கையோடு அவனுக்கும் அவளுக்கும் மணமுடிப்பதென்று. தெய்வானை அவரின் மூத்தப்பெயர்த்தி. அவளுக்கும் பத்ரிக்கும் எட்டு வயது வித்தியாசம்.
ஆனாலும் சிறு வயதிலிருந்தே அவனுக்கு இவள், இவளுக்கு அவன் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டதால் அனைவருமே மனதளவில் இதற்கு தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால், ஒருவனைத் தவிர. அவன் சஷ்டிவேல் பாண்டியன். ரத்னவேல் பாண்டியனின் இளைய மனைவியின் மகன்.
சஷ்டிக்கு எப்போதுமே தன்னுடன் ஒப்பிட்டு பேசப்படும் பத்ரியை அறவே பிடிக்காது. அதுவும் அடியாட்கள் முதற்கொண்டு அவனுக்கு தான் முதல் மரியாதை செய்வதை இரண்டாம் தாரத்தின் மகனாய் வெறுத்தான் அவன்.
ஆனால், அதற்கு நேர்மாறாக தெய்வானை என்றால் உயிர். அவள் மீது அளவு கடந்த காதல் வைத்துள்ளான் அவன். அவளிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை வெளிப்படுத்தியும் வந்துள்ளான்.
ஆனால், அவள் தன் மனதில் பத்ரியை வரித்துள்ளதால் அவனை பெரிதுபடுத்துவதில்லை. ஏனெனில், தன் தாத்தாவின் முடிவை மாற்ற இவ்வுலகில் ஒருவன் பிறக்கவில்லை என்று நம்பினாள் அவள். அவள் மட்டுமல்ல அந்த ஊர்மக்களுமே அவ்வாறு தான் நம்பினார்கள். அதனால் தான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென இருந்தது அன்றைய நாள்.
ஆனால், அவர்கள் அனைவரும் அறியாதவொரு உண்மை, ரத்னவேல் பாண்டியனையும் ஆட்டிப்படைக்க ஒரு சக்தி புயல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது என்பது தான். அதுவும் ஒரு பெண் சக்தி.
அன்றைய நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிறு தட்டாமல் செய்திருந்த பத்ரவேல் பாண்டியன்
நேரே பூஜையறை சென்று ஆளுயர முருகன் சிலையை வணங்க, “எல்லாம் தயாரா இருக்கா பத்ரி? உன்னை நம்பி தான் இன்னைக்கு எல்லா பொறுப்புகளையும் நான் உன்கிட்ட ஒப்படைச்சிருக்கேன். அபசகுனமா எதுவும் நடந்திடக்கூடாது. அப்பறம் அது உன் அரசியல் பிரவேசத்தையே கேள்விக்குறியாக்கிரும்.” என்று கணீர் குரலில் சொன்னார் ரத்னவேல் பாண்டியன்.
திரும்பிப் பார்த்த பத்ரியோ, “பிறந்தநாள் வாழ்த்துகள் ப்பா. நிச்சயம் எல்லாம் உங்க விருப்பப்படியே நடக்கும்” என்று உறுதியாய் சொன்னான்.
பாவம் அப்போது அவன் விதியை அறியவில்லை!
தலை முதல் கால் வரை வைர நகைகள் ஜொலிக்க அன்னநடையிட்டு வந்த ரத்னவேலின் மூத்த மனைவி சாவித்ரி, “எல்லாரும் முத்தூர் கோவிலுக்கு கிளம்பலாங்களா?” என்று பவ்யமாய் கேட்க, சம்மதமாய் தலையசைத்தவர் வரவேற்பறை சென்றார்.
அதன் ஆறு வாயில்களின் வழியாகவும் திமுதிமுவென்று உள்ளே நுழைந்தது பட்டாளம்.
“பிறந்தநாள் வாழ்த்துகள் தாத்தா, பிறந்தநாள் வாழ்த்துகள் ப்பா, பிறந்தநாள் வாழ்த்துகள்ங்க” என ஒவ்வொருவராக வாழ்த்துகள் சொல்லி ரத்னவேல் பாண்டியனின் முன் ஆஜரானார்கள்.
தன் லேசர் விழிகளால் அனைவரையும் ஊடுருவியவர்
தன் மூத்த மகள் ஜெயந்தியிடம், “உன் மக தெய்வானை இன்னும் வந்து சேரலையா? அவளை கூட்டிட்டு வர யாரை அனுப்பியிருக்க?” என்று கேட்டதும்,
“நம்ம சஷ்டியை தான் ப்பா. நேத்தே திருச்சிக்கு ஒரு வேலையா போக வேண்டியதிருக்குனு சொன்னான். அதான் அப்படியே தெய்வானையையும் கூட்டிட்டு வரச் சொல்லிட்டேன்.” என்று சொல்லவும்,
“சஷ்டியையா? அந்த சோம்பேறியையா நீ அனுப்பியிருக்க? விளங்கினாப்ல தான். பத்ரி இது என்னன்னு கவனி” என்று தீர்க்கமாக சொல்லிக்கொண்டே வாசல் பக்கம் சென்றவர் தன் வருகைக்காகவே காத்திருந்த அந்தக் கரிய யானையைக் கண்டதும் உற்சாகமாக தலை குனிந்தார்.
உடனே தன் தும்பிக்கையில் ஊசலாடிக் கொண்டிருந்த ரோசாப்பூ மாலையை அவரின் கழுத்திலிட்டுப் பிளிறியது யானை.
இது பத்ரியின் ஏற்பாடுகளில் ஒன்று என்றறிந்த ரத்னவேல் பாண்டியன் அவனை திருப்திகரமாக திரும்பிப் பார்க்க, அவர் பார்வை தன் மேல் பட்டதுமே அவர் ஏறுவதற்கான காரின் கதவை சென்று திறந்து வைத்தான் பத்ரி.
இது தான் அவன். அவரின் பார்வை ஒவ்வொன்றிற்குமே பொம்மையாய் ஆடுபவன்.
ஆனால், இதுவும் மாறும் ஒரு காலம் வரும், அதுவும் ஒரு காரிகையால் வரும் என்பதை விதி தூரத்திலிருந்து சொல்லிச் சிரித்ததோ!
அவர் காரிலேறி அமர்ந்ததும், காரை ஓட்டுவதில் கவனமானான் பத்ரி.
ரத்னவேல் பாண்டியன் தனது ஒவ்வொரு பிறந்தநாளையுமே இவ்வாறு தான் பிரம்மாண்டமாக கொண்டாடுவார். ஆனால், அவர் இம்முறை முத்தூர் முருகன் கோவிலுக்குச் செல்வதற்கு காரணம் வேறு.
சமீபகாலமாகவே தனது மூத்த மகனை ‘எம்.எல்.ஏ’ ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று மிகுந்த மோகம் கொண்டிருந்தார் அவர். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பத்ரி இன்னும் ஒரு வார காலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது அவன் சார்ந்திருந்த கட்சி.
இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வேறு வரவிருப்பதால் அந்தத் தொகுதி முழுவதும் மக்கள் மத்தியில் அவரின் குடும்பத்திற்கு ஒரு நற்பெயர் இருக்கவேண்டும் என்று இன்று முத்தூர் முருகன் கோவிலில் நூறு ஜோடிகளுக்கு தன் சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தார் ரத்னவேல் பாண்டியன்.
அதை நிறைவேற்ற சென்று கொண்டிருந்தவரின் வழி முழுக்க அவரையும் பத்ரியையும் வாழ்த்தி பல பதாகைகளை கட்டியிருந்தார்கள் அவரின் விசுவாசிகள். அதுவும் பத்ரியின் ஏற்பாட்டில். அவர் சென்ற நேரத்திற்கு கோவிலில் சிறப்பு பூஜையும் ஆரம்பமாகியிருந்தது.
நேரே முருகன் சன்னதிக்கு சென்றவர்கள் தங்கள் குடும்பத்தின் சார்பில் காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க வேலுடன் ஜொலித்த முருகனை மனமுருக வேண்டிவிட்டு, அக்கோவிலின் ஓரத்திலிருந்த சாமியார் மடத்திற்குச் சென்றனர்.
அங்கிருந்த சாமியார் ரத்னவேல் பாண்டியனின் வருகைக்காவே காத்திருந்தவர் போல் சட்டென்று தனது கண்களைத் திறந்து, “சுதாரிச்சிக்கோ ரத்னவேலு! பெரிய திருட்டு ஒன்னு நடக்கப்போகுது.” என்றார்.
ரத்னவேல் பாண்டியனோ ஒன்றும் புரியாமல் விழித்தார்.
“நீ சம்பாதிக்கவே முடியாத பெரிய பொருள் ஒன்னு உன் வீட்டிலிருந்து காணாமப் போகப்போகுது. முடிஞ்சா காப்பாத்திக்கோ” என்றார்.
ரத்னவேல் பாண்டியனை விடவும் பேரதிர்ச்சிக்குள்ளானான் பத்ரி.
திகிலுடனே அங்கிருந்து வெளியேறிய ரத்னவேல் பாண்டியன் தன் குடும்பத்துடன் நேரே கல்மண்டபம் சென்றார். ஆனால், அங்கு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகளோ, இல்லை திருவிழா போல் சுற்றி நின்ற மனிதர்களோ, யாரும் அவரின் கவனத்தில் பதியவே இல்லை.
சாமியார் கூறியது தான் ரீங்காரமிட்டது போல் அவரின் காதிற்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஏன் பத்ரிக்குமே தான்.
அப்போது, “எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கப்பா” என்று அவரின் காலில் வந்து விழுந்தான் சஷ்டிவேல் பாண்டியன்.
“நல்லாயிருங்க” என்று வாழ்த்தியவர் அவர்கள் எழுந்தபோது தான் கவனித்தார் சஷ்டியுடன் விழுந்தது தன் பெயர்த்தி தெய்வானையல்ல, யாரோ ஒரு தேவதையென்று.
தன் கடைக்குட்டி விவரமாகத் திட்டமிட்டே இன்று இவ்வாறு செய்திருக்கிறான் என்பது புரிந்து அவர் கேலியாக நகைக்க, தேவதை போலிருந்த பெண்ணவளோ திருதிருவென விழித்தாள்.
திடீரென தன் தந்தை புதியவளை உற்றுப் பார்ப்பதையுணர்ந்து சஷ்டி, “இது யாழினி ப்பா. முன்னாடி என்னோட காலேஜ்ல ஒன்னாப் படிச்சவ. நம்ம ஊரை சுத்திப் பார்க்கனும் சொன்னா. அதான் கூட்டிட்டு வந்தேன்” என்று சொன்னதும்,
“நீ உன் வாழ்க்கையில செஞ்ச உருப்படியான ஒரே நல்ல விசயம்னா காலேஜ் போய் படிச்சது தான். ஆனா அதுவும் தண்டம் தாங்கிற மாதிரி எதுவும் பண்ணிடாத சஷ்டி. நம்ம ஊரைப் பத்தியும் நம்ம பரம்பரையைப் பத்தியும் தெரியும் இல்ல உனக்கு? சரி! சரி! என் பிறந்த நாளன்னைக்கு பார்த்து கூட்டிட்டு வந்திருக்க. அந்தப் பொண்ணை நம்ம வீட்டுல தங்க வை. ஆமா என் பேத்தி தெய்வானை எங்கடா காணோம்?” என்றதும், ஆரவாரமாக சஷ்டியை தள்ளிவிட்டு முன்னே வந்தாள் தெய்வானை.
“ஹாப்பி பெர்த்டே தாத்தா” என்று தன் கால்களில் விழுந்து எழுந்தவளின் தலையை ஆதுரமாகத் தடவி விட்டவர்,
“பத்ரி இங்க வாய்யா. இந்த வருசம் உங்க ரெண்டுபேரோட கல்யாணமும் முடிஞ்சதும் சீக்கிரம் இந்தக் குடும்பத்துக்கொரு ஆண்வாரிசை பெத்துக் கொடுக்கனும்.” என்று சொன்ன கையோடு தன் கழுத்தில் கிடந்த ஐந்து தங்கச் சங்கிலிகளில் ஒன்றைக் கழற்றி அவனை தெய்வானையின் கழுத்தில் அணிந்துவிடச் செய்தார்.
அங்கு கூடியிருந்த நூறு ஜோடிகளும், அவர்களின் உறவினர்களும் இச்சம்பவத்தைக் கண்டு கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
என்ன ஓரமாக நின்ற சஷ்டிவேல்பாண்டியனின் வயிறு தான் கபகபவென்று எரிந்தது. தான் ஒன்று செய்தால் வீண் வேலை. அதே பத்ரி ஏதாவது செய்தால் ஊரே ஆர்ப்பரிப்பு என்று அனைத்தையும் கண்டு வெறுத்தான்.
சஷ்டி தன் வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கு யாழினியை அறிமுகம் செய்து வைத்தபோது, மணமேடையில் நின்ற தெய்வானையின் பார்வை மட்டும் இவர்களின் பக்கமே இருந்தது. நேற்று வரை தன்னை விரும்புவதாக சொன்ன சஷ்டி இன்று திடீரென ஒருத்தியை அழைத்து வந்திருப்பது அவளுக்கு சந்தேகத்தை உண்டுபண்ணியது.
புதிதாக வந்த பெண்ணவளும் அவளுக்கு உவப்பானவளாக இல்லை. ஏனெனில், அவளுக்கு அவள் மட்டுமே அழகியாகத் தெரிய வேண்டும் மற்றவரின் முன். ஆகையால், புதியவளின் அழகைக் கண்டு பொறாமைத்தீயில் வெந்தாள்.
இவையெதையும் அறியாத யாழினியோ சிரித்த முகமாக, “உங்க எல்லாரையும் பத்தி சஷ்டி நிறையவே சொல்லியிருக்காரு. அவர் போன்ல உங்களையெல்லாம் பார்த்திருக்கேன்.” என்று தன் இனிமையான குரலால் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தாள்.
தெய்வானையுடன் பத்ரிக்குமே சஷ்டியின் செயல்கள் எதுவும் சரியாகப் படவில்லை. யாழினியின் மந்தகாசம் வேறு அவனுக்குள் ஒரு அபாயமணியை ஒலிக்கவிட்டது. சற்றுமுன் சாமியார் கூறிய எச்சரிக்கை இவளைப் பற்றியது தானோ என்று குழம்பித் தவித்தான்.
பத்ரியின் ஆராய்ச்சிப் பார்வையை அறியாது சஷ்டியின் காதைக் கடித்தாள் யாழினி.
”என்ன சஷ்டி ஒரு சாதாரண பிறந்தநாளைப் போய் உங்கப்பா இப்படி கொண்டாடுறாரு?” என்று மிரட்சியாகக் கேட்டாள்.
“என்ன சொன்ன சாதாரண பிறந்தநாளா? என் அப்பாவை யாருன்னு நினைச்ச? அவரு இந்த குறிஞ்சி குளத்தோட ஓவ்னர். என் அப்பாவுக்கு இந்த ஊர் தான் கௌரவம். பத்தாயிரம் தலைக்கட்டு உள்ள இந்த ஊர்ல எங்க அப்பா அளவுக்கு பஞ்சாயத்து பேச யாரும் கிடையாது தெரியுமா? இந்த ஊருக்குன்னு போலீஸ் ஸ்டேசனே தேவைப்படாத அளவுக்கு சட்டம் ஒழுங்கை பாதுகாத்துட்டு வர்றாரு. அவர் இந்த ஊருக்கு செஞ்சிட்டு வர்ற பொதுசேவைகளைப் பாராட்டி அவருக்கு மத்திய அரசே அடுத்த வாரம் பத்மஸ்ரீ பட்டம் வழங்க இருக்குது.” என்றதும்,
“பார்ரா! ரொம்ப ஓவரா தான் பில்டப் கொடுக்கற உங்க டாடிக்கு. சுத்தி வளைச்சு இவர் ஒரு சின்னக்கவுண்டர் விஜயகாந்த்னு சொல்ற?” என்று கிண்டலடித்தாள் யாழினி.
“ம்! நீயும் பார்க்கத் தானே போற எங்க அப்பாவோட பேக்கரவுண்ட் பத்தி” என்றவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மங்கள இசை முழங்க, திரண்டிருந்த மணமக்களுக்கு ரத்னவேல் பாண்டியன் தாலி எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தார்.
முதல் நபர் தாலியை வாங்கி கட்டி முடிக்க, திடீரென எழும்பிய புகையில் அனைவரும் இருமத் துவங்கினர். காரணம் அந்த மணப்பந்தலின் கடைக்கோடி ஓரத்தில் தீப்பிடித்து எரியவாரம்பித்தது.
“தீ! தீ!” என்று அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடத் துவங்க, அவ்விடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
பத்ரி எது நடக்கக்கூடாது என்று காலையிலிருந்து மெனக்கெட்டானோ அது இறுதியில் நடந்தே விட்டது.
ரத்னவேல் பாண்டியனோ கோபம் கொப்பளிக்க நின்றிருந்தார். அவர் முகம் நெருப்பு துண்டமாக காட்சியளித்ததால் யாரும் பயத்தில் அவர் அருகிலேயே செல்லவில்லை.
வேகும் இதயம் தணியும்…
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் தங்கம்ஸ்:)
உங்க கமெண்ட்ஸ் பொறுத்து தான் எபிஸ் பாஸ்ட்டா வரும். ப்ளீஸ் கீப் சப்போர்ட்.
