அத்தியாயம் 1
ஆதவா அப்போ பெரியவன் ஆனதும் நீயே என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?
மாலை நேரச் சூரியன் மெல்லத் தன் கதிர்களைச் சுருக்கிக் கொள்ள, அந்தச் செவ்வானத்தின் ஒளி விளைச்சலுக்குத் தயாராக இருந்த கதிர் முற்றிய நெற்பயிர்கள் மீது பட்டு, அந்த இடமே ஒரு தங்கக் கடலாகத் ஜொலித்து கொண்டிருந்தது.
தென்றல் காற்று மெல்ல அந்த நெற்பயிர்களை வருடிச் செல்ல, ஏதோ தன் காதலனே தன்னை வருடிச் சென்றது போல் அவை அனைத்தும் கூசி சிலிர்த்து காற்றில் மெல்ல அசைந்தாட, வரப்புகளுக்கு நடுவே இருக்கும் அந்த ஒத்தையடி பாதையின் வழியாக ஒரு பத்து வயது சிறுவன் கையில் சாக்லேட்டோடு சிரித்தவாறே ஓடிக்கொண்டிருக்க, அவன் பின்னால் பட்டுப் பாவாடைச் சட்டை அணிந்து கொண்டு பூமி தாய்க்கு வலிக்கக் கூடாதென்று தன் சின்னஞ் சிறு பாதங்களால் கொலுசுச் சத்தம் அந்த இடம் எங்கும் எதிரொழுக்க, தன் முன்னால் ஓடுபவனை துரத்திக் கொண்டு ஓடினால் குட்டி தியா…
“ஆதவா ஓடாத நில்லு! நில்லுடா…” என்று தன் மழலை மாறாத குரலில் ஆதவனை அழைத்தவரே ஓடினாள்.
“நிக்க மாட்டேனே… உனக்கு வேணும்னா நீயே என்னை வந்து துரத்திப் பிடி” என்றவன் ஒரு நொடி நின்று தன் கையில் இருந்த சாக்லேட்டை தியாவிற்கு முன் நீட்டி, பலிப்பு காட்டி விட்டு எதிரே இருந்த தென்னந்தோப்பை நோக்கி மீண்டும் ஓடினான்.
“ஆதவா… அது மாமா எனக்காக ஆசையா வாங்கி கொடுத்தது டா… கொடுடா” என்று கெஞ்சலோடு கேட்டவள். மூச்சு வாங்க அவனைத் திருத்திக் கொண்டு ஓட, ஆதவனும் அந்தக் குட்டி தேவதையின் கெஞ்சல் மொழிகளைக் கூடக் காதில் வாங்காமல் வயல் தாண்டி இருந்த தங்களின் தென்னந்தோப்பிற்குள் ஓடி மறைந்தான்.
இங்குத் தென்னை மர நிழலில் கயிற்று கட்டிலில் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர் ஆதவன் மற்றும் தியாவின் பெற்றோர்கள்.
“டேய் நீ மட்டும் என் கையில மாட்டேனா உன்ன அவ்வளவுதான்…. நில்லடா என்னோட சாக்லேட்டை கொடு” என்றவள் கோபத்தோடு ஆதவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்த தியா சட்டென்று கீழே கிடந்த ஒரு கல் தடுக்கி “அம்மா…..” என்ற அலறலோடு கீழே விழுந்தால்.
அதைக் கண்டு பதறிப் போன பெரியவர்கள் தியாவை தூக்குவதற்காக எழ, அதற்குள் அவளுக்கு ஓடிப் பிடித்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த ஆதவன் தன் கையில் இருந்த சாக்லேட்டை அப்படியே கீழே போட்டுவிட்டு ஓடிச் சென்று கீழே விழுந்த தியாவை தூக்கினான். பாவம் கீழே விழுந்ததில் தியாவின் முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வர, வலி தாங்க முடியாமல் அந்தச் சின்னஞ்சிறு குழந்தை அழுக ஆரம்பித்தாள்.
முகம் சிவக்க அழுகும் தியாவை பார்த்துச் சற்று வருத்தப்பட்ட ஆதவன்.
“சாரி தியா என்னால் தான் உனக்கு அடிபட்டுடுச்சு… நான் உன்கிட்ட இருந்து அந்தச் சாக்லேட்டை பிடுங்கி இருக்கக் கூடாது, சும்மா உன் கூட விளையாடுறதுக்காகத் தான் அப்படி பண்ணுனேன். ஆனா நீ கீழ விழுவேன்னு எனக்குத் தெரியாது… ஐ அம் சோ சாரி” என்றவன் அவள் உயரத்திற்கு மண்டியிட்டுத் தன் இருக்காதுகளையும் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான்.
“நீ எதுக்கு சாரி கேக்குற? நீ ஒன்னும் என்னைத் தள்ளி விடல ஆதவா… இதோ இந்தத் தடி மாடு கல்லு தான் என்னைத் தள்ளி விட்டுச்சு! அப்போ தப்பு அந்தக் கல்லு மேல தானே?” என்று மழலை மனம் மாறாமல் தியா கூறினால்.
“என்ன தியா சொல்ற? இந்தக் கல்லு தான் உன்னைத் தள்ளி விட்டுச்சா? அப்போ இந்தக் கல்லுக்கு நான் சரியான பாடம் கற்றுக் கொடுக்கிறேன், ஏய்… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட தியாவையே நீ கீழே தள்ளிவிட்டு இருப்பே? உன்னை என்ன பண்றேன்னு பாரு” என்றவன் அந்தக் கல்லை எடுத்து இரண்டு மூன்று முறை கீழே தூக்கி வீசினான். ஆனால் அப்பொழுதும் அது உடையாமல் போக, அதை கண்ட தியாவின் முகம் நொடியில் வாடிப் போனது.
“என்ன ஆதவா? இது உடையவே இல்ல?” என்று அழுகை குரலில் தியா கேட்க, அதையே தான் ஆதவனும் யோசித்துக்கொண்டிருந்தான்.
பாவம் அந்தச் சிறுவண்டுகளுக்கு எப்படி தெரியும்? தூக்கி எறிந்ததும் நொடியில் உடைந்து போக அது கண்ணாடி அல்ல கல்லென்று…
சில நொடிகள் யோசித்த ஆதவன் சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு சட்டென்று ஒரு யோசனை வர, அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு பெரிய கிணற்றின் அருகே சென்றவன்.
“என்னோட தியாவை கீழே தள்ளிவிட்டதுக்கு உனக்கு இதுதான் தண்டனை” என்றவன் தன் கையில் இருந்த அந்தக் கல்லைக் கிணற்றுக்குள் தூக்கி வீசினான். அதைக் கண்ட தியா தன் சின்னஞ்சிறு கைகளைத் தட்டி சிரித்தாள்.
“தியா இனி நீ அழாத, நான் அந்தக் கல்ல கிணத்துல தூக்கி போட்டுட்டேன் இனிமே அந்தக் கல்லால கிணத்தை விட்டு வெளியே வரவே முடியாது…” என்றவன் அவளின் குண்டுக் கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீரை துடைத்து விட, தியா ஆதவனின் இரு கன்னங்களையும் தன் பிஞ்சு கைகளால் தாங்கி.
“ஐ லவ் யூ ஆதவா…” என்றவள் தன் குட்டி செப்பு இதழ் குவித்து அவன் இதழில் முத்தமிட, இவ்வளவு நேரம் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்கள். ஒரு நொடி வாயை அடைத்துத் தான் போனார்கள்.
“ஏய்… தியா… என்னடி இது புது பழக்கம்? எங்க இருந்து இத கத்துக்கிட்ட?” என்று கோபத்தோடு அவள் அன்னை மதியழகி கேட்க, தன் தாயின் கோபம் கண்டு பயந்து போன தியா சட்டென்று ஆதவனின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டால்.
“அத்தை இப்ப எதுக்கு நீங்க என்னோட தியாவை திட்டறீங்க? அவ இப்போ அப்படி என்ன பண்ணா?” என்று ஆதவன் சற்று கோபத்தோடு கேட்டான்.
“ஏய்… எதுக்குடி இப்போ பிள்ளையைத் திட்டற? அவ குழந்தை ஏதோ தெரியாம பண்ணி இருப்பா… தியா குட்டி நீ எதுக்கு ஆதவனுக்கு முத்தம் கொடுத்தா? இதை யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தா?” என்று அவளின் தந்தை மனோகரன் அன்போடு கேட்க, ஆதவனின் பின்னால் இருந்து மெல்ல எட்டி தன் தந்தையை பார்த்த தியா.
“நீங்கத் தான் ப்பா…” என்று தியா கூற, அதைக் கேட்டு அனைவரும் குழப்பத்தோடு மனோகரனை பார்த்தனர்.
“நானா? நான் எப்போ இதை உனக்குச் சொல்லிக் கொடுத்தேன்?” என்றவர் கேட்க, தியாவோ அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு
“அப்பா நீங்கத் தானே அன்னைக்கு அம்மாவுக்கு இந்த மாதிரி முத்தம் கொடுத்தீங்க, அம்மாவும் உங்களுக்குத் திரும்ப முத்தம் கொடுத்தாங்க… நான் எதுக்கு ரெண்டு பேரும் முத்தம் கொடுத்துகிட்டீங்கனு உங்க ரெண்டு பேர் கிட்ட கேட்டுப்போ நீங்கத் தானே நமக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு இந்த மாதிரி தான் தேங்க்ஸ் சொல்லணும்னு சொன்னீங்க… அதான் நானும் ஆதவனுக்கு முத்தம் கொடுத்துத் தேங்க்ஸ் சொன்னேன். எனக்கு ஆதவனை எவ்வளவு பிடிக்கும்னுஉங்களுக்குத் தெரியும் தானே?” என்று தன் கண்களைச் சிமிட்டு தலையை ஆட்டிக் கேட்க, அதைக் கேட்ட ஆதவனின் தந்தை ராகவன் சத்தமாகச் சிரித்தார்.
“டேய் மனோ… என்னடா இது? தியா குட்டி என்னென்னமோ சொல்ற, அவ சொல்றத பார்த்தா வீட்ல பயங்கர ரொமான்ஸ் போலயே” என்றவர் தன் நண்பனைக் கிண்டல் செய்ய, தன் மகள் கூறியதைக் கேட்ட மதியழகியின் முகமோ வெட்கத்தில் செவ்வனமாய் சிவந்து போக, தன் கணவனை முகம் சிவக்க ஒரு பார்வை பார்த்து விட்டுத் திரும்பி நின்று கொண்டார்.
“என்ன மதி கூடிய சீக்கிரத்துல குட்டி மனோவை பார்க்கலாம் போலயே” என்று ஆதவனின் தாய் வசுந்தரா தன் தோழியைக் கிண்டல் செய்ய… பாவம் அவருக்குத்தான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“ஏய் வசு நீயும் ஏண்டி அவங்க கூடச் சேர்ந்துட்டு என்னைக் கிண்டல் பண்ற?” என்று மதியழகி சிவந்த முகத்தோடு தன் தோழியிடம் கேட்டார்.
“நான் ஒன்னும் சும்மா கேட்கலையே! நம்ப தியா குட்டி தானே சொன்னா… தேங்க்ஸ் இப்படித்தான் அப்பாவும் அம்மாவும் சொல்லிக்கிட்டாங்கனு, அதான் அந்தத் தேங்க்ஸ்க்கு ரிசல்ட் எப்போன்னு கேட்டேன்” என்று வசுந்தரா மேலும் தன் தோழியைக் கிண்டல் செய்ய, மதியழகியின் முகம் வெட்கத்தில் மேலும் சிவந்து போனது.
தங்களின் பெற்றோர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஆதவன். சில நொடிகள் எதையோ யோசித்து விட்டுப் பின் என்ன நினைத்தானோ, தன் பின்னால் நின்றிருந்த தியாவை தன் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தி அவள் உயரத்திற்கு மண்டியிட்டவன்.
“தியா என்னதான் நீ அந்தக் கல்லு தடுக்கி கீழே விழுந்து இருந்தாலும், அதுக்கு ஒரு வகைல நானும் தானே காரணம்… நான் உன்னைக் கிண்டல் பண்ணிட்டே ஓடினதுனால தான் நீ விழுந்துட்ட, இனிமே நான் இப்படி பண்ண மாட்டேன். சோ ஐ அம் சோ சாரி” என்றவன் தியாவை அணைத்து அவள் செப்பு இதழில் பச்சக்கென்று ஒரு முத்தம் கொடுத்தான்.
“அடேய்… மகனே நீ என்னடா பண்ற?” என்று ராகவன் அதிர்ச்சியோடு கேட்க
“அப்பா அன்னிக்கு நீங்களும் அம்மாவும் சண்டை போட்டுக்கிட்டீங்கல்ல? அப்போ கூட நீங்கக் கோவத்துல அம்மாவை அடிச்சிட்டீங்களே, அதுக்கப்புறம் அம்மாவைச் சமாதானப்படுத்தி நீங்களும் இப்படி தானே சாரி கேட்டீங்க, அதான் நானும் தியா கிட்ட சாரி கேட்டேன்” என்று ஆதவன் தன் தந்தையை அனைவரின் முன்பும் போட்டுக் கொடுத்து விட, அவ்வளவுதான் மனோகரனுக்கும் மதியழகிக்கும் சிரிப்பு அடக்கவே முடியவில்லை.
ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிக் கிண்டல் செய்து பேசிச் சிரித்து கொண்டிருக்க, தியாவும் ஆதவனும் ஓரமாக அமர்ந்து தங்கள் உலகில் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். தங்கள் குழந்தைகளின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்து இரண்டு ஜோடிகளும் சிரித்துக்கொள்ள…
“டேய் ராகவா எனக்கென்னமோ இவங்க இரண்டும் நாளைக்கு போய்க் கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல போல” என்று கிண்டலாக மனோகரன் கூறினார்.
“ஆமா அண்ணா இவங்களா கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி நம்பள இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட வேண்டியது தான்” என்று சிரிப்போடு வசுந்தரா கூறினார்…
“அறிவு கெட்டவளே… அவங்க ஏதோ சின்னக் குழந்தைங்க விளையாட்டுக்குப் பேசுறாங்க அத போய்ச் சீரியஸா எடுத்துக்கிட்டு” என்று மதியழகி தன் தோழியின் தோளில் ஒரு அடி போட்டார்.
“இப்ப வேணாம் அவங்க சின்னப் பிள்ளைகளா இருக்கலாம்மா… ஆனா எப்படியும் இன்னும் கொஞ்சம் வருஷத்துல ரெண்டு பேரும் வளர்ந்துடுவாங்க நல்லா விபரமும் தெரிஞ்சிடும் அப்போ உண்மையாலுமே ரெண்டு பேரும் காதலிச்சா கல்யாணம் பண்ணி வச்சிட வேண்டியதுதான்….” என்று ராகவன் கூறினார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இரண்டு வாண்டுகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு.
“ ஆதவா அப்போ பெரியவன் ஆனதும் நீயே என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று மழலை குரலில் தியா கேட்க,
“கண்டிப்பா…. நான் வளர்ந்து பெரியவனதும் என்னோட தியாவை நானே கல்யாணம் பண்ணிக்குவேன். என்னோட தியா குட்டியா நான் யார்கிட்டயும் கொடுக்கமாட்டேன்” என்று கூறியவன் தியாவின் நெற்றியில் மெல்லிய முத்தம் பதிக்க, கண்மூடி இருந்த தியா தன் கண்களை மெல்ல திறந்துப் பார்த்தபோது தன் எதிரே இருந்த ஆதவனின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது.
“ஆதவா… ஆதவா… எங்க போற?” என்றவள் அவனைத் தொட முயற்சி செய்தால். ஆனால் ஆதவனின் உருவோமோ மெல்ல அவளை விட்டு விலகிச் சென்றது.
“கவலைப்படாத தியா… என்ன ஆனாலும் நான் கண்டிப்பா உன்னைத் தேடி வருவேன். எனக்காக நீ காத்திரு!” என்றவன் காற்றோடு காற்றாகக் காத்தாகக் கரைந்து போக, அடுத்த நொடியே ஒரு கார் சாலையில் பல முறை உருண்டு பலத்த சத்தத்தோடு வெடித்த சிதற,
“ தியா….” என்று ஆதவனின் அலறல் சத்தம் பெண்ணவளின் காதை நிறைக்க, அடுத்த நொடியே…
“ஆதவா!…” என்ற அலறலோடு தன் தூக்கத்திலிருந்து பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த தியாவின் நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்ப, இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.
தியாவின் கனவு வெறும் கனவும் மட்டுமா? இல்லை அதான் நிஜமா? எனக்காகக் காத்திரு என்று சொல்லிச் சென்ற ஆதவன் திரும்ப வந்தனா? இந்தக் கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
உன் விழி தேடும் என் பிம்பம்….
வணக்கம் என் புதிய வாசக நண்பர்களே… என்னை உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை… ஒருவேளை என்னுடைய கதையைத் தொடர்ந்து படிக்கும் என் அன்பு வாசகர்கள் என் எழுத்தையும் என் கதையையும் கண்டறிந்தால் எனக்கு மிகவும் சந்தோசம் தான், ஆனா கண்டுபிடித்தால் இந்தப் போட்டி முடியும் வரை ரகசியம் காக்கவும்…
என்னுடைய இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்களாகிய நீங்கக் கொடுக்கும் ஊக்கம் மட்டுமே என்னை அடுத்ததா படிக்குக் கொண்டு செல்லும்… ஆதலால் கதையைப் படிக்கும் அனைவரும் என் கதையைப் பற்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை கருத்து பெட்டியில் பதிவு செய்யுங்கள். அது நிறையாக இருந்தாலும் சரி குறையாக இருந்தாலும் சரி… உங்கள் கருத்து ஒவ்வொன்றும் எனக்கு மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள் நண்பர்களே!….
