அத்தியாயம் – 1
இமைப்பொழுதில் தன்னை தடுக்க போகும் குறியை கடந்து சென்றே தீர வேண்டும் என்று புயல் வேகத்தில் அந்த நெடுஞ்சாலையில் பறந்து கொண்டிருந்தான் அவன்.
அவனை ஏமாற்றும் பொருட்டே சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்த சாலை இயக்க குறியால் எரிச்சலுடன் “ஷிட்!” என தன் உயர்ரக லேண்ட்ரோவர் மகிழுந்தின் இயக்கத்தை நிறுத்தினான்.
நெட்டுக்கும் வரிசை கட்டி நின்றிருக்கும் வாகனங்களுக்கு மத்தியில் காத்திருந்தவனுக்கு பொறுமை என்பது தற்சமயம் கிஞ்சிற்றும் கிடையாது.
அவனுடைய கூர்மையான விழிகள், மஞ்சள் நிறம் எப்போது பச்சைக்கு மாறும் என்றே அவதானித்திருந்தது.
வெகு நேரம் அவனை காக்க வைத்தே அவனுக்கான பச்சைக்கொடி காட்டப்பட்டது.
மறு நொடியே புயல் போல் அமைதியின்றி அலைமோதும் தன் மனதை சுமந்து, வாகனங்களை முந்திக்கொண்டு பறந்தான் அதிரதன்.
செல்லும் இடம் நெருங்க நெருங்க, அவன் இதயம் பந்தயக்குதிரையின் வேகத்தில் துடித்தது.
கோயம்புத்தூரில் வசதியானவர்களும் பகட்டானவர்களும் மட்டுமே வசிக்க கூடிய அந்த பகுதியில் நுழைந்து ஒரு வில்லாவின் முன் சென்று நின்றான்.
சீரற்று துடிக்கும் தன் இதயத்தின் மீது வலது கரத்தை வைத்து மூச்சை ஆழ்ந்து விட்ட அதிரதன், தனக்கு முன் இருக்கும் அழகிய வெள்ளை ரோஜா பூங்கொத்தை பார்த்து உதடு பிரித்து மெல்லிய முருவலை உதிர்த்தான்.
பூங்கொத்தை கையில் ஏந்தி, “கண்டிப்பா கோவமா இருப்பா. ஆனா உன்ன பாத்தா மயங்கிடுவா” என்று பூக்களோடு பேசி சிரித்தவன் வீட்டினுள் சென்றான்.
காலை எட்டு மணியை தாண்டியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததில் யோசனையாக தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்தான்.
சாளரத்தின் வழி உள் நுழைந்த சூரிய கதிர்களுடன் பிரகாசித்த அந்த வீட்டின் அசாத்திய அமைதி, அதிரதனுக்கு விவரிக்க முடியா அச்சுறுத்தலை கொடுத்தது.
கையில் பூங்கத்தோடு அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கண்களை செலுத்தியவனுக்கு அவன் தேடி வந்தது கிடைக்கவில்லை போலும்.
“எங்க போயிருப்பா?” என்று சிந்தித்தவன் யோசனை வந்தவனாக மாடியில் இருக்கும் தன் அறைக்கு இரண்டிரண்டு படியாக தாவி ஏறி சென்றான்.
புதிதாக உதித்த காதலுடனும், எதிர்பார்ப்புடனும் அந்த அறையின் கதவை திறந்தவனுக்காக காத்திருந்தது அவன் செய்து சென்ற பிழை.
நுழைவிலிருந்தே சொட்டியிருந்த அவள் உதிர துளிகள் அதிரதனை உலுக்கியது. வேகமாக உள்நுழைந்து மெத்தையின் மறுபுறம் சென்று பார்க்க, ஸ்தம்பித்து போய் நின்று விட்டான் ஆணவன்!
தன் கை மணிக்கட்டு நரம்பை அறுத்து கொண்டு தன் முடிவை தேடியிருந்தாள் அதிரதனின் மனைவி வேதிகா.
வெள்ளை நிறத்திலான அவள் உடை உதிரத்தை உறிஞ்சி, ரத்த வெள்ளத்தின் மத்தியில் தேவதை போன்றவள் நிம்மதியாக கண்களை மூடியிருந்தாள்.
அவளைக் கண்டதும் மூளை மரத்துப்போய் நின்றிருந்தவன் நிமிடங்களில் தன் சுயம் மீண்டு “வேதிகா!” என அந்த வீடு அதிரும் படி துடித்து அலறினான்.
வேகமாக அவள் தொங்கிய தலையை மடியில் கிடத்தி, அவளை உலுக்கியவன் எவ்வளவு அழைத்தும் அவள் விழி திறப்பதாய் இல்லை.
“ஏய்! நடிக்காதடி. என்னை பாருடி” என்று அவள் கண்ணம் தட்டி அவளை எழுப்ப முயன்றவனின் முயற்சி தோல்வியை தழுவியது.
அதற்கு மேலும் நேரம் தாழ்த்தக்கூடாது என்று அவன் வேகமாக அவளை தன் கையில் ஏந்தி ஓடினான்.
ஆசை ஆசையாக அவன் வாங்கி வந்த வெள்ளை நிற ரோஜாக்கள் அவள் உதிரத்தோடு சேர்ந்து உதிர்ந்து கிடந்தது.
உதிர்ந்தது ரோஜாவின் இதழ்கள் மாத்திரமல்ல. வேதிகாவின் மனமும் தான்!
ஓயாமல் அவள் பெயரை ஜபித்துக் கொண்டே மீண்டும் தன் காரை அடைந்தவன் முன்னிருக்கையில் அவளை கிடத்தி வந்து காரை கிளப்பினான்.
“வேதிகா! எனக்கு பயமா இருக்குடி. உனக்கு ஒன்னும் இல்ல. நீ திரும்ப வந்துருவ. இப்ப ஹாஸ்பிடல் போயிடலாம். அதுவரைக்கும் பொறுத்துக்கடி” என்று பைத்தியக்காரனைப் போல் அவன் கெஞ்சியவை அவள் செவிகளை எட்டியதாகவே தெரியவில்லையே!
தன் ஒற்றை அழைப்பிற்கு சிட்டாய் வந்து நிற்பவள், இன்று இத்தனை தூரம் தான் கெஞ்சியும் விழி மலர்த்தாமல் இருப்பதிலேயே அதிரதனின் சர்வமும் ஆட்டம் கண்டது.
உச்சியில் இருந்து பாதம் வரை உடல் நடுங்க, தன்னவளின் உயிரை எப்படியேனும் மீட்டிட வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் முயன்று வாகனத்தை இயக்கினான்.
இதோ நகரின் சிறந்த பல்நோக்கு மருத்துவமனைக்கு வந்தவன் துரிதமாக அவளை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினான்.
“டாக்டர்” என்று கூச்சலிட்டு சென்றவனை மருத்துவமனை மொத்தமும் திரும்பிப் பார்த்தது.
சூழலை புரிந்து கொண்ட தாதிகள், அவனை அவசர சிகிச்சை பிரிவிற்கு வழி நடத்த, அவர்கள் பின் சென்றவன் தன் இதயம் கவர்ந்தவளை படுக்கையில் கிடத்தினான்.
“சர் நீங்க கொஞ்சம் வெளிய இருங்க” என்று தாதிகள் கூற “இல்ல. சீக்கிரமா டாக்டர வர சொல்லுங்க. ஷீ இஸ் மை லைஃப்!” என்று திருமணமான ஒன்றரை வருடத்தில் முதல்முறையாக அவளை தன் மனைவியாக அடையாளப்படுத்தினான் அதிரதன்.
என்ன இந்த வார்த்தையைக் கேட்டிடவே தவம் இருந்தவள் தான் தற்போது சுயநினைவின்றி கிடக்கிறாளே!
“சர் முதல்ல அவங்க கண்டிஷன் செக் பண்ணிட்டு தான் டாக்டர் வர சொல்ல முடியும். நீங்க வெளிய போங்க” என்று அவனை துரத்தாத குறையாக வெளியில் தள்ளி, வேதிகாவின் நிலையை ஆராய்ந்தனர்.
அவளிடத்தில் தன் உயிரையும் சேர்த்தே கொடுத்துவிட்டு வெறும் கூடாக வெளியில் வந்தவன் கால்கள் தளர்ந்து போக, அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்து விட்டான்.
அவள் ரத்தம் படிந்த கரத்தால் முகத்தை மூடிய அதிரதனின் விழிகள் கலங்கியது.
தன்னுடனேயே இருந்தபோது தெரியாத அவளின் அருமை அவளின் வாழ்வா? சாவா? என்ற நிலையில் அவனுக்கு தெரிவது தான் விந்தையோ என்னவோ!
உள்ளே “சிஸ்டர் இவங்களுக்கு பல்ஸ் சுத்தமா இல்ல. உடனே டாக்டர கூட்டிட்டு வாங்க” என்று தாதி கூற, வேகமாக மற்றொருவள் மருத்துவரை அழைத்து வந்தாள்.
தாதி அழைத்ததாய் வேதிகாவை பரிசோதிக்க வந்த மருத்துவன் ராகவ், வெளியில் அமர்ந்திருந்த அதிரதனை கண்டு “மச்சான் நீங்க இங்க என்ன பண்றீங்க?” என்று புரியாமல் வினவினான்.
இருட்டில் தெரிந்த ஒற்றை ஒளியாய் கேட்ட தன் தங்கையின் வருங்கால கணவனின் குரலில், நிமிர்ந்த அதிரதன் ராகவை நோக்கி சென்றான்.
“ராகவ்…வேதிகா…உள்ள…சூசைட் அட்டென்ட் பண்ணிட்டா!” எனக் கூறி முடிப்பதற்குள் செத்து பிழைத்து விட்டான் அதிரதன்.
அவனால் இன்னும் அவள் செய்த செயலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் நெஞ்சம் அடைத்தது.
அதிரதன் கூறியதைக் கேட்டு அதிர்ந்த ராகவ் “என்ன சொல்றீங்க மச்சான்?” என்று கேட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் துரிதமாக சிகிச்சை பிரிவிற்குள் ஓடினான்.
ஒரு மருத்துவனாக நிலைமையின் கணம் புரிந்து, வேதிகாவை உயிர்பிழைக்க வைப்பதற்கான பணிகளை மேற்கொண்டான் ராகவ்.
வேதிகாவை சோதித்த ராகவிற்கும் பெரும் அதிர்ச்சி!
“சிஸ்டர்! உடனே ட்ரிப்ஸ் போடுங்க. இவங்களுக்கு பிளட் நிறைய லாஸ் ஆயிருக்கு. உடனே ப்ளட் அரேஞ்ச் பண்ணுங்க?” என்று ராகவ் சொன்னான்.
அதற்கு தாதியோ, “இவங்களுக்கு ஏபி நெகட்டிவ் குரூப் டாக்டர்.
நம்ம பிளட் பேங்க்ல இருந்த ஸ்டாக்க முன்னாடியே ஆப்ரேஷனுக்கு யூஸ் பண்ணிட்டாங்களாம். இப்ப வேற பிளட் பேங்க்ல தேடிட்டு இருக்கோம்” என்றதும் ராகவிற்க்கு மேலும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“தேடி பாக்குறதுக்கு எல்லாம் நேரம் இல்ல” என்று அந்த தாதியிடம் கத்தியவனுக்கு சட்டென ஓர் யோசனை தோன்றவே அவசரமாக வெளியில் வந்தான்.
சட்டையின் மடிப்பு கூட கலையாது மிடுக்குடன் வலம் வரும் அதிரதன், இன்று கசங்கிய சட்டையும் ஆங்காங்கே ஒட்டி இருந்த ரத்த கரையுடனும் ஒரு யாசகனை போல் அமர்ந்திருந்தான்.
அவனை அந்நிலையில் கண்ட ராகவிற்கு கனிவு வருவதற்கு பதிலாக கட்டுக்கடங்கா ஆத்திரம் தான் வந்தது.
அதிரதனின் அருகில் சென்று சட்டை காலரை கொத்தாக பிடித்து தூக்கிய ராகவ் “நீ எல்லாம் மனுஷன் தானா? அந்த பொண்ணு உனக்கு அப்படி என்ன பண்ணுச்சுனு அவள இந்த நிலைமைக்கு கொண்டு வந்து தள்ளிருக்க?” என்று அவனை உலுக்கி கேள்விக்கணைகளை தொடுத்தான்.
ராகவின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத அதிரதன், “ராகவ் ப்ளீஸ். இப்ப அவ எப்படி இருக்கா? பிளட் நிறைய போயிருச்சு. தயவு செஞ்சு வேதிகாவுக்கு என்னனு பாரு” என்று கெஞ்சினான்.
“என்னயா பாக்கணும்? உன்கிட்ட எந்த அளவுக்கு டார்ச்சர் அனுபவச்சிருந்தா வயித்துல குழந்தைய வச்சுகிட்டு தற்கொலை பண்ற முடிவ அவ எடுத்துருப்பா?
உனக்கெல்லாம் எல்லாம் அவ புருஷனா இல்ல சாதாரண மனுஷனா இருக்க கூட தகுதி கிடையாது” என ஆக்ரோஷமாக ராகவ் கத்தியதில் அங்கிருந்த அத்தனை பேருமே திரும்பிப் பார்த்தனர்.
அதுவரை தன்னவளையே நினைத்திருந்த அதிரதனுக்கு ராகவின் வார்த்தைகள் நெஞ்சை பிளந்தது.
‘தான் கேட்டது நிஜம்தானா?’ என்று நம்ப இயலாமல் ராகவை விழிகள் தெறிக்க பார்த்தான் அதிரதன்.
“நீ…என்ன சொல்ற? அவ ப்ரெக்னன்ட்டா இருக்காளா?” வெளிவர மறுத்த வார்த்தைகளை முயன்று கேட்டு வைத்தான் அதிரதன்.
“ஓ! அப்ப வேதிகா பிரக்னண்டா இருக்கிறது கூட உனக்கு தெரியாது இல்ல? ச்சீ போயும் போயும் உன்ன மாதிரி ஒரு கேவலமான ஜென்மத்துக்காக அந்த பொண்ணு என்னல்லாம் பண்ணுச்சு?
வேண்டாம். இதுக்கு மேல உன்கிட்ட பேசுனா நான் கொலைகாரனா மாறிடுவேன். உள்ள துடிக்கிற ரெண்டு உயிர காப்பாத்துற கடமை எனக்கு இருக்கு.
அவளுக்கு ரொம்ப பிளட் போயிருக்கு. உடனே ரத்தம் ஏத்தணும். உனக்கும் ஏபி நெகட்டிவ் தானே? வந்து ரத்தம் குடு” பிடிக்கவில்லை என்றாலும் கையில் இருக்கும் வாய்ப்பை தவறவிட விரும்பாதவனாக கூறினான் ராகவ்.
அதிரதனுக்கோ தன்னவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற செய்தியே தலையில் இடி இறங்கியதை போல் இருந்தது.
அவன் செய்து வைத்தவை யாவும் தற்போது விஸ்வரூபம் எடுத்து அவனை அச்சுறுத்தியது.
தான் இத்தனை கூறியும் அசையாமல் நின்றிருக்கும் அதிரதனின் புஜத்தைப் பற்றி சுயம் மீட்ட ராகவ், “என்ன? இவளுக்கு எதுக்கு ரத்தம் கொடுத்து காப்பாத்திகிட்டு. செத்தா செத்து தொலையட்டும்னு விடலாம்னு நினைக்கிறியா?” என்று கேட்க அதில் துடித்து தான் போனான் அதிரதன்.
விழி படலம் மறைத்த கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு தன்னவளுக்கு ரத்தம் கொடுக்க ஒரு அடி முன்னால் எடுத்து வைத்த அதிரதன், பின் தான் ‘என்ன காரியம் செய்கிறோம்?’ என்ற உண்மை மண்டைக்கு உரைத்து பின் வாங்கினான்.
-தொடரும்.
