2. உருகும் மனதில் உறைபனியாய்

அத்தியாயம் – 2

 

கல்லூரி வந்த பவித்ராவிற்கு அப்போது தான் மூச்சே வந்தது. வரும் வழியெல்லாம் முத்துராமன் அவளை ஒருவழி ஆக்கிவிட்டார். பெண் பிள்ளை பொறுப்பாக இருக்க வேண்டும் என்று ஆரம்பித்து நேரத்தின் மகத்துவம், பொறுமையில் பூமாதேவி போல் இருக்க வேண்டும் என்று வரும் வழியெல்லாம் அவள் காதில் ரத்தம் வரும் அளவிற்கு அவளுக்கு அறிவுரை கூறியபடியே வந்தார்.

இது வாடிக்கையான விசயம் தான் என்றாலும் இப்போது எல்லாம் பவித்ராவிற்கு எரிச்சலாக இருந்தது. வீட்டிற்கு சென்றாலே மூச்சு முட்டும் உணர்வு தான் அவளுக்கு. அதை செய்யாதே இதை செய்யாதே அப்படி இரு இப்படி இரு என்று எல்லாவற்றுக்கும் அங்கு ஒரு சட்டம் இருக்கிறது. மீறினால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

பெண் பிள்ளை என்பதால் கூடுதல் கண்காணிப்பு அவர்கள் குடும்பத்தில். பவித்ரா இப்படி என்றால் கார்த்திகாவின் நிலைமையோ வேறாக இருந்தது. சரி தவறு தெரியாமல் பாட்டி சொல்வதை வேதவாக்காக கேட்டு பின்பற்றி கொண்டு இருக்கின்றாள். எல்லாம் நினைத்து பார்த்த பவித்ராவிற்கு தலைவலிக்க ஆரம்பித்தது.

உள்ளே வந்தவள் முன் வந்த தேவ், “ஹே பவி, இந்த பிங்க் சுடில அழகா இருக்க” என்று அவள் கையை பிடிக்க போக அதை லாவகமாக தவிர்த்தவள்.

“தேங்க்ஸ் தேவ். காலையில என்ன சாப்பிட்ட?” என்று அவள் இருக்கைக்கு சென்றாள்.

அவளை காதலாக பார்த்தவன், “சண்ட்விச் தான்” என்றவன் அவளுக்கு பின் இருந்த இருக்கையில் அமர்ந்தான். 

“எப்ப பாரு சான்ட்விச் தானா? சரி இன்னைக்கு என் லஞ்ச் நீ சாப்பிடு” என்றவள் பக்கத்தில் இருந்த அவளது தோழி சந்தியாவுடன் பேச ஆரம்பித்து விட்டாள்.

‘இன்னைக்கு எப்படியாவது அவக்கிட்ட மனசைத் திறந்து பேசனும்’ என்று அவளோடான வாழ்கையைப் பற்றி தேவ் யோசிக்க ஆரம்பித்தான். சில நிமிடத்தில் வகுப்புக்கு பேராசிரியர் ஒருவர் வந்துவிட அப்படியே வகுப்பும் ஆரம்பித்தது.

அதே சமயம் பேங்க் சென்ற சேதுராமன் இன்னும் மேனேஜர் வராததால் செந்தாமரையை பார்க்க அவர் கிராமத்திற்கு சென்றார். அவரை பார்த்த செந்தாமரை, “வா டா தம்பி இப்போதான் அக்காவை பார்க்க தோணுச்சா.” என்று அவன் கையை பிடித்து பேசினார். 

“அதெல்லாம் இல்லக்கா. மாப்பிள்ளையை அடிக்கடி பார்க்கிறேன். இங்கன வர தான் நேரம் கிடைக்கல. பஞ்சாயத்து ஆபிஸ்க்கு மாப்பிள்ளை கிளம்பிட்டரா?”

“இப்போ தான் கிளம்பினான் டா. நீ இங்க உட்காரு” என்றவர்,

“ஹே கமலா ஒரு கோழியை அடிச்சு உறிச்சுக் கொண்டு வா. அடியே வேணி அரைக்கிலோ சின்ன வெங்காயத்தை உறிச்சு வணக்கு நான் வாரேன்” என்ற செந்தாமரை வேகமாக உள்ளே சென்று ஒரு இளநீரை வெட்டி அவனுக்கு கொண்டு வந்தார்.

“இதெல்லாம் எதுக்கு அக்கா. நான் உன்னை பார்த்துட்டு அப்படியே பேங்க் போகலாம்னு வந்தேன். நீ என்னன்னா விருந்து வைச்சு இங்கயே இருக்க வைச்சிருவ போல.” என்று கிண்டல் செய்தான்.

“ஆமா டா நீ இங்க தினமும் வர உனக்கு அப்படியே ஆக்கிப் போட்டு அழகு பார்க்க. போ டா” என்று சமையலுக்கு தேவையானதை செய்ய ஆரம்பித்தார்.

சேதுராமனோ இளநீரை குடித்துவிட்டு தோட்டத்தில் நடக்கும் வேலையை கவனிக்க ஆரம்பித்தான். அவன் வந்தாலே அங்கு இருப்பவர்களுக்கு சற்று நடுங்கும்.

சேதுராமனுக்கு எதிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். பண்ணையில் வேலை பார்த்தாலும் சரி மண்டியில் வேலை பார்த்தாலும் சரி செய்யும் தொழில் அவருக்கு சுத்தமாக இருக்க வேண்டும். 

எப்போதும் போல வேலையாட்களை விரட்டி வேலையை ஏவியவர் அனைவரும் சரியாக செய்கிறார்களா என்று சிறிது நேரம் கண்காணித்து விட்டு தான் வீட்டிற்குள் சென்றார்.

அதற்குள் செந்தாமரை நல்லெண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து கிள்ளி போட்ட வர மிளகாய் உடன் நாட்டுக்கோழியை மஞ்சள் உப்பு போட்டு வணக்க அந்த வாசனையை பிடித்துக்கொண்டு சமையலறைக்கு சென்றார் சேதுராமன்.

காமாட்சியிடம் இருக்கும் அதே பாசம் செந்தாமரையிடமும் உடன்பிறந்தவர்களுக்கு உண்டு. அதுவும் சேதுராமனை பிறந்ததில் இருந்து வளர்த்தது என்னவோ செந்தாமரை தான். திருமணம் ஆகி கரிகாலன் பிறக்கும் வரை செந்தில்நாதன் செந்தாமரையிடம் தான் வளர்ந்தார். அதனாலோ என்னவோ இவரிடம் மட்டும் சிறு பிள்ளைப்போல் நடந்து கொள்வார்.

அவன் உள்ளே வந்ததும், “சித்த இரு டா சுட சுட உப்புக்கறி தாரேன்.” என்றவர் சொன்னது போலவே ஒரு தட்டில் அவருக்கு எடுத்து தர ஆரப்பொருக்காமல் வாயில் போட்டவர் கையில் ஒன்று வைத்து, “பொறுமையா சாப்பிடு டா” என்று மீதி இருந்த கறியில் குழம்பை வைக்க சென்றுவிட்டார்.

சேதுராமனும் உப்புக்கறியை  சாப்பிட்டு முடித்து கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தான். செந்தாமரையோ வணக்கி வைத்திருந்த வெங்காய தக்காளி கலவையில் தனியாக வறுத்து வைத்திருந்த பட்டை கிராம்பு சோம்பு சீரகம் மிளகு வரமிளகாய் வரமல்லியை சேர்த்து கொஞ்சம் கசகசாவை போட்டு அரைத்து எடுத்து குழம்பை கூட்டி வைக்க ஆரம்பித்தார்.

அந்த வாசனையை பிடித்துக்கொண்டிருந்த சேதுராமனுக்கு சிறுவயது நினைவு வந்தது. தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அக்காவை யாருக்கு தான் பிடிக்காது. சேதுராமன் மட்டும் விதிவிலக்கா என்ன. அப்படியே அவன் கண்ணசர அந்த நேரத்தில் மீதி வேலையை பார்த்திருந்தார் செந்தாமரை.

குழம்பு ஒருபக்கம் கொதிக்க மறுபக்கம் கொதித்துக் கொண்டிருந்த உலையில் அரிசியை போட்டு மூடி வைத்தார். குழம்பு நன்றாக கொதித்து விட அதில் இருந்த கறியை மட்டும் தனியாக எடுத்தவர் நல்லெண்ணெய்யில் சிறிது கடுகு கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து எடுத்து வைத்திருந்த கறியை அதில் பிரட்டி சிறிது மிளகாய் தூள் மல்லித்தூள் போட்டு நன்றாக கிளரியவர் இறக்கும் சமயத்தில் மிளகுத்தூள் போட்டு ஓரமாக இறக்கி வைத்தார்.

கையோடு ஊற வைத்திருந்த புளியில் ரசம் வைத்து வெளியே வந்தவர் கண்டது என்னவோ குழந்தை போல் உறங்கும் சேதுராமனை தான். 

“சேது…. எந்திரிப்பா….” என்று அவனை உசுப்பியவர்,

“சமைச்சு முடிச்சுட்டேன். முகத்தை கழுவிட்டு வா சாப்பிடலாம்” என்றார்.

சேதுராமன் எழுந்து முகம் கழுவி வருவதற்குள் வீட்டிற்கு பின் இருந்த வாழைமரத்தில் தலைவாழையிலையை அறுத்து கழுவி எடுத்து வந்தார் செந்தாமரை. செய்து வைத்திருத்த வறுவலை வைத்து குலைந்த சோற்றில் குழம்பை உற்றியவர், “நீ சாப்பிட்டுட்டு இரு நான் போய் மிளகு தூக்கலா முட்டை போட்டுக் கொண்டு வரேன்” என்றவர் முட்டைப் பொரிக்க சென்றார்.

“அதான் கறியை வறுத்து வைச்சிருக்கியே எதுக்கு அக்கா முட்டை?” என்று கேட்டவருக்கு பதில் சொல்லாமல் முட்டையை போட்டு கொண்டு வந்தவர் இலையில் குறைந்திருந்த சோற்றை பார்த்து சேதுராமனுக்கு தேவையானதை பரிமாறினார்.

தான் சொல்லாமலே புரிந்துக்கொண்ட செந்தாமரையை பார்த்தவன், “நீ தான் அக்கா என் மனசை புரிஞ்சு பரிமாறுற. எனக்கு ஒருத்தி வாய்ச்சு இருக்கா பாரு. தினமும் காட்டுக் கத்து கத்துனாலும் அவப் பண்ணுறதையே பண்ணிட்டு இருக்கா?”

“அறிவுகெட்டவ புருசனுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க வேண்டாம். நான் அவளுக்கு புத்தி சொல்லுறேன். கார்த்திகா எப்படி இருக்கா?”

“ஆத்தாளுக்கும் மகளுக்கும் என்ன நல்லா தான் இருக்காளுங்க. ஒத்த பிள்ளையா போச்சுன்னு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்கா” என்று அநியாயமா பேசினான் சேதுராமன்.

“விட்டு பிடிப்போம் சேது. இந்த முத்து பையன் தான் கடையே கதின்னு இருக்கான் உன்னை மாதிரி ஒரெட்டு வந்து என்னை பார்த்துட்டு போனா தான் என்ன?” என்று பெரிய தம்பி வீட்டிற்கு வராத ஆதங்கத்தில் பேசினார்.

“ம்ம் பவி சடங்கில நீ அப்படி பேசினதில இருந்து அண்ணனுக்கு கொஞ்சம் மனஸ்தாபம். என்னத்தான் இருந்தாலும் அத்தனை பேர் முன்னாடி அண்ணியை நீ அப்படி பேசிருக்க கூடாதுன்னு வருத்தப்பட்டார்”

“நான் என்ன இல்லாத பொல்லாததையா பேசினேன். ஏற்கனவே பதினேழு வயசுல தான் அந்த பிள்ளை உட்காந்துச்சு. கீதாவோட அண்ணன் அந்த சேகரு தாய்மாமன் சீருனு ஒரு சேலை ரெண்டு பவுன் சங்கிலி ஒன்பது தட்டு வைச்சா கேட்க மாட்டேனா. நானே முணு பட்டு சேலை பதிமூணு பவுன் சங்கிலி பதினேழு தட்டு அதில்லாம பித்தள அண்டா குண்டானு அத்தனை சீர் கொண்டு வந்தேன். ஒன்னும் இல்லாத வீடா அவளோடதது. இப்படி அளந்து செய்யும் போது கேட்காமயா இருக்க முடியும்?”

“அதெல்லாம் சரி தான் அக்கா. குடிசையில விடும் போதே அவர் அந்த பிள்ளை பேருல நாலேக்கர் எழுதி வைச்சுட்டாரே”

“அது ஊருகாரனுன்களுக்கு தெரியுமா?” என்று கறாராக பேச,

“நீ சொன்னா சரியா தான் இருக்கும். நம்ப அண்ணா தானே எங்க போயிட போறார். வருவார் அக்கா”

“ம்ம்” என்று சொன்னவருக்கு கீதாவிற்காக முத்துராமன் இன்று வரை செந்தாமரையிடன் காட்டும் விலகல் நெருடலாக இருந்தது. விரைவில் அனைத்தும் சரியாகும் என்று நினைத்தவர் சேதுராமனுக்கு தேவையானதை பரிமாறினார். சேதுராமன் வயிறார சாப்பிட்ட பிறகு தான் அவரை எழுந்திருக்க விட்டார் செந்தாமரை.

சிறிது நேரம் பேசி சிரித்து அவரோடு நேரத்தை செலவழித்த பிறகு செந்தாமரையிடம் விடைபெற்று வங்கிக்கு சென்றார் சேதுராமன்.

இங்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒருத்தனை அடித்து துவைத்துக் கொண்டிருந்தான் கரிகாலன்.

“ஐயா வலிக்குது… இனி இப்படி பண்ண மாட்டேன்… இந்த ஒரு தடவை மன்னிச்சுருங்க ஐயா” என்று அவன் காலைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தார் அரசுப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித்.

“தப்பு பண்ணும் போது உன் மனசு குறுகுறுக்கலையா. உனக்கு கீழ வேலைப் பார்த்தா என்ன வேணா செய்வியா? என்று அவன் செவிப்பறை கிழியும் அளவிற்கு ஒரு அறையை வைத்தவன். 

“இனி எந்த பொம்பள பிள்ளைக் கிட்டயாவது வாலாட்டுனணு தெரிஞ்சுது தொலைச்சுடுவேன்” என்று விரட்டியதும் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என அவர் ஓடிவிட்டார்.

“டேய் கணேஷ். மேலத்தெருவில தண்ணி வரலன்னு சொன்னாங்கனு பார்க்க சொன்னேனே பார்த்தியா?”

“பார்த்தேன் அண்ணா. ஒரு லைனுக்கு மட்டும் தண்ணி விடல போல அண்ணா. நம்ப கேசவனுக்கு போன் போட்டு சொன்னதும் திரும்பி போட்டு விட்டுட்டான்.”

“சரி டா. வி.ஏ.ஓ ஆபிசர் எல்லா பஞ்சாயத்து தலைவருக்கு மீட்டிங் வைச்சிருக்காரு நான்அங்க போயிட்டு அப்படியே மத்தியான சாப்பாட்டை வீட்டில முடிச்சுட்டு வரேன். நீ உனக்கு வேற வேலை இருந்தா பார்த்துட்டு மூணு மணிக்கு நேரா மில்லுக்கு வந்திரு” என்றவன் சற்றும் தாமதிக்காமல் அவனது புல்லெட்டில் பறந்தான்.

செல்லும் வழியில் தான் பவித்ரா படிக்கும் கல்லூரி சரியாக அதை தாண்டும் போது, “ஹே நான் தான் பிர்ஸ்ட்” என்று ஓடிவந்த பவித்ரா சாலையில் வந்த பேருந்தை பார்க்காமல் சாலையை கடக்க முயன்றாள். 

பின்னாடி வந்த நண்பர்கள் அனைவரும், “பவி…” என்று அலறி இருந்தார்கள்.

அதை முன்பே கவனித்த கரிகாலன் வண்டியை அவள் புறம் விட்டு ஒருகையால் வண்டியை ஒட்டியப்படி மறுக்கையால் அவளை அணைத்து தூக்கி மறுபுறம் இருந்த சாலையில் வண்டியை ஒருவாறு தடுமாறி நிறுத்தியிருந்தான்.

நெஞ்சம் படபடக்க தான் நன்றாக தான் இருக்கிறோம் என்று உணர்வுக் கூட இல்லாமல் உறைந்துபோய் இருந்தாள் பவித்ரா. அணைத்திருந்தவனால் நன்றாக உணர முடிந்தது அவளது இதயத்துடிப்பை.

“பவித்ரா… கண்ணை துற…” என்று காதின் அருகே மென்மையாக குரலில் கண்ணை திறந்தவள்.

“மாமா…” என்று காத்து தான் வந்தது.

முன்பு இருந்த பயத்தை விட பலமடங்கு அதிகமாக இப்போது பயமாக இருந்தது. பேருந்திலேயே விழுந்திருக்கலாம் என்ற அளவிற்கு அவனை பார்த்ததும் பயம் எழுந்தது அவளுக்கு.

வெளுத்துப்போன அவள் முகத்தை பார்த்தவன், “பார்த்து வர மாட்டியா? நான் வரலனா என்ன ஆகிருக்கும்” என்று அதட்டியவன்,

“காலேஜ் நேரத்தில வெளில என்ன பண்ணுற?” என்று அவன் எதை கேட்க கூடாது என்று நினைத்தாளோ அதே கேள்வியை கேட்டிருந்தான்.

“மாமா … அது…” என்று அவள் ஆரம்பிக்கும்போது அவளது தோழிகள் அங்கு வந்திருந்தனர்.

“அண்ணா… எங்களுக்கு இப்போ லேப். நாங்க ரெண்டு பேரும் நோட் கொண்டு வரல. எதிரில இருக்க கடையில் வாங்க வந்தோம். யாரு பிர்ஸ்ட் வரோம்னு போட்டி வச்சு ஓடி வந்தோம்” என்று  அவளை அவனிடம் இருந்து காப்பாற்றி இருந்தாள் சந்தியா.

பின் அவளது குடும்பத்தை பற்றி அவளுக்கு தெரியும் அல்லவா அதனால் தானே கூட வந்த ஆண் நண்பர்களை அனுப்பிவிட்டு பெண் தோழிகளுடன் பவித்ராவை நோக்கி வந்திருந்தாள்.

பவித்ராவை ஒரு பார்வை பார்த்தவன், “நடையில நிதானமும் பார்வையில கவனமும் வேணும் பவித்ரா. வெரசா என்ன வாங்குனமோ வாங்கிட்டு கிளாஸ்க்கு போ” என்றவன். மற்ற பெண்களுக்கும் அதையே சொல்லி அங்கிருந்து கிளம்பினான்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
உருகும் மனதில் உறைபனியாய்
162 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page