வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்,
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு…
என இறைவனை துதித்த படி விளக்கை ஏற்றினாள் பூர்ணிமா. அவளின் அழகு முகம், அந்தச் சுடரின் ஒளியில் தெய்வீகப் பொலிவுடன் மிளிர்ந்தது. அதிகாலை ஐந்து மணிக்கே, குளித்து, வீட்டை சுத்தம் செய்து, விளக்கையும் ஏற்றிவிட்டாள்.
இனி எழுந்து வரும் எல்லோருக்கும் காபி கொடுப்பது, டிபன் செய்வது, மதிய உணவிற்கு சமைப்பது, துணியை துவைப்பது என ஒன்பது மணி வரைக்கும் அவள் கால்கள் நிற்காமல் ஓடும்.
‘பத்து வருடங்களாக பழகியது தானே!’ எனும் நினைப்போடு தான் அவளும் அந்த நாளை சலிப்பின்றி ஆரம்பித்தாள். ஆனால் பாவம், அவளுக்கு தெரியாது. இந்த நாள் அவள் வாழ்வை தலைகீழாக புரட்டி போட காத்திருக்கிறது என்று!
எட்டு மணி வரை பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அவர்கள் மகள்கள் காவ்யா, திவ்யா எல்லோருக்குமான சேவைகளை செய்துவிட்டு கொல்லைப் பக்கம் போனாள். திண்ணையிலேயே சிறுநீர் கழித்துவிட்டு, எழக்கூட தோன்றாமல் அமர்ந்திருந்தாள் பதினைந்து வயது அபிநயா. அவளை சுத்தப்படுத்தி, சாப்பாடு ஊட்டிவிட்டு, தானும் சாப்பிட உட்கார்ந்தாள்.
“ஏய், இந்தா…” என்று ஆடு மாடு போல அவளை அழைத்த பெரியப்பா, எதையோ டீபாயின் மீது தூக்கி எறிந்து விட்டுப் போனார். அடுத்த நொடி கட்டு பிரிந்து, கல்யாண அழைப்பிதழ் தரையில் சிதறியது.
“ஈஸ்வரா…” என்று பதறியபடி, ஓடிப்போய் அத்தனையையும் அள்ளினாள். மொத்தமே ஐம்பதுதான், அதையும் யாருக்காவது கொடுப்பார்களா இல்லையா என்று தெரியாது. இருந்தும் அவற்றை நேர்த்தியாக அலமாரியில் அடுக்கிவிட்டு, ஒன்றை மட்டும் பூஜை செல்ஃபில் வைத்து கடவுளை பார்த்தாள். கண்ணீர் கரித்துக் கொண்டு வந்தது…
அவரோ, ‘இதையே தாங்காமல் தவிக்கிறாளே. இன்று இரவு வரை நடக்கப் போவதெல்லாம் நினைத்தால்!…’ எனும் ரீதியில் அவளைப் பார்த்தார்.
பூர்ணிமா அடுப்படிக்குச் சென்று, தன் டெய்லர் கடை சாவியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். அங்கே காவ்யா, அவள் வைத்து சென்ற பத்திரிக்கையை, அவள் ஏற்றிய விளக்கிலேயே பற்றி எரியச் செய்தாள்.
“காவ்யா… என்ன பண்ற?” என பதறிட,
“பக்கத்துல வந்த, கொன்னுடுவேன். உனக்கு என் முத்து மாமா கேக்குதா? என்னை கட்டிக்கிற முறைனு தெரிஞ்சும், அவரை ஏமாத்தி உன் பக்கம் இழுத்துட்டேல. நீயெல்லாம் நாசமாத்தான்டி போவ…” என்று பாதி எரிந்த பத்திரிக்கையை அவள் முகத்தில் வீசினாள்.
தீப்பொறி இமையைத் தீண்டவும், “ஸ்ஆ…” என கத்தினாள் பூர்ணி. திரும்ப கண் திறக்கும் முன், பத்திரிக்கை முக்கால்வாசி எரிந்து போயிருந்தது.
சத்தமின்றி விசும்பி அழுதபடி அதை குப்பைத் தொட்டியில் போட்டாள் பூர்ணிமா. இனியும் இங்கு நிற்காதே, என மனம் விரட்ட, தங்கையின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கடைக்கு விரைந்தாள். சென்னையின் அதிகாலைக்கே உரிய பரபரப்பு, அந்த வீதி எங்கும் நிறைந்திருந்தது.
“ப்போ… ப்போ… பூர்ணி ப்போ…” என, நடக்கும் வழியெல்லாம் கையை உதறி வீம்பு செய்தாள் அபிராமி.
“நீயும் படுத்தாத அபி. அமைதியா வா!” என்று தங்கையை உருட்டி மிரட்டி, இரண்டு தெரு தள்ளி இருக்கும் தன் கடைக்கு வந்து சேர்ந்தாள். அது அவளின் அத்தை மகனான முத்து, ஐந்து வருட ஒப்பந்த முறையில் பிடித்துக் கொடுத்த கடைதான். இந்த வருடத்தோடு ஒப்பந்தம் முடிகிறது.
‘இனிமே உன்னயும் அபியையும் நான் பார்த்துக்கிறேன்!’ என முத்து, உறுதிபட கூறிவிட்டான். எனவே தொழிலை தொடர்ந்து நடத்த முடியாது எனும் மன வருத்தம் வேறு திடீரென்று அவள் மனதில் வந்து ஒட்டிக்கொண்டது.
அபியை அவளுக்கான நாற்காலியில் வரவைத்துவிட்டு, அறையையும் மனதையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்தாள். நேற்று விட்டு வைத்த வேலைகள் அனைத்தும் வரிசையாக வந்து நிற்க, அவள் கவனம் அதில் குவிந்தது.
அப்போது பக்கத்து கடையின் ரேடியோவிலிருந்து, “நம்ம இந்தியன் கிரிக்கெட் டீம், நாலு நாள் முன்னால உலகக் கோப்பையை ஜெயிச்சுட்டு இந்தியா வந்திருக்காங்கனு உங்க எல்லாருக்குமே தெரியும். அவங்களுக்கு நேத்து டெல்லில, பிரதமர் அலுவலகத்துல பிரம்மாண்டமா பாராட்டு விழா நடந்து முடிஞ்சது. இன்னிக்கி நம்ம தமிழ்நாட்டு ப்ளேயர்ஸ் மூணு பேரும், சென்னை வந்துட்டாங்க…” என்று கூறிட, பூர்ணியின் தையல் எந்திரம் சடாரென நின்றது.
“அவங்களுக்கு தமிழக முதல்வர், பரிசு கொடுத்து கௌரவிக்க போறாரு…” என்று எஃப்எம் அதுபோக்கில் அடுத்த செய்திகளுக்கு நகர்ந்துவிட, இவள் மனது, ‘சூர்யா!’ என்று அழுத்திக் கூறியது.
உள்ளங்கையில் இருந்த மருதாணியைப் பார்த்தாள். அவன் பெயரை எழுத முடியாத காரணத்தால், சூரியனை வரைந்து வைத்திருந்தாள். அழுகை கூடிட, கண்ணீர் விழி தாண்டி தைத்துக் கொண்டிருந்த துணியில் விழுந்தது. உடனே துப்பட்டா நுனியால் கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
“எம்மா பூர்ணி… வெளிய வாம்மா…” என்று சத்தம் கொடுத்தபடி அங்கு வந்தார் கடையின் உரிமையாளர்.
“வாங்க மாமா…” என்று சகஜமாக உரிமை கொடுத்து பேசமுனைய,
“பேசாத நீ! பொட்ட புள்ள, பாவம் பொழைக்க வழி கேட்குதேனு இடம் கொடுத்தா, நீ என்ன வேலை பார்த்துட்டு இருக்க?”
அவர் கேட்கும் விதமே ஒரு மாதிரி இருக்க, “சத்தம் போடாதீங்க மாமா, உள்ள வந்து பேசுங்க” என்று காலில் விழாத குறையாக மன்றாடினாள் பூர்ணி.
“மொதல்ல மாமானு என்னை சொல்லாதம்மா…” என்று அவர் கத்த, அக்கம் பக்கத்து கடைகளில் இருப்பவர்கள் எல்லாம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தனர். பூர்ணிமாவுக்கு உடல் எல்லாம் கூசியது.
“அவனவன் வீடு தேடி வந்து காது கூசுற மாதிரி கேள்வி கேக்குறானுங்க. உனக்கு ஒத்தி முடிய இன்னும் மூணு மாசம் தான் இருக்கு? அதுக்குரிய பணத்தை வேணும்னா நான் திருப்பி கொடுக்கிறேன். நீ இப்பவே கடையை காலி பண்ணு…”
அதிர்ந்து போனவள், “திடீர்னு இப்படி சொன்னா எப்படி? வாங்குன துணி எல்லாம் இருக்கு. ஒரு வாரம் டைம் கொடுத்தீங்கனா…” எனும் முன்,
“ஒரு மணி நேரம் கூட தர முடியாது. என்ன தொழில் பண்ற நீ? பூரா, ஆம்பள பசங்களா வந்துட்டு போறாங்களாம். என்ன நெனச்சுட்டு இருக்க நீ?” என்று காட்டு கத்தல் கத்தினார்.
பூர்ணி பாவமாக உள்ளே திரும்பி பார்த்தாள். கடை முழுக்க சுடிதாரும், பிளவுஸுமாக தொங்கிக் கொண்டிருந்தது. என் பக்க நியாயத்தை, இப்படி கத்துபவரிடம் எப்படி சொல்வது என்று யோசித்தவளுக்கு, அப்போதுதான் ஒரு விஷயம் கண்ணில் பட்டது. கடைக்குள் அமர்ந்திருந்த அபிராமியை காணவில்லை.
“அபி… அபி… அபி எங்க போன?” என்று அக்கம் பக்கம் சத்தம் கொடுத்தாள். எங்கிருந்தும் பதில் வரவில்லை. அவள் இதயம் பதறியது.
“அபி…” என்று ரோட்டுப் பக்கம் போக முயன்றவள் கையைப் பிடித்துக் கொண்டார் அவர்.
“கடையை காலி பண்ணிட்டு, அப்புறமா உன் சோலியை பாரும்மா…”
இந்த மனிதர்கள் மனதில், இவ்வளவு சீக்கிரம் இரக்கம் வற்றி போகுமா? என்று வெறுப்பாக இருந்தது.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், “எனக்கு என் தங்கச்சிதான் முக்கியம். அக்ரிமெண்ட் படி எனக்கு இன்னும் மூணு மாசம் டைம் இருக்கு. அதுவரைக்கும் என்னால கடையை காலி பண்ண முடியாது” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென போனாள்.
“உன்கிட்ட இனிமே எனக்கு என்ன பேச்சு? டேய் மாப்ள, பொருளெல்லாம் எடுத்து வெளியே போடுடா” என்று அவர் கத்தியது இவள் செவியிலும் விழத்தான் செய்தது. ஆனாலும் அவள் கால்கள் திரும்பிப் போக எத்தனிக்கவில்லை…
அபி மனவளர்ச்சி குன்றிய பிள்ளைதான். ஆயினும் ஞாபக சக்தி அவளுக்கு மிக மிக அதிகம். பழகிய இடங்களையும், பழகிய நபர்களையும் தவிர யார் கூப்பிட்டாலும் போக மாட்டாள். அவளுக்கும் பூர்ணிமாவுக்கும் சண்டை வந்தால் கூட, சுவற்றில் பக்கம் திரும்பி உட்கார்ந்து கொள்வாளே தவிர, தன் எல்லையைத் தாண்டி போனதே கிடையாது.
அக்கம் பக்கத்தில் அவள் கிடைக்கவில்லை என்றதும், பூர்ணி அவசர அவசரமாய் தனக்கு தெரிந்த நபர்கள் எல்லோருக்கும் அழைத்துப் பார்த்தாள். எல்லோரிடமும் சொல்லி வைத்தது போல ஒரே பதில் கிடைத்தது.
‘அவ இங்க வரலியே!…’
தலையை பிய்த்துக் கொள்ளலாம் என்பது போல் இருக்க, அப்போதுதான் அவள் பார்வை டீக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த நியூஸ் பேப்பர் மீது பதிந்தது. கையில் கோப்பையுடன் திமிராய் புன்னகைத்துக் கொண்டிருந்தான் சூர்யா!
உடனே அவள் கால்கள் அவன் வீடு நோக்கி ஓட்டமெடுத்தது. சரியாய் இருபது நிமிட தூரத்தில்தான் அவன் வீடு. ஆனால் வீதி முழுவதையும் தனது உடமையாக்கி வைத்திருந்தான். அவ்வளவு பிரம்மாண்ட பங்களா அவனுடையது! அத்தனை பெரிய ஜாம்பவானின் கோட்டைக்குள், சின்னஞ்சிறு கோழிக்குஞ்சு போல இருக்கும் பூரணி சுலபமாக நுழைய முடியுமா என்ன?
“சார்ட்ட பேசணும், ப்ளீஸ் உள்ள விடுங்க!” என்று வாட்ச்மேனிடம் அழுது புலம்பிக்கொண்டிருந்தாள்.
“உன்னை கேட்டு பக்கத்துல கூட விடக்கூடாதுனு சார் உறுதியா சொல்லிட்டு போயிருக்காரு. போ அங்கிட்டு…” என்று அடித்து விரட்டாத குறையாய் கத்தினான் அவன்.
“அண்ணா ப்ளீஸ்…” எனும் முன்,
“போறியா, போலீச கூப்பிடவா?” என்று கையில் இருந்த குச்சியை அவள் தலையை நோக்கி தூக்கிப் பிடித்தான்.
அடி வாங்கிட அவளுக்கு தயக்கம் இல்லை. அதனால் தன் தங்கையை தேடுவதில் என்ன பிரச்சனை வரும் என்றுதான் அவள் மனது யோசித்தது.
அன்றொருநாள், ‘நான் பார்த்தேன்டி! நீ என் வீட்டுக்கு வெளிய இருக்குற புங்கை மரத்தடியில, ரெண்டு மணி நேரமா நின்னு அழுதுட்டு இருந்ததை நான் பார்த்தேன்! அப்படியே மனசு குளுகுளுனு இருந்தது…’ என்று அவன் சொன்னது ஞாபகம் வந்தது.
உடனே ஓடிப்போய் அந்த இடத்தில் நின்று கொண்டாள். வழக்கத்தைவிட வெயில் கொளுத்தி எடுக்க, தொண்டை வரண்டு போனது. அப்போதுதான், ‘நீ காலையில் இருந்து என்னை கவனிக்கவே இல்லை!’ என்று வயிறும் உரக்கச் சொல்லியது.
“சீக்கிரம் என்னை பாரு சூர்யா… சூர்யா, என்னை பாருடா…” என்று பத்து மணியில் இருந்து மாலை ஐந்து வரை அப்படியே நின்று கொண்டிருந்தாள். பசியால் தலை சுற்றுவது போல் இருந்தது. குறைந்தபட்சம் நீ ஒரு டம்ளர் தண்ணீராவது குடிக்கலாமே?! என நாக்கும் வயிறும் சண்டித்தனம் செய்தது.
ஆனாலும் அவள் மனது, இருக்கும் இடத்தை விட்டு அசைய கூட துணியவில்லை. கால்கள் துவண்டு, கண்கள் இருள ஆரம்பித்தது. கூடுதல் இம்சையாக, வானம் வேறு இருட்டிக் கொண்டு வர ஆரம்பித்தது.
“ஐயோ, ஆண்டவா. வேண்டாம்…” என்று சொல்லி முடிக்கும் முன், சட்.. சட்.. என பெரிய சைஸ் நீர் துளிகள் தரையில் வந்து மோதியது.
இரண்டு நிமிடத்திற்குள் தெப்பமாக நனைந்துவிட்டாள் அவள். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கியது மழை. இதற்குமேலும் உடலில் வலு இல்லை என்பது போல, இருந்த இடத்திலேயே மடிந்து அமர்ந்தாள் பேதை.
அவ்வளவு நேரம், தன் அறையில் இருந்த கண்ணாடி ஜன்னல் வழியே அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, “அவள வரச் சொல்லு!” என்று வாட்ச்மேனுக்கு தகவல் அனுப்பினான்.
க்ரீச் எனும் சப்தத்தோடு அந்தப் பெரிய கேட்டுகள் திறக்கப்பட்டது. மங்கலான பார்வையோடு, தட்டு தடுமாறியபடி எழுந்து நின்றாள் அவள். விரைந்து போகச் சொல்லி மனது கெஞ்சினாலும், அவளால் அடிமேல் அடி வைத்துதான் நடக்க முடிந்தது.
அவள் அந்த பங்களாவிற்குள் நுழையும் பொழுது, ஹாலில் மதுக்குவளையோடு உட்கார்ந்திருந்தான் சூர்யா. நடை, உடை, தோரணை அனைத்துமே போன முறை பார்த்ததை விட இம்முறை வேறு மாதிரி இருந்தது. அவ்வளவு பண செழிப்பு அவனிடம்!
வெறும் காட்டன் சுடிதாரில் சொட்டச்சொட்ட ஈரமாக இருந்தவளை, அவன் விழிகள் மெது மெதுவாய் வருடியபடி கீழே இறங்கியது.
துப்பட்டாவை நேரே இழுத்துக் கொண்ட பூர்ணி, “ப்ளீஸ், அபிய கொடுத்துடு சூர்யா” என்றாள் கெஞ்சுதலாய்.
“நான் ஊர்ல இல்லாத இந்த ஒரு மாசத்துல, மேடம் கல்யாணத்துக்கே ஏற்பாடு பண்ணிட்டீங்க. பொண்ணுக்கு சொந்தக்காரன் நான், என் சைடுல இருந்து பெருசா ஏதாவது கிஃப்ட் கொடுக்க வேண்டாமா?” என்று கேட்டவன், அவள் முன்னால் சில காகிதங்களை தூக்கி போட்டான்.
“எங்க, தண்ணி படாம எல்லா பேப்பர்லயும் கையெழுத்து போடு பார்க்கலாம்…”
🪷🪷🪷
பிரண்ட்ஸ் இந்த அத்தியாயம் பிடிச்சிருந்தா லைக் பண்ணி ரேட்டிங் குடுங்க.
சூர்யா என்ன பேப்பர்ல கையெழுத்து வாங்குறான்னு நீங்க நினைக்கிறீங்க?
அதை கமெண்ட்ல சொல்லிட்டு போங்க….
அடுத்து எபிசோடு விரைவில்……..
