நிஜமாகும் நினைவுகள்

அத்தியாயம் 3

     மலைக் கோவிலின் கடைசிப்படியில், ஏறி வந்துக் கொண்டிருந்தனர்,மணமகன் குடும்பத்தினர்.அன்னையின் முதுகுக்கு பின் பதுங்கினாள் அகல்யா.

     அவள் செய்கையைக் கடைசியாக வந்த சிபி, அதைக் கண்டுவிட்டு, மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டான். நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்திருந்தனர்.

     பின்னால் வந்த சிபியின் உறவினர்கள்,கோவில் மண்டபத்தில் தாம்பாளங்களைக் கொண்டு வந்து அடுக்கினர்.

      அகல்யாவுக்கு இதயம் படபடக்கத் துவங்கியது. ஷன்மதி அவள் அருகில் வந்து, “என்ன அண்ணி நல்லா இருக்கீங்களா? “என்றுக் கேட்க மெல்லிய புன்னகையுடன் தலையை ஆட்டினாள்.

       சாவித்ரியின் தங்கை வளர்மதி,” அக்கா நான் கூட என்னமோனு நினைச்சேன், மகாலெட்சுமியாட்டம் இருக்கிறா. டேய் சிபி, ம்ம்ம் “என்று சிரித்தாள்.

     ராகவன் ,”சும்மா பேசிட்டே இருக்காதீங்க.முகூர்த்தத்துக்கு நேரமாயிட்டிருக்குப் பாருங்க. சீக்கிரம் ஆக வேண்டியதைப் பாருங்க “என்று விரட்டினார்.

    “மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு,அத்தானுக்கு அவசரத்தப் பாரு.” என்று வளர்மதி சொல்லக் கூட்டத்தில் சிரிப்பு பரவியது.

    அகல்யாவுக்குள் மட்டும் திகில் பரவியது. தலையைக் குனிந்து, தன் பதட்டத்தைக் குறைக்க எண்ணினாள்.” இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு கூட வெக்கம் வருதே? “ என்று வளர்மதியின் கணவர் சங்கரன் சொல்ல, மீண்டும் அவ்விடம் சிரிப்பால் நிறைந்தது.

     ரத்னவேலு மனதுக்குள் மெல்லிய நிம்மதி பரவுவதை உணர்ந்தார். அதை ஆனந்த் முகத்திலும் உணர முடிந்தது. மாப்பிள்ளை வீட்டார்,உண்மையாகவே நல்ல மனிதர்கள் தான். 

     மகளை முரளியின் வீட்டிலிருந்துக் கூட்டி வந்த பிறகு, மனைவியின் மூலமாக,மகளின் திருமண வாழ்வின் நிலையை அறிந்த பிறகிலிருந்து,மிகுந்த மன உளைச்சலுக்காளாயிருந்தார்.

     தீர விசாரிக்காமல் மகள் வாழ்வில் மண்ணைப் போட்டுவிட்டோமே,என்றக் குற்ற உணர்வில் குன்றிக் கொண்டிருந்தார். அந்தக் காரணத்தாலே மனைவி உடல்நிலையும் பாதிக்க,மிகவும் நொந்து போனார்.

    என்ன தான் வேதனையில் உழன்ற போதிலும், மறுமணம் என்று ரூபிணி சொல்லிய போது,பழமைவாதியான அவர் தீயைத் தொட்டார் போலக் குதித்தார்.

   “ நம்ம பக்கத்துல, அந்த மாதிரி பழக்க வழக்கமில்லம்மா.உன்ன மாதிரி டவுன்காரங்களுக்கு 

அந்த மாதிரி பழக்கம் புதுசா இல்லாம இருக்கலாம். நான் ஒரு ஊர்தலைவரா இருந்து வழிநடத்த வேண்டியவன்,அந்தப் பேச்சை விட்டுரு “என்றுக் கடுமையாக சொன்னார்.

    “ வழிநடத்துற நீங்க தான் முன்மாதிரியா இருக்கனும் மாமா. உங்க அம்மா காலத்துல பன்னெண்டு, பதிமூணு வயசுலக் கல்யாணம் பண்ணினாங்க. இப்போ அப்படியா? அது இப்போக் குழந்தைத் திருமணம்,தண்டனைக்குரியது.”

     “அகல்க்கு நீங்க 21 வயசுலக் கல்யாணம் பண்ணி வச்சுங்க. ஆனா எனக்கு  25வயசுலத்தான் கல்யாணமே ஆயிருக்கு. வேலைக்கு போறேன். காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிக்கனும் மாமா.”

    ‘ அவ என்ன தப்பு செஞ்சா? நீங்க சொன்னதுக்காக,என்ன ஏதுனு கூட கேள்விக் கேட்காம, அவப் பண்ணிக்கிட்டா. சரி அந்த வாழ்க்கையாவது நல்லா இருந்துச்சா? அதுவும் இல்ல.”

     “அப்போ சாகுற வரை அவ இப்படியே வாழ்ந்தாகனுமா? சொல்லப் போனா தப்பு செஞ்சவங்க நீங்களும், உங்க மகனும், ஆனாத் தண்டனை மட்டும் அவளுக்கா? இது என்ன நியாயம் மாமா?” என்று வாதாடினாள்.

     அந்தக் கேள்விக்கு அவரிடம் விடையில்லை. ஆனால் சாமான்யத்தில் இறங்கி விடவுமில்லை. மனதுக்குள் மகள் எதிர்கால வாழ்வை எண்ணி பயம், வேதனைஇருந்தாலும், நாலுபேர் என்னசொல்வார்கள்? இதுதான் அவரின் தயக்கம்.

      உண்மையில் அவர்கள் குடும்ப நலனில் அக்கறை உள்ள மற்றப் பெரியவர்களை ஆனந்த் சென்று சந்தித்து, அப்பாவுக்கு எடுத்து சொல்லும்படி, மன்றாடிக், கெஞ்சினான்.

      ஆனந்த்துக்கும், குழந்தைக் குட்டி எனக் குடும்பம் பெரிதாகும் போது, அகல்யா அவனுக்கு பாரமாகக்கூடும் என அந்த நலம் விரும்பிகள் எடுத்து சொல்ல,மெல்ல அசைந்துக் கொடுத்தார்.

       அடுத்த பூதமாக வந்து நின்றாள் ராஜாத்தி. தன் மகனுக்கு, அகல்யாவைக் கல்யாணம் செய்து வைப்பதாக, வந்து நின்றாள்.”அண்ணனுக்காக, இந்த தியாகத்தைக் கூட செய்ய மாட்டேனா ? “என்ற ஜம்பம் வேறு.

      அவளை ஒருமாதிரியாக சமாளித்துக் கிட்டதட்ட விரட்டி அடிக்க வேண்டியிருந்தது.”பாருங்கத்தை, அகல் படிச்சிருக்கா, மணி படிக்கல, இவங்களுக்குள்ள கல்யாணம் பண்ணி வச்சா, நாளைக்கு அகல் ஏதாவது சொன்னாலும் படிச்சத் திமிரு னு அவங்களுக்குள்ள பிரச்சனை வரலாம் “என்றான் ஆனநத்.

     “இதெல்லாம் ஒரு பிரச்சனையா? புருஷன் பொண்டாட்டினா சண்டையே வராமலா இருக்கும்? நீ உன் பொண்டாட்டிக் கூட சண்டை போடாமலா இருக்க? “என்றாள் ராஜாத்தி.

    “எந்த வீட்ல சண்டை வராம இருக்கும்? அதை விட உங்க பையனுக்கு படிப்பு மட்டுமில்ல,வேலையுமில்லையே? எந்த நம்பிக்கையில நீங்க பொண்ணு கேக்குறீங்க பெரியம்மா?”எனறு கேட்டாள் ரூபிணி.

     “ அவன் எதுக்கு வெளியில வேலைக்கு போகணும்?அதான் காடு கரை இருக்கே? அதிலிருந்து வர வருமானமே போதுமே? “என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள் ராஜாத்தி.

    “அந்தக் காடுகளெல்லாம், பாதி அடமானத்துல இருக்கு.மீதியும் உங்க காலம் வரைக்கும் தான் அவர் கைவசம் இருக்கும்ன்னு தோணுது. அதுக்கு அப்புறம் அது அடமானக் கடைக்கு போகுதோ? இல்ல ஏலத்துல போகுதோ?யாருக்கு தெரியும்? இப்படி ஒரு பொறுப்பில்லாத ஆளுக்கு, என்ன தைரியத்துல நீங்க பொண்ணு கேட்டு வரீங்கன்னு தான் எனக்கு புரியல “என்றாள் ரூபிணி.  

    “போனா போகுது அண்ணனுக்காக ரெண்டாம் தாரமா இருந்தாலும் பரவால்லன்னு, என் பையனுக்கு கேட்க வந்தா, நீ ரொம்ப தான் பேசுற?இப்போ எங்கள விட்டா உங்களுக்கு வரனா வரதுக்கு நாதி கிடையாது “என்று கோபப்பட்டாள் ராஜாத்தி.

   “நாங்க எல்லா உண்மையையும் சொல்லி,அதை எல்லாம் ஏத்துக்கிற ஒரு பையனைத்தான், எங்க பொண்ணுக்கு பாப்போம். நீங்க பெரிய தியாகம் எல்லாம் பண்ணனும்னு அவசியம் இல்ல. நீங்க வேற இடம் பாத்துக்கோங்க” என்று கறாராக சொல்லிவிட்டாள் ரூபிணி. 

   “ரெண்டாம் தாரமான இவளக் கட்றதுக்கு, எவன் வாரான்னு நானும் பாத்துக்கிறேன்” என்று கிட்டத்தட்ட சபித்து விட்டு சென்றாள் ராஜாத்தி. இப்படியாக சில பல இன்னல்களை சமாளித்து, ஒரு வழியாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த போது,அகல்யா முரண்டு செய்தாள்.

   மூன்றே மாத மண வாழ்க்கை, அவளுக்கு மிகுந்த மனவலியைத் தந்திருந்தது. இனி இப்படிப்பட்ட ஒரு வாழ்வு தனக்கு வேண்டவே வேண்டாம், இப்படியே தாய் வீட்டில் நிம்மதியாக இருந்து விடலாமென்று அவள் தீர்மானித்திருந்தபோது,

புதியதாக ஒரு பிரச்சனையைக் கிளப்புகிறாளே இந்த அண்ணி? என்று மனம் வருந்தினாள் 

   ரூபிணியும் தன் முயற்சியை கைவிடவில்லை. சதா அவளிடம் ஏதாவது சொல்லி,கல்லைக் கரைப்பது போல, அவள் மனதை கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு அகல்யா மெல்ல சம்மதித்தாள். 

   இந்த முறை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என ஆனந்த் முடிவு செய்திருந்தபடியால், சல்லடை போட்டு சலிக்காத குறைதான். ஒத்துவருவதும் கூட ஊரிலுள்ள சில புறணியாளர்கள் தயவால் 

 விலகியது.

    பல வரன்கள் தொடர்கதையாகவும், ஆனந்துக்குள் மெல்ல சலிப்பும், பயமும் வரத் தொடங்கியிருந்தது. பின்னால் இருந்த சூத்திரதாரி ராஜாத்தி என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

    கிட்டத்தட்ட அகல்யாவை ராசியில்லாதவள், என்று முத்திரைக் குத்தியிருந்தாள் ராஜாத்தி. ஒருவேளை அப்படித்தானோ? என்று,அகல்யாவே நம்பும் அளவுக்கு, ராஜாத்தியின் கைங்கர்யம் வேலை செய்தது.

    இந்நிலையில் தான் கோவிலில் வைத்துப் பார்த்ததாக சொல்லி தீபக்கும், ஷன்மதியும் ஆனந்திடம் விசாரிக்க,மேற்படி பேச்சுவார்த்தைகளும்

திருப்தியாக இருந்திட, திருமணம் உறுதியானது.

    அகல்யா மிரண்டு போய் “வேண்டாம் அண்ணா நான் ராசியில்லாதவ. மறுபடியும் ஏதாவது ஆச்சுன்னா,என்னாலத் தாங்க முடியாது” என்று மறுத்தாள்.

   “இங்க பாரும்மா, உன்னோட வாழ்க்கை இப்படி ஆகிபோச்சே, அதுக்கு நானும் ஒரு காரணமாயிட்டேனேங்கிற குற்ற உணர்வுல நொந்துகிட்டு இருக்கேன். தயவுசெய்து அதுல இருந்து,மீளுறதுக்கு நீ ஹெல்ப் பண்ணு “என்றான் ஆனந்த்.

     “நீ இல்லண்ணா. எல்லாம் என் ராசி”. என்று தழுதழுத்தாள் அகல்யா.” நீ படிச்சவதானே அகல்? முட்டாள் மாதிரி இப்படி யோசிக்கிற? நீ ராசியில்லாதவளா இருந்தா, உன் ராசி எங்க யாரையும் பாதிக்கலியே? இங்க பாரு நான் நல்லாத்தானே இருக்கேன்? “ என்று கோபமாகக் கேட்டாள் ரூபிணி.

    “அதில்லண்ணி…” என்றவளை இடைமறித்து, “ஒருவேளை நீ புருஷன் வீட்டுக்கு மட்டும் ராசியில்லாதவளா இருந்தா, கவலைப்படாத அந்தப் பையன் சிபியும்,மனைவியை இழந்தவன் தான். அப்போ அவனும் ராசியில்லாதவன் தானே? நெகடிவ்+நெகடிவ் பாசிட்டிவ் தானே? ஸோ நீ பயப்படாத” என்றாள் ரூபிணி.

    மனைவியை இழந்தவன் என்பது லேசாக ஆறுதல் தர, அரைகுறை மனதுடன் சம்மதித்தாள். அவ்வப்போது மீண்டும் முரண்டு பிடிப்பவளைக் கொஞ்சி, கெஞ்சி, மிரட்டி பணியவைப்பது ரூபிணியின் வேலை. அதோ இதோ என்று கல்யாண நாளும் வந்து விட்டது.

    “சம்பந்தி,என்ன நின்னுகிட்டேத் தூங்குறீங்களா? ஐயர் பொண்ணைத் தாரை வார்த்துக் குடுங்கன்னு சொல்றாரு,நீங்க பிரமை பிடிச்சாப்ல நிக்கிறீங்களே? “ என்ற ராகவனின் குரலில், திடுக்கிட்டு சமாளித்தவராக,

“உங்களை மாதிரி,சம்பந்திகள் கிடைச்சதுல,மெய்மறந்து நின்னுட்டேன் “என்று அசடு வழிந்தார்.

     அவர் சமாளிப்பைக் கேட்டு,அவரைக் கிண்டல் செய்து கலாய்த்தனர் வளர்மதியும் சங்கரனும். மனதுக்குள் நூறு தெய்வங்களை வேண்டிக் கொண்டு, மகளை இரண்டாம் முறையாகத் தாரை வார்த்தார்.

     முருகன் காலடியில் வைத்து,எடுத்து வந்த மாங்கல்யத்தை,சுற்றி இருந்தவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கி வரும் படி,ஷன்மதியிடம் தர, ரூபிணி அட்சதையை அனைவருக்கும் வழங்கினாள்.

     ராஜாத்தியிடம் வந்த போது, ரூபிணியின் கண்ணசைவுக்கேற்ற படி, சற்று தொலைவாகவே தாம்பாளத்தைக் காட்ட, வேண்டா வெறுப்பாக அதை தொட்டுக் கொண்டாள் ராஜாத்தி.

    அட்சதையையும் ரூபிணியே அள்ளி அவள் கையில் கொடுக்க,வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டாளவள். சுருசுருவென வந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி ரூபிணி அமைதி காத்தாள்.

     அடுத்த ஐந்து நிமிடங்களில்,நாதஸ்வரம் முழங்க, அகல்யாவின் கழுத்தில் சிபியின் கையால் தாலி ஏறியது. பொதுவாகப் பெண்களுக்குத் தாலி கழுத்தில் ஏறும் போது, பட்டாம்பூச்சிகள் பறக்கும் என்பார்கள்.

      அகல்யாவுக்கு அப்படி எந்த உணர்வும் வரவில்லை. ஒருவேளை இரண்டாம் முறை என்பதாலோ? என்று அவள் நினைத்த போது,அப்போ அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? மனம் அப்படி சிந்தித்த போதும், நிமிர்ந்து அவனைப் பார்க்கும் தைரியமில்லை.

     நெற்றி வகிட்டில் அவன் குங்குமம் வைத்த போது சந்தோச சலசலப்புகளுக்கு நடுவே, ஒரு குரல், “ இதாவது நிலைக்கனும்னு நல்லா கைநெறைய எடுத்து அப்பிவிடு “என்ற கொடுரக் குரலில்,சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்…

             தொடரும்…

        

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page