அத்தியாயம் 3
பிரதிக்ஷாவும் ரம்யாவும் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட ரஞ்சித்தின் கண்கள் சிவந்து போனது!
‘எவ்வளவு தைரியம் இருந்தா? இப்படி ஒரு திட்டத்தை போட்டு எல்லாரையும் ஏமாத்தி விதுரன தாலி கட்ட வச்சிருப்பா! என்னையையும் எல்லாரும் முன்னாடியும் தலை குனிஞ்சு நிக்க வச்சிட்டா! இப்ப எல்லாரும் என் கல்யாணம் நின்னதால என்னைய எவ்வளவு அசிங்கமா பாப்பாங்க! தெரிஞ்சவங்க முகத்துல நான் எப்படி முழிப்பேன்! விடமாட்டேன் டி உன்னை! நீ எப்படி விதுரனோட சந்தோசமா வாழ்கிறேன்னு நான் பார்க்கிறேன்! உன் வாயாலயே பொய் சொல்லி தான் விதுரன கல்யாணம் பண்ணுனேன்னு சொல்ல வைக்கிறேன்! எக்காலத்திலையும் விதுரன் உன்னைய ஏத்துக்க மாட்டான்! என்னை அசிங்கப்படுத்திவிட்டு நீ எப்படி சந்தோசமா வாழ்றேன்னு நானும் பார்க்கிறேன்” என்று வன்மமாக மனதில் நினைத்தான் ரஞ்சித்.
“ரெண்டு பேரும் ரகசியமா என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? அங்க மாப்பிள்ளை கோபத்துல கார்ல போய் உக்காந்துட்டாரு! நீ என்னன்னா இங்க நின்னு கதை அளந்துக்கிட்டு இருக்க? ” என்று கோபத்தில் திட்டினார் பிரதிக்ஷாவின் தாயார் லட்சுமி.
“ஏன் இப்ப பிரதிக்ஷவ திட்றீங்க அண்ணி” என்று கேட்டுக்கொண்டே அவர்களின் அருகில் வந்தார் சரஸ்வதி.
“அது இல்ல அண்ணி இந்த கல்யாணம் எப்படி நடந்திருக்குன்னு உங்களுக்கு தெரியும்! எல்லாரும் வற்புறுத்துனதுனால தான் அந்த தம்பி பிரதிக்ஷாவோட கழுத்துல தாலி கட்டினாரு! இப்போ இவ இப்படி நடந்துக்கிறத பார்த்தா இன்னும் இவ மேல கோபம் வரும்” என்று லட்சுமி சொல்ல லட்சுமியை சந்தேகமாக பார்த்தார் சரஸ்வதி.
சரஸ்வதியின் பார்வையை உள்வாங்கிய படியே, ” ஏன் அண்ணி அப்படி பாக்குறீங்க? “என்று லட்சுமி கேட்க, “இல்ல உன் பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டான்னு சொல்லித்தான் விதுரன கட்டாயப்படுத்தி தாலி கட்ட வச்சிருக்கோம்! உன் மகள் கிட்ட தப்பா நடந்த விதுரன நிக்க வச்சு கேள்வி கேட்டு செருப்பால அடிச்சு இருக்கணும்!” ஆனால் நீங்க சர்வசாதாரணமா விதுரன் கோபப்படுவான்னு உன் பொண்ண திட்றீங்களே ?” என்று தன் சந்தேகத்தை கேட்டார் சரஸ்வதி.
சரஸ்வதிக்கு என்ன பதிலை சொல்வது என்று தெரியாமல் தடுமாறி விட்டு, “நடந்ததை நினைச்சு எனக்கும் வருத்தம் தான் அண்ணி! ஆனால் இப்ப என் பொண்ணோட புருஷன் ஆகிட்டாரே! அப்போ மருமகனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கணும்ல? ” என்று கூறி சமாளித்தார் லட்சுமி.
“லட்சுமி நீ சொல்றதும் சரிதான். நடந்தது நடந்துட்டு இனிமேலு நடந்தத பத்தி யோசிச்சு வருத்தப்படாமல் , அடுத்தது என்னனு தான் பாக்கணும்!” என்று கூறினார் சரஸ்வதி.
“அண்ணி மன்னிச்சிருங்க அண்ணி! எவ்வளவுதான் நீங்க எங்க கிட்ட தைரியமா பேசினாலும் உள்ளுக்குள்ள உடைஞ்சு போய் இருக்கீங்கன்னு எங்களுக்கு தெரியும்! ரஞ்சித்தோட கல்யாணம் நின்னு போனது உங்களால தாங்கிக்க முடியாது. ஆனாலும் என் பொண்ணுக்காக கடைசிவர நின்னு அவளுக்கு இந்த வாழ்க்கையை அமைச்சு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணி” என்று லட்சுமி கூற,
“ரஞ்சித் கல்யாணம் நின்னது பெரிய வருத்தம் தான்! ஆனால் விதுரனும் என்னோட மகன் மாதிரி தான். விதுரன் தப்பு பண்ணி இருந்தா கட்டாயம் ஒரு தாயா அவனை கண்டித்து நல்ல வழிக்கு கொண்டு வருவேன். ஒரு பொண்ணு அவனால அவளோட வாழ்க்கை சீரழிஞ்சு போனதா எல்லாரும் முன்னாடியும் அழுகும் போது, பையனோட அம்மாவா இல்லாம பாதிக்கப்பட்ட பொண்ணோட வாழ்க்கைக்கு என்ன செய்யனுமோ அதைத்தான் இங்க செஞ்சிருக்கேன்! நீங்க நினைக்கிற மாதிரி விதுரன் தப்பான பையன் கிடையாது. இன்னும் அவன் அப்படி நடந்து இருப்பான்னு என்னால ஏத்துக்கவே முடியல!” என்று பிரதிக்ஷாவை பார்த்துக் கொண்டே சொல்ல பிரதிக்ஷாவும், ரம்யாவும் பயத்தில் எச்சில் விழுங்கினார்கள்.
அவர்கள் இருவரின் முகத்திலும் ஏற்பட்ட பதட்டத்தை கண்டுபிடித்துவிட்டார் சரஸ்வதி.
“சரி! சாய்ந்தரம் மூணு மணிக்கு நல்ல நேரம் இருக்கு. அதுக்குள்ள விதுரனோட வீட்டுக்குள்ள பிரதிக்ஷா காலடி எடுத்து வைக்கணும்! அதுக்கு சீக்கிரமா அவங்கள இங்கே இருந்து சென்னைக்கு அனுப்பனும்!” என்று சரஸ்வதி கூறினார்.
“சரி லட்சுமி நீ ஏதாவது உன் பொண்ணு கிட்ட சொல்ல நினைச்சா சீக்கிரம் சொல்லி அனுப்பிவிடு, ரொம்ப நேரம் எடுத்துக்கிறாதீங்க! நான் போயி விதுரன் கிட்ட பேசுறேன்!” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகன்றார் சரஸ்வதி.
சரஸ்வதி அங்கிருந்து சென்று விட்டார் என்பதை அறிந்த பின்பு, ” இங்க பாரு பிரதிக்ஷா, இதுவரை நீ பண்ணுன தப்பு எல்லாம் போதும்! இனிமேலே எந்த தப்பும் பண்ணாம உன் புருஷனோட சேர்ந்து வாழு!” என்று லட்சுமி கூறினார்.
“நான் என்னமா தப்பு பண்ணினேன்! என்ன நடந்துச்சுன்னு தான் எல்லாரும் முன்னாடியும் சொன்னேனே” என்று பிரதிக்ஷா கூறினாள்.
“இங்க பாரு பிரதிக்ஷா! நான் உன்னோட அம்மா, அந்த தம்பி மேல எந்த தப்பும் இல்லைனு எனக்கு தெரியும்! நீயும் ரம்யாவும் சேர்ந்து திட்டம் போட்டு தான் இவ்வளவு செஞ்சீங்கன்னு எனக்கு தெரியும் ” என்று லட்சுமி சொல்ல அதிர்ந்து போயினர் இருவரும்!!.
“எல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா நின்னதுக்கு காரணம் இருக்கு! நீ விதுரன கல்யாணம் பண்ண ஆசைப்பட்டேன்னு எனக்கு நல்லா தெரியும். அதுக்காகத்தான் இப்படி ஒரு திட்டத்தை போட்டு அந்தப் பையன அசிங்கப்படுத்தி! நெருக்கடியில் நிக்க வச்சு அவன் கையால தாலி கட்ட வச்சிருக்கேன்னு எனக்கு தெரியும்!
எப்படியோ தாலி கட்ட வெச்சிட்டோம் இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லைன்னு மட்டும் நினைக்காத! விதுரன் உன் மேல கொலவெறில இருக்கான். உன் மனசுல உள்ள காதல விதுரனுக்கு புரிய வச்சு அவனோட சந்தோசமா வாழ்றதுக்கு வழிய பாரு!” என்று கூறினார் லட்சுமி.
“ஆன்டி இவ்வளவு நடந்தும் நீங்க அமைதியா இருந்ததுக்கு காரணம் என்ன?” என்று ரம்யா தன் சந்தேகத்தை கேட்க, “மனசுக்கு புடிச்ச வாழ்க்கை அமையலைனா வாழ்க்கை முழுவதும் நரகமா இருக்கும்! அந்த நரக வாழ்க்கையை நான் அனுபவச்சுருக்கேன் . அதனாலதான் அந்த நரக வாழ்க்கையை என் மகளும் அனுபவிக்க கூடாதுன்னு நினைச்சு தான் உங்க திட்டம் தெரிஞ்சும் அமைதியா இருந்தேன்” என்று கூறினார் லட்சுமி.
“அம்மா மன்னிச்சிடுமா ! எனக்கு கல்யாண ஏற்பாடு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் என் மனசுல உள்ள காதலை விதுரனுக்கு புரிய வைத்து அதுக்கப்புறம் விதுரன கல்யாணம் பண்ணி இருப்பேன்! ஆனால் கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் நான் விதுரனை பார்த்தேன். எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி விதுரனோட சேரனும்னு நினைச்சு இப்படி ஒரு தப்ப பண்ணிட்டேன்!” என்று கண் கலங்கினாள் பிரதிக்ஷா.
“இங்க பாரு பிரதிக்ஷா என்கிட்ட மன்னிப்பு கேட்டு எந்த பிரயோஜனமும் இல்லை! நீ மன்னிப்பு கேட்க வேண்டியது விதுரன் கிட்ட! ஆனால் இப்ப போயி நீ மன்னிப்பு கேட்டால் அது சரியா வராது. கொஞ்ச நாள் அமைதியா இரு. விதுரனோட மனசுல இடம் புடி. உன்னோட காதல அவனுக்கு புரிய வை! அதுக்கப்புறம் விதுரன் கிட்ட மன்னிப்பு கேட்டு விதுரனோட சேர்ந்து வாழு! இதுதான் ஒரு தாயா நான் உனக்கு சொல்ற அட்வைஸ்!” என்று சொல்லி பிரதிக்ஷாவை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
இங்கு,
காரில் கோபத்தில் அமர்ந்திருந்த விதுரனை நோக்கி வந்தார் சரஸ்வதி. சரஸ்வதியை பார்த்தும் பார்க்காதது போல் விதுரன் தன் பார்வையை மாற்றினான்.
காரின் கதவை திறந்து உள்ளே அமர்ந்தார் சரஸ்வதி. “அம்மா மேல கோபமா?” என்று கேட்டார் சரஸ்வதி.
“நீங்க கூட என்னைய நம்பலையே! உங்க வளர்ப்பு நான் தப்பு பண்ணி இருப்பேன்னு எப்படி நம்புனிங்க! நான் வளர்த்த பையன் அப்படி எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டான்னு நீங்க சொல்லலையே?” என்று கண் கலங்கினான் விதுரன்.
“கண்ணா நீ எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்! ஆனால் ஏன் அந்த பொண்ணு உன் மேல அப்படி ஒரு பழியை போட்டுச்சுன்னு எனக்கு தெரியாது! அந்தப் பொண்ணு இப்படி ஒரு குற்றச்சாட்டை எல்லாரும் முன்னாடி சொன்ன பின்னாடி எல்லாரும் அந்த பொண்ண தப்பா பேசுவாங்க! சில பேர் இதை வாய்ப்பா பயன்படுத்திக்கிட்டு அந்த பொண்ண பயன்படுத்திக்க பார்ப்பாங்க,
ஏற்கனவே அந்த பொண்ணு அப்பா இல்லாத பொண்ணு! அவங்க சித்தப்பா வீட்டுல தான் பிரதிக்ஷாவும், அவ அம்மாவும் அடிமை மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்காங்க! கல்யாணம் நின்னு போயி அந்த பொண்ணு அவங்க வீட்டுக்கு போனால் கண்டிப்பா அந்த பொண்ண கொலை பண்ண கூட தயங்க மாட்டாங்க! அவங்க சூழ்நிலை தெரிஞ்சுதான் ரஞ்சித்துக்கு பிரதிக்ஷாவை பேசி முடிச்சேன். அந்தப் பொண்ணு ரஞ்சித கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருந்தால் கட்டாயம் ரஞ்சித கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்.
ஆனால் அந்த பொண்ணு ரஞ்சித்துக்கு துரோகம் பண்ணி வாழ முடியாதுன்னு சொன்னதுனால தான், அந்த பொண்ண நீயே கல்யாணம் பண்ணிடுன்னு சொன்னேன். ஒருவேளை நீ கல்யாணம் பண்ண மாட்டேன்னு பிரச்சனை பண்ணுனால் அது உன்னோட பிசினஸை பாதிக்கும். டாப் 10 பிசினஸ்மேன்ல நீயும் ஒருத்தன். உன்னைய பத்தி ஏதாவது தப்பான செய்தி கிடைச்சா, பிசினஸ்ல இருக்கிற உன்னோட எதிரிகள் எல்லாம் அதை பயன்படுத்தி உன் பேர அசிங்கப்படுத்தி உன்னைய அழிக்க பாப்பாங்க. அப்படி எந்த பிரச்சனையும் உனக்கு வந்துட கூடாதுன்னு தான் அம்மா உன்னைய கட்டாயப்படுத்தி தாலி கட்ட வச்சேன்! என்னைய மன்னிச்சிரு” என்று கண் கலங்கினார் சரஸ்வதி.
தன் தாயை விட ஒரு படி மேலே விதுரனின் அன்பை பெற்றவர் ரஞ்சித்தின் அம்மா சரஸ்வதி. விதுரனின் அன்னை விதுரனை வளர்த்ததை விட விதுரனை பாசத்தோடு வளர்த்தார் சரஸ்வதி. அதனால் தான் விதுரன் சரஸ்வதி ஏதாவது சொன்னால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது அதை உடனே செய்து முடித்து விடுவான். அதனால் தான் சரஸ்வதி சொன்ன உடனேயே விதுரன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மணமேடையில் அமர்ந்து பிரதிக்ஷாவின் கழுத்தில் தாலியை கட்டினான்!.
“அம்மா நீங்க சொல்றது புரியுது! ஆனால் மனிஷாவும் நானும் ஒருத்தர ஒருத்தர் காதலிச்சுகிட்டு இருக்கோம்னு உங்களுக்கு தெரியும்ல! இப்ப மனிஷாவுக்கு நான் என்ன பதில் சொல்றது?” என்று விதுரன் கேட்க,
“பிரதிக்ஷாவை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னைய கட்டிக்கிறேன்னு சொல்லு. அதுவரை கொஞ்ச நாளைக்கு மனிஷாவை பொறுமையா இருக்க சொல்லு!” என்று சரஸ்வதி சொல்ல அதிர்ச்சியில் உறைந்தான் விதுரன்.
