வலியை சூடிய காதலே – 4

​மௌனத்தின்

​வலிகள் அதிகமாக

இருக்கும்போது 

வார்த்தைகளை விட, 

நம் கண்ணீரைப் 

புரிந்து கொள்ளும் ஒரு 

அன்பு வரமானது…!

வலியை சூடிய காதலே – 4

பூவிதழினியின் அறைக்குள் நுழைந்ததும் கதவை உட்புறமாகத் தாழிட்டாள், அவளது இதயம் ஒரு போர்க்களத்தைப் போலத் துடித்துக் கொண்டிருந்தது, 

இத்தனை நாட்களாக அவள் கண்ட கனவுகள், தன்னவன் தன்னிடம் பேசிய வார்த்தைகள் என அனைத்தும் இப்போது கண்ணாடித் துண்டுகளாய் அவள் நெஞ்சைக் கீறின,

​ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு வெளியே எட்டிப் பார்த்தாள், அங்கே ஆரியன் தன் காரில் ஏறி புறப்பட்டுக் கொண்டிருக்க, அவனைக் காணக் காண பூவிதழினிக்கு அடக்க மாட்டாத அழுகை பீறிட்டது, 

அவன் கார் நகர நகர கண் பார்வையில் இருந்து தூரம் சென்று மறைந்து போக ஜன்னலை விடுத்து தன் நெஞ்சைப் பிடித்து க்கொண்டு கட்டிலில் சரிந்தாள், 

நடந்த சம்பவங்களை எதையும் ஆரியன் அவளிடம் சொல்லவில்லை ஆனால், அவன் கண்களில் இருந்த அந்தத் தடுமாற்றமும், தயக்கமும் அவளுக்கு ஏதோ பெரிய மாற்றத்தை உணர்த்தியது,

​உன் மௌனம் என்னைக் கொல்கிறது, நீயாக வந்து பேசும் வரை உன்னவளின் மூச்சு கூட ஒவ்வொரு நொடியும் தணலாய் தகிக்கும் என்று வெதும்பினாள் பூவிதழினி,

வீட்டில் உள்ளவர்கள் நிஷாலினியை ஏதோ காணாமல் போன விலைமதிப்பில்லாச் செல்வம் கிடைத்துவிட்டது போல் கொண்டாடினார்கள், ஆனால் அந்த கொண்டாட்டம் வெகு நேரம் நீடிக்கவில்லை, நிஷா திரும்பி வாசலை பார்க்கும் போது,

அவன் அங்கு இல்லை, தான் வந்த வேலை முடிந்ததென திரும்பிச் சென்று விட்டான் போலும், அவனில்லாமல் தான் மட்டும் தனித்து இருக்கிறோம் என்று தெரிந்ததும்,

பாட்டியையும் சுற்றி நின்ற மற்ற பெண்களையும் விட்டு விட்டு வாசலுக்கு ஓடி வந்தாள் நிஷாலினி, அவளை ஆரியன் அழைத்து வந்த காரும் அங்கு இல்லை என்றதும், தவித்துப் போனாள், அதைப் கவனித்தவர்கள் அவளை விசித்திரமாக பார்த்தனர்,

​வாசலில் நின்றிருந்த நிஷாலினியின் கண்கள் வெறிச்சோடிப் போயிருந்த  வழியைத் தேடின, ஆரியன் தன்னை இங்கே தனியாக விட்டுவிட்டுச் செல்வான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை, 

சுற்றியிருந்தவர்களின் பாசமும், அந்தப் பெரிய வீட்டின் பிரம்மாண்டமும் அவளுக்கு இப்போது ஒரு பெரிய இரும்புச் சிறையைப் போலத் தோன்றியது,

​”அம்மாடி என்னம்மா ஆச்சு, ஏன் இப்படி வெடுக்குனு ஓடி வந்த” என்று ரஞ்சிதம் பதற்றத்துடன் கேட்க, நிஷாலினிக்குத் தொண்டை அடைத்தது,

​”ஆரி ஆரி எங்க, அவரோட கார் இங்க இல்லையே என்னை விட்டுட்டு ஆரி எங்க போயிட்டாரு, ப்ளீஸ் சொல்லுங்க, ஆரி எங்க போனார்” என்று நிஷாலினியின் குரல் உடைந்து அழுகையாக மாறியது,

​ஜகதாம்பாள் பாட்டி தள்ளாடியபடி அவள் அருகில் வந்தாள், 

“ஏத்தா அவன் இங்க தான் ஊருக்குள்ள இருக்கிற வீட்டுக்கு போயிருப்பான் இல்லன்னா டவுனுக்குப் போயிருப்பான், நீ ஏன் இப்படி பயப்படுற, இது உன் வீடு ஆத்தா, இங்க நாங்க எல்லாரும் இருக்கோம்ல” என்று சமாதானப்படுத்த முயன்றார்,

​”இல்ல  எனக்கு ஆரி வேணும், அவர் இல்லாம என்னால இங்க இருக்க முடியாது, என்னை  இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு இப்போ எங்க போனாரு” என்று நிஷாலினி வாசலிலேயே அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதாள்,

அவளது உடை மண்ணில் புரள, தலை கலைந்து போயிருக்க, ஒரு பித்துப் பிடித்தவள் போல “ஆரி ஆரி” என்று அவன் பெயரையே முணுமுணுத்தாள்,

​தங்கமணி அவள் தோளைத் தொடப் போக, சட்டென்று கையைத் தட்டிவிட்டு பின்னால் நகர்ந்து கால்களை குறுக்கி அமர்ந்தாள் நிஷா, 

“என்னை யாரும் தொடாதீங்க, எனக்கு உங்க யாரையுமே தெரியாது, நீங்க யாருமே வேண்டாம், எனக்கு ஆரி மட்டும் தான் வேணும், அவரை இப்போவே வரச் சொல்லுங்க,  இல்லன்னா நான் இங்க இருக்க மாட்டேன்” என்று ஆவேசமாகக் கத்தினாள்,

​சித்தி சிவகாமி திகைத்துப் போய் நின்றாள் 

“அம்மாடி நாங்க எல்லாரும் உன்னோட சொந்தக்காரங்க தான்மா, இதோ உன் அத்தை இருக்காங்க, சித்தப்பா  இருக்காரு  நாங்க எல்லாரும் உன் மேல உயிரையே வச்சிருக்கோம், 

அவன் பேனா என்ன உனக்கா நாங்க இருக்கோம் இல்ல, நீ உள்ள வந்து கொஞ்சம் ஆகாரம் சாப்பிடும்மா” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார்,

​ராமநாதன் நிதானமாக முன்வந்து, 

“அவன் சின்னப் புள்ளை கிடையாதுமா, அவனுக்கு இங்க ஆயிரம் வேலை இருக்கும், நீ இப்படி வாசல்ல நின்னு அடம் பிடிச்சா ஊர் உலகம் என்ன நினைக்கும், முதல்ல உள்ள வாம்மா” என்றார்,

​”இல்ல இல்ல நான் உள்ள வரமாட்டேன், ஆரி என்கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டார், அவர் வந்தா தான் நான் உள்ள வருவேன், அதுவரைக்கும் நான் இங்க தான் இருப்பேன்” என்று விடாப்பிடியாக வாசலிலேயே அமர்ந்து கொண்டாள்,

​நிஷாலினியின் இந்த ஆர்ப்பாட்டம் அங்கிருந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது, விஸ்வநாதனின் மகள் என்ற கர்வத்தோடு வருவாள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, 

ஆரியனை ஒரு குழந்தையைப் போலத் தேடும் இந்த நிஷாலினி புரியாத புதிராக இருந்தாள்,

​வாசலின் ஒரு மூலையில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வேலன், 

“அம்மா தம்பி இப்பதான் வண்டியை எடுத்துட்டுப் போச்சு. முக்கியமான வேலையா டவுனுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போச்சுங்க” என்று மெல்லச் சொல்ல,

​”டவுனுக்கா, அப்படின்னா என்ன, என்னை ஏன் கூட்டிட்டுப் போகல, என்னை எதுக்கு இங்க விட்டுட்டுப் போனாரு, எனக்கு பயமா இருக்கு இந்த இடம் புதுசா இருக்கு ஆரி ப்ளீஸ் வந்துடு ஆரி” என்று கதறி அழுதாள்,

ரஞ்சிதத்தின் கண்களில் நீர் முட்டியது, தன் அண்ணன் மகள் இப்படித் தன் மகனுக்காகத் தவிப்பதைக் கண்டு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் அவளது இந்தப் பிடிவாதம் அவர்களைக் கட்டிப்போட்டது, 

“இங்க பாரு தங்கம் இந்த இடமும் நாங்களும் உனக்கு புதுசா இருக்கலாம், கொஞ்சம் பேசிப் பழகுனா எல்லாமே சரியாப் போயிரும், நீ அழுது உன் உடம்பைக் கெடுத்துக்காதம்மா வாம்மா உள்ள போய் முகம் கழுவிட்டுச் சாப்பிடலாம்” என்று அவளது கையைப் பிடிக்க முயன்றார்,

​ஆனால் நிஷாலினியோ தன் கழுத்தில் ஆரியன் கட்டிய அந்தத் தாலியை (அதை மறைத்து வைத்திருந்தாள்) இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, 

“ஆரி வரணும் அவர் இப்பவே வரணும்” என்று ஓயாமல் கத்திக் கொண்டிருந்தாள்,

​அவளது அழுகைச் சத்தம் அந்த வீட்டின் சுவர்களில் எதிரொலித்தது, 

மேலே அறையில் கதவைத் தாழிட்டுத் தவித்துக் கொண்டிருந்த பூவிதழினியின் காதுகளிலும் நிஷாலினியின் அந்த “ஆரி… ஆரி…” என்ற கூச்சல் விழுந்தது, 

அது பூவிதழினியின் காயப்பட்ட இதயத்தில் மேலும் அமிலத்தை ஊற்றுவது போலிருந்தது, கண்களைத் துடைத்துக் கொண்டு விறுவிறுவென கீழே வந்தவள் வாசலில் நிஷாலினி இருந்த கோலத்தைக் கண்டதும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, 

அழுது அழுது கண்கள் வீங்கிப் போய், ஒரு பித்துப் பிடித்தவளைப் போல வாசலில் அமர்ந்து “ஆரி… ஆரி…” என்று கதறிக் கொண்டிருந்த நிஷாலினியைப் பார்த்ததும், பூவிதழுவின் மனதில் இருந்த வேதனை ஒரு நொடி எரிச்சலாக மாறியது,

​அவள் நேராக நிஷாலினியின் முன்னால் வந்து நின்றாள், பூவிதழுவின் நிழல் நிஷாலினியின் மேல் விழுந்ததும், நிஷா மெல்லத் தலைநிமிர்ந்து பார்த்தாள், 

தனக்கு எதிரே நின்றிருந்த சிறியவளின் கண்களில் இருந்த அந்தத் தீட்சண்யமும், ஆத்திரமும் நிஷாலினியை ஒரு நிமிடம் மிரளச் செய்தது,

​”யாருக்காக இப்படி வாசல்ல உட்கார்ந்து அழுதுட்டு இருக்கீங்க” என்ற இதழுவின் குரலில் நிஷாலினி அவளை நடுக்கத்தோடு பார்த்தாள்,

“ஆரி… ஆரி எங்க போனாரு, அவர் என்கிட்ட சொல்லாமலே போயிட்டாரு, ஆரியை வரச் சொல்லுங்க” என்று தேம்பினாள்,

​பூவிதழினி ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்தாள்,

“ஆரி ஆரின்னு என்னவோ ரொம்ப காலமா பழகின மாதிரி உரிமை எடுத்து கூப்பிடுறீங்க, அவர் யாரு தெரியுமா, அவரு ஒரே டாக்டரு அவருக்கு ஊர்ல நூறு வேலை இருக்கும், 

அதை எல்லாம் விட்டுட்டு உங்க பக்கத்துல உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியுமா, அதையும் மீறி அவர் மேல அவ்வளவு என்ன அக்கறை” என்றே கடுகடுவென பேசினாள் பூவிதழினி 

​ரஞ்சிதம் பதறிப்போய் பூவிதழின் அருகில் வந்தாள்,

“இதழு என்னம்மா இது, வீட்டுக்கு வந்த புள்ளையப் போய் இப்படிப் பேசுறியே, அவ பயத்துல அழுதுட்டு இருக்கா” என்று பரிந்து பேசினாள்,

​”நம்மள பார்த்து பயப்படுறதுக்கு இங்க யாரும் மிரட்டலையே, இவ்வளவு பெரிய மனுஷங்க நீங்க எல்லாரும் கெஞ்சுறீங்க, ஒரு வார்த்தை காதுல வாங்காம, 

இப்படி வாழ்ற வீட்டு வாசல்ல உட்கார்ந்து அடம் பிடிக்குறது என்ன பழக்கம், ஆரி மச்சானை நீங்க கூட்டிட்டு வரல, அவர்தான் உங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்காரு, 

அவருக்கு உங்களை விட முக்கியமான வேலை நிறைய இருக்கு, ஒரு நிமிஷம் அவர் கண்ணுல இருந்து மறைஞ்சதுக்கே இப்படி ஊரைக் கூட்டுறீங்களே” என்று இதழு படபடவெனப் பொரிந்து தள்ளினாள்,

​நிஷாலினி அதிர்ச்சியில் அழுகையை நிறுத்திவிட்டு பூவிதழையே பார்த்தாள், அவளுக்குத் தான் என்ன தவறு செய்தோம் என்றே இப்போது வரைக்கும் புரியவில்லை, அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அந்தப் போர்க்களத்தில் இருந்து வென்று தன்னை மீட்டு வந்த ஆரியன் மட்டுமே,

​”எனக்கு எனக்கு ஆரியைத் தவிர இங்க யாரையும் தெரியாது, அதான்” என்று நிஷா தயக்கத்துடன் சொல்ல வர,

​”தெரியாதுன்னா தெரிஞ்சுக்க வேண்டியது தானே, இதோ நிக்கிறாங்களே இவங்க எல்லாரும் உங்க சொந்தக்காரங்கதான், அதை விட்டுட்டு காரை எடுத்துட்டுப் போனவரை கத்தி கூப்பிட்டா அவர் காதுக்கா கேட்கும், 

இத பாருங்க இது கிராமம் இங்க பொம்பளப் புள்ளைங்க இப்படி வாசல்ல உட்கார்ந்து கத்த மாட்டாங்க, ஒழுங்கா உள்ள வந்து உட்காருங்க” என்று அதட்டினாள் பூவிதழினி,

தங்கமணி மெல்ல இதழுவின் காதோரம் வந்து, 

“ஏய் இதழு, ஏன்டி இப்படி எகிறுற, அவ பாவம் சின்னப் பொண்ணுடி, இந்த வீட்ல ஆரியைத்தான் அவளுக்கு முதல்ல தெரியும் போல, அதான் அவனைத் தேடுறா” என்று நிஷாவிற்கு ஆதரவாகப் பேச

​”அவர் என்ன இவளுக்குத் தாலி கட்டின புருஷனா, இல்ல கூடவே பிறந்து கூடவே வளர்ந்தவரா இப்படித் தேடுறதுக்கு” என்று இதழு ஆத்திரத்தில் கொஞ்சவ் காட்டமாக கேட்டு விட, அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் உறைந்து போனார்கள்,

​நிஷாலினியின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது, தன் கழுத்தில் இருக்கும் தாலியை பூவிதழினி பார்த்து விட்டாளோ என்று பயந்து, தன் துப்பட்டாவை இன்னும் இழுத்துப் போர்த்திக் கொண்டாள், 

தன் நேசத்திற்குரியவனின் பெயரைச் சொன்னதற்கே பொங்கி எழும் பூவிதழினிக்கு, தன்னவன் இன்னொருவளின் கணவனாகி விட்டான் என்ற உண்மை தெரிந்தால் என்ன நடக்குமோ?

தொடர்ந்து  வாசிப்போம் வாங்க 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page