உன்னில் சிறையாகிறேன் – 5

நீ என்னை தேட வேண்டும் 

என்பதை விடவும், 

என்றும் என் தேடல் நீயே என அறிவாயோ காதலே…!

உன்னில் சிறையாகிறேன் – 5

சாலையின் மறுபுறம் தெரிந்த அந்த உருவம் தமிழினியின் இதயத் துடிப்பை எகிற வைத்தது, நீல நிறச் சட்டை, கலைந்த தலைமுடி, அதே மழலைச் சிணுங்கல் தூரத்திலிருந்து பார்த்தால் அது அப்படியே மிதுனைப் போலவே இருந்தது,

​”மிதுன்…” என்று அவளது வாய் மெல்ல முணுமுணுத்தது, அடுத்த நொடி, கையில் இருந்த கைப்பையையும், அந்தப் புதிய வேலைக்கான ஆணை கடிதத்தையும் பற்றி அவள் கவலைப்படவில்லை, 

சாலையின் வாகன நெரிசலைக்கூடப் பொருட்படுத்தாமல், உயிரைப் பணையம் வைத்து எதிர்முனைக்கு ஓடினாள்,

​அவள் கண்கள் அந்த ஐஸ்கிரீம் கடையின் முன் நின்றிருந்த அந்தச் சிறுவன் மேல் மட்டுமே நிலைத்திருந்தது, ஜீவா அவனுக்கு முதுகைக் காட்டி நின்றிருந்தான், 

​”மிதுன் மிதுன் குட்டி” என்றவாறு ​மூச்சிறைக்க ஓடிச் சென்ற தமிழினி, 

அந்தச் சிறுவனைப் பின்னால் இருந்து வாரி அணைத்துக் கொண்டாள். அவளது கண்ணீர் அந்தச் சிறுவனின் தோளில் தெறித்தது,

​”என்னை மன்னிச்சிருடா தங்கம், அம்மாவை விட்டுட்டு எப்படிடா போன, இனி உன்னை நான் விடமாட்டேன்டா, நீ அம்மா கூட தான் இருக்கனும்,நீ இல்லாம அம்மாவுக்கு செத்துடலாம் போல இருக்குடா கண்ணா” என்று கதறியபடி, 

அவனது கன்னங்களை உருவி, தலை முதல் கால் வரை முத்தங்களால் நனைத்தாள், அவளது கைகள் நடுங்கின, அவளின் தாயுள்ளம் அங்கே ஏக்கமாய் வழிந்தது,

​ஆனால், அவளின் அன்பிற்கு அடங்கிப் போகாத சிறுபிள்ளையோ பயந்து போய் அலறத் தொடங்கினான், 

“அப்பா அப்பா” என்று அவன் கத்த, தமிழினிக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியாக இருந்தது,

​”மிதுன் மிதுனா நான் தான்டா உன் அம்மா ஏண்டா பயப்படுற” என்று அவனது முகத்தைத் தன் கைகளுக்குள் ஏந்தி நிமிர்ந்து பார்த்தாள், 

​அங்கே இடி விழுந்தது போலத் திகைத்து நின்றாள் தமிழினி,

​அவன் மிதுன் அல்ல,

​அதே வயது, அதே போன்ற உடை, ஆனால் அவன் முகம் வேறு, 

அவனது கண்கள் வேறு, தமிழினியின் கைகள் சட்டென்று தளர்ந்தன, அவளது இதயம் ஆயிரம் சுக்கல்களாக உடைந்தது போன்ற ஒரு உணர்வு, அப்போது அந்தச் சிறுவனின் தந்தை ஓடி வந்து, 

“யார் நீங்க? என் குழந்தையை எதுக்கு இப்படி பயமுறுத்துறீங்க” என்று கோபமாகக் கத்தினார்,

​தமிழினி சிலையென உறைந்து நின்றாள், சுற்றிலும் இருந்தவர்கள் அவளை ஒரு விசித்திரமானப் பிறவியைப் போலப் பார்த்தனர், அவள் கண்கள் அந்தச் சிறுவனின் தந்தையைத் தாண்டித் தேடியது, அங்கே ஜீவா இல்லை, அவள் பார்த்தது வேறொரு மனிதனை,

“சாரி சாரி மன்னிச்சிருங்க என் பையன்னு நினைச்சுட்டேன் அவன் இப்படித்தான் இருப்பான் சாரி” என்று திக்கித் திணறிச் சொன்னவள், அப்படியே அந்த நடைபாதையில் சரிந்து உட்கார்ந்தாள்,

​ஏமாற்றம் அவளது உயிரை உருவியது,  தான் பெற்ற பிள்ளையின் முகமே தனக்கு மறந்துவிட்டதா, அல்லது அவனது நினைவுகள் அவளை ஒரு பைத்தியமாக மாற்றிவிட்டதா,

அப்போது தமிழினியை அழைத்துச் செல்ல வந்த மகிழருவி ​தூரத்திலிருந்து இதைப் பார்த்து ஓடி வந்து தமிழினியை அணைத்துக் கொண்டாள், அவளின் நிலையை வார்த்தையாக சொல்லாமல் உணர்வுகளைப் புரிந்து கொண்டாள்

​”அருவி அவன் மிதுன் மாதிரியே இருந்தான்டி, என் மிதுன் மாதிரியே இருந்தான், ஆனா அவன் என் மிதுன் இல்லையே அருவி” என்று அவள் மடியில் தலை சாய்த்துத் தேம்பி அழுதபோது, நெரிசல் நிறைந்த அந்தச் சாலையே மௌனமானது,

​பார்வைக்குத் தெரிந்தது நிஜமல்ல, அவள் மனதுக்குள் இருந்த ஏக்கமே உருவெடுத்து அவளை ஏமாற்றி இருந்தது, தன் மகனைப் பார்க்க முடியாத அந்த வலி, ஒரு கானல் நீராக அவளைத் தவிக்க விட்டிருந்தது,

​அங்கே தமிழினி வேறொரு குழந்தையைத் தன் மகன் என்று நினைத்துக் கதறிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சில மைல்கள் தொலைவில் இருந்த அந்தச் சிறிய குடியிருப்பில் நரகமே குடியிருந்தது,

​மிதுன் தன் கையில் இருந்த பொம்மையை ஓங்கித் தரையில் அடித்தான்,

“எனக்கு அம்மா வேணும், இப்பவே அம்மா வேணும்” என்று அவன் கத்திய சத்தம் அந்த வீட்டின் சுவர்களில் மோதி எதிரொலித்தது, ​ஜீவா சமையலறையில் தடுமாறிக் கொண்டிருந்தான், 

ஆன்லைனில் பார்த்துச் செய்த பருப்பு சாதம் ஒரு பக்கமும், கருகிப்போன காய்கறிகள் மறுபக்கமும் கிடந்தன, தன் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான கோப்புகளைச் நொடியில் சரிபார்க்கும் அவனது மூளை, தன் மகனின் ஒரு வேளை உணவைத் தயாரிப்பதில் தோற்றுப் போயிருந்தது,

​”மிதுன், சமத்தா இருடா, இதோ இந்தச் சாதத்தைச் சாப்பிடு, அப்புறம் நாம அம்மாகூட இருக்கும் போது போனோம்ல அந்த மாதிரி ஐஸ்கிரீம் கடைக்குப் போலாம்” என்று ஜீவா கெஞ்சினான் 

​”வேண்டாம் அந்த ஐஸ்கிரீம் எனக்கு வேண்டாம் அம்மாவும் கவியும் தான் வேணும், நீங்க ஏன் என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க, எனக்கு கவியை பார்க்கனும்” என்று மிதுன் மூச்சு முட்ட அழுது, சோபாவில் விழுந்து புரண்டான்,

​ஜீவாவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது, 

“மிதுன் நில்லுன்னு சொன்னேன்ல, இப்போ இந்தச் சோத்தைச் சாப்பிடலன்னா அவ்ளோதான்” என்று அவன் ஓங்கிய குரலில் மிதுன் பயந்து போய் ஒரு நிமிடம் அமைதியானான், ஆனால், அந்த அமைதி ஒரு நொடிதான், அடுத்த வினாடி அவனது அழுகை இன்னும் பலமானது,

​ஜீவா தன் கைகளைத் தலையில் வைத்துக் கொண்டு அமர்ந்தான், அவனுக்கு இப்போதுதான் புரியத் தொடங்கியது வீடு என்பது வெறும் நான்கு சுவர்களும் வசதிகளும் அல்ல, அது ஒரு பெண்ணின் உழைப்பால், அன்பால் கட்டமைக்கப்பட்ட ஒரு கோட்டை என்று,

​டேபிளின் மீது இருந்த போனை எடுத்தான், தமிழினியின் நம்பரைத் தேடினான், ‘மிதுனை அழைத்துப் போ’ என்று சொல்ல அவனது ஈகோ விடவில்லை, ஆனால் தன் மகனின் வாடிய முகத்தைப் பார்க்கவும் அவனால் முடியவில்லை,

​அப்போது மிதுன் அழுது கொண்டே உறங்கிப் போயிருந்தான், அவனது கன்னங்களில் காய்ந்து போயிருந்த கண்ணீர்த் தழும்புகள் ஜீவாவின் மனதை அறுத்தன, 

குழந்தையை படுக்கையறைக்குள் படுக்க வைத்து விட்டு வெளியே வந்தவனுக்கு வயிறு பசித்தது, சமையலறைக்குள் நுழைந்து பார்த்தான் அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது, 

பசியால் கோபமும் வந்தது, அதை யாரிடம் காட்ட எனத் தெரியாமல் பாத்திரங்கள் மீது காட்டி அடுக்கி வைத்த பாத்திரங்களை எல்லாம் தள்ளியதால் தரையில் சிதறி சத்தமெழுப்ப அதில் தூக்கம் கலைந்து மீண்டும் “அம்மா” என்று கத்தி அழ ஆரம்பித்தான் மிதுன்,

ஜீவாவிற்கு “அய்யோ” என்றிருந்தது​”தனி ஒருத்தியா இருந்து அவ எப்படித்தான் இதையெல்லாம் சமாளிச்சாளோ” என்று முதல் முறையாகத் தமிழினியின் இடத்திலிருந்து யோசித்தான் ஜீவா, 

ஆனால், அடுத்த நொடியே “அவளால தான் எல்லாம் கெட்டுப் போச்சு” என்ற பழைய கசப்பு மீண்டும் வந்து அவனது மனதைத் தூர்த்தது.

​அங்கே ஒரு தந்தை தன் ஈகோவினால் ஒரு குழந்தையைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்க, இங்கே ஒரு தாய் கானல் நீரைத் தன் மகன் என்று நம்பி ஏமாந்து போயிருந்தாள்,

​விதி இப்போது இருவரையும் வெவ்வேறு திசைகளில் இழுத்துக் கொண்டிருந்தது, ஆனால் அந்த இரு இதயங்களையும் இணைக்கும் ஒற்றைப் புள்ளியான மிதுன், 

இப்போது கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தான், மிதுன் அழுது அழுது ஓய்ந்து படுக்கையில் கிடந்தான், ஜீவா அவன் அருகே அமர்ந்து அவனது நெற்றியைத் தொட்டுப் பார்த்தான், 

உடல் தணலாகக் கொதித்தது, பிரிவின் துயரம் அந்தச் சிறுவனுக்குக் காய்ச்சலாக மாறியிருந்தது, 

​”மிதுன் மிதுன் குட்டி” என்று ஜீவா பதற்றத்துடன் அழைத்தான், ​மிதுன் கண்களைத் திறக்காமலேயே, 

“அம்மா பசிக்குதும்மா சாதம் ஊட்டுமா” என்று தன்னை அறியாமலும் பிதற்றத் தொடங்கினான்,

​ஜீவாவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது, உடனே தமிழினிக்கு போன் செய்ய வேண்டும் என்று கை துடித்தது, போனை எடுத்தான், அவள் நம்பரைத் தேடினான் ஆனால், 

“உன்னால குழந்தையை தனியா வளர்க்க முடியாது, நீ ஒரு சுயநலவாதி, உன்னையே உன்னால ஒழுங்கா பார்த்துக்க முடியாது” என்று அவள் அன்று சண்டையின் போது சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில் ரிங்காரமிட்டன,

​”இல்ல இல்ல நான் அவகிட்ட தோத்துப் போக மாட்டேன், அவ சொன்ன வார்த்தைய உண்மையாக்க கூடாது, இனிமே என்ன நடந்தாலும் அவளுக்கு போன் பண்ணவோ அவ்வளவு ஏன் அவளைப் பத்தி நினைக்கக் கூட கூடாது,” என்று போனைத் தூக்கி எறிந்தான்,

​அடுப்பங்கரைக்குச் சென்று சுடுதண்ணீர் எடுத்து வந்து, துணியால் மிதுனின் உடலைத் துடைத்தான், தான் ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராக இருக்கலாம், ஆனால் ஒரு தகப்பனாகத் தன் மகனின் காய்ச்சலைக் குறைக்கத் தெரியாமல் அவன் அங்கே கூனிக்குறுகி நின்றான்,

“என்னடா வாழ்க்கை இது” என்று தனக்குத் தானே நொந்து கொண்டான் ஜீவா,

ஈகோவுக்கும் பாசத்திற்கும் இடையில் நடக்கும் போரில் அவன் ஒவ்வொரு நிமிடம் சிதைந்து கொண்டிருந்தான்,

மறுநாள் வேலைக்கு விடுப்பெடுத்து விட்டு மிதுனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான், அங்கே மிதுனுக்கு ஊசி போட்டு, மருந்துகள் வாங்கிவிட்டு ஜீவா வீடு திரும்பியபோது இரவு மதியத்திற்கு மேல் ஆகியிருந்தது. 

தமிழினியின் புது விடியல்

​மறுபுறம், ஒரு புதிய உத்வேகத்துடன் தமிழினி அந்தப் பள்ளிக்குள் நுழைந்தாள்,

நேற்றைய கசப்பான ஏமாற்றத்தை ஒரு மூலையில் பூட்டி வைத்துவிட்டு, தன் கண் முன்னே இருக்கும் மகளுக்காகவும் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு முதல் நாள் பள்ளிக்குச் சென்றாள்,

தலைமையாசிரியர் அறைக்குச் சென்று கையேட்டில் முதல் கையெழுத்திட்டு விட்டு, தலைமையாசிரியரிடம் அனுமதி பெற்று விட்டு அவளுக்கான வகுப்பறைக்கு ப்யூனின் உதவியோடு சென்றார், வகுப்பறைக்குள் நுழைந்ததும் முப்பது சிறு பிஞ்சுகள் அவளைப் பார்த்து, 

“குட் மார்னிங் மிஸ்” என்று உற்சாகமாகக் கத்தினார்கள், அந்த மழலைச் சத்தம் அவளது காயப்பட்ட மனதிற்கு ஒரு மருந்தாக அமைந்தது,

​அங்கே இருந்த ஒவ்வொரு குழந்தையிலும் அவள் தன் மிதுனைத் தேடினாள், ஆனால் இன்று அவள் அழவில்லை, 

“இந்தக் குழந்தைகளுக்கு நான் நல்லபடியா பாடம் சொல்லிக் கொடுத்தா, எங்கோ ஒரு இடத்துல என் மிதுனுக்கும் யாரோ ஒருத்தர் இப்படி அன்பா பாடம் சொல்லிக் கொடுப்பாங்க” என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்,

​வேலை முடிந்து மாலை வெளியே வரும்போது, அவளது முகத்தில் ஒரு களைப்பு இருந்தாலும், அதையும் தாண்டிய ஒரு மனநிறைவு இருந்தது, ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அவள் சம்பாதித்த அந்த முதல் நாள் அங்கீகாரம் அவளுக்குப் பெரும் பலத்தைத் தந்தது,

 

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page