முட்களின் நிறைந்த பாதையில் தொடரும் பயணம் இதுவெனத் தெரிந்தும்,
உன் பாதம் பதிந்த சுவடைத் தேடி அலைகிறேன் காதலே…!
வலியை சூடிய காதலே – 8
தென்றலூரின் மையப்பகுதியில், பழமை மாறாத கம்பீரத்துடன் நின்றிருந்தது அந்த ஓட்டு வீடு, அது வெறும் வீடு அல்ல, ஆரியனின் இத்தனை காலத் தனிமைக்கும், அவனது வைராக்கியத்திற்கும் சாட்சி சொல்லும் விதமாக நின்ற ஒரு கோட்டை,
வீட்டைச் சுற்றிலும் அடர்ந்த தென்னை மரங்களும், வாசலில் பூத்துக் குலுங்கும் நந்தியாவட்டைச் செடிகளும் அந்த வீட்டிற்கு எழிலைச் சூட்டியது,
ஆரியன் காரை நிறுத்திவிட்டு இறங்கினான், நிஷாலினி தயக்கத்தோடு காரிலிருந்து வெளியே வந்தாள், அவளுக்குப் பின்னால் ரஞ்சிதமும் இறங்கினாள்,
”உள்ளே வா நிஷா, அப்படியே அவங்களையும் வரச்சொல்லு” என்று நிஷாவிடம் சொல்ல, அவன் சொன்ன ‘அவங்க’ என்ற வார்த்தை தன்னைத் தான் குறிப்பிடுகிறான் என்று ரஞ்சிதத்திற்கு புரிந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்றாள்,
வீட்டின் பெரிய மரக்கதவுகளை ஆரியன் திறந்து விட உள்ளே நுழைந்தாள் நிஷா ஒரு பெரிய முற்றம், அதன் நான்கு பக்கங்களிலும் நின்ற தேக்கு மரத்தூண்கள் அந்த வீட்டின் பழமையைப் பறைசாற்றின,
தரையில் பதிக்கப்பட்டிருந்த ஆத்தாங்குடி கற்கள் இயற்கையான குளிர்ச்சியாக இருந்தது, வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு நேர்த்தியும், கலைவண்ணமும் நிறைந்தே இருந்தது,
”இவ்வளவு பெரிய வீட்ல இத்தனை வருஷமா தனியா இருந்திருக்கானே” என்று ரஞ்சிதம் கலங்கிய கண்களுடன் வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்,
ஒரு தாயாக தன் மகன் அனுபவித்த அந்தத் தனிமையின் வலி அவளைச் சுட்டது, தன் கண்ணீரை மறைக்க பின்கட்டிற்குச் சென்றாள்,
நிஷாலினி அந்த முற்றத்தின் நடுவே நின்று அன்னாந்து வானத்தைப் பார்த்தாள், திறந்தவெளி முற்றத்தின் வழியாகத் தெரிந்த அந்த அந்தி வானம் அவளுக்கு ஏதோ புதிதாக இருந்தது,
”நிஷா, உனக்கு இந்த ரூம் சரியா இருக்கும்,” என்று ஒரு அறையைக் காட்டினான் ஆரியன்,
“இந்த வீடு ரொம்ப அழகா இருக்கு ஆரி, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சிறுபிள்ளை போல் குதூகலமாக சொன்னாள் நிஷா,
“அப்படியா, ஆனா இங்க படுத்து தூங்க ஏசி இருக்காது, சாப்பாடு பரிமாற ஆள் இருக்காது, அவரவர் வேலைகள அவரவரே தான் செய்துக்கனும்,
நீ இவ்வளவு நாளும் அனுபவிச்ச ஆடம்பரம் எதுவுமே இங்க இருக்காது, இதெல்லாம் நீ பழகுறது ரொம்ப கஷ்டம்” என்றான் ஆரியன்,
“அந்த ஆடம்பரமான ஜெயில்ல இருந்தத விட எனக்கு வேற எதுவுமே கஷ்டம் இல்ல ஆரி, படுத்து ஏசி தேவையில்ல ஆரி மனசுல கொஞ்சூண்டு சந்தோஷம் இருந்தாலே போதும்,
என் நிலமைய பாத்தியா ஆரி, ஒரே நாள்ல எல்லாமே தலைகீழா மாறிடுச்சு, யார் யாரோ வர்றாங்க என்னென்னவோ சொல்றாங்க, ஆனா எனக்கு தான் எதுவுமே புரியல,
இப்ப எனக்குள்ளயே பல கேள்வி, முதல்ல நான் யாரு, எனக்காக ஏன் எல்லாரும் சண்டை போடுறாங்க எதுவுமே தெரியல, எனக்கு தெரிஞ்சதெல்லாம் என் ரூம் அதுக்குள்ள வர்ற இரண்டு சர்வென்ட்,
அதையும் தாண்டி வெளிய வந்தா, என் அப்பா அவர் மேல இருக்கிற பயம் இதைத் தவிர இந்த உலகத்துல ஒன்னுமே இல்லாம இருந்தேன், எனக்கு தேவையானது மட்டும் இல்ல தேவைக்கு மேலயும் நிறையவே கிடைச்சுது,
ஆனா எனக்கு பிடிச்ச ஒன்னுமே கிடைக்கல, இந்த உலகத்துல நான் பார்த்து பயப்படாத ஒரே ஆள்ன்னா அது நீ மட்டும் தான் ஆரி, உங்கூட இருக்கும் போது மட்டும் தான் நான் நானா இருக்கிற மாதிரி பீல் பண்றேன்” என்றவளைப் பார்க்கும் போது,
ஆரிக்கே பாவமாக தோன்றியது, அவள் மெல்ல ஆரியின் அருகில் வந்தாள், அவன் முகம் பார்த்தாள், அதில் இருக்கும் இரு கண்களை கூர்மையாக ஊற்றுப் பார்த்தாள்,
“யார் என்ன சொன்னாலும், இந்த உலகமே என்னை காயப்படுத்தினாலும், நீ மட்டும் என்னை தனியா விட்டுட்டு போயிடாத ஆரி, அப்படி நீ என்னை விட்டுட்டு போயிட்டா அடுத்த நொடி நான் உயிரோட இருக்க மாட்டேன்” என்று சொல்லி அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்,
அவளின் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் தீப்பிழம்பாய் அவன் நெஞ்சில் இறங்கி இதயத்தை சுட்டது,
தன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவளை நினைக்கையில் மனம் வெதும்பியது,
இந்த நொடி வரை அவளைச் சுற்றி நிற்கும் எந்த ஒரு பிரச்சனைகளும் அவளை பாதிக்கவில்லை, அவளின் அவன் இல்லாதது தான் அவளுக்கு தாங்க முடியாத வலியைக் கொடுத்தது,
அதை காதல் என்று பெயரிடுவதா?
அல்லது தன்னைக் காக்க வந்தவன் என்ற ஆணித்தரமான நம்பிக்கை என்பதா? எதுவாயினும் அவன் அவளுக்கே உரிமைமையானவன்,
ஆரியனின் மார்பில் சாய்ந்து விம்மி அழுத நிஷாலினியின் தலைமுடியை மென்மையாக வருடி அவனது கைகள் அவளைத் தழுவி தேற்றத் துடித்தன,
ஆனால் அவனது மனமோ ஆறாத ரணமாக மாற்றாளின் காதலை மறக்க முடியாமல் வேதனையைச் சுமந்து கொண்டு அவனை ரணப்படுத்திக் கொண்டிருந்தது,
”நிஷா அழாத இங்க பாரு” என்று அவளது முகத்தைத் தூக்கினான், அவளது கண்கள் அழுது சிவந்திருந்தன,
“உனக்காக நான் இருக்கேன், எப்பவுமே இருப்பேன், இனி உன்னை தனியா விடமாட்ட, ஆனா ஒன்னு புரிஞ்சுக்கோ, இந்த வீடு உனக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கும், ஆனா இங்க இருக்கிற மத்தவங்களால உன் மனசு நிச்சயமா காயப்படும், அதனால எதையும் தாங்கிக்கிற தைரியத்தை வளர்த்துக்கோ” என்று ஆறுதலும் தைரியமும் ஊட்டினான் ஆரியன்,
நிஷாலினி அவன் கண்களைப் பார்த்தவாறே தலையசைத்தாள், அந்தத் தேக்கு மரத்தூண்களின் நிழலில், அந்த அந்தி நேரத்து வெளிச்சத்தில், அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய மௌனம் நிலவியது, அந்த மௌனத்தை ரஞ்சிதத்தின் குரல் கலைத்தது,
”அம்மாடி உனக்கு என்ன பிடிக்கு பிடிக்காதுன்னு தெரியல, என்ன வேணும்னு சொன்னீன்னா ராத்திரிக்கு சமைச்சிடுவே” என்று சொல்லிக்கொண்டே வந்த ரஞ்சிதம்,
அவர்கள் இருவரும் நெருக்கமாக நின்றிருப்பதைப் பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்,
சட்டென விலகி நின்றான் ஆரியன், நிஷாலினி தன் துப்பட்டாவைச் சரிசெய்து கொண்டு தலைகுனிந்தாள்,
அந்நேரம், வீட்டின் வாசலில் ஒரு நிழல் விழுந்தது, விறைப்பான நடையோடு உள்ளே நுழைந்தார் ராஜதுரை, முற்றத்தின் நடுவே நின்றிருந்த ஆரியனையும் நிஷாலினியையும் ஒரு ஏளனப் பார்வையால் அளவெடுத்தார்,
”என்னடா பஞ்சாயத்துல ஏதோ பெரிய தியாகி மாதிரிப் பேசிட்டு, வீட்டுக்கு வந்தவுடனே உன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டியா, உன் பாதுகாப்புல இவ இருக்கான்னு சொன்னியே, அது இதுதானா” என்று ராஜதுரை நஞ்சைக் கக்கினார்.
நிஷாலினி மீண்டும் பயத்தில் ஆரியனின் பின்னால் ஒதுங்கினாள், ஆரியன் தன் தந்தையைப் பார்த்து ஒரு குளிர்ந்த சிரிப்பை உதிர்த்தான்,
” இங்க நீங்க ஒரு கெஸ்ட் அவ்ளோ தான், அதனால உங்கஎல்லைக்குள்ள இருங்க” என்றவன் “நிஷா, நீ போய் ரெப்ரஸ் ஆகிட்டு வா, உனக்கு சாப்பிட ஏதாவது ரெடி பண்றேன்” என்று கூறி,
நிஷாலினி அறைக்குள் சென்ற பிறகு, ஆரியன் ராஜதுரையின் அருகில் சென்றான்,
“இது என்னோட தனிப்பட்ட வாழ்க்கை, இதுல உங்க கௌரவப் பேயை உள்ள இழுக்காதீங்க, மீறி இழுத்தா, நீங்க இதுவரைக்கும் சேர்த்து வச்ச கௌரவம் எல்லாம் இந்த முற்றத்து மண்ணுல தான் கிடக்கும்” என்று எச்சரித்துவிட்டு நகர,
ராஜதுரை ஆத்திரத்தில் கைகளை முறுக்கினார், அதே சமயம், வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக இதையெல்லாம் ஒரு ஜோடி கண்கள் எரிச்சலோடும், பொறாமையோடும் பார்த்துக் கொண்டிருந்தன,
அது பூவிதழினி ஆரியனின் வீட்டிற்குள் நிஷாலினி நுழைந்தது முதலே, அவளது இதயம் ஒரு எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தது,
நள்ளிரவின் நிசப்தத்தில், அந்தப் பெரிய வீட்டின் முற்றம் நிலவொளியில் நனைந்து கொண்டிருந்தது, ஆரியன் ஒரு தேக்கு மரத் தூணில் சாய்ந்து, அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்,
அவனது கண்கள் நட்சத்திரங்களை எண்ணினாலும், மனம் மட்டும் விடைதெரியாத சிக்கல்களில் உழன்று கொண்டிருந்தது, அந்நேரம்
”மச்சா…” என்று ஒரு குரல் கேட்க
அந்தக் குரல் காலங்காலமாக அவன் காதுகளில் தேனாகப் பாய்ந்த அதே குரல்,
இன்று பிசிறிப் போய், ஒருவித ஆழமான வலியுடன் அங்கு நிலவிய மௌனத்தைக் கிழித்தது, ஆரியன் திடுக்கிட்டுத் திரும்பினான்,
தூணின் நிழலில் இருந்து மெல்ல வெளிப்பட்டாள் பூவிதழினி, அவளது கண்கள் அழுது வீங்கிப் போயிருந்தன,
ஆரியன் நிலைகுலைந்து போனான், அவளை எதிர்கொள்ளும் தைரியம் அவனிடம் ஒரு சொட்டு கூட இல்லை,
“இதழு இந்த நேரத்துல இங்க என்ன பண்ற, யாராவது பார்த்தா என்னாகும்னு தெரியுமா” என்று பதற்றத்துடன் கேட்டான்,
இதழு ஏளனமாகச் சிரித்தாள், அந்தச் சிரிப்பு ஆரியனின் இதயத்தை அறுத்தது,
“யார் பார்த்தா என்ன மச்சா, இனிமே எனக்குன்னு என்ன மிச்சமிருக்கு, ஊர் பஞ்சாயத்துல அந்தப் பொண்ணு உன்னைக் கட்டிப் பிடிச்சு அழும்போது, என் உசிரு அங்கயே போயிருக்கணும், ஆனா ஏனோ போகாம இன்னும் ஒட்டிட்டு இருக்கு,
இந்தக் கொடுமையையெல்லாம் பார்க்கணும்னு விதி இருக்கு போல” என்று வெறுமையான குரலில் சொல்லிக் கொண்டே
அவள் மெல்ல அவன் அருகில் வந்தாள், அவனது சட்டை காலரைப் பிடித்து உலுக்கினாள்,
“ஏன் மச்சா எதுக்காக எங்கிட்ட எதையோ மறைக்கிற, உன் கண்கள் பொய்யே சொல்லாது மச்சா, உன் மனசுல ஏதோ ஒன்னு இருக்கு, அது என்னன்னு மட்டும் சொல்லிடு, அப்புறம் நான் உன் முகத்துலயே விழிக்க மாட்டேன்” என்று கேட்டாள் பூவிதழினி,
ஆரியன் என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தான், அவனது கைகள் அவளை அணைத்தது,
”இதழு நான் செய்றதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கும்ன்னு சொல்லுவியே அதே மாதிரி இப்ப நடக்கிறதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்ன்னு நம்பு,
காலம் வரும்போது உனக்கே புரியும். இப்போ தயவுசெஞ்சு வீட்டுக்குப் போ, இனிமே இந்த மாதிரி நேரத்துல வெளிய வராத” என்று கல்லைப் போல மனதை மாற்றிக் கொண்டு சொன்னான்,
”காரணமா, காதல் இருக்குற இடத்துல காரணம் இருக்காது மச்சா, காரியம் தான் இருக்கும், எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு மச்சா, இப்படி எதையுமே மூடி மறைச்சு என்னைக் கொல்லாத,
நீ ஊர்ல இருந்து வந்துல இருந்தே உன் பேச்சும் முகமும் ஏனோ சரியில்ல, இதோ இப்ப கூட நீ என் முன்னாடி தான் நிற்கிற ஆனா, யாரோ ஒரு மூணாவது மனுஷிகிட்ட பேசிற மாதிரி பேசுற, உனக்கு என்ன ஆச்சு மச்சா” என்று விம்மி அழுதாள் இதழு,
ஆரியன் அவளது கைகளைத் தன் மார்பில் இருந்து மெல்ல விலக்கினான்,
“நான் என்ன சொன்னாலும் உனக்கு இப்போ எதுவும் புரியாது இதழு, எங்கிட்ட எதுவும் கேட்காத, நேரம் வரும் போது நானே உங்கிட்ட சொல்றேன், இப்ப போ ப்ளீஸ் போயிடு,” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான்,
அதைப் பார்த்த பூவிதழினிக்கு மனசு தாங்க வில்லை என்ன செய்வதென அறியாமல் கைகளைத் தூணில் ஓங்கி அடித்தாள்,
“உன் ஆசை அதுதான்னா சரி மச்சா நா போறேன்” என்று கூறியவள் ஒரு நிழலைப் போலவே மறைந்து போனாள்,
அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு, ஒரு தேக்கு மரத் தூணாக அங்கே உறைந்து நின்றான் ஆரியன்,
காதலில் கொடுமையே புரிதலும் பிரிதலும் தானோ…?
புரிதல் இல்லாத காதல் ஊமை, என்றால் பிரிதல் இல்லாத காதல் வெறும் கற்பனை…!
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
