உருகும் மனதில் உறைபனியாய்
அத்தியாயம் – 3
அவன் அங்கிருந்து நகர்ந்ததும் தான் பவித்ராவுக்கு மூச்சே வந்தது. நெஞ்சில் கையை வைத்து சமன் செய்தவள், “அவனுங்க எங்க டி?” என்று அவர்களோடு வந்த ஆண் நண்பர்களை கேட்டாள்.
“உன் மாமாவை பார்த்ததும் நான் தான் அவனுங்கள போக சொன்னேன்” என்ற சந்தியா,
“உன் வீட்டுல இருக்கவங்கள பார்த்து நீ பயந்தா பரவாயில்ல. நாங்களும் ஏன் டி பயப்படனும். ஏதோ தப்பு செஞ்ச மாதிரி உன் மாமாவைப் பார்த்ததும் கால் அப்படி நடுங்குது” என்று அவளை திட்டி அவரவர்களுக்கு தேவையான திண்பண்டங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் வகுப்பறைக்கு சென்றார்கள்.
கடைசி வகுப்பும் முடிந்து விட அனைவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். வழக்கம்போல அப்பாவிற்காக பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தவள் முன் வந்து நின்றான் தேவ். அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்கவில்லை அவள். அவளது பழக்கவழக்கம் எல்லாம் கல்லூரிக்குள் தான். வெளியே வந்துவிட்டால் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கமாட்டாள்.
அனைத்தும் தெரிந்தும் இப்படி வந்து நிற்பவனை பார்த்தவள் சாலையில் தந்தை வருகிறாரா என்று பார்த்து விட்டு, “என்ன தேவ்?” என்று பயந்து பேசினாள்.
பின் புறம் மறைத்து வைத்திருந்த ஒரு ரோஜாவை அவள் முன் நீட்டவும் சேதுராமன் அங்கு வரவும் சரியாக இருந்தது.
“ஏய்” என்று தேவ்வை எட்டி உதைத்தவர் அருகே நின்றிருந்த பவித்ரா பார்க்க அவளோ,
“சித்தப்பா… சித்தப்பா” என்று பம்பியவள், “நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை” என்று அவரை நெருங்க அவளை தள்ளிவிட்டவர்.
கீழே விழுந்திருந்த தேவ்விடம் சென்று, “என்ன தைரியம் இருந்தா எங்க வீட்டு பொண்ணுக்கு பூ கொடுப்ப?” என்று அவன் முடியை பிடித்து தூக்கியவர் அவனை அடித்து துவைக்க ஒருக் கட்டத்தில் அவன் துவண்டு விட்டான்.
“அவனை விட்டுருங்க சித்தப்பா” என்று காலில் விழுந்த பவித்ராவை எட்டித் தள்ளியவர், அவனை மிதிக்க போக அதற்குள் அங்கிருந்த வாட்ச்மேன் மற்றும் சில ஆசிரியர்கள் வந்து அவரை தடுத்து தேவ்வை அவரிடம் இருந்து பிரித்து மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தனர்.
அவரிடம் பேச முயன்ற அனைவரையும் தாறுமாறாக திட்டி கிட்டத்தட்ட பவித்ராவை இழுத்துக்கொண்டு சென்றார்.
விட்டிற்கு செல்லும் வழியெல்லாம் சேதுராமனிடம் பேச முயற்சித்தது எல்லாம் வீணாக போனது. ஒருகட்டத்திற்கு மேல், “இப்போ நீ வாயை மூடிட்டு வரல ரோடுன்னு கூட பார்க்காம வெளுத்துருவேன்” என்று மிரட்டியவர் வண்டி ஒட்டிக் கொண்டிருக்கும் போதே முத்துராமன் மற்றும் செந்தாமரையை உடனே வீட்டு வர சொல்லியிருந்தார்.
அவரது குரல் ஏதோ ஒரு தீவிரத்தை சொல்ல ஏன் எதற்கு என்று கேட்காமல் வருவதாக கூறியிருந்தார்கள் அவரோடு பிறந்தவர்கள். அவர் வருவதற்குள் வீட்டிற்கு வந்திருந்தார் முத்துராமன்.
கடையில் இருந்து பாதியில் வந்தவரிடம் கீதாவும் காமாட்சியும் கேள்வி கேட்க , சேதுராமன் தான் அவசரமாக வர சொன்னதாக சொன்னவர் அவருக்காக காத்திருந்தார்.
உயர்வேகத்தில் வந்த சேதுராமன் வண்டியை நிறுத்தி பவித்ராவை இழுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்து, “படிச்சு படிச்சு சொன்னேனே பொட்டப்புள்ளயை கவனமா பாருன்னு கேட்டியா? குடும்ப மானத்தை சந்திச் சிரிக்க வைச்சுட்டா உன் பொண்ணு” என்று நடந்ததை கூற அதிர்ந்து போனார்கள் அவளை பெற்றவர்கள்.
“நான் அப்பவே சொன்னேன் இவளுக்கு எதுக்கு காலேஜு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சா வீட்டோட அடங்கி இருப்பானு. பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுனானே. இந்த சிறுக்கி மக இப்படி ஒரு காரியத்தை பண்ணி வைச்சிருக்காளே” என்று அவள் முதுகில் அடித்த காமாட்சி,
“இப்படி என் குடும்ப மானத்தையே வாங்கிட்டியே டி பாவி. என் சாதி சனம் இனி என்னை மதிக்குமா?” என்று நெஞ்சில் அடித்து ஒப்பாரி வைத்தார்.
“நீ எதுக்கும்மா அழுகுறா? எல்லாத்தையும் பண்ணிட்டு குத்துக்கல்லு மாதிரி நிக்கிற இவளை கொன்னுப் போட்டறேன்” என்று பவித்ராவை சகட்டுமேனிக்கு அடிக்க ஆரம்பித்தார் சேதுராமன்.
பெத்த பாசம் இருந்தும் பவித்ராவின் இந்த துரோகம் முத்துராமனை இறுகி நிற்க வைத்தது. ஆனால் கீதாவால் அப்படி இருக்க முடியவில்லை. தப்பே செய்திருந்தாலும் அது அவர் பெற்ற மகள் அல்லவா.
சேதுராமனிடம் இருந்து அவளை பிரித்தவர் தான் பின் நிற்க வைத்துக்கொண்டார். அவரை தாண்டி அடிக்க முயன்றவரின் முன் கைக்கூப்பி நின்ற கீதா, “அடிச்சே என் பிள்ளையை கொன்னுறாதிங்க. நீங்க என்ன சொன்னாலும் எனக்காக அவ அதுக்கு கட்டுப்பட்டு நடப்பா” என்று வாக்கு கொடுத்தவர்.
“எனக்காக செய்வ தான பவி” என்று அவளிடம் அழுகையோடு கேட்டார்.
அவர்கள் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்று அவளுக்கு தெரியுமே. யாரையாவது கைக் காட்டி கழுத்த நீட்ட சொல்ல போகிறார்கள். குறைந்தபட்சம் அதற்கு முன் தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் பவித்ரா.
பழியுடன் வாழ்நாள் முழுவதும் வாழ அவளால் முடியாது என்பதால் அத்தனை அடிகளை தாண்டி பேச வாயை திறந்தாள்.
“நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன். ஆனா நான் பேசுறதை தயவை செஞ்சு கேளுங்க” என்றவள்
அவள் தந்தை முன் சென்று, “சத்தியமா நான் எதுவும் செய்யலப்பா?” என்று கதறினாள்.
“தப்பு செஞ்சுட்டு என்ன திண்ணக்கம் இருந்தா பொய் சொல்லுவ” அவள் முடியை கொத்தாக பிடித்தார் சேதுராமன்.
தனக்காக தான் தவறு செய்திருக்க மாட்டேன் என்று நம்பி நிற்காத தந்தையை அடிப்பட்ட பார்வையால் துளைத்தாள்.
“அடுத்து வர முகூர்த்ததுல உனக்கு கல்யாணம். அது வரை உன்னோட ரூமை விட்டு நீ வெளில வரக் கூடாது. அப்படி வந்தனா உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். அந்த பையனை கொன்னு போட்டுருவேன்” என்று மிரட்டிய சேதுராமனை வெறித்துப் பார்த்தாள்.
தான் சொல்வதை கூட கேட்காத அளவிற்கு எது இவர்களை கட்டிப் போட்டது. பகுத்தறிவு இல்லாத குடும்பத்திடம் இதை எல்லாம் எதிர்பார்ப்பது தவறு என்று நினைத்து அழுதுக் கொண்டிருந்தாள்.
சரியாக செந்தாமரையுடன் உள்ளே நுழைந்த கரிகாலன் கண்டது என்னமோ கன்னம் வீங்கி அழுது கரைந்து கொண்டிருந்த பவித்ராவை தான். செந்தாமரையை கண்ட காமாட்சி, “ஐயோ தாமரை இந்த பாவி மக நம்ப குடும்ப மானத்தை வாங்க தான் பொறந்துருக்கா போல. இப்படி பண்ணிட்டாளே” என்று ஒப்பாரி வைத்தார்.
என்னவென்று புரியாமல் அன்னையை அணைத்தவர் சேதுவை பார்க்க, “காலேஜ்ல இருந்து இவளை கூட்டிட்டுவர போனேன் அக்கா. அங்க வாட்டசாட்டமா ஒரு பையன் இவளுக்கு ரோஜாப்பூ கொடுத்துட்டு இருக்கான். இவ பழகாமையா அத்தனை பேர் முன்னாடி பூ கொடுத்திருப்பான்.”
“அவனை சும்மாவா விட்ட?” என்ற செந்தாமரையிடம்,
“அதெப்படி சும்மா விடுவேன். அவனை துவச்சு தொங்கவிட்டுட்டு தான் வந்தேன். இங்க வந்து இவகிட்ட கேட்டா அப்படியெல்லாம் எதுவும் இல்லன்னு நீலிக்கண்ணீர் வடிக்கிறா”
“அவ சமஞ்ச அப்பவே பரிசம் போடுறேன்னு சொன்னேன். இந்த முத்துபய தான் படிக்கிற பொண்ணு படிச்சு முடிக்கட்டும்னு சொன்னான். இப்ப இவ எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாரு” என்று தலையில் அடித்துக்கொண்டவர், “பொண்ணு பொண்ணுன்னு செல்லம் கொடுத்து அவளுக்காக பார்த்து பார்த்து செஞ்சியே டா. பாரு உன் பொண்ணு என்ன பண்ணி வைச்சிருக்கான்னு” என்று மூக்கை சிந்தி அழுதார்.
“அண்ணே எங்க நம்ப சொல்லுறதை கேட்குது. கேட்க கூடாதவங்க பேச்சை கேட்டு ஆடுச்சு இப்போ அனுபவிக்குது” என்று கீதாவை பார்த்து பேசினார்.
அதுவரை அமைதியாக இருந்த செல்வி, “தினமும் அம்மாவும் பொண்ணும் குசுகுசுன்னு பேசிப்பாங்க. அப்படி என்ன தான் சொல்லிக் கொடுத்தாங்களோ?” என்று தன் பங்குக்கு அவரது வன்மத்தை கொட்டினார்.
பவித்ரா மீது தவிறிருக்காது என்று கரிகாலனுக்கு தோன்ற, “யாரோ ஒருத்தன் தானே கொடுத்தான். அதை அவ வாங்கல தானே. அப்போ தப்பு நம்ப பிள்ளை மேல இல்லை. அவ தப்பு பண்ணி இருப்பானு எனக்கு தோணல. எனக்கு பவி மேல நம்பிக்கை இருக்கு” என்று பேசினான்.
“டேய் உனக்கு ஒன்னும் தெரியாது டா. எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்னு தெரியாது” என்று அவனை அடக்கினார் செந்தாமரை. அதற்குமேல் ஏதாவது பேசினால் அது செந்தாமரைக்கு மரியதையாக இருக்காது என்பதால் அப்படியே அமைதி ஆகிவிட்டான்.
தனக்காக யாரும் பேசவில்லை தான் தவறு செய்திருக்க மாட்டேன் என்று யாரும் தனக்காக நிற்கவில்லை என்று மனதிற்குள் ஏங்கியவளுக்கு கரிகாலனின் பேச்சு சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் அதை யோசிக்காத மற்றவர்களை நினைத்து மனமெல்லாம் ரணமாகியது. இதற்குமேல் தான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள் என்று தெள்ளத்தெளிவாக புரிய மௌனமாக அழுது கரைந்தாள்.
தனக்காக நிற்க வேண்டிய பெற்றவர்களே அமைதியாக இருக்கும் போது யாரை குறைக் கூற முடியும் அவளால். ஆளாளுக்கு அவளை கரித்து கொட்ட ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத கீதா, “வாழ வேண்டிய பொண்ணுக்கு இப்படி சாபம் தராதிங்க” என்று வாயை மூடி அழுதார்.
“இந்த பகுமானதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. ஒழுங்கா புள்ளையை வளர்த்து இருந்தா இந்த பேச்சு தேவையா?” என்று அதற்கும் திட்டினார் காமாட்சி.
“புள்ளபூச்சி மாதிரி இருந்துட்டு என்ன போடு போடுறா பாரும்மா?” என்று தன் பங்குக்கு பேசிய செந்தாமரை,
“பொறந்தவன் மகளா போய் தொலைஞ்சுட்டா. எப்படியோ போய் தொலைன்னு விட முடியாதே. மத்தவங்க பொறந்தவனுங்க மாதிரி என்னால இருக்க முடியலம்மா” என்று கீதாவை வைத்து பேசினார்.
“நமக்கு அந்த சூதுவாதுல தெரியாது டி” என்று காமாட்சி அவருக்கு தூபம் போட்டார்.
“என்னைக்கா இருந்தாலும் இவ தான் என் மருமகன்னு காத்துட்டு இருக்கேன். இவ்வளவு ஆன பொறவும் இவளை இங்க விட்டு வைச்சா ரோட்டுல போறவன்லா வந்து நமக்கு புத்திமதி சொல்லுவானுங்க. அடுத்த முகூர்த்ததுல கரிகாலனுக்கும் இவளுக்கு கல்யாணத்தை முடிச்சரலாம்.
என் வீட்டுக்கு வந்ததும் நான் அவளை சரி பண்ணிக்கிறேன். என்ன தம்பி சொல்லுற?” என்று முத்துராமனிடம் கேட்டார்.
“நான் என்ன சொல்லுறது நீ என்ன சொன்னாலும் சரிக்கா. தேதி முடிவு பண்ணிட்டு சொல்லுக்கா” என்றவர் தளர்ந்த நடையோடு அறைக்குள் சென்றார். அவர் பின்னாடியே கீதா சென்றுவிட தனித்து விடப்பட்டாள் பவித்ரா. அவளை பார்த்த கரிகாலனுக்கு பாவமாக இருக்க, “நீயும் உள்ள போய் முகம் கழுவிட்டு துணி மாத்திட்டு வா பவி” என இயல்பாக கூறுவது போல அந்த கூட்டத்தில் இருந்து அவளை காப்பாற்றினான்.
அவனை நிமிர்ந்து பார்க்காமல் சென்றவளை காட்டிய செந்தாமரை, “பாத்தியாம்மா பவுச. கட்டிக்க போறவனு ஒரு மட்டுமரியாதை இருக்கா அவளுக்கு. அவன் பேசுறான் கண்டுக்காமல் போகுறா.”
“நீ தான் டி அவளை திருத்தி நல்லபடியாக பார்த்துக்கணும்” என்று அவர் கையை பிடித்து பேசினார் காமாட்சி.
