மொழி – 1
காரில் இருந்து மாலையும் கழுத்தமாக இறங்கியவன் காருக்குள் அமர்ந்திருந்த தன் நண்பர்களை திரும்பிப் பார்த்து, “டேய் நீங்க ரெண்டு பேரும் வரலையா?”.
அவனை திகைத்தப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த சாரதியும், சுதாகரும் ஒருசேர ‘இல்லை’ என்னும் விதமாக தலையசைத்தனர் எச்சிலை கூட்டி விழுங்கியவாறு.
அவர்களின் பார்வையிலும், செயலிலும் அலட்சியமாக தன் தோள்களை குலுக்கிய யஷ்வந்த், “ஓகே.. அப்புறம் உங்க இஷ்டம்” என்று விட்டு, “நீ வா” என்று அவளின் கையை பற்றி தன்னுடன் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
“இவன் என்னடா இப்படி எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கான்” என்று செல்லும் தன் நண்பனின் முதுகை திகைத்துப் பார்த்துக் கொண்டே சாரதி கூறவும்.
“எனக்கும் ஒன்னும் புரியல. எல்லாம் கனவு போலவே இருக்கு. ஆனா, இதுக்கு பின்னாடி நாமளும் இருக்கோம்னு தெரிஞ்சுச்சு, வாத்தி பெரம்பால நம்ம ரெண்டு பேரையும் வெளுத்துடுவாரு” என்று பயந்து கொண்டே கூறினான் சுதாகர்.
நடப்பது ஒன்றும் புரியாவிட்டாலும் திருதிருத்த விழிகளோடு அவனுடன் நடந்து சென்றாள் பவித்ர பாரிஜாதம்.
ஒரே நாளில் அவளின் வாழ்க்கை இப்படி மொத்தமாக தலைகீழாக மாறும் என்றெல்லாம் அவள் கனவிலும் நினைத்துப் பார்த்தது கிடையாது.
நேற்றோடு தன் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று எண்ணியவளுக்கு, இதோ இனி இது தான் உன் வாழ்க்கை என்பது போல் தன் கரம் கோர்த்து அவளுடன் பயணிக்க அழைத்து வந்து விட்டானே..
அவனையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டு அவனின் சொற்களை ஏதோ மந்திரம் போல் பின்பற்றிக் கொண்டிருந்தாள் பவித்ரா.
“அண்ணா வீட்ல தான் இருக்கான்னு நினைக்கிறேன். டோர் லாக் போடாம இருக்கு. உள்ள தான் இருப்பான்” என்று விட்டு அவன் அழைப்பு மணியை அழுத்தவும்.
இவளுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது. பலமுறை அவனிடம் கேட்டுவிட்ட கேள்வி தான். அவனுமே சலிக்காது அவளுக்கு பதில் கூறிவிட்டான். ஆனாலும், அவர்களின் வீட்டினரை பற்றி எண்ணும் பொழுது அவளையும் மீறிய ஒரு பயம் எழத்தான் செய்கிறது.
இப்படி திடீரென மாலையும் கழுத்துமாக அவர்களின் முன் சென்று நின்றால், அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசிக்கவே பவித்ராவிற்கு பயம் பிடித்துக் கொண்டது.
இத்தனை நேரம் இருந்த இலகுத்தன்மை மாறி ஒரு வித படபடப்புடன் இறுக்கமாக நின்றிருந்தாள்.
தன் கலைந்த சிகையை ஒற்றை கையால் சரி செய்து கொண்டே கொட்டாவி விட்டவாறு கதவை திறந்து இருந்தான் யஷ்வந்தின் மூத்த அண்ணன் சேரன்.
தன் தம்பி இப்படி ஒரு கோலத்தில் ஒரு பெண்ணுடன் வந்து வாசலில் நிற்பதை மீண்டும் ஒருமுறை தன் கண்களை கசக்கி விட்டு பார்த்தவன், “என்னடா!” என்றான் அதிர்ச்சியாக.
“என்னடான்னா கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கேன். போய் ஆரத்தி எடுத்துட்டு வா”.
“என்னது ஆரத்தியா!” என்று அதற்கும் வாயை பிளந்தான் சேரன்.
“நகரு ஒரு வேலையை சொன்னா செய்ய மாட்டியே.. அப்படியே மசமசன்னு நினைப்ப. ஆனா, அண்ணி ஒன்னு சொன்னா மட்டும் அடுத்த நிமிஷமே பாய்ஞ்சிக்கிட்டு போய் எல்லா வேலையும் முடிச்சிட்டு வருவ” என்று அவன் காதுகளில் விழும்படியே முணுமுணுப்பாக திட்டிவிட்டு வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவன்.
தனக்கு தெரிந்தவரை ஒரு தட்டில் தண்ணீரை ஊற்றி குங்குமத்தை அதில் கொட்டி ஒரு வெற்றிலையை அதில் வைத்தவன் கற்பூரத்தை ஏற்றி எடுத்துக்கொண்டு வந்தான்.
இன்னும் அதிர்ச்சி மாறாத முகத்தோடு பவித்திராவை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்த தன் அண்ணனின் கையில் அந்த தட்டை திணித்தவன், “ம்ம் சுத்து” என்றவாறு பவித்ராவின் அருகில் வந்து நின்று கொண்டான்.
“சாவடிச்சிடுவேன் டா உன்ன.. என்ன பண்ணிட்டு இருக்க நீ? பைத்தியம் புடிச்சிடுச்சா” என்று பற்களுக்கு இடையில் வார்த்தையை கடித்து துப்பினான் சேரன்.
அதற்குள் அவர்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்டின் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வெளியே வந்து எட்டிப் பார்க்கவும்.
“எல்லாரும் பாக்குறாங்க டா உள்ள போய் பேசிக்கலாம். முதல்ல ஆரத்தி எடு” என்று மீண்டும் அதிலேயே நின்றான் யஷ்வந்த்.
“செருப்பு பிஞ்சிடும். என்னால ஒன்னும் எடுக்க முடியாது” என்றவனின் கையில் இருந்த தட்டை வெடுக்கென்று பிடுங்கிய யஷ்வந்த், “நீ ஒன்னும் எடுத்து கிழிக்க தேவையில்ல. நானே எடுத்துக்குறேன் நீ போ” என்று திட்டிவிட்டு பவித்ராவிற்கு ஆரத்தியை சுற்றி இருந்தான்.
இருவருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தை மருண்ட விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனம் இப்பொழுது முற்றிலுமாக யஷ்வந்தின் புறம் திரும்பியது.
கண்களில் மெல்லிய நீர்படலம் ஊற்றெடுக்க. அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
“கரெக்டா பண்ணுறேனானு தெரியல. பட், இது ஓகே தான” என்கவும் அனிச்சையாய் அவளின் தலையும் ஆடியது.
அவளின் செயலில் அவனின் இதழ்கள் மெல்லிய புன்னகையை உதிர்க்க.
“என்ன யஷ்வந்த் இது?” என்றவாறு அவர்களின் அருகில் வந்தார் அவனின் தாய் பரமேஸ்வரியின் தோழி. அவர்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி சாரதா.
“ஆன்ட்டி நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இது என்னோட வைஃப்” என்று பவித்ராவையும் அவருக்கு அறிமுகம் செய்து வைக்க.
அவளோ அவரை நோக்கி தன் கரம் கூப்பி இருந்தாள்.
“ஆங்” என்று ஒன்றும் புரியாமல் விழித்தவர்.
“குடு நான் ஆரத்தி சுத்துறேன்” என்றவாறு அவனிடமிருந்த தட்டை தான் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
“என்ன இது இந்த பையன் இப்படி வந்து நிக்கிறான். இதெல்லாம் பரமுக்கு தெரியுமான்னு தெரியலையே” என்ற முணுமுணுப்போடு அவர் தட்டை அவர்களின் வீட்டில் வைத்துவிட்டு தங்கள் வீட்டிற்கு சென்று விட்டார்.
“என்னடா பண்ற நீ.. இதெல்லாம் என்ன விளையாட்டு?” என்று படபடப்பாக யஷ்வந்தை திட்டிக் கொண்டிருந்தான் சேரன்.
அந்நேரம் சரியாக கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்திருந்தாள் அவர்கள் வீட்டின் ஒரே பெண் வாரிசு. இருவருக்குமான தங்கை நித்யா.
“என்னண்ணா நீ சத்தம் போடுறது வெளியில வரைக்கும் கேட்குது. அக்கம் பக்கத்துல இருக்குறவங்க எல்லாம் நம்ம வீட்டை தான் எட்டி பார்த்துட்டு இருக்காங்க. கொஞ்சம் மெதுவா பேச மாட்டியா” என்று தன் மூத்த அண்ணனை திட்டிக்கொண்டே அவள் திரும்பவும்.
அப்பொழுது தான் தன் இளைய அண்ணன் மாலையும் கழுத்துமாக நிற்பதையே கவனித்தாள்.
“என்னண்ணா கல்யாணமா.. சொல்லவே இல்ல” என்று அவள் விளையாட்டாக கூறவும்.
“சர்ப்ரைஸ்!” என்றவனோ பக்கவாட்டாக நின்றிருந்த பவித்ராவின் கையை பிடித்து இழுத்து தன் அருகில் நிற்க வைத்துக் கொண்டு அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டவாறு, “என்னோட வைஃப் பவித்ர பாரிஜாதம்”.
அவனின் வார்த்தையில் இத்தனை நேரம் அவளின் முகத்தில் இருந்த விளையாட்டு ஓடிப் போய்விட அதிர்ந்து விழித்தாள்.
“உளறாத யாஷ்.. இது ஒன்னும் விளையாட்டு இல்ல. அம்மாவும் அப்பாவும் இப்ப வந்துடுவாங்க. ஒழுங்கா உண்மைய சொல்லு”.
“ஐயோ, நான் நிஜமா தான்டா சொல்றேன்” என்று அவர்களின் வாக்குவாதம் மேலும் சில நொடிகள் நீடிக்க.
அதற்குள் அவர்களின் தாயும் தந்தையும் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.
தன் மகன் கூறியதை கேட்டு அதிர்ச்சியோடு தன் தலையில் கையை வைத்தவாறு ஓரமாக அமர்ந்துவிட்டார் திருமூர்த்தி.
யஷ்வந்தை முறைத்து பார்த்த பரமேஸ்வரி, “ஏய் நித்யா எங்கையாவது கேமரா ஏதாவது செட் பண்ணி வச்சிருக்கானான்னு பாரு. இவனுக்கு இதே வேலையா போச்சு. பிராங்க் பண்றேன்னு உயிரை வாங்குறது” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே வேகமாக இவர்களின் வீட்டிற்குள் நுழைந்த சாரதா, “என்ன பரமு இதெல்லாம்.. நம்ம யாஷ் திடீர்னு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கான்” என்றதும் தான் பரமேஸ்வரியின் முகத்தில் தீவிரம் பரவியது.
இத்தனை நேரமும் தன் மகன் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டார். அவ்வப்பொழுது அவன் அப்படி பண்ணக்கூடிய ஆள் தான். எனவே, இதையும் அதே போல் நினைத்து விட்டார்.
தன் குடும்பத்தினர் அனைவரையும் அழுத்தமாக பார்த்த யஷ்வந்த் தீவிரமான குரலில், “இங்க பாருங்க நான் சொல்றது உண்மை.. உண்மை.. உண்மை.. நானும் இவளும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எனக்கு இவள ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அதான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். இனி இவ தான் உங்க மருமக” என்றவனின் கன்னத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் ஓங்கி அறைந்திருந்தார் பரமேஸ்வரி.
“என்னடா இதெல்லாம்.. உனக்கு விளையாட்டு விஷயமா போயிடுச்சா.. யாரு என்னன்னே தெரியாதவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எங்க முன்னாடியே இவ்வளவு திமிரா பேசுற யாரு இவ?”.
பவித்ராவிற்கு பரமேஸ்வரியின் இந்த அவதாரத்தில் வெடவெடத்து போய்விட்டது.
“ஏன் மா அவன் தான் பைத்தியக்காரத் தனமா பேசுறான்னா.. நீயும் இப்படி வந்து நிக்கிறியே.. உன் வீட்டில் இருக்குறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க. அவங்களுக்கெல்லாம் தெரிஞ்சா வருத்தப்பட மாட்டாங்க” என்று பவித்ராவையும் சாடினார் பரமேஸ்வரி.
“அம்மா அவளுக்கு அப்பா, அம்மா, குடும்பம்னு யாரும் கிடையாது. இனி எல்லாமே நாம தான்”.
“என்னது யாரும் கிடையாதா.. அப்ப எங்க இருந்து கூட்டிட்டு வந்த?” என்ற தன் அண்ணனை முறைத்தவன், “ம்ம்.. ஆசிரமத்திலிருந்து”.
“ஓ! அனாதை ஆசிரமத்துல இருக்குற பொண்ண பாவம் பார்த்து கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுக்குற அளவுக்கு நீ ஒன்னும் நல்லவன் இல்லையே டா” என்றவனின் பார்வை அப்பொழுதும் நம்பாத வகையில் தான் தன் தம்பியின் மேல் படிந்தது.
அவனின் அடுத்தடுத்த வார்த்தைகள் பெற்றோருக்கு இடியாய் இருந்தது.
மேலும், யஷ்வந்த் இப்படி எல்லாம் செய்யும் ஊதாறித் தனமான மகனும் கிடையாதே. எத்தனை பொறுப்பானவன் என்பது அவர்களுக்கும் தெரியுமே. விளையாட்டுத் தனமாக ஏதாவது அவ்வப்பொழுது செய்வான் தான்.
ஆனாலும், இது நாள் வரை தன் பெற்றோர் தலைகுனியும் விதமாக ஒரு காரியமும் செய்தது கிடையாது. ஆனால், இன்று இப்படி வந்து நிற்கவும் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
பவித்ரா எதுவுமே பேசவில்லை. அவளின் கண்கள் கலங்கி நீர் தேங்கி நின்றிருந்தது. ஆனால், அதை கீழே விழ விடாமல் போராடிக் கொண்டு நின்றிருந்தாள்.
இதற்காக தானே அவள் முன்னமே இதெல்லாம் வேண்டாம் என்று யஷ்வந்திடம் கூறியது.
ஆனாலும், அவனின் வார்த்தைகளில் இவளுக்குள்ளும் சிறு ஆசை எழுந்தது என்னவோ உண்மை தான்.
தன் வாழ்க்கையே கருகிவிட்டது என்று நினைத்தவளிடம், அப்படி அல்ல.. உன்னை வேரோடு பிடுங்கி ஒரு புதிய தோட்டத்தில் நட்டு வண்ண மலர்களோடு பூத்துக் குலுங்க வைக்கிறேன் என்பது போல் அவன் கூறும் பொழுது அவளுக்குள்ளும் ஆசை தோன்றியது என்னவோ உண்மை தான்.
ஆனாலும், இப்பொழுது தன் ஆசை தவறோ என்ற எண்ணம் அவளுக்குள் வலுப்பெற தொடங்கியது.
அவசரப்பட்டு விட்டோமோ என்றும் கூட தோன்ற. செய்வதறியாது படபடத்து போய் நின்று இருந்தாள்.
ஆனால், இவளைப் போல் எல்லாம் இல்லாமல் தான் எடுத்த முடிவில் அத்தனை திடமாகவும், நிதானமாகவும், உறுதியாகவும் நின்றான் யஷ்வந்த்.
காதல் என்னும் ஒற்றைப் புள்ளி யாரை எங்கு வேண்டுமானாலும் இழுத்துக்கட்டும். இதோ, சற்றும் சம்பந்தமே இல்லாமல் எங்கெங்கோ இருந்த இவர்கள் இருவரையும் திருமணம் என்ற பந்தத்திற்குள் கட்டி இருக்கிறதே இப்படி..
