அத்தியாயம்- 2
“அம்மா! எனக்கு அந்த டீச்சர் கிட்டதான்மா டான்ஸ் கத்துக்கணும். பிளீஸ்மா!” என்று குட்டி வாண்டு அப்சரா, தன் அம்மா கௌசல்யா என்கிற கௌசியை ஒருவழி படுத்திக் கொண்டிருந்தாள்.
”அப்பு குட்டி! எனக்கு அவங்க யாரு, என்னன்னு ஒண்ணுமே தெரியாதேடா. அப்பா கிட்ட விசாரிக்கச் சொன்னேன்” இரண்டு நாட்களாக இந்தச் சிறுமி வம்பு செய்து கொண்டிருக்கிறாள்.
”அம்மா, இந்தாங்க அவங்க நம்பர். என்னோட மேம் கிட்ட கேட்டு வாங்கிட்டு வந்தேன். இப்போவே பேசுங்கமா, பேசுங்க பேசுங்க!” என்று குட்டியின் இத்தனை ஆர்வத்தை இதுவரை பார்த்திராத கௌசி,
உடனே அந்த ஆசிரியையை அழைத்து பேசி, நாளை அவரைச் சந்திப்பதற்கான முன்ஏற்பாடுகளைச் செய்தாள்.
”கபில், நாளைக்கு உனக்கு ஏதும் வேலை இருக்கா? கொஞ்சம் வெளிய போகணும், கூட்டிட்டு போறியா?”
……
”உன்னோட மாமனா? அவசர வேலையாம்டா, வர முடியலன்னு சொல்லிட்டாரு…”
…….
”டேய் கலாய்க்காதடா! காலையில வீட்டுக்கு வந்துடு, ஒண்ணா போய்க்கலாம்.”
குச்சிப்புடி நாட்டியாலயம்
”மிஸ் கண்மணியைப் பார்க்கணும். நேத்து கால் பண்ணியிருந்தோம், இங்க தான் வரச் சொன்னாங்க.” என்று கௌசி, அப்சரா, கபில் மூவரும் கண்மணிக்காகக் காத்திருந்தனர். கௌசி, கபிலின் அக்கா.
கயல் விழிகளில் அழகாய் மை தீட்டி, காதுகளில் குட்டி ஜிமிக்கி அணிந்து, நடனத்திற்கு ஏற்றவாறு புடவை உடுத்தி, கைகளால் பாவனைகள் காட்டி அங்கிருந்த சிறுமிகளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தாள் கண்மணி.
தன் கண்களையே நம்ப முடியாமல் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் கபில்.
‘அன்னைக்கு பக்கா மாடர்னா இருந்தா, இன்னைக்கு டோட்டலா வேற மாதிரி இருக்கா! யார்ரா இந்தப் பொண்ணு?’ என மனதுக்குள் பேசிக்கொண்டிருந்தான்.
”டேய் கபில், அந்தப் பொண்ணு தான்டா. வா போய் பேசிட்டு வந்துடலாம்.”
”நான் இங்கேயே இருக்கேன், நீ போய் பேசிட்டு வா.”
சிறிது தூரத்தில் அவர்கள் கண்ணில் படும்படி அமர்ந்து கபில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளின் கை அசைவுகள், எதையோ மறுப்பது போன்ற பாவனை, மின்னல் புன்னகை, அப்சராவைக் கொஞ்சும் விதம் என, யாரென்று தெரியாத அந்தப் பெண்ணின் மீது அவனுக்கு இருந்த ஈர்ப்பு ஒரு படி அதிகமாகிக் கொண்டிருந்தது.
”அந்தப் பொண்ணு ரொம்ப ஸ்வீட் டா. ஒருவழியா வீட்டுக்கு வந்து சொல்லித் தர ஓகே சொல்லிட்டாங்க. நம்ம வீட்டுக்கும் அவங்க இடத்துக்கும் ரொம்ப தூரம்னு முதல்ல முடியாதுன்னு சொன்னாங்க, ஆனா அப்பு விடல… எப்படியோ சம்மதிக்க வச்சிட்டா!” கௌசிக்கும் கண்மணியைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது.
”ஓ… வீட்டுக்கே வராங்களா? ரைட் ரைட்! டெய்லியுமா? டைமிங் என்ன? பேமெண்ட் பேசிட்டியா?” என்று கபில் தன் ஆர்வத்தை மறைக்க நினைத்தான், ஆனால் முடியவில்லை.
”என்ன தம்பி, ரொம்ப ஆர்வமா கேக்குற போல இருக்கு? வாரத்துக்கு மூணு நாள் வருவாங்க. வீட்டுக்கே வர்றதால பேமெண்ட் கொஞ்சம் ஜாஸ்தி கேட்டாங்க, ஆனா அது நியாயமான விலை தான். நாளைல இருந்து வருவாங்க, இப்போ கிளம்பலாம்.” கபில் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தபடியே அங்கிருந்து கிளம்பினான்.
அதன்பின் கபில் தன் வேலையில் பிஸியாகிவிட, அக்கா வீட்டுப் பக்கம் செல்ல நேரமே கிடைக்கவில்லை.
ஓரிரு திங்கள் கடந்திருக்கும். வேலைப்பளு சற்று தளர்ந்த நிலையில், கண்மணி என்ற பெண்ணையே அவன் மறந்துவிட்டான் போலும்.
அப்போது தற்செயலாக அக்கா வீட்டில் மீண்டும் கண்மணி!
இன்று…
திருமணம் முடிந்து கபிலின் அறையில் இருவரும்…
”என்ன மேடம், கல்யாணத்தை நிறுத்திடுவீங்கன்னு பார்த்தேன். எந்த பிளானும் வொர்க் அவுட் ஆகல போல?”
”ம்ம்ச்ச்…”
”சரி விடு, நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்கு பேசிக்கலாம்” என்று விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டான் கபில்.
”சந்தோஷம்!” என்று பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவன் அருகில் அவளும் படுத்துக்கொண்டாள்.
”டேய்! என்ன வெண்ணெய்க்குடா மேல கையப் போடுற? நீ என்ன சொன்னாலும் அமைதியா இருக்கேன்றதுக்காக என்ன வேணா பண்ணுவியா? சென்ஸ் இருக்கா இல்லையா?”
”ஏய் போதும்! இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்படி குதிக்கிற? தூக்கத்துல கை பட்டிருக்கும், தட்டிவிட்டுட்டுத் தூங்க வேண்டியது தானே!” என தூக்கத்தில் விழித்த கடுப்பைக் காட்டினான் கபில்.
”மறுபடியும் கைய போட்ட, கால போட்டனு பக்கத்துல வந்த அப்புறம் பாரு, கீழ உருட்டி விட்ருவேன்! மரியாதையா தள்ளிப் படுத்துக்கோ.”
”சரிடி தூங்கு… ரொம்பத்தான்! எங்க கை பட்டா குறைஞ்சுடுவா!”
”ஆமாடா, பேப்பர் மூக்கா!”
“இவ பெரிய ரதி ரம்பா கம்முனு தூங்குவியா”..
இப்படியே அந்த எலியும் பூனையும் சண்டையுடன் இரவு முடிந்தது.
காலையில் கண் விழித்த கண்மணி கண்டது, தன்னையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த கபிலை தான்.
”குட் மார்னிங் கண்மணி! நைட் ரொம்ப டயர்டா இருந்த நீ, அதான் ஒண்ணுமே பேசத் தோணல. இப்போ நான் சொல்றதக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளு. ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாமலோ, கட்டாயப்படுத்தியோ கல்யாணம் பண்ணிக்கிற டைப் நான் இல்ல. உனக்கும் என்னைப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும் (அவள் கோபமாகப் பார்க்கவும்), உடனே சண்டைக்கு வராத! அதான் இந்த கல்யாணத்தை நிறுத்த நான் எந்த ஸ்டெப்பும் எடுக்கல.”
”கொஞ்சம் டைம் எடுத்துக்கோ, ஆனா எடுத்ததுக்கெல்லாம் போர்க்கொடி தூக்காத. ஜாலியா இரு. சின்னச் சின்ன சிரிப்பு, சீண்டல், தீண்டல் இதுக்கெல்லாம் தடா போடாத. அவ்வளவுதான், குளிச்சிட்டு கிளம்பு!” திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த கண்மணியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, அவள் சுதாரிக்கும் முன்பே ஓடிவிட்டான் கபில்.
”டேய்ய்… எருமை மாடே! கையில மாட்டுன… மவனே செத்தடா நீ!” என்று அவள் முகத்தில் யோசனை ரேகைகள் படர, அதை கலைப்பது போல் போன் அடித்தது.
ஸ்கிரீனில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் அவள் முகம் பிரகாசமானது.
”குட் மார்னிங் புதுப்பொண்ணு! எப்படி இருக்கீங்க?” என்று உற்சாகமாகக் கேட்டது மீனா. கண்மணியின் மற்றொரு கண்.
”நல்லாதான் இருக்கேன்…”
”அதைச் சொல்ல ஏன்டி இவ்வளவு சலிச்சுக்கிற?”
”அது இல்ல மீனு, ரெண்டு நாள்ல பெங்களூர்ல ஒரு அரங்கேற்றம் இருக்கு. நம்ம வேலையும் ஒரு பக்கம் இருக்கு. நாளைக்கே கிளம்பினாத்தான் சரியா வரும். இப்போ இருக்க நிலைமைக்கு எத்தனை பேர்கிட்ட பர்மிஷன் வாங்கணுமோ தெரியல, தலையே சுத்துது.”
”அட புதுப்பொண்ணே, நான் இங்கதானே இருக்கேன், பார்த்துக்கிறேன். நீ கபில்கிட்ட கேட்டுப் பாரு. எனக்கென்னவோ அவன் ஹெல்ப் பண்ணுவான்னு தோணுது. நீ பேசிப் பாரு கண்மணி.”
”அவனைப் பார்த்தாலே இரிட்டேட் ஆகுது. சரி, பார்த்துட்டு கூப்பிடுறேன்.”
மீனாவும் கண்மணியும் ஒரு நடனப் பள்ளியை நடத்துகின்றனர்.
”வாடா கண்மணி, சாமி கும்பிட்டு அந்த விளக்க ஏத்து. சமையல் ரெடி, இடியாப்பம் சாப்பிடுவ தானே? கபில் போன் பேச வெளிய போயிருக்கான், அவன் வரட்டுமா, பசிச்சா சாப்டுக்கலாம். காத்திருக்க வேண்டாம்” என்று வாஞ்சையுடன் அவள் தலையைத் தடவினார் மேகலை.
”இடியாப்பம் பிடிக்கும் மா… கபில்… ம்ம்… அவர் வரட்டும்மா , சேர்ந்து சாப்பிடுறோம் .” என்று பெரியவர்கள் முன் கவனமாக அவன் பெயரைத் தவிர்த்தாள்.
”இன்னைக்கு மதியம் உங்க வீட்டுக்குப் போயிட்டு வந்துடுங்க. அம்மா வீட்டுல ஏதும் எடுக்கணும்னா எடுத்துக்கோ. சாயங்காலம் சீக்கிரம் வந்துடுங்க, அப்போதான் பேக் பண்ண சரியா இருக்கும். நாளைக்கு காலைல சீக்கிரம் கிளம்பணும்ல?” என மருமகளிடம் படபடவென நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தார் மேகலை.
”எங்க போறோம் மா?”
”கபில் சொல்லலையா? பெங்களூருக்குத்தான்! எல்லாரும் போய் பால் காய்ச்சிட்டு, ரெண்டு நாள் உங்க கூட இருந்துட்டு வரோம். உங்க அம்மா அப்பாவும் வருவாங்கன்னு சொன்னாங்க. உனக்குத் தெரியாதா?”
”இல்ல மா… அது வந்து… சொன்னாரு மா, நான்தான் மறந்துட்டேன்.” (மனதுக்குள்: ‘எருமை மாடே! இருக்குடா உனக்கு இன்னைக்கு!’)
அதன் பின் சண்டை போடவும் நேரமில்லை, அவன் செய்த செயலுக்குக் காரணம் கேட்கவும் வழியில்லை. கபிலுடனான தனிமைக்காகக் காத்திருந்தாள் கண்மணி.
அந்த நாள்…
”ஹாய்ங்க… எப்படி இருக்கீங்க?” என்று கண்மணியை அக்கா வீட்டில் சற்றும் எதிர்பார்க்கவில்லை கபில். உற்சாகமாகவும், சற்று ஆரவாரமாகவும் அவளை வரவேற்றான்.
”ஹாய்… இதுக்கு முன்னாடி நாம மீட் பண்ணிருக்கோமா?” என கண்மணியின் குரலில் குழப்பமும், அறிமுகம் இல்லாதவனிடம் பேசும் ஒருவித அசௌகரியமும் தெரிந்தது.
அப்போதுதான் தன் ‘மரமண்டைக்கு’ உரைத்தது கபிலுக்கு ‘இதுவரை இவளிடம் நாம் நேரில் பேசியதே இல்லையே!’ என்று.
”அது… வந்து… எங்க அப்பு குட்டியோட ஃபேவரிட் டீச்சர் நீங்க தான்னு அவ அடிக்கடி சொல்லிட்டே இருப்பா. அதான் ஒரு ஃபுளோல (Flow) கேட்டுட்டேன்…” என்று மிகப்பச்சையாக அசடு வழிந்தான் கபில்.
”டேய் கபில்! வந்துட்டியா? ஒரு கேப் (Cab) புக் பண்ணுடா” என்று கௌசி அவர்கள் இருவருக்கும் இடையே வந்தாள்.
”எங்க போற கௌசி? நான் வேணா டிராப் பண்ணவா?”
”எனக்கில்லடா, டீச்சர் கார் ஏதோ மக்கர் பண்ணுது, ஸ்டார்ட் ஆகல…”
கண்மணி இவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
”அதுக்கு எதுக்கு கேப்? நானே டிராப் பண்றேனே!” இப்போது இரு பெண்களும் ஒருசேர கபிலை ஏறிட்டுப் பார்த்தனர்.
கபில் ஒரு நிமிடம் தன் கற்பனையில் கண்மணியுடன் பிரான்ஸ் நாட்டிற்கே சென்று டூயட் பாடத் தொடங்கிவிட்டான்.
”சரிடா கபில், வண்டிய எடு. சீக்கிரமா கண்மணியை வீட்டுல விட்டுட்டு வந்துடலாம்” என்றாள் கௌசி.
”எதுக்குக்கா வீணா உங்களுக்கு அலைச்சல்? நான் கேப்லயே போய்க்கிறேன்” என்று அக்கா, தம்பி இருவரையும் பார்த்தவாறு கூறினாள் கண்மணி.
“இதுல என்ன இருக்கு வா போகலாம். “
’டேய் கபிலா! மாரியாத்தா கண்ணைத் திறக்கலடா… என் தலையில மண்ணை அள்ளிப் போட்டுட்டா!’ என்று மைண்ட் வாய்ஸில் புலம்பிக்கொண்டே வண்டியை எடுத்தான்.
அவர்கள் பயணம் வரை கண்மணியை பார்ப்பதும், அவள் பார்த்ததும் பார்க்காததைப்போல் மறைப்பதும் என்று அந்த பயணம் முடிந்தது.
கபிலைச் சந்தித்ததிலிருந்து அவன் அவளை விட்டுச் செல்லும் வரை, அவனது கண்கள் தன் மீது ஒருவித ஆர்வத்தோடு படிவதை கண்மணி கவனித்தாள்.
அதை உறுதிப்படுத்துவது போல, அடுத்த நாளே ஒரு சம்பவம் நிகழும் என்று அவள் அப்போது எதிர்பார்க்கவில்லை.
