நதி ஓரிடத்தில் தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பதால் தான் அது தூய்மையாக இருக்கிறது, என்பது எவ்வளவு உண்மையோ அதுபோலவே,
ஏதோ ஒரு மாற்றங்கள் நிகழ்ந்து வலியை சுமந்து கொண்டே இருந்தால் தான் வாழ்க்கையை செதுக்க முடியும் என்பது எழுதப்படாத விதி…!
செதுக்கலுக்கு பயந்தால் கடைசி வரைக்கும் படிக் கல்லாகக் கூட முடியாது…!
உன்னை நீயே செதுக்கும் வித்தையை கற்று புதுப்பித்துக் கொண்டே இரு நிச்சயம் ஓர் நாளின் விடியல் உனதாகும்…!
உன்னில் சிறையாகிறேன் – 8
பணம் என்ற ஒரு பிணி, ஒரு குழந்தையின் உயிரைத் தீர்மானிக்கும் கொடூரமான இடத்திற்கு அருவியை கொண்டு வந்து நிறுத்தியிருந்தது, இதுதான் விதி என்பதா?
நின்றிருந்த அருவிக்கு உலகம் தலைகீழாகச் சுழல்வது போல் இருந்தது, ஒரு வாரம் கைவசம் இருக்கும் நேரம் வெறும் ஏழு நாட்கள் மட்டுமே,
”அருவி, கவலைப்படாதே… ஏதாவது ஒரு வழி பிறக்கும்” என்று தமிழினி தேற்ற முயன்றாள,
ஆனால், ஒரு கோடி ரூபாய் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது எட்ட முடியாத ஒரு சிகரம் என்பது இருவருக்குமே தெரியும்,
மறுநாள் விடியலிலேயே அருவி அவளிடம் எஞ்சியிருந்த ஒரே சொத்து, அவள் தாத்தா விட்டுச் சென்ற தற்போது அவள் வசிக்கும் வீடும்,
அதைச் சுற்றியிருந்த சிறிது நிலமும் தான், அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லிலும் அவளது சிறுவயது நினைவுகள் படிந்திருந்தன, ஆனால், யாழினியின் ஒரு சிறு புன்னகைக்காக அந்த முழு வீட்டையுமே தியாகம் செய்ய அவள் தயாராக இருந்தாள்,
தெரிந்த நபர்கள் மூலம் சில நிலத் தரகர்களை வரவழைத்தாள்,
”ஐயா, அவசரத் தேவை என் குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணனும், அதுக்காக இந்த வீட்டை விக்கலாம்னு இருக்கேன், ஒரு கோடி ரூபாய் வரை வரும்னு நினைக்கிறேன்” என்று நம்பிக்கையோடு சொன்னாள் அருவி,
வந்திருந்த தரகர்கள் எல்லாரும் அந்த வீட்டை ஏளனமாக ஒருமுறை பார்த்தனர்
“என்னம்மா நீ விவரம் தெரியாமப் பேசுற, இது பழைய வீடு, நிலமும் கொஞ்சமா தான் இருக்கு, இப்போ இருக்கிற மார்க்கெட் ரேட் படி பார்த்தா,
அதிகபட்சம் ஒரு இருபது அல்லது இருபத்தைந்து லட்சம் தேறும். அதுவே அதிகம்,” என்றார் ஒரு தரகர் வெற்றிலையைத் துப்பிக் கொண்டே.
அருவியின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது,
“இருபது லட்சமா? ஐயோ எனக்கு ஒரு கோடி வேணுமே கொஞ்சம் மனசாட்சியோட சொல்லுங்க இது எனக்கு இருந்த ஒரே வீடு” என்று கெஞ்சினாள்,
”வெறும் வீடு மட்டும் சோறு போடாதும்மா, காசு இருக்கிறவன் தான் இப்போ ராஜா, உனக்கு அவசரம்னா சொல்லு, பதினைஞ்சு லட்சத்துக்குக் கையெழுத்துப் போடு நாளைக்கே பணத்தைத் தர்றேன்” என்று இன்னொருவர் பேரம் பேசினார்,
விலை பேச வந்த ஒவ்வொருவரும் அருவியின் கண்ணீரை மதிக்கவில்லை, மாறாக அவளது அவசரத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே துடித்தனர்,
மாலையில் தளர்ந்த நடையோடு மருத்துவமனைக்குத் திரும்பிய அருவியைக் கண்டு தமிழினி அதிர்ச்சியடைந்தாள்,
”என்ன அருவி, என்னாச்சு? பணத்துக்கு ஏதாவது வழி கிடைச்சுதா” என்று தமிழினி ஆர்வமாக கேட்க,
”எல்லாரும் பிணத்தைக் கொத்தித் தின்ன காத்துக்கிட்டு இருக்கிற கழுகுங்க மாதிரி இருக்காங்க தமிழ், என் உயிர் மாதிரி நான் நினைச்ச வீட்டை வெறும் பதினைஞ்சு லட்சத்துக்குக் கேக்குறாங்க,
மீதி பணத்துக்கு நான் எங்க போவேன், என் யாழிக்கு இன்னும் ஆறு நாள் தான் டைம் இருக்கு, கடவுளே… என் பொண்ணை நான் இழந்துடுவேனா” என்று பித்துப் பிடித்தவள் போல் சுவற்றில் முட்டிக்கொண்டாள்,
தமிழினிக்குத் தன் இயலாமையை நினைத்து ஆத்திரம் வந்தது, அவளிடம் இருந்த சொற்பப் பணமும், நகைளும் சேர்த்துப் பார்த்தால் கூட சில லட்சங்களைத் தாண்டாது,
இப்படியே மேலும் ஐந்து நாட்களை கடத்தினர், தினமும் விடியலில் நம்பிக்கையோடு பணத்தேடி ஓடுவாள், இருள் சூழ்ந்ததும் இருளடைந்த முகத்துடன் மருத்துவ மனைக்கு திரும்புவாள்,
விடிய விடிய ஐசியு வாசல் கதவின் சிறு கண்ணாடி இடுக்கு வழியே குழந்தையை ஏக்கமாக பார்த்து விடியலை நோக்கி நகர்வாள்,
தமிழினியின் நிலையும் மோசம் தான், தன்னால் தன் உயிர் தோழிக்கு முடிந்த அளவு பணத்தை திரட்டி கொடுத்தாள், ஆனால் அதை எல்லாம் அருவி மறுத்து விட்டாள்,
கணவனை பிரிந்து ஒரு பெண் பிள்ளையோடு ஆதரவற்றுக் கிடப்பவளிடம் இருப்பதை பறித்துக் கொள்ள மனம் ஒப்பாமல் தமிழினியிடமே மறுத்துப் பேசினாள்,
ஆறாம் நாள் இரவு இருவரும் இனி செய்வதற்கு ஒன்றும் இல்லையே என ஒருவரை ஒருவர் பார்த்து அழுது கொண்டிருந்தனர், அந்த இருட்டில், அருவியின் மனதில் ஒரு விசித்திரமான எண்ணம் ஓடியது,
தன் மானம், கௌரவம், வாழ்க்கை என அனைத்தையும் விடத் தன் மகளின் உயிர் பெரிது என்று அவளது தாய்மை அவளிடம் ஒரு முடிவை எடுக்கச் சொல்லியது. அந்த முடிவு அவளை எங்குக் கொண்டு செல்லும் என்று அவளுக்குத் தெரியாது,
விடியும் வரை தனக்கு பொறுமை இல்லை என்று விடிந்தும் விடியாத பொழுதில் தமிழினியைப் பார்த்தாள், அவளோ உறக்கம் தொலைத்த விழிகளோடு ஐசியு கதவையே வெறித்துக் கொண்டிருந்தாள்,
“தமிழ்” என்று சுருதியே இல்லாமல் அழைத்தாள் மகிழருவி, தமிழினி திரும்பி அவளைப் பார்க்க,
“நீ யாழி கூடவே இரு, நான் போயிட்டு பணத்தோட வர்றேன்” என்றவளின் குரலில் தெரிந்த நம்பிக்கையைக் கண்டு தமிழினிக்கே ஆச்சர்யமாக இருந்தது,
“என்ன சொல்ற அருவி, நிஜமாவா இன்னைக்கு பணம் கிடைச்சிருமா, அது எப்படி நீ இவ்ளோ உறுதியா சொல்ற, ஒன்னு இரண்டு லட்சம் இல்ல, ஒரு கோடி,
நம்மகிட்ட இருக்கிறதே இந்த ஒரு நாள் மட்டும் தான், ஒரு கோடியை ஒரே நாள்ல எப்படி புரட்ட முடியும்” என்று அதிர்ச்சியாக கேட்டாள் தமிழினி,
“அதைப் பத்தி எதுவும் கேக்காத தமிழ், நீ குழந்தையை மட்டும் பார்த்துக்க நான் சீக்கிரமா வந்திடறேன்,
ஆனா வரும் போது பணத்தோட வரேன், அப்படி இல்லன்னா பொணமாத்தான் வருவேன்” என்று சொல்லும் போதே வெடித்து அழுதாள் மகிழருவி,
என்ன சொல்லியும் அவளைத் தேற்ற முடியாமல் திணறினாள் தமிழ்,
“அந்த கடவுள் இருக்கானே அவன் என் வாழ்க்கையை சிதைக்கனும்னு முடிவு பண்ணிட்டான் அதான் என்னை இப்படி கொஞ்ச கொஞ்சமா கொன்னுக்கிட்டு இருக்கான்,
தாத்தா பாட்டி, அம்மா அப்பான்னு கூட்டுக் குடும்பமா சந்தோஷத்துக்கு பஞ்சமே இல்லாம இருந்தேன், அதை எல்லாம் ஒரே நாள்ல பறிச்சுட்டு என்னை மட்டும் அநாதையா விட்டுட்டான்,
எல்லாரும் போனாலும் என் குழந்தை இருக்காளேன்னு உசிரை கைல புடிச்சுட்டு இருந்தா, இப்ப அவளுக்கும் கொடிய நோயைக் குடுத்து எங்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறான்,
இப்ப அந்த ஆளுக்கு என்ன வேணும் என் உயிர் தான அத தான் குடுத்துடலாம்னு முடிவே பண்ணிட்டேன், என் குழந்தை சாகறதை கையாளாம வேடிக்கை பார்க்கிறதை விட அவளுக்கு முதல்ல நானே சாகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவள் குரலில் விரக்தியின் உச்சம் அப்பட்டமாக தெரிந்தது,
“ஏய் ஏதாவது முட்டாள் தனமா முடிவெடுக்காத அருவி, பிரச்சனையைக் குடுத்தது கடவுள் தான்னா, அந்த பிரச்சனைய தீர்க்கவும் நிச்சயமா ஒரு வழி வச்சிருப்பார் நம்பு அருவி” என்றாள் தமிழினி
“நம்புறேன், நம்பிதானே ஆகனும் வேற வழி” என்று கண்களை அழுத்த துடைத்தவள்,
“அதே நம்பிக்கையோட போறேன், பணம் கிடைக்குமான்னு தெரியல, இது தான் என்னோட கடைசி முயற்சி, வரேன் தமிழ்” என்று கூறிவிட்டு விறுவிறுவென நடந்தாள்,
அதிகாலைப் பனியின் குளிரிலும் அவள் மனம் உலைகலனென கொதித்துக் கொண்டிருந்தது, பனியையும் அதன் குளிரையும் அவள் உணரும் நிலையில் இல்லை,
அவள் அவ்வளவு வேகமாக வந்த இடம் அவள் வீடு, வீட்டின் கதவுகளை திறந்து உள்ளே வந்தவள், தன்னுடைய பழைய கைப்பையைத் தேடினாள், அது வீட்டின் பரன்மேல் கிடந்தது,
அதைத் தேடிக் கண்டு பிடித்தவள், அதற்குள் எதையோ தீவிரமாக தேடினாள், சில நிமிடங்களிலேயே தேடிய பொருள் கிடைக்க அதனை கையில் எடுத்துப் பார்த்தாள்,
அதில் “திரு . திருவாசகம்” என்ற பெயர் கொட்டை எழுத்தில் பதிந்திருந்தது, அதற்கு கீழ் விலாசமும் போன் நம்பரும் இருக்க,
தன்னுடைய போனை எடுத்து அதிலிருந்த நம்பருக்கு போன் செய்தாள், ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் போன் செய்து விட்டாள் தான் ஆனால் போனின் ரிங் ஓசை கேட்க கேட்க அவளின் இதயத் துடிப்பு வேகமெடுத்தது,
முதல் முறையாக அவளுக்கு பனியிலும் வியர்த்துக் கொட்டியது, அடுத்த நொடியே இதயம் நின்று விடுமோ எனும் அளவு சத்தமாக துடித்தது,
“ஹலோ” என்று போனின் ஓசை அடங்குவதற்குள் மிகவும் வயதான ஒரு குரல் எதிர்முனையில் கேட்டது,
அதற்கு அவள் பதிலளிக்கவில்லை,
“ஹலோ, ஆர் யூ ஹியர்” என்று மறுபடியும் அதே குரல் கேட்க உடனே இணைப்பைத் துண்டித்தாள்,
மூச்சு விடவே சிரமமாக இருந்தது, பணத்திற்காக தான் எதையும் செய்யுமளவு மாறிவிட்டோமோ? என்று தனக்குத் தானே கேட்டு விட்டாள்,
காலம் யாரையும் வெவ்வேறு பாதையில் மாற்றி விடும், வேறு வழியின்றி காலத்தின் பாதையில் பயணித்தே ஆக வேண்டிய கட்டாயம், வெற்றுக் காகிதம் தான் ஒரு உயிரைக் காக்கும் என்றால் அந்த காகிதத்தை தேடித் தானே ஆக வேண்டும்,
என்று அவள் அவளையே சமாதானப் படுத்தி, மீண்டும் அதே எண்ணிற்கு அழைக்க போனில் நம்பரை பார்த்தாள், அந்த நொடியே அதே எண்ணியிருந்து அழைப்பு வந்தது,
இம்முறை தனக்குள் நடக்கும் பயத்தை புறம் தள்ளி விட்டு தானே யுத்த கலத்தில் இறங்கினாள், இனி போர் முடியும் வரை தயக்கம் பயம் நடுக்கம் எதுவும் தேவையில்லை என்று முடிவெடுத்தவள் போனை இயக்கி காதில் வைத்து,
“ஹலோ, நான் அருவி பேசுறேன்” என்று கூறினாள் அடுத்த கணம் எதிர்முனையில் இருந்தவருக்கு உற்சாகமானது,
“நீ நிச்சயமா கூப்பிடுவேன்னு எதிர்பார்த்தேன், இப்ப நடந்திருச்சு எனக்கு ரொம்ப சந்தோஷம், உன்னை இப்ப உடனே நேர்ல பார்க்கனும்னு இருக்கு” என்றார்,
“நானே வர்றேன், ஆனா…” என்று இழுத்தாள்,
“ஆனா, என்ன?” என்று அவர் கேட்க,
“எனக்கு அவசரமா ஒரு கோடி ரூபாய் பணம் வேணும், அது கிடைச்சா, நீங்க சொன்னா எல்லா கண்டிஷனும் எனக்கும் ஓகே” என்றாள்
“ரொம்ப சந்தோஷம், ஒரு கோடி என்ன ஒரு கோடி, இந்த திருவாசகம் வீட்டு மகாராணிக்கு எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது,
நீயா வந்தா முறையா இருக்காது, நான் வந்து கூப்பிட்டு வர்றது தான் முறை, இன்னும் கொஞ்ச நேரத்துல உன் எதிர்ல இருப்பேன்” என்று கூறி போனை கட் செய்தார் திருவாசகம்,
உடனே அருவியின் கண்கள் உடைப்பெடுத்தது, உயிரான மகளா, தன்மானமா என்ற நிலை வரும் போது தன்மானம் தான் தலைகுனிந்து நிற்கும்,
மகிழருவி தன் தன்மானத்தை அல்ல அவள் தன்னையே அடமானம் வைக்க போகிறாள், அவள் பெற்றெடுக்காத பிள்ளைக்காக தன்னையே இழுக்க முடிவு செய்து விட்டாள்
அவளின் இந்த முடிவின் முடிவில் அவள் பெறப்போவது என்ன?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
