அத்தியாயம் 1

அத்தியாயம் – 1

“வர்மா கோல்டு பேலஸ்… தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகளின் கலை வர்ணம்!” என அந்த ஸ்தாபதனத்தின் பெயரும், அதுக்கு கீழே உள்ளடக்க வரியுமாய் பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகள் வெயிலின் எதிரொளிப்பாக தங்க நிறத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்தது.

அது மட்டுமா அந்த பெரிய பார்க்கிங்கின் இரு புற பாக்கவாட்டிலும் வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரம் ஒருத்தி தங்க, வைர நகைகளோடு வெவ்வேறு போசில் நின்றும், அமர்ந்தும் என இவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள் வேறு.

இப்படியான அந்த நகைக்கடையின் முன்பக்கம் நின்று வாயை பிளந்து அவற்றை எல்லாம் பார்த்திருந்தாள் பானு என்கிற பானுமதி.

“சூப்பரா இருக்குல்ல?” அருகில் இருந்தவள் வாய் விட்டு கேட்டு விட்டாள். இவளோ வாயடைத்து நிற்கிறாள்.

“ஹா…ஹான்ன்ன்…” என்றாள் பானு தன்னை அந்த அதிசயத்தில் இருந்து மீட்டுக் கொண்டு.

“எவ்ளோ பெரிய கடை. சும்மா வெளியவே ஜொலிக்குதே. உள்ள தங்கம், வைரம்னு எப்படி ஜொலிக்குமோ! இங்கயா பானு நாம வேலை பார்க்க போறோம்? கொஞ்சம் என்னை கிள்ளேன்… கனவோனு சந்தேகமா இருக்கு!” சவிதா அடுத்து அடுத்து என பேசிக் கொண்டே இருக்க.

பானுவின் ஆச்சர்ய உணர்வுகளும் சற்று தரையிறங்கியது போலும்.

“ஆமாண்டி. எனக்கும் கூட இந்த ஆச்சர்யம் அதிசயம் எல்லாம் விட்டுப் போகவே ஒரு நாள் ஆகும் போல!” என்றாள் பானு.

“அடடடா! இப்போ எதுக்கு இரண்டு பேரும் இத்தனை அலப்பறை செய்றீங்க? நாம என்ன இந்த நகை கடைக்கே முதலாளியா இல்லை உள்ள இருக்க நகை எல்லாம் நம்மோடதா? நாமளே இங்க மத்தவங்க நகையை வாங்கி மாட்டிக்க, எடுத்து காட்டும் வேலைக்கு தான் வந்திருக்கோம்!” என்றாள் வாணி.

அவள் சொன்ன நிதர்சனம் புரிந்தாலும், “இருந்தாலும் எல்லாம் ஒரு ஆவல் தான் வாணி. இத்தனை நகை நட்டை என்ன கொஞ்சம் பிடிப்பான தங்கத்தை உரிமையா பார்த்து, தொட்டு பார்க்கும் நிலையில் கூட‌ நாம இல்லையே. ஆனால் இனி அது முடியுமே. அப்புறம் என்ன நாமும் இந்த சம்பள உயர்வை வச்சு நகை சீட்டு எதாவது போட்டு, வீட்டுக்கு ஒன்னு இரண்டு கிராம் தங்கத்தை வாங்கி சேர்க்க வேண்டியது தான்!” என்றாள் பானு.

“சரியா போச்சு. இப்போக்கூட உனக்காக யோசிக்க மாட்டியா பானு நீ?” என கேட்டு நின்றாள் சவிதா.

“அதானே. இது எல்லாம் திருத்தாத கேஸ்!” என்றாள் வாணி.

“அடியேய் என் தங்கச்சிக்கு உண்டாயிருக்கா. அவளுக்கு குழந்தை பிறந்தா நகை நட்டுனு ஒரு அரை பவுனாவது கண்ணில் காட்டினா தான் அவ புருஷன் வீட்டில் சும்மா இருப்பாங்கன்னு என் அம்மா ஒரே புலம்பல்!” என்றாள் பானு.

“முதல்ல அக்கா. இப்போ தங்கச்சி. அப்போ எப்போ தான் உனக்குனு உன் அம்மா யோசிக்க போறாங்களாம்?” என சவிதா கேட்ட போது, முகம் சோர்ந்து விட்டது பானுவுக்கு.

“முதல்ல இவளை இவளுக்காக யோசிக்க சொல்லு. நமக்காக நாமளே பேசாட்டி இந்த காலத்தில் ஒன்னும் நடக்காது. நான் எல்லாம் பாரு வீட்டில் என்ன பிரச்சனைனாலும் இவ்வளவு தான்னு கட் அன்ட் ரைட்டா இருந்தேன். அதனால தான் எனக்கு கல்யாணம் ஆச்சு. இல்லைனா இவளை போல ஆகியிருப்பேன்!” என்று விட்டு நகை கடை காவலாளி வேறு இவர்களை பரிசோதிக்க அழைக்கவும் முன்னே நடந்து போனாள் வாணி.

அவளுக்கு என்ன தான் வாய் துடுக்கு என்றாலும் அவள் சொல்வதில் உள்ள உண்மை சவிதாவுக்கும் புரிந்தது.

தனக்கு கீழ் தம்பி என்பதால் அவன் கல்லூரி படித்து முடிக்கும் வரை காத்திருந்தவள், தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த ஜவுளிக்கடை சூப்பர்வைசர் ஒருவனையே காதலித்து மணமுடித்துக் கொண்டிருந்தாள் சவிதாவும்.

பின்ன வீட்டிற்காக வயிற்று பிழைப்புக்காக உழைத்தாலும் மணமுடித்து வாழும் வயது தானே இந்த பெண்களுக்கும்.

ஆனால் பானு? முன்னே ஒன்று பின்னே ஒன்று என முன்னுக்கு பின் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள ஏழை வீட்டில் பிறந்தவள்.

தந்தை இவளின் பதினைந்து வயதிலேயே மாரடைப்பில் இறந்து விட. இருபது வயது குமரிப்பெண்ணாக அக்காள் இருந்தாள். இவளுக்கு பின்னே பத்து வயதில் விரைவில் பருவத்தை எட்டும் இடத்தில் தங்கை. இருவருக்கும் இடையே இவள்!

இவர்கள் அன்னை விசாலத்திற்கு அத்தனை வாய் துடுக்கும் இல்லை. வேலையில் வேகமும் இல்லை. அவரே மணமாகி பத்தாண்டு கழித்து தான் முதல் மகளை வரமாக பெற்றிருந்தார். என்ன அதன் பின் ஏன் பெற்றுக் கொண்டே போனாரோ என்பது தான் அவர் பிள்ளைகளின் குற்றச்சாட்டு.

விளைவாக அறுபதி வயதில் தந்தை இயற்கை எய்திவிட்டார். ஐம்பதி வயதில் மூன்று பிள்ளைகளை பெற்று வளர்த்துக் கொண்டிருந்த விசாலத்தால், பத்து பாத்திரம் தேய்க்கும் வேலைகளை இழுத்து பிடித்து செய்து, குடும்பத்தை முழுதாக கவனிக்கவே முடியவில்லை. இதில் எங்கிருந்து பிள்ளைகளை கரையேற்றுவது?

அவர்களாக ஏறிக் கொண்டால் தான் உண்டு என்ற நிலை விரைவாகவே வந்துவிட்டிருந்தது. அப்படியே பானுவின் அக்காள் வாசுகி தன் வாழ்வை நிர்ணயித்தும் கொண்டிருந்தாள்‌.

தங்கள் தெரு முனையில் மாவு மிஷின் வைத்திருந்த கணேசனோடு, அவள் அவ்வபோது மாவு அறைக்க செல்கையில் பழக்கமாகி போயிருந்தது. அதே பழக்கம் வீட்டில் அரிசி ஊறாத போதும் மனதில் ஊறிக் கொண்டே இருந்து விட்டது.

கணேசனும் ஒன்னும் இவர்கள் தகுதிக்கு சாதாரணமானவன் அல்ல. தெரு மெயினில் அவனின் ஒரு அடுக்கு மாடி வீடு. மாவு மிஷினோடு சேர்த்து இன்னும் இரண்டு கடைகளே கீழே வாடகைக்கு விட்டிருந்தான். மேலே அளந்து கட்டிய ஒரு ஹாலும், கிட்சனும், படுக்கையறையும் கொண்ட ஒன் பிஹெச்கே வீடு.

மழை பெய்தால் ஒழுகும் ஓட்டு வீட்டில் இருந்த வாசுகிக்கு அது பெரும் வாழ்வாக தெரிந்தது‌. அவனுக்கு தன்னை கட்டி வைக்க தன் அன்னை சம்மதித்தாலும், அவன் வீட்டில் உள்ளோர் சம்மதிப்பது சாத்தியமே இல்லை என தோன்றியது.

ஆதலால் ஊரே உறங்கும் வேளை உறங்காது அவனோடு ஓடி விட்டாள். அடுத்த நாள் விடியலில் இருவர் வீட்டிலும் பிள்ளைகளை காணவில்லை என தேடிக் கொண்டிருக்க.

மாலையும் கழுத்துமாக வந்து இறங்கினர் இருவரும். தங்கைகள் இருவருக்கும் ஊமைக்கொட்டானாக இருந்த அக்காவின் இச்செயலில் பெரும் அதிர்ச்சி. விசாலத்திற்கோ தலையில் இடி விழுந்த உணர்வு தான்.

அன்று என்ன தான் விசாலம் மகளை விலக்கமாத்தால் அடி வெளுத்து விட்டிருந்தாலும், அதன் பின்னர் அவள் கருவுற்றிருக்கையில் ஏற்றுக் கொள்ளவே செய்திருந்தார். பின்ன அது தானே பாசம்!

மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்க வக்கற்று போனதால் தான் மகள் இவ்வாறு செய்து விட்டாள் என்று ஊரார் பேச. விசாலத்திற்கு ஊர் வாயை அடைக்க அவளுக்கு தங்களால் முடிந்த விமர்சையில் வளைகாப்பு நடத்தி பார்த்திட ஆசை என்கிற பெயரில் பேராசை எழுந்தது.

விரலுக்கேற்ற வீக்கம் என்பதை மறந்து லட்சம் ரூபாய்க்கு வட்டி கடனை வாங்கி மகளுக்கும், மருமகனுக்கும் கண்ணில் தெரியுமளவு சில சொர்ப்ப சவர நகையை சீராக செய்து, இரு பக்க உறவினர் கூட்டத்தை அழைத்து விருந்து சமைத்து போட்டு அவர்களை வாயை அடைத்தார்.

இந்த கடனை யாரடைப்பது என தான் அப்போது பன்னிரண்டாம் வகுப்பின் முடிவில் இருந்த பானுவுக்கு விளங்கவில்லை‌. தங்கை பிரிந்தா அவள் பாட்டிற்கு விளையாட்டு பிள்ளையாய் இருந்தாள்.

வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்கு வந்த வாசுகியால் செலவு கூடிக் கொண்டே போனது. நான்கு வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த விசாலத்திற்கு வீட்டையும் பார்க்க முடியவில்லை‌. கடனுக்கு வட்டியையும் கட்ட முடியவில்லை.

மூத்த மகளின் பிள்ளை பேறு காலத்தில் கடன் காரன் வந்து கண்டபடி பேசி நிற்க. பிறந்து பதினாறு நாளே ஆன மகனோடு கணவன் வீடே தேவலை! என புகுந்த வீட்டிற்கே ஓடி விட்டாள் அவள்.

ஆனால் பெயர் சூட்டு, காது குத்து என ஒவ்வொன்றிருக்கும் அவளுக்கு முறை செய்யும் இவர்களின் முறை மட்டும் வந்து கொண்டே இருந்தது.

விசாலம் கையை பிசைந்து கொண்டு தன் தோளுக்கு மீறி வளர்ந்து நின்ற பானுமதியை தான் அன்று பார்த்திருந்தார்.

அப்போதே பள்ளி படிப்பை முடித்திருந்தவளுக்கு பெற்றவள் சொல்லாமலே அவள் திணறல் புரியும்.

இதில் வாய் விட்டு அவராகவே, “சத்யாக்கா வேலைக்கு போற ஜவுளிக்கடைல பன்னிரண்டாவது படிச்ச பிள்ளையா இருந்தா பில் போட வேணும் கேட்கிறாங்களாம் பாப்பா. நீ மட்டும் வேலைக்கு போனா வீட்டுக்கு உதவியா இருக்கும்.

அடுத்து உனக்கும் கல்யாணம் காட்சினு செய்யனுமில்ல. நான் எல்லாம் யாருக்கும் சுமையா இருக்க மாட்டேன்மா. உங்க அப்பாவை போல நிம்மதியா தான் கண்ணை மூடனும். என்ன அதுக்கு முன்ன உனக்கும், உன் தங்கச்சிக்கும் ஒரு நல்லது பண்ணி பார்க்கணும்…” என்றார் தேங்கிய விழி நீரோடு.

“நான் வேலைக்கே போறேன்மா!” என அன்று உரைத்த பானுமதிக்கு அதை தவிர வேறு மட்டும் இருந்ததா என்ன? ஆனால் தன் அன்னை தன்னையும் கருத்தில் வைத்து தானே சொல்கிறார் என்றே வீட்டிற்காக பதினெட்டில் ஓடத்துவங்கினாள்.

அடுத்து அவள் தங்கை பிருந்தா கல்லூரி படிப்பை முடித்து, வேலைக்கு செல்ல வேண்டிய நேரத்தில் காதல் என வீட்டை விட்டு ஓடாது வந்து நின்று இன்று அவள் மணமாகி, கர்ப்பவதியாகி நிற்கும் வரை ஓடிக் கொண்டிருக்கிறாள்‌.

“உனக்கு முன்ன பானு இருக்கா. நீ ஒரு வேலை வெட்டிக்கு போய் ஓரளவு பணம் சேர்த்த பிறகு கரை சேரக்கூடாதா?” விசாலம் கேட்ட போதும், “என்னமா நீங்க? நான் ஒன்னும் பெரியக்கா போல குடும்ப மானத்தை வாங்கிட்டு ஓடி போயிடலையே. நீங்களே பார்க்குறீங்கல்ல அவர் எவ்ளோ படிச்சவர் பொறுப்பில் உள்ளவர்னு. நாளை பின்ன இப்படி ஒரு வரனை எனக்கு உங்களால கொண்டு வர முடியுமா? எனக்கு இந்த கல்யாணத்தை மட்டும் செய்து வைங்க‌. வேற எதுவுமே வேண்டாம்!” என பிருந்தா கை காட்டியவன் இவளோடு தட்டச்சு பயில வந்து, இப்போது அரசு உத்தியோகத்தில் டைப்பிஸ்ட் பணியில் அமர்ந்திருக்கும் மகேஷ்.

“பார்த்தியாடி இவ வாயை. இனியும் நீ உஷாரா இல்லாட்டி உன்னையே தூக்கி சாப்பிட்டு போயிடுவா!” நொடித்துக் கொண்டு சொல்லி போனாள் வாசுகி‌.

“இத்தனை நாள் நீ மட்டும் என்ன பண்ணிட்டு இருக்கியாம்!” என்றாள் பிருந்தா.

யார் என்ன பேசி என்ன பயன்? என நடு மகளை கைகளை பிசைந்து கொண்டு பார்த்தார் விசாலம்.

“அந்த பையன் வீட்ல பொண்ணு பார்க்கிறாங்களாம் பானு… நல்ல இடமா வேற இருக்குது… பத்து பவுனு போல தான் கேட்கிறாங்க. ஐந்து இப்போ ஐந்து அப்புறம்னா கூட சரியாம். என்ன செய்யறது கழுதை ஆசைப்பட்டு தொலைச்சுட்டாளே! உன்னை போல வெளியுலகத்துல பிழைச்சுக்கவும் தெரியாது அவளுக்கு…” என இழுவையாக பேசிய அன்னையால் தங்கையின் திருமணத்திற்கு விழி மூடி சம்மதத்தை தந்திருத்தாள் பானு.

அவள் சம்மதிக்காவிடிலும் அது நடந்து விட்டிருக்கும் என்பது தனி கதை. என்ன செய்ய பானு தன் திருமணத்திற்கு என சேர்த்து வைத்த மூன்றரை பவுன் தங்கமும் இப்போது தங்கைக்கு செல்ல வேண்டுமே. மீத ஒன்றரை பவுனுக்கும், பிறகு பிருந்தாவை சென்று சேர வேண்டிய ஐந்து பவுனுக்கும் இவள் பொறுப்பேற்க வேண்டுமே. அதற்காகவே இந்த சம்மதமோ!

“நடு பொண்ணு இருக்கையில கடைசிக்கு செய்றியே விசாலம். நாளை பின்ன அவளை யாரு கட்டுவா. என்ன குறையோ ஏதோனு பேச்சு வராதா?” உற்றார், உறவினர் கேட்ட போது எல்லாம் விசாவத்திற்கு இளைய மகளை பகட்டாக காணவே நேரம் போதவில்லை. பின்ன கவர்மன்ட் உத்யோகஸ்தன் மாமியார் ஆயிற்றே.

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்!” என பேச்சை முடித்து விட்டவர் இன்று வரை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார் இளைய மகளை.

பிருந்தா சொன்ன போல மணமுடிந்ததோடு ஒதுங்கி விடவில்லை. அவளுக்கு போட வேண்டிய ஐந்து பவுனை இரண்டாண்டுக்குள் பானு போட்டு விடுவதற்குள் நான்கு முறை பிறந்த வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள்.

இதில் அதன் பிறகும் மூன்றாண்டாக பிள்ளை இல்லாததற்கு வேறு மருத்துவம் பார்க்கும் நிலை.

“ஏதோ நீர்க்கட்டியாம். என்ன ஏதுனு பார்த்து அனுப்பி விடுங்கனு எங்கம்மா சொல்ல சொன்னாங்க!” மகேஷ் ஆறு மாதத்திற்கு முன் மனைவியை மீண்டும் பிறந்த வீட்டில் விட்டு சென்று விட்டான்.

அதற்கும் மருத்துவம் பார்த்து அவளை மீண்டும் புகுந்த வீட்டில் சொல்லி விட்டு வர இப்போது நல்ல செய்தி. இனி அவளுக்கு வளைகாப்பு நடத்தி, பேறுகாலம் பார்த்து அனுப்பவே விசாலத்திற்கு நேரம் போதுமானதாக இருக்கும். இடை இடையே பானுவுக்கு எதாவது வரன் உண்டா எனவும் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்று அமையுமோ!

ஆனால் அவள் தங்கையின் பிறக்க போகும் பிள்ளைக்கு வெள்ளியில் கொடியும், கைக்கு காப்பும் கண்ணுக்கு பிடித்தாற் போல போட வேண்டும் என மகளிடம் அப்ளிகேஷன் போட்டு விட்டாகிற்று.

“ஏன்மா நானே இத்தனை வருஷம் அந்த ஜவுளிக்கடைல மாரடிச்சுட்டு இப்போ அவங்களே நகைக்கடையும் திறக்கவும் அங்க மாறி போறேன். இனி தான் எனக்கு வேலை செட் ஆகணும். அங்க போல இங்க வேலை இருக்காது. எப்படினு போய் பார்த்தா தான் தெரியும்!” தன் கவலைகளை பானு சொல்லும் போது மட்டும் விசாலத்திற்கு அது சிறியாதகவே தோன்றும் போல.

“உனக்கென்னடி நீ கெட்டிக்காரி சமாளிச்சிடுவ! ஆனால் உன் அக்காவும், தங்கச்சியும் உன்னை போல இல்லையே. இந்த ஒன்னை பார்த்து முடிச்சுட்டா உன் கடமை முடிஞ்சது பானு. பார்த்து அனுப்பிடலாம். அடுத்து உன் கல்யாணம் தானே!” இருபத்து ஒன்பது வயதில் காலடி எடுத்து வைத்த மகளை கண்டு சொல்லிக் கொண்டிருந்த விசாலத்திற்கே அவள் திரும்பி தன்னை கண்ட பார்வையில் மனம் உறுத்தி விட்டது போல. தலை தாழ்ந்து கொண்டார்.

இவளும் காலை நேரம் தன் மீதே கோபமும், ஆற்றாமையும் அதிகம் பொங்கிக் கொண்டு வர அவர் செய்து வைத்திருந்த பொங்கலை கூட உண்ணாது டிபன் பாக்சில் மதியத்திற்கு கட்டிக் கொண்டு வேலைக்கு வந்து விட்டாள்.

வந்தவள் அந்த பிரம்மாண்ட நகைக்கடை நோக்கி சவிதாவோடு நகர.

அந்த பிரபல நட்சத்திரம் சேலையில் கைக்கூப்பி நிற்க. அவள் அருகே விளம்பர பேனரில் கோட் சூட் சகிதம் மிடுக்காக நின்றிருந்த ஆடவன் மீது பானுவின் பார்வையும் கவனமும் பதிந்தது.

“சவிதா இந்த சார் ஆள் வாட்ட சாட்டமா அழகா இருக்காரில்ல? ஆனால் என்ன முகத்தில் சிரிப்பு தான் இல்லை!” என்றாள்.

“ஆமா இந்த கடை மாடல் போல. ஆனால் சோடா புட்டி மாடலா இல்லை இருக்காரு. நம்ம ஓனருக்கு கண்ணு சரியில்லை போல அதான் ஒரு நல்ல மாடலைக்கூட போடலை…” என்றாள் சவிதா.

“சோடாபுட்டியா? அதுக்கு என்ன? நல்லா தான் இருக்கார்!” என பானு சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் அருகில் வந்த வாணி, “சோடா புட்டி, நல்லா இருக்கார்னு நீங்க மாத்தி மாத்தி சொல்றவர் தான் நம்ம ஓனர்! பார்த்து பேசுங்க லூசுங்களா. இல்லைனா வந்த அன்னிக்கே வேலை போயிடும்!” என்றாள் வந்தவள்.

“எதுதுது… ஓனரா?” என்று சவிதாவும், “நம்ம ஜவுளிக்கடை ஓனர் சபாபதி ஐயா தம்பி சூர்யா சாரா இது?” என பானுவும் அதிர்ந்தனர்.

“ஆமா அந்த சூர்ய வர்மனே இந்த வர்மா தானாம். நம்ம ஜவுளிக்கடையை விட இங்க கெடுக்குப்பிடியும் நகைக்கடை என்பதால ஜாஸ்தியாம். கடைக்குள்ள நாம உண்டு நம்ம வேலை உண்டுனு இருக்கணுமாம். செக்யூரிட்டி இப்போ தான் சொன்னாப்ல. இதுல உள்ள பாலிஷா இரண்டு மேடமும், அமுல் பேபி மாதிரி ஒரு சிடு மூஞ்சி சாரும் இருக்காங்க. அதான் சொல்றேன் இரண்டு பேரும் பார்த்து பேசுங்க!” என்று விட்டு தன்னை அழைக்கவும் உள்ளே போனாள் வாணி.

அவளை தொடர்ந்து பதட்ட முகமாக இத்தனை ஆண்டு இந்த சூர்ய வர்மன் அண்ணன் சபாபதியின் ஜவுளி மாளிகையே கதி என பணிபுரிந்த பானுமதி, இனி இந்த தங்கமாளிகை தான் தன் வாழ்வாதாரத்தின் கதியோ என அதனுள் காலடி எடுத்து வைத்தாள்.

துளி புன்னகையின்றி பேன்ட் பாக்கெட்டுக்குள் கை நுழைத்து நின்ற, அந்த கண்ணாடிக்காரனின் கண்களை ஊடுருவி பார்த்துக் கொண்டே அவன் சாம்ரஜியத்திற்குள் அன்று நுழைந்தவள், அவனை நேரில் தான் காணப்போகும் அவல நிலையை துளியும் அப்போது நினைத்து பார்த்திருக்கவில்லை.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page