அத்தியாயம் 2

அத்தியாயம் 2

“ராஜேந்திர நிவாஸ்…” என்ற பெயர் பலகையை தாங்கியிருந்தது அந்த மாளிகை.

கருப்பு நிற அகன்ற கேட்டை தாண்டி உள்ளே நுழைந்தால் வழி நெடுகவும் ஒரு புறம் தோட்டமும், மறுபுறம் புது புது மாடல் கார்களும், பைக்குகளும் நிற்கும் பார்க்கிங் ஏரியா. அங்கு இல்லாத உயர் ரக கார்களும், பைக்குகளுமே இல்லை எனலாம்.

அது கடந்து அந்த மாளிகை வாயிலை அடைந்தால் வெளியே இருந்து பார்க்கவே நவீன கட்டிடக்கலையும், பாரம்பரிய செழுமையும் கலந்து தெரியும்.

முகப்பில் ஒங்கு தாங்கான பில்லர் தூண்கள் வெளிப்புறத்தை தாங்கியிருக்க. தேக்கு மரத்தினாலான பெரிய வாயில் கதவை தாண்டிட தரை முழுவதும் இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலிய மார்பிள் கற்கள் நுழைவோரை கண்டு மினுங்கும்.

வரவேற்பறையில் நுழைந்து வீட்டை சுற்றி பார்த்தால் எங்கு பார்த்தாலும் கண்ணாடிகளால் ஆன விலையுயர் கலைப் பொருட்கள். அமர அமைந்திருக்கும் சோஃபாக்களில் கூட செழுமையே ஓங்கி இருக்கும்.

இப்படி அந்த வீட்டின் அமைப்பே, அங்கே வசிப்பவர்களின் அந்தஸ்தை உரக்கச் சொல்லி விடும்.

அவ்வீட்டின் மூத்தவர் தான் வர்ணம் ஜவுளி மாளிகை என்ற ஸ்தாபனத்தை உருவாக்கிய ராஜேந்திரன். அவர் மனைவி கற்பகம் அம்மாள் சில ஆண்டுகள் முன் இயற்கை எய்தியிருக்க.

வயது மூப்பில் உள்ள அவரின் ஜவுளி மாளிகைகள் யாவும் தற்சமயம் அவரின் மூத்த மகன் சபாபதி கைவசம்.

எழுபத்தி ஐந்து வயதை எட்டி விட்டவர் தொழிலை விட்டு கடந்த சில ஆண்டுகளாக எட்ட நிற்கிறார். அதனால் பொறுப்பை ஏற்றுக் கொண்டோர் தான் அவரின் மகன்கள் சபாபதியும், சூர்யவர்மனும்.

பொறுப்பேற்றுக் கொண்ட பதினைந்து ஆண்டுகளில் அண்ணன் தம்பிக்குள் எந்த வெளிப்படையான மோதலும் இல்லை. ஆனால் ஏழு ஆண்டுக்கு முன்னர் வர்மா தன் பங்கை பிரித்துக் கொண்டு, தனி தொழில் துவங்கப்போவதாக கூறி விட்டான்.

தம்பியின் வேகத்திலும், விவேகத்திலும் அதீத ஆதாயத்தை சந்தித்து வந்த சபாபதிக்கு இதில் துளி நாட்டமில்லை. அதுவும் அவன் தங்க வியாபரத்தில் கால் பதிக்கும் போது தானும் அவனோடு அதில் இணைந்திருக்கவே விரும்பினார். என்ன வர்மா அதற்கு சம்மதிக்கவில்லையே!

ராஜேந்திரனுக்கு இளைய மகனின் வளர்ச்சியைக் கண்டு அத்தனை பெருமை. அதனால் அவனை இவ்விடயத்தில் கட்டிப்போட அவருக்கு விருப்பம் என்ற ஒன்று துளியும் இல்லை.

அவனை அவன் பங்கை பிரித்து தந்து தொழில் தொடங்க அனுமதித்து விட்டார். இல்லை என்றாலும் அவன் பிடிவாதத்திற்கு துவங்கி விடுவான் என்றும் அறிவார் அவர்.

அவர் சம்மதித்து இவன் முதல் நகைக்கடையை விமர்சையாக திறந்தது தான். அடுத்தடுத்த ஆண்டுகள் வெற்றி பாதையில் பயணித்து, ஆண்டுக்கு ஒரு கிளை என ஏழு‌ கிளைகளை திறந்து விட்டான் அந்த தொழிலதிபன்.

இப்படியான சிறப்பு மிக்க தொழிலதிபன் சூர்யவர்மனுக்கு இப்போது வயது நாற்பத்தி இரண்டு. ஆயினும் இன்னும் அவனுக்கு மணமாகவில்லை என்றால் கேட்போருக்கு வியப்பும், கன்னி பெண்களுக்கு விருப்பும் ஏற்படுவது வழக்கம்.

நாற்பதுகளின் முதிர்ச்சியும், ஜிம்மில் பராமரித்த கட்டுக்கோப்பான உடலும் என திடகாத்திர தோற்றத்தை கொண்டவன் அவன். நரைத்த முடிகளை அவன் கேசத்தில் தேடித்தான் கண்டறிய வேண்டும்.

எப்போதும் கச்சிதமாக அயர்ன் செய்யப்பட்ட காட்டன் சட்டைகளும், அதற்கு மேல் பிராண்டட் சூட்களில் வளம்‌ வரும் தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை ஊர் உலகிற்கு விற்பவன் உடலில் பொட்டு தங்கம் இருக்காது‌. அவன் கையில் உள்ள விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தை தவிர!

தினமும் காலை எழுந்து அவன் ஜிம் முடித்துவிட்டு ஒரு கையில் பிளாக் காபி, மறு கையில் அன்றைய ஷேர் மார்க்கெட் நிலவரத்தைப் பார்க்கும் டேபோடு வரவேற்பறையில் வந்தமர்வது வழக்கம். 

அவன் அண்ணன் சபாபதி. அண்ணி ரேணுகா. அவர்கள் பிள்ளைகள் ஜிஷ்ணு மற்றும் ஆதவி. அவன் தங்கை வினோதினி. அவள் கணவன் சாகர் என மற்றவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் வர்மா நுழைந்ததும் அந்த இடத்தில் நிறைந்திருந்த பேச்சுக்கள்‌ நின்று அவ்விடம் நிசப்தமாகும். அவன் பேச்சு குறைவாகவும், கட்டளைகளே அதிகமாகவும் இருக்கும்.

அவன் அண்ணி ரேணுகாவிற்கு அவ்வீட்டின் மூத்தவரான தன் கணவனிடம் இருந்து அவனுக்கு செல்லும் அதிகாரத்தை மெல்ல மெல்ல மீட்டு தங்கள் பக்கம் கொண்டு வர வேண்டும் என்ற துடிப்பு.

அது நடக்காதோ என்ற பயம் தோன்றினாலும் இனி எல்லாம் அவன் மணமுடிக்க வாய்ப்பில்லை. வாரிசு என்றால் தன் மகனும், மகளும் தானே! என்ற நினைப்பில் வன்மத்தை மறைத்து கொண்டிருந்தார்.

அவர்கள் பிள்ளைகள் ஜிஷ்ணு மற்றும் ஆதவி‌. ஜிஷ்ணு கல்லூரி படிப்பில் உள்ளான். ஆதவி பள்ளி படிப்பின் இறுதியில் உள்ளாள். இருவரும் வசதியான சூழலில் வளர்ந்த இன்றைய தலைமுறைப் பிள்ளைகள். சித்தப்பா சூர்யா என்றால் அவர்களுக்கு ஒரு பக்கம் பிரியம், மறுபக்கம் நடுக்கம்.

அவன் தங்கை வினோதினி தான் அவ்வீட்டின் முந்தைய தலைமுறையின் செல்ல மகள். இன்னமும் சூர்யாவிற்கு செல்லம் என சொல்லி கொள்பவள்.

அவள் எதை கேட்டாலும் சூர்யா மறுக்க மாட்டான். ஆனால் அவளின் எல்லை சூர்யாவின் தொழிலுக்கும், சுய வாழ்க்கைக்கும் வெளியே வரை என நின்றுவிடும்.

அவள் கணவன் சாகர் அந்த வீட்டோடு மாப்பிள்ளை. ஜவுளி தொழிலில் சபாபதிக்கு உதவியாக இருக்கிறான். 

வர்மாவின் நிழலில் வாழ்வது அவனுக்கு இன்னும் கெளரவம் என்ற எண்ணம் இருந்தாலும், சூர்யாவின் கண்டிப்பு அவனுக்கு சரி வராத ஒன்று. 

ஒரு நூலிழை வேலையில் பிசகினாலும் வர்மா சொந்தம் என்றெல்லாம் பார்க்க மாட்டானே. ஆதலால் மனைவி தனக்காக பரிந்துரை செய்து பார்த்து வர்மா மறுத்த போதும், சாகர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எப்படியேனும் இப்போது வரை தனிக்கட்டை தானே‌ அவன். நாளை பின்ன பங்கென்றால் தன் மனைவிக்கும் தான் என உழைக்காது ஊதியம் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறான் அவனும்.

இது தான் அவர்கள் குடும்பத்தின் நிலை. இதோ இன்றும் வர்மா அந்த காலை நேரம் ஜிம்மில் வொர்க் அவுட் என்கிற பெயரில் வியர்வை மழையில் நனைந்து கொண்டிருக்க.

“என்ன அண்ணி அப்பா வர்மா அண்ணாவுக்கு உங்க சைடுல பொண்ணு பார்க்க சொன்னாரே. என்னாச்சு?” காபியை மிடறு விழுங்கியபடி கேட்டு வைத்தாள் வினோதினி.

“எங்க…” என சலிப்பாக தலையை இட வலமாக ஆட்டி வைத்தார் ரேணுகா.

“ஏன் அண்ணி உங்க சொந்தத்தில் பொண்ணே இல்லையா? இல்லை என் அண்ணனுக்கு ஏத்த பொண்ணு இல்லையா? இல்லை உங்களுக்கு தான் அண்ணாவுக்கு கல்யாணம் ஆவதில் விருப்பம் இல்லையா?” வினோதினி ராஜேந்திரன் முன்பே கேட்டு வைக்கவும் யாருக்கும் தெரியாமல் பல்லை கடித்தார் ரேணுகா.

“அதெல்லாம் நிறையவே இருக்காங்க வினோ. ஆனால் என் பக்கம் கல்யாணத்துக்கு ரெடியா இருக்கும் எல்லா பொண்ணும் உன் சின்ன அண்ணன் ஆல்ரெடி ரிஜக்ட் பண்ண பொண்ணுங்க தான். இனி பொண்ணுக்கு நான் எங்க போக?” என கேட்டு வைத்தார் நாத்தனாரை.

“ஹோ…” என்றவள் அதற்கு மேல் ஒன்றும் கூறவில்லையே.

“ஏன் வினோ மாமா உன்னையும் தான் உன் ஃபிரண்ட்ஸ், உன் ஹஸப்ண்ட் ரிலேட்டில் சைடில் யாராவது பெண் இருந்தா உன் பாசக்கார அண்ணனுக்கு பார்த்து வைக்கும்படி சொன்னார். இத்தனைக்கும் நீ சொன்னா உன்‌ அண்ணன் வர்மா தான் மறுத்து பேசவே மாட்டாரே. நீயே உன் அண்ணன் வாழ்க்கை பொறுப்பை ஏத்துக்கலாமே!”

பாசக்கார அண்ணன்… என்றும் நீ சொன்னா உன் அண்ணன் வர்மா பறேத்து பேசவே மாட்டாரே… என்றும் தன் அண்ணி அழுத்தி கூறியதும் கடுப்பாகி விட்டாள் வினோதினி.

“என் அண்ணா நான் சொன்னா கேட்பார் தான். ஆனாலும் பாருங்க என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஆல்ரெடி மேரீட். சாகர் சைடில் உள்ளவங்க எல்லாம் வர்மா அண்ணா ஸ்டேட்டஸ்க்கும், டேஸ்ட்டுக்கும் சரி வராது. இல்லையாங்க?” அவள் கேளவும் கொஞ்சமும் தயங்காது தலையாட்டினான் சாகர்.

“என்னோடு கிளப் வரும் ஒருத்தி தான் சிங்கிள். பட் அவளும் டிவர்ஸி!” என்றாள் வினோதினி.

“டிவர்ஸ்டா இருந்தால் என்ன? நம்ம வர்மாவும் ஏற்கனவே ரிலேஷன்ஷிப்பில் இருந்தவன் தானே!” என்றார் சபாபதி.

என்ன பேசுகிறார் இந்த மனிதர் என ஒரு கணம் விழி விரித்து தன் கோபத்தை வெளிப்படுத்திய ரேணுகா, கணவரின் பார்வை அவர் தந்தையிடமே இருக்கவும் அமைதியானார்.

“என்னப்பா நான் சொல்றது சரி தானே? நம்ம வர்மாவும் ஒன்னும் சொந்த வாழ்க்கையில் பர்ஃபெக்ட் இல்லை‌. ஏற்கனவே இரண்டு பேரோட ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தவன். சில மாடல்ஸோடு கிசுகிசுக்கப் பட்டவன் தானே. நமக்கே அவன் பர்ஸ்னல் தெரியலை. பட் பிசினஸை வளர்த்ததில் வயசும் வளர்ந்திடுச்சு. இன்னும் சில வருஷத்தில் என் பையன், பொண்ணுக்கே வரன் பார்க்க ஆரம்பிச்சிடுவோம் போல!” என்றார் சபாபதி.

“சொந்த வாழ்க்கையில் பர்ஃபெக்ட்டா இருக்கணும்னு தான் அந்த இரண்டு ரிலேஷன்ஷிப்பையும் கட் பண்ணேன்!” அந்நேரம் ஒலித்த வர்மாவின் கர்ஜனை குரலில் சபாபதியின் சப்தமும் அடங்கி விட்டிருந்தது.

குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தார் ரேணுகா. வர்மா தான் திடமாக கையில் கண்ணாடி குவலையில் கருப்பு நிற தேநீரோடு நின்றிருந்தான்.

“உங்க அண்ணா ஒன்னும் தப்பா சொல்லிடலையே!” என்று விட்டு முகத்தை திருப்பிக் கொண்டார் ரேணுகா.

“உங்க வார்த்தை உங்களுக்கு சரியா இருந்தால் என் வாழ்க்கை எனக்கு சரி!” என்றவன் சிம்ம தோரணையோடு தனது இருக்கையில் வந்தமர்ந்தான்.

அவன்‌ பார்வை தேநீரை பருகிக் கொண்டே தன் வெள்ளை மீசையை நீவி விட்டபடி சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் தந்தை மீது பதிந்தது.

“அண்ணா ஷீலா இஸ் ரியலி குட் கேரக்டர்.‌ உன் ரேஞ்சுக்கு சூப்பரா செட் ஆவா. ஐ திங்க் யூ ஷூட் மீட் ஹெர் ஒன்ஸ்!” என்றாள் வினோதினி.

“உனக்கு பிடிச்சா உன்னோடு மெயின்ட்யின் பண்ணிக்கோ. என்கிட்ட கூட கொண்டு வராதே!” திட்ட வட்டமாக சொல்லி விட்டான் வர்மா.

அதில் அவள் முகம் வாடிப்போக. எப்படியோ அவன் எதற்கும் பிடி தரப்போவதில்லை என ரேணுகாவிற்கு உள்ளுக்குள் குளுகுளுப்பாக இருந்தது.

“அப்போ என்ன தான் வர்மா செய்யலாம்னு இருக்க? நானும் தோளை மீறி வளர்ந்து, ஊரே பார்க்க நீ தொழில் செய்யும் போது உன்னை பிரமித்து பார்த்து நின்னுட்டேன். ஆனால் இப்போ ஒரு அப்பாவா எனக்கும் உன் வாழ்க்கைய பத்தின கவலை இருக்கும் இல்லையா?” என கேட்டு நின்றார் ராஜேந்திரன்.

“அதான் இரண்டு ரிலேஷன்ஷிப். அதுக்கும் மேலான கிசுகிசுப்புகள்ல வாழ்ந்துட்டு இருக்கேனே. அப்புறம் எதுக்கு தனியா கல்யாணம் வேற!” அலட்சியமாக சொல்லி விட்டு, மணியை பார்த்தபடி எழுந்தான் அவன்.

“உனக்குனு வாரிசு?” அவர் கேட்கவும் அனைவர் பார்வையும் வர்மாவை தான் கூர்ந்து நோக்கியது. அவன் சொல்லப்போகும் பதிலூக்காக கிட்டத்தட்ட அனைவரும் காத்திருந்தனர்.

“குழந்தை பெத்துக்க எதுக்கு கல்யாணம்?” கேட்டு விட்டு போனவன் என்ன பேசி விட்டு போகிறான் என அங்கிருந்தோருக்கு எல்லாம் பாதி புரிந்தும், பாதி புரியவில்லை என்ற நிலை தான்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page