வெளியே மழை ஓய்ந்திருந்தாலும், கூரையிலிருந்து சொட்டும் நீர்த்துளிகள் சீரான தாளத்தில் தரையில் மோதிக் கொண்டிருந்தன. வீட்டிற்குள் ஒருவிதமான கனத்த அமைதி நிலவியது.
டைனிங் டேபிளுக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் நிற விளக்கு, அந்த அறை முழுவதையும் மங்கலான வெளிச்சத்தில் நனைத்திருந்தது. அந்த ஒளியில் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த தட்டுகளும், பாத்திரங்களும் நீளமான நிழல்களைச் சுவரில் வரைந்து கொண்டிருந்தன.
சுவரில் இருந்த கடிகாரத்தின் முட்கள் நகரும் சத்தம் அந்த நிசப்தத்தில் ஒரு இரைச்சலைப் போலக் கேட்டது. கமலாவின் வளையல்கள் தட்டில் மோதும் மெல்லிய ஒலியும், கரண்டிகள் பாத்திரங்களுடன் மோதும் ஒலியும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.
பவித்ரா தன் தட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பசி இல்லை. அவளது மனம் முழுவதும் பெங்களூர் பயணத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.
“நா… கேட்டதுக்கு… யாரும்… எந்த பதிலும் சொல்லலையே… நா பெங்களூரு போகலாமா..?” பவித்ராவின் தயக்கமான குரல் அந்த மெல்லிய மௌனத்தைக் கிழித்தது.
“நாங்க என்ன சொல்லணும்னு எதிர்பார்க்குற…? இப்போதான் ஆக்சிடேண்ட் ஆகி ரெக்கவர் ஆகிருக்க… அதுக்குள்ள பெங்களூர்க்கு படிக்க போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்… அதெல்லாம் போகக்கூடாது…” என்று சற்று கோவமாக கூறினான் கௌதம்.
“நா பிஸிக்கலா தான் ரெக்கவர் ஆகியிருக்கே… மெண்டல்லா இன்னும் ஆகல… எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்… இங்க எனக்கு இறுக்கமா ஃபீல் ஆகுது… கொஞ்சம் வெளில போய் இருந்தா பெட்டரா இருக்கும்னு தோணுது… அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டிங்கிற…?” என்று அதே கோபத்துடன் கேட்டாள் பவித்ரா.
“உனக்கு மெமரி லாஸ் ஆனதால அப்படி ஃபீல் ஆகும்… கொஞ்ச நாள் போச்சுன்னா எல்லாம் சரியாகிடும்… அதுக்கு ஏன் ஊர் விட்டு ஊர் போகணும்ன்னு சொல்ற… அதெல்லாம் போக வேண்டாம்….” என்று திட்டவட்டமாக கெளதம் கூறிவிட,
மேலும் கோவமான பவித்ரா, “நா போய்தான் ஆவேன்… என்ன தடுக்க நீ யாரு…?” என்று கேட்டாள்.
டைனிங் டேபிளை ஓங்கி தட்டியவன், “நா உன் அண்ணே… நா சொன்னா நீ கேட்டுத்தான் ஆகணும்…” என்று கூறினான்.
கட்டுக்கடங்காமல் மல்லுக்கு நின்ற கௌதமை அடக்கியது அவனது தந்தை பாலமுருகனின் குரல்.
“கெளதம்… எதுக்காக இப்போ இவ்ளோ கோவப்பட்ர…? அமைதியா இரு…”
தந்தையின் குரலை கேட்டதும் அமைதியாக மீண்டும் தன் நாற்காலியில் அமர்ந்தான் கெளதம். தன் பிள்ளைகள் சண்டையிட்டுக் கொள்வதை கண்ட கமலா கலங்கிப் போனாள்.
சில வினாடிகள் நீடித்த அந்த மௌனத்தை கிழித்தது பாலமுருகனின் அந்த உத்தரவு.
“பவிமா… நீ பெங்களூரு போ… தாராளமா படி… உன்ன அண்ணே கூட்டிட்டு போய் ஹாஸ்டல் விடுவான்..” என்று கூற பவித்ராவின் முகம் மலர்ந்தது.
தன் தந்தையின் கைகளை பற்றிக் கொண்டு, “தேங்க்ஸ் ப்பா…” என்று கூறினாள்.
இதை கேட்டுக் கோவமான கெளதம், தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தள்ளிவிட்டு எழுந்து சென்றான்.
அவன் சென்ற திசையை வெறித்துப்பார்த்தாள் பவித்ரா. அவள் மனம் முழுவதும் பல கேள்விகள் மீண்டும் நிழலாட ஆரம்பித்தன.
‘ஏன் கெளதம் நா வீட்ட விட்டு வெளில போகணும்னு சொன்னதும் இவ்ளோ கோவப்பட்றான்…? இவன் குணமே இதுதானா… இல்ல இதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கா….?’ இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்தவளின் எண்ணம் அவள் தந்தையின் வருடலால் தடைப்பட்டது.
தன் மகளின் தலையை அன்போடு வருடிய பாலமுருகன், “பவிமா… நீ போய் தூங்கு… இன்னும் ரெண்டு நாள்ல… நீ பெங்களூரு போறதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் அப்பா பண்றே… சரியா…?” என்று கேட்க, சரி என்று தலையசைத்த பவித்ரா, தன் அறைக்கு சென்றாள்.
அந்த சமயம் கவலையுடன் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த கமலா, “என்னங்க..! பவித்ரா எப்படி தனியா போய் சமாளிப்பா…? அவ…” என்று ஏதோக் கூற வர, “அதெல்லாம் சமாளிப்பா… நீ சாம்பார ஊத்து…” என்று கூறியவாறு தன் உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் பாலமுருகன்.
கவலை சற்றும் குறையாத விழிகளுடன், “அப்போ கெளதம்… அவன என்ன சொல்லி. சரி கட்டுறது…?” என்று கேட்க, “அவன் கிட்ட நா பேசி புரிய வைக்கிறேன்…” என்று கூறியவர், தன் உணவை சாப்பிட்டு விட்டு கை கழுவினார் பாலமுருகன்.
பின்பு கோவமாக தனது அறைக்கு சென்ற கௌதமை தேடிச் சென்றார் பாலமுருகன்.
தனது அறையில் கடும் கோவத்துடன் நின்றிருந்த கெளதம் தன் தந்தையை பார்த்ததும் வெடிக்க ஆரம்பித்தான்.
“என்னப்பா நீங்க…? உங்க ஆச மக என்ன கேட்டாலும் செய்வீங்களா…? இப்படி செல்லம் கொடுத்துதான்… இப்போ இந்த நிலைமை நமக்கு…”என்று அவன் கூறியதும் கோவமானார் பாலமுருகன்.
“இந்த பிரச்சனைக்கு காரணம் நா கொடுத்த செல்லம் இல்ல கௌதம்… உன்னோட இந்த முன்கோவம்… அதுதான் உன் தங்கச்சி உயிரையே வாங்க பாத்துச்சு…” என்று அவர் கூற, குற்றவுணர்ச்சியில் குறுகிப்போனான் கெளதம்.
அவன் தோளை ஆறுதலாக தடவிய பாலமுருகன், “உன்ன குத்தம் சொல்றதுக்காக நா இத சொல்லல கெளதம்… கொஞ்சம் யோசிச்சு பாரு… இந்த ஆக்சிடேண்ட் ஆனதுனால உன் தங்கச்சி உயிரே போயிருக்கும்… உன் கோவத்தால நடந்த ஒரே நல்ல விஷயம்… உன் தங்கச்சி அந்த சிவாவ பத்தின நினைவுகள மறந்தது மட்டும்தான்… கொஞ்சம் பொறுமையா இரு கெளதம்… பொறுமையா இருந்தா தான் நாம நெனச்சத சாதிக்க முடியும்…” என்று கூறினார்.
தன் தவறை உணர்ந்த கெளதம், “ஆனா அப்பா… பவி வெளில போறதால… அவளுக்கு உண்மை தெரிஞ்சுப் போச்சுன்னா.. என்ன பண்றது…?” என்று சற்று கவலையாக கேட்டான்.
“அதுக்காக அவளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைச்சாலும்… அவளுக்கு சந்தேகம் வந்துரும்… அது… இன்னும் ஆபத்தா முடிஞ்சிடும்….. அவ படிக்கதான போறேன்னு சொல்றா… அதுவும் பெங்களூரு தான… போகட்டும்… பாத்துக்கலாம்…” என்று அவர் கூறினார் பாலமுருகன்.
இதை கேட்டும் சற்று கலக்கத்துடனே இருந்த கெளதம், “அப்பா….. அந்த லீலா…ஏதாவது சொல்லிட்டா என்ன பண்றது….?” என்று அவன் தயங்கியவாறு கேட்க, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டவர், “அந்த பொண்ண நா பாத்துக்குறே… நீ… உன் தங்கச்சிய பெங்களூர் அனுப்புறதுக்கான வேலைய பாரு…” என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.
அடுத்த இரண்டு நாட்கள் அந்த வீட்டில் காலச்சக்கரம் சுழன்ற விதம் ஆச்சரியமானது. பவித்ரா ஒரு பட்டாம்பூச்சியைப் போல மாறிவிட்டிருந்தாள். பல மாதங்களுக்குப் பிறகு அவள் முகத்தில் தெரிந்த அந்தப் பொலிவு, கமலாவிற்கு ஒரு பக்கம் நிம்மதியைத் தந்தாலும், அவளது உடல்நிலையைப் பற்றிய கவலை மட்டும் தீரவில்லை.
“பவி… அங்க சாப்பாடு எப்படி இருக்குமோ தெரியலையே… நேரம் தப்பி சாப்பிடாத…” என்று ஒரு தாய்க்கே உரிய பதற்றத்துடன் அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.
ஆனால் கௌதமோ, ஒரு எரிமலையைப் போல இருந்தான். பவித்ராவின் ஒவ்வொரு சிரிப்பும் அவனுக்கு ஒரு எச்சரிக்கையாகத் தெரிந்தது. ‘இவளைத் தனியா விடுறது சரிதானா?’ என்ற கேள்வி அவன் முகத்தில் கவலையாகப் படிந்திருந்தது.
அடிக்கடி தன் தந்தையிடம் ஏதோ பேச முயன்று, பின் அவரிடமிருந்து வரும் ஒற்றைப் பார்வையில் அடங்கிப் போனான்.
பயணத்தன்று காலை, பவித்ரா தனது அலமாரியைத் திறந்து தன் துணிகளை ஒவ்வொன்றாக அடுக்கத் தொடங்கினாள். அவள் பயன்படுத்திய சுடிதார்கள், புத்தகங்கள் என ஒவ்வொன்றும் அவளுக்கு ஏதோ ஒரு கதையைச் சொல்ல முயன்றன. ஆனால், அவளது மூளை அவற்றை அடையாளம் காண மறுத்தது.
திடீரென்று, ஒரு பழைய புத்தகத்திற்கு அடியிலிருந்து ஏதோ ஒன்று கீழே விழுந்து ‘டிக்’ என்ற சத்தத்துடன் சிதறியது. அதை கையில் எடுத்தாள் பவித்ரா. இரண்டு சிவப்பு நிற க்ரிஸ்டல் இதயங்கள் ஒரு சிறிய சங்கிலியில் பிணைக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தன.
ஜன்னல் வழியே உள்ளே விழுந்த சூரியனின் ஒளி அந்த கீசெயின் மீது பட்டுத் தெறிக்க, அந்த இதயங்கள் ரத்தச் சிவப்பில் மின்னின.
அதை கையில் எடுத்த மாத்திரத்தில், பவித்ராவின் உடலில் ஒரு மின்னல் பாய்ந்தது போல இருந்தது. இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவளுக்குத் தெரியாமலேயே அவளது விரல்கள் அந்த இதயங்களை மென்மையாக வருடின.
“இது… இது யாருடையது?”
அவள் மனதிற்குள் ஏதோ ஒரு உருவம் வந்து போவது போல இருந்தது. ஒரு மெல்லிய சிரிப்பு… ஒரு கதகதப்பான கரம்… ஆனால் எதுவும் தெளிவாக இல்லை. அந்த கீ-செயினைப் பார்க்கும்போது மட்டும் ஏதோ ஒன்று அவளுக்கு மிக நெருக்கமாகத் தோன்றியது. அது ஒரு வலி நிறைந்த சந்தோஷத்தைத் தந்தது.
தன் அண்ணன் கௌதம் உள்ளே வருகிறானா என்று வாசலை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். அவளுக்குள் ஏதோ ஒரு உள்ளுணர்வு எச்சரித்தது – ‘இதை யாரிடமும் காட்டாதே!’.
மெல்ல அந்த இதயங்களை ஒரு கைக்குட்டையில் சுற்றி, தன் பையின் உள் அறையில் மிகவும் பாதுகாப்பாக மறைத்து வைத்தாள். அவளுக்கே தெரியாமல் அவளது கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.
அந்தப் படிக இதயங்கள் அவளது எதிர்காலப் பயணத்தில் அவளுக்கே தெரியாத ஒரு துணையாக மாறப்போவதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.
அந்த சமயம் பவித்ராவின் தாய் அந்த அறைக் கதவை தட்டி, “பவிமா..! கெளம்பிட்டியா..? இன்னும் உள்ள என்ன பண்ணிக்கிட்டு இருக்குற..?” என்று குரல் கொடுக்க,
“ஹா.. வந்துட்டேம்மா..” என்று கூறியவாறு பைகளை தூக்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள் பவித்ரா.
வாசலில் கார் தயாராக நிற்க, அதில் பவித்ரா மற்றும் அவள் குடும்பத்தார்கள் ஏறிக் கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி புறப்பட்டனர்.
சென்னை பேருந்து நிலையம் வழக்கமான பதட்டத்துடன் காணப்பட்டது. பவித்ரா தனக்கான பேருந்து வந்ததும் அதில் ஏறுவதற்க்கு ஆயித்தமானாள். அந்த சமயம் “பத்ரமா போயிட்டு வா பவிமா… ஏதாவதுன்னா உடனே கால் பண்ணு…” என்று பாலமுருகன் அவளை அணைத்துக் கொண்டு விடை கொடுத்தார். கெளதம் தனது தங்கையின் லக்கேஜ்களை பேருந்தில் ஏற்றிக் கொண்டிருந்தான். கமலாவோ, அறிவுரைகளை அடுக்கிக் கொண்டே இருந்தார்.
“நல்லா சாப்பிடு பவிமா.. தல வலிக்கிறமாதிரி இருந்தா உடனே பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல்க்கு போ.. ஏதாவது ஒன்னுன்னா.. உடனே அப்பாவுக்கு கால் பண்ணு..” என்று கூறியதும் அவர் தலையில் தட்டினார் பாலமுருகன்.
“ஏய்.. அதத்தானடி நானும் சொன்னே.. அதையே மறுபடியும் சொல்ற.. விடுடி.. நம்ம பவி ஒன்னும் கொழந்தையில்ல.. அவளே எல்லாத்தையும் பாத்துப்பா..” என்று தன் மனைவியை கடிந்தார்.
ஆனால் பவித்ராவிற்கு இது எதுவுமே காதில் விழவில்லை. அவளது அழகிய விழிகள் இரண்டும் தேடியது தனது ஒரே தோழி லீலாவைத் தான்.
அந்தச் சமயம், ஒரு இருசக்கர வாகனம் வந்து நிற்க, அதிலிருந்து படபடப்புடன் இறங்கினாள் லீலா. அவளை கண்டதும் கட்டவிழ்த்து விட்ட கன்று, தன் தாயை நோக்கி ஓடுவதை போல லீலாவை நோக்கி ஓடியவள் அவளை இருக்க அணைத்துக் கொண்டாள்.
“எங்க உன்ன பாக்க முடியாதோன்னு பயந்துட்டே லீலா..” என்று கண் கலங்கியவாறு கூற, அவள் முதுகை தடவிய லீலா, “உன்ன பாக்க நா வராம இருப்பேனா..?” என்று கேட்டாள்.
அந்த சமயம் சற்று தொலைவில் நின்றிருந்த கௌதம், லீலாவை முறைத்து பார்த்தான். அவன் கண்களில் அவ்வளவு கோபம் தெரிந்தது. ‘இந்த பொண்ணுக்கு எவ்ளோ திமிரு… நாம என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டின்றாளே… அது சரி… அவதான் பவித்ராவோட ஃப்ரண்ட் ஆச்சே… பின்ன… எப்படி இருப்பா…!’ என்று எண்ணி மனதிற்குள் கொந்தளித்தான்.
அவன் இவ்வாறு முறைப்பதைக் கண்டதும் லீலாவிற்கு அவன் நேற்று இரவு கூறியது நினைவிற்கு வரவே கோபமும் எரிச்சலும் அவள் முகத்தில் தாண்டவம் ஆடியது.
லீலா தன் அண்ணனை இவ்வாறு முறைத்து பார்ப்பதை கவனித்த பவித்ரா, “லீலா.. எனக்கு ஒரு விஷயம் சொல்லு.. எனக்கும்.. என அண்ணன் கௌதம்க்கும் ஆக்சிடென்ட்க்கு முன்னாடி ரிலேஷன்ஷிப் எப்படி இருந்தது..?” என்று கேட்டாள்.
இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத லீலா புருவம் சுருக்க, “இல்ல.. எனக்கு கௌதம பார்த்தா.. அண்ணான்னு பாசம் வரத விட…அதிகமா கோவம் தான் வருது.. அதான் கேட்டே..” என்று கூறினாள் பவித்ரா.
இதை கேட்டதும் லீலா தன் மனதிற்குள், ‘அவன் பண்ண காரியத்துக்கு உனக்கு கோவம் வராம.. வேற என்ன பண்ணும்..? உனக்கு நினைவுகள் மட்டும் போகாம இருந்தா.. அவன கொலையே பன்னிருப்ப..’ என்று எண்ணிக் கொண்டாள்.
வெகுநேரமாக தன் கேள்விக்கு பதிலே சொல்லாமல் நின்றிருந்த லீலாவை கண்ட பவித்ரா, அவளை உலுக்கினாள். “லீலா ஏதாவது சொல்லு..” என்று அவள் கூற, “பவி.. நீ இப்போ ஊருக்கு கெளம்பு.. நீ ரீச் ஆனதும் எனக்கு கால் பண்ணு.. நா.. உன் கிட்ட நெறைய பேசணும்.. அதுவரைக்கும் எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத.. சரியா..?” என்று கூறினாள் லீலா.
பேருந்தின் ஹார்ன் சத்தம் அவர்கள் கவனத்தை ஈர்க்க, பவித்ரா பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். பேருந்து நகரத் தொடங்கியபோது, லீலா கனத்த மௌனத்துடன் கை அசைத்தாள்.
பவித்ராவிற்கு இந்த பெங்களூர் பயணம் – இது வெறும் படிப்புக்கான பயணம் மட்டுமல்லாமல் தொலைந்த தன்னை, தானே தேடி அடைவதற்கான பயணமாவே அவளுக்கு தோன்றியது. அவள் அருகில் அமர்ந்திருந்த கௌதம், மனதில் இருந்த அந்த பதட்டம் மட்டும் குறையவே இல்லை.
பேருந்து நகரத் தொடங்கியபோது, தன் குடும்பத்தினரை விடுத்து, அந்தச் சென்னையின் தெருக்களைப் பார்த்தாள். ஏதோ ஒரு பெரிய பாரத்தைச் சென்னையில் இறக்கி வைத்துவிட்டுச் செல்வது போன்ற ஒரு நிம்மதி அவளுக்குள் இருந்தது.
பேருந்து வேகமெடுத்தது. சென்னை மெல்ல மறைய, புதிய வாழ்வைத் தேடி பெங்களூரை நோக்கிப் பயணித்தாள் பவித்ரா. அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால், இரண்டு இருக்கைகள் தள்ளி சற்று மறைவாக அமர்ந்திருந்த சிவா, பவித்ராவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தவாறே அவனும் பெங்களூர் நோக்கி பயணிக்க தொடங்கினான்.
ஆனால், பவித்ராவிற்கு தெரியாது… அவளது நிழலாக இன்னுமொரு பயணம் அவளுடனேயே பெங்களூர் வரை தொடர்கிறது என்று!
-நிழல்கள் தொடரும்…
