அத்தியாயம் 2
-
இது எந்த மாதிரியான காதலுனே என்னால புரிஞ்சிக்க முடியல
தனக்கு வந்த பயங்கரமான கனவைக் கண்டு பயந்துபோன தியா பதறியடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தவளின் இதயம் அதிவேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது. முகம் முழுக்க வேர்த்துக்கொட்ட, பயத்தில் உடல் நடுங்க, வேகவேகமாக மூச்சை இழுத்து விட்டவள். மெல்ல நிதானத்திற்கு வந்து, கண்களை மூடி ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டாள். பின் மெல்ல திரும்பி மேசையின் மேலே இருந்த தங்களுடைய சிறுவயது புகைப்படத்தை எடுத்து, அதில் இருக்கும் தங்களின் குழந்தைப் பருவத்தைக் கண்களில் துளிர்த்த கண்ணீரோடு ரசித்தவள். மெல்ல அதில் இருக்கும் ஆதவனின் உருவத்தையும் தொட்டு வருடினாள்.
முகம், கை, வாய், பற்கள் மட்டுமின்றி அவர்கள் அணிந்திருந்த உடை என்று அனைத்திலும் சாக்லேட் கறைகள் ஒட்டியிருக்க அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் கையில் இருந்த சாக்லேட்டை ஒருவருக்கு ஒருவர் ஊட்டியவாறே சிரித்துக்கொண்டிருந்த அந்தப் புகைப்படம் தான் அவளுள் இன்னும் அவர்களின் சிறுவயது நினைவுகளை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
“எப்போ ஆதவா நீ என்னைத் தேடி வருவ? உனக்காக நான் இத்தனை வருஷமா காத்துகிட்டு இருக்கிறேன்னு உனக்குத் தெரியுமா இல்லையா? இல்ல தெரிஞ்சும் வராமல் இருக்கியா? ப்ளீஸ் ஆதவா என்கிட்ட வந்துடு நீ இல்லாம என்னால இருக்க முடியாது… ஐ லவ் யூ ஆதவா… ஐ லவ் யூ சோ மச்… அண்ட் உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். நீ எனக்கு இப்பவே வேணும்” என்றவள் அந்தச் சிறுவயது புகைப்படத்தைத் தன் மார்போடு சேர்த்து இறுக்க அணைத்துக்கொண்டு வெளியே சத்தம் எழுப்பி அழக் கூடத் தெம்பு இல்லாமல், தன் மனதின் ஆழத்தில் ஒரு மௌன யுத்தத்தையே நடத்தி முடித்தாள் தியா.
எவ்வளவு நேரம் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவாறு தன்னவனை நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை… வானில் இருந்த நிலவுமகள், பெண்ணவள் படும் கஷ்டத்தைக் காண முடியாமல் அடிவானத்தில் மறைத்துக் கொள்ள, அவளது நிஜ ஆதவன் அவளைத் தேடி வரவில்லையென்றாலும், அவளது நம்பிக்கைக்கு உயிர் கொடுக்க வானத்து ஆதவன் (சூரியன்) ஜன்னல் வழியே தன் கரங்களை நீட்டி அவளைத் தழுவிக் கொண்டான்.
“ரதிமா… ரதிமா… எழுந்துட்டியா? இல்லையா? சீக்கிரம் வெளியே வாடா டைம் ஆகுது, ஆபீஸ்க்கு போகணும்ல” என்று அவளின் தாய் மதியழகி அவளின் அறையின் கதவைத் தட்ட, அவசர அவசரமாகத் தன் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, புகைப்படத்தில் இருக்கும் ஆதவனுக்கு அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தவள். அதை மீண்டும் இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு எழுந்து சென்று அலுவலகத்திற்கு தயாராகத் தொடங்கினாள்.
ஒரு மணி நேரத்தில் குளித்து முடித்துத் தயாராகித் தன் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கீழே வந்த தியாவை வழிமறித்து நின்ற மதியழகி.
“சாப்பிட்டுப் போ …”என்று அதிகாரத்தோடு கூறியவரின் கைகளில் உணவுத் தட்டு இருந்தது. அதை ஒரு பார்வை பார்த்த தியா.
“அம்மா ப்ளீஸ் டைம் …” என்று அவள் ஏதோ கூற வர இதான் சமயம் என்று தன் கையில் இருந்த உணவை அவளுக்கு ஊட்டி விட்ட மதியழகி.
“எவ்வளவு டைம் ஆனாலும் பரவாயில்லை, இன்னைக்கு நீ சாப்பிட்டுத்தான் போகணும், அப்படி நீ சாப்பிடாமல் போய் வேலை செஞ்சு தான் இந்தக் குடும்பத்தைக் காப்பாத்தணும்னு எந்த அவசியமும் இல்ல” என்றவர் தன் மகளைப் பேசவே விடாமல் அவளுக்கு உணவை ஊட்டிவிட்டுக் கொண்டே இருந்தார்.
இதை அனைத்தையும் சோபாவில் அமர்ந்திருந்த தந்தையும் மகனும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“பாத்தீங்களா அப்பா… நீங்களும் தான் இத்தனை வருஷமா ஆபீஸ்க்கு போனீங்க, என்னைக்காவது ஒருநாள் இப்படி உங்களுக்கு டைம் ஆயிடுச்சு சாப்பிட்டு போங்கன்னு சொல்லி அம்மா ஊட்டி விட்டு இருப்பாங்களா? இல்ல இதோ இப்போ காலேஜுக்கு டைம் ஆயிடுச்சு ரெடியாகி உட்கார்ந்து இருக்கேன். எனக்கு இந்தாடா சாப்பிட்டு போ அப்படின்னு ஒரு வாய் ஊட்டுனாங்களா? எப்ப பாரு இந்த அம்மா இந்த ராட்சசியவே தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க… எல்லா வீட்டுலயும் அம்மாங்க எல்லாம் மகனைத்தான் விழுந்து விழுந்து கவனிப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இங்க என்னடா இந்த அம்மா இந்த ராட்சசிய தான் விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க, அப்படி என்ன தான் அவள் மட்டும் ஸ்பெஷலோ” என்று நம் ரதிதியாவின் அன்பு தம்பி ராகவ் கூற, அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்த அவனின் தந்தை மனோகரன்.
“டேய் மகனே உனக்கு உன் அம்மாவ பத்தி தெரியாது இப்போ தான் உன் அம்மா என்னைக் கண்டுக்கிறது இல்ல, ஆனா எங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுல உன் அம்மா என்னைத் தான் சுத்தி சுத்தி வருவா… அதோட எங்களுக்குக் குழந்தையே பிறக்காதுன்னு சொல்லி எல்லாரும் அவளை வார்த்தையாலே கொன்ன அப்போ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என் அம்மாவுக்கு நான் இருக்கேன்னு சொல்லி எங்களையும் எங்க வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொடுத்தவளடா உன் அக்கா… அதான் உன் அம்மாவுக்கு அவள் மேல எப்பவும் தனி பாசம், அவ பிறக்கிறதுக்கு முன்னாடி வரைக்குமே உன் அம்மாவுக்கு நான் மட்டும் தான் உலகம்… அவள் பிறந்ததுக்கு அப்புறம் அவள் மட்டும் தான் உலகம், அதான் நீ பிறந்ததுக்கு அப்புறமும் கூட உன் அக்கா மட்டும் தான் அவள் உலகமுன்னு வாழற, என்ன பண்ண சொல்ற?” என்று மனோகரன் தன் உள்ளிருக்கும் கவலைகளை மறைத்துப் புன்னகையோடு தன் மனைவிக்காகத் தன் மகனிடம் பேசினார்.
“அதானே பார்த்தேன் எங்க பொண்டாட்டிய அப்படியே விட்டுக் கொடுத்துட்டாலும்… பெயருக்குத் தான் இந்த வீட்டுக் கடைக்குட்டி… ஆனா, இந்த வீட்ல இருக்க நாய் குட்டி கூட என்னை மதிக்க மாட்டேங்குது எல்லாம் என் தலையெழுத்து” என்று கூறி சலித்துக் கொண்டவன்.
“எனக்கு டைம் ஆயிடுச்சு நான் காலேஜுக்கு போறேன்.” என்றவன் தன் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
“டேய் மகனே சாப்பிடாம போகாதடா… அப்புறம் உன் அம்மா என்னைத் தான் திட்டுவா…” என்ற மனோகரன் தன் மகனைத் தடுக்க, அவரைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன்.
“கவலைப்படாதீங்க உங்க மேல இருக்க கோபத்தை எல்லாம் நான் சாப்பாடு மேல காட்ட மாட்டேன்… அதுவும் அம்மா இன்னிக்கி எனக்குப் பிடிச்ச பூரியும் உருளைக்கிழங்கு மசாலாவும் பண்ணி இருக்காங்க? அப்படி இருக்க நான் எப்படி சாப்பிடாம போவேன்னு நீங்கள் நினைச்சீங்க?” என்று கேட்டவாறே டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தவன். ஒரு பிளேட்டை எடுத்து அதில் தனக்கு பிடித்த பூரியும் கிழங்கு மசாலாவையும் போட்டுச் சாப்பிடப்போகச் சட்டென்று அவன் கையிலிருந்து தட்டைப் பிடுங்கிய ரதி, அன்போடு அவனுக்கு ஊட்டி விட… தியாவை கண்கள் சுருங்க ஒரு பார்வை பார்த்தவன்.
“என்ன இன்னைக்கும் அதே கனவா?” என்று கேட்க, தியாவோ அதற்குப் பதில் கூறாமல் அவனுக்கு ஊட்டப் போக, தன் அக்காவைக் கோபத்தோடு பார்த்தவன், முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“டேய் ரொம்ப ஓவரா பண்ணாத ஒழுங்கா சாப்பிடு…” என்ற தியா அன்போடு தன் தம்பிக்கு ஊட்டி விட்டாள். என்ன தான் கோபமாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் தன் அக்காவின் முகத்தில் இருக்கும் அந்தக் கவலையைக் கண்டவனுக்கும் சிறு கவலை ஒட்டிக்கொண்டது. ராகவுக்கு ஊட்டி முடித்துவிட்டு தன் பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பியவளின் பின்னாலே ஓடிவந்த ராகவ்.
“ஏய்… ராட்சசி என்னைய இன்னைக்கு காலேஜ்ல டிராப் பண்ணு…” என்றவன் ஓடிச் சென்று காரின் முன்னால் சீட்டில் அமர்ந்து கொள்ள,
“டேய்… உன் பைக் என்னாச்சி? அதுல போக வேண்டியது தானே?” என்று தியா கேட்க,
“என்னோட பைக் ஏதோ பிரச்சனை, சர்விஸ்க்கு கொடுத்து இருக்கேன். நாளைக்கு தான் வரும்” ராகவ்.
“ராகவ் எனக்கு இன்னைக்கு ஆபிஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, ஆல்ரெடி டைம் ஆயிடுச்சு… உன்னை ட்ராப் பண்ணிட்டு போன எனக்கு லேட் ஆகிடும் டா… நீ ஏதாவது கேப் புக் பண்ணி போடா” என்று தியா கூற, தன் முகத்தை அப்பாவிபோல் வைத்துக் கொண்ட ராகவ்.
“என்னோட செல்ல ராட்சஸிதானே? ப்ளீஸ் டி… எனக்கு இன்னைக்கு முக்கியமான ப்ராஜெக்ட் ஒர்க் இருக்கு டைமுக்கு சப்மிட் பண்ணலேன்னா, அந்த HOD என்னைக் கொன்னு போட்டுருவான். ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ் டி” என்று கெஞ்ச தன் அன்பு தம்பி கொஞ்சும்போது அவள் என்ன வேண்டாமென்ற கூறுவாள்.
“உன்னைய வெச்சிட்டு… சீட்பெல்ட் போடு” என்றவள் காரை அவன் காலேஜ் நோக்கிச் செலுத்தினாள். சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவ, ராகவோ மெல்ல தன் பேச்சை ஆரம்பித்தான்.
“என்ன மேடம் நேத்து நைட்டும் கனவு கண்டு அலறி அடிச்சுக்கிட்டு பாதி தூக்கத்திலேயே எழுந்துட்டீங்க போல?” என்றவன் கேட்க,
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே… நான் நேத்து நைட் நல்லா நிம்மதியா தூங்கினேன்” என்று தியா கூற, அவளை ஒற்றை புருவம் உயர்த்திப் பார்த்த ராகவ்.
“இங்கே பாரு ரதி நீயே அம்மாவை ஏமாத்தலாம் அப்பாவை ஏமாத்தலாம் ஆனால் என்னை ஏமாத்த முடியாது … என்னோட ராட்சஸியை பத்தி எனக்கு நல்லா தெரியும், உன் கண்ணிலேயே நீ எவ்வளவு அழுது இருக்க அப்படிங்கறது எனக்கு நல்ல தெரியுது …” என்று அவன் கூற, பெண்ணாவளோ எதுவும் பேசாமல் அமைதியாக ரோட்டை பார்த்துக் காரை மட்டும் ஓட்டிக்கொண்டிருந்தாள்.
“இப்படியே போனவனை நினைத்து எத்தனை நாளைக்கு தான் ரதி நீ உன்னையே கஷ்டப் படுத்திக்கொள்ள போற? ஏன் இப்படி பண்ற? எங்களைப் பற்றிக் கொஞ்சமாவது நீ யோசித்துப் பார்க்கிறீயா?” என்று ராகவ் சற்று கோபத்தோடு கேட்க, விரக்தியாக ஒரு புன்னகை சிந்திய தியா.
“உங்கள பத்தி யோசிச்சதுனால தான் எனக்குப் பிடிக்காத கல்யாணத்துக்கு நான் சம்மதம் சொல்லி இருக்கேன் …” என்றவள் உடைந்த குரலில் கூறினாள்.
“சம்மதம் சொன்னே தான், ஆனா அதை நீ மனசார சொல்லல… நீ இப்படி மனசுல ஒருத்தனை நினைச்சுகிட்டு, இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுமா ரதி? விக்ரம் மாமா ரொம்ப நல்லவர். அதனால தான் உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் அவர் கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்காரு… ஆனா நீ என்னடான்னா அவர பத்தி கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்கவே மாட்டீங்கிறே… இங்க பாரு ரதி எனக்கு உன்னோட சந்தோஷம் மட்டும்தான் முக்கியம். நீ சந்தோஷமா இருந்தா தான் நாங்க எல்லாம் சந்தோஷமா இருப்போம்” என்று ஒரு தம்பியாக இல்லாமல் ஒரு தகப்பனாக நின்று அவன் அவளுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்க, ராகவை திரும்பி ஒரு பார்வை பார்த்து நக்கலாகப் புன்னகைத்த தியா.
“என்னோட சந்தோஷத்தைப் பத்தி இங்கே யாருக்கு என்னடா கவலை? உங்களுக்கு எல்லாம் தேவை நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தானே? அதுக்காகத் தான் நானும் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.” என்றவள் சற்று கோபத்தோடு கூறினாள்.
“என்ன ரதி பேசுற நாங்க என்னமோ நீ காதலிக்கிற பையன் கிட்ட இருந்து உன்னைப் பிரிச்சு வேற ஒருத்தனுக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி பேசுற, நீ வருவான்னு சொல்ற அந்த ஆதவன் செத்துப் போய் 20 வருஷம் ஆகுது, திரும்பி வரத்துக்குச் சாத்தியமே இல்லாத ஒருத்தனை நினைச்சுகிட்டு நீ இப்படி வாழ்ந்துகிட்டு இருக்கிறதை, எங்கள எல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க சொல்றியா?” என்று அவனும் கடும் கோபத்தோடு கேட்டான்.
“நீங்க யார் என்ன வேணாலும் சொல்லுங்க அத பத்தி எனக்குக் கவலை இல்லை, நான் நம்புறேன். கண்டிப்பா என்னோட ஆதவன் என்னைத் தேடி வருவாருன்னு நான் நம்புறேன்” என்றவள் உறுதியோடு கூற, தன் அக்காவை ஏதோ பைத்தியம் போல் பார்த்தவன்.
“உனக்கு என்ன பைத்தியமா தியா ? 20 வருஷத்துக்கு முன்னாடி இறந்து போனவர் எப்படி உன்னைத் தேடி வருவார்? இத்தனை வருஷம் உன்ன தேடி வராத மனுஷன் இனிமேலும் உன்னைத் தேடி வருவாருன்னு எந்த நம்பிக்கையில நீ இருக்கிறன்னே எனக்குப் புரியல…. அப்படியே நீ சொல்ற மாதிரி அவர் உயிரோடு இருந்தாலும் கூட இந்நேரம் அவருக்குக் கல்யாணம் ஆயிருக்கும், ஏன் குழந்தை குடும்பம்ன்னு சந்தோஷமா கூட வாழ்ந்துட்டு இருக்கலாம்” என்ற ராகவ் எப்படியாவது தன் அக்காவிற்கு புரிய வைக்க முயற்சி செய்தான்.
தன் தம்பி கூறியதை கேட்டுத் தியாவின் கண்களில் அவளையும் அறியாமல் ஒரு துளி கண்ணீர் துளிர்க்க, அதைச் சட்டென்று அவனுக்குத் தெரியாமல் துடித்துக் கொண்டவள்.
“அப்படி நீ சொல்ற மாதிரி அவர் குடும்பம், குழந்தைன்னு சந்தோஷமா இருந்தா கூட எனக்கும் சந்தோஷம் தான். ஆனா ஒருவேளை அவர் இந்த உலகத்துல ஏதாவது ஒரு மூலையில் எனக்காகக் காத்துகிட்டு இருந்தா? நான் எப்படி அவர் என்னைத் தேடி வருவார்ன்னு நினைக்கிறேனோ அதே மாதிரி அவரு நான் அவர தேடி வருவேன்னு நினைச்சு காத்துகிட்டு இருந்தா?” என்று தியா கேட்க, ராகவோ தன் அக்காவைக் குழப்பதோடு பார்த்தவன்.
“இல்ல… எனக்குப் புரியல, இது எந்த மாதிரியான காதலுனே என்னால புரிஞ்சிக்க முடியல, எந்த நம்பிக்கையில நீ அவருக்காக இன்னும் காத்துகிட்டு இருக்கேன்னு நெஜமா எனக்குத் தெரியல ரதி… ஒரு வேலை நீ சொல்ற மாதிரி அவர் தேடி வந்தா நல்ல விஷயம் தான், ஆனால் தேடி வரலைன்னா ?” என்று ராகவ் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்.
“அவர் என்னைத் தேடி வருவாருன்னு நம்பிக்கைல தான் டா நான் காத்துகிட்டு இருக்கேன்…” என்று காரை ஓட்டியவாறே தியா கூறினாள்.
“அதான் கேட்குறேன். எந்த நம்பிக்கையில இந்தக் காத்திருப்பு?” என்றவன் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, இதழோரம் ஒரு மெல்லிய புன்னகையை சிந்தியவள்.
“உனக்கு இதெல்லாம் சொன்ன புரியாது ராகவ், காதல்ல காத்திருப்பு கூடச் சுகமானது தான் …” என்றவள் கண்களில் அத்தனை காதல் பொங்கி வழிந்தது.
“உன்னோட இந்த அசைக்க முடியாத நம்பிக்கையைப் பார்க்கும்போது எனக்கும் அவர் உன்னைத் தேடி வரணும்னு ஆசையா தான் இருக்கு, ஆனா அப்பா சொன்னத வச்சு பார்த்தா எனக்கு அந்த நம்பிக்கை இல்லை ரதி” என்றவனுக்கு தன் அக்காவின் நிலையை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.
“ஒருவேளை நீங்க எல்லாம் சொன்ன மாதிரி அவர் என்னைத் தேடி வரவில்லைன்னா, என் தலைவிதியில் என்ன எழுதி இருக்கோ அதுபடியே எல்லாம் நடக்கட்டும்ன்னு விட்டுவிடுவேன்” என்ற தியா காரை நிறுத்த, தன் அக்காவைக் கவலையோடு பார்த்த ராகவ்.
“உண்மையாலும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ரதி ஆனா ஒன்னு இது எல்லாம் மறந்துட்டு விக்ரம் மாமாவ நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்றதை தான் நாங்க பார்க்க ஆசைபடுறோம்…” என்றவன் தன் அக்காவை அணைத்து முத்தமிட்டு விட்டுக் காரிலிருந்து இறங்கி சென்று விட்டான்.
ராகவை அவனது காலேஜில் ட்ராப் செய்துவிட்டு, தன் அலுவலகம் நோக்கிக் கிளம்பிய தியாவின் மனதிற்குள் தன் தம்பி தன்னிடம் கேட்ட கேள்விகள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.
“ஒரு வேலை அவர் திரும்பி வரலைன்னா?” என்ற கேள்வியே அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கியது. இப்படி ஏதேதோ சிந்தனையில் தன் அலுவலகம் நோக்கிச் சென்றாள்.
சிட்டி சென்டரில் VR culture என்ற பெயர் பலகை தாண்டிக் கம்பீரமாக நின்று அந்தப் பேஷன் டிசைனிங் கம்பெனியின் அண்டர்கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் தன் காரை நிறுத்திவிட்டு மிகவும் ஸ்டைலாக நடந்து சென்றது லிப்டில் ஏறித் தன் அறை இருக்கும் 6த் ப்ளோரில் லிப்ட் நின்றதும், டக்டக் என்ற தன் ஹில்ஸ் சத்தம் அந்த இடமெங்கும் எதிரொலிக்க, ரதிதியா C.D (Creative Director) என்று பெயர் பலகை தாங்கிய தன் அறைக்குள் சென்று, லேப்டாப் பேகை வைத்துவிட்டு தன் சீட்டில் அமர்ந்தவள்.
ஒரு நொடி கண் மூடி, ஆழ்ந்த பெருமூச்சு இழுத்து விட்டு இன்றைக்கு தனக்கு என்னென்ன வேலை இருக்கிறது என்பதை சரி பார்க்கத் தொடங்கினாள்.
தன் டேபிள் மேல் இருந்த ஒவ்வொரு பெயிலாகச் செக் செய்து சயின்ஸ் செய்து கொண்டிருந்தவள் ஒரு பைலை கண்டு போனால் மீண்டும் ஒருமுறை அந்தச் செயலை மீண்டும் ஒரு முறை அந்தச் செயலைக் கண்கள் கோபத்தில் சிவக்க “அக்ஷரா” என்று இடமே அதிரும்படி கத்தினாள் ரதிதியா…
தியாவின் நம்பிக்கை காப்பாற்ற ஆதவன் வருவானா ? அப்படி ஆதவனுக்கு என்னதான் அப்படி ஆதவனுக்கு என்ன தான் ஆனது ?அவன் எங்குத் தான் சென்றான் ?தியாவின் கோபத்திற்கான காரணம் தான் என்ன? யார் இந்த அக்ஷரா ? இந்தக் கேள்விகளுக்கான விடயங்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
உன் விழி தேடும் என் பிம்பம்…
வணக்கம் என் புதிய வாசக நண்பர்களே… என்னை உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை… ஒருவேளை என்னுடைய கதையைத் தொடர்ந்து படிக்கும் என் அன்பு வாசகர்கள் என் எழுத்தையும் என் கதையையும் கண்டறிந்தால் எனக்கு மிகவும் சந்தோசம் தான், ஆனா கண்டுபிடித்தால் இந்தப் போட்டி முடியும் வரை ரகசியம் காக்கவும்…
என்னுடைய இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்களாகிய நீங்கக் கொடுக்கும் ஊக்கம் மட்டுமே என்னை அடுத்ததா படிக்குக் கொண்டு செல்லும்… ஆதலால் கதையைப் படிக்கும் அனைவரும் என் கதையைப் பற்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை கருத்து பெட்டியில் பதிவு செய்யுங்கள். அது நிறையாக இருந்தாலும் சரி குறையாக இருந்தாலும் சரி… உங்கள் கருத்து ஒவ்வொன்றும் எனக்கு மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள் நண்பர்களே!….
