மயூரி இன்றைய கால இளம் இருபத்தி இரண்டு வயது யுவதி. நல்ல நிறத்தில், அழகிய முகத்தில் ஆளை அசத்தும் கரிய விழிகள், அவளின் பெண் தோழிகளே அவள் கண்களுக்கு அடிமை. பிரியா அடிக்கடி சொல்வாள் ‘அவளின் உதடுகள் பேசுவதை விட கண்கள் அதிகம் பேசுகின்றன’ என்று..
உயரத்திலும் நடுத்தரம்தான்.. மொத்தத்தில் ஒரு ஆணை வசியம் செய்வதற்கு போதுமான அளவு அழகுடன் இருந்தாள் மயூரி.
அவளுக்கு பரதம் என்றால் மிகவும் பிரியம். பிரியம் என்பதை விட வெறி என்றே சொல்ல வேண்டும். சிறுவயதில் பள்ளியில் வாரம் ஒருமுறை மட்டும் இருக்கும் வகுப்பில் அடிப்படை மட்டுமே கற்றவளுக்கு, அதை முழுமையாக கற்று,அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பது லட்சியம்.அதில் அதன் நுணுக்கங்களை கற்று மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்றும் அவள் ஆசை கொண்டிருந்தாள்.
ஆனால் அதற்கு அவள் தந்தையே முதல் எதிரி.தாய்க்கு விருப்பம் இருந்தாலும் தந்தையின் சொல்லே முடிவானது.
அவள் தந்தை முத்து, ஒரு சராசரி நடுத்தர வர்க்க குடும்ப தலைவராகவே இருந்தார். படிப்பு மட்டுமே உதவும் என்றும்,அதன் மூலம் கிடைக்கும் உயர்வு மட்டுமே கவுரவமானது…நிலையானதும் என்று உறுதியாக நம்புபவர், பின்பற்றுபவர்.
அவள் பரதம் பள்ளியில் வாரம் ஒரு வகுப்பில் சேர்ந்த போதே அதை விரும்பாதவர்,வீட்டில் அதைப் பற்றியோ..தான் புதிதாக கற்றுக் கொண்டதை ஆடி காட்டினாலோ.. கூட அவருக்கு பிடிக்காது.
இதுபோன்ற நாட்டியம், பாட்டு, நடிப்பு என்ற கலைத்துறை எல்லாம் அவர்கள் குடும்பத்திற்கு சரிவராது என்றும்,அதற்கு அவள் ஆசைப்படுவது மகாபாவம் என்றும் கூறுவார்.
அவருக்கு மகள் ஆடும் போது யாரும் தவறாக பேசிவிடக்கூடாது , ஏன் தவறாக ரசித்து விடக்கூடாது என்ற ஆதங்மே அதிகம்.அவரின் மனநிலைப்படி பெண் வீட்டினுள் இருந்து கொண்டே சாதிக்க வேண்டும். அப்படியே வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும் என்றாலும் அது பாதுகாப்பான ஆசிரியர் தொழில் மட்டுமே.
அந்த அளவு அவர் கட்டுக்கோப்பானவர் அதை கடைபிடிக்கவும் செய்வார். இந்த ஒரு காரணம் அவளுக்கு போதுமானதாக இருந்தது, தான் ஆர் ஜேவாக வேலை செய்வதை வீட்டில் கூறவும் பரதம் பயில்வதையும் கூற தயங்குவதற்கு.
அதற்குப்பின் தாய் மாலினி, அவருக்கு கொஞ்சம் முற்போக்கான சிந்தனை இருந்தாலும்,கணவருக்கு அஞ்சுபவர். ஏனெனில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவரின் சுடுச் சொற்களை வாங்குவது முதலில் அவர் தானே…
அதோடு தாயால் தந்தையிடம் எதையும் மறைக்க இயலாது. அப்படி அவள் ஆர். ஜேவாக இருப்பது தாய் மூலமாக தந்தைக்குத் தெரிந்தாலும் ஆபத்து. அதில் ஆபத்து இன்னும் அதிகமே..ஏனெனில் தாயும் சேர்ந்து துயரப்படுவார்.
எல்லாவற்றிற்கும் மேல் அவள் அண்ணன் மகேந்திரன்,அவன் ஒரு அப்பா பைத்தியம்.அவர் வெள்ளை காக்கா பறக்கிறது என்றால் கூட தந்தைக்கு எல்லாம் தெரியும் அதனால் சரியே என்பான்.
பல நேரங்களில் அவன் சற்று நடிப்பது போல தோன்றினாலும்.. சில நேரங்களில் அவன் உண்மை குணம் தந்தையைப் போல என்று புரிந்து கொண்டிருந்தாள் மயூரி.
அவனுக்கு தெரிந்தாலே துரும்பை மலையாக தந்தையிடம் உருவகிப்பான். இப்படி கடவுள் அவளுக்கு எல்லா பக்கமும் அணை கட்டினாலும்…அவளுக்கு எகிறி குதித்து ஓடவும் வழி ஏற்படுத்தி இருந்தார்.
ஆம், இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவள் கல்லூரியில் நடந்த ஒரு செமினாரில் ஏர் எஃப். எம் ஒரு சிறிய போட்டி வைத்தார்கள். அதில் ஜெயித்தால் ரேடியோ ஜாக்கி ஆவதற்கு இருபது நாட்கள் பயிற்சியும், அதில் சிறப்பாக செய்தால் ரேடியோ ஜாக்கி ஆக வேலையும் கிடைக்கும் என்று கூறவே… அதில் விளையாட்டாக அவள் வகுப்பு தோழியர் இருவருடன் சேர்ந்து பங்கெடுத்தாள் மயூரி.
அதில் வென்று இருபது நாள் பயிற்சிக்கு சென்றவளின் தனித்திறமை மேலும் சிறக்க.. அவளை ஒரு நிகழ்ச்சி செய்ய கேட்டாள் சோனா ஏர் எஃப்.எம் டீம் ஹெட்..
அதில் முதலில் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினை ஆகி விடும் என்று பயந்து மறுத்தாள் மயூரி. சோனா தான் அவளிடம் விவரம் கூறி,அந்த நிகழ்ச்சி யாரும் அலைபேசியில் அழைக்காத,அவள் கருத்துக்களை மட்டும் கூறி அனைவரையும் குதூகலிக்க செய்வது மட்டுமே… என்றும் அது அவளுக்கு கைவந்த கலை என்றும் சோனா ஆசை வார்த்தைகள் கூறினார்.
அதில் கொஞ்சம் சம்மதித்தவள் பதிணைந்து ஆயிரம் சம்பளம் என்று கூறவும்,தன் பரத கலையையும் சேர்த்து கற்று கொள்ளலாம் என்று மயூரிக்கு தோன்றியது. அதன் பின்னேயே மனதில் தைரியத்தை வளர்த்துக் கொண்டு ஒத்துக் கொண்டாள்.
அன்றிலிருந்து காலை எட்டு மணிக்கு அவள் ஷோ வெற்றிகரமாக ஒலிபரப்பாகி வருகிறது. சனி ஞாயிறுக் கிழமைகளுக்கு முந்தைய நாளே ஒலிப்பதிவு செய்து கொடுத்துவிடுவாள்.
இவ்வாறு இரு மாதம் சென்று விட்டது.அதிலும் முதல் மாதம் சம்பளம் கிடைத்த உடனேயே..ஒரு பரதம் பயிலும் பள்ளியில் சேர்ந்து விட்டாள்.
ஆனால் இவை அனைத்தும் இரண்டு மாதங்களாக நல்லபடியாக நடந்து வருகிறது. ஆனால் அவளுக்கு மனதில் வீட்டினர் அறிந்தால் என்ன ஆகும் என்ற பயம் இருந்து கொண்டே தான் இருந்தது…
மயூரி அனைத்தையும் கூறி முடிக்கவும் அவர்கள் இருவரும் வீட்டின் அருகே இறங்கும் பேருந்து நிறுத்தம் வரவும் சரியாக இருந்தது.பேருந்தில் இருந்து இறங்கி நடந்தபடியே…
“சோ… உனக்கு விடிவு காலமே இல்லைன்னு சொல்லு…என்னிக்கு மாட்ட போறியோ தெரியல?..எனக்கு என்னமோ இன்னும் ஆறு மாசத்துல மாட்டிருவேன்னு தோணுது…” என்றாள் பிரியா.
“ ஏன் டி..!உன் வாய வைக்கற..!” என்ற மயூரி, “ அப்படியே ஆனாலும் பரவால்ல… இப்ப இவ்வளவு உதவின கடவுள் அப்போ ஏதாவது வழிகாட்ட மாட்டாரா..? “ என்றாள் சிறு நம்பிக்கையை தன்னுள் விதைத்தபடி..
“ ஒருவேளை கடவுள் அப்ப… வெக்கேஷன்ல வெளிநாடு போயிட்டா.. என்ன மய்யூ பண்ணுவ..? “ என்றாள் பிரியா.
“ அதுக்கென்ன டி…அதுதான் நீ இருக்கியே…ஹெல்ப் பண்ண.!” என்றாள் அவள் தோளில் கை போட்டபடி
“ஏய்… உனக்கும் உன் குடும்பத்துக்கும் நடுவுல… நான் எப்படி வரேன் அந்த ஹிஸ்டரியை கொஞ்சம் விளக்கமா விளக்கு…!”என்றாள் பதட்டத்துடன்.
“ம்ம்…விம்.. போட்டு விளக்குறேன் கேட்டுக்கோ..நான் பத்தாம் கிளாஸ்ல இருந்து…நீ இல்லாம வெளியே போனது இல்ல…அப்படித்தானே… இப்ப கூட உன்னை கூட்டிட்டு தான் போறேன்..!” என்றாள் மயூரி நடந்துகொண்டே
சற்று திகைத்து அப்படியே நின்ற பிரியாவை திரும்பி பார்த்த மயூரியிடம்
“என்ன டி.. சொல்ற..!” என்றாள் பிரியா நெஞ்சில் கை வைத்தபடி.
“ஆமா நீ இல்லாம நான் எங்க போவேன்…அதனால தான் நான் பிடிபட்டால் நீதான் முதல் ஐவிட்னஸ்.. “என்றாள் அவள் கன்னத்தில் தட்டியபடி.
“அய்யோ அம்மா..!நான் ஐவிட்னஸ் இல்ல டி… வெறும் ஆடியன்ஸ்தான்…!இதை உன் குடும்பத்துக்கு யாரையாவது வச்சு புரியவை மய்யூ…!”என்று பதறினாள் பிரியா.
“அதெல்லாம் யாருக்கும் தேவையில்லை.. நீ சும்மா வர்றதே போதும்.. “ என்று கூறி அவள் கையை பற்றி இழுத்து அவர்கள் வீட்டு இருக்கும் சந்தினுள் திரும்பினாள் மயூரி.
மயூரியின் வீட்டை தாண்டியே பிரியா வீடு உள்ளது. மயூரியின் வீட்டு வாசலில்,அவள் அண்ணன் மகேந்திரன் வேலைக்கு கிளம்ப தயாராக வண்டியில் அமர்ந்திருந்தான்.இவர்கள் வருவதை கண்டு முறைத்தபடி கிளம்பாமல் நின்றிருந்தவனை கண்ட பிரியா..
“ ஐயோ.. கடவுளே எந்த வெகேஷனுக்கும் போகாமல் இவளை காப்பாற்றுங்கள்.. இந்த தடியன் கிட்ட எல்லாம் மாட்டுனா நான் சட்னி தான்..!”என்று அவசரமாக கடவுளிடம் ஒரு விண்ணப்பத்தை போட்டாள் பிரியா.
அவளை புன்னகையுடன் பார்த்த மயூரி
“பயத்த முகத்தில் காட்டாத அவன் கண்டுபிடிச்சிடுவான்…” என்று பற்களின் நடுவே சிரித்தபடி கூறி முடிக்கவும் வீட்டின் அருகே செல்லவும் சரியாக இருந்தது.
அவசரமாக ஒரு புன்னகையை முகத்தில் பூசினர் இருவரும்.
மயூரியின் தாய் மாலினி கேட்டின் அருகே நிற்க,அவர் அருகே இருவரும் சென்று நின்றனர்.
மயூரியை சந்தேக பார்வை பார்த்த மகேந்திரன்
“ரெண்டு பேரும் ஏதாவது பிராடு வேலை பார்க்கிறதா.. இருந்தா… இப்பவே சொல்லிருங்க… நானா கண்டுபிடிச்சேன்…! அப்புறம் ரெண்டு பேரும் சட்னி தான்..!” என்று மயூரியிடம் ஆரம்பித்து பிரியாவிடம் பார்வையை நிலை நிறுத்தினான்.
பிரியா சற்று பதறி தான் போனாள். அதிலும் அவள் எண்ணிய வார்த்தைகளையே அவனும் கூற அவள் பயத்தில் மயூரியின் கையை பற்றி கொண்டாள்.
மயூரியோ சுதாரித்து சட்டென பேசினாள் “ஆமா நீ பெரிய டிடெக்டிவ் பாரு.. நாங்க அக்யூஸ்ட்.. பார்வையாலே கண்டுபிடிச்சிருவார். போ தம்பி… போய் வேலை வெட்டிய பாருப்பா…!”என்று கேலியாக கூறிவிட்டு பிரியாவை கண்காட்ட அவள் அவனைத் தாண்டி சுற்றிக்கொண்டு நான்கு வீடு தள்ளி இருந்த அவள் வீட்டை நோக்கி நடந்தாள்.
அவள் செல்வதை கண்டு விட்டு மயூரியை முறைத்தபடி கிக்கரை ஒரே மிதியில் மிதித்து வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றவனை உருத்து நோக்கிய மயூரி
“ அம்மாடியோ… என் மேல இருக்க கோவத்துல எப்படி மிதிக்கிறான் பாருங்க அம்மா.. ம்ம்.. அம்புட்டு வெறி.. “என்றபடி வீட்டினுள் செல்ல
அவளை தொடர்ந்து கதவை பூட்டிக் கொண்டு மாலினியும் உள்ளே சென்றார்.
உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தவளை கண்டு தாயார் மாலினி கேட்டார்.
“ஏன் டி மய்யூ.. ஸ்பெஷல் கிளாஸ்னு சொன்ன..அதுக்குள்ள வந்துட்ட.. “என்றார்.
“ முடிஞ்சிருச்சு வந்துட்டேன்.. “ என்றாள் மயூரி.
“மணி பத்தரை தான் ஆகுது.. “ என்று மணியை பார்த்தபடி கேட்டார் மீண்டும்.
“ ஹல்லோ.. மிஸஸ் மாலினி நான் ஏழு முப்பது மணிக்கு போனேன். ரெண்டு மணி நேரம் தான்.. கிளாஸ்.. “என்றாள் மயூரி.
சம்மதத்துடன் தலையை ஆட்டினார் மாலினி. அவரை சிரித்தபடி பார்த்த மயூரி.
“அப்பப்பா.….ஒரு காலேஜ் போயிட்டு வர்றதுக்கு இத்தனை என்குயரியா…? இது என்ன வீடா இல்ல ஜெயிலா..? “ என்றாள் தண்ணிரை குடித்தபடி.
“ நீ என்ன டி..? நாடு இருக்க நிலையில.. நாம தான் கரெக்ட்டா…இருந்துக்கணும் மய்யூ மா..!” என்றார் கறாராக
“ மாலினி மேடம்…இந்த வீட்ல எல்லாருமே கரெக்டா இருந்தா போர் அடிக்கும்..அதான் ரூல்ஸ் பிரேக் பண்ண நான் இருக்கேனே..!” என்றாள்.
“ என்னது ரூல்ஸ் பிரேக் பண்ண போறியா..? எப்போ.. எங்க…!” என்றார் பதட்டமாக.
“ப்ச்.. ம்மா… சும்மா ஒரு ஃப்ளோல ரைமிங்க்கு சொன்னா… நீங்க ஏன் மா இவ்வளவு பதட்டப்படுறீங்க…? “என்றாள் சற்றே கேலியாக
“ஏன் டி…உனக்கு கேலியா இருக்கா டி என் நிலைமை…ஆனால் மயூரி நீ அப்படி எதுவும் பண்ணப் போறேன்னா முதல்லயே சொல்லிரு… எங்கயாவது போய்டுறேன்… இந்த வீட்ல இருக்கவங்களுக்கு அந்தமான் ஜெயில் கூட நிம்மதியான இடம்…!” என்றார் சலிப்பும் சிரிப்புமாக
வாய்விட்டு சிரித்த மயூரி “அப்படியெல்லாம் நாங்கள் உங்களை நிம்மதியா இருக்க விடமாட்டோம் மாலினி… நீங்க எங்களை சகித்து தான் ஆக வேண்டும்… மை லார்ட்…” என்றாள்.
“ அதான் உங்க அப்பன் தலைல எங்க அப்பன் என்ன கட்டுனப்பவே எனக்கு தெரியுமே… என்ன செய்ய அனுபவிச்சு தான் ஆகணும்..!” என்று மேலும் சலித்துக் கொண்டு அவளுடன் புன்னகையில் கலந்து கொண்டார்.
தாயும் மகளும் தனியே இருக்கும்போது இப்படித்தான். ஆனால் தந்தையோ, தமயனோ இருக்கும்போது.. இவர்கள் கேலி கிண்டல்களை பீரோவில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி விடுவர்.
இந்த நிலை அவர்களுக்கு ரொம்ப நாள் நீடிக்காது என்று இருவரும் அறியாமல் மகிழ்ச்சியாக இருந்தனர்.
மயூரி இன்னும் நான்கு மாத காலம் அவளின் ரேடியோ ஜாக்கி வேலையையும் பரதத்தையும் எந்த பிரச்சனையும் இன்றி திருட்டுத்தனமாகவே தொடர்ந்தாள். ஸ்பெஷல் கிளாஸ், ப்ராஜெக்ட், செமினார் என்ற தயவுகளால் அவள் தப்பித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவை அனைத்தும் உண்மையிலேயே வந்த பொழுது சற்று திணறிதான் போனாள். எனினும் கல்லூரியில் முழு நேரமும் ரேடியோவில் இரண்டு மூன்று நாட்களும் சேர்த்து பேசி கொடுப்பது என்று சாமர்த்தியமாக தப்பித்தாள்.
ரேடியோவில் அவள் நிகழ்ச்சியும் நல்ல வளர்ச்சியை கண்டது. காலையில் கேட்கும் மீராவின் குரலுக்காக காத்திருக்கும் ரசிகர் கூட்டம் அதிகமாயிற்று. அதில் பிரியாவின் தாயும் தம்பியும் சேர்ந்தனர். ஆனால் யாருக்கும் மயூரி தான் மீரா என்று தெரியாது.
ஆனால் அப்படி கேட்கும் ரசிகர் கூட்டத்தில் இருக்கும் ஒருவனே அவள் வாழ்வின் தலை எழுத்தை மாற்றப் போவது அவளுக்கு தெரியாது…ஏன் அவனே கூட அதை அறியவில்லை…
