அத்தியாயம் 5
வெளியில் யாரோ சண்டையிடுவது போல சத்தம் கேட்கவும், ஆனந்த் எட்டிப் பார்த்தான். அங்கே மணிவண்ணன், கத்திக் கொண்டிருந்தான்.
ஆனந்துக்கு எரிச்சல் மண்டியது. அம்மாவும், மகனும் மாற்றி, மாற்றி மற்றவர்கள் முன்பு தங்களைக் கேவலப்படுத்துகிறார்களே என்றெண்ணினான்.
விறுவிறுவென அவனை நோக்கி சென்றான்.” எவ்வளவு தைரியமிருந்தா, எல்லாரும் சேர்ந்து, எங்க அம்மாவை அடிச்சு விரட்டியிருப்பீங்க? என்ன மாமாக் கொழுப்பேறி போச்சா?” என்று ரத்னவேலுவைக் கேட்டான்.
“ யாரும், உங்கம்மாவை அடிச்சு விரட்டல. நியாயமா அவங்க செஞ்ச செயலுக்கு, அதத்தான் செஞ்சிருக்கனும். எங்க மாமாவுக்காக விட்டுவச்சோம்” என்று பொரிந்தாள் ரூபிணி.
“ செய்வீங்க, செய்வீங்க,. ஏன்னா கேக்க நாதியில்லாதவ பாரு எங்கம்மா.தைரியம் இருந்தாத் தொட்டுப்பாரேன்” என்று மணி,ரூபிணியிடம் எகிறினான்.
“டேய் என்ன தகராறு பண்ணிட்டு இருக்க? “என்று அதட்டினான் ஆனந்த். “தகராறு பண்றேனா?நியாயத்தக் கேட்டா, உம் பொண்டாட்டி அடிப்பேங்கிறா, பொம்பளையைப் பேசவிட்டு வேடிக்கைப் பாத்துட்டு இருக்கிற நீ என்ன தகராறு பண்றேன்னு சொல்றீயா? “என்றுக் கேட்டான் மணி.
“அவ சொல்றதுல என்ன தப்பு,?உண்மையிலேயேப் பாசம், இருந்திருந்தா, உங்கம்மா இப்படி செஞ்சிருப்பாளாடா? தங்கச்சி,தங்கச்சி, னு தலை மேலத் தாங்கினேனே? “ என்று வேதனையுடன் கேட்டார் ரத்னவேலு.
“அப்பிடி எங்கம்மா,என்னத்தப் பெருசாப் பண்ணிட்டா? ஏதோ அண்ணன் மகத் தன் வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டது ஒரு குத்தமா? “என்றான் மணி.
“ஆசைப்படுறதுல தப்பே இல்ல. அதுக்கு மத்தவங்களுக்கும் விருப்பம் இருக்கனுமில்ல? அப்படி விருப்பம் வர மாதிரி நீ நடந்துட்டு இருந்தியா? சண்டியர்தனம் பண்ணிட்டு இருந்தா யாருக்கு தான் பொண்ணைக் குடுக்க, மனசு வரும்?”என்றான் ஆனந்த்.
“ இந்தாய்யா மிலிட்டரி, நீ என்ன பெரிய இவனாட்டம் பேசுற? நீ உன் வேலைல சரக்கே அடிக்காமத்தான் இருந்தியா? என்னை சொல்ல வந்துட்ட? ரெண்டாந்தாரத்துக்கு நானே அதிகம் இதுல வாய் பேசுறான்” என்றான் மணி.
“டேய் மரியாதையா வெளியப் போடா” என்றார் ரத்னவேலு. இதற்குள் சாப்பிட்டு முடித்து அனைவரும் வந்துவிட, ஆனந்துக்கும், ரத்னவேலுவுக்கும் தர்மசங்கடமாகிப் போனது.
அகல்யா எதை மறக்கவேண்டும் என்று எண்ணி இந்த திருமணத்தை செய்தார்களோ, அதையேத் திரும்ப, திரும்ப நினைவுபடுத்துவது போல
சம்பவங்கள் நடக்க, எரிச்சல் வந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக மணி, அகல்யாவைக் கண்டதும், “அடியேக் குள்ளக்கத்திரிக்கா, பெரிய சீமையில்லாத அழகின்னு, உன்னை ஆளாளுக்கு,இந்த தாங்கு தாங்குறானுக. உன்னையெல்லாம் முன்னாடியே செஞ்சு விட்டுருக்கனும்டி. அப்போ குடும்பமே என் காலப் பிடிச்சிரு.. “முடிக்கும் முன் பட்பட்டென அறை வாங்கினான்.
ஆனந்த் வெளுத்துவிட்டான். அவனை விலக்குவது கடினமாகிப் போனது. சிபி, தீபக்,சங்கரன் என மூவரும் சிரமப்பட்டு விலக்கினர்.
ராணுவத்தான் பலம் இப்போதும் இருப்பதால், அது மிகவும் பிராயாசையாக இருந்தது. மணிக்கு உதடு கிழிந்து ரத்தம் வடிந்தது. கிழிந்த சட்டையை இழுத்துவிட்டபடி, “யோவ் மாமா, என்னை அடிச்சிட்டீல்ல? இருக்குயா உனக்கு “என்றவனை மீண்டும் அடிக்கத் திமிறிய ஆனந்தை,ஆண்கள் அனைவரும், அவனை அடக்கினர்.
“ வீணா அடிபட்டு சாகாம போய்த் தொலையேன்டா “என்று வாசுகி விரட்டினாள். “மன்னிச்சிருங்க சம்பந்தி. இப்படி அம்மாவும், பிள்ளையும் அசிங்கப்படுத்திட்டாங்க “என்று வெட்கினார் ரத்னவேலு.
“ அட என்ன சம்பந்தி நீங்க? உங்க பொண்ணோட மதிப்பை எங்களுக்குப் புரிய வச்சிருக்காங்க. நீங்க இதுக்கு போய் வருத்தப்பட்டுட்டிருக்கீங்க?” என்றார் ராகவன்.
கண்கள் தளும்ப, கைகூப்பியபடி “உண்மையிலேயே நாங்க குடுத்து வச்சவங்க சம்பந்தி. எங்க பொண்ணைப் பத்தி நாங்களே சொல்லக்கூடாதுங்க,அவ
ரொம்ப நல்லவ “என்றார் ரத்னவேலு.
“தங்கத்தை உரசிப் பார்த்துதான் தெரிஞ்சுக்கனும்னு இல்ல சம்பந்தி. எங்க பையன் நிறைய சொல்லிருக்கான். அதனாலத்தான் நாங்களும் எதுவும் உங்க கிட்ட கேட்டுக்கல. ஒருதடவை அவன் பேச்சைக் கேட்காததால பட்டது போதும்.”
“இந்த முறை அவன் சொல்லுக்கு எந்த அப்பீலும் கிடையாது. சும்மா இந்த மாதிரி சலசலப்புகளுக்கு முக்கியத்துவம் குடுக்க வேண்டாம். வாங்க நம்ம வேலையைப் பார்க்கலாம்” என்றபடி ராகவன் வீட்டினுள் செல்ல, மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.
மற்றவர்களுக்கு மாப்பிள்ளை வீட்டினரின் பெருந்தன்மை மகிழ்ச்சியை தந்த போது, அகல்யாவுக்குள் குறுகுறுத்தது. ‘சிபிக்கு என்னை முன்பேத் தெரியுமா? எனக்கு அவரைத் தெரியாதே?’ என்று யோசித்தாள்.
யாரிடம் கேட்பது? அவனிடம் இதுவரைப் பேசவே இல்லை. எடுத்த எடுப்பிலே எப்படி கேட்பது? என்ன கேட்பது? முரளி வீட்டினர் நடத்திய விதத்தில் யாரிடமும் பேசுவதற்கே அவளுக்கு தயக்கம் வந்துவிட்டது.
ஆரம்பத்தில் ரூபிணியிடமேப் பேச பயமாக இருந்தது. ஆனால் அவளின் கலகலப்பானப் பேச்சில், மெல்ல அவள் தயக்கம் மறைந்து போயிருந்தது. அதேபோலத்தான் இப்போது ஷன்மதி பழகுகிறாள்.
அவளிடம் கேட்டு பார்ப்போமா? என்று எண்ணியவள் அவளைத் தேட, அவள் தீபக்கின் அம்மாவோடு ஏதோப் பேசிக் கொண்டிருந்தாள். ‘சரி பிறகு பார்க்கலாம் ‘என்று மனதை மாற்றிக் கொண்டாள்.
கொஞ்ச நேர ஓய்வுக்கு பிறகு. ஒரு வேன் பிடித்து, அனைவரும் கோவிலுக்கு சென்றனர். ரத்னவேலுவின் குலதெயவமான மனைகாக்கும் பெருமாளுக்கு தனது தோப்புக்குள்ளேயே சிறு கோவில் கட்டி, பூசாரி நியமித்து நித்ய பூசை செய்துவந்தார்.
பக்கவாட்டில் தென்னையும், மாமரமும் வரிசைக்கட்டி நிற்க, ஒரு புறம் வாழை தன் தோகை இலையால் தலையசைத்து வரவேற்றது.
சற்று தூரம் நடந்து செல்ல, மல்லிகை குற்றுச் செடியாகப் பராமரிக்கப்பட்டு அசெம்ப்ளியில் நிற்கும் பள்ளிப் பிள்ளைகளாக வரிசைக்கட்டி நிற்க, நடுநாயாகமாக வீற்றிருந்தார் மனைகாக்கும் பெருமாள்.
கோவிலுக்கு பின்புறம் தெப்பக்குளம் அளவில் சதுரமாகப் பெரிய கிணறும் அதனருகே பம்பு செட்டும் இருந்தது. பட்டணக்காரர்கள் வாயைப் பிளந்துவிட்டனர்.
பரபரவென உடைகளைக் களைந்து குளிப்பதறாகுத் தயாரானார்கள். “ச்சே லக்கேஜூக்கு அலுத்துக் கரெக்டா துணியைக் கொண்டுவந்துட்டேன். இதெல்லாம் தெரிஞ்சிருந்தா கூடுதலா எடுத்துட்டு வந்திருக்கலாம். இந்த ஆம்பிளைகளப் பாருங்க, ஒரு துண்டைக் கட்டிட்டுக் குளிச்சிடலாம்” என வருந்தினாள் ஷன்மதி.
“அதனால என்னண்ணி, உங்களுக்கு விருப்பம் னா என்னோட டிரஸ்ஸப் போட்டுக்கோங்க. அப்பாட்ட சொல்லி எடுத்திட்டு வர சொல்றேன் “என்றாள் அகல்யா.
கண்கள் விரிய சந்தோசத்தில் “அப்படி செய்யலாம்ல? நானும் குளிக்கவா?’ என்றவளை சிரித்தபடி “குளிங்கண்ணி, என்னோடதும், ரூபிணியண்ணியோடதும் கொண்டு வர சொல்றேன். எது பிடிச்சிருக்கோப் போட்டுக்கோங்க” என்றவளைக் கட்டிக் கொண்டு “தேங்க்ஸண்ணி” என்றாள் ஷன்மதி.
சாவித்ரியின் மனம் பழைய நினைவில் கசங்க, “அக்கா கண்டதையும் நினைச்சுக் குழம்பாத. நமக்கு நல்ல காலம் வந்துட்டு. அதான் தங்கமானப் பொண்ணு அமைஞ்சிருக்கு “என்றாள்.
மோட்டாரை ஆனந்த் போடவும் சீறிப் பாய்ந்த நீரைக் கண்ட அனைவருக்குமே குளிக்க ஆவல் வந்தது. சிறியவர்கள் ஆனந்தக் குளியலில் திளைத்திருக்க,முன்புறம சென்று பெரியவர்கள் துணியை விரித்து காலை நீட்டி அமர்ந்துவிட்டனர்.
ஆனந்த் பக்கத்து டீக்கடையில், சொல்லி, டீ, காபி, பலகாரத்திற்கு ஏற்பாடு செய்ய, அருமையான பிக்னிக் வந்த மனநிலை அனைவருக்கும் தோன்றியது.
ஆனந்த், டீக்கேனிலிருந்து, டீயைப், பிடித்து டம்ளர்களில் நிரப்பித் தர அதை அகல்யா, எடுத்து அனைவரிடமும் கொடுத்தாள். ரூபிணி ஷன்மதிக்கு மாற்றுத்துணி எடுக்க வீட்டுக்கு சென்றிருந்தாள்.
“ இந்தாங்க அத்தை, சின்னத்தை, மாமா, சின்ன மாமா, பெரியம்மா” என்று சரியான முறை சொல்லி அனைவரிடமும் கொடுத்ததைப் பார்த்த ராகவனுக்கு மனதில் பெரும் நிம்மதி.
அகல்யா, அந்தப் பக்கம் குளித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கொடுப்பதற்காக நகர்ந்தபோது,” தப்பு பண்ணிட்டோம் சாவி, முதல்லயே, பையன் பேச்சைக் கேட்டிருக்கனும். “என்று ராகவன் சொல்ல, “படணும்னு இருந்துருக்கு விதி வேற என்ன சொல்ல? “என்றாள் சாவித்ரி.
“ அய்யய்ய, பழசையே நினைக்காதீங்கன்றேன் மறுபடி, மறுபடிக் குப்பையைக் கிளறிட்டு…, விட்டுத் தொலைவீங்களா…” என்று வளர்மதி படபடக்க, “ஆமாண்ணே அதப்பத்தியே நினைக்காதீங்க, கெட்ட கனவா மறந்துடுங்க “என்றாள் தீபக்கின் அம்மா வசந்தா.
குளிப்பவர்களிடம் “மாப்ள, டீக் குடிச்சிட்டு, கன்டினியூ பண்ணுங்க “என்றழைத்தான் ஆனந்த். டம்ளரை வரிசையாகக் கொடுத்தாள் அகல்யா “இந்தங்கண்ணா “என்று தீபக்கிடம் கொடுத்தவள், ஷன்மதியிடம் முதலில் ஒரு டம்ளரைக் கொடுத்துவிட்டு மீண்டும் ஒரு டம்ளரை அவளிடம் தந்து, “இந்தாங்கண்ணி, இது அவருக்கு “என்றாள்
“ எவருக்கண்ணி? “என்று கேட்டவளிடம், “உங்க அண்ணனுக்கு “என்று மெல்லியக் குரலில் சொன்னாள் அகல்யா. “நீங்களேக் குடுங்க,உங்க அவருக்கு” என்றவள், இன்னமும் குளித்துக் கொண்டிருந்த சிபியை நோக்கி, “ஏய், அண்ணியோட அவரே இங்க வா. உன் வீட்டம்மா, உனக்கு டீ குடுக்கனுமாம் “என்று கேலி செய்தாள்.
ஒரே நேரத்தில், நவீனும், சிபியும் வர இருவரும் லேசாக மோதியதில் தண்ணீரும் வழுக்க, பேலன்ஸ் தவறி இருவருமே,சறுக்கி
விட்டார்கள்.
சொத்தென வழுக்கியவர்கள், உட்கார்ந்துவிட, “ஐயோ “என அலறிவிட்டாள் அகல்யா. என் ராசி அதற்குள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதா என்றெண்ணியவள் உடல் நடுங்கத் தொடங்கியது.
தொடரும்..
