இதழ் – 3

கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்விழித்த அருவி அதிர்ந்தாள். ஏனெனில்! அவள் அருகில் ராகவன் இல்லை.

 

“இங்க தானே இருந்தார். எங்கே போய் இருப்பாரு?” என்றவள், அப்போது தான் தன்னை கவனிக்க, அவளது ஆடை அலங்காரம் எதுவும் களையாமல் அப்படியே இருந்தது.

 

“அச்சச்சோ!” இவ்ளோ நேரம் நம்ம கண்டது கனவு என வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, அப்போது கதவு மீண்டும் பலமாக தட்டும் சத்தம் கேட்டது.

 

“இந்நேரம் யார்? எப்படி கதவ தட்டுறாங்கன்னு தெரியலையே” என்று வேகமாக வந்து கதவைத் திறக்க.

 

அறைக்குள் வந்த ராகவன் அவளை தள்ளிக் கொண்டு உள்ளே வந்ததும் வேகமாக கதவை பூட்டினான்.

 

ஒருவித நடுக்கத்துடன் அருவி அவனைப் பார்க்க,

 

“எவ்வளவு நேரம் கதவ தட்டுறது? இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த?”

 

“நான் வந்து… தூங்கிட்டேன்.”

 

“உன்ன பாத்தா தூங்கினது மாதிரி தெரியலையே!!” என அவன் அவளை ஒரு மாதிரியாக பார்க்க.

 

“நான் தூங்கிட்டு தான் இருந்தேன். கதவு திறக்க சத்தம் கேட்டுச்சு. அதனாலதான் பயந்து போய் எழுந்திருச்சேன்” என்றாள் மெதுவாக.

 

அவன் அவளை முறைத்து பார்க்க.

 

“இப்ப இவர் எதுக்கு இப்படி முறைச்சு பார்க்கிறார்?” என அவள் நினைத்துக் கொண்டிருக்க.

 

அறையை சுற்றி பார்த்தான் ராகவன். அவனுடைய அறை மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த அலங்காரத்தை பார்த்ததும் அவனுக்கு உள்ளுக்குள் வெறுப்பு தான் வந்தது.

 

அருவி அவனையே தான் கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருக்க,

 

டேபிளில் இருந்த பால் சொம்பை பார்த்து அவனுக்கு ஆத்திரம் தலைக்கேற, வேகமாக சென்றவன் அந்த பாலை எடுத்து வந்து வாஷ்பேஷனில் ஊத்தினான்.

 

“இவர் என்ன பண்றார்?” என நினைத்தவள், “என்னங்க! என்ன பண்றீங்க?” என கேட்டாள் மெதுவாக.

 

“பார்த்தா!! தெரியல? பாலை கீழே ஊத்தறேன்.”

 

“ஏன்?”

 

“பால் எல்லாம் எனக்கு பிடிக்காது.”

 

“உங்களுக்கு பிடிக்கலைன்னா எனக்கு கொடுத்திருக்கலாம்ல. எனக்கு பால்னா ரொம்ப பிடிக்கும். நானே எல்லா பாலையும் குடிச்சிருப்பேன்” என்றாள் அருவி.

 

வேகமாக அவளை திரும்பி பார்த்தவன் டேபிளில் சொம்பை வைத்துவிட்டு,

 

“நான் அவ்வளவு தூரம் சொல்லியும், நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க” என்றான்.

 

“உங்களுக்கும் என்னை புடிச்சிருக்கு. எனக்கும் உங்களை பிடித்திருந்தது. அதனால் தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.”

 

“இவ என்ன சொல்றா?” என நினைத்தவன், “நிச்சயம் பண்ண வந்தப்போ நான் உன்கிட்ட சொன்னதுக்கு அப்புறமும் உனக்கு என்னை புடிச்சிருந்துச்சா?”

 

“ஆமா! நிச்சயதார்த்தம் பண்ண வந்தப்போ நாம தனியா பேசும் போது என்னை புடிச்சிருக்குன்னு சொன்னீங்க.”

 

“நீ என்ன சொல்ற?” என ராகவன் புரியாமல் கேட்க.

 

“ஆமா! அன்னைக்கு நீங்க என்கிட்ட பேசும்போது இந்த கல்யாணத்துல அப்படின்னு சொன்னீங்கல்ல…”

 

“ஆமா!”

 

“அப்போ எனக்கு வெக்க வெக்கமா வந்துருச்சு.”

 

“சரி.”

 

“அப்படியே நான் கீழ ஓடிட்டேன்” என்றாள் அருவி.

 

“அப்ப நான் பேசுனத நீ கேட்கலையா?”

 

“இல்லையே.”

 

“ஒரு வார்த்தை கூட கேக்கலையா!!”

 

“நீங்க சொன்ன எதையுமே நான் கேட்கலையே” என்றாள் வெகுளியாக.

 

அவள் கூறியதை கேட்டவனுக்கு எரிச்சல், கோவம் வந்தாலும் பொறுமையாக அவளிடம் பேசினான்.

 

“உன் பேர் என்ன?”

 

“அருவி.”

 

“ம், இங்க பாரு… அன்னக்கி உன்கிட்ட சொன்னதை இப்போ மறுபடியும் சொல்றேன். ஒழுங்கா சொதப்பாம கேளு சரியா?”

 

“ம்… சரி” என்றாள்.

 

“முதலில் நீ பெட்ல உட்காரு. நான் சொல்றத நிதானமா கேளு.”

 

“சரிங்க” என்றாள்.

 

ராகவன் பேச ஆரம்பிக்க,

 

“ஒரு நிமிஷம்!” என்றாள்.

 

“என்ன?”

 

“எனக்கு ஒரு உதவி பண்றீங்களா!!” என கேட்டாள் அருவி.

 

“என்ன? சொல்லு.”

 

“எனக்கு இந்த டிரஸ், நகை எல்லாம் ரொம்ப தொந்தரவா இருக்கு.”

 

“அதுக்கு…!”

 

“இதை கழட்டுவதற்கு… எனக்கு நீங்க உதவி பன்றிங்களா? ப்ளீஸ்” என வெகுளியாக கேட்டவளை பார்த்து திகைத்தான்.

 

“கடவுளே!! நான் என்ன சொல்ல வரேன்… இவ என்ன சொல்லிட்டு இருக்கா?” என்றவன், “முதல்ல நான் சொல்றதை கேளு” என்றான் பொறுமையை கட்டுப்படுத்திக் கொண்டு.

 

“சரி… சொல்லுங்க”  

 

“ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல போறார் போல” என பெட்டில் அமைதியாக அமர்ந்து அவன் சொல்வதை கேட்க ஆரம்பித்தாள் அருவி.

 

“உன்னை பொண்ணு பாக்க வர்றதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்தது இதுதான்” என்றவன், அன்று நடந்ததை கூற ஆரம்பித்தான்.

 

அன்று வழக்கம் போல் ஆபிசில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன்.

 

அப்பொழுது அவனுக்கு அவசரமாக போன் செய்தார் அவன் தந்தை சேது ராமன்.

 

“ஹலோ! சொல்லுங்கப்பா.”

 

“ராகவா… ராகவா…” என தந்தையின் குரலை கேட்டவன்.

 

“என்ன ஆச்சுப்பா? ஏன் பதட்டமா பேசுறீங்க?”

 

“அம்மாவுக்கு பிரஷர் அதிகமாகி தலைசுற்றி கீழே விழுந்துட்டா.”

 

“என்னப்பா! சொல்றீங்க. இப்ப அம்மா எப்படி இருக்காங்க? எங்க இருக்காங்க?”

 

“நாங்க யமுனா ஹாஸ்பிடல இருக்கோம். நீ சீக்கிரமா வந்துடு ராகவா.”

 

“அப்பா!! நீங்க கவலைப்படாதீங்க. நான் இப்போ உடனே வந்துடுறேன். எனி டைம் டாக்டரும், நம்ம ஃபேமிலி டாக்டரும் அங்க இருப்பாங்க. நான் உடனே வரேன்” என கார் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாக காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தான்.

 

இங்கு சரஸ்வதி அருகில் அமர்ந்து கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார் சேது ராமன்.

 

“ஏன் சரஸ்வதி இப்படி பண்ற? அடம் பிடிக்காத. தயவு செய்து இந்த ஒரு டம்ளர் பாலையாவது குடி.”

 

“வேண்டாங்க… எனக்கு எதுவும் வேண்டாம். நான் ஆசைப்பட்டது ஒன்னு தான். ஒரு பெத்த பிள்ளை கிட்ட ஒரு பெத்த தாய் இத கூட எதிர்பார்க்க கூடாதா!! என் பிள்ளையால இந்த விருப்பத்தை கூட செய்ய முடியலன்னா நான் எதுக்கு உயிரோட இருக்கணும்? நான் சாகுறேன்” என அழ.

 

“தயவுசெய்து நான் சொல்றதை கேளு… ஏற்கனவே உனக்கு உடம்பு சரியில்ல.”

 

“போகட்டும்… எனக்கு ஏதாவது ஆகட்டும். என்னை பத்தி கவலைப்பட யாரு இருக்கா?” என சரஸ்வதி கூறிக் கொண்டிருக்கயில் வேகமாக அந்த அறைக்குள் வந்தான் ராகவன்.

 

தன் தாயின் கையை பிடித்துக்கொண்டு, “அம்மா!! உங்களுக்கு என்னாச்சும்மா?…” என தவிப்புடன் கேட்க.

 

“கையை விடுடா… என்கிட்ட பேசாத” என அவன் கையை உதறி விட்டார் சரஸ்வதி.

 

“அம்மா!! ஏன் இப்படி பேசுறீங்க? உங்களுக்கு பிரஷர் அதிகமாகி மயங்கிட்டிங்கனு நான் எப்படி பதறி ஓடி வந்தேன் தெரியுமா?”

 

“நடிக்காதடா. எல்லாம் வேஷம்… வேஷம். பாசமே இல்லை… எல்லாமே பொய். பாசமா இருக்குற மாதிரி நடிக்கிற.”

 

“அம்மா… மேல பாசமா இருக்கற மாதிரி எந்த பையனாவது நடிப்பாங்களா!! தயவு செய்து இப்படி பேசாதீங்க ம்மா. எனக்கு கஷ்டமா இருக்கு.”

 

“நீ பேசுறத கேட்கும் போது எனக்கும் அப்படித்தான்டா கஷ்டமா இருந்திருக்கும். உனக்கு மட்டும் தான் மனசு இருக்கா!! எனக்கெல்லாம் மனசு இல்லையா! எனக்கு கஷ்டம் வராதா? எனக்கு வலிக்காதா?” என்றார் கோவமாக.

 

“சரஸ்வதி இப்படி எல்லாம் கோவமா பேச கூடாதுன்னு இப்ப தான டாக்டர் சொல்லிட்டு போனாங்க.”

 

“சும்மா இருங்க… அந்த டாக்டருக்கு என்ன தெரியும்? என் மனசு படுற பாடு, வேதனை… மனசு கேக்க மாட்டேங்குது. நிம்மதியா தூங்க முடியல… சாப்பிட முடியல… எதுக்கு நான் இப்படி டெய்லி டெய்லி சித்திரவதை அனுபவிக்கணும்? கவலைப்படணும்? அதுக்கு ஒரேடியா நான் போய் சேர்ந்துட்டா எல்லாரும் நிம்மதியா இருக்கலாம். இல்ல?”

 

“அம்மா! தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோங்க? ஏன் இப்படி பேசுறீங்க? எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்மா.”

 

“பொய் சொல்லாதடா! நான் இருக்கவே கூடாது. என்ன பத்தி நினைச்சு கவலையிலேயே அவரும் செத்துருவார். அதுக்கப்புறம் உன்னை கேட்க யாருமே இருக்க மாட்டாங்க. நீ மட்டும் நிம்மதியா சந்தோசமாக இஷ்டம் போல வாழலாம்.”

 

“இப்படி பேசாதீங்க அம்மா” என்றவன் கவலையில் அமைதியாக இருக்க.

 

“உன்கிட்ட நாங்க என்ன கேட்டோம்? உனக்கு நல்ல பொண்ணா பாத்து நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம். இல்லனா உனக்கு பிடிச்ச பொண்ணா பாத்து கூட கல்யாணம் பண்ணிக்கோ… கல்யாணம், குழந்தை, குட்டியுடன் நீ சந்தோசமா இருக்கனும். அதை பார்த்து நாங்க சந்தோஷப்படனு… அத தானடா!! உன்கிட்ட நாங்க கேட்டோம். ஒரு பெத்தவங்க இத கூட ஒரு பையன் கிட்ட எதிர்பார்க்க மாட்டாங்களா!!! அந்த கொடுப்பினை கூட நீ எங்களுக்கு கொடுக்க மாட்டியா? ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு கருவேப்பிலை கொத்து மாதிரி ஒன்னு பெத்தேன்… நீ இப்படி எங்க பேச்சை கேட்க மாட்டேன்னு அடம் புடிக்கிற… நாங்க எதுக்காக உயிர் வாழனும்?” என சரஸ்வதி முகத்தை மூடிக்கொண்டு அழ.

 

“ராகவா தயவு செய்து புரிஞ்சுக்கோ!! உன் அம்மா தாண்டா எனக்கு எல்லாமே! என் சொந்த பந்தத்தை மீறி அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ வரை உங்க அம்மா மனசு கஷ்டப்படுற மாதிரி நான் பேசுனது இல்ல… நடந்துக்கிட்டதும் இல்ல. ஆனா இந்த ஒரு வாரமா, உன்ன நெனச்சு அவ ரொம்ப கவலைப்படுறா… அத நெனச்சு எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா!! தயவு செய்து எங்க பேச்சை கேளு” என்றார்.

 

“ஏங்க… நீங்க எதுக்கு அவன் கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க? அவனுக்கு அவன் பிடிவாதம் தான் முக்கியம். நம்ம எல்லாம் அவனுக்கு முக்கியம் இல்ல. கொடி கட்டி பறக்கணும் அதுதானே அவனுக்கு முக்கியம். எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல நாங்க ரெண்டு பேரும் செத்துட்டோம்னு செய்தி வரும். அப்போ வந்து எங்களுக்கு கடைசி காரியத்தை பண்ணிட்டு நிம்மதியா பிசினஸ் விஷயமா வெளிநாடு, வெளிநாடா சுத்து… இதுக்கு மேல இவன் கிட்ட நான் பேச விரும்பல. தயவு செய்து அவனை இங்கிருந்து போக சொல்லுங்க. எனக்கு அவனை பாக்கவே பிடிக்கல” என சரஸ்வதி கடைசியாக கூறிய அந்த வார்த்தை கேட்டு அவனது மிகவும் வலித்தது.

 

“சரி” என்றான்.

 

“என்ன சரி?” என சரஸ்வதி கேட்க.

 

“நீங்க சொல்ற பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் ராகவன்.

 

“நிஜமாவா!” என சரஸ்வதிக்கு மனதில் சந்தோஷம் தாங்கவில்லை.

 

“உண்மையாவா! நிஜமாவா சொல்ற ராகவா?”

 

“ஆமா.”

 

“நாங்க சொல்ற பொண்ணை நீ கட்டிக்கிறியா!? என்னால சந்தோசம் தாங்க முடியல… என்னங்க! நம்ம பையன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான்.”

 

“ஆமா” என்றார் சேது ராமன்.

 

“நாளைக்கு இல்ல… இரண்டு நாள் கழிச்சு பொண்ணு பாக்க வரோம்னு அவங்களுக்கு சொல்லிடுங்க.”

 

“சரி” என்றார்.

 

“அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. அழகாவும் இருப்பா. நம்ம ராகவுக்கு ஏத்த ஜோடி.”

 

“அம்மா உடனேவா… எல்லா வேலையும் பார்ப்பிங்க. இன்னும் கொஞ்ச நாள்!!”

 

“முடியாது டா… நீ சரின்னு சொல்லிட்டல… உடனே உனக்கு கல்யாணம் பண்ணி தான் ஆகணும்.”

 

“சரி… என்னமோ பண்ணுங்க” என்றான்.

 

“இப்ப புரிஞ்சுதா? எங்க அம்மா அப்பாவுக்காக, அவங்களோட வற்புறுத்தலுக்காக தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன். இத தான் அன்னைக்கு நான் உன்கிட்ட சொன்னேன். நீ கேட்காம…” என்றவன், “நாம இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கோம்… என்ன சத்தத்தையே காணோம்?” என திரும்பி பார்க்க…

 

பெட்டில் நகைகள், பூ எல்லாவற்றையும் கழட்டி ஓரமாக வைத்து விட்டு, நன்றாக அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள் அருவி.

 ❤️‍🔥​❤️‍🔥​❤️‍🔥​❤️‍🔥​❤️‍🔥​

♥️ அவன் சொன்னதை அவ கேட்டாளா? இல்லையாண்ணு தெரிலயே! தெரிஞ்சுக்க… தொடந்து இந்த கதையை படிங்க பிரண்ட்ஸ் ❤️

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,350 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page