வெந்து தணிந்த இதயம்-6

நான் உங்கள் AY_84

வெந்து தணிந்த இதயம் 6

 

பத்ரவேல் பாண்டியன் யாருக்கும் தெரியாமல் தெய்வானையை மட்டும் அக்கோவிலுக்கு அழைத்துச்சென்று உடனே வந்துவிடலாம் என நினைத்தால் அதற்கு பாதகம் விளைவிக்கும் விதமாய் வந்தவர்களை கண்டு நொந்துகொண்டே, “போய் ஏறித்தொலைங்க” என்றான்.

 

பின் இருக்கையில் யாழினியின் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டான் சஷ்டிவேல் பாண்டியன்.

 

அந்தக் காரில் அப்படி காற்றோட்டமாக பயணம் செய்தது அனைவருக்குமே ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு உணர்ச்சியை கிளப்பிவிட்டது.

 

வழியில் பூக்கடையைப் பார்த்ததும், “எனக்கு தாமரைப்பூ வேணும் மாமா” என்று வண்டியை நிறுத்தச் சொன்னாள் தெய்வானை.

 

ஆனால், அவன்‌ நிறுத்தவில்லை. கோவிலிலேயே நிறுத்தினான்.

 

“இங்க இருக்க எல்லாருக்கும் உன்னை என்னை நம்ம தாத்தாவை நல்லாத் தெரியும் தெய்வானை. சோ, சீக்கிரமா சாமி கும்பிட்டுட்டு வா” என்று சொல்ல, உர்ரென்று சென்றாள்.

 

அவர்கள் அந்தக் கோவிலுக்குள் சென்றதும் பத்ரி மட்டும் சற்று தள்ளி இருந்த ஆலமரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டான்.

 

சாமி கும்பிட்டதும் யாழினி தெய்வானையை கடுப்பேற்றும் விதமாய் சஷ்டிக்கு நெற்றியில் குங்குமம் பூசிவிட, அதனை வலி நிறைந்த கண்களோடு கண்ட தெய்வானை மனதிற்குள் குமுறினாள். ஏனெனில் பத்ரிக்கு தான் இது போன்ற விசயங்கள் பிடிக்காதென்று அவளுக்கு தெரியுமே.

 

சாமி கும்பிட்ட பின் அனைவரும் நின்ற காலில் செல்லக்கூடாதென அருகிலிருந்த கல்மேடையில் சென்று அமர, சஷ்டி தெய்வானையை வம்பிழுத்தான்.

 

“யாழு எப்ப நம்ம கல்யாணம் நடந்தாலும் சரி, கண்டிப்பா நாம இந்தக் கோவிலுக்கு வரனும்.” என்று தெய்வானையின் ரத்த அழுத்தத்தை உயர்த்தினான்.

 

யாழினி இது சரிபடாதென்று அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டி தனியாக சுற்றிப் பார்க்க கிளம்பினாள். அவள் ஒரு ஆலமரத்தின் அருகில் வந்தபோது சட்டென்று வெளிப்பட்ட பத்ரி அவளை அருகில் இழுத்து அவளின்‌ நெற்றி குங்குமம் தன் நெற்றியில் படும்படி உரசினான்.

 

அதற்கு அவன் அவளின் இடையைப் பிடித்து தூக்கியிருக்க, அவன் விரல்கள் தந்த குளிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனாள் யாழினி. 
அவனோ பிழை அவள் மேல் தான் என்பது போல் இமைக்காமல் பார்த்தான். அதுவும் ஏறியிறங்கும் மூச்சுக்காற்று தமுக்கடிக்கும் அவள் அழகை அடாது பார்த்தான்.

 

அவனின் பார்வையில் தனது உடலுக்குள் உண்டாகும் மாற்றங்கள் அவளுக்கே விந்தையாகத் தான் இருந்தது. ஆனாலும், அவனின் பிடி தளர்ந்த சமயத்தில் அவனின் காலின் மேலேயே தனது குதிங்கால் உயர செருப்பால் ஊன்றி நின்று நன்றாக நசுக்கிவிட்டாள்.

 

அவன் வலியை மறைத்து மோகன புன்னகை சிந்தியபோது தன் ஷராராவின் பேண்ட்டை நன்றாக மேலே இழுத்துவிட்டவள், “பழிக்குப் பழி” என்றுவிட்டுப் போனாள்.

 

பத்ரிக்கு அது நகைச்சுவையாக இருந்தது.

 

இந்தப் பக்கம் சஷ்டியோ தெய்வானையின் அழகை கோவில் தீர்த்தம் போல் மிடறுமிடறாக உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவனை மனதிற்குள் திட்டியபடி குனிந்து கொழுசை நோண்டிக் கொண்டிருந்தாள் தெய்வானை.

 

இவர்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு படாத பாடுபட்டவள் என்னவோ யாழினி தான்.

 

குங்குமத்தில் குளித்திருந்த அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஒரு குடும்பம் கிடாவெட்டி விருந்து படைக்க, அதை பிரசாதமாக வாங்கி சாப்பிட்டார்கள் சஷ்டியும், யாழினியும்.

 

தெய்வானை அவர்கள் இலையில் தந்த பிரசாதத்தை, “உவேக்” என்று அருவருப்புடன் கீழே போட, பிரசாதத்தை வழங்கியவர்கள் முறைத்தார்கள்.

 

அவர்களிடம், “அவளுக்கு நான்வெஜ் பிடிக்காது அதான். தப்பா எதுவும் நினைக்காதீங்க” என்று சமாளித்தான் சஷ்டி.

 

விருட்டென்று அவளின் புஜத்தை பிடித்து சற்று தள்ளி இழுத்து வந்தவன், “தெய்வா நம்ம வீட்டுல மட்டும் பத்ரகாளியம்மன் கோவில் பிரசாதம் வந்தா கும்பிடு போட்டு சாப்பிடுற. இங்க மட்டும் என்ன?” என்று ஆத்திரமாகக் கேட்டான்.

 

“ஹாங் இது தீட்டு” என்று சொல்லி முடித்தபோது எச்சில் கையுடனே அவள் கன்னத்திலொரு அறைவிட்டான்.

 

“ஐந்து வீட்டு பெரிய சாமிகள் கதை தெரியுமாடி உனக்கு? உன்னை மாதிரி ஆளுங்களுக்காகத் தான்டி அந்த தெய்வம் பிரசாதம்னா எவன் படைச்சாலும் பிரசாதம் தான்னு பொட்டுல அடிச்சாப்ல சொல்லியிருக்கு. ஒருத்தன் சாமிக்கிட்டப்போய், சாமி நான் தாழ்ந்த குலம்னு சொல்லி நான் படைச்ச பிரசாதத்தை எவனுமே சாப்பிட மாட்டிக்கிறானு முறையிட்டிருக்கான். அதுக்கு அந்த சாமி ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி உன் பிரசாதத்தை அங்க புதைச்சு வை, ஒரு வருசம் கழிச்சி வந்து அதை திறந்து பாருன்னு சொல்லியிருக்கு. அவனும் அதுபடியே செஞ்சிருக்கான். அப்போ அவன் புதைச்ச இடத்துல முந்தின வருசம் அவன் புதைச்ச மாதிரியே பிரசாதம் ஆவி பறக்க இருந்துச்சாம். போன தடவை எவன் எவன்லாம் சாப்பிடமாட்டேனு சொன்னானோ அவனெல்லாம் போட்டிப் போட்டுக்கிட்டு சாமி பிரசாதம்னு அள்ளி அள்ளி தின்னானுகளாம். ஏன்டி ஒவ்வொரு தடவையும் இப்படி சாமி வந்து ஒரு சம்பவத்தை செஞ்சா தான் நீங்க எல்லாம் திருந்துவீங்களா? ஒன்னு புரிஞ்சிக்கோ! எல்லா தெய்வமும் அதர்மத்தை எதிர்த்து தர்மத்தை நிலைநாட்ட தான் இருக்கு. நீ இந்த சாமி நாம நினைச்சதை நிறைவேத்தும்னு மட்டும் நம்புற இல்ல? அப்ப அதுக்கு படைச்சதையும் பிரசாதம்னு நினை. மனுசங்களை இப்படி பேதப்படுத்திப் பார்க்காத.” என்று சொல்ல, தன் கன்னத்தை பிடித்துக்கொண்டே பத்ரியிடம் ஓடினாள் தெய்வானை.

 

சஷ்டியின் கையைப் பற்றிய யாழினியோ, “அவளை அடிச்சிருக்க வேணாம் சஷ்டி. இப்ப மறுபடியும் அவ உன்னை வெறுக்க ஆரம்பிச்சிருவா” என்று வருத்தப்பட்டாள்.

 

“அதுக்கு முன்னாடி நான் அவளை வெறுத்துருவேன் போலயிருக்கு” என்று வேதனைகொண்டான் சஷ்டி.

 

‘இந்த ரத்னவேல் பாண்டியன், ஜெயந்தி, தெய்வானையெல்லாம் ஒரே கோஷ்டி தான்’ என்று மனதிற்குள் தாளித்தாள் யாழினி.

 

மறுபுறம் அழுதுகொண்டே சென்ற தெய்வானை பத்ரியிடம், “மாமா அந்த சஷ்டி என்னை அடிச்சிட்டான். நீங்கப்போய் அவனை அடிங்க” என்று உசுப்பிவிட,

 

“எதுக்கு அவன் உன்னை அடிச்சான்?” என்று ஆத்திரப்பட்டான் பத்ரி.

 

அதற்கு அவள் நடந்ததைக் கூற, “அவன் எந்தக் கன்னத்துல அடிச்சான்?” என்று கேட்டு தெரிந்துகொண்டு, அதற்கு மறுகன்னத்தில் அவளை அறைந்தான் பத்ரி.

 

அவள் அலறிய சத்தம் கேட்டு ஓடிவந்த யாழினியும் சஷ்டியும் அவளை அக்கறையாகப் பார்க்க, இருக்கன்னத்தையும் பிடித்தபடி தரையில் விழுந்து கிடந்தாள் தெய்வானை.

 

அக்கணம் மீண்டும் யாழினியின் கண்களுக்கு கதாநாயகனாகத் தெரிந்தான் பத்ரி எனும் பத்ரவேல் பாண்டியன்.

 

அக்கோவிலுக்கு வரும்போது ஜீப்பில் முன்னால் உட்கார்ந்திருந்த தெய்வானை தற்போது தன் இரு கன்னங்களையும் பிடித்து அழுதபடி பின்னால் யாழினியுடன் உட்கார்ந்திருந்தாள். சஷ்டியோ பத்ரியின் பக்கத்தில் அமர்ந்திருந்தான்.  

 

பத்ரி ஜீப்பை வேகமாக ஓட்டிச்சென்றபோது வழியில்  ஒருவர் தனக்கு வயலில் பாம்பு கடித்து விட்டதாகக்கூறி அவசரமாக மருத்துவமனை‌ கொண்டுபோய் விடச் சொன்னார்.

 

பத்ரி உடனே சஷ்டியிடம், “நீ பின்னாடி போய் உட்காரு” என்றான்.

 

அவனும் சென்றான். ஆனால், தெய்வானை தான் கொதித்துப்போய் கத்தினாள்.

 

“மாமா என்ன பண்றீங்க நீங்க? தாத்தாவுக்கு நாம இப்படி கிழக்குத்தெரு ஆளுங்களுக்கு வண்டியில லிப்ட் கொடுத்தது தெரிஞ்சா என்ன பண்ணுவார் தெரியுமா? வண்டியையே கொளுத்திருவாரு. அவங்களை எல்லாம் வண்டியில ஏத்தாதீங்க” என்று மனிதநேயமின்றி கூறினாள்.

 

அவன் அவள் கூறியது எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை எனவும், வண்டியை விட்டு வீம்பாக இறங்கியவள் பொத்தென்று மயக்கம்போட்டு விழுந்தாள். உடனே ஓடிவந்து அவளைத் தன் மடியில் தாங்கினான் சஷ்டி.

 

பத்ரி ஜீப்பிலிருந்து தண்ணீர் குடுவையை எடுத்துக் கொடுத்தவன் அவளுக்கு என்ன ஆனதோ என்று பதறிப்போய் பார்க்க, சஷ்டிக்கோ உயிரேப் போய்விட்டது.

 

தண்ணீரை அவள் முகத்தில் தெளித்து, “தெய்வா.. தெய்வா” என்று கன்னத்தைத் தட்டினான்.

 

விழித்துப் பார்த்தவள் தன் முகத்தின் அருகில் கண்கள் கலங்கிப்போய அமர்ந்திருக்கும் சஷ்டியைப் பார்த்து, நீயா எனக்காக துடிக்கிறாய்? என்று அவனை விழியெடுக்காது பார்த்தாள்.  

 

கூடவே தான் அவன் மடியில் கிடப்பதும், மூன்றாம் மனிதன் போல் பத்ரி தள்ளி நின்று எட்டிப் பார்ப்பதும் அவள் மனதை பிசைந்தது.

 

சஷ்டியோ அவளிடம் செல்லமாகக் கடிந்தான்.

 

“இதுக்கு தான் நான் சாப்பிட சொல்லி அடிச்சேன். பாரு பசியில மயக்கம் போட்டு விழுந்துட்ட. பத்ரி நீ அவரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ. நான் இவளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுத்து நேரா வீட்டுக்கு வந்திடுறேன்.” என்றதும்,

 

சரியென்றவன் யாழினியைப் பார்த்து, “நீ அவங்கக்கூட போகல?” என்றான்.

 

அவள் தெய்வானைக்கும் சஷ்டிக்கும் ஒரு புரிதல் வரவேண்டி, “இல்ல நான் உங்கக்கூடவே வந்திடுறேன்” என்றாள்.

 

சஷ்டி தெய்வானைக்கு துணையாக வயலில் இறங்கி நடக்க ஆரம்பித்தவன், “நீங்க போங்க” என்று சைகை செய்தான்.

 

பத்ரி பாதிக்கப்பட்டவரை வண்டியில் ஏற்றி நேரே மருத்துவமனையில் கொண்டுபோய் விட்டான். மருத்துவரிடம் அவரை உடனடியாக கவனிக்கச் சொல்லிவிட்டு திருப்தியாக வண்டியை இயக்க, அவனைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள் யாழினி.

 

வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனோ, “ஹலோ யா…ழினி! நீங்க இப்படி ரசிச்சிப் பார்க்கற அளவுக்கு நான் ஒன்னும் நல்லவன் இல்லங்க. நான் ஒரு விசயம் பண்றேனா அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். காலைல அந்த அம்மாவோட பிள்ளைக்கு ஃபீஸ் கட்ட பணம் கொடுத்தது, இப்ப இந்த பாம்பு கடிச்சவரை ஹாஸ்பிடல் கொண்டு வந்து இறக்கி விட்டது எல்லாம் ஒரு விளம்பரத்துக்கு தான். இன்னும் ஒரு மாசத்துல வரப்போற தேர்தல்ல என்னை எம்.எல்.ஏ.வாக்க பிளான் பண்ணிட்டு இருக்காரு என் அப்பா. நானும் அதுக்கு தகுந்தாப்பல கொஞ்சம் நல்ல பேரு சம்பாரிச்சி வச்சிக்கனும்ல? அதான் இப்படியெல்லாம் பண்றேன். நீ பாட்டுக்க என்னை நல்லவன்னு நம்பி நாளைக்கு என்.ஜி‌.ஓ. ஏதாவதுக்கு ஃபண்ட் கொடுக்கற மாதிரி பண்ணிடாத.” என்று தன் ஸ்ட்ராவ்பெர்ரி ஈறுவரிசை தெரிய சிரித்தான்.

 

“விளம்பரத்துக்கு பண்றீங்களோ இல்ல வேற எதுக்கோ பண்றீங்களோ? ஆனா நல்லது பண்றீங்கல்ல? அதான் முக்கியம்” என்றாள் யாழினி.

 

அவனோ அவள்புறம் திரும்பி, “அப்படி நல்லது பண்றோம்னு நீ நினைச்சிருந்தா தாலிங்களை திருடி இருக்க மாட்ட” என்க, அவள் முகம் இருண்டுபோனது.

 

“ஆரம்பிச்சிட்டீங்களா? நான் இப்ப உங்கக்கூட வண்டியில வரவா? இல்ல நடந்து போகவா?” என்றதும்,

 

“உன்கிட்ட எப்படி அதை வசூலிக்கனுமோ அப்படி வசூலிக்கறேன்.” என்றவனின் கண்கள் அதன்பின் அவள் பக்கம் திரும்பவேயில்லை.

 

யாழினி நிம்மதியாக உணர்ந்தாள்.

 

மறுபுறம் தெய்வானையோ புலம்பியபடியே நடந்து வந்தாள்.

 

“பக்கத்துல சாப்பாட்டுக் கடைனு கண்ணுக்கெட்டின தூரம் வரை ஒரு செங்க கல்லும் இல்ல. சுத்தி பச்சை பசேல்னு வயல்வெளி தான் இருக்கு. இந்த லூசு சஷ்டி தான் சொல்றான்னா பத்ரி மாமாவும் நம்மளை இப்படி நட்டாத்துல விட்டுட்டுப் போயிட்டாரே. பசி வேற உயிர் போகுது.” என்று முனுமுனுத்தபடியே நடந்து வந்தவளை நேரே தங்களின் தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்றான் சஷ்டி.

 

அங்கு சென்றதும் வேலைப்பார்ப்பவர்களிடம் தானே வெட்டரிவாளை வாங்கி ‘சக் சக்’ என்று நான்கு தென்னங்காய்களை வெட்டிப்போட்டான். கீழே வந்ததும் அவள் அவற்றிலிருந்து இளநீர் குடிக்க ஓட்டைப்போட்டுக் கொடுத்தான்.

 

அப்போது அவள் அன்னார்ந்து குடிக்க, இளநீர் வழிந்தோடிய அவளின் சங்கு கழுத்தை எச்சில் விழுங்கியபடி பார்த்தான் சஷ்டி.

 

அவள் இரண்டு காய்களுடன் போதும் என்க, அவள் குடித்த தென்னங்காய்களை இரண்டாகப் பிளந்து வழுக்கையை உண்ணக் கொடுத்தான் சஷ்டி.

 

பின், சிறிது தூரம் சென்றதுமே நுங்கு வெட்டிக் குடித்தார்கள் இருவரும்.

 

அங்கு அருகில் ஒரு ஆலமரத்தில் இரண்டு சிறுமிகள் ஊஞ்சல் கட்டி விளையாட, “எனக்கும் அதுல விளையாடனும்” என்று அடம்பிடித்தாள் அவள்.

 

சரியென்று அங்கே அழைத்துச் சென்றவன் அந்த சிறுமிகளிடம் கெஞ்சிக்கூத்தாடி அவளை அதில் உட்கார வைத்து ஆட்டி விட்டான்.

 

“வாவ்!” என்று கத்தியபடியே முன்னும் பின்னும் வந்தாள் தெய்வானை. அவளின் சிரிப்பில் அகம் மகிழ்ந்து போனான் சஷ்டி. அவளின் வெண்பாதங்கள் அந்த சகதித்தரையில் உரசி உரசிப் போனது அவள் கால்களுக்கு மருதாணியிட்டது போன்ற மயக்கத்தை தந்தது அவனுக்கு.

 

அவள் அதில் ஆடி ஓய்ந்ததும், “போலாமா?” என்க, தரையில் குழி பறித்து பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம்,

 

“இப்பப்போய் நீங்க ஊஞ்சலாடிக்கோங்க” என்று அனுப்பி வைத்தான்.

 

அப்போது ஒரு சிறுமியின் பின்பாகத்தில் இரத்தக்கறை இருக்க, அதைக்கண்ட இன்னொரு சிறுமி, “அய்யயோ! நீ சாகப்போற” என்று மற்றவளை பயமுறுத்தினாள்.

 

அதைப் பார்த்த தெய்வானை வயிற்றைப் பிடித்து சிரிக்க, கண்டித்தான் சஷ்டி.

 

“திஸ் இஸ் நாட் அ ஜோக். போய் அந்தப் பொண்ணுக்கு விசயத்தை சொல்லு.” என்று காதோரம் குனிந்து அதட்டியவன், இன்னொரு சிறுமியை அழைத்து மற்றவளின் தாயை அழைத்துவரச் சொன்னான்.

 

அவள் ஓடிப்போய் அழைத்து வரும் வேளைக்குள் பூப்படைந்திருந்த பெண்ணிற்கு பக்குவமாக விசயத்தை எடுத்துச் சொல்லியிருந்தாள் தெய்வானை.

 

சேற்றில் நின்று களைபிடிங்கிக் கொண்டிருந்ததால் அந்த சேற்றுக்கையுடனே வந்த அப்பெண்ணின் தாய், தன் மகளை உணர்ச்சிப்பெருக்கில் ஆரத்தழுவிக் கொண்டார்.

 

அந்நிலையிலேயே அவர் அழத்தொடங்க, சஷ்டி உடனே தனது பர்ஸிலிருந்து ஆயிரம் ரூபாய் தாள்கள் நான்கினை எடுத்து அவரின் கையில் திணித்தான். கைகூப்பி நன்றி சொன்னார் அவர்.

 

அப்போது தெய்வானையின் காதுகளில் ஒருமுறை யாழினி சஷ்டியை, “ஹீ இஸ் அ ரியல் ஜென்டில்மேன்” என்றது சந்தர்ப்பவசமாக ஒலித்தது.

 

அந்த தருணத்தில் தான் அவளுக்கு எப்போது சஷ்டிக்கு தன் மேல் காதல் வந்திருக்கக் கூடும் என்பதும் புலனானது.

 

தொடரும்…

கதையை வாசித்து கமெண்ட் பண்ணுங்க தங்கம்ஸ்:)

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,853 902 5
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page