அத்தியாயம் 1

மன்மதனே உன் ரதி எங்கே?

முப்பது வருடம் முன்…

ராம்குமாரின் 15 வயதின் தொடக்கத்தின் போது அவன் பத்தாவது இறுதி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தான்… நன்றாக படிக்கும் மாணவன்… கூடவே அவனுக்கு விளையாட்டுத்தனம் துடுக்கத்தனம் எல்லாமே கொஞ்சம் அதிகம் தான்.

பத்தாவது இறுதி தேர்வு எழுதி முடித்ததும் அவன் படித்த பள்ளியில் ஆண்டு விழா வைக்கப் போகிறார்கள்… அந்த ஆண்டு விழாவில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள், மாறுவேட போட்டியில் கலந்து கொள்பவர்கள், நடனம் ஆடுபவர்கள், பாட்டு பாடுபவர்கள் எல்லாம் பெயர் கூறுங்கள் என்று கூறி இருக்க எப்போதும் போல் ராம்குமார் அவனின் பெயரை அனைத்திற்கும் தந்திருந்தான்.

ராம்குமாரின் அருகில் அமர்ந்திருந்த அவனின் நண்பன் சசிகுமார் கேட்டான் “டேய் என்ன பாட்டுக்குடா டான்ஸ் ஆட போற?” என்று.

அதற்கு ராம்குமார் காலரை தூக்கி விட்டுக் கொண்டு “டீச்சர் கேட்கும்போது சொல்றேன் டா…” என்று கூறும் போதே வகுப்பின் முன்னின்ற ஆசிரியரும் “ராம்குமார் நீ என்ன பாட்டுக்கு டான்ஸ் ஆடலாம்னு இருக்க? பாட்டு பேர சொல்லு…” என்று கேட்டு அவர் கையில் இருந்த நோட்டில் எழுத தயாரானார்.

நம்ப ஆளும் “டீச்சர் அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா அந்த பாட்டு டீச்சர்…” என்றதுமே வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களும் ஓ என்று கத்தி சிரித்தனர்.

ஆசிரியருக்கோ சினம் தலைக்கு ஏறியது… “படிக்கும் மாணவன் என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு செய்யாத அட்டூழியம் இல்லை…” என்றே நினைத்து சாக்பீஸ்சை அவனின் மீது எரிந்து “ஒழுங்கா உட்காருடா… குட்டி புலி கூட்டம் பாட்டுக்கு ஆடு…” என்று அவராகவே ஒருபாடலை எழுதிக்கொண்டார்.

அருகில் இருந்த சசிகுமார் “டேய் ராம்… உனக்கு தைரியம் அதிகம்டா… இந்த டீச்சரை பார்த்தா எல்லாரும் பயந்து நடுங்குவாங்க… நீ மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் வம்பு இழுக்குற?” என்று கேட்க

“பின்ன என்னடா எப்ப பாத்தாலும் எல்லா சப்ஜெக்ட்லையும் நான் முழு மார்க் எடுத்தா இவங்க மட்டும் இவங்க சப்ஜெக்ட்ல எனக்கு அஞ்சு அஞ்சு மார்க் குறைச்சி குறைச்சே போடுறாங்க… நான் எப்ப தான் டா எல்லா சப்ஜெக்ட்லையும் நூறு எடுக்கிறது? அதான் இந்த கலாய்… இனி இவங்க எனக்கு மார்க் போட போறது இல்லல… கவர்மெண்ட் எக்ஸாம் தானே… அதுல பாரு நான் இவங்க சப்ஜெக்ட்லையும் நூறு மார்க் எடுக்குறேன்…” என்று காலரை தூக்கி சொன்னான்.

சசிகுமார் நண்பனை கவலையாக பார்த்தே “நீ சொல்றது எல்லாம் சரிதான்… ஆனா அடுத்த வருஷம் இந்த டீச்சர் தான் லெவன்த்க்கும் வருவாங்க… அப்ப பாரு நீ இப்ப பண்ணுனதுக்கு வச்சி செய்வாரு…” என்று கூற

“ஹ ஹ… டேய் சசி… நான் என் அப்பா கிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேன்… என்னைய வேற ஸ்கூல்ல சேர்த்து விடுங்க… கண்டிப்பா சேர்த்து விட்டே தீரணும்னு நான் வீட்ல அடம்பண்ணி ஓகே பண்ண வச்சிட்டேன்… அதனால எனக்கு இவங்கள பார்த்து பயம்மில்லையே…” என்றவனை ஏக்கமாக சசி பார்த்தான்.

ஏனெனில் அவனின் அப்பா “அடிக்கடி படிக்கும் இடத்த மாத்துனா கொஞ்சம் நஞ்சம் ஏறுற படிப்பும் உன் மண்டையில ஏறாது… ஒழுங்கா இங்கையே படி…” என்று கர்ஜனையாகவே கூறிவிட சசிகுமாருக்கு தலையை ஆட்டுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

ஆனால் ராம்குமார் மிகவும் சந்தோஷமாக இருந்தான்… நண்பனின் சோகமான முகத்தை பார்த்தவன் “டேய் நம்ம அடிக்கடி பேசிக்கலாம் டா… நம்ம ஒரே தெருவில் தானே இருக்கோம்… அப்புறம் என்ன?” என்று சமாதானம் படுத்தினான்.

இப்படி மகிழ்வாக அவன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து அன்றே ஆண்டுவிழா இருந்ததால் அவன் பெயர் தந்த அனைத்திலும் நடனம் ஆடி என்று மிகவும் சந்தோஷமாக அன்றைய இரவு வரை கழித்து பரிசுகளை எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு அவன் வரும்பொழுது அவனின் தந்தை விபத்தில் இறந்து போனதாக செய்தியும் அவனுடன் வந்தது.

அப்படியே அந்த குடும்பமே இடிந்து போனது… அந்த வருடம் தான் ராம்குமாரின் அக்காவுக்கு திருமணம் நடந்திருந்தது… அந்த கடன் இருந்தது… அடுத்து ராம்குமார் அவனின் பின் தங்கை தம்பி என்று இருந்தனர்.

தந்தையின் இறப்புக்கான அனைத்து காரியங்களும் முடிந்த பிறகு தந்தையின் சொந்தக்காரர்களும் சரி தாயின் சொந்தக்காரர்களும் சரி காரியத்திற்கு வந்துவிட்டு சென்றதோடு சரி… அதன் பிறகு இவர்களின் பக்கம் கூட யாரும் வரவில்லை.

வீட்டில் ஆளுக்கு ஒரு மூலையாக அனைவரும் அமர்ந்து இருந்தனர்… ராம்குமாரின் அக்கா ராதிகா பெரியதாக படிக்கவில்லை… பத்தாவது வரை படித்திருந்தாள்… அதன்பின் வீட்டில் இருந்தாள் பதினெட்டு வயது வரைக்கும்.

அரசு மருத்துவமனையில் வண்டி ஓட்டும் வேலையில் உள்ள ராசுகுமார் என்றவருக்கு இருவது பவுன் போட்டு டிவிஎஸ் ஃபிப்டி வீட்டு சாமான்கள் வெள்ளி விளக்குகள் என்று அனைத்தும் வாங்கி தந்து ராமின் அப்பா அவரால் முடிந்ததை செய்து சந்தோஷமாக திருமணம் செய்து வைத்தார்.

மாப்பிள்ளை சொக்க தங்கம் தான்… ஆனால் மாமியார் மாமனார் கொஞ்சம் கஞ்ச தனமும் சுயநலமும் பிடித்தவர்கள்… “அடேய் ராசு… நீபாட்டுக்கு இத செஞ்சி தரேன்… அத பண்றேன்னு சொல்லி உன் மாமியா வீட்டுக்கே அழுவ நினைச்ச அவ்வளவு தான்… உன் சம்பளம் முழுக்க என் கைக்கு தான் வரணும் சொல்லிப்புட்டேன்… உனக்கும் தங்கச்சி இருக்கா நியாபகம் இருக்கு தானே…” என்றே சென்றிருக்க ராசுவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மனைவியை பார்த்தார்.

ராதிகாவுக்கு தெரியும் தந்தையின் காரியம் வரையும் தான் இங்கு தன்னால் இருக்க முடியும்… அதற்கு மேல் இங்கு இருந்தால் அங்கு மாமியார் வீட்டுக்கு செல்லும் பொழுது தன்னை மாமியார் வைத்து செய்து விடுவார் என்று… ஆகையால் அவள் கணவரிடம் கண்காட்ட ராசுவும் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய் நோட்டாக பத்து நோட்டை சேர்த்து ஆயிரம் பணத்தை மனைவியிடம் தந்து

“அடுத்து என்ன பண்றதுனு முடிவு எடுக்குற வரைக்கும் செலவுக்கு வச்சிக்க சொல்லு… இதுல சாப்பாடு இருக்கு ஒழுங்கா சாப்பிட சொல்லு… எல்லாத்தையும் கடந்து போய் தான் ஆகணும்னு சமாதானம் சொல்லிட்டு வா… கிளம்பலாம்… இன்னைக்கே போகலனா அம்மா வையும்… லீவும் இதுக்கு மேல போடமுடியாது…” என்று கூற

கணவன் தந்த பணத்தை வாங்கிய ராதிகாவிற்கு தெரியும் கணவனின் மாத சம்பளம் இருனூறு நூபாய் தான் என்று… அப்போ எங்கோ கடன் வாங்கி தான் பணத்தை கொண்டு வந்து உள்ளார் தன் குடும்பத்திற்காக என்று நினைத்த மனைவிக்கு மாமியாரின் கரிச்சி கொட்டும் வார்த்தையிலே நொந்து இருந்தவளுக்கு கணவனின் மீது இப்போது தான் புதிதாக காதலே பூத்தது.

“இருங்க பேசிட்டு வரேன்…” என்று வீட்டின் உள்ளே வந்து அம்மாவிடம் அவள் கையில் மறைத்து வைத்திருந்த பத்து ரூபாய் நோட்டு நான்கை சேர்த்து தந்து “இத வச்சிக்கோம்மா… அடுத்து எங்களால எப்ப வர முடியும்ன்னு தெரியல…” என்று கூற

மகளிடம் வாங்க தயங்கினார் பங்கஜம்.

ஆனால் மகள் அம்மாவின் கையில் வம்படியாக தந்தே “இப்படியே உன்னைய தம்பிங்க தங்கச்சிய எல்லா விட்டுட்டு போக எனக்கு கஷ்டமா இருக்குமா… ஆனா அந்தக் கிழவி இன்னைக்கே வந்தாகணும்னு சொல்லிடுச்சி… அவருக்கும் இதுக்குமேல லீவு போட முடியாதும்மா…” என்று கூற சின்ன தம்பியும் தங்கையும் வந்து ராதிகாவை அணைத்துக்கொண்டு அழுதனர்.

ராம்குமார் அப்படியே உக்காந்து இருந்தான்… சின்ன தம்பி தங்கையை சமாதானம் செய்துவிட்டு அவளே தம்பியின் அருகே சென்று அணைத்துக்கொண்டு “நடந்தது நடந்துடுச்சி அதையே நினைச்சிக்கிட்டு இருக்காமடா… நீ தான் அம்மாவுக்கும் பாப்பா தம்பிக்கு எல்லாம் துணையா இருக்கணும்…” என்று கூற அவன் எதுவும் பேசவில்லை.

பங்கஜ அம்மாவுக்கும் இனி அழுவதை விட பிள்ளைகளின் வாழ்க்கையை பார்ப்பதே சரி என்ற முடிவு உடனே மகளை மருமகனுடன் அனுப்பி வைத்தார்.

அப்பா வாங்கித் தந்த வண்டியின் பின் ஏறிய ராதிகாவிற்கு அழுகையாக வந்தது… கண்ணீருடவே அவள் அமர்ந்திருந்தாள்… ஊரை விட்டு வெளியே வரும் வரை அமைதியாக வந்த ராசு ஊரை விட்டு வெளியே வந்ததும் வண்டியை நிறுத்தி மனைவியின் கரத்தை எடுத்து தன் இடுப்பை பிடிக்க வைத்து

“நான் இருக்கேன் ராதும்மா… எப்பையும் உனக்காக நான் இருப்பேன்… அழாதம்மா…” என்ற கணவரின் முதுகில் முகம் புதைத்துக்கொண்டு கணவரின் இடுப்பை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.

சிறிது நேரம் அவளை அழவிட்டு அவளை சமாதானம் செய்தே அழைத்து வீடு சென்றார்.

மகள் சென்றதும் பங்கஜம் மூன்று பிள்ளைகளையும் பார்த்தார் கையில் இருக்கும் பணத்தை பார்த்தார்… அடுத்து என்ன செய்வது என்று யோசனையுடனே பிள்ளைகளை உக்கார வைத்து சாப்பிட வைத்தார்.

பத்தாவது தேர்வு எழுதி முடித்த ராம்குமாருக்கு அடுத்து என்ன பண்ணுவது என்று தெரியவில்லை… தம்பி தங்கை இருவரும் சிறுவர்கள்… இனி எல்லாரையும் நாம் தான் பார்த்துக்கணும்… ஆனால் எப்படி என்ற யோசனையுடன் இருந்தான்.

பக்கத்து வீட்டு பெண் ஒருவள் பங்கஜத்திடம் “அடுத்த வாரம் கட்டடம் கட்ட ஆள் எடுக்குறாங்கலாம்… நான் போறேன்… நீயும் வரனா நாளைக்கு காலையிலையே வா அக்கா…” என்று கூறி சென்றாள்.

இதை காதில் வாங்கிய ராம்குமாருக்கு “கட்டிடம் கட்டும் வேலைக்கு செல்வது என்றால் செங்கல் தூக்குவது சிமெண்ட் தூக்குவது போன்ற வேலையாக தான் இருக்கும்… இதுக்கு அம்மா போக போறாங்களா?” என்று நொந்து போனவன்

“அம்மா இந்த மாதிரி வேலைக்கு எல்லாம் நீங்க போக வேணாம்…” என்றான்.

விரக்தியான புன்னகையுடனே துணிகளை மடித்து வைத்துக் கொண்டு “இந்த மாதிரி வேலைக்கு போகாம உங்க அம்மா என்ன பெரிய ஆபிஸர் உத்தியோகத்துக்காக போக முடியும்? கிடைச்ச வேலைக்கு தான்ப்பா போக முடியும்…” என்று கூற

“அப்ப நானும் உன் கூட வரேன்ம்மா…” என்று கூற பெத்தவள் மறுக்கவில்லை… இதுவே தொடர்ந்தது… தம்பி தங்கை வீட்டில் இருந்தனர் ஒருவருக்கு ஒருவர் துணையாக.

மாப்பிள்ளை தந்த பணத்தை வாங்கிய கடனுக்கான வட்டி கட்ட என்று அம்மா வைத்துவிட்டாள்… வட்டிக்காரர் வந்து வாசலில் நின்று கத்தினால் குடும்பத்துடன் சாகணும்… அதுக்கு ஒருவேளை சாப்பிட்டு பணத்தை சேர்த்து வைத்து வட்டியையும் கடனையும் கட்டிவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

தினம் வேலைக்கு சென்று அதில் வந்த ஒருவரின் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடந்தி மற்றொருவர் வருமானத்தை சேமித்து என்று குடும்பத்தை நடத்த தொடங்கினார்.

வேலைக்கு சென்று வரும் ராம்குமாரின் கை கால் எல்லாம் வலி எடுக்கும்… இரவு அனைவரும் தூங்கிய பின் வலியில் கண்ணீர் விடுவான்… நாட்கள் ஆக ஆக ராம்குமாரின் கண்ணீரும் நின்று போனது… வேலை வேலை என்றே அவனின் நாட்கள் ஓடியது… அவனின் பத்தாவது தேர்வின் மதிப்பெண் வந்தது.

மாவட்டத்திலே முதல் மதிப்பெண் ராம்குமார் எடுத்தான்… அவனுக்கு அதற்கும் கூட சந்தோஷம் வரவில்லை… பள்ளி ஆசிரியர் நேரில் வந்து ராம்குமாரை படிக்க அனுப்ப சொன்னாங்க… அவன் எடுத்த மதிப்பெண்ணுக்கு இலவசமாக இரண்டு வருடம் படிக்க வைக்க பள்ளி தயாராக உள்ளது என்று அழைத்தார்.

ராம்குமார் எதுவும் பேசாமல் அப்படியே நின்றான்… எப்போதும் இருக்கும் விளையாட்டுத்தனம் துரு துருத்தனம் அவனிடம் இல்லை என்பதனை கண்ட ஆசிரியருக்குமே மனம் கலங்கி தான் போனது.

அவனின் அம்மா என்ன சொல்லப் போகிறார் என்று பங்கஜத்தின் வாயைப் பார்த்தார்.

வருவாள் ரதி…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page