வெந்து தணிந்த இதயம்-7

நான் உங்கள் AY_84

வெந்து தணிந்த இதயம்-7

 

தான் பூப்படையும் முன்பு வரை தன் தலைமுடியைப் பிடித்து சண்டைபோடும் அளவுக்கு உக்கிரமாய் இருந்த சஷ்டி, அதன்பின் தானே முற்றிலுமாய் விலகி நின்று பரிவாய் பேசுபவனாய் மாறிப்போனான்? என்று நினைத்துக்கொண்டே வந்தாள் தெய்வானை.

 

சஷ்டியும் அந்த நாட்களைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இருபது வயதாக இருந்த போது தான் தெய்வானை பூப்படைந்தாள்‌.

 

அதுவரை தன்னை அவள் மாமா என்று அழைக்க மாட்டேன் என்கிறாள், பத்ரியை மட்டும் மரியாதையுடன் விளிக்கிறாள் என்று அவளுடன் கட்டியேறி காதை அற்றுக் கொண்டிருந்த சஷ்டி, அவளுக்கு சடங்கு சுற்றும்போது இரு கன்னங்களிலும் மஞ்சள் சந்தனம் பூசி காய்ந்திருந்த அழகில் தான் அவளிடம் மொத்தமாக வீழ்ந்தான்.

 

அன்றைய நாளின் ஏகாந்தச் சுழலுக்குள் அவன் சிக்கியிருந்த போது, “மாமா தேனு!” என்று ஆர்ப்பரித்தாள் தெய்வானை.

 

தன்னை மீறி அவள் அவனை மாமா என்று அழைத்திருக்க, அதை உணர்ந்தவனும் உடனே அவளுக்கு அதை பக்குவமாய் எடுத்துக் கொடுத்தான்.

 

பாதி சாப்பிட்டுவிட்டு அவள் திகட்டுகிறது என்று அவனிடம் கொடுக்க, அவனுக்கோ அது அமிர்தமாய் இருந்தது.

 

அங்கிருந்து வாழைத்தோப்பு, கொய்யாத் தோப்பு, மாந்தோப்பு என்று ஒவ்வொன்றாக கடக்கும் போதும் அனைத்திலும் மிகச்சிறந்ததான பழங்களை எடுத்து வந்து அவளுக்கு தந்தான் சஷ்டி. அவளுக்கோ அவனின் தனக்கான ஒவ்வொரு சிரத்தையும், பிரத்யேக கவனிப்பும் பிரமிப்பை தந்தது.

 

அந்த மயக்கத்துடனே வரப்பில் முன்னால் நடந்தவள் ஒரு இடத்தில் கால் இடறி சேற்றில் விழப்போக, அவளை இடையோடு தாங்கிப் பிடித்த சஷ்டி, “பார்த்துப்போ தெய்வா” என்று அவளை வரப்பில் நேராக நிற்க வைத்தான்.

 

அவளோ இடக்காக, “அந்த யாழினினா தூக்குவ. என்னை தூக்குவியா?” என்றதும்,

 

கண்களை ஒரு கடவுள் வாழ்த்து எழுதும் அளவிற்கு விரித்தவன், “நிஜமாவா சொல்ற?” என்று தன் சட்டையின் கையை மடித்து விட்டுக்கொண்டு அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு போனான்.

 

அப்படியே வானத்தில் பறந்தாள் தெய்வானை. தன் கையை அவன் கழுத்தைச் சுற்றிப் போட்டு கட்டிக்கொண்டாள். அக்கணம் ஏதோ இந்த உலகத்தையே ஜெயித்துவிட்ட கர்வம் உண்டானது அவளுக்கு.

 

‘ஒருவேளை இது தான் காதலா? விஜய் சேதுபதி மாதிரி இருந்த‌ பத்ரி மாமாவுக்காக இந்த அசோக் செல்வனை தவற விட்டுட்டோமோ? எப்பவும் நாகரீகமாவும், பண்பாவும், அமைதியான அழகுலயும் வலம் வர்றவனை நான் ஏன் சுத்தல்ல விட்டேன்?’ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

 

சஷ்டியின் நிலையோ இன்னும் பரிதாபம். தன் அழகிய கனவு கையில் கிடைத்த சந்தோசத்தை தாங்கவே முடியவில்லை அவனால்.

 

அப்போது வயலில் களையெடுத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் பாரதிராஜா படத்தில் ‘நம்தன நம்தன’ ராகத்தை பாடித்திரியும் தேவதைகளாய் தெரிந்தனர்.

 

பேரிடர் காலத்தில் உயரப் பறக்கும் பட்டம் புயலின் குறுக்கீட்டால் எப்படி அலைபாயுமோ, அதுபோலவே தெய்வானையின் மனதும் அலைபாய்ந்தது.

 

‘இது தாத்தாவுக்கு பிடிக்குமா? தாத்தாவுக்கு இந்த விசயம் தெரிஞ்சா என்ன ஆகும்? என்னை என்ன வேணா அவர் செஞ்சிட்டு போகட்டும். ஆனா சஷ்டியை செஞ்சா? இவன் வேற ஒரு அவசரக்குடுக்கை, ஆத்திரக்காரன். இல்ல இல்ல இது சரியில்ல தெய்வானை. இதுனால பல பிரச்சனைகள் உண்டாகும். உன் ஒருத்தி சந்தோசத்துக்காக வீட்டுல ஒரு பூகம்பமே வெடிக்கனுமா? சின்ன வயசுல இருந்தே காதலுக்கு தடை விதிக்கப்பட்ட ஒரு வீட்டுல வளர்ந்துட்டு உனக்கு இது அவசியமா? யோசி! நல்லா யோசி!  வேண்டாம் தெய்வானை. இந்த கணமே அந்த ஆசையை குழி தோண்டி புதைச்சிரு. எல்லாரும் நிம்மதியா இருக்க இதான் வழி. சஷ்டி எப்பவும் நல்லாயிருக்கனும்’ என்று மனதிற்குள்ளேயே தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தவள் அவனின் கைகளிலிருந்து இறங்கினாள்.

 

அவன் ஏமாற்றமாய் பார்த்தபோது, “எனக்கு இங்கயிருந்து வீட்டுக்கு போற வழி நல்லாவே தெரியும்.” என்று அவனை திரும்பிப் பாராமல் நடந்தாள்.

 

சஷ்டியோ பித்துப் பிடித்து நின்றான்.

 

தெய்வானை வீட்டையடைந்த செய்தி அறிந்ததும் பத்ரி நேரே அவளின் அறைக்குச் சென்றான்.

 

அவளோ வயலில் சஷ்டி தன்னை கைகளில் ஏந்திய கணத்தை நினைத்து பூரிப்பில் ஜொலித்த தன் முகத்தையே ஆச்சரியமாய் பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.

 

பத்ரி அவள்  கண்ணாடியின் முன் நிற்பதை பார்த்ததும், தனது வீங்கிய கன்னத்தை தான் அவள் பழுது பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தான்.

 

அதனால் மெதுவாக அவளிடம் சென்று, “இங்கப்பாரு தெய்வாம்மா, மாமா உன்னை வேணும்னே அறையல. நீ செஞ்சது தப்புடா. அதான் அறைஞ்சேன்.” என்றதும்,

 

அவனை முறைத்துப் பார்த்தவள், “அப்படியா? தாத்தா வரட்டும் யார் செஞ்சது தப்புன்னு அவரே சொல்லுவாரு.” என்று மிரட்டினாள்.

 

“பார்த்தியா பார்த்தியா, தப்பு மேல தப்பு பண்ற. நீ அதை பண்ணிடக்கூடாதுனு தான் மாமா பதறிப்போய் உன்கிட்ட சமாதானம் பேச வந்தேன்.” என்றதும்,

 

‘ஓ! அப்ப நடுரோட்டுல இறக்கிவிட்ட நான் என்ன ஆனேன்னு என்னை பார்க்க வரலை?’ என்று மனதிற்குள் ஆத்திரப்பட்டாள்.

 

வெளியேயோ, “உங்க சமாதானம் எதுவும் எனக்கு தேவையில்ல. நான் இன்னைக்கு தாத்தாக்கிட்ட நடந்ததை சொல்லியே தீருவேன்” என்றாள் திண்ணமாக.

 

அவன் அசரவில்லை. “சரி சொல்லு. நானும் சொல்றேன்.” என்றான்.

 

“என்ன சொல்லுவீங்க?”

 

“ம்? நீதான அந்தக் கோவிலுக்கு என்னை கூட்டிட்டுப் போகச் சொன்ன? அதை சொல்லுவேன்”

 

“அது வந்து.. நான் இப்படியெல்லாம் நடக்கும் நினைக்கல.”

 

“எப்படி நினைக்காம போன தெய்வா? ஏற்கனவே‌ அந்த சாதிக்காரங்களை நாம கும்பிடுற சாமிய கும்பிடக்கூடாதுனு மிரட்டி வச்சிருக்கோம். இப்ப நாம அவங்க கோவிலுக்குப் போனா நம்மளை சும்மா விடுவாங்களா? இதுனால தான் நான் அங்க உன்னை கூட்டிட்டுப் போக மாட்டேன் சொன்னேன். நீதான் நிரூபிங்க அது இதுன்னு என்னை கார்னர் பண்ணின. இப்ப பிரசாதத்தை தட்டிவிட்டு பிரச்சனையில மாட்டிவிடப் பார்த்திருக்க.”

 

“ஆனா நீங்க இன்னும் என்னை உங்களுக்கு பிடிக்கும்னு நிரூபிக்கல மாமா. இல்லத் தெரியாம தான் கேட்கறேன் என்கிட்ட இல்லாதது அப்படி என்ன அவகிட்ட இருக்குன்னு நீங்க அவப்பின்னாடி சுத்துறீங்க?”

 

“அந்த அவ எவ?”

 

“அதான் யாழினி. என்னை நீங்க கண்டுக்காத போதெல்லாம் நான் என்ன நினைப்பேன் தெரியுமா? என் மாமா ஒரு ஏகபத்தினி விரதன். அவர் பொண்டாட்டியைத் தவிர வேற எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டாருனு பெருமையா நினைப்பேன். ஆனா நீங்க… இத்தனைக்கும் அவ உங்களுக்கு எச்சில் டீயை கொடுத்துருக்கா. பூனையை ஏவி உங்க கழுத்துல கீற வச்சிருக்கா. இன்னைக்கு உங்களுக்கு பிடிக்காத குங்குமத்தை வம்படியா வச்சி விட்டிருக்கா. அப்படியிருந்தும் நீங்க அவளை என் ரூம்ல தங்க வச்சிருக்கீங்க மாமா.” என்று அவன் முகத்திற்கு‌ நேராகப் பொங்கினாள்.

 

“அய்யோ என் அறிவுக்கொழுந்து! எப்படி எல்லாத்தையும் கவனிச்சு வச்சிருக்கு பாரு. உன்னையா மாமா அடிச்சேன்?” என்று அவள் முகத்தை வழித்து திருஷ்டி கழித்தான் பத்ரி.

 

சாளரத்தின் வழியே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த யாழினி, “ஹுக்கும்! நானும் இவ மாமனும் கட்டிப்பிடிச்சிட்டு ஒரே கட்டில்ல கிடந்தாக் கூட ரொம்ப குளுருதா மாமா? நான் வேணா இன்னொரு பக்கம் உங்களை கட்டிப்பிடிச்சிக்கவான்னு கேட்பா போல இந்த பைத்தியக்காரி.” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

 

“இதுங்க என்ன டிராமாவோ பண்ணிட்டு போகட்டும்” என்று நேரே சஷ்டியின் அறைக்கு சென்றாள்.

 

அதை ஓரக்கண்ணால் கவனித்த பத்ரி தெய்வானையிடம் யாழினி ஒரு திருடி என்றும், அதை நிரூபிக்கவே தான் அவளை கண்காணிப்பதாகவும் சொன்னான். அதைக்கேட்டு அவளின் கண்கள் விரிந்தன.

 

“உண்மையா மாமா? அவ ஒரு திருடியா? நான் வேற நார்ஸ் ஃபவுண்டேசன், மேக் லிப்ஸ்டிக், டைசன் ஹேர் ஸ்டைலர்னு பார்த்து பார்த்து வாங்கி வச்சிருக்கேனே. இப்பவே எல்லாத்தையும் எடுத்து ஒளிச்சி வச்சிரவா?” என்றாள் வெகுளியாக.

 

“இதெல்லாம் அவளுக்கு தான் தேவையே இல்லையே” என்று யாழினியின் அழகில் மயங்கியவனாய் கூறினான் பத்ரி.

 

“ஏன்?” என்றவள் சந்தேகமாய் கேட்க,

 

“அது வந்து… அவளுக்கு நகைங்க மேல தான் கண்ணு. ஸோ உன் நகைங்களை மட்டும் பத்திரமா வச்சிக்கோ” என்று அவளை சுதாரிக்கச் செய்தா‌ன்.

 

அப்போது உள்ளே வந்த சாவித்ரி, “அட! நீயும் இங்க தான் இருக்கியா பத்ரி? எல்லாருக்கும் புடவை எடுக்கனும்னு நம்ம காஞ்சிபுரக்காரர்கிட்ட சொன்னேன். ஆளுங்களை அனுப்பி புடவைங்களை அனுப்பி வச்சிருக்காரு. வா! வந்து உனக்கு வேண்டியதை எடுத்துக்கோ தெய்வா. பத்ரி நீயும் வந்து அவளுக்கு கொஞ்சம் உதவிப் பண்ணு” என்றதும் மறுக்க முடியாமல் கீழே வந்தான் பத்ரி.

 

அவனின் சகோதரிகள் இருவரும் ஒவ்வொரு புடவையாக தேர்வு செய்து கண்ணாடியின் முன் நின்று வைத்துப் பார்க்க, தெய்வானை, “இது நல்லாயிருக்கா மாமா? இது நல்லாயிருக்கா மாமா?” என்று கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அலைபேசியை நோண்டியபடியே ஆமென்று தலையாட்டிக் கொண்டிருந்தான் பத்ரி.

 

அப்போது சஷ்டியின் தாய் பார்வதி ஒரு நான்கு புடவைகளை தேர்வு செய்து வைத்து வேலையாளிடம் சஷ்டியையும், யாழினியையும் அழைத்து வரச்சொல்ல, சஷ்டியின் அறையில் ஒரு சோகக்காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது.

 

யாழினி அவனிடம், “என்ன சஷ்டி தெய்வானை உன்கிட்ட என்ன சொன்னா? அவளுக்கு உன் மனசை புரிய வச்சியா?” என்று ஆர்வமாகக் கேட்க, அவன் பத்ரி தெய்வானையுடைய கல்யாணப் பத்திரிக்கையை எடுத்து நீட்டினான்.

 

பின், தன் முழு நம்பிக்கையையும் இழந்தவனாக, “நம்ம முயற்சி எல்லாம் வேஸ்ட் யாழு. அவ தாத்தா வளர்ப்பு. பிடிவாதம் ஊறிப்போன ரத்தம்.” என்றதும், யாழினியுமே சோர்ந்து விட்டாள்.

 

“உன் அப்பா மேல அவளுக்கு இருக்க அன்போ, பயமோ, ஏதோ ஒன்னு அவ கண்ணை மறைக்குது சஷ்டி. இப்ப கடைசி முயற்சியா நம்மகிட்ட இருக்கது அவளோட டைரி மட்டும் தான். அதை வச்சி ஏதாவது செய்ய முடியுதா பார்க்கலாம்.” என்றபோது வேலையாள் குறுக்கிட்டார்.

 

உடனே இருவரும் கீழேயிறங்கி வந்தார்கள். அங்கு ஒரு புடவைக்கடையை கொண்டு வந்து இறக்கியிருந்தார் கடையின் உரிமையாளர்.

 

சஷ்டி தன் அன்னை தேர்வு செய்த புடவைகளை யாழினியின் தோள் மீது வைத்து பார்த்துக் கொண்டிருக்க, தெய்வானையின் குடல் பார்பிக்யூவிற்கு தயாரானாது.

 

அதனை புரிந்துகொண்டு மேலும் சஷ்டியிடம், “இது நல்லாயிருக்கா சஷ்டி? அது ரொம்ப நல்லாயிருக்கில்ல?” என்று அளவுக்கு மீறி சிரித்துப்பேசினாள் யாழினி.

 

அதைக்கண்ட பத்ரியின் கண்களும் வத்தல் சாந்தை பூசின. அவன் இடம், பொருள், ஏவல் என்பதை மறந்து ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள அரக்கு நிற தங்க ஜரிகை பின்னலிட்ட வைரஊசிப் புடவையை எட்டி யாழினியின் மடி மீது தூக்கிப்போட்டான்.

 

அவள் தயக்கமாக பார்த்தபோது, “இது உனக்கு கரெக்ட்டா இருக்கும்” என்றான், அனைவரின் கண்களும் தன்னை குற்றம் சாட்டுவதை மறந்து.

 

வார்த்தைகளை விட்ட பிறகு  தான் தான் செய்த தவறு அவனுக்கு புரிந்தது.

 

தொடரும்…

லைக் பண்ணுங்க

ரேட்டிங்ஸ் கொடுங்க

கமெண்ட் பண்ணுங்க தங்கோம்ஸ்

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page