வலியை சூடிய காதலே – 15

பேரின்பமோ பெரும் வலியோ எதுவாயினும் அது நீயாக வேண்டும் என்னுயிர் காதலே…

வலியை சூடிய காதலே – 15

ரஞ்சிதம் சமையலறைக்குள் சென்று ஒரு பெரிய பித்தளைத் தவலையில் தளும்பத் தளும்ப வெந்நீரை வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்,

நிஷா இன்னும் நகராமல் அந்தத் தாழ்வாரத்திலேயே சிலை போல நின்று கொண்டிருந்தாள்,

“வாம்மா… மெதுவா வா…” என்று ரஞ்சிதம் அவளது கையைப் பிடித்துக் குளியலறைப் பக்கம் அழைத்துச் சென்றாள்,

​நிஷா தயக்கத்துடன் உள்ளே நுழைய முற்பட, 

“இங்கேயே நில்லு,” என்று தடுத்த ரஞ்சிதம், ஒரு சிறிய மரப் பலகையைப் போட்டு அவளை அதில் உட்கார வைத்தாள், தன் கைகளாலேயே வெந்நீரின் சூட்டைச் சரிபார்த்து, 

மெல்ல நிஷாவின் கால்களில் ஊற்றினாள், சுளீரென்று இறங்கிய அந்த இதமான சூட்டில் நிஷா ஒரு கணம் சிலிர்த்துப் போனாள்,

​ரஞ்சிதம் ஒரு சிறிய துணியை எடுத்து சோப்புப் போட்டு, நிஷாவின் கைகளிலும் கால்களிலும் படிந்திருந்த காய்ந்த சேற்றை மென்மையாகத் தேய்த்தாள்,

“பாருடியம்மா சேறு எவ்வளவு பிடிவாதமா ஒட்டிக்கிட்டு இருக்குன்னு, உன்ன மாதிரியே” என்று ரஞ்சிதம் சொல்லும்போது, அவளது குரலில் ஒரு மெல்லிய சிரிப்பு ஒட்டிக் கொண்டது,

​ரஞ்சிதத்தின் கைகள் எவ்வளவு லாவகமாக அவளைச் சுத்தப்படுத்துகின்றன என்று நிஷா பார்த்துக் கொண்டிருந்தாள்,

“அய்யோ விடுங்க நான் பண்ணிப்பேன் உங்களுக்கு கஷ்டமா இருக்கும்” என்று நிஷா மெல்லச் சொன்னாள்,

​”நீ பண்ணுவியாக்கும், மறுபடியும் எங்கயாவது வழுக்கி விழுந்து வைக்கவா, பேசாம இரு தாயி” என்று செல்லமாக அதட்டிய ரஞ்சிதம், 

நிஷாவிற்கு வலியேதும் இல்லாமல் அவளது உடலைச் சுத்தப்படுத்தினாள், தன் மருமகளுக்காக இத்தனை வருடங்கள் சேர்த்து வைத்திருந்த அத்தனை பாசமும் இப்போது அந்தத் தண்ணீராக மாறி நிஷாவின் மேல் பொழிவது போல இருந்தது,

​குளித்து முடித்ததும், ரஞ்சிதம் தானே ஓடிச் சென்று ஒரு மென்மையான சந்தன நிறப் பருத்திச் சேலையை எடுத்து வந்தாள், 

“இதை உடுத்திக்கோ… இது உனக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்,” என்று அவளிடம் கொடுத்துவிட்டு, 

“சீக்கிரம் வாம்மா, நான் போய் உனக்குப் ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் எடுத்து வைக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தவளை,

“ஒரு நிமிஷம்” என்று தயக்கியபடியே அழைத்தாள்

“எதுக்கு தயங்குற, எதனாலும் சொல்லுத்தா” என்று கனிவாக ரஞ்சிதம் கேட்க,

“எனக்கு இந்த சேலை எப்படி கட்டுறதுன்னு தெரியாதே” என மென்று விழுங்கினாள் நிஷாலினி,

“அம்புட்டு தான, இதுக்கேன் தாயி இப்படி முழிக்கிற, போறவு நானெதுக்கு இருக்கே, வா நானே கட்டி விடுற” என்று கூறி புடவையை நேர்த்தியாக கட்டி விட்டாள் ரஞ்சிதம்,

தலையில் கட்டியிருந்த டவலை அவிழ்த்து சாம்பிராணி போட்டு உலர்த்தி, பின் அழகாக தலை வாரி அன்று பூத்த மல்லிகையை சரமாக்கி தலை நிறையச் சூட்டி, பொட்டு வைத்தவள்,

அதுவரை ஏதோ ஒரு உற்சாகத்தில் கவனிக்கத் தவறியதை அப்போது தான் கவனித்தாள் ரஞ்சிதம், கழுத்தில் பொன்தாலி மின்னியது, அதுவும் துரையய்யா பரம்பரை ஆண்கள் வழிவழியாக கட்டும் தாலி, 

அதைக் கண்டதும் ஒரு கணம் அவளால் அவள் கண்ணையே நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் மறுக்க முடியவில்லை, தன் மகன் கட்டிய தாலியா? என்று அதிர்ச்சியுடன் பார்த்தாள்,

நிஷா வந்தது முதல் ஆரியுடன் ஒட்டிக் கொள்வதும், இருவரும் கட்டிக் கொண்டு நிற்பதும், இரவு ஒரே படுக்கையை பகிர்வதும் ரஞ்சிதத்திற்கு ஒருவித தர்மசங்கடத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது

இருந்தாலும் தன் மகன் படித்தவன், ஊர் உலகமறிந்தவன் தவறாக நடந்து கொள்ள மாட்டான், என்ற நம்பிக்கையில் இருந்தவளுக்கு அவர்களின் நெருக்கம் இப்போது விளங்கியது,

கணவன் மனைவி பந்தத்தில் இணைந்தவர்கள் என்ற உரிமையில் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றதும் மனதிற்கு ஒருபெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் பிறந்தது,

கட்டிய மனைவியை பஞ்சாயத்தில் அனைவர் முன்னிலையிலும் ஏன் விட்டுக் கொடுத்து விலகி நின்றான் என்ற கேள்விக்கான பதில் மட்டும் விளங்காமல் யோசனையோடு நின்றாள் ரஞ்சிதம்,

“ஆரி எங்க இருப்பான், எனக்கு ஆரிய உடனே பார்க்கனும்” என்றாள் நிஷா,

“ஏம்மா என்ன வேணும் எங்கிட்ட சொல்லுத்தா நான் உன் அத்த தான், இனிமே என்னை நீ அத்தைன்னு தான் கூப்பிடனும் சரியா” என்று கேட்க அதற்கு சிறுபிள்ளை போல் தலையசைத்தாள்,

“எனக்கு பசிக்கிது ஆரி இருந்தா இந்நேரம் சாப்பிட ஏதாவது கொடுத்திருப்பான்” என்றதும் தான் புரிந்து கொண்ட ரஞ்சிதம்,

“நான் ஒரு கிறுக்கி, புள்ள முகம் பசியில வாடும் போதே கண்டுக்காம விட்டுப்புட்டேனே, இருத்தா இதோ எடுத்து வைக்கறே”

என்று கூறி வேகமாக சமையலறைக்கு விரைந்தாள்,

​நிஷா  உணவருந்தும் இடத்திற்கு வரும் போதே அங்கே மணம் வீசும் கிச்சடி அவளுக்காகக் காத்திருந்தது, ரஞ்சிதம் ஏற்கனவே தட்டைப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றித் தயார் நிலையில் இருந்தாள்,

​”உட்காருமா, இந்த சாப்பிடு” என்று ரஞ்சிதம் சொன்னதும், நிஷா அமர்ந்தாள்,

​நிஷா சாப்பிடத் தொடங்கும் முன், ரஞ்சிதம் அவளருகே அமர்ந்து ஒரு உருண்டை கிச்சடியைத் தன் கையால் எடுத்து அவளுக்கு ஊட்டினாள், 

“இந்தா முதல்ல இதைச் சாப்பிடு” என்றாள், நிஷா அந்த முதல் கையை வாங்கும்போது அவளது கண்கள் கலங்கின, அந்தச் சுவைக்குள்ளே ரஞ்சிதத்தின் இத்தனை காலத் தவிப்பும், அன்பும் கலந்திருந்தது, 

“ரொம்ப நல்லா இருக்கு ” என்று நிஷா மெல்லச் சொன்னாள்,

​”நல்லா இருக்குன்னா மட்டும் போதாது, தட்டுல ஒரு பருக்கை கூட வைக்காம முழுசாச் சாப்பிடணும்” என்று ரஞ்சிதம் அவளது தலையை ஆதரவாகக் கோதி விட்டாள்,

​வெளியே நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆரியனுக்கு, தன் தாயின் இவ்வளவு பெரிய மனமாற்றம் ஆச்சரியத்தைத் தந்தது, ஆனால் அவர்களின் பாசத்திற்கு இடையே குறுக்கிட அவனுக்கு விருப்பமில்லை,

சாப்பிட வந்தவன் பேசாமல் திரும்பிச் சென்றான்,

ரஞ்சிதம் அடுத்த உருண்டையை நிஷாவிற்கு ஊட்ட முற்பட்ட அந்த நொடி, வாசலில் ஒரு கனமான காலணிச் சத்தம் கேட்டது, 

‘தடக் தடக்.’ என அந்தச் சத்தம் நெருங்க நெருங்க, ரஞ்சிதத்தின் கைகள் அந்தப் பாதி வழியிலேயே நின்றன, நிஷா நிமிர்ந்து பார்த்தாள், அங்கே ராஜதுரை நின்று கொண்டிருந்தார், 

முரட்டுத்தனமான தோற்றம், கத்தரித்து விடப்பட்ட மீசை, எதற்கும் அஞ்சாத அந்தப் பார்வை அவர் அங்கே வந்து நின்றதுமே, ஒரு முறை ரஞ்சிதத்தைப் பார்த்தார், 

ஆனால் அவர் கண்கள் ரஞ்சிதத்திடம் எந்தப் பேச்சையும் வளர்க்கவில்லை, சட்டென பார்வையை திருப்பிக் கொண்டார், ஒரு சிறு பார்வையைக் கூட அவள் இருக்கும் திசையே அவருக்குத் தெரியாதது போல, 

தன் பார்வையை அப்படியே நிஷாலினியின் பக்கம் திருப்பினார், ​நிஷாவிற்குத் தொண்டையில் கிச்சடி சிக்கிக் கொண்டது, ராஜதுரையின் பார்வை அவளை நிலைகுலையச் செய்தது,

​”என்னடாம்மா சாப்பிட்டுட்டு இருக்கியா” என்று ராஜதுரை கேட்டார், அவரது குரல் அதிகாரத் தோரணையில் இருந்தாலும் அவரென்னவோ சாதாரணமாகத் தான் கேட்டார்,

​நிஷா பதிலுக்குத் தலையை மட்டும் ஆட்டினாள், அவளது கைகள் நடுங்கத் தொடங்கின, ரஞ்சிதத்தின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்,

​ராஜதுரை ஓரடி முன்னால் எடுத்து வைத்தார், 

“ஏன் தலைய மட்டும் ஆட்டுற, நான் கேட்டா பதில் சொல்ல மாட்டியா இந்த வீட்ல இருக்கிறவங்க தான் மதிக்க மாட்டாங்கன்னு பாத்தா புதுசா வந்த நீயும் பேச வாய் வரலையோ” என்று அவர் சற்று உரத்த குரலில் கேட்க, 

நிஷாவிற்குள் இருந்த பயம் உச்சக்கட்டத்தை அடைந்தது,

​அவர் இன்னும் நெருங்கி வருவதைப் பார்த்ததும், நிஷாவிற்குத் தன் அத்தைய கூடப் பாதுகாப்பாகத் தெரியவில்லை, 

அவளது கண்கள் ஆரியைத் துழாவின, ராஜதுரையின் அந்த முரட்டுத்தனமான ஆளுமைப் பேச்சு அவளை மூச்சு முட்ட வைத்தது,

​ராஜதுரை எதோ சொல்லக் கொண்டே கையை ஓங்கியது போல (உண்மையில் அவர் சட்டையைச் சரி செய்யத்தான் கையைத் தூக்கினார்) தெரிய, நிஷா அப்படியே தட்டைக் கைவிட்டு விட்டு எழுந்து கத்தினாள்,

​”ஆரி…. ஆரி இங்க வாங்க… ஆரி”

​அந்தச் சத்தம் வீடே அதிரும் படி இருந்தது, தன் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆரியன், 

நிஷாவின் அலறல் கேட்டு அப்படியே உறைந்து போனான், அடுத்த நொடி அவன் கால்கள் சமையலறையை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்தது,

​சமையலறை வாசலில் ஆரியன் வந்து நின்றபோது, அங்கே ராஜதுரை எதார்த்தமாக நின்று கொண்டிருக்க, நிஷா ரஞ்சிதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தாள் 

நிஷாவின் அலறல் கேட்டு மின்னல் வேகத்தில் உள்ளே வந்த ஆரியன், ஒரு நொடி அங்கிருந்த நிலையைப் பார்த்துத் திகைத்தான், ஆனால், அதற்குள் ராஜதுரையின் கர்ஜனை அந்தச் சமையலறையைத் துளைத்தது,

​ராஜதுரை தன் மீசையை முறுக்கியபடி ஆரியனை ஒரு ஏளனப் பார்வை பார்த்தார், பின் கையை நீட்டி நடுங்கிக் கொண்டிருக்கும் நிஷாவைக் காட்டி இடியென முழங்கினார்,

​”என்னடா  இதென்ன புதுப் பழக்கம், இந்தச் சின்னப் பொண்ணு மனசுல துரையய்யா பரம்பரையே கெட்டவங்கன்னு நல்லாச் சொல்லிக் கொடுத்து தப்பான நினப்ப வெதச்சு வச்சிருக்கியா, 

அதான் என்னைப் பார்த்ததும் ஏதோ எமனைப் பார்த்த மாதிரி இப்படிப் பயந்து கத்துறாளா” என்று கேட்க

​ஆரியன் எதோ சொல்ல முற்பட, ராஜதுரை அவனைத் தடுத்தார், அவர் குரலில் இப்போது ஆத்திரம் இன்னும் கூடியிருந்தது,

​”இவ்வளவு பயம் இருக்கிறவ, அப்புறம் எப்படி இந்த சக்ரவர்த்தி குடும்பத்தோட ஒட்டி உறவாடுறா, பயம் இருந்தா ஒதுங்கியல்ல இருக்கணும், இல்லைன்னா துணிஞ்சு நிக்கணும், 

இதெல்லாம் யாரோட வேலைன்ன எனக்கு தெரியுடா, இப்படி ஊருக்கு முன்னாடி எங்களை ஒரு முரட்டுப் பயலா காட்டிக்கிட்டு, உள்ளுக்குள்ள வந்து ஒட்டிக்கிறதுக்கு என்னடா அர்த்தம்” என்று கத்தித் தீர்த்தார்,

​ஒவ்வொரு வார்த்தையும் ரஞ்சிதத்தின் இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது, ராஜதுரை அவளை ஒரு முறை கூடப் பார்க்கவில்லை என்றாலும், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மறைமுகமாக அவளைச் சாடுவது போலவே இருந்தது,

​நிஷா அப்படியே ரஞ்சிதத்தின் சேலையை இறுகப் பற்றிக் கொண்டாள், அவளின் நடுக்கத்தையும் பயத்தையும் பார்த்த ஆரி,

​”போதும் நிறுத்துங்க” என்று ஆரியன் உரத்த குரலில் இடைமறித்தான், அவன் கண்கள் சிவந்திருந்தன,

​”அவளுக்கு எதையும் யாரும் சொல்லிக் கொடுக்கல, அவ இன்னும் ஒரு குழந்தை மாதிரி இருக்கா, அவளுக்கு உங்க முகத்த பார்த்து தான் பயத்தைத் தருதே தவிர, 

உங்க பரம்பரை இல்லை, சும்மா சும்மா கத்தி உங்க முட்டாள் தனத்தையும் முரட்டுத் தனத்தை காட்டி பயமுறுத்தாம போய் வேற வேலை இருந்தா பாருங்க” என்று ஆரியன் பதிலுக்குக் கொடுக்க, ராஜதுரை ஒரு நையாண்டிச் சிரிப்பை உதிர்த்தார்,

​”குழந்தையா, இந்தக் காலத்துல யாரும் குழந்தையும் இல்ல, யாரும் தெரியாம எதையும் பண்றதும் இல்ல, எல்லாம் தெரிஞ்சு தான் நடக்குது, அன்பா ஆசையான்னு வந்துட்டா எனக்கே வாத்தியார் மாதிரி சொல்லி குடுக்கிறதுக்கு,

போடா கூட்டிட்டுப் போ, இன்னொரு தரம் என் முன்னாடி நின்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டாமுன்னு சொல்லி வை” என்று சொல்லிவிட்டு, 

யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினார், நிஷா இப்போது தேம்பி அழத் தொடங்கினாள், 

“ஆரி… நான்… நான் வேணும்னு பண்ணல…” என்று விக்கல்களுக்கு இடையே சொன்னவளை, ஆரியன் அருகில் வந்து ஆதரவாகப் பற்றிக் கொண்டான்,

​ஆனால் ரஞ்சிதம்? அவள் அப்படியே சிலையாகச் சமைந்து போய் அமர்ந்திருந்தாள், தன் கணவன் தன்னை ஒரு புழுவைப் போலக் கூட மதிக்காமல் கடந்து சென்றதும், தன்னை ஜாடையாக பேசிய பேச்சும் அவளை நிலைகுலையச் செய்திருந்தது,

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page