அத்தியாயம் 3

 

 

சந்தோஷ் இரு காபி குவளைகளை  எடுத்துக் கொண்டு கௌரி அருகில் வந்தான். என்ன!  ஜி.ஸ். காபி எடுத்துக் கொண்டு வருவதற்குள் இங்கே வந்துட்டீங்க! ஒண்ணுமில்ல சந்தோஷ், எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தரை இங்கு பார்த்தேன். நான் வருவதற்குள் அவங்க கிளம்பிட்டாங்க என்று ஏதோ தன் வாயில் வந்ததை சொல்லி வைத்தான். காபி குடித்த பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்ப, சந்தோஷ் தன்னுடைய தொலைபேசி எண்ணை கௌரியிடம் கொடுத்து ஏதாவது உதவி தேவைப்பட்டா ஒரு போன் பண்ணுங்க ஓடி வந்துடுவேன்! என்று கூறி விடைபெற்று சென்றான்.

 

வீட்டிற்கு வந்ததும் கவிதா அவனை வரவேற்று, புன்னகை முகத்துடன் உனக்கு வேலை கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா!  உனக்கு கண்டிப்பாக இந்த வேலை கிடைக்கும்னு எனக்கு தெரியும்பா. அதனாலதான் நான் இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதுக்கு கேசரி செஞ்சு  வச்சி இருக்கேன், இங்கேயே இருப்பா கொண்டு வரேன் என்று சமையலறையை நோக்கி போக, அம்மா எனக்கு அதெல்லாம் வேணாம்மா  ரொம்ப களைப்பா இருக்கு, நான் போய் என் அறையில் ஓய்வு எடுக்கிறேன் என்று நகர பார்க்க, கவிதா, நில்லுடா!  ஏன் ஒரு மாதிரி இருக்கே! வேலை கிடைச்ச சந்தோஷத்தையே உன் முகத்தில் காணோமே! என்னடா ஆச்சு! என்று கேட்டவுடன் தன் தாயிடம் எதையும் மறைக்க மனமில்லாத கௌரியோ அம்மா! நான் இன்னிக்கு வர்ஷினியை பார்த்தேன்! அவ எவ்வளவு அழகா இருப்பா! ஆனா இன்னைக்கு அவ முகத்தில் பொலிவையே காணோம்மா!  ஆளே அடையாளம் தெரியாமல் மெலிந்து, கருத்து பார்க்கவே வேதனையாய் இருந்திச்சி! அது மட்டுமல்லாமல் என்னை யாருனு தெரியல்னு சொல்லிடாமா! எனக்கு மனசு ரொம்ப பாரமா போய்டுச்சு. நான் என்னமா தப்பு செஞ்சேன்? அவ என் அன்பே புருஞ்சிக்கவே மாட்டாளா? என்று கூறிய அவனுடைய நீர் ததும்பிய கண்களை பார்த்த கவிதாவின் உள்ளம் கலங்கியது. நீ ஏன்டா அவகிட்ட போய் பேசினே? அவ எத்தனை தடவைதான் உன்னை அவமானம் படுத்துவா? அவ பெங்களூரில் தானே கல்யாணம் பண்ணி போனா! சென்னைக்கு எப்ப வந்தாள் அந்த மகராசி? இங்கே பாருடா! இனிமேல் நீ அவளை பார்க்கறதோ அவகிட்ட போய் பேசறதோ வச்சிக்காதே! நீ இப்படி மனம் கலங்கி நிக்கிறதை என்னாலே பாக்க முடியலப்பா. எல்லாத்தையும் மறந்துட்டு அறையில போய் ஓய்வெடு, நான் அதற்குள்ள சமைச்சிறேன். உங்க அப்பாவும் கொஞ்ச நேரத்தில் வந்துருவாரு! எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று கூறிக் கொண்டே சமையலறை நோக்கி சென்றாள். சிறிது நேரத்தில் அவன் தந்தை மாசிலாமணி வர, என்ன கவிதா கௌரி வந்துட்டானா? அவனுடைய நேர்முக தேர்வு என்னாச்சு? என்று கேட்க, வேலை கிடைச்சிருச்சிங்க, அறையில் தான் ஓய்வு எடுத்துட்டு இருக்கான் என்று கூறிய கவிதா தன்னிடம் மகன் வர்ஷினி பற்றி கூறியதெல்லாம் தன் கணவரிடம் சொல்லவில்லை. ஏனென்றால் தன் பிள்ளையின் மனம் வருத்தப்பட்டுவதை கேட்டால் அவர் தாங்கமாட்டார் அவருக்கு கௌரியின் மீது பாசம் அதிகம், கௌரி தன் அண்ணனுக்காக அனைத்தையும் விட்டு கொடுப்பது எல்லோரிடமும் சினேகமாக பழகுவது போன்ற அவருடைய அம்மாவின் குணங்கள் அப்படியே கௌரியிடம் இருப்பதைப்  பார்த்து அவருக்கு உள்ளுக்குள் மிகுந்த சந்தோஷம் உண்டு. எனவே அவனிடம் கொஞ்சம் பாசம் அதிகம் தான். கௌரியின் முகம் சிறிது வாடினாலும் அவர் தாங்கமாட்டார். இந்த விஷயம் கவிதாவுக்கு தெரியுமாதலால் இதனை எல்லாம் சொன்னால் கணவர் வேதனைப்படுவார் என்று மறைத்துவிட்டார்    

 

தன் அறையில் இருந்த கௌரிக்கு மனம் பின்னோக்கிச் சென்றது. தான் முதன் முதலில் வர்ஷினியை பார்த்த நாளுக்கு தாவியது. அப்போது அவனுக்கு எட்டு வயது இருக்கும். தமிழ் அவனுக்கு அவ்வளவாக வராது. ஹாலில் உட்கார்ந்து வராத தமிழோடு போராடி படித்துக் கொண்டிருந்தான், இல்லை! இல்லை !தமிழை கடித்துக் தின்றுக்  கொண்டிருந்தான் என்று தான் சொல்லவேண்டும். குடையை கூடை என்றும் சேவலை செவல் என்றும் சொல்லிக் கொண்டிருக்க, சமையல் அறையில் இருந்தே கவிதா அவன் படிப்பதை மனதுக்குள் சிரித்தவாறே அதனை திருத்திக் கொண்டிருந்தாள். அப்போது வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்கவே, விட்டால் போதும் என்று கௌரி ஓடி வந்து கதவை திறக்க, அங்கே ஐந்து வயது நிரம்பிய வர்ஷினி குழந்தை முகமும் துறுதுறு என்ற கண்களும் குழி விழுந்த கன்னங்களும் சிவந்த நிறமும் பட்டு பாவாடையும் இரட்டை சடையும் கையில் தட்டில் பால் டம்ளர் ஏந்தி குட்டி தேவதையாக நின்றுக்கொண்டிருந்தாள். உடனே உள்ளே ஓடி சென்ற கௌரி தன் அம்மாவிடம், அம்மா வெளியில் ஒரு அழகான குட்டி பாப்பா நின்னு இருக்குமா! என்று கூற, கவிதா வெளியில் வந்து பார்த்து வர்ஷினியை உள்ளே வாம்மா! என்றழைக்க, ஆண்ட்டி நாங்க எதிர் வீட்டில் புதுசா குடி வந்திருக்கோம். அம்மா இந்த பாலை கொடுத்து வர சொன்னாங்க என்று கூறி பாலை அவள் கையில் கொடுத்து விட்டு சிட்டாக பறந்து விட்டாள். கௌரி கவிதாவிடம் நாம போய் அவங்களை பார்ப்போமோ? என்று கேட்க, இப்போ அவங்க வேலையா இருப்பாங்க. நாம நாளைக்கு போய் பார்க்கலாம் என்று கூறி விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள்.மறுநாள் கவிதா மாசிலாமணியிடம் சொல்லிவிட்டுகொஞ்சம் பழங்கள், இனிப்புகள் எடுத்துக்கொண்டு  கௌரியையும்  கூட்டிக்கொண்டு வர்ஷினி வீட்டுக்கு சென்றாள். வர்ஷினியின் அம்மா கஸ்தூரி அவர்களை வரவேற்று அமரச் சொன்னாள். வீடு முழுவதும் பொருள்கள் ஆங்காங்கே அடுக்கப்படாமல் இருந்தன. கஸ்தூரி வீட்டை இன்னும் ஒழுங்குபடுத்தலே. நானும் அவரும் தாங்க செய்யணும். தப்பா எடுத்துக்காதிங்க  என்று சங்கடத்துடன் கூற, நான் தப்பா எல்லாம் எடுக்கலைங்க!  நேற்று தானே வந்தீங்க, மெல்லமா செய்யுங்க, உங்களுக்கு நான் எதாவது உதவி செய்யட்டுமா? என்று கேட்க, அதெல்லாம்  ஒன்னும் வேணாங்க, இன்னும் கொஞ்சம் பொருட்கள் தான் அடுக்க வேண்டும். உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் என்று கூற, அப்படியே இருவரும் பேசிக் கொண்டே பொருட்களை அடுக்க ஆரம்பித்தனர். கவிதா, உங்களுக்கு ஒரே பெண் தானா என்று கேட்க, ஆமாங்க, எனக்கு ஒரே பெண் தான், பேரு வர்ஷினி. எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருஷம் கழித்து தான் இவ பிறந்தா,  நாங்க திருச்சில தான் இருந்தோம். என் கணவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். ராணுவத்தில் இருக்கும்போது போரில் அவருக்கு காலில் அடிப்பட்டதாலே அவராலே தொடர்ந்து வேலையில் இருக்க முடியல. முன்னாள் படைவீரர் என்ற அடிப்படையில் அரசாங்கத்தில் அவருக்கு சென்னையில் வேலை கிடைச்சிருக்கு. அதனாலே தான் இங்கே மாற்றலாகி வந்தோம் என்று கூற கவிதாவும் தன் குடும்பத்தை பற்றி கூற சற்று நேரத்திலேயே இருவரும் நெருங்கிய தோழி போல் பேச ஆரம்பித்தனர். அங்கே கௌரியும் வர்ஷினியும் கூட சேர்ந்து விளையாட ஆரம்பித்து விட்டனர். அன்றிலிந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் இருவரும் கஸ்தூரி வீட்டில் சேர்ந்து விளையாடுவார்கள். 

 

வர்ஷினி வீட்டில் ஒரே பெண் என்றாலும் கூட அவளுக்கு செல்லம் எல்லாம் கொடுப்பதில்லை. தவறு செய்யும் போது  கண்டித்தே வளர்த்தனர். வர்ஷினி சிறு வயதில் மிகவும் சுட்டி. அவள் ஓரிடத்தில் அமரவே மாட்டாள். ஓடிக் கொண்டே இருப்பாள், அல்லது ஏதாவது ஒரு பொருளை போட்டு உடைத்து விட்டு ஓடி விடுவாள். விக்னேஷ் இருக்கும்போது வர்ஷினி கவிதாவின் வீட்டுக்கு வரமாட்டாள். அவனுக்கு அவளை கண்டாலே பிடிக்காது. அவளை அடித்துக் கொண்டும் விரட்டிக் கொண்டும் இருப்பான். அதனால் இருவரும் கஸ்துரி வீட்டிலேயே விளையாடுவார்கள். இருவரும்  வீட்டை ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். கஸ்தூரிக்கு குழந்தைகள் என்றால் பிரியம் ஆதலால் அவரும் ஒன்றும் சொல்லமாட்டார். ஆனால் வர்ஷினியின் தந்தை கரண் அப்படியில்லை. அவருக்கு எடுத்த பொருள் எடுத்த இடத்தில் இருக்கவேண்டும். அவர் ராணுவத்தில் இருந்ததால் எல்லாவற்றிலும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார். அதனால் கணவர் வேலையில் இருந்து வீட்டிற்கு வருவதற்குள் வீட்டை ஒழுங்குபடுத்திவிடுவார் கஸ்தூரி. கௌரியும் வர்ஷினியும் சேர்ந்துவிட்டால் குறும்புக்கு பஞ்சமே இல்லை. ஒரு நாள் நல்ல மழை. கஸ்தூரி அவளை வெளியில் செல்லக் கூடாது என்று சொல்லிருக்க, அம்மா சொல்வதை கேட்டால் அவள் தான் வர்ஷினி இல்லையே, மழையில் நனைவது வேறு ரொம்ப பிடிக்கும். சும்மாவா இருப்பாள், அம்மாவுக்கு தெரியாமல் கதவை திறந்துக்கு கொண்டு வெளியில் வந்து மழையில் நனைய , பத்தாத்திற்கு கௌரியையும் அழைக்க, இருவரும்  மழையில் நன்றாக போட்ட ஆட்டத்தில் அன்று இரவே இரண்டு பேருக்குமே காய்ச்சல் வந்துவிட்டது.  அவளுடைய தந்தை கரண் அவளுக்கு காய்ச்சல் என்றதும் அவளை விட்டு ஒரு நொடி கூட அசையவில்லை. வர்ஷினியின் அருகிலே இருந்து தன் பெண்ணை  கஸ்தூரியை விட  நன்றாக பார்த்துக் கொண்டார். காய்ச்சல் குணம் ஆன பின்பு வர்ஷினியை அழைத்து நீ அம்மா பேச்சை கேக்காமல் மழையில் நனைந்தால் உன் தமிழ் பாடத்தில் உள்ள திருக்குறளை ஐந்து முறை, பத்து நாட்கள் எழுதி காட்டவேண்டும். இல்லையென்றால் நான் உன்னிடத்தில் பேச மாட்டேன் என்று கூறி எழுத வைத்து, வர்ஷினி அழுது பின் அப்பாவிடம் அதற்கு பதிலாக பார்பி பொம்மை வாங்கிக்கொண்டது எல்லாம் வேறு கதை. கரண் அப்படித்தான், பெண்ணுக்கு தண்டனையும் தருவார், அன்று இரவே மனம் தாளாமல் பெண்ணுக்கு பிடித்ததை வாங்கியும் கொடுப்பார். இதனால் வர்ஷினிக்கு அப்பா கண்டித்தாலும், அவரை மிகவும் பிடிக்கும்.

 

வர்ஷினி வயது வந்த பிறகு கவிதாவின் வீட்டுக்கு வருவது குறைந்து விட்டது. அவள் படிப்பில் மும்முரமாக இருந்ததால் கௌரியிடம் பேச  வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் கௌரி தினம் ஒரு முறையாவது வர்ஷினியை எப்படியாவது பார்த்துவிடுவான். ஒரு நாள் பார்க்க வில்லை என்றால் அவனுக்கு அன்றைய நாளே ஓடாது. எப்போது எந்த வயதில் அவள் மீது காதல் வந்தது என்பது அவனுக்கே தெரியவில்லை. தினமும் தன் வீடு வாசலில் இருந்து அவள் பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் பார்த்து விடுவான். அவளுக்கு அவன் குட்டி குஷ்பூ என்று செல்ல பெயரும் கூட வைத்து விட்டான். அவளுக்கு நீண்ட கூந்தல் இல்லை. ஆனால் அடர்த்தியாக இருக்கும். பள்ளி இல்லாதபோது தன் அடர்ந்த கூந்தலை சிறிய ரப்பர் பேண்டில் அடக்கிவிடுவாள். அது அவள் நடக்கும் போது காற்றில்  கழுத்து வளைவில், அந்த கூந்தல் அசைந்தாடுவது கொள்ளை அழகு. பெரும்பாலும் பாவாடை தாவணியில் தான் உலா வருவாள்.  பார்ப்பதற்கு வானத்து தேவதையே மண்ணில் வந்து விட்டது போல் தோன்றும் அப்படியே சொக்கித்தான் போய்விடுவான் கௌரி 

 

 

வர்ஷினிக்கும் அவன் பார்வையில் பேச்சில் வேறுபாடு தெரிந்து தான் இருந்தது. இருந்தாலும் அவள் அதைக் கண்டுக்  கொள்ளவில்லை. அவளுடைய முழு லட்சியமே படிப்பு தான். படித்து தான் ஒரு நல்ல வேலையில் அமர்ந்து தாய், தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதுதான். அவள் தந்தை கால் சரியில்லாமல் அலுவலகத்துக்கு சென்று வருவது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சீக்கிரமாக அப்பாவை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு தான் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்,அவர்களைஅவர்களின் கடைசி காலம் வரை  நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மகளாக விருப்பம் இருந்தது.  

 

அவன் பார்ப்பதும் அவளை தேடி தேடி வந்து பேசுவதும் அவளுக்கும் பிடித்து தான் இருந்தது. இருந்தாலும் இதெல்லாம் வயதின் ஈர்ப்பு. இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று உண்மையான பாசத்திற்கும் அன்புக்கும், வயதின் ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்துவிட்டால் அந்த சிறு பெண். கௌரிக்கும் வர்ஷினி படிக்கிறாள் அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்று தன் காதலை தன்னுள் மறைத்துக் கொண்டு அவளை பார்ப்பது, மற்றும் சில நேரங்களில் பொதுவான விஷயம் பேசுவதோடு நிறுத்திக் கொண்டான். 

 

இப்படியே நாட்கள் சென்றுக் கொண்டிருக்க அவன் தலையில் பெரு இடியாக ஒரு செய்தி வந்தது. அது என்ன ?கௌரியால் அதை தாங்க முடிந்ததா ? அதை எப்படி அவன் எதிர்கொண்டான்? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பாப்போமா மக்களே!

 

கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்தீங்கனா எனக்கு கொஞ்சம் ஊக்கமாக இருக்கும். 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
811 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page