தோளில் சாயும் நேரம் 04

நித்தியகல்யாணி மரங்களில் மலர்ந்திருந்த மலர்கள் காற்றில் அசைந்தாடுவதையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் பிரேமகிருஷ்ணா.

அவனுக்கு எதிரில் அருந்தவராணியும், அருந்தவச்செல்வியும் அவனுடைய முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏதோ பேசுவதற்காக இருவரையும் அழைத்துத் தோட்டத்தில் அமர வைத்திருந்தான் அவன்.

சற்றே தள்ளி ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த ஆருதியின் மீது அவனது விழிகள் அவ்வப்போது தழுவி மீண்டு கொண்டிருந்தன.

“என்ன கிருஷ்ணா.. ஏதவோ கதைக்க வேணும் எண்டு வந்து இருக்கச் சொல்லீட்டு அமைதியா இருக்கிறாய்..”

“ஓம் சித்தி.. நானும் யோசிச்சுப் பாத்தன்.. உங்கள் ரெண்டு பேருக்கும் நான் கல்யாணம் செய்றது தான் விருப்பம் எண்டால்.. அதைச் செய்தால் தான் என்ன எண்டு தோணிச்சு..”

“என்ரை ராசா உண்மையாவோ கேக்கவே எவ்வளவு சந்தோசமா இருக்குது தெரியுமோ.. இதைச் சொன்ன உன்ர வாய்க்குச் சர்க்கரை தான் போட வேணும்.. அக்கா என்ன பாத்துக் கொண்டு இருக்கிறாய் சிரியன்..”

“அவசரப்படாத செல்வி.. துரை வேறை என்னவோ சொல்லப் போறார் எண்டு நினைக்கிறன்..”

“கரெக்ட்.. நான் நீங்கள் எனக்காகப் பாத்த பிள்ளையோட கொஞ்சம் கதைக்க வேணும்..”

“என்ன என்ன.. அவ கூட என்னடா கதைக்க வேணும்..”

“இருங்கோ சித்தி.. இப்போ என்னத்துக்குப் பதறுறீங்கள்.. கூட வாழப் போற நான் கதைக்க வேணும் எண்டதுக்குப் பதறினா எப்புடி..”

“நீ என்ன கதைப்பாய் எண்டு எனக்குத் தெரியாதோ..”

“பாத்திங்களோ சித்தி.. நான் என்ன கதைப்பன் எண்டுறது அம்மாவுக்கே தெரிஞ்சிருக்குது.. சோ நான் திரும்பச் சொல்லத் தேவையில்லை எண்டு நினைக்கிறன்..”

“கிருஷ்ணா..”

“எனக்கு நேரமாச்சுது.. இதைச் சொல்லத் தான் ரெண்டு பேரையும் கூப்பிட்டன்.. நீங்கள் ஆசைப்பட்டது போல எனக்குக் கல்யாணம் நடக்க வேணும் எண்டால்.. நான் அந்தப் பிள்ளையோட கதைக்கிறதுக்கு ஏற்பாடு செய்யுங்கோ.. இப்ப நான் வெளியால போட்டு வாறன்..”
என்று கொண்டே ஆருதியை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற மகனையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள் இரு தாய்மாரும்.

“அக்கா.. என்ன கடுமையா யோசிக்கிறாய்..”

“என்னடி இவன் இப்புடிச் சொல்லிப் போட்டுப் போறான்..”

“அவன் என்னத்தைச் சொல்லிப் போட்டுப் போனாலும்.. கல்யாணம் கட்டுறன் ஆனா அந்தப் பிள்ளையோட கொஞ்சம் கதைக்க வேணும் எண்டு சொல்ற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறானே.. அது போதாதோ..”

“ஆனா..”

“எனக்கு நம்பிக்கை இருக்கக்கா.. அந்தப் பிள்ளையைப் பாக்கும் போது எனக்கென்னவோ நல்ல மாதிரித் தான் தோணுது..”

“எனக்கும் தான் செல்வி..”

“அப்ப பிறகென்ன.. கண்டதையும் யோசிக்காமல் இருப்பம்.. நல்லது நடக்கும் எண்டு மட்டும் நம்புவம்..”

“அதெல்லாம் சரி தான்.. ஆனா இவனை நினைச்சாத் தான் பயமக் கிடக்குது.. அந்தப் பிள்ளையிட்ட கதைக்கிற மாதிரிக் கதைச்சால் இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.. ஆனா இவன் தன்ர சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் சொல்லித் தான் கட்டுவான் எண்டால்..”

“இப்பத் தானே சொன்னன் அக்கா கண்டதையும் யோசிக்காத எண்டு..”

“சரிடியம்மா நான் இனிக் கண்டதையும் யோசிக்கேல்ல.. ஆனா இந்தக் கல்யாணம் நல்லபடியா நடந்தால் நயினாதீவு அம்மனுக்குப் பொங்குறதா வேண்டியிருக்கிறன்..”

“சீக்கிரமா அதுக்கு நாள் பார் அக்கா.. நல்லது தான் நடக்கும்..”
என்றார் முழுமனதாக அருந்தவச்செல்வி.

இருவரும் மகனின் திருமணம் பற்றிய யோசனையில் அழ்ந்தபடி, வேலையில் மூழகி விட, அவர்களை நோக்கி வந்தான் பிரேமகிருஷ்ணாவின் நண்பன் ரகு.

“என்ன அம்மாக்கள் ரெண்டு பேரும் என்ன செய்து கோண்டு இருக்கிறீங்கள்..”

“வாடாப்பா ரகு.. என்ன செய்யிறது எண்டு தெரியாமல் யோசிச்சுக் கொண்டு இருக்கிறம்..”

“ஏன் சித்தி.. என்ன நடந்தது..”

“எல்லாம் உன்ர பிரெண்ட நினைச்சுத் தான்.. அவனை நினைச்சுத் தான் இந்தக்கா உடம்பைக் கெடுக்குது..”

“என்னம்மா நீங்கள்.. அது தான் அவனிந்த கல்யாண விசியம் என்ர பொறுப்பு எண்டு நான் சொல்லீட்டனே.. பிறகும் ஏன் நீங்கள் இப்புடி இருக்கிறீங்கள்.. என்னில நம்பிக்கை இல்லையோ..”

“அச்சோ என்னடா நீ.. உன்னில நம்பிக்கை இல்லாமலே.. எல்லாம் உன்ரை பிரெண்டில தான் நம்பிக்கை இல்லை.. ரெண்டு கை தட்டினாத் தானே ஓசை எண்டு சொல்லுவினம்..”

“நாங்கள் அவன்ர கையைப் பிடிச்சுத் தட்ட வைப்பம் அம்மா.. எல்லாம் நான் பாத்துக் கொள்ளுறன்.. உங்டை பெடியன் மாதிரியே அந்தப் பிள்ளைக்கும் ஏதவோ கதைக்க விசியம் இருக்குது போல.. அதனால ரெண்டு பேரும் கதைச்சு ஒரு முடிவுக்கு வரட்டுக்கும்..”

“என்னவோ சொல்லுறாய்.. நீயும் செல்வியும் சொல்ற மாதிரி நல்லது நடக்கும் எண்டு நானும் அமைதியா இருக்கிறன்..”
என்று பெருமூச்சு விட்டவாரே எழுந்து உள்ளே போய் விட்டார் அருந்தவராணி.

தமக்கை உள்ளே போவதற்காகவே காத்திருந்தது போல, ரகுவிடம் திரும்பினார் செல்வி.

“அதெல்லாம் சரி தான் ரகு.. அந்தப் பிள்ளைக்கு எங்கடை பெடியனைப் பிடிச்சிருக்குதாமோ..”

“இவன்ர கதை தான் சித்தி அங்கயும்.. அந்தப் பிள்ளைக்கும் கல்யாணம் எண்டால் விருப்பம் இல்லைத் தான்.. இங்க சித்தியும் அம்மாவும் மாதிரி அங்க தாத்தாட வற்புறுத்தல்..”

“ஓ.. அப்போ எப்புடிடா சரி வரும்..”

“தங்களுக்காக இல்லாட்டாலும் பெரியவைக்காக எண்டாலும் ஒத்துக் கொள்ளுவினம் பாருங்கோ..”

“அப்புடி எண்டுறியோ.. சரியா வருமோடா..”

“வரும் சித்தி.. வருமெண்டு நம்புவம்..”

“சரி நானும் அப்புடியே நம்புறன்.. நீ உள்ள வா நான் தேத்தண்ணி போடுறன்.. கிருஷ்ணா வெளியால எங்கயோ போறான்..”

“ஓம் கண்டு கொண்டு தான் வாறன் சித்தி..”

“உன்னைப் பாத்து முறைச்சிருப்பானே..”

“முறைப்போ.. நெற்றிக்கண்ணைத் திறக்காத குறையாப் பாத்துக் கொண்டு போறான்.. நான் தான் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா எண்டிட்டு ஓடியாந்திட்டன்..”
என்று சிரித்தவனோடு தானும் சிரித்தார் செல்வி.

இங்கே ரகுவும் அங்கே மதுவந்தியும் இணைந்து, தங்கள் தங்கள் நண்பர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப் படாதபாடுபட்டுக் கொண்டிருக்க, உரியவர்கள் இருவரும் கழுவுற மீனில் நழுவுற மீன் போல, எதற்கும் பிடி கொடுக்காமல் நடந்து கொண்டிருந்தார்கள்.

பண்ணைக் கடற்கரை, மாலைச் சூரியன் மேல் வானின் கீழ் விளிம்பில் இறங்குகின்ற நேரத்தில், அங்கே கிடந்த ஒரு கல்லாசனத்தில் அமர்ந்திருந்தாள் விஷ்ணுவர்தனி.

இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்காகப் பார்க்கப்பட்ட மாப்பிள்ளையைச் சந்திக்கப் போகிறாள் அவள்.

இது போன்ற பேச்சுத் திருமணங்களின் போது, ஜோடிகள் முதன்முதலாக நேரில் சந்திக்கப் போகின்ற வேளைகளில், பையன் எப்படி இருப்பான், எனக்குத் தோதாகப் பொருத்தமாக இருப்பானா, நெட்டையா குட்டையா, கறுப்பா சிவப்பா என்கிற ஏகப் பட்ட யோசனைகள் பெண்ணுக்குள் ஓடும்.

ஆனால் இங்கே எல்லாம் தலைகீழாகத் தான் இருந்தது, ஒருகணம் கூட வரப் போகிறவனுடைய தோற்றம் எப்படி இருக்கும் என்கிற எண்ணமே விஷ்ணுவுக்கு வரவில்லை.

மாறாக அந்தப் புதியவன் வந்ததுமே தான் என்னவெல்லாம் சொல்ல வேண்டும், என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவற்றையே உருப்போட்டபடி தான் இருந்தாள்.

விஷ்ணு சந்திக்கப் போகின்ற அந்த மாப்பிள்ளையிடம் நேரடியாக எதுவும் பேசவில்லை, எல்லாவற்றையும் ரகுவும் மதுவுமே நடுவில் இருந்து பார்த்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது கூட வருகின்ற மாப்பிள்ளையோடு பேசுவதற்காக அவள் மட்டும் தனியாக வந்திருக்கவில்லை, மதுவந்தியும் கூடவே தான் வந்திருந்தாள்.

இவளை இங்கே அமர வைத்து விட்டுத் தொலைவில் இருந்த சிறிய தேவாலயத்துக்குப் போய் விட்டாள் அவள்.

பண்ணைக்கு வரும் போதே இருவரிடையேயும் சிறு வாக்குவாதம் ஒன்று போய்க் கொண்டுதானிருந்தது.

“மது.. கடைசியாக் கேக்கிறன் இருப்பியோ மாட்டியோ..”

“நானும் கடைசியாச் சொல்லுறன்.. நான் இருக்கவே மாட்டன்..”

“மதூ பிளீஸ்டி..”

“தயவு செய்து சொல்லுறதைக் கேள் வர்தனி.. இது நீ கதைச்சு முடிக்க வேண்டிய விசியம்.. நான் பக்கத்துல இருந்தால் நீ வாயே திறக்க மாட்டாய் எண்டு எனக்கு வடிவாத் தெரியும்..”

“இல்லடி நான் கதைப்பன்..”

“யாரு நீ.. நல்லாக் கதைப்பாய்.. இஞ்ச பார் வர்தனி.. நான் பக்கத்துல இருந்தால் நீ அடிக்கொரு தரம் என்னைத் தான் பார்ப்பாய்.. நீ தனியா இருந்தால் தான் உன்னால சுயமாக் கதைக்க முடியும்.. அதோட கூட நான் இருக்கிறத அவை விரும்ப மாட்டினம்..”

“என்னென்னவோ சொல்லிக் கழட்டி விட்டிட்டுப் போறாய் கள்ளி.. உன்ரை புருஷனை நீ முதல் முறை பாக்கப் போன நேரம் நான் தான் கூட வந்து பக்கத்துல நிண்டனான் எண்டுறத மறந்துட்டாய் நீ.. “

“வர்தனீ.. அப்ப நான் உன்ர முகத்த முகத்தப் பாத்தனே மறந்து போச்சுதோ..”

“சரி போய்த் துலை..”

“கொஞ்சம் சிரிச்சுக் கொண்டே சொல்லன்டி..”

“முடியாது போடி..”
எனத் தோழியைப் பொய்க் கோபத்தோடு துரத்தியவள், இந்தக் கல்லாசனத்தில் வந்து அமர்ந்து விட்டாள்.

அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் இறுகிக் கிடந்த மனதை இலகுவாக்க, அவள் பார்வையைச் சுழல விடவே, அவளது பார்வை வட்டத்துக்குள் விழுந்தான் அவன்.

இந்தச் சுடுதண்ணி இங்கே என்ன செய்கிறது என்பது போலப் பார்த்தவள், அப்போது தான் அவன் அணிந்திருந்த உடையின் நிறத்தைப் பார்த்தாள்.

மதுவந்தி சொன்ன பாசிப்பச்சை நிறத்து டீசேர்ட்டும், பழுப்பு வண்ண ஜீன்சும் அப்போது தான் அவளது கருத்தில் விழ, அவளுடைய விழிகள் விரிந்தன.

இவனா அந்த மாப்பிள்ளை என யோசித்தவளுக்கு, எப்போதும் 
வேண்டாத நாடகத்தை வெறுப்போடு பார்ப்பது மாதிரி, 
குருத்து வாழை இலையில சுடுசோறு விழுந்தது மாதரி, 
இன்னும் எத்தனையோ மாதிரி இருக்கின்ற அவனுடைய முகத்தைப் பார்த்ததும் பேச்சு வருவேனா என்பது போல இருந்தது.

இந்தச் சுடுதண்ணியிடம் எப்படிக் கதையை ஆரம்பிப்பபது என்கிற எண்ணமே அவளுக்கு நீண்ட பெருமூச்சை வரவழைக்கவே, அப்போது தான் அவள் இன்னொரு விசியத்தையும் கவனித்தாள்.

அவன் கையைப் பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள் குட்டிப்பெண் ஆருதி.

அவன் ஆருதியை அழைத்து வந்திருந்தது அவளுக்கு உள்ளூர மிகவும் பிடித்திருந்தது.

அதே நேரத்தில்
“தங்கச்சி.. வந்து கன நேரமோ.. மது எங்க..”
என்ற குரலில் திரும்பிப் பார்த்தவள், பின்னால் நின்றிருந்த ரகுவைப் பார்த்ததும் மெல்ல இறுக்கம் தளர்ந்தாள்.

“வாங்கோண்ணா.. இப்பத் தான் அங்கா அந்த சேர்ச்சுக்குப் போனா.. கூட்டிக் கொண்டு போகப் போறிங்களோ..”
என்றவளது கேள்விக்குள், போக வேண்டாமே என்பது தொக்கி நின்றது.

“சேச்சே..சும்மா கேட்டனான்.. நான் உனக்கு கிருஷ்ணாவை அறிமுகப் படுத்த வந்தனான்.. உனக்கு ஏற்கனவே அவனைத் தெரியும்.. ஆனாலும் பழக்கம் இல்லைத் தானே..”
என்று கொண்டே சற்றே தொலைவில் வந்து கொண்டிருந்த பிரேமகிருஷ்ணாவிடம் சென்றான் ரகு.

“டேய் அந்தப் பிள்ளை தான்டா..”
என்று ரகு கைகாட்ட, சலனமில்லாத பார்வையொன்றை விஷ்ணு மீது பதித்த படி
“தெரியும்..”
என்றான் அவன் சாதாரணமாக.
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page