அத்தியாயம்- 4

அவள் முதல் அவள் வரை.

***********************************

அத்தியாயம் – 4.

“””””””””””””””””””””””

     “அத்தைய உங்களுக்கு ரொம்பப் புடிக்குமா சார்?”

     ஸ்வேதாவின் அந்த கேள்வி சக்கரவர்த்தியைச் சில நொடிகள் ஸ்தம்பிக்க வைத்தது. பதில் சொல்லாமல் ஸ்வேதாவைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

     “ரொம்பன்னு கேக்குறியேம்மா. ரொம்ப அப்படிங்கற வார்த்தைக்கு அளவு ஏதாவது வச்சிருக்கியா?”

     இந்தக் கேள்விக்குப் பதிலை ஸ்வேதா சற்றே தடுமாறிச் சொன்னாள்.

     “ரொம்பன்னா நெறய, அதிகமான, இந்த வார்த்தைக்குள்ள சொல்ல முடியாத அளவுன்னு சொல்லுவாங்களே, அப்படி.”

     “இந்த உலகத்துல, அளவீடுகளுக்குள்ள அடங்காதது அன்பு மட்டும்தான். அன்பின் நிமித்தமா ஒருத்தரப் புடிச்சுப் போச்சுன்னா அதுக்கும் அளவு இல்ல ஸ்வேதா.”

      அவர் சொன்ன அந்த வார்த்தைகள் ஸ்வேதாவை வெகுவாகக் கவர்ந்தன.

     “கரெக்ட் சார். ரொம்ப அழகாச் சொன்னீங்க.”

     “சரி ஸ்வேதா. உன் கதையை சொல்லு.”

     ஸ்வேதா, தான் சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்திய இடத்திலிருந்து மீண்டும் தொடங்கினாள்.   

      “பேசினோம். பழகினோம். ரெண்டு பேருக்குமே ஒருத்தருக்கு ஒருத்தரப் புடிச்சிருந்துச்சு. முடிவு பண்ணிட்டோம். 

     கோர்ஸ் முடிஞ்சது. அவர் ஹையர் ஸ்டடீஸ் போனார். நான் போகல. காலேஜ் டேஸ்க்கு அப்புறமா நாங்க மீட் பண்ணிப் பேசுனதே கொஞ்ச நாட்கள் தான். 

     அவருக்கு வேலை கிடைச்சது. அவங்க வீட்ல அவருக்குப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க. அவரு என்னைப் பத்தி அவங்க வீட்ல சொன்னாரு. அப்பத்தான் பிரச்சனை ஆரம்பிச்சது” என்று அவள் நிறுத்தவும், அவர்களுக்கான காஃபி வரவும் சரியாக இருந்தது.

     “ப்ளீஸ் என்ஜாய் வித் யுவர் மிஸ்டு காஃபி மேம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் அந்தக் காஃபி ஷாப் பெண். 

     ஒரு தேங்க் யூவுடன் சிறு புன்னகையையும் சேர்த்துக் குழைத்து அவளுக்குத் தந்தாள், ஸ்வேதா. 

     அழகான கண்ணாடிக் கப் அண்டு சாஸரில் வந்த காஃபியின் மணம் நாசியில் நுழைந்து, மூச்சுக் குழாயில் வழுக்கி, நுரையீரலில் பரவிப் பரவசம் தந்தது.

     “சொல்லும்மா. நீ பிரச்சனைன்னு சொன்னது…. உங்க காதலுக்கான எதிர்ப்பா?” என்றார், சக்ரவர்த்தி.

     “ஆமா சார். எங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்க. ஆனா, மாமாகிட்ட இருந்து மிகப் பலமான எதிர்ப்பு. அதே சமயத்துல அத்தை கிட்ட இருந்து எங்களுக்கு மிகப் பலமான ஆதரவு.”

      அதுவரை, தனது தவிப்பையெல்லாம் அடக்கி வைத்திருந்த சக்ரவர்த்தியின் முகம் மலர்ந்தது. ஸ்வேதா தொடர்ந்தாள். 

     “அத்தை, மாமாவை எப்படி எப்படியோ போராடிக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சாங்க. 

     நல்லபடியாக் கல்யாணமும் முடிஞ்சது. கல்யாணம் முடிஞ்ச பத்தாவது நாள் நானும் அத்தையும் பேசிக்கிட்டிருந்தப்ப, ‘எங்க கல்யாணத்த நடத்தியே ஆகனும்னு நடத்திட்டீங்க. மாமா அவ்ளோ எதிர்த்தும் எதனால இவ்வளவு போராடிக் கல்யாணத்த நடத்துனீங்க? உங்க மகன் ஆசப்பட்ட வாழ்க்கை அமையனும்னா?’ – ன்னு கேட்டேன். அதுக்கு அத்தை சொன்ன பதில் எனக்கு ஷாக்கா இருந்துச்சு.”

     அந்தப் பதிலை அறிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டது சக்ரவர்த்திக்கு. 

     “அப்படி என்னம்மா சொன்னாங்க?” என்றார்.

     “எம் மகனுக்காக நான் இதப் பண்ணல. உனக்காகப் பண்ணினேன்னு சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. அவங்க சொன்னத என்னால புரிஞ்சுக்க முடியல. 

     ஆனா, நான் புரிஞ்சுக்குற மாதிரி அத்தையே விளக்கமாச் சொன்னாங்க.   

     ஒரு பொண்ணோட மனசுக்குப் புடிச்ச வாழ்கை அவளுக்குக் கெடைக்காமப் போயிருச்சுன்னாக் காலம் முழுக்க அவ மனசு தவிச்சுட்டே இருக்கும். 

     எடுக்கவே முடியாத ஒரு தூசி கண்ணுல விழுந்துட்டாக் காலம் பூரா எவ்வளவு உறுத்தும்? அந்த மாதிரித்தான் மனசுக்குள்ள எடுக்கவே முடியாத ஒரு வலி வந்து விழுந்துடும். அது உனக்கு வரக்கூடாதுன்னு நெனச்சேன்னு சொன்னாங்க. 

     அத்தைக்கு உன்னதமான மனசு. தன்னோட மகன் ஆசப்பட்ட பொண்ணு அவனுக்குக் கெடைக்கணும்னு ஆசைப்படற அம்மாக்களுக்கு மத்தியில, தன் மகனை விரும்பிய பொண்ணுக்கேத் தன்னோட மகன் கெடைக்கணும்னு நெனச்ச அந்த மனசை உன்னதம்னு சொல்லாம வேறென்ன சொல்றது? அத்தைன்னு நான் கூப்பிட்டாலும், அவங்க எனக்கு இன்னொரு அம்மா.”

     நடக்கும் நிகழ்வுகள், தேடி வந்தும் சந்திராவை இது வரை பார்க்க முடியவில்லையே என்ற தவிப்பை, சக்ரவர்த்திக்கு அதிகமாக்கிக் கொண்டிருந்தன என்பதை அவர் முகம் காட்டியது. 

     அதை ஸ்வேதா உணர்ந்தாள். காஃபிக்கான பில்லைச் செலுத்திவிட்டு, “போலாம் சார்” என்றாள்.

     “பஸ் ஸ்டாண்டுக்காம்மா?” என்றார், சக்ரவர்த்தி.

     அவரது அந்தக் கேள்வி, அவருக்குள் இருக்கும் தேடலை, தவிப்பை, வார்த்தைகளில் சொல்ல முடியாத ஏதோ ஒன்றைத் திறந்த புத்தகமாக வைத்திருந்தது. 

     அதை ஆழமாகப் படித்த ஸ்வேதா, அவருக்குப் பதில் சொன்னாள்.

     “இல்ல சார்.”

     சக்ரவர்த்தி, முகத்தில் சிரித்தார். அகத்தில் மகிழ்ந்தார். 

     மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த சேக்ஸாஃபோன் இசை இப்போது அவருக்கு மட்டும் உரக்க ஒலித்தது.

     அந்த வெள்ளை நிற ஸ்கூட்டர் அவர்களைச் சுமந்து கொண்டு பிரதான சாலையை அடைந்து, பேருந்து நிலையம் கடந்து அதற்குப் பிறகு ஐந்து நிமிடங்கள் பயணித்து அந்தப் பெரிய கட்டிடத்தின் சுற்றுச் சுவரிலிருந்த கேட்டிற்குள் நுழைந்தது. 

     சக்ரவர்த்தியின் முகம் மாறியது. காரணம் அது, “ஐ லைஃப் ஹாஸ்பிடல்” ( I LIFE HOSPITAL) என்ற மருத்துவமனை.

      பார்க்கிங்கில் ஸ்கூட்டரை நிறுத்திய ஸ்வேதாவிடம் சற்றுப் படபடப்பான குரலில்,”ஸ்வேதா, இப்ப இங்க எதுக்கு?” என்றார், சக்ரவர்த்தி.

     “ப்ளீஸ். கொஞ்சம் கூட வாங்க சார்” என்று சொல்லிவிட்டு ஸ்வேதா நடக்கவும் அவளுடன் சென்றார். 

     மருத்துவமனைக்குள் நுழைந்து, லிஃப்ட் பிடித்து, நான்காவது தளம் அடைந்து, வராண்டாவில் நடந்து, இடது புறம் திரும்பியதும் அங்கிருந்த ரிஷிப்ஷனில் நின்று விசிட்டர்ஸ் சேர்களை நோக்கிக் கை காண்பித்தபடி, “சார், ஒரு நிமிஷம் அப்படி உக்காருங்க. வந்துடறேன்” என்ற ஸ்வேதாவை ஏதும் கேட்க முடியாமல் மெதுவாகச் சென்று அமர்ந்து கொண்டார், சக்ரவர்த்தி. 

     ரிஷப்ஷனில், நர்ஸிடம் பேசிவிட்டுச் சக்ரவர்த்தியின் அருகில் வந்து அமர்ந்தாள், ஸ்வேதா. 

     குழம்பிய முகத்தோடு ஸ்வேதாவைப் பார்த்துப் பேசினார், சக்ரவர்த்தி.

     “என்னால முடியலம்மா. என்னம்மா நடக்குது? இங்க, எதுக்கு?” 

     “அத்தை, ஐ.சி.யு – ல இருக்காங்க.”

     துடிக்கும் இதயம் தும்மலின் போது நின்று, பிறகு துடிக்கும். 

     சக்ரவர்த்தியின் இதயம் தும்மாமலேயே நின்று பிறகு துடித்தது. 

     “என்னாச்சு?” கிணற்றுக்குள்ளிருந்தது போலக் குரல் வந்தது.

     “நாலு நாளைக்கு முன்னால மாடியில இருந்து இறங்கும் போது தவறி விழுந்துட்டாங்க. பின் மண்டையில பலமான அடி. வலது தொடையிலயும் அடி. 

     ஆனா, உயிருக்கு ஆபத்தில்ல, இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாள்ல நல்லபடியா எழுந்து உக்காந்துடுவாங்கன்னு டாக்டர் சொல்லியிருக்கார். 

     அப்பப்பக் கண்ணு தெறக்கறாங்க. நல்லபடியா வருவாங்கன்னு நாங்களும் நம்பறோம். நிச்சயமா நல்லபடியா வந்துடுவாங்க. 

     இத்தன வருஷம் கழிச்சு வந்திருக்கீங்க. நீங்க அத்தையப் பாக்காமப் போகக் கூடாது. இப்படிப் போயி, வலது புறம் திரும்பினா, ஐ.சி.யு. உள்ள போனதும் இடது புறம் ஆறாவது பெட். போயிப் பாருங்க.”

     சக்ரவர்த்தி எழுந்தார். நடந்து வலது புறம் திரும்பினார். ஐ.சி.யு. தெரிந்தது. 

     நெஞ்சில் கை வைத்தார். லப்-டப் அதிகமாக இருந்தது. 

     மெல்லக் கதவு திறந்து நுழைந்தார். 

     முகத்தில் மாஸ்க்குடன் எதிர்ப்பட்ட நர்ஸ் சக்கரவர்த்தியைத் தன் கண்களால் கேள்வி கேட்டாள். 

     அப்போது, பல வருடங்களுக்குப் பிறகு சந்திராவின் முழுப் பெயரை உச்சரித்தார்.

     “சந்திரவதனா.”

     அவள், ஆறாவது படுக்கையைக் கை நீட்டிக் காட்டினாள். ஒவ்வொரு படுக்கைக்கு இடையிலும் திரைச்சீலை மறைப்புகள் இருந்தன.

     சக்ரவர்த்தி நடந்தார். இல்லையில்லை, நகர்ந்தார். 

     அவரது முகம் இறுகியிருந்தது. திரண்ட கண்ணீரை விழ விடாமல் இமைகள் தாங்கிப் பிடித்துக் கொண்டன.

     நகர்ந்தார். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறாவது கட்டிலின் கால் மட்டும் தெரிந்தது. 

     அடுத்த அடி எடுத்து வைத்தால் சந்திரவதனாவின் கால்கள் தெரிந்துவிடக் கூடிய இடைவெளி மட்டுமே இருந்தது. நின்றார்.

    இமைகள் மூடினார். கண்ணீர்த் துளிகள் துண்டாகி விழுந்தன.

     அப்போது, அவரே நினைக்காத ஒன்று அங்கே நிகழ்த் தொடங்கியது.

     அவருக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. 

     வலது கையால் தனது கண் கண்ணாடியைக் கழற்றினார். இமைகளை ஈரமாக்கியிருந்த கண்ணீரை வலது புறங்கையால் துடைத்தார். மீண்டும் கண்ணாடியை அணிந்தார். 

     கண்களுக்குத் தெரிந்த அந்தக் கட்டிலின் காலை உற்றுப் பார்த்தபடியே நின்றார். வல்லின வலியை ஒரு மெல்லினச் சிரிப்பில் உதிர்த்தார். 

     நின்ற இடத்திலிருந்து பின்னோக்கி ஒரு அடி எடுத்து வைத்துத் திரும்பி நடந்தார். ஐ.சி.யு-வின் வாசற் கதவு திறந்து வெளியில் வந்தார். 

     வராண்டாவில் நடந்து ரிசப்ஷனை அடைந்தார். அவரைக் கண்டதும் அமர்ந்திருந்த ஸ்வேதா எழுந்து ஆவல் நிறைந்த மனதோடும் கண்களோடும் கேட்டாள்.

     “பாத்துட்டீங்களா சார்?”

     ஸ்வேதாவைப் பார்த்துத் தன் உதடுகளில் சில மில்லி மீட்டர் புன்னகை காட்டிய சக்ரவர்த்தி, “நன்றிம்மா” என்று கைகள் கூப்பினார்.

     “இருக்கட்டும் சார்” என்றவளிடம், “போலாம்மா” என்று சொல்லிவிட்டுத் தனது பேக்கை எடுத்துத் தோள்களில் மாட்டினார். 

     இருவரும் லிஃப்ட்டிற்கு வந்து கீழே இறங்கித் தரைத் தளம் அடைந்து வெளியில் வந்தனர். 

     சக்ரவர்த்தி, இடமும் வலமும் பார்த்தார். மருத்துவமனையின் சுற்றுச் சுவருக்குள் வலது புற மூலையில் ஒரு வேப்பமரம் இருந்தது. 

     அதன் நிழலில் ஒரு அழகிய மார்பிள் பென்ஞ்ச் காலியாக இருந்தது. அதை நோக்கிக் கை நீட்டியபடி, “அங்க கொஞ்ச நேரம் உக்காரலாமா?” என்றார். 

     “தாராளமா சார்” என்று அவள் சொல்லவும் இருவரும் அங்கு சென்றனர். 

     தனது பேக்கைத் தோள்களிலிருந்து இறக்கி வைத்துவிட்டு அந்த மார்பிள் பென்ஞ்சில் அமர்ந்தார். ஸ்வேதாவும் அவருக்கு இடது புறமாக அருகில் அமர்ந்தாள்.

     சக்ரவர்த்தி, பென்ஞ்சில் சாய்ந்துத் தலை உயர்த்தி அண்ணாந்து அந்த வேப்பமரத்தைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கண்களை மூடினார். 

     சில நொடிகளுக்குப் பிறகு கண்கள் திறந்து இடப்புறம் திரும்பித் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதாவிடம் பேசினார்.

     “ஸ்வேதா இந்தக் காலம் இருக்கே அது பொல்லாதது. அதுக்கு எல்லாமே விளையாட்டு. ஆனா, அதோட விளையாட்டால வர்ற சந்தோஷமும் அழுகையும் நமக்குத் தான். அதுக்கு இல்ல.”

     “நீங்க சொல்றது புரியல.”

     “அடுத்த விநாடிக்குள்ள என்ன ஒளிஞ்சிருக்குன்னு யாராலயும் சொல்ல முடியறதில்ல.

     நான் வந்தேன். உன் புருஷன் என்னைக் கொண்டு போயி பஸ் ஸ்டாண்டுல விட்டாரு. பாக்க வந்தவங்களப் பாக்க முடியாம, அவங்களப் பத்தின விஷயம் எதுவுமே தெரியாம இப்படி இங்க நிக்கிறமேன்னு நான் வருத்தப்பட்டுட்டு இருந்தப்ப, திடீர்னு நீ வந்து நின்ன. 

     என்னை இங்கக் கூட்டிட்டு வந்த. இங்க வந்தா சந்திரா ஐ.சி.யு – ல” என்று நிறுத்தினார். 

     அவர், நிறுத்தியது தாளாமல் கேள்வி கேட்டாள் ஸ்வேதா.

       “அத்தையப் பாத்திங்களா சார்? பாத்தப்ப உங்களுக்கு எப்படி இருந்துச்சு?”

     “நான் உன்னை ஒன்னு கேக்கலாமா?”

     “கேளுங்க சார்.”

     “என்னை விட்டிருந்தா நான் அப்படியே போயிருப்பேன். எதுக்கு நீ என்னைத் தேடி வந்து இங்கக் கூட்டிட்டு வந்த?”

     “மனசு சொல்லுச்சு. அதச் செஞ்சேன். அவ்ளோ தான். வாழ்க்கையில நெறையப் பேரோட பழகறோம். ஆனா, அத்தனைப் பேரோடயும் நாம இருக்கறதில்ல. பல பேர நாம மறந்துடறோம். பல பேர் நம்மள மறந்துடறாங்க. 

     இதையெல்லாம் தாண்டிக் கொஞ்ச நஞ்சம் இருக்குற மனுஷங்களும் வருத்தம், சங்கடம்னு விலகிடறாங்க. 

     இப்படி வாழற இந்த வாழ்க்கையில, எப்பவோ பழகிப் பிரிஞ்சு போன நீங்க இந்த வயசுலயும் தேடி வந்திருக்கீங்கன்னா அது எப்படிப்பட்ட அன்பா இருக்கும்னு நெனச்சேன். 

     பெரும்பாலும் அது தப்பாத் தான் எல்லாருக்கும் தோணும். எனக்கு அப்படித் தோனல. காரணம், அத்தையோட குணம். 

அவங்க பக்குவம். அது, வேற சார்.    

     அப்படிப் பட்ட அவங்களத் தேடி ஒருத்தர் வர்றப்ப அத எப்படி விட்டுட முடியும்? எல்லாத்துக்கும் மேல” என்று நிறுத்தினாள். 

     நிறுத்தியவளே தொடரட்டும் என்று மெளனம் காத்தார், சக்ரவர்த்தி.

     “உங்க பார்வை. அதுக்குள்ள இருந்த அந்தத் தேடல். இதையெல்லாம் பாத்துத் தான் என் மனசு சொல்லுச்சு. நான் உங்கள இங்கக் கூட்டிட்டு வந்தேன். 

     ஆனா, உங்கள இங்க கூட்டிட்டு வந்ததுல உங்களுக்கு எதாவது மன வருத்தம் ஏற்பட்டிருந்தா, தயவு செஞ்சு என்னை மன்னிச்சிருங்க சார்.”

     “உனக்கு ரொம்பப் பெரிய மனசு ஸ்வேதா.”

     “அது இருக்கட்டும் சார். அத்தையப் பாத்ததும் உங்களுக்கு என்ன தோணுச்சு?”

     “பாக்கணுமான்னு தோனுச்சு.”

     முகம் மாறியது ஸ்வேதாவுக்கு.

     “என்ன சார்? என்ன சொன்னீங்க?”

     “ஆமா ஸ்வேதா. இத்தன வருஷம் கழிச்சுப் பாக்க வந்தேன். தலையில கட்டுப் போட்டுக் கண்ணு மூடி ஐ.சி.யு – ல இருக்குற உங்க அத்தைய அந்தச் சூழ்நிலையில பாக்கற மனசு எனக்கு இல்ல. 

     நாங்க சின்ன வயசுல பாத்தது. இப்ப வயசாயிருச்சு. உருவத்துல எனக்கு நிறைய மாற்றம். அதே மாற்றம் உங்க அத்தைகிட்டயும் இருக்கும்.

     முதுமைங்கறது, ஒரு விதமான, ஒரு  வலியான, ஒரு வித ஏக்கம் நெறஞ்ச நிலை. அந்த நிலையில சந்திக்கும் போது இப்படி ஒரு சூழ்நிலை. 

     உங்க அத்தையப் பாக்காமலேயே வந்துட்டேன்.” 

     அவரது வார்த்தைகளைக் கேட்டு, என்ன சொல்வதென்றே புரியாமல் ஒரு வித தவிப்பான மனநிலையில், தரையைப் பார்த்தாள் ஸ்வேதா.  

     

     அப்போது, அவளது செல்ஃபோன் ஒலித்தது. ராகவன் அழைத்தான். ஃபோனை எடுத்துப் பேசினாள்.

     “சொல்லுங்க.”

     “……………”

     “ம்… வெளியில வந்தாச்சு.”

     “……………”

     “இல்ல… பாக்கலயாம். உள்ள போயிட்டு, மனசில்லாமத் திரும்பி வந்துட்டார்.”

     “……………”

     “சரி. ம்… வச்சிடறேன்” என்று சற்றே மாறிய முகத்துடன் இணைப்பைத் துண்டித்தாள்.

     “யாரும்மா? உம் புருஷனா?”

     “ஆமா சார். கேட்டார். நடந்ததைச் சொன்னேன்.”

     “உம் புருஷனுக்கு நான் நன்றி சொன்னேன்னு சொல்லு.”

     “சொல்றேன் சார்.”

     “சரிம்மா. நான் அப்படியே நடந்து போயிக் கேட்டுக்கு வெளிய நிக்கறேன். நீ வண்டி எடுத்துட்டு வந்து என்னை பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுடறியா?”

     “சரிங்க சார்” என்றவள் கனத்த மனதுடன், “உங்க ஃபோன் நம்பர் குடுங்க சார், ப்ளீஸ்” என்றாள்.

     “ஹூம், வேணாம்மா” என்று புன்னகையோடு சொல்லிவிட்டு நகர்ந்தார்.

     நான்கு அடிகள் நடந்த சக்ரவர்த்தி, சட்டென்று நின்று திரும்பி ஸ்வேதாவிடம்,”எனக்கு ஒரு உதவி செய்வியாம்மா?” என்றார்.

     “சொல்லுங்க சார்.” 

     “சக்ரவர்த்தின்னு ஒருத்தன் வந்துட்டுப் போனதா தயவு செஞ்சு உங்க அத்தை கிட்டச் சொல்லிடாதம்மா.” 

     சொல்லிவிட்டு ஸ்வேதாவிடம் எந்த விதமான வார்த்தைகளையும் எதிர்பார்க்காமல் திரும்பி நடந்தார்.

     அவரது வார்த்தைகளால் அதிர்ச்சியுற்று நின்ற ஸ்வேதாவின் காதுகளுக்குள் சற்றுமுன் ஃபோனில் பேசிய ராகவனின் வார்த்தைகள் மீண்டும் ஒலித்தன.

     “ஸ்வேதா…. அவரு வந்தவரைக்கும் சரி. அவரு கேட்டா நம்ம ஃபோன் நம்பர் எதையும் குடுத்துடாத. 

     குறிப்பா, அம்மா எழுந்தப்புறம் அவங்ககிட்ட சக்ரவர்த்தின்னு ஒரு மனுஷன் வந்துட்டுப் போனதாத் தயவு செஞ்சு சொல்லிடாத.”

     சக்ரவர்த்தி, சற்றுத் தூரமாக நடந்து சென்ற பின் நின்று திரும்பி, நின்ற இடத்திலேயே நின்றபடித் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதாவை நோக்கிச் செய்கையால் என்ன என்பது போலப் பாவனையாகக் கேட்கவும், அவள் ஒன்றுமில்லை என்பதாகப் பாவனை செய்தபடி தனது ஸ்கூட்டரை எடுக்க நகர்ந்தாள்.

     மருத்துவமனைக்கு வெளியில் வந்த சக்ரவர்த்தியைத் தனது ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டுப் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றாள், ஸ்வேதா.

     பேருந்து நிலையம் அடைந்ததும் ஸ்கூட்டரிலிருந்து இறங்கினார், சக்ரவர்த்தி. ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு அவரருகில் வந்தாள், ஸ்வேதா. 

     இருவருக்குள்ளும் அதீதத் தவிப்பு. இருவரது மனங்களும் கசிந்தன. 

     இனி சந்திக்கப் போவதில்லை என்ற நிலையில், இன்னும் சில நிமிடங்களில் பிரியப் போகிறோம் என்ற மனோபாவம் தரும் வலி கொடியது. 

     அந்த நிலை இப்படியான உறவுகளுக்குத்தான் என்கிற வரையறை இல்லை. வாழ்வின் எந்தத் தருணத்திலாவது, எந்த உறவிடமாவது அது நிகழும். அதைக் காலம் நிகழ்த்தும். 

     இந்தப் பேருந்து நிலையத்தில் சக்ரவர்த்திக்கும், ஸ்வேதாவிற்கும் அப்படியான நிகழ்வைக் காலம் நிகழ்த்திக் கொண்டிருந்தது. மனம் புறந்தள்ளும் வார்த்தைகளை வாங்கிச் சொல்ல இருவரின் நாவுகளும் சக்தியில்லாமல் தவித்தன. 

     சக்தியை வரவழைத்துக் கொண்ட சக்ரவர்த்தி, ஸ்வேதாவிடம் பேசினார்.

     “ஸ்வேதா, வாழ்க்கையில நெறையப் பேரோட பழகறோம். ஆனா, அத்தனப் பேரோடயும் நாம இருக்கறதில்ல. பல பேர நாம மறந்துடறோம். பல பேர் நம்மள மறந்துடறாங்கன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ சொன்னது மறுக்க முடியாத உண்மை. 

     இந்த வாழ்க்கை அப்படித்தான் நகருது. என்னால மறக்க முடியாத நபர்கள்ல இப்ப நீயும் ஒருத்தி. சின்னப் பொண்ணா இருந்தாலும் உனக்குள்ள எவ்வளவு பக்குவம்? நீ நல்லா இருப்பம்மா. 

     வாழ்க்கை எல்லாருக்கும் பரிசா ஒரு வரத்தைத் தருது. அதுக்குப் பேரு நினைவுகள். நினைவுகள் ரொம்ப அழகானது. நினைவுகளோட வாழற வாழ்க்கை இனிமையானது. 

     அடுத்த விநாடிக்குள்ள ஒளிஞ்சிருக்கற விஷயம் தெரியாதவரைக்கும் இந்த வாழ்க்கை சுவாரஸ்யமானதும் கூட. 

     மிச்சமிருக்குற வாழ்க்கை எத்தனை சுவாரஸ்யங்களை வச்சிருக்குன்னு தெரியல. பாப்போம். நான் புறப்படறேன்” என்று முடித்துவிட்டுத் தன் கைகளைக் கூப்பினார். 

      

      கனத்த மனதுடன் ஸ்வேதாவும் தன் கைகளைக் கூப்பினாள். அவள் விழிகளில் கண்ணீர் திரண்டு நின்றது.

     ஸ்வேதாவிடமிருந்து விடைபெற்ற சக்ரவர்த்தி பேருந்து நிலையத்திற்குள் நடக்கத் தொடங்கினார்.

     சக்கரவர்த்தியை அழைத்தாள் ஸ்வேதா.

     “சார், ஒரு நிமிஷம்.”

      நின்ற சக்கரவர்த்தி ஸ்வேதாவைப் பார்த்தார். 

     “என்னம்மா?”

     “நாம காஃபி ஷாப்ல பேசிட்டு இருந்தப்போ ஜவுளிக்கடை பத்தின பேச்சு வந்தப்ப அந்த புடவையோட கலரு மாம்பழக் கலர்னு நான் சொன்னேன்ல?”

      “ஆமா.”

     “மாம்பழக் கலருன்னு நான் சொன்னது பொய். அது, நீங்க சொன்ன லைட் கிரீன் கலர் தான்.”

      அதைக் கேட்ட சக்கரவர்த்தியின் முகம் மாறியது. கண்கள் பணித்தன. தொண்டை அடைத்து, எச்சில் விழுங்கினார்.

     முகத்தில் சோகத்தையும், பெருமிதத்தையும் கலந்து பிசைந்த ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுப் பட்டென்று திரும்பி நடந்தார். 

     அதுவரை ஒலிக்காத அவரது செல்ஃபோன் அப்போது ஒலித்தது. அடுத்த விநாடி ஒளித்து வைத்திருந்த அவருக்கான ஒன்று, அந்த அழைப்பில் இருந்தது. 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page