அத்தியாயம் 3
இந்தத் திமிர் தான்டி உன்கிட்ட என்னைக் கட்டிப் போட்டிருக்கு!
தன் டேபிளின் மேலிருந்த பைல்களை எல்லாம் ஒவ்வொன்றாகச் சரிபார்த்து கையெழுத்திட்டுக் கொண்டிருந்த தியாவின் புருவங்கள் சுருங்க, சிறு குழப்பத்தோடு கடைசியாக இருந்தா அந்தப் பிரவுன் கலர் பைலை பார்த்தவள்.
“இது எந்தப் பைல்?” என்றவாறே எடுத்து அதைத் திறந்து பார்த்த தியாவின் கண்கள் அடுத்த நொடி கோபத்தில் சிவந்தது.
“வாட் தா ஹெல்” என்று கோபத்தோடு கூறியவள் தான் அமர்ந்திருந்த சேரிலிருந்து எழு, அதுவோ இவள் எழுந்த வேகத்தில் பின்னாடி சுவற்றில் மோதி “இப்போ நான் என்ன பண்ணுனே?” என்பது போல் பரிதாபமாகத் தியாவை பார்த்தது. அதைச் சிறிதும் கண்டுகொள்ளாமல், அந்த அறையை விட்டு வெளியே வந்து, “அக்ஷரா!” என்று கோபத்தில் கத்த, அதில் சுற்றி அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் ஒரு நொடி மிரண்டு போய் நிமிர்ந்து பார்த்தனர்.
“அக்ஷரா…” என்று மீண்டும் தன் கோபம் குறையாமல் தியா கத்த, அடுத்த நொடியே, ஒரு முயல் குட்டிபோலப் பயத்தோடு ஓடி வந்து தியாவின் முன்னால் நின்றாள்.
“வாட் ஸ் திஸ்?” என்று தன் கையில் இருந்த பிரவுன் கலர் ஃபைலை அக்ஷராவின் முகத்திற்கு நேராக நீட்டித் தியா கேட்க, அக்ஷராவோ தான் அணிந்திருந்த கண்ணாடியைச் சரி செய்தபடி அந்த ஃபைலை உற்றுப் பார்த்தாள்.
“என்ன மேடம் இது கேள்வி? இது… ஃபைல், ஏன் இது கூட உங்களுக்குத் தெரியாதா?” என்று அவள் அப்பாவியாகக் கூற, தியாவுக்கு எரிச்சல் உச்சத்துக்கே போனது.
“டேய்… மச்சான் இன்னைக்கு இந்த முயல் குட்டி செத்தா டா…” என்று அக்ஷராவின் நடவடிக்கையைக் கண்டு ஒருவன் கூற,
“ம்… ஆமா மச்சான்… பாவம், இன்னைக்கு இந்த ராட்சசி நம்ப முயல் குட்டியை வறுக்கமா விடமாட்ட போல, அதுக்கு தகுந்த மாதிரி இவளும் பேசுற” என்று மற்றொருவனும் அக்ஷராவுக்காக வருத்தப்பட்டான்.
“இது ஃபைல்னு எனக்கும் தெரியும். ஆனா இது என்ன ஃபைல்னு உனக்குத் தெரியுமா தெரியாதா?” என்று தன் பற்களைக் கடித்தவாறு கோபத்தோடு தியா கேட்க, தன் ஒற்றை விரல் கொண்டு கண்ணாடியைச் சரி செய்த அக்ஷரா, அந்த ஃபைலை வாங்கிப் புரட்டிப் பார்த்தாள்.
“என்ன மேடம் இப்படி கேக்குறீங்க? இது லண்டன் ஃபேஷன் ஷோக்காக நாம ரெடி பண்ணின முக்கியமான டிசைன்ஸ் அப்றம் அப்ளிகேஷன் ஃபார்ம் ஆச்சே!” என்று சிரித்த முகத்தோடு கூற, தன் மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு முறைத்த தியா.
“நேத்து என்ன சொல்லி இந்த ஃபைலை உன்கிட்ட கொடுத்தேன்? நீ என்ன பண்ணி வச்சிருக்க?” என்று கோபத்தின் உச்சியில் தியா கேட்க, அக்ஷராவோ ஒரு நிமிடம் யோசித்தாள்.
“அட ஆமால்ல! நீங்க இதை விக்ரம் சார் கிட்ட கொடுத்துச் சைன் வாங்கிட்டு வரச் சொன்னீங்க…”
“அப்புறம் ஏன் இதுல இன்னும் நீ சைன் வாங்கல?” என்று எரிச்சலோடு கேட்டாள்.
“அதான் நேத்தே சொன்னேனே மேடம்… விக்ரம் சார் நீங்க நேர்ல வந்து கேட்டா மட்டும்தான் சைன் போடுவாராம். அதைச் சொல்லித்தான் நேத்து ஈவினிங் உங்க டேபிள் மேல இதைக் கொண்டு வந்து வச்சேன். நீங்களும் சரி போ நான் பார்த்துகிறேன்னு சொன்னிங்களே, ஏன்… நீங்க இன்னும் அவர்கிட்ட பேசலையா?” என்று அக்ஷரா கேட்க, தியாவுக்கோ ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.
“நேத்து ஈவினிங்கா?”
“ம்… ஆமா மேடம்… நேத்து நீங்க இந்தப் பைலை அவர்கிட்ட கொடுத்துச் சைன் வாங்கிட்டு வரச் சொன்னிங்களா? நானும் விக்ரம் சார் ரூமுக்கு போனே, அவரும் பைலை வாங்கி எல்லாத்தையும் செக் பண்ணிட்டு, ‘தியாவே நேர்ல வந்து என்கிட்ட சைன் கேட்கச் சொல்லு, அப்போதான் நான் சைன் பண்ணுவேன்னு சொல்லிட்டாரு. நானும் ஒவ்வொரு தடவையும் உங்ககிட்ட இதைப் பற்றிச் சொல்ல வரும்போது நீங்க வேற எதாவது வேலை கொடுத்து அனுப்பிட்டே இருந்தீங்க, சரின்னு ஈவினிங் சொல்ல வந்தப்போ நீங்க வீட்டுக்குக் கிளம்புற அவசரத்துல இருந்தீங்க, அப்போ உங்ககிட்ட இதைச் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இல்லையா மேடம்?” என்று அக்ஷரா கேட்க அப்போதே தியாவிற்கு ஞாபகம் வந்தது.
நேற்று மாலை ஒரு முக்கிய வேலையாக அவள் கிளம்பி கொண்டு இருந்தபோது, அக்ஷரா விக்ரம் பற்றி ஏதோ சொன்னதும், ஆனால் அவள் விக்ரமின் பெயரைச் சொன்னதும் அதைச் சரியாகக் காதில் கூட வாங்காமல் தான் சென்றதும் நினைவிற்கு வந்தது.
விக்ரம் தன்னைத் தேடி வர வைப்பதற்காகத் தான் இந்த முக்கியமான ஃபைலில் சைன் செய்யாமல் அனுப்பி இருக்கிறான், இனி யாரை அனுப்பி வைத்தாலும் அவன் சைன் செய்யமாட்டான் என்பதை உணர்ந்த தியா, அக்ஷராவின் கையில் இருந்த அந்த ஃபைலை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, விக்ரமின் அறையை நோக்கி விறுவிறுவென நடந்தாள்.
விக்ரம் சிவராமன் சி இ ஓ என்று பெயர் பலகை தாங்கிய அந்த அறைக்குள் கோபத்தோடு தியா நுழைய, அங்குத் தான் அந்த நிறுவனத்தின் சிஇஓ என்ற பொறுப்பு சிறிதுமின்றி காதுகளில் ஹெட்போன்ஸ் மாட்டிக்கொண்டு கேம் விளையாடிக்கொண்டிருந்தான் விக்ரம் என்னும் விக்கி… அவன் கேம் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டு கடும் கோபமுற்ற தியா தன் கையில் இருந்த பைலை அந்த டேபிளின் மேல் தூக்கி எறிந்தவள்.
“வாட் இஸ் திஸ் விக்ரம்? ஏன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க? இது எவ்வளவு முக்கியமான பைல்னு தெரியுமா? இன்னைக்கு தான் இத அனுப்புறதுக்கு லாஸ்ட் டேட் நான் இதை எவ்வளவு கஷ்டப்பட்டு ரெடி பண்ணுனேனு தெரியுமா? நீங்க என்னடான்னா அசால்டா சைன் பண்ண மாட்டேன்னு சொல்லி இருக்கீங்க, உங்களுக்கு என்ன தான் வேணும்? ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க?” என்று கோபத்தில் காட்சி மூச்சு என்று அவள் கத்திக் கொண்டிருக்க, அதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத விக்ரமோ தான் விளையாடிக் கொண்டிருந்த கேமிலிருந்து வெளிவந்து விட்டுக் காதில் மாட்டியிருந்த ஹெட்ஃபோன்சை கழட்டி கீழே மேசையின் மீது வைத்துவிட்டு, கோபத்தில் சிவந்திருக்கும் தியாவின் முகத்தைப் பார்த்து ரசித்தவன்.
“சும்மா சொல்லக் கூடாது தியா… நீ கோபப்படும்போது இன்னும் அழகா இருக்க!” என்று கூறி கண்ணடித்து சிரிக்க, அவனது அந்த அலட்சியமான புன்னகை தியாவின் எரிச்சலைத் தூண்டியது.
“விக்ரம்! இது விளையாட்டில்லை. லண்டன் ஃபேஷன் ஷோவோட முக்கியமான ஃபைல் இது. தயவுசெஞ்சு சைன் பண்ணுங்க நான் இம்மீடியட்டா இதை மெயில் பண்ணனும், இன்னும் ஒன் ஹவர் தான் டைம் இருக்கு” என்று சீரியஸாக தியா கூற, தான் அமர்ந்திருந்த சேரில் இன்னும் நன்றாக வசதியாகச் சாய்ந்து அமர்ந்து கொண்ட விக்ரம்.
“அதான் இன்னும் ஒன் ஹவர் இருக்குல்ல தியா, அப்றம் எதுக்கு நீ இவ்வளவு டென்ஷன் ஆகிற? அத விடு பாத்துக்கலாம்” என்றவன் இப்போது முன் வந்து மேசையின் மீது சாய்ந்து கன்னத்தில் கைவைத்து கொண்டு தியாவின் முகத்தைப் பார்த்து.
“சரி நான் கேட்டது என்ன ஆச்சு? இன்னிக்கு நைட் ஓகேவா?” என்று கேட்க, அவனை எரிப்பது போல் ஒரு பார்வை பார்த்தவள்.
“ நீங்க எப்ப கேட்டாலும் என்னால முடியாது போதுமா, இப்ப சைன் பண்றீங்களா இல்லையா?” என்று தியா தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு கேட்டாள்,
“என்ன தியா நீ? நானும் எவ்வளவு நாளா ஆசையா கேட்கிறேன், எனக்காக இல்லைனானும் பரவால்ல உன்னோட வருங்கால புருஷன் விக்ரம்காக வா…” என்று விக்ரம் கெஞ்சலோடு கேட்டான்.
“நீங்க எப்படி கேட்டாலும் என்னால எங்கேயும் வர முடியாது… முடியாதுன்னா முடியாதுன்னு தான் அர்த்தம், சைன் பண்ணுங்க” என்ற தியா அந்தப் பைலை விக்ரமின் பக்கம் நகர்த்தி வைத்தாள். இங்குத் தியா கூறியதை கேட்ட விக்ரமின் முகமோ மாற, பெண்ணவளை கண்கள் சுருங்க ஒரு பார்வை பார்த்தவன்.
“அப்போ என்னாலயும் சைன் பண்ண முடியாது. முடியாதுன்னா முடியாதுன்னு தான் அர்த்தம், இது என்னோட கம்பெனி தியா. என் விருப்பம் இல்லாம இங்க எதுவும் நடக்காது,” என்று ஃபைலை அவள்புறம் தள்ளிவிட்டான்.
“கடைசியா கேட்கிறேன் இப்போ நீங்க இந்தப் பைல்ல சைன் பண்ணுவீங்களா மாட்டீங்களா?” என்ற தியா தன் மார்புக்கு குறுக்கே கைகட்டி கொண்டு தீர்க்கமான பார்வையோடு கேட்க,
“பண்ண மாட்டேன் டி…” என்று அவனும் திமிரோடு கூறினான்.
“அப்போ சரி பரவால்ல விடுங்க, பாவம் நீங்க ஏன் கஷ்ட்டப்பட்டு சைன் எல்லாம் பண்ணிக்கிட்டு? நான் ஸ்ட்ரைட்டா சேர்மன் சார்கிட்டே அதாவது உங்க அப்பாகிட்ட சைன் வாங்கிக்கிறேன். நீங்க உங்களோட வேலைய கண்டினியூ பண்ணுங்க” என்றவள் மேசையின் மீது இருந்த அந்தப் பைலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து போக முயற்சிக்க, சேர்மன் என்றதும் சற்று பயந்து போன விக்ரம், வேகமாக எழுந்து தியாவிற்கு முன் சென்று வழி மறித்து நின்றவன்.
“இதுக்கெல்லாம் எதுக்கு போய் அப்பாவை எல்லாம் டிஸ்டர்ப் பண்ற? குடு நானே சைன் பண்ணி தரேன்” என்றவன் அவள் கையில் இருந்த பைலை வாங்க முயற்சிக்க,
“இல்ல சார் பரவால்ல நீங்கப் போய் உங்க கேம் விளையாடுற வேலைய கன்டினியூ பண்ணுங்க நான் போய்ச் சேர்மேன் சார் கிட்ட இதைப் பத்தி பேசிக்கிறேன்.” என்று நக்கலாகக் கூறியவள் அங்கிருந்து போக முயற்சி செய்ய, அவளைப் போக விடாமல் தடுத்து நிறுத்திய விக்ரம்.
“அதான் நானே சைன் பண்ணி தரேன்னு சொல்றேன்ல அப்றம் என்ன உனக்குப் பிரச்சனை? குடு …” என்றவன் அவள் கையில் இருந்த பைலை வெடுக்கென்று பிடுங்கி அதில் கையெழுத்திட்டான்.
அதைக் கண்டு நக்கலாக ஒரு புன்னகை சிந்திய தியா. திமிரோடு அந்த அறையிலிருந்து வெளியேற, விக்ரமோ போகும் தியாவை ரசித்தபடியே டேபிளின் மீது ஏறி அமர்ந்தவன்.
“இந்தத் திமிர் தான்டி உன்கிட்ட என்னைக் கட்டிப் போட்டிருக்கு! அதனால் தான் என்னால உன்ன தாண்டி வேற எவனையும் யோசிக்க முடியல” என்றவன் இதழ்கள் புன்னகையில் மலரக் கண்களோ காதலி கசிந்துருகியது. ஆணவனின் மனமோ பல வருடங்களுக்கு முன் பெண்ணவளை முதன் முதலாகச் சந்தித்த கல்லூரிக் காலத்திற்குத் தத்திச் சென்றது.
விக்ரம் ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்? வருங்கால புருஷன் என்றால் என்ன அர்த்தம்? தியாவும் விக்ரமும் திருமணம் செய்து சொல்லப் போகிறார்களா? தியாவுக்கு விக்ரமை பிடிக்கவில்லை என்றால் திருமணம் மட்டும் எப்படி? அப்படி இவர்களுக்குள் என்ன தான் நடக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
உன் விழி தேடும் என் பிம்பம்…
வணக்கம் என் புதிய வாசக நண்பர்களே… என்னை உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை… ஒருவேளை என்னுடைய கதையைத் தொடர்ந்து படிக்கும் என் அன்பு வாசகர்கள் என் எழுத்தையும் என் கதையையும் கண்டறிந்தால் எனக்கு மிகவும் சந்தோசம் தான், ஆனா கண்டுபிடித்தால் இந்தப் போட்டி முடியும் வரை ரகசியம் காக்கவும்…
என்னுடைய இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்களாகிய நீங்கக் கொடுக்கும் ஊக்கம் மட்டுமே என்னை அடுத்ததா படிக்குக் கொண்டு செல்லும்… ஆதலால் கதையைப் படிக்கும் அனைவரும் என் கதையைப் பற்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை கருத்து பெட்டியில் பதிவு செய்யுங்கள். அது நிறையாக இருந்தாலும் சரி குறையாக இருந்தாலும் சரி… உங்கள் கருத்து ஒவ்வொன்றும் எனக்கு மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள் நண்பர்களே!….
