அத்தியாயம்- 2

அத்தியாயம்- 2

அதிகாலை நேரத்தின் குளுமை ஆதித்யனின் அறையை ஆக்கிரமித்திருந்தது.

ஆனால், அவன் நெஞ்சுக்குள் மட்டும் ஒரு அனல் காற்று வீசிக்கொண்டிருக்க, உறக்கத்தில் கண்ட அந்த மர்மமான கனவின் தாக்கம் அவனைப் பித்துப் பிடிக்க வைத்திருந்தது.

மீண்டும் அதே கனவு, 
​கனவில் கண்ட அந்த நெருக்கம், அவளின் கூந்தலின் வாசம், அவனது இதழ்களில் ஒட்டிய அந்த முத்தத்தின் ஈரம்… எல்லாம் வெறும் கனவு என்று ஒதுக்கிவிட அவனது ஆண்மை இடம் கொடுக்கவில்லை.

எப்போதும் எதைக் கண்டும் கலங்காத அந்தப் பாறை போன்ற முகத்தில் இன்று ஒருவிதமான இறுக்கம் குடியேறியிருந்தது.

தன் மனதின் தவிப்பை மறைத்துக் கொள்ளும் கேடயமாகத் தன் கோபத்தை ஏந்திக்கொண்டு, கட்டுமானப் புராஜெக்ட் நடக்கும் இடத்திற்கு அதிகாலையிலேயே வந்து சேர்ந்தான் ஆதித்தியன்.

​மறுபுறம், அலாரம் அடிப்பதற்கு முன்பே விழித்துவிட்டாள் தாமரை.

“ஐந்து மணிக்கெல்லாம் அங்கே இருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த ஆதித்யன் ஆடும் ஆட்டம் தாங்க முடியாது” என்று மனதிற்குள் நினைத்தபடி அவசர அவசரமாகத் தயாரானாள்.

பார்த்த முதல் தடவையே அவனின் குணத்தை பற்றி எடை போட்டு விட்டாளா என்ன? அவனை பற்றி சரியாக யூகித்திருக்கிறாள்.

அவசர அவசரமாக அவள் கிளம்பியவள், ஒரு முறை தாயின் அறைக்குள் சென்று அவரை நோக்க, அவரோ ஆழ்ந்த உறக்கத்தில் இன்னுமும் இருக்க, ‘சரி வந்து சொல்லிக்கலாம்’ என்று வேகமாக வெளியே வந்தாள்.

வந்தவளுக்கு அப்பொழுது தான், தன் இருச்சக்கர வாகனத்தின் சாவியை எடுக்காமல் வந்தது உரைக்க, கைகடிக்காரத்தை திருப்பி பார்த்தாள்.

இன்னும் நேரம் இருக்கிறது, என்று மூச்சை விட்டவள் மீண்டும் வீட்டிற்குள் சென்று சாவியை தேடினாள்.

ஆனால், கடைசி நேரத்தில் அவளது ஸ்கூட்டர் சாவி எங்கே என்று தெரியாமல் தேடியதிலேயே பத்து நிமிடங்கள் ஓடிவிட்டன.

ஒரு வழியாக சாவி கிடைத்து  கிளம்பியபோது, அதிகாலைப் பனிப்பொழிவு அவள் கண்களை மறைக்க, சாலை சரியாகத் தெரியாமல் வண்டியை வேகமாக ஓட்ட முடியாமல் தவித்து போனாள் தாமரை.

​கட்டிட வளாகத்தில் ஆதித்யன் தனது கைக்கடிகாரத்தை ஒவ்வொரு நொடியும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பொறுமை மெல்லக் கரைந்து கொண்டிருந்தது.

சரியாக மணி 5:15. தூரத்தில் தாமரையின் ஸ்கூட்டர் வரும் சத்தம் கேட்டது. அவள் வண்டியை அவசரமாக நிறுத்திவிட்டு, மூச்சிறைக்க அவன் முன்னே ஓடி வந்தாள் தாமரை.

​”ஸாரி சார்… அது வந்து…” என்று அவள் பேசத் தொடங்கும் முன்பே,

ஆதித்யனின் கர்ஜனை அந்த வெறிச்சோடிய கட்டிடத்தில் எதிரொலித்தது.

​”என்ன ஸாரி? டைம் என்ன ஆகுதுன்னு தெரியுமா தாமரை? நான் உன்னை இங்கே வரச் சொன்னது வேடிக்கை பார்க்கவோ இல்லை புது தம்பதிங்க புது வீட்டுக்கு பால் காய்ச்சவோ இல்லை! இந்தப் பெரிய கட்டிடத்துல சூரிய ஒளி எந்தத் திசையில, எந்த ஆங்கிள்ல உள்ள விழுதுன்னு தெரிஞ்சா தான், நீ உன் இன்டீரியர் டிசைனை ஆரம்பிக்க முடியும். அந்த முதல் கதிர் விழுற அந்த நிமிஷம் ரொம்ப முக்கியம்! அதுக்குள்ள 15 நிமிஷம் லேட் பண்ணிட்டு வந்து நிக்கிற?”  என்று கோபத்தில் அவளை ஒருமையிலே அழைத்திருந்தான் ஆதித்யன்.

​அவனுடைய கோபம் நியாயமாக இருந்தாலும், எப்படி அவளை மரியாதை இல்லாமல் பேசுவான் என்ற சினம் அவளுள் துளிர்க்க அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்தாள்.  

அவன் கண்கள் அவளைப் பார்க்கும் விதம்… கனவில் பார்த்த அதே தீவிரத்தோடு இருந்தது.

ஆதித்யனின் கத்தலில் இருந்த அதிகாரத்தை விட, அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று தாமரையை ஒரு நிமிடம் நிலைகுலைய வைத்தது.

​அதிகாலைச் சூரியனின் முதல் கதிர் மெல்ல எட்டிப்பார்க்க தொடங்க, கோபத்தில் சிவந்திருந்த ஆதித்யனின் முகமும், பயத்தில் படபடத்துக் கொண்டிருந்த தாமரையின் முகமும் அந்த இளவெயிலில் ஒரு காவியம் போலத் தெரிந்தன.

ஆதவனின் வருகையை பார்த்த ஆதி, மூச்சை நன்றாக இழுத்து விட்டு ​”இப்போ போய் வேலையைப் பாரு. இன்னொரு முறை இது நடக்கக் கூடாது,” என்று கட்டின பொண்டாட்டியை வேலை ஏவது போல் கறாராகச் சொல்லிவிட்டு அவன் தள்ளி நின்றான்.

தாமரைக்கு புசு புசுவென்று கோபம் வர, பற்களை கடித்துக் கொண்டு தன்னை நிதானித்து ‘காலையில் இவனால் தன் நிலை இழக்க கூடாது’ என்று 
​தாமரை கட்டிடத்தின் உள்ளே சென்றாள்.

அவளது கைகள் சுவர்களையும், ஜன்னல் ஓரங்களையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்தன.

அவளது வேலையில் இருந்த நேர்த்தியை ஆதித்யன் தூரத்தில் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்தான்.

தாமரை எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பெரிய ஹாலின் நடுவே சென்று நின்றாள்.

சுற்றிலும் சிதறிக் கிடந்த சிமெண்ட் மூட்டைகளும், செங்கற்களும் அவளது கவனத்தைச் சிதறடிக்கவில்லை.

அவள் கண்களை மூடி ஒரு நிமிடம் அந்த இடத்தின் அமைதியை உள்வாங்கினாள்.

அப்பொழுது அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தபடி உள்ளே வந்தவன்,

​”என்ன தாமரை.. இன்ச் டேப் எடுத்து அளக்காம, சுவரைத் தடவிப் பார்த்துட்டு இருக்கீங்க? பெயிண்ட் குவாலிட்டி செக் பண்றீங்களா?” என்ற ஆதித்யனின் குரலில் ஒரு மெல்லிய நக்கல் இருந்தது.

​தாமரை கண்களைத் திறந்து அவனைப் பார்த்து “இல்ல சார். ஒரு இடத்தோட மொழியை முதல நாம புரிஞ்சுக்கணும். சூரிய வெளிச்சம் எந்தக் கோணத்துல உள்ள வருது, காத்தோட திசை எப்படி இருக்குன்னு தெரிஞ்சாதான், அந்த இடத்துக்கு ஒரு உயிரோட்டத்தைக் கொடுக்க முடியும்.” என்று பேசிக் கொண்டு இருப்பதை கவனித்தபடி
​ஆதித்யன் அவள் அருகே வர,
அவனது பெர்ஃப்யூம் வாசம் அவளை உரசியது.

“மொழி, உணர்வுன்னு ரொம்பப் பேசிட்டிருக்கீங்க. எனக்குச் செயல் வேணும். இந்தத் தரையில இருந்து அந்த சீலிங் வரைக்கும் பிரம்மாண்டமா இருக்கணும். என் எதிரிங்க உள்ள வந்தா கூட மிரண்டு போகணும். அதுக்கு என்ன பண்ணப் போறீங்க?” என்று கேட்டவனை ​தாமரை நிதானமாக அவனைப் பார்த்தாள்.

“மிரட்டுறது ரொம்ப ஈஸி சார்.. ஆனா ஒரு இடத்துக்குள்ள வந்தா அவங்களுக்குத் அறியாமலே ஒரு நிம்மதி கிடைக்கணும். அது தான் ஒரு நல்ல டிசைனரோட வெற்றி. உங்க ஆபீஸ் வெறும் கட்டடமா இருக்காது, அது ஒரு உயிரோட்டமா இருக்கும். அதுக்கு நான் கேரண்டி” என்று ​அவள் சொன்ன அந்தப் பதில் ஆதித்யனைச் சிந்திக்க வைத்தது.

அவனது அதிகாரத் தோரணையைத் துளியும் கண்டு அஞ்சாமல், ஒரு தொழிலாளியாகத் தன் கருத்தைச் சொன்ன விதம் அவனுக்குள் ஒரு மெல்லிய வியப்பை ஏற்படுத்தியது.

அதன் பின் அவனிடம் எதுவும் பேசாமல் ​வேலை தொடர்ந்த தாமரை ஒவ்வொரு இன்ச்சையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்தாள்.

ஆதித்யன் அங்கிருந்த ஒரு தூணில் சாய்ந்துகொண்டு அவளது அசைவுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

அவளது கவனச்சிதறல் இல்லாத உழைப்பு அவனுக்குப் பிடித்திருந்தது. எத்தனையோ டிசைனர்கள் அவனிடம் வாய்ப்புக்காகக் கெஞ்சுவார்கள், அந்த வாய்ப்பு அவன் வழங்கிவிட்டால், அவனிடம் நற்பெயரை எடுக்க, அவனுக்கே குஜா தூக்குவது போல் பேசி அவனை கவர நினைப்பார்கள்.

ஆனால் இவளோ அவன் அங்கிருப்பதைக்கூடச் சட்டையை செய்யாமல் வேலையில் மூழ்கியிருந்தாள்.

​காலை உணவு நேரமே வந்து விட்டது. இன்னுமும் தன் பணியை தொடர்ந்துக் கொண்டு இருந்த தாமரையின் வேலையில் குறுக்கே போக விருப்பம் இல்லை போல் அவனுக்கு.  

வீட்டிலிருந்து வந்த உணவை  உண்ணும் போது, ஆதித்யன் தன் உதவியாளரை அழைத்து, தனக்கு வந்த உணவினை பகிர்ந்து அவளுக்கு உணவை அனுப்பி வைத்தான்.

“சாப்பிட்டு வேலையைத் தொடருங்க,” என்று மட்டும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு தன் உணவை சாப்பிட தொடங்க, தாமரையும் எதுவும் பிகு பண்ணாமல் கைகளை சுத்தம் செய்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தவள்  “நன்றிங்க” என்று சொன்னதை வெறும் தலையசைப்போடு லேப்டாப்பில் மூழ்கினான் ஆதித்யன். அவளுக்கு முன்பே சாப்பிட்டு முடித்து இருப்பான் போல.

​மாலை கிளம்பும்போது, ஆதித்யன் அவளைச் சந்தித்து, “நாளைக்கு மீட்டிங்ல உங்களோட ஃபர்ஸ்ட் டிராஃப்ட் (First Draft) டிசைனை பார்க்கணும். மிஸ் பண்ணிடாதீங்க,” என்று அதிகாரமாகக் கூறிவிட்டுத் தன் காரில் ஏறிச் சென்றான்.

அவன் போகும் திசையில் ஒரு பெருமூச்சோடு பார்த்தவள், தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்றாள்.

​மதியம் அலுவலகம் திரும்பிய தாமரையை மேனேஜர் ராகவன் அவசரமாக அழைத்தார்.

ஓய்ந்து போய் வந்தவளை இருக்கையில் கூட அமர விடாமல்,  ராகவன் அழைத்தது அவளுக்குள் ஒரு சலிப்பை கொடுத்தாலும் மேனேஜரை காண சென்றாள்.

அனுமதி கேட்டுக்கொண்டு உள்ள வந்தவளை பார்த்த ராகவன் முகம் எல்லாம் பல்லாக “என்ன தாமரை எனக்கு வேலை சரியா போச்சா?”  என்று விசாரித்தார்.

அவளும் நடந்ததை கூறிவிட்டு வெளியேற போக, “அவர் கூட சாப்பிட்டீங்களா?” என்று சந்தேகமாக கேட்டான்.

அவளோ யோசித்து பார்த்து “ஆமா சார்” என்று கூறிவிட்டு விடைப்பெற்று அவள் அறைக்கு சென்றாள்.

அவள் நினைவுகூர்ந்து சொன்னதோ ‘அவன் கொடுத்த சாப்பாட்டை தானே தானும் உண்டோம்’  என்று நினைத்து கூற, ராகவனுக்கோ உள்ளுக்குள் எரிய ஆரம்பித்து இருந்தது.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page