வெந்து தணிந்த இதயம்-10
நான் உங்கள் AY_84
வெந்து தணிந்த இதயம்-10
இதுவரை சஷ்டியின் வால் போன்றே நின்று தன்னை அணுகிய யாழினி முதன்முறை தன்னை நேருக்குநேர் எதிர்கொள்வதைப் பார்த்து, “உனக்கு கண்ணு ரெண்டும் குருடா? வர்றது தெரியல? பெரியவங்க வர்றப்போ இப்படி குறுக்கப் போகக்கூடாதுனு உன்னை பெத்தவங்க உனக்கு சொல்லிக் கொடுக்கலையா? என்ன வளர்ப்போ? நீ படிச்சப்பொண்ணு தானே? இப்படி அறிவுக்கெட்ட தனமா நடந்துக்கற? பொண்ணுன்னா அடக்கமா இருக்கனும். இப்படி ஆடிக்கிட்டு அலையக்கூடாது.” என்று பொரிந்து தள்ளினார் ரத்னவேல் பாண்டியன்.
யாழினி ‘என்னடா எல்லாரும் இன்னைக்கு என்னை ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க?’ என்று மனதிற்குள் புலம்பியவள், சாவித்ரி கையில் அவருக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுக்கவும், கண்களால் நன்றி தெரிவித்தாள்.
எங்கே தனது கணவர் கோபத்தில் அவளை ஏதாவது செய்து விடுவாரோ என்ற பயத்தில் அழைக்காமலேயே முந்திக்கொண்டு வந்திருந்தார் சாவித்ரி.
“இந்தப்பொண்ணு இன்னைக்கு ராத்திரி ஊருக்குப் போயிடப்போகுது. இதை எதுக்குங்க திட்டிக்கிட்டு? அதுவும் நம்ம வீட்டுக்கு கெஸ்ட்டா வந்ததைப்போய்” என்று அவளுக்கு பரிந்து பேசினார்.
ரத்னவேல் பாண்டியனின் தன்னகங்காரம் அப்படியும் திருப்தியடையாமல், “இல்ல சாவித்ரி. நாளைக்கு ஒரு வீட்டுல போய் வாழப்போறது. இதெல்லாம் தெரிஞ்சிருக்கனுமா இல்லையா? இவ்வளவு பரிஞ்சிக்கிட்டு வர்றவ அதுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கறது.” என்று வாசலை நோக்கி நடக்கவும், பெருமூச்சு விட்டார் சாவித்ரி.
நல்லவேளை நேற்றைய இரவு உணவின் போது சஷ்டிவேல் பாண்டியன் அனைவரிடமும் யாழினியின் அன்னைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் நாளை இரவு அவள் இங்கிருந்து புறப்படுவதாகச் சொல்லியிருந்தான்.
கூடுதலாக இன்று ரத்னவேல் பாண்டியன் பத்மஸ்ரீ பட்டம் வாங்க டெல்லி செல்லும் குதூகலத்தில் இருந்ததாலும் யாழினி தப்பித்தாள். இல்லையெனில் அவளை ஒரு வழி பண்ணாமல் விட்டிருக்க மாட்டார்.
அவர் காரில் ஏறியதும் யாழினியின் அருகில் வந்த சாவித்ரி, “ரொம்ப பயந்துட்டியா? அவர் அப்படி தான். ரொம்ப கோபக்காரர். அப்பறம் உன் அம்மாவுக்கு உடம்பு சரியானதும் கண்டிப்பா ஒருநாள் அவங்களோட இங்க வரனும். சரியா?” என்று முடிக்கும் முன்பே வெளியே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
சாவித்ரி, யாழினியுடன் குடும்பத்தினர்கள் அனைவருமே ஓடிவந்துப் பார்த்தார்கள். சுடப்பட்டது ஒரு பூனை. நல்ல காரியமாகச் செல்லும் ரத்னவேலின் காரின் குறுக்கே அது ஓடியதால் ஓடும் காரிலிருந்தே சரியாக குறிபார்த்து அதனை சுட்டுவிட்டார்.
பூனை துடிதுடித்து சாவதை குரூரமாக பார்த்துக்கொண்டே அந்தக் கார் காம்பவுண்ட் தாண்டி வெளியே சென்றுவிட்டது. அங்கிருந்த அடியாட்களோ நொடியில் அந்த இடத்தை சுத்தம் செய்து பூனை இறந்ததற்கான அடையாளமே தெரியாமல் செய்தார்கள்.
அதைப் பார்த்த யாழினிக்கோ சப்தநாடியும் அடங்கி ஒடுங்கிவிட்டது. தான் மரத்திலிருந்து காப்பாற்றிய நாள் முதல் தினமும் அதனைப் பற்றி அடியாட்களிடம் விசாரித்து வந்தவளுக்கு இந்த கொடூரத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. பித்துப் பிடித்தவள் போல் கத்தினாள்.
“என்னவொரு காட்டுமிராண்டித்தனம் இது? இவரும் ஒரு மனுஷன் தானா? ஈவு இரக்கமுங்கிறதே இவரு அகராதியில கிடையாதா? சின்ன பூனைக்குட்டிய போய்.. அதுக்கு என்ன தெரியும்? அந்த வண்டியில எமன் தான் வந்தான்னு தெரியுமா?” என்று தேம்பி தேம்பி அழுதாள்.
அனைவரும் அவளின் வெடிப்பில் விதிர்த்து நின்றபோது ஜெயந்தி மட்டும் ரத்னவேல் பாண்டியனை அவள் மட்டுமரியாதையில்லாமல் பேசியதற்கு தனது கண்டனத்தை தெரிவித்தாள்.
“என்ன கொழுப்புடி உனக்கு? எங்க வீட்டு சோத்தை தின்னுட்டு எங்கப்பாவையே எதிர்த்து பேசுறியா? கிளம்புடி! இப்பவே இந்த வீட்டை விட்டு நீ கிளம்பு!” என்று சொடுக்கிடவும், அவரை சாவித்ரி அடக்கினார்.
“சும்மாயிரு ஜெயந்தி! அந்தப் பொண்ணே பயந்து போயிருக்கு. நீ வேற. தெய்வானை யாழினியை உன் ரூமுக்கு கூட்டிட்டுப்போ. காது, கவி நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு கொஞ்சம் ட்ரெஸ் பேக் பண்ண ஹெல்ப் பண்ணுங்க.” என்றதும், சிறியவர்கள் அவளை கைத்தாங்கலாக அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இவ்வளவையும் தன் அறையின் சாளரத்தின் வழியே பார்த்துக் கொண்டிருந்த பத்ரி, “எங்களுக்கு பூனைங்களும் சில மனுசங்களும் வேற வேற இல்ல யாழினி.” என்று முணுமுணுத்தான்.
ஆனால், அது தன் காதில் விழுந்திருந்தால் யாழினி நிச்சயம் பாரதியாரின் இப்பூனைக்குட்டி கவிதையை கூறியிருப்பாள்.
“எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரே தரம் அன்றோ?
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!”
யாழினி அங்கிருந்து புறப்படும் முன் சாவித்ரி வேலையாளை ஒவ்வொருவரின் அறைக்கும் அனுப்பி, தன் மகள் வசந்திக்கு சாமி கும்பிடும் நிகழ்வுக்கு அவர்களை அழைத்துவரச் சொன்னார்.
ரத்னவேல் பாண்டியன் குடியரசுத்தலைவர் கையில் பத்மஸ்ரீ விருதைப் பெறுவதற்காக டெல்லியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த அந்நேரத்தில் தான் தன் மகளுக்கு சடங்குகளை செய்ய ஆரம்பித்திருந்தார் சாவித்ரி.
தன் மகள் வசந்தியின் பால்ய கால புகைப்படத்திற்கு பொட்டு வைத்து மாலையிட்டவர், வசந்திக்கு பிடித்த உணவுகளாக செய்து படையலிட்டிருந்தார்.
தன் குடும்பத்தினர் அனைவரும் சாமி கும்பிட்டு முடித்ததும், படையலில் இருந்த பதார்த்தங்களை ஒவ்வொருவரின் கையிலும் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.
பிறகு, வசந்திக்கு படைக்கப்பட்டிருந்த எம்பிராய்டரி புடவையை கையிலெடுத்தவர் யாழினியின் நினைவு வந்தவராய் அதை யாழினிக்கு கொடுக்க ஆசைப்பட்டு, அவளை அழைக்கவில்லையா? என்று வேலையாளிடம் கேட்க,
“நான் தான் அவ எதுக்குனு கூப்பிட வேண்டாம் சொன்னேம்மா. வசந்தி நம்ம வீட்டு கன்னி சாமி. யாழினி வெளியாள். அவ நம்ம வசந்திய மந்திரவாதிகள் மூலமா கட்டி வச்சிட்டான்னா? அதான் அவளை கூப்பிட வேண்டாம் சொன்னேன்.” என்றார் ஜெயந்தி.
மேலும், “எப்பவும் நீங்க வசந்திக்கு படைச்சதை ஒன்னு என்கிட்ட கொடுப்பீங்க. இல்ல, பொன்னிக்கு கொடுப்பீங்க. இப்ப என்ன புடவைய கையில வச்சிட்டு அவளை தேடுறீங்க? என் மக தெய்வானைகிட்ட கொடுங்க” என்று அதிகாரமாய் சொன்னார்.
சாவித்ரியோ தன்மையாக மறுத்தார்.
“இல்ல ஜெயந்தி. அந்தப் பொண்ணு தான் எனக்கு இந்த எம்பிராய்டரி போட ஹெல்ப் பண்ணினா. அதான் நன்றிக்கடனா அவளுக்கு இதை கொடுப்போமேன்னு நினைச்சேன். இந்த ஒரு முறை தானே? அடுத்த தடவைலாம் நான் அவளுக்கா கொடுக்கப்போறேன்? ராமு அவளைப்போய் கூட்டிட்டு வா!” என்றதும்,
வேலையாளை கையமர்த்திய சஷ்டி, “நான் போய் வரச் சொல்றேன் பெரியம்மா. முக்கியமான கால் பேச வேண்டியிருக்கு. நான் போய் அவளை அனுப்பி வைக்கிறேன்” என்று, ஒரு முழத்திற்கு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு நின்ற தெய்வானையை முறைத்துக்கொண்டே சென்றான்.
யாழினி அங்கிருந்து கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தவள் சஷ்டியைக் கண்டதும், “எனக்கு கார் ரெடி பண்ணியாச்சா சஷ்டி?” என்க,
“ஹாங்! ரெடியா இருக்கு யாழு. ஆமா உன் நிஜப்பேரு யாழினி தானா? நீ எந்த ஊரு? மதுரையில இருந்து நீ எங்கப்போவ?” என்று கேட்டதும்,
சத்தம் போட்டு சிரித்தவள், “என் பேரு யாழினி தான். ஆனா ஊருப்பேரு சஸ்பென்ஸ். அப்பறம் நீ என்கூட எல்லாம் வரவேணாம். நானே பார்த்துக்கறேன்.” என்றதும், அவளின் விருப்பத்தை மாற்ற முயலவில்லை சஷ்டி.
பின், ஞாபகம் வந்தவனாக சாவித்ரி சொன்னதைக் கூறி அவளை கீழே செல்லச் சொன்னான். அவளும் சென்றாள். சாவித்ரியைப் பார்த்து சிரித்துவிட்டு வசந்தியை வணங்க கைக்கூப்பியவள் மூளையே வெடித்துச் சிதறும் அளவிற்கு ஸ்தம்பித்து நின்றாள்.
அவளுக்கு தான் பார்ப்பது சரி தானா? இல்லை தானாக கற்பனை செய்து கொள்கிறோமா? என்று குழப்பமாக இருக்க, கண்களை மீண்டும் மீண்டும் மூடித் திறந்து பார்த்தாள். அதே புகைப்படம் தான். அவளின் அன்னையின் புகைப்படம்.
டெல்லியில் மயூரி எனும் பெயரில் வசிக்கும் ஒரு பெண் எப்படி இங்கு வசந்தி எனும் பெயரில் இருக்க முடியும் என்று தனக்குள்ளேயே குழம்பியவள் சாவித்ரி தன் கையில் புடவையை வைத்ததைக் கூட சுயநினைவோடு பெறவில்லை.
வசந்தியின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே, “இவங்க எப்படி இறந்தாங்க?” என்று கேட்டாள்.
“பதினெட்டு வயசுல ஆத்துல குளிக்கப்போனவளை வெள்ளம் அடிச்சிட்டுப் போயிடுச்சிமா?” என்று மகளை நினைத்து கலங்கினார் சாவித்ரி.
அதைக்கேட்ட அடுத்தக்கணமே அங்கிருந்து வெளியேறிவள் வேகமாக தனதறையின் வாஷ்ரூமிற்கு ஓடிச்சென்றாள். அங்கு அவசரமாக தனது கைப்பேசியில் பழைய சிம்மை போட்டவள் பாட்டியின் எண்ணிற்கு முயல, அது நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று ஹிந்தியில் சொன்னது.
அவளுக்கு உடனே உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாவிடில் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.
உடனே தனது பெட்டிகளை தூக்கிக்கொண்டு சஷ்டியின் அறைக்குச் சென்றாள். அவளின் அவசரத்தை புரிந்து கொண்டவனும் கைகளைப் பற்றி நன்றி தெரிவித்ததோடு அவளின் பெட்டிகளை கீழே கொண்டுவர உதவினான்.
கார் வரை வந்த அனைவரும் நாளை காலையில் செல்லலாமே என்று கூற, “இல்ல நான் இப்பவே போயாகனும்.” என்று பிடிவாதம் செய்தாள்.
அரைமனதாக அனைவரும் அவளுக்கு பிரியாவிடை கொடுக்க, தெய்வானைக்கும் ஜெயந்திக்கும் இப்போது தான் நிம்மதியாக இருந்தது.
யாழினி காருக்குள்ளிருந்து கையசைக்கும் சமயம், “எல்லா பொருளும் சரியா இருக்கான்னு பார்த்துக்கங்க.” என்றான் பத்ரி.
“பத்ரி என்ன பேச்சு பேசுற?” என்று சாவித்ரி அவனை முறைக்க,
“நான் உங்கக்கிட்ட சொல்லலைமா. உங்க யா…ழினிகிட்ட தான் சொல்றேன். எதுவும் தவறவிட்டுட்டோமோன்னு நம்ம வீட்டுக்கு திரும்ப வந்துடக் கூடாதுல்ல? வர மாட்டீங்க தானே யாழினி?” என்றவன் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்க, தொண்டை வறண்டது யாழினிக்கு.
இல்லை எனும் விதமாய் தலையசைத்தாள்.
“குட்.. பை” என்றவன் சல்யூட் வைக்க, அனைவரையும் பார்த்து டாட்டா காட்டிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டாள்.
மனதில் பல கேள்விகளோடு பயணித்துக் கொண்டிருந்த யாழினி தன்னை ஏற்றி வந்த கார் ஓட்டுநரிடம் தன்னை மதுரை மாட்டுத்தாவணியில் இறக்கிவிடச் சொன்னாள்.
அவர் தான் சொன்னபடியே செய்ததும் அங்கிருந்து தனியாக ஆட்டோ பிடித்து விமானநிலையம் சென்றாள். அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் இண்டிகோ விமானத்தில் அவளது பயணம் உறுதியாகியிருந்தது.
ஆனால், விமானத்தில் ஏறுவதற்காக உட்கார்ந்திருந்த கடைசி நிமிடம் வரை பாட்டியின் எண்ணிற்கு முயன்றும் பலனில்லை.
அதிர்ஷ்டவசமாக மாலை அவர் தன் வாட்சப் எண்ணிற்கு அனுப்பியிருந்த, தன் அன்னை எழுதிய கடிதங்களை பார்த்ததும் ஆர்வமாக வாசிக்கத் துவங்கினாள்.
தொடரும்…
இப்ப நான் என்ன சொல்லுவேன்னு உங்களுக்கே தெரியும். அதே தான் தங்கம்ஸ். டோன்ட் ஃபர்கெட்:)
