காயங்களுக்கு மருந்தாகும்
அதே அளவில்லா அன்பு தான்
பல ஆறாத ரணங்களையும்
வலிகளையும் குறைவில்லாமல
தருகிறது…!
வலியை சூடிய காதலே – 16
ராஜதுரையின் கர்ஜனை அடங்கி, அந்த இடமே ஒரு மயான அமைதியில் மூழ்கியிருந்தது. நிஷா இன்னும் நடுங்கிக்கொண்டே ரஞ்சிதத்தின் பின்னால் ஒண்டிக் கொண்டிருந்தாள். அவளது விக்கல் சத்தம் மட்டுமே அந்த மௌனத்தைக் கலைத்தது.
ஆரியன் மெல்ல அவளருகே சென்றான், அவனது கைகள் அவள் தோளைத் தொட முற்பட, நிஷா பயத்தில் இன்னும் கொஞ்சம் நெருங்கி நெஞ்சில் சாய்ந்து “ஆரி…” என்று தழுதழுத்தாள்,
”நிஷா இங்க பாரு, நான் வந்துட்டேன்ல பயப்படாத” என்று ஆரியன் மிக மென்மையாக, ஒரு குழந்தையைத் தாலாட்டுவது போலச் சொன்னான்,
அவன் மெல்ல விலக்கி அவளைத் தன் பக்கம் திருப்பி, அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் தன் கட்டை விரலால் துடைத்துவிட்டான்,
“அவர் எப்பவுமே அப்படித்தான் கத்துவாரு, ஆனா உன்னை ஒன்னும் பண்ண மாட்டாரு, நான் இருக்கும்போது நீ ஏன் இப்படிப் பயப்படுற” என்று மென்மையாக கேட்டான்
நிஷா அவனது சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்,
“இல்ல ஆரி, அவர் என்னைப் பார்த்துட்டு ஏதோ நான் பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி கத்துறாரு, எனக்கு எனக்கு இந்த வீடே பயமா இருக்கு ஆரி” என்று மறுபடியும் அவன் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள், ஆரியன் அவளது கூந்தலை ஆதரவாகக் கோதி விட்டான்,
“எதுக்கும் பயப்படாத நிஷா, இங்க யாரும் உன்ன எதுவும் பண்ண மாட்டாங்க, நீ இப்படி பயந்துட்டே இருந்தா எப்படி மீன் பிடிக்கிறது, நாம நாளைக்கு ஏரில போய் மீன் பிடிக்கலாம்,
அங்கயே குளிக்கலாம் ஜாலியா தண்ணில விளையாடலாம், அது ஸ்விம்மிங்பூல் விட பெருசா இருக்கும் தெரியுமா” என்று அவன் ஒரு சிறு புன்னகையுடன் கேட்க, நிஷா விக்கல்களுக்கு இடையே அவனை நிமிர்ந்து பார்த்தாள்,
”நிஜமாவா சொல்ற ஆரி, இன்னிக்கே என்னை கூட்டிட்டு போறியா” என்று கேட்டவளுக்கு விக்கல் நின்று போயிருந்தது,
”இல்ல நிஷா, இன்னைக்கி எனக்கு நிறைய வேலை இருக்கு, ஆனா நாளைக்கு நாம கண்டிப்பா போகலாம் சரியா, அதுக்கு முன்னாடி இங்க பாரு,
நீ அழுதா உன் முகமே நல்லா இல்ல பார்க்கவே டல்லா இருக்கு, இப்படி அழுது வடிஞ்சா எனக்கு பிடிக்காது” என்று அவன் சொல்ல, நிஷா தன் முகத்து துடைத்துக் கொண்டு சிரித்தாள்
ஆரியன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான், அதை ஏற்றவளுக்கு உள்ளம் சிலிர்த்தது, அவனை நீங்க மறுத்து அடம் பிடித்த உள்ளத்தை அடக்கிக் கொண்டு தன்னறைக்கு ஓடினாள்,
அறையின் வாசல் வரை ஓடிய நிஷா உள்ளே செல்லும் போது ஆரியனைத் திரும்பிப் பார்த்தாள், அவனது கண்கள் ‘நான் இருக்கிறேன்’ என்று அவளுக்குத் தைரியம் சொல்வதைப் போல தோன்ற கண்சிமிட்டி சிரித்து விட்டு உள்ளே சென்று கதவை தாளிட்டாள்,
களேபரம் நடந்து முடிந்ததும் ஆரியன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன் லேப்டாப்போடு வந்து தாழ்வாரத்தில் அமர்ந்தான், அவனது கண்கள் திரையையே பார்த்துக் கொண்டிருந்தன,
அந்தி மாலை நேரத்து அமைதியைச் சீர்குலைக்கும் விதமாக, வீட்டின் வாசலில் ஒரு ஜீப் வந்து நின்றது, அதன் டயர்கள் மண்ணை வாரி இறைத்து நின்ற சத்தம் வீட்டின் உள்ளே வரை கேட்டது,
வேலையில் மூழ்கி இருந்த ஆரி நிமிர்ந்து பார்த்தான், இரண்டு காவலர்கள் முன்னே வர, பின்னால் இன்ஸ்பெக்டர் கையில் ஒரு தடியுடன் இறங்கினார்,அவர்கள் பின்னால் ஒரு வயதான விவசாயி, கண்களில் கண்ணீருடனும் ஆத்திரத்துடனும் நின்று கொண்டிருந்தார்,
”நீ சொன்ன ப்ராடு டாக்டர் இங்க தான் இருக்கானா” என்று இன்ஸ்பெக்டர் அதட்டலான குரலில் விவசாயிடம் கேட்க, அதற்குள் ஆரியன் எழுந்து வந்தான்,
”நான் தான் டாக்டர் என்ன விஷயம் இன்ஸ்பெக்டர் சார்” என்று ஆரி புரியாமல் கேட்க இன்ஸ்பெக்டர் அவனருகே வந்து முறைத்தார்,
“என்ன விஷயமா, இந்தா இந்தாளோட மவன் பாம்பு கடிச்சிடுச்சுன்னு சொல்லி உங்கிட்ட தான் வந்தானாமில்ல, அந்தப் பையன் இப்ப உயிருக்குத் துடிச்சிட்டு இருக்கான்,
நீ ஏதோ ஊசி போட்டதுல அவனுக்கு உடம்பு முழுக்க விஷம் ஏறிடுச்சுன்னு இந்தாளு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு, முறையான அனுமதி இல்லாம, டாக்டர் படிப்பு படிக்காம எப்படி நீ ஊசி போடலாம்,” என்று கேட்க
ஆரியன் அதிர்ந்து போனான்,
“சார் நான் டாக்டருக்கு முறையா படிச்சிருக்கேன் நான் ஒரு கோல்ட் மெடலிஸ்ட், அந்த பையன பாம்பு கடிச்சிருந்துச்சு பாம்பு கடிக்கு முதலுதவி ஊசி தான் போட்டேன்,
அதை நான் போடலன்னா அவன் இங்கேயே செத்துப்போயிருப்பான், அவனைச் சுத்தி இருந்தவங்க எல்லாரும் பயந்து போய் எங்கிட்ட கூட்டிட்டு வந்தப்போ நான் தான் அவனைக் காப்பாத்தி,
ஆம்புலன்ஸ் வரவச்சு ஹாஸ்பிட்டலுக்கும் அனுப்பி அங்க இருக்க டாக்டருக்கும் இன்பார்ம் பண்ணேன்” என்று ஆரி சொல்லும் போதே பின்னால் நின்றிருந்த அந்த விவசாயி கதறினார்.
“காப்பாத்துனியா, நீ போட்ட ஊசியால என் புள்ளை நீலமா மாறிப்போய் கிடக்கான், டாக்டர் கிட்டப் போனா, என்ன ஊசி போட்டீங்கன்னு தெரியல,
அதான் உயிருக்கு ஆபத்தா இருக்குன்னு சொல்றாங்க, என் புள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் உன்ன சும்மா விடமாட்டேன்” என்று அழுகவே செய்தார் அந்த விவசாயி,
ஆரியன் எதோ சொல்ல வர, இன்ஸ்பெக்டர் அவனை வழிமறித்தார்,
“பேசி நேரத்தை வீணாக்காத டாக்டரே, வந்து வண்டியில ஏறு, எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்கிற வதத்துல விசாரிச்சா எல்லாமே தெரியப்போகுது வா” என்று இன்ஸ்பெக்டர் அழைக்க கான்ஸ்டபிள் வந்து கைவிலங்கு பூட்டினார்,
வெளியே சத்தத்தைக் கேட்டு ரஞ்சிதமும், நிஷாவும் ஓடி வந்தனர், நிஷா அங்கே போலீஸைக் கண்டதும் நடுங்கிப் போனாள்,
“ஆரி ஆரி எதுக்கு போலீஸ் வந்திருக்காங்க, ஏன் உன்ன கூட்டிட்டுப் போறீங்க” என்று கத்தினாள், ஆரியன் அவளைப் பார்த்து,
“நிஷா, பயப்படாத ஒரு சின்னக் குழப்பம், நான் போயிட்டு வந்துடுறேன்” என்று தைரியம் சொல்ல முயன்றான்,
ஆனால், போலீஸ் அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்றபோது, அவனது கண்கள் ரஞ்சிதத்தைத் தேடின,
ரஞ்சிதம் எதுவும் பேச முடியாமல் கைகளைக் கூப்பி நின்றாள், நிஷா ஓடி வந்து ஆரியனின் கையைப் பற்றிக் கொண்டாள்,
“விடமாட்டேன் ஆரியை விடமாட்டேன்” என்று அவள் அழ, ஒரு காவலர் அவளைத் தள்ளிவிட்டார்,
”நிஷா உள்ள போ” என்று ஆரியன் கத்தினான், ஜீப் நகரத் தொடங்கியது, நிஷா ஜீப்பின் பின்னால் ஓடினாள்,
“ஆரி… ஆரி…” என்று அவள் கத்திக் கொண்டே தரையில் விழுந்தாள்,
வெளியே சென்ற ராஜதுரை இப்போதுதான் வீடு வந்தார், தன் மகன் விலங்கிடப்பட்டு ஜீப்பில் செல்வதைக் கண்டு கொத்திதுப் போனார்,
தன் வண்டியை உயிர்பித்துக் கொண்டு சென்றார்,
போலீஸ் ஜீப் அந்தப் பிரைவேட் கிளினிக்கின் முன் நின்றது, அங்கே சில பத்திரிகையாளர்களும் ஊர்மக்கள் சிலரும் கூடியிருந்தனர், ஆரியன் இறங்கியதும் கேமராக்கள் அவனை மொய்த்தன,
“போலி டாக்டர் ஆரியன்” என்ற முணுமுணுப்பு காற்றில் பரவியது,
ஆரியன் எதற்கும் கலங்கவில்லை, அவனது பார்வை நேராகத் தீவிர சிகிச்சைப் பிரிவை (ICU) நோக்கி இருந்தது,
அங்கே ஒரு டாக்டர் தான் அந்தப் பையனுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்,
”இன்ஸ்பெக்டர், தயவுசெஞ்சு இப்போவே உள்ள போலாம், ஒரு நிமிஷம் லேட் ஆனாலும் அந்தப் பையன் உசிர் போயிடும்” என்று ஆரியன் சொல்ல, இன்ஸ்பெக்டர் அவனை உள்ளே அழைத்துச் சென்றார்,
உள்ளே நுழைய முயன்ற ஆரியனை டாக்டர் தடுத்தார்,
“யார் நீங்க, ஒரு கிரிமினலை எப்படி ஐ.சி.யுகுள்ள விடலாம், இவன் கொடுத்த தப்பான இன்ஜெக்ஷன்ல தான் பையன் கோமாவுக்குப் போயிருக்கான்” என்று கத்தினார்,
ஆரியனுக்கு டாக்டரின் மீதே சந்தேகம் வந்தது, ஒரு டாக்டராக அவர் சொல்வதில் உண்மை இல்லை என்பதை உணர்ந்த ஆரி,
“டாக்டர் நீங்க என்ன மருந்து குடுத்தீங்கன்னு எனக்குத் தெரியும். பாம்பு கடிச்ச நோயாளிக்கு ஆன்டி-வெனம் கொடுக்காம, அவனுக்கு மயக்கம் வர்றதுக்காக வேற ஏதோ ஒரு செடேட்டிவ் கொடுத்திருக்கீங்க,
ஏன்னா, அவன் மயக்கத்துல இருந்தா தான் என் மேல பழி போட முடியும்னு நீங்க கணக்கு போட்டீங்க ஆனா அந்த மருந்து அவனோட இதயத் துடிப்பைக் குறைச்சிடுச்சு,” என்று ஆரி உறுதியாக சொல்லவும்
அந்த டாக்டர் ஒரு நிமிடம் தடுமாறினார்,
“என்ன… என்ன உளறுற நீ” என்று டாக்டர் திக்கித் திணற,
ஆரியன் இன்ஸ்பெக்டரைப் பார்த்து,
“சார், அந்தப் பையனோட மெடிக்கல் சார்ட்டை இப்போவே செக் பண்ணச் சொல்லுங்க. அதுல நான் கொடுத்த மருந்தைப் பத்தி தப்பா எழுதியிருப்பாங்க, ஆனா, அந்தப் பையனோட ரத்தப் பரிசோதனை முடிவை வேற ஒரு லேபுக்கு அனுப்பிப் பார்த்தா,
இவங்க கொடுத்த மருந்து என்ன அதோட டோஸேஜ் எவ்வளவுன்னு தெரிஞ்சிடும்” என்று ஆரி சொல்ல விட்டு டாக்டரிடம் திரும்பினான்,
“நீங்களே ஒரு டாக்டரா இருந்துட்டு இப்படி பண்ணலாமா, இது நம்ம தொழிலுக்கு செய்யுற தூரோகம் இல்லையா டாக்டர், நீங்க என்னை ஜெயிக்கணும்னு நினைச்சு ஒரு அப்பாவிப் பையனோட உயிரைப் பணயம் வச்சிட்டீங்களே,
ஆனா நான் ஒரு நேர்மையான டாக்டர் ஒரு உசிரைக் காப்பாத்தப் போராடுறப்போ எனக்கு யாரைப் பார்த்தும் பயம் வராது” என்ற
ஆரி சட்டென ஐ.சி.யு-குள் புகுந்தான்,
செவிலியர்களைத் தள்ளிவிட்டு விட்டு, அந்தப் பையனின் கண்களைப் பரிசோதித்தான்,
“இன்ஸ்பெக்டர் பல்ஸ் டவுனாகிட்டே வருது, இவனுக்கு உடனே மாத்து மருந்து கொடுக்கணும். இல்லன்னா இதயம் நின்னுடும்” என்று அவசரமாக சொல்லி ஊசி போட மருந்துகளைத் தேட,
டாக்டர் தடுக்க வர, ஆரியன் அவரை ஒரு கையால் தள்ளிவிட்டு, தானே ஒரு ஊசியைத் தயார் செய்து அந்தப் பையனுக்குச் செலுத்தினான், அடுத்த ஐந்து நிமிடங்களில், அந்தப் பையனின் இதயம் மீண்டும் சீராகத் துடிக்க ஆரம்பித்தது,
அவனது கண்கள் மெல்லத் திறந்தன, நடந்த களேபரத்தை வெளியே இருந்து பார்த்த அவனது தந்தை (விவசாயி) கதறிக்கொண்டு உள்ளே வந்தார்,
“டாக்டர் ஐயா, என்னை மன்னிச்சிடுங்க இவங்க தான் என் பொண்டாட்டி புள்ளையை மிரட்டி உங்க மேல பொய் சொல்லச் சொன்னாங்க” என்று கைகாட்ட அங்கே தீரண் நின்றிருந்தான்,
இன்ஸ்பெக்டர் தீரணைப் பார்த்து,
“ஏற்கனவே உயிருக்கு போடாடிட்டு இருந்தவோட உயிரோட விளையாடி, ஒரு நல்ல டாக்டர் மேல பழி போடப் பார்த்திருக்கீங்க, இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும், மிஸ்டர்” என்றார் இன்ஸ்பெக்டர்,
தீரண் தன் குட்டு வெளிப்பட்டதை எண்ணி ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான், ஆரியன் நிதானமாக வெளியே வந்தான்,
“மிஸ்டர் தீரண் இது ஆரம்பம் தான், நீ எவ்வளவுக்கு எவ்வளவு கீழ இறங்குறியோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீதான் அசிங்கப்படுவ,
என்மேல ஒரு கலங்கத்த உண்டு பண்ண நீ போட்ட பிளான் இப்போ உங்களுக்கே ஆப்பா முடிஞ்சிருச்சு, வரட்டுமா” என்ற ஆரியன் கம்பீரமாக அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான்,
அதையும் தீரண் சிரித்துக் கொண்டே பார்த்தான், அவனின் ப்ளானே வேறு என்பதை அறியாமல்
தனது இலக்கு இப்போது தன் கோட்டையில் தவித்துக் கொண்டிருக்கும் தன் ராணி மீதிருந்தது வேகமாக விரைந்தான்,
தீரண் வேறு என்ன ப்ளான் செய்திருப்பான்?
நிஷாலினிக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்திருக்குமோ?
தீரண், ஆரி வீடு திரும்பும் வழியில் ஏதாவது ஆபத்தை விளைப்பானா?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
