தூவானம் -4

சிறுசேரியின் அந்த விஸ்வரூபக் கட்டடமான Astra Global, அதிகாலை வெளிச்சத்திலும் மழையின் சாம்பல் நிறப் போர்வையில் மிரட்சியாகத் தெரிந்தது. வெளியே பெய்து கொண்டிருந்த கனமழை ஒருபுறம் இருக்க, உள்ளே மேனேஜர் மனோஜின் இதயத் துடிப்பு மழையை விட வேகமாக அடித்துக்கொண்டிருந்தது.

ஒரு வருடமாகச் சேர்த்து வைத்த விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, அன்று மாலை ரயிலைப் பிடித்து அம்மாவை பார்க்க ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற உற்சாகத்தில் இருந்தான் மனோஜ். நீண்ட இரவுப் பணி முடிந்து, தன் மேஜையைச் சுத்தம் செய்துவிட்டு, பையைக் கையில் எடுத்தவனுக்குத் தான் அந்த இடி போன்ற செய்தி வந்து சேர்ந்தது.

தலைமையகத்திலிருந்து வந்த அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அவனை அப்படியே இருக்கையில் உறைய வைத்தது.

Astra Global நிறுவனத்தின் முதலாளியான சுந்தரத்தின் ஒரே வாரிசும், புதிய CEO-வுமானவர் திடீரென லண்டனிலிருந்து சென்னை அலுவலகத்திற்கு வரப்போகிறார் என்ற செய்தி தந்த அதிர்ச்சி அவனைத் தூக்கி வாரிப் போட்டது. விடுமுறை கனவெல்லாம் கலைந்து போக, மீண்டும் அதே இருக்கையில் அமர்ந்துவிட்டான்.

ஆனால் சென்னை விமான நிலையத்தில் இறங்கி காரில் புறப்பட்ட CEO-வின் கார், பாதியிலேயே பழுதாகி நின்றுவிட்டது. அந்நிய மண்ணில், அறிமுகமில்லாத இடத்தில் நிறுவனத்தின் மிக முக்கிய நபர் தவித்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி மனோஜின் அடிவயிற்றில் பயத்தைக் கிளப்பியது.

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி, அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த அவனது கைக்கடிகாரம் ஓடிக்கொண்டிருந்தது. விடுமுறைக்காகத் தயார் செய்திருந்த மனது, இப்போது ஒரு பெரும் நெருக்கடியைச் சமாளிக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

உடனே கம்பெனி டிரான்ஸ்போர்டை தொடர்புக் கொண்டார், “எந்த வண்டியும் நகர மாட்டேங்குது சார்… மெயின் ரோடுல வெள்ளம் போறதுனால எல்லா காரையும் ஷெட்டுக்குள்ளேயே நிறுத்திட்டோம்,” என்று டிரான்ஸ்போர்ட் பிரிவினர் கைவிரித்தபோது, மனோஜிற்குத் தலை சுற்ற, ஏசி குளிரையும் மீறி அவரது நெற்றியில் அரும்பிய வியர்வை வழிந்தது.

“சார், ஒரே ஒரு வண்டி மட்டும் தான் இப்போ ஆன்-ரோடுல இருக்கு. அந்த டிரைவர் கிட்ட பேசிட்டோம். ஸ்டாப்ஸை பிக்கப் பண்ணப் போன வண்டி அது. இப்போ நீங்க சொன்ன இடத்துக்குப் பக்கத்துல தான் இருக்கு,” என்று டிரான்ஸ்போர்ட் மேனேஜர் மூச்சிரைக்கச் சொல்ல, மனோஜ் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

“அப்பாடா! அந்த டிரைவர் கிட்ட உடனே பேசுங்க. staff அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல அங்க மழையில நிக்கிறவரை ஏத்திக்கிட்டு வரச் சொல்லுங்க!” என்று கத்தினான் மனோஜ்.

ஆனால், அந்தப் பதற்றத்தில் மனோஜ் ஒரு மாபெரும் தவறைச் செய்தான். “அங்கே நிற்பது நம் கம்பெனியின் புதிய CEO” என்ற விவரத்தைச் சொல்ல மறந்துவிட்டான்.

“டிரைவர், அங்கே ஒருத்தர் வெயிட் பண்ணுவார், அவரை அப்படியே ஏத்திக்கிட்டு கம்பெனிக்கு வந்திடு” என்று மட்டும் டிரான்ஸ்போர்ட் மேனேஜரிடம் இருந்து மிகச் சாதாரணமாகத் தகவல் அவருக்கு பரிமாறப்பட்டது.

விளைவு?

அந்த மழையை கிழித்துக்கொண்டு, ஹெட்லைட் வெளிச்சத்தில் தள்ளாடியபடி வந்து நின்றது ஒரு பழைய மாடல் வெள்ளை நிற இண்டிகா கார்.

தன் தகுதிக்கு ஏற்ப ஒரு கார் வரும் என்று எதிர்பார்த்து நின்றிருந்த ஆகாஷிற்கு, அந்த மழையில் ஒரு சிறிய ஏமாற்றத்தைத் தரப்போகிறது என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.

மழையில் நனைந்து அழுக்காகிப் போயிருந்த அந்தச் சிறிய காரைப் பார்த்த இருவருமே, “இது நமக்காக இருக்காது” என்ற முடிவோடு அமைதியாகப் பேருந்து நிலையத்தின் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்கள். ஒரு CEOவை அழைத்துச் செல்ல இவ்வளவு சிறிய காரையா அனுப்புவார்கள் என்ற எண்ணம் சித்தார்த்தின் முகத்தில் ஒரு எள்ளல் சிரிப்பை வரவழைத்தது.

அப்போது சித்தார்த்தின் பாக்கெட்டில் இருந்த மொபைல் சிணுங்க. “சார்… நான் வந்துட்டேன், அந்தப் பஸ் ஸ்டாண்டுக்கு முன்னாடி தான் கார் நிக்குது. நீங்க எங்க இருக்கீங்க?” டிரைவரின் குரல் கேட்டதும் சித்தார்த்தின் முகம் ‘ஈ’ எனப் போனது.

தன் கம்பெனியிலிருந்தே இப்படி ஒரு கார் வந்திருப்பதை உணர்ந்த ஆகாஷ், சித்தார்த்தை ஏறிட்டான். அவனது கண்கள் அனலாய் மின்னின. “டேய் சித்தார்த்… வாட் இஸ் திஸ்? என்னை கூட்டிட்டுப் போக இந்தச் சின்ன டப்பாவையா அனுப்பி இருக்காங்க?” என்று ஆத்திரத்துடன் கத்தினான்.

நிலைமையைச் சமாளிக்க முயன்ற சித்தார்த், “டேய்… இதைத் தவிர வேற கார் எதுவும் ஃப்ரீயா இல்லை போல. இந்த மழையில ரோட்டுல எந்த வண்டியும் ஓட மாட்டேங்குது. இப்போதைக்கு எது வருதோ அதை ஏறிப் போடா… இல்லைன்னா இங்கேயே விடிய விடிய நனைய வேண்டியதுதான்,” என்று சமாதானப்படுத்தியவன்.

“நீ கிளம்பு… நம்ம கார் ரெடி ஆனதும் நான் பின்னாடியே வந்துடுறேன்” என்று கூறிய சித்தார்த், ஆகாஷின் மறுப்பை காது கொடுத்துக் கேட்கவே இல்லை. அவன் கையில் இருந்த லேப்டாப் பாக்கோடு, அந்தச் சிறிய இண்டிகா காரின் இருக்கைக்குள் அவனை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டான்.

வேறு வழியின்றி, தன் கௌரவத்தைச் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மழையில் நனைந்த தேகத்துடன், லேப்டாப் பையையும் அணைத்துக்கொண்டு அந்தச் சிறிய இடத்திற்குள் ஒருவாறு பொருந்தி அமர்ந்தான் ஆகாஷ்.

கார் நகரத் தொடங்கியதும் தான் அவன் சுற்றுப்புறத்தைக் கவனித்தான். அவன் அமர்ந்திருந்த சீட் மழையில் நனைந்து ஈரப்பதமாக இருக்க, கால் வைக்கும் இடமோ சேறும் சகதியுமாக இருந்தது. சந்தேகத்துடன் குனிந்து பார்த்த ஆகாஷின் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது. பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய அவனது விலை உயர்ந்த Gucci ஷூ, அந்தச் சேற்றில் பட்டுப் பளபளப்பை இழந்து அவலமாகக் காட்சியளித்தது.

அதைப் பார்க்கவே அவனுக்கு அருவருப்பில் முகம் சுருங்கியது. “ஷட்! எல்லாம் இந்த சித்தார்த்தைச் சொல்லணும். இப்படி ஒரு குப்பை வண்டியில ஏத்தி அனுப்பிட்டான்!” என மனதிற்குள் கறுவினவன். கோபத்தில் சித்தார்த்துக்கு போன் செய்தால், அவனது லைன் பிஸியாக இருந்தது. “கண்டிப்பா அந்த ரீனா கூடத்தான் கடலை போட்டுக்கிட்டு இருப்பான்” என்று புரிந்துகொண்ட ஆகாஷ், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான்.

சிறிது நேரத்திலே பொறுமை இழந்தவன், முன்னால் இருந்த டிரைவரைப் பார்த்து, “என்ன டிரைவர் நீங்க? காரை ஒரு ஒழுங்கா கிளீன் பண்ண மாட்டீங்களா? கால் வைக்கிற இடமெல்லாம் ஒரே சேறா இருக்கு. மனுஷன் எப்படி இதுல உட்கார்ந்துட்டு வர முடியும்?” என எகிறுனான். 

ஆனா டிரைவரோ, “சார்… என்ன சார் நீங்க? இது என்ன இப்போ பெரிய விஷயமா?” என சாதாரணமாகப் பதில் சொல்ல  

“ஹலோ! இன்சுலேட் பண்ணினது இல்லாம இப்படி carelessஆஹ் பதில் சொல்றீங்களே? ஒரு பேசிக் மேனர்ஸ் வேணாம்?” என ஆகாஷ் அதிகாரத் தோரணையில் அதட்ட.

அந்த டிரைவர் அசரவில்லை. “சார், ஒரு நாள் கார்ல வந்துட்டு இப்படிப் பேசுறீங்க. நீங்க கம்பெனிக்கு புதுசு போல! மழை பெய்ற நேரத்துல இப்படித்தான் சார் இருக்கும். மத்த எந்த வண்டியும் எடுக்காத நேரத்துல, நான் ரிஸ்க் எடுத்து ரெண்டு ட்ரிப் அடிச்சாதானே சார் எனக்கும் சாப்பாடு கிடைக்கும்?” என்றார் எதார்த்தமாக.

“ப்ச்… செண்டிமெண்ட்!” என்று எரிச்சலோடு முணுமுணுத்தபடி பின் இருக்கையில் சாய்ந்தான் ஆகாஷ். அப்போதுதான் கவனித்தான், சிக்னல் இல்லாத அந்த சாலையில் கார் சும்மா நின்று கொண்டிருப்பதை.

“டிரைவர், ஏன் வண்டிய stop பண்ணி இருக்கீங்க? கிளம்புங்க!” என ஆகாஷ் அதிகாரமாகச் சொல்ல,

டிரைவரோ நிதானமாக, “இன்னொரு பிக்கப் இருக்கு சார், அதுக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்,” என்றார்.

ஆகாஷிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. “பிக்கப்-ஆ? எதுக்கு?” என்று அவன் வினவ,

“என்ன சார் நீங்க? உங்களை மாதிரியே இந்த ரூட்ல இன்னொரு ஸ்டாப்  இருக்காங்க. அவங்களையும் பிக்கப் பண்ணிட்டுத்தான் ஆபீஸ்க்குப் போகணும்,” என்றார்.

“வாட்… ஆபீஸ்க்குப் போகணுமா?” ஆகாஷின் குரலில் நடுக்கமும் ஆத்திரமும் சரிசமமாகக் கலந்திருந்தது.

“ஆமா சார்… நீங்கதான் புதுசு போல. அவங்க ரெகுலரா இந்த வண்டியிலதான் வருவாங்க,” என்று டிரைவர் அவனை ஒரு ஸ்டாப் போலவே பார்க்க, ஆகாஷ் தலையில் அடித்துக்கொண்டான்.

“ஓ மை காட்! உங்களைச் சொல்லி ஒரு தப்பும் இல்லை. உங்களையெல்லாம் வேலைக்கு வச்சிருக்காங்களே அந்த மேனேஜ்மென்ட்டைச் சொல்லணும்!” எனத் தன்னுள் கறுவிக்கொண்டவன், உடனே சித்தார்த்திற்கு மீண்டும் அழைத்தான். இந்த முறை சித்தார்த் எடுக்கவும், ஆகாஷ் எரிமலையாய் வெடித்தான்.

“டேய் சித்தா! என்னடா நடக்குது இங்கே? வாட் இஸ் திஸ் கார்? தரை முழுக்க ஒரே சேறு… டிரைவர் என்கிட்ட ரொம்ப திமிரா பேசுறான். அதைவிடக் கொடுமை, இந்தக் கார் கெஸ்ட் ஹவுஸ்க்குப் போகலையாம், நேரா ஆபீஸ்க்குப் போகுதாம்! வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்?” என்று ஆங்கிலத்தில் படபடவெனக் கத்திக் கொண்டிருந்தான்.

காரின் கதவின் ஓரம் கண்ணாடியில் சாய்ந்தபடி, போனில் கத்திக்கொண்டிருக்க, அதே நேரம் காரின் மறுபக்கம் கதவு திறந்த வேகத்தில் வந்த குளிர்ந்த காற்றுடன், தூவானம் சாரல் அவனின் மீது விழவும், போனில் கத்திக் கொண்டிருந்தவன், எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தான்.

அங்கே… கொட்டும் மழையின் இரைச்சலுக்கு நடுவே, மழையில் நனைந்து ஜொலிக்கும் ஒரு மின்னலைக் கண்டது போல அவனது பார்வை நிலைத்து நின்றது.

சிகப்பு நிறச் சேலையில், நனைந்த ரோஜா மலரைப் போல, வட்டமான முகம், அதற்குப் பொருத்தமாகச் சிறிய வட்ட வடிவக் கண்ணாடி. அவள் உள்ளே நுழையும்போது சிதறிய அந்தச் சிறு சிரிப்பில், வரிசையாகத் தெரிந்த அந்த முத்துப்பற்கள் மின்னின.

மழைத்துளிகள் தன் கூந்தலை அதிகம் நனைத்துவிடக் கூடாது என்ற பதற்றத்தில், ஒரு கையைத் தலைக்கு மேல் குடையாக வைத்திருந்தவள். மறு கையில் தன் சேலை முனையைச் சுருட்டிப் பிடித்தபடி, மழையின் வேகத்திற்குப் பயந்து பரபரப்பாக வந்து காரின் கதவு திறந்து ஒரு கவிதை உள்ளே நுழைந்தது போல அந்தப் பெண்ணை, ஆகாஷ் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

விதியின் விளையாட்டாக, அதே விநாடி அந்தச் சிறிய இண்டிகா காரின் ஸ்பீக்கரில.…

“தூவானம் தூவத் தூவ…

மழைத் துளிகளில்

உன்னைக் கண்டேன்!

என் மேலே ஈரம் ஆக…

ஓருயிர் கரைவதை

நானே கண்டேன்!”

அந்தப் பாடலின் சத்தம் அவனின் செவிகளில் மட்டும் இல்லை , ஆகாஷின் இதயத்தை ஊடுருவி ஒரு Open Heart Surgery செய்தது போல அவனது உணர்வுகளைத் தலைகீழாக மாற்றியது.

இதுவரை அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த கோபத்தீ அணைந்து, அந்த இடத்தில் ஈர்ப்பின் மெல்லிய தீப்பொறி பற்றிக்கொண்டது. ஜன்னல் ஓரம் அதிகாரம் செய்து கொண்டிருந்த அந்த பிசினஸ் டைகூன், இப்போது தன் அருகிலேயே அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணின் அழகில் கரைந்து போய்க்கொண்டிருந்தான்.

மழைத்துளிகள் அவளது கண்ணாடியில் படிந்து பார்வையை மறைக்க, அவள் அதைத் தன் விரல்களால் மெல்லத் துடைத்த அந்த ஒரு சின்ன அசைவு கூட, ஆகாஷின் மனதிற்குள் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. கையில் இருந்த போனின்  மறுமுனையில் சித்தார்த், “ஹலோ… ஆகாஷ்… என்னடா ஆச்சு?” என்று கத்திக் கொண்டிருக்க, ஆகாஷிற்கு அந்தச் சத்தம் காதில் விழவே இல்லை, அந்த மௌனமான கவிதையில் தன்னைத் தொலைத்திருந்தான்.

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page