மயூரி அன்று மாலை நேரம் கல்லூரியையும் பரத வகுப்புகளையும் முடித்துவிட்டு மகிழ்வுடன் வீடு வந்து சேர… அசந்தர்ப்பமாக அந்த நேரத்தில் அவள் தந்தை வீட்டில் இருந்தார்.
வாயிலில் அவர் ஸ்கூட்டரையும், செருப்பையும் கண்டவளுக்கு பாதி மகிழ்ச்சி வாயிலிலேயே வற்றி விட்டது. அமைதியாக உள்ளே சென்றவளை ஹாலிலேயே எதிர்கொண்டார் முத்து அவள் தந்தை. காபியை அருந்தியபடி நிமிர்ந்து இவளை கண்டவர்.
உருத்து விழிக்க அவரை வலுக்கட்டாயமான ஒரு புன்னகையுடன் எதிர்கொண்டாள் மயூரி.
“என்ன இன்னைக்கு இவ்வளவு லேட்” என்றார் கடிகாரத்தை கண்டு கொண்டே..
“ இல்லையேப்பா.. மணி ஐந்து தானே ஆகுது.. “என்றாள் மயூரி.
“ உன் காலேஜ் மூணு மணிக்கு முடிஞ்சுரும். ரெண்டு மணி நேரம் என்ன செஞ்ச..எங்க ஊர் சுத்துன..? “ என்றார் சற்று காட்டமாக
“இல்ல…ப்பா ப்ராஜெக்ட் அசைன்மென்ட் ஒர்க்…இயர் முடிய போகுது. எல்லாம் இந்த மாததிற்குள் முடிக்க சொல்லி இருக்காங்க… அதனால காலேஜிலேயே உட்கார்ந்து முடிச்சுட்டு வர்றேன்ப்பா… பிரியா கூட என்கூட தான் வந்தா…” என்றாள் மயூரி மென்மையாக.
“ம்ம்..சரி சரி வெளியே எங்கேயும் ஊர் சுத்துனா எனக்கு தெரிஞ்சிரும். ஜாக்கிரதை…. “என்றார் சிறு கண்டிப்புடன்
“ அப்படி எல்லாம் இல்லப்பா…” என்றவள் தன் அறையினுள் புகுந்து கொண்டவள்.
கதவை சாத்திவிட்டு வாயை பொத்திக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.பின் மூச்சு வாங்கியபடி
“மிஸ்டர் முத்து உங்களை ஏமாற்றலாம்னு தெரியும். ஆனால் இவ்வளவு ஈஸியா ஏமாத்த முடியும்னு தெரியாது… பெரிய சிஐடி மாதிரி கேள்வி கேட்கிறார்…” என்று கேலியாக தனக்குள் பேசிக்கொண்டு குளியலறை நோக்கி சென்றாள்.
ஆனால் அவளின் கேலிக்கும் சிரிப்புக்கும் சேர்த்து பத்து நிமிடத்தில் தீ வைத்து கொளுத்த போகிறார்..அவள் தந்தை மிஸ்டர் முத்து என்று அவள் அறியாள்… பாவம்…கடவுள் வெக்கேஷனில் ஃபாரின் சென்று விட்டார் போலும்….
அறைக்குள் தன் திறமையை மெச்சியபடி,திங்கள் அன்று ரேடியோவில் பேசுவதற்கு சில குறிப்புகளை எடுத்தபடி இருக்க..அறைக்கதவை தட்டினார் மாலினி.
“மயூரி… அப்பா கூப்பிடுறார். உன்கிட்ட கொஞ்சம் பேசணுமா வெளியே வா…” என்றார்.
“இதோ..வரேன் மா.. “என்றபடி வேகமாக தன் குறிப்புகளை மறைத்துவிட்டு முகத்தை சரிபார்த்துவிட்டு வெளியே வந்தாள்
மயூரி.
அவளின் தந்தை அவர் அமர்ந்திருந்த இடத்திலேயே இருந்த படி கால் மேல் போட்டபடி தன் செல்லில் செய்தியை படித்துக் கொண்டு இருந்தார்.அவர் முன் அமைதியாக பதுமையாக வந்த அமர்ந்தாள் மயூரி.அவளை நிமிர்ந்து பார்த்தவர் மென் புன்னகையுடன் நேராக அமர்ந்தார். பின் அவளைப் பார்த்து
“ என்னமா.. மயூரி இந்த ரெண்டு மாசத்துல… உன் காலேஜ் முடிஞ்சிடும் இல்ல… அப்போ.. இப்ப மார்ச் மே மாசம் முடிஞ்சிடும் அப்படித்தானே.. “என்றவர் கேட்டதில் ஏதோ பொரிதட்டியது போல் தோன்றினாலும் என்ன என்று புரியவில்லை மயூரிக்கு.
தயக்கத்துடன் பதில் அளித்தாள் “ஆமாம்பா… மே மாசம் காலேஜ் முடிஞ்சிடும்…மார்க் சீட் எல்லாம் கொடுக்க ஜூன் ஆகிரும்.. “என்றாள் லேசான தயக்கத்தோடு
முந்திரி பக்கோடாவும் காபியையும் மயூரி முன் இருந்த டேபிளில் வைத்தார் மாலினி.அவள் தந்தைக்கு ஒரு பிளேட்டை கொடுத்துவிட்டு அவர் அருகே அமர்ந்தவரிடம் “அப்போ வைகாசில வச்சிரலாம் மாலினி… அவங்களும் அதானே சொன்னாங்க…”என்றார் மனைவியை பார்த்தபடி
“ஆமாங்க நான் தான் அப்பவே சொன்னேன்…நீங்க தான் நம்பல.. “ என்றார் குறையுடன்
மயூரி தாயிடம் “என்னம்மா வைகாசியில…என்ன வச்சுக்கலாம்..? “ என்று மெதுவாக கேட்டாள்.
“ உன் கல்யாணம்தான்.. “என்றார் தந்தை பெருமிதமும் பெருமையுமாக
அவள் தலையில் பெரிய கல்லை போட்டது அறியாமல் புன்னகைத்தவரை கண்டு கோபம் வந்தாலும் அதை காட்ட இயலாமல்
“என்னப்பா சொல்றீங்க.. கல்யாணமா… எனக்கா..? “என்றாள் தவிப்புடன்.
“ பின்ன.. எனக்கா…! நானும் ரெண்டு மாசமா பார்த்துட்டு தான் இருந்தேன். என் வளர்ப்புக்கு பெரிய இடத்திலிருந்து சம்பந்தம் வந்திருக்கு… ஒரு வாரமா அதே விஷயமாதான் விசாரிச்சேன் இன்னைக்கு வீட்டுக்கு வந்திருந்தாங்க பேசிட்டு உன்னையும் பார்க்கலாம்னு நினைச்சாங்க. ஆனா… நீ தான் ஒரு மணி நேரம் லேட்…” என்றார் அவள் லேட்டாக வந்தது பெரும் பாவம் போல
அவரின் பெருமையும் அவளுக்கு கோபத்தை வர செய்தது. எனினும் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு
“அப்பா… என்ன பா இது…திடீர்னு கல்யாணம் அது இதுன்னு…. என்னப்பா இதெல்லாம் நான் படித்து முடிக்கணுமே..? “ என்று அவள் ஆரம்பிக்க அவளை தடுத்து நிறுத்தினார் தந்தை
“ இப்பவும் நீ படிச்சு முடிச்சப்புறம் தான… வைகாசியில வைக்கிறோம் அதான் மே முடிவு.. “ என்றார் சிறு சுணக்கத்துடன்
“ ஆனா…அப்பா… என் கல்யாணத்துக்கு என்கிட்ட தானே நீங்க முதல்ல கேட்டு இருக்கணும்..? “ என்றாள் தன் கோபத்தையும் ஆதங்கத்தையும் அடக்கிய குரலில்
அந்தக் கேள்வியே அவள் தந்தையின் கோபத்தை கிளப்ப போதுமானதாக இருந்தது.
“என்ன… உன்கிட்ட முதல்ல கேட்டிருக்கணுமா..? “என்றவர் நிமிர்ந்து அமர்ந்து கால் மேல் இருந்த காலை இறக்கியவர். மனைவியை திரும்பி முறைக்க அவரும் சற்று திகைத்து பயத்துடன் காண மயூரியிடம் திரும்பி
“நான் உன் அப்பா.. உனக்கு என்ன.. .. எதை…எப்போ…எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும். நீ பிறந்ததுல இருந்து உனக்கு எது சரி எது உன் வாழ்க்கைக்கு தேவைனு பார்த்து பார்த்து செஞ்சுகிட்டு இருக்கேன்.. நான் இத்தனை நாள் உன்னை கேட்காமல் தானே எல்லாத்தையும் செஞ்சேன். அதே மாதிரி தான் இதுவும்..!” என்றார் சற்று கடுமையான குரலில்
ஆனால் மயூரியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“அப்பா… இதெல்லாம் வெறும் பொருட்கள். உயிரில்லாதவை இப்போ நீங்க சொல்றது கல்யாணம். வாழ்க்கை முழுசும் நான் கூட சேர்ந்து வாழ போற உயிர் உள்ள ஒரு மனுஷன். எப்படிப்பா…!” என்றாள் மேலும் கூற முடியாமல்
“ஹ்ம்…உயிர் இல்லாத விஷயத்தை நூறு தடவை யோசிச்சு உனக்கு எது சரியோ அதை பார்த்து செஞ்சவனுக்கு… உன் வாழ்க்கையை பார்த்துக்கிற…ஏன் நாளைக்கு இந்த குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கிற இன்னொரு குடும்பத்தை செலக்ட் பண்ணும் போது.. ஒரு தடவைக்கு நூறு இல்ல ஆயிரம் தடவை… யோசிச்சு இருப்பேன்னு உனக்கு புரியலையா…? “ என்றார் பொறுமையை இழுத்து பிடித்தபடி
“ அப்பா…எல்லாத்தையும் யோசிச்சவர்… எனக்கு என்ன வேணும்னு இல்ல…எனக்கு என்ன பிடிக்கும்னு நீங்க யோசிக்கலையே…!” என்றாள் ஆதங்கத்துடன்
“ஏன் இப்ப என்ன பிடிக்காமல் போச்சு.. நான் இன்னும் மாப்பிள்ளையை பற்றி எதுவுமே சொல்லலையே… கல்யாணம் என்ற பேச்சு எடுத்த உடனே ஏன் இவ்வளவு எதிர்க்கிற… நீ பேசுவதை பார்த்தா… எனக்கு முன்னாடி நீயே ஏதோ மாப்பிள்ளை பார்த்துட்ட மாதிரி தெரியுது…? “ என்றார் சற்று அடக்கிய கோபத்தை எள்ளலாக மாற்றி…
கோபமாக நிமிர்ந்து அவரை முறைத்த மயூரி
“ஏன் பா… நான் யாரையாவது விரும்புனாதான் கல்யாணத்தை மறுக்கணுமா…எனக்கு நீங்க பார்த்த மாப்பிள்ளை பிடிக்காம…கூட இருக்கலாமே…!அதோட என் வாழ்க்கையில ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கிறேன்… கூடாதா..? “ என்றாள் சற்று கோபமாக
“உன்னை யாரும் சாதிக்க வேண்டாம்னு சொல்லலியே… கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன வேணா பண்ணு… அதோட நான் இன்னும் மாப்பிள்ளை பற்றி சொல்லவே இல்லை… சொன்னாதானே பிடிக்குதா… பிடிக்கலையா… எல்லாம்.அதுக்குள்ள ஏன் இவ்வளவு போராட்டம்..?அதான் எனக்கு சந்தேகமா இருக்கு…” என்றார் அவரும் காட்டமாக
மயூரிக்கு பொறுமை பறந்தது
“ஆமா.. எனக்கு நீங்க எந்த மாப்பிள்ளையை பார்த்தாலும் பிடிக்கலை..அவன் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் எனக்கு வேணாம்… என் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம…பெத்த பெண்ணை நம்பாமல் சந்தேகப்படுறவர் எதை எனக்கு கொடுத்தாலும் வேண்டாம்…!” என்றாள் அழுகையும் ஆத்திரமுமாக
“ ஏன்…அப்படி என்ன உனக்கு…இத்தனை நாள் நான் கொடுத்தது பிடித்தது..இப்ப பிடிக்கலையா…? “என்றார் ஆத்திரமாக எழுந்து
அவளும் கோபத்துடன்” நான் வாழ்க்கையில ஏதாவது சாதிக்கணும்… என் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்னு.. ஆசைப்படுறேன் அதை தடுக்கிற எதுவா இருந்தாலும்
…எனக்கு வேண்டாம்…அது எதுவா இருந்தாலும் எனக்கு பிடிக்கலை… அது நீங்க பார்த்த மாப்பிள்ளையா இருந்தாலும் சரி…!” என்றவள் உள்ளே அவள் அறையினுள் செல்ல திரும்ப… அவள் கையை பற்றி இழுத்தவர் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்து இருந்தார்.
“என்னடி….நானும் பொறுமையா…. கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றேன்… அப்படி என் முடிவ மீறி நீ என்ன சாதிக்க போறேன்னு பார்க்கிறேன்…நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும். இந்த ரெண்டு மாசம் வீட்லயே தான் இருக்க… ரெண்டு மாசத்துல நான் பார்த்தவனோட உனக்கு கல்யாணம்…!” என்று கூறியவர் அவர் அறைக்குள் கோபமாக புகுந்தவர், மீண்டும் வெளியே வந்து
“அவ கூட.. சேர்ந்துகிட்டு அவளை நாளைக்கு காலேஜுக்கு அனுப்புன…. உன்னை என்ன செய்வேன்னு …. எனக்கே தெரியாது “என்று தன் மனைவியை பார்த்து கர்ஜித்து விட்டு செல்லவும் மகேந்திரன் வீட்டுனுள் நுழையவும் சரியாக இருந்தது.
மாலினி மகளை தேற்ற முயல “என்னம்மா ஆச்சு.. “ என்று சோபாவில் அமர்ந்தபடி கேட்டான் மகேந்திரன்.
மாலையில் நடந்தவற்றை அழுகையுடன் கூற மகேந்திரன் கோபமாக மிரட்டினான்” அப்பா பார்த்திருக்கிறது எவ்வளவு பெரிய இடம்னு தெரியுமா… அவங்க எப்படிப்பட்ட குடும்பம்னு தெரியுமா… மரியாதையா கல்யாணம் பண்ணிக்க… இப்ப நீ என்ன சாதிச்சுக் கிழிக்க போற… எல்லாம் போதும் தேவையில்லாமல் குடும்ப மானத்தை வாங்கிறாத…” என்றான் அவன் பங்கிற்கு அவனை முறைத்த மயூரி
“ அவ்ளோ பெரிய இடம்.. குடும்ப கவுரவம் முக்கியம்னா… நீயே கல்யாணம் பண்ணிக்க… எனக்கு எவனையும் பிடிக்கல…” என்று கூறிவிட்டு எழுந்து தன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு கட்டிலில் சென்று அமர்ந்தவளுக்கு கோபமே பிரதானமாக இருந்தது.
தன் விருப்பம் என்று ஒன்று இல்லவே இல்லையா… என்ன செய்ய வேண்டும் என்று மனது வேகமாக கணக்கிட தொடங்கியது.ஏன் தனக்கு மட்டும் இப்படி குடும்பத்தை ஏற்று அடிமையாக இருக்கவும் முடியவில்லை..குடும்பத்தை விட்டு விலகி சாதிக்கவும் முடியவில்லை.. என்று தவித்தாள்.
ஆனால் அவள் மனது ஒன்றை மட்டும் மீண்டும் மீண்டும் கூறியது இம்முறை வணங்கி செல்ல முடியாது. தந்தை கூறுவதே வேதம் என்று இருக்க முடியாது. இன்று தன் முடிவுக்கு குடும்பம் எதிர்த்தால் குடும்பத்தை விடுத்து வெளியேறிவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
ஆனால் மனம் செல்லும் வேகத்திற்கு நேரம் செல்வதில்லையே, அது என்றும் போல அது நேரத்திற்கு சென்றது. இரவு உணவிற்கு கூட அவள் வெளியேறவில்லை.
தாயின் ஆதங்கக் குரலும் தந்தை தமையனின் அதற்றும் குரலும் மட்டுமே கேட்டது. அனைத்தையும் அமைதியாக பொருத்து,தனக்கு தேவையானதை எடுத்து வைத்து அமைதியாக காத்திருந்தாள்.
நடு சாமத்திற்கு பிறகு தூங்கி எப்பொழுதும் போல விழித்திருந்தாள் மயூரி.எப்பொழுதும் போல் அறையிலேயே காலைக்கடன்களை முடித்து கல்லூரிக்கு தயாராக வந்தாள்.
அமர்ந்திருந்த தந்தையும் தமயனும் அவளை முறைக்க வெளியேற முற்பட்டவளை தடுத்து நிறுத்தியது தந்தையின் குரல்
“எங்க போற.. உன்ன தான் எங்கேயும் போகக்கூடாதுனு நேற்றே சொன்னேனே.. “ என்றார் கர்ஜிக்கும் குரலில்
மனதிற்குள் குளிர் பரவினாலும் தைரியத்தை வளர்த்துக் கொண்டு
“ நானும் என் முடிவை மாத்திக்க போறதில்லை.. “என்று அவள் ஒரு எட்டு வைக்கும் முன் மகேந்திரன் எழுந்து வந்து அவள் கையை பற்றி தர தர என உள்ளே இழுத்து சென்று அவள் அறையில் தள்ளினான்.
“என்ன ஓவரா போற…எங்கேயும் போக முடியாது… அப்பா சொல்றத கேட்டு அமைதியா கல்யாணம் வரைக்கும் ரூமுக்குள்ளே கிட… தேவை இல்லாமல் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண கொன்றுவேன்.. “ என்றவன் சட்டென கதவை வெளியே தாழிட்டான்.
மயூரிக்கு திக்கென்றது. இவ்வளவு கொடுமைக்காரர்களா தன் குடும்பத்தினர்…!என்று திகைத்துதான் போனாள். அதை எண்ணி அழுதாள். ஆனாலும் மனது தன் கனவை எண்ணி ஏங்கி தவிக்க தான் செய்தது.என்ன செய்ய… என்று மனம் ஒருபுறம் வேகமாக சிந்திக்க துவங்கியது.
காலை பதினோரு மணி வரை அமைதியாக இருக்க முடிவு செய்தாள் மயூரி. வெளியே தந்தை தமயனின் அரவம்.. வண்டிகளின் சத்தமும் அடங்க காத்திருந்தாள்.தாய் தன் அறை வாயிலில் தயங்குவதையும் உள்ளிருந்தே கவனித்துக் கொண்டிருந்தவள்.
முதலில் தனக்கு மிகவும் முக்கியமான விஷயங்களை மட்டும் கையில் சுலபமாக தூக்கிச் செல்லும் அளவு மட்டும் சேகரித்தாள். அந்த பையை கதவின் பின்னே மறைவாக வைத்தவள். தக்க தருணத்திற்காக காத்திருந்தாள்.
நல்ல வேலையாக கடவுள் வெக்கேஷனிற்கு எதுவும் செல்லாமல் அவளுக்கு உதவி செய்தார்.
அவள் எதிர்பார்த்தபடி அடுத்த பதிணைந்து நிமிடத்தில் தாயின் வளையல் ஒலியும்..கதவின் தாழ் நீங்கும் ஓசையும் கேட்க.. ஓடி சென்று தலையணையில் முகம் புதைத்து படுத்துக் கொண்டாள்.அருகே இருந்த தண்ணீர் குவளையில் இருந்து நீரை ஒரு கை எடுத்து அவள் தலை வைத்திருந்த இடத்தில் ஊற்றிக்கொண்டாள். அவள் தாய் கதவை திறக்க கண்களை மூடியவாறு விசும்பினாள்.
மெல்ல அவள் அருகே வந்து அவள் தலையை தொட்டு அமர்ந்தார் தாயார்.
“மய்யுமா…என்னம்மா… இப்படி பண்ற…? “என்றார் தவிப்பாக
அவள் எதுவும் பேசாமல் இருக்க மேலும் தொடர்ந்தார்
“ உனக்கு நல்லது தான் கண்ணம்மா அப்பா செய்கிறார். புரியாமல் நீ தான் கஷ்டப்படுத்துற… எவ்வளவு பெரிய இடம் தெரியுமா? ஆனா எந்த வரதட்சணையும் வேண்டாம்..உங்களால முடிஞ்சத செய்யுங்கன்னு… சொல்லிட்டாங்க இந்த காலத்துல இதுக்கு மேல என்னடா மா வேணும்…”என்று அவள் தலையை தடவி ஆறுதலாக கூறினார் மாலினி.
முதலில் தன் தாயின் கரிசனத்தில் அவரை ஏமாற்றி போகிறோமே என்று வருந்திய மனது அவரின் ஆறுதலில் கோபமுற்றது.
‘இது என்ன வரதட்சணை வேண்டாம் என்றால் மகளின் விருப்பம் கூட அங்கே தேவையில்லையா..! அவளின் மனதை யாரும் கேட்கவில்லையே..! ‘ என்ற எண்ணம் தோன்றியதும் மனம் தான் எடுத்த முடிவே சரியானது என்று அழுத்தி கூறியது.
எனவே அதையே செயல்படுத்த முடிவெடுத்தாள். அவள் தாயின் முகத்தை மெல்ல திரும்பிப் பார்த்தவள்
“ஏன் மா…நீங்களும் இப்படி பேசுறீங்க…அப்போ என் விருப்பம்னு ஒன்னு இல்லவே இல்லையா…”என்றாள் தவிப்புடன்.
“ என்னடா… அப்பாகிட்ட சொன்னதையே சொல்ற..நீதான் அவர பேசவே விடலயே…மாப்பிள்ளையை பற்றி தெரிஞ்சுக்காமலேயே கல்யாணமே வேண்டாம்னு… சொன்னா… பெத்தவங்க நாங்க என்னமா நினைக்கிறது.நீ வேற யாரையோ விரும்புறேனு தானே நினைக்க தோணும்…? “என்றார் மெதுவாக
“ஏன்.. எனக்கு வேற யார் மேலயாவது லவ் இருந்தா… தான் வேண்டாம்னு சொல்லனுமா…இவரை பிடிக்காமல் கூட இருக்கலாம் இல்ல… நான் உங்க பொண்ணு தானமா என்ன பத்தி உங்களுக்கு தெரியாதா? “என்றாள் அடக்கமாக
“ப்ச்…யாருன்னு தெரிஞ்சுக்காமலேயே பிடிக்கலைன்னு சொன்னா… என்னமா செய்வது…? நீ முதல்ல…” என்று ஆரம்பித்தவரை இடைமறித்தாள் மயூரி.
“ அம்மா..அப்ப சொன்னதையே தான் இப்பவும் சொல்றேன்… என் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம… நீங்க கல்யாணம் வரைக்குமே முடிவு பண்ணிட்டீங்க… எப்படிமா…? எனக்குன்னு மனசு இல்லையா…? “ என்றாள் கடைசி வாதமாக
ஆனால் அவள் தாயாரோ
“ நீ ஏன் இப்படி விதண்டாவாதம் பண்ற…மய்யுமா…?அப்பா உனக்கு நல்லது தான் பண்றார். நீ யாருன்னு தெரியாம…” என்று ஆரம்பிப்பதற்குள்
“ சரிமா… நான் ஒத்துக்குறேன்… இந்த வாதத்தை இதோடு விட்டுருங்க… உங்க எல்லாருக்கும் பிடிச்சு இருக்குல்ல நீங்க எனக்கு நல்லது தான் பண்ணுவீங்க…நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். “என்றாள் எந்த உணர்வும் இல்லாமல்.
“மயூரி…ஏன் இப்படி நீயும் கஷ்டப்பட்டு.. எங்களையும் கஷ்டப்படுத்துற…? “ என்றார் வாஞ்சையுடன் கண்கள் கலங்க
“ப்ச்… அதான் ஒத்துக்கிட்டேனா மா….இதுக்கு மேலயும் லக்சர் அடிக்காதீங்க…” என்றாள் தலையை மட்டும் தூக்கி
அவள் தலையில் மெல்ல தட்டி “சரி மாப்பிள்ளை பெயர்…” என்று அவர் தொடங்க அவரை கையால் நிறுத்தும்படி கூறி எழுந்து அமர்ந்தவள்.
“ அம்மா எனக்கு யாராக இருந்தாலும் ஓகே. உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு இல்ல எனக்கும் பிடிக்கும். சரியா… எல்லாமே எனக்கு சரியானதுதான் நீங்க செய்றீங்க சரிதானே… நான் சந்தோஷமா தான் ஒத்துக்கிட்டேன். “ என்றவள் கண்களை துடைத்து கொண்டு
“இப்ப எனக்கு பசிக்குது மா கொஞ்சம் சாப்பாடு போடுங்க…!” என்றாள் பரிதாபமாக
தாயுள்ளம் கனிந்து விட்டது. அவள் தலையை வருடி
“அச்சோ… இதோ இரண்டு தோசை சுட்டு தரேன் இரு…” என்றவர் வேகமாக அவள் அறைக் கதவை பூட்ட மறந்து அடுப்படியில் நுழைந்தார்.
அவர் சென்ற திசையை பார்த்தபடி பூனை போல் இறங்கி,அவள் மறைத்து வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு,வெளியே எட்டிப் பார்த்தவள், மாலினி உள்ளே தோசை சுடுவதில் மும்மரமாக இருக்க மெதுவாக வீட்டை விட்டு வெளியேறினாள் மயூரி…
