அவள் விழுந்த வேகத்தைப் பார்த்த பாலாஜி பதறிப்போனான். அவன் கால்கள் ஓட துடித்தாலும், மனது கட்டுப்படுத்தியது. சூர்யாவின் முகத்தை கெஞ்சுதலாகப் பார்த்தான்.
‘இனியும் இவளை இப்படியே விட வேண்டாம்’ என்ற வேண்டுகோள் அவன் பார்வையில் இருந்தது.
சூர்யாவும் ஒரு கணம் பூர்ணிமாவின் வெளுத்த முகத்தைப் பார்த்தான். என்ன நினைத்தானோ, ‘சரி’ என்பது போல ஒருமுறை மட்டும் லேசாகத் தலையை அசைத்தான். அடுத்த நொடி, பாலாஜி ஓடிப்போய் அவளைத் தன் கைகளில் தூக்கினான். அவளது உடல் தணலாகக் கொதித்துக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக அவளை காரில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான்.
சில மணி நேரத்திற்குப் பிறகு, பூர்ணிமா மெல்லக் கண் விழித்தாள். அவளது கையில் குளுக்கோஸ் ஏற்றப்படும் ஊசி குத்தப்பட்டிருந்தது. அறையெங்கும் மருந்தின் மணம். தான் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தவளுக்கு, அடுத்த கணமே அபிராமியின் நினைவு வந்தது. எழுந்து அமர முயன்றவளின் தோளை ஒரு கை மென்மையாகத் தொட்டு அமர்த்தியது. அது பாலாஜி…
“என்னை விடு, நான் போறேன்.”
“எங்க போவ?”
“எங்க போக முடியும்? திரும்பவும் அவன் வீட்டுக்குத்தான் போகணும். என் மேல அவனுக்கு இன்னும் பரிதாபம் வரலையாம். நான் இன்னும் துடிக்கணும்னு எதிர்பார்க்கிறான். அதுக்கப்புறம் தான் என் தங்கச்சி இருக்கிற இடத்தையே சொல்லுவானாம்… அந்த ராட்சசன்கிட்ட எப்படியாவது கெஞ்சி என் அபியை மீட்கணும். அவ ரொம்ப அழுதா வீசிங் வந்துடும். நான் கெஞ்சி கொஞ்சி ஊட்டினாலே, ரொம்ப அடம் புடிப்பா. இப்ப வேறொருத்தர் கையால சாப்பிட்டாளோ, இல்லையோ தெரியல…” என்று ஆவேசமாக ஆரம்பித்தவள், அழுகையோடு முடித்தாள்.
பாலாஜி ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, “அபி என் வீட்லதான் இருக்குறா!” என்றான் அழுத்தமாய்.
“என்ன சொல்ற?”
“சூர்யா என்கிட்ட தான் அந்த வேலையை கொடுத்தான். அவள கடையிலிருந்து கூட்டிட்டு வந்தது நான் தான். அபியும் என்னை பார்த்ததும், சத்தம் போடாம கூட வந்துட்டா. முதல்நாள் முழுக்க சூர்யா கூட இருந்தா. இப்ப அம்மாவும் அண்ணியும் அவளை பார்த்துக்கிறாங்க. அவ நல்லா இருக்கா…”
பூர்ணிமாவின் முகம் ஒரு கணம் மலர்ந்து, அடுத்த கணமே வாடிப்போனது.
“எத்தனை நாள் பார்த்துக்குவாங்க? ஒரு நாள்.. ரெண்டு நாள்.. அதுக்கப்புறம்? என் தங்கச்சியோட அருமை எனக்கு மட்டும்தான் தெரியும். எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குறது ரத்த பாசம். மத்தவங்களுக்கு அவ ஒரு கட்டத்துக்கு அப்புறம் சுமையாத்தான் தோண ஆரம்பிப்பா. அவளால மத்தவங்களுக்குத் தொந்தரவு வர்றதை என்னால தாங்கிக்க முடியாது. நான் இப்போவே அவன் வீட்டுக்குப் போறேன்.. அவன் கால்ல விழுந்தாவது அபியை அழைச்சிட்டு வந்து என்கூட வச்சுக்கிறேன்” என்று பிடிவாதமாக எழுந்தாள்.
“இப்போ நீ அங்க போனாலும் அவன் வீட்ல இருக்க மாட்டான். அவன் இல்லாத நேரத்துல நீ அங்க போய் என்ன பண்ணப் போற? சுவத்துட்ட பேசுவியா?”
“பொய் சொல்லாத பாலாஜி…”
“அவனுக்கு நான் உன்னை கூட்டிட்டு வரும்போதே இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருக்கு போல. அதான் ஒரு முக்கியமான பிசினஸ் மீட்டிங்னு சொல்லிட்டு அவசரமா வெளியூர் கிளம்பி போயிட்டான்…” என்றதும், முகம் வாடிப்போனாள் பெண்மயில்.
ஒரு சந்தேகத்தோடு, “எப்ப வருவான்?” என்றாள்.
“நாளைக்கு நைட்டு தான் சென்னைக்குத் திரும்பி வர டிக்கெட் புக் பண்ணி இருக்கிறதா சொன்னான்.”
“அப்போ.. இந்த கேப்ல நான் ஒரு தடவை மட்டும் என் அபியைப் பார்க்கட்டுமா பாலாஜி? ப்ளீஸ்.. தூரத்துல இருந்து பார்த்தா கூட போதும்” என்று கெஞ்சினாள்.
பாலாஜி கடுப்பாக, “சரி வா, பார்த்துடலாம்… ஆனா அந்த விஷயம் சூர்யாவுக்குத் தெரிஞ்ச அடுத்த செகண்ட், அவளை எங்கயாவது கொண்டு போய் மறைச்சு வச்சுடுவான். அப்புறம் உன்னால கடைசி வரை அவளைக் கண்டுபிடிக்க முடியாது. அபிக்கும் தேவையில்லாத சிரமம். இதெல்லாம் நடக்கணும்னா உடரே வா…” என்றதும், பூர்ணிமா அப்படியே சோர்ந்து போய் மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள். அவன் சொல்வதில் இருக்கும் உண்மை அவளை நகர விடாது தேங்கி நிற்க வைத்தது.
“நாளைக்கு வரைக்கும் நீ கண்டிப்பா பெட் ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லிருக்காங்க. முதல்ல நீ உன் உடம்பைத் தேத்திட்டு வா. அப்பதான் அவனோட ஆட்டத்தைத் தாங்குறதுக்கு உனக்குத் தெம்பு இருக்கும். இன்னைக்கு நைட்டு உனக்குத் துணையா இருக்க யாரையாவது இங்க வரச் சொல்றேன். எதையும் யோசிக்காம ரெஸ்ட் எடு…” என்று கூறிவிட்டு, அவளுக்குத் தேவையான மருந்துகளை மேஜை மீது வைத்துவிட்டு வெளியே சென்றான்.
பூர்ணிமா ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த வானத்தைப் பார்த்தாள். சூர்யா இல்லாத அந்த ஒரு நாள் அவளுக்குக் கிடைத்த விடுதலையா? அல்லது, அபி இருக்கும் இடம் தெரிந்தும் அவளை பார்க்க முடியாமல் தவிக்கும் தண்டனையா என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால், தன் தங்கையை மீண்டும் மார்போடு அணைத்துக் கொள்ளும் அந்த ஒரு தருணத்திற்காக, எத்தகு நரகத்தையும் தாங்கிக் கொள்ளத் தயாரானாள் அந்தப் பேதை.
பொழுது மெல்ல நகர்ந்து இரவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஏழு மணி இருக்கையில், கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. பாலாஜியின் அம்மாவோ அண்ணியோ வருவார்கள் என்று எதிர்பார்த்துத் திரும்பிய பூர்ணிமாவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
“டடாய்ங்!” என்ற சத்தத்துடன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் தனுஜா. நெற்றியில் சரிந்து விழும் முடிகளுடன், துறுதுறுவென ஓடும் விழிகளுமாக, ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போலத் துள்ளிக் குதித்து பூர்ணிமாவின் கட்டிலருகே வந்தாள் அவள்.
அறிமுகம் இல்லாத அந்த பெண்ணை விழி விரித்து பார்த்த பூர்ணி, ‘ரூம் மாத்தி வந்துட்டாளா?’ எனும் குழப்பத்தோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹலோ அண்ணி! நான் தான் தனுஜா. ஆர்யாவோட பெஸ்ட் பிரண்ட், அப்புறம் நம்ம ‘உம்மணாமூஞ்சி’ பாலாஜியோட ஃபியூச்சர் வைஃப்!” என்று சொல்லிக்கொண்டே, சட்டெனப் பூர்ணிமாவின் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.
பூர்ணிமா மிரண்டு போய், “யாரு.. பாலாஜியோட…” என்று இழுக்க,
“அட, அவன் இன்னும் சம்மதம் சொல்லல அண்ணி. ஆனா நான் சொல்லிட்டேன்ல! அப்புறம் என்ன? இன்னைக்கு இல்லனாலும் நாளைக்கு அவன் என் பின்னாடி தான் சுத்தி ஆகணும்” என்று சொல்லிவிட்டு, கையில் இருந்த பெரிய பையை மேஜை மீது வைத்தாள்.
“பாலாஜி தான் போன் பண்ணி, ‘என் சிஸ்டர் ஹாஸ்பிடல்ல இருக்காங்க, கூட இருந்து பார்த்துக்க ஆள் இல்ல. நீ வர்றியா? ப்ளீஸ், இந்த ஹெல்ப்க்காக நீ எது கேட்டாலும் பண்றேன்!’ன்னு சொன்னான். சும்மா நாள்ல என் பக்கத்துல கூட வர மாட்டான். திடீர்னு அந்த ஆடு தானா வந்து தலைய கொடுக்குது. பிரியாணி போடாம விடலாமா?!” என்று அவள் அங்கலாய்த்த விதத்தில், பூர்ணிமா அவளை அறியாமலேயே மெலிதாகச் சிரித்துவிட்டாள்.
“அட! சிரிக்கும்போது உங்க முகம் குத்துவிளக்கு மாதிரி பிரகாசமா இருக்கு. இருந்தாலும், அந்த உம்மணாமூஞ்சிக்கு இவ்வளவு அழகான தங்கச்சிய அந்த ஆண்டவன் படைச்சிருக்க கூடாது. பேசாம நீங்க இனிமே என் குடும்பத்துக்கு ஷிஃப்ட் ஆகிடுங்க” என்று பேச்சைத் தொடர்ந்தாள் தனுஜா.
மூச்சு விடாமல் தன் வரலாறு பற்றி பேச, ‘இடைவெளியே விடாமல் பேசுகிறாளே. இவளுக்கு வாய் வலிக்காதா?’ என்று இருந்தது பூர்ணிமாவுக்கு.
“உங்க மைண்ட் வாய்ஸ் நான் கேட்ச் பண்ணிட்டேன். அதனால இனி நான் பேசலை!” என்று வாயில், பொய்யாய் ஸிப் போட்டுக் கொண்டாள்.
“அப்படியெல்லாம் இல்ல…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே, அவள் தன் பையில் இருந்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்துவைக்க ஆரம்பித்துவிட்டாள்.
“இது ஆப்பிள் ஜூஸ், உங்க உடம்புக்கு நல்லது. இது சமோசா, என்னோட வயித்துக்கு நல்லது! அப்புறம் இது ஒரு குட்டி டெடி பியர் கூட கொண்டு வந்திருக்கேன். உங்களுக்குத் துணையா இருக்க” என்று ஒரு பொம்மையைப் பூர்ணிமாவிடம் நீட்டினாள்.
“பொம்மையா? இது எதுக்கும்மா?” என்று குழப்பமாக கேட்க,
“தனியா படுத்திருக்குறப்போ போர் அடிக்கும்ல? அப்போ இந்த டெடி பியரை உங்க எனிமினு நினைச்சு நல்லா நாலு மிதி மிதிங்க, மனசு லேசாயிடும்!” என்று அவள் கண்ணடிக்க, பூர்ணிமா அதை சூர்யாவென ஓர் நொடி நினைத்துவிட்டாள்.
அடுத்த கணமே குப்புக்கென சிரித்துவிட்டாள். தன் சிரிப்பு சப்தத்தை தானே மறந்திருந்த பேதை, முதல்முறை அதை தன் செவியால் கேட்டாள். அவள் மனதில் இருந்த பாரமெல்லாம் மெல்லக் கரைவதைப் போல இருந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் தனுஜா அந்த இடத்தையே தன் வசப்படுத்தினாள்.
செக்கப் செய்ய வந்த நர்ஸிடம், “அக்கா, உங்க ஹேர் ஸ்டைல் சூப்பரா இருக்கு. எந்த பார்லர் போறீங்க?” என்றாள்.
ஊசி போட வந்த ஆண் டாக்டரிடம், “டாக்டர், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. இன்ஜெக்ஷன் போடுறப்போ மட்டும் கொஞ்சம் சிரிச்சுட்டே போடுங்க, எதிர்ல இருக்குறவங்களுக்கு போட்டதே தெரியாது” என்று ஐஸ் வைத்தாள்.
அறையை சுத்தம் செய்ய வந்த பாட்டியிடம் போய், “பாட்டி, உங்க வீட்டுக்காரர எனக்கு இன்ட்ரடியூஸ் பண்ணுங்க. எனக்கு கடலை போட ஆளே இல்ல” என்று கலாய்த்தாள்.
ரோந்து பணியில் இருந்த செக்யூரிட்டியிடம், “உங்களுக்கு தம்பி இருந்தா, எனக்கு அவனை செட் பண்ணி விடுறீங்களா? என் பாய் ஃப்ரெண்ட் பாலாஜிக்கு அப்படியாச்சும் பொசசிவ் ஃபீலிங் வருதான்னு பார்க்கலாம்…” என்று வம்பு வளர்த்து, அந்த இடத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் மாற்றிவிட்டாள்.
ஒன்பது மணிக்கு டியூட்டி டைம் முடிந்ததும் கிளம்பும்போது, எல்லோரும் அவளிடம் வந்து டாட்டா சொல்லிவிட்டு போனார்கள். பூர்ணிமா அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏன் அண்ணி என்னை முறைச்சு பார்க்கிறீங்க?”
“எப்படி தனுஜா உன்னால இவ்வளவு கலகலப்பா இருக்க முடியுது?”
தனுஜா அவள் அருகில் அமர்ந்து, “வாழ்க்கை ரொம்ப சின்னது அண்ணி. அழுதுட்டே இருந்தா இருக்குற ஆயுசுல பாதி முடிஞ்சுடும். கஷ்டம் எல்லாருக்கும் தான் இருக்கும். இப்போ பாருங்க, பாலாஜி என்னை மதிக்கவே மாட்டான். இன்னிக்கு ஒரு வேலை ஆகணும்னு கால் பண்ணி கூப்பிடுறான். அதுக்காக நான் சாப்பிடாமவா இருக்கேன்? பாருங்க.. மூணாவது சமோசாவை முடிக்கப் போறேன்!” என்று கையில் பாதியிருந்த சமோசாவைக் காட்டினாள்.
அவளுடைய அந்த மழலை கலந்த பேச்சும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் குணமும் பூர்ணிமாவுக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தது. இரண்டு நாட்களாக தன் தங்கையை நினைத்து பாரமேறி இருந்த நெஞ்சம், இப்போது தனுஜாவின் சேட்டைகளால் சற்று இலகுவாக மாறியிருந்தது.
“தூங்குங்க அண்ணி. கனவு உலகத்துல நாம தான் இந்த உலகத்துக்கே ராணி. சொல்ல மறந்துட்டேனே, நான் கனவுல பாலாஜியையும், என்னையும் சேர்த்து வச்சு அடிக்கடி டூயட் பாடுவேன். சத்தம் கேட்டுச்சுனா காதுல பஞ்சை வச்சுக்கோங்க. என் கனவை மட்டும் கலைச்சு விட்றாதீங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்!” என்று அவள் மெல்லிய குரலில் கிசுகிசுக்க, சிரித்துக் கொண்டே கண்களை மூடினாள் பூர்ணிமா.
பல வருடங்களாய் இருள் மட்டுமே நிறைந்திருந்த அவள் மனதில், ஒரு தென்றல் போல நுழைந்திருந்தாள் தனுஜா. மறுநாள் காலை, காய்ச்சல் முழுவதுமாகக் குறைந்து, முகம் தெளிந்திருந்தது.
நர்ஸ் வந்து பூர்ணிமாவைப் பரிசோதித்துவிட்டு, “பரவாயில்லையே, இந்த பொண்ணு நேத்து இருந்த நிலைமைக்கு, ரெண்டு நாள் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கும்னு நினைச்சேன். இப்ப நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. உங்க அண்ணன் கேட்டபடி ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் பூர்ணிமா” என்று சொன்னபோது, தனுஜா அங்கேயே ஒரு குட்டி குத்து டான்ஸ் போட்டு தரையை அதிர வைத்தாள்.
நர்ஸ், “எம்மா… எம்மா… பார்த்து, தரையை பேத்துகிட்டு அடுத்த ஃப்ளோர் போயிடாத…” என்று கிண்டல் செய்துவிட்டு போனார்.
“பார்த்தீங்களா அண்ணி! என்னோட பாசிட்டிவ் எனர்ஜி உங்களை ஒரே நைட்ல குணப்படுத்திருச்சு. இனிமே கஷ்டத்தை நினைச்சு பயப்படக்கூடாது, ஓகேவா?” என்று தனுஜா அவளது கையை அழுத்திப் பற்றினாள்.
பூர்ணிமா முதன்முறையாகத் தன்னுள் ஒரு துணிச்சலை உணர்ந்தாள். ஆம், அழுது புலம்புவதால் எதுவும் மாறப்போவதில்லை. அந்த மூன்று மாத காலத்தை எதிர் கொண்டு சமாளிக்க அவள் முடிவு செய்தாள்.
மாலை ஆனதும் டிஸ்சார்ஜ் நடைமுறைகளை முடிக்கப் பாலாஜி அங்கே வந்தான். தனுஜாவைக் கண்டதும் அவன் முகம் வழக்கம் போலக் கல்லாய் மாறியது.
ஆனால் தனுஜா அதைச் சட்டை செய்யாமல், “வாங்க அத்தான்! அண்ணியைக் கூட்டிட்டுப் போக காரை ரெடி பண்ணிட்டீங்களா? இல்ல நானே என் ஸ்கூட்டில கூட்டிட்டு போகட்டுமா?” என்று வம்பு இழுக்க, பாலாஜி மௌனமாகப் பூர்ணிமாவிடம் மருந்துகளை ஒப்படைத்தான்.
“ஹலோ, அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? அட்லீஸ்ட் எனக்கு ப்ராமிஸ் பண்ணது ஞாபகம் இருக்குதுல?”
“ப்ராமிஸா? நானா?”
“சரி விடு, என்கிட்ட நீ பேசினது எல்லாமே ரெக்கார்டுல இருக்கு. நீ என்னை நம்ப வைச்சு துரோகம் பண்ணத பத்தி நான் உன் பாஸ் கிட்ட பேசிக்கிறேன்…” என்றதும் பாலாஜியின் முகம் கலவரமானது.
“வர்ற சண்டே, உன்னை வெளியில கூட்டிட்டு போறேன். ரெடியா இரு…” என்றான் வேண்டா வெறுப்போடு.
“அது!… நான் சனிக்கிழமை ராத்திரி கால் பண்றேன் அத்தான். அதுவரைக்கும் நீ ஃப்ரீ… அண்ணி, போயிட்டு வர்றேன். என்னோட நம்பர் அத்தான்ட்ட இருக்கும். வாங்கிக்கோங்க, நீங்க எப்ப வேணும்னாலும் பேசலாம்” என்று கூறிவிட்டு, துள்ளி ஓடினாள்.
அவள் போகும் வழியெல்லாம், நேற்று அவளோடு பழகி ஆட்கள், சிரித்த முகத்தோடு வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதை பாலாஜியும் சின்ன சிரிப்போடு ரசித்துப் பார்க்க, பூர்ணிமா அதைக் கொண்டே அவன் மனதை புரிந்து கொண்டாள்.
🪷🪷🪷🪷🪷
பூர்ணி துணிச்சலா, சமாளிக்க முடிவு பண்ணதெல்லாம் ஓகேதான்! அவன் வந்ததும் இந்த முடிவு புஸ்வானம் ஆகாம இருக்கணும் 🙏🙏🙏
