உயிராக வந்த உறவு – அத்தியாயம் 1

அத்தியாயம் 1

மழை மெதுவாக பெய்து கொண்டிருந்தது. ரயில்வே ஸ்டேஷனின் மேற்கூரை மேல் விழும் துளிகள்,அவளின் மனத்தில் தேங்கி இருந்த நினைவுகளைப் போல

ஒன்றொன்றாக தரையில் சிதறிக்கொண்டிருந்தன.

அவள் தாரணி…

கையில் ஒரு ஆண் குழந்தையுடன் அமர்ந்து இருந்தாள். அவளது மடியில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்தது அந்தப் பிஞ்சு குழந்தை.

அவளுக்குக் கிடைத்த ஒரே பாதுகாப்பு அந்தக் குழந்தைதான். 

அவள் யாரிடமும் பேசவில்லை.

ஆனால் அவளின் கண்கள் மட்டும்

அவளின் கடந்த காலத்தோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தன.மெதுவாக கண்ணீர் வழிந்தது.அதைத் துடைக்க கூட அவளுக்கு மனமில்லை.ஏனெனில் அந்த கண்ணீரில்வலி மட்டும் இல்லை.அவள் வாழ்ந்த காதலும் கலந்து இருந்தது.

பயணிகள் கவனத்திற்கு என்று வண்டி எண் சொல்லத் தொடங்கிய சத்தம் கேட்டதும் தன் கண்களில் இருந்த கண்ணீரை துப்பட்டாவால் துடைத்துவிட்டு மூக்கை உறிஞ்சியபடி மடியில் தூங்கும் ரித்விக்கை பார்த்தாள்.

சென்னை செல்லும் ரயில் இன்னும் சிறிது நேரத்தில் முதலாவது பிளாட்பார்மை வந்து அடையும் என சொன்னதும் அவள் நிமிர்ந்து பார்த்தாள். 

மூன்று வருடங்களுக்கு முன் “இந்த நகரம் எனக்கு வேண்டாம்”என்று சொல்லிவிட்டு உடைந்த இதயத்தோடு

வெளியேறிய அதே சென்னை.

அந்த நாள்,ரயிலிலிருந்து இறங்கும் போது அவள் திரும்பிப் பார்க்கவில்லை.திரும்பிப் பார்த்தால்

அவளின் மனம் உடைந்துவிடும் என்று தெரிந்தது.

அந்த நகரம் அவளிடம் காதலை கொடுத்தது.அதே நகரம்

அவளிடமிருந்து நம்பிக்கையையும் பறித்தது.ஆனால்,இப்போது அதே எல்லைக்கு திரும்ப செல்கிறாள் தன் மடியில் இருக்கும் பிஞ்சு குழந்தைக்காக..

அன்று அவள் வரும் போது இந்த வானமே அவளை நினைத்து கண்ணீர் சிந்தியதோ என்னவோ அன்று போல் இன்றும் அதே மழை,அதே வலி, ஆனால் அவள் கையில் ஒரு உயிர்.

“அம்மா…”என்று குழந்தை உறக்கத்தில் முணுமுணுத்தது.அந்த ஒரு வார்த்தை

தாரணியின் இதயத்தில் ஏதோ ஒரு  பக்குவத்தை அவளிடம் வர வைத்தது.

அவள் சென்னையை விட்டு வந்த மூன்று வருடங்களில் கண்ணீரோடு கடந்த நாட்கள் ஏராளம்.யாருக்காகவும் அழ முடியாத இரவுகள்.தனக்குள்ளேயே

வலியை அடக்கிக் கொண்ட

நூற்றுக்கணக்கான நிமிடங்கள்.

ஒருவனால் தான் அவள் இவ்வளவு காயப்பட்டது, அந்த ஒருவன் மீது கொண்ட காதலினால், ஆனால் இப்போதும் அதே காதல் தான்

அவளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்தது.

ரயில் வரப்போகும் அறிவிப்பு ஒலித்ததும் அவள் நிமிர்ந்தாள்.“இது தப்பா?” அல்லது தைரியமா?

பதில் தெரியவில்லை.ஆனால் ஓட வேண்டிய இடத்திலிருந்து வாழ வேண்டிய இடத்துக்கு திரும்பிப் போகும் தைரியம் இப்போது அவளிடம் இருந்தது.

மழை இன்னும் மெதுவாக பெய்துகொண்டிருந்தது.ஆனால் தாரணியின் மனதில் ஒரு தீர்மானம் தெளிவாக இருந்தது.கடந்த காலம்

ரணமாக இருந்தாலும்,அதே ரணமே

அவளை மீண்டும் எழச் செய்தது.

அந்த ரணத்தில் மீண்டும் விழ அவள் விரும்பவில்லை, வேகமாக எந்திரித்தவள் பக்கத்தில் விற்கும் தண்ணீர் பாட்டிலை ஒன்று வாங்கி தன் முகத்தை கழுவிய படி மீதி இருக்கும் தண்ணீரை மூடி வைத்து மற்றொரு கையால் குழந்தையை தூக்கிய படி நின்றாள். 

ரயில் வந்து நின்றது. அவள் மெதுவாக தன் இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்தாள். பெரியதாக எதுவும் பெட்டிகளை தூக்கி வராததால் ஒரு தோல் பையும், கையில் இன்னொரு பையுடன் ரித்விக்கை மடியில் அமர்த்தினாள்.

அவள் ஏறிய இரண்டு நிமிடங்களிலேயே ரயில் மெதுவாக நகரத் தொடங்கியது.

ஜன்னல் ஓர இருக்கையில் தாரணி அமர்ந்திருந்தாள்.மடியில் குழந்தை.

கண்ணாடி வழியே பின்னால் நகரும் ஸ்டேஷன், அவளின் வாழ்க்கையிலிருந்து விலகிய நாட்களைப் போல ஒன்றொன்றாக

மறைந்துகொண்டிருந்தது.

அவள் முகத்தை  ஜன்னலில் இருந்து மெதுவாக தன் எதிரே திருப்ப,அவள் எதிரே அவன் இருந்தான்.அதே முகம், அதே உயரம்.ஆனால் இடையில் மூன்று வருட மௌனம். அவள் மெதுவாக தன் விரல்களை நீட்டி தன் முன்னே இருந்த உருவத்தை தொட்டுப் பார்க்க அவள் இதழ்களில் வார்த்தை கூட வராமல் தடுமாறிக் கொண்டு இருந்தது..

திடீரென கதிரவனை கண்ட பனி போல் அவள் தொட்டதும் உருவம் கரைந்து விட்டது. இப்போது தான் அவளுக்கு தெளிவாகப் புரிந்தது.அவள் அவன் முன்னே இல்லை,இன்னும் அவள் மனதில் இருக்கிறான் என்று.. ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அவள் மனம் சம்மதிக்கவில்லை.நீட்டிய விரல்களை மடக்கியவாறு தன் நெற்றியில் கையை வைத்தபடி யோசிக்க தொடங்கினாலள்..

அவளுடன் பயணிகள் இருந்தாலும்

அவள் மனம் யாரும் இல்லாதது போல் தனியாகவே பயணம் செய்து கொண்டிருந்தது.ரயிலின் சக்கர சத்தம்

அவளின் நினைவுகளைத் தட்டியது.

மூன்று வருடங்களுக்கு முன்…

அதே ரயில்,அதே சீட்,ஆனால் அன்று

அவள் கையில் குழந்தை இல்லை.

மனத்தில் மட்டும் நூறு கேள்விகள்.

“நான் போய்ட்டா உனக்கு கவலை இல்லையா?”என்று கேட்ட அவளுக்கு

அவன் பதில் சொல்லவில்லை.அந்த மௌனம் தான் அவளை சென்னையிலிருந்து விரட்டியது.

“டீ… காபி…”என்று விற்பனையாளர் குரல் கேட்டதும் தான் தாரணி சற்றே சுயநினைவுக்கு வந்தாள். இப்போது

குழந்தையை பார்த்தாள்.அவன் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான்.

இந்த நிம்மதி எவ்வளவு போராட்டத்துக்கு பிறகு கிடைத்தது என்று அவளுக்கே தெரியும். 

கடந்த காலம் முழுக்க அவள் மனதில் ஒவ்வொரு நொடியும் வந்து கொண்டு இருக்க, அதிலிருந்து வெளியே வர சற்று சிரமம் தான்.. அவள் மனக்குமுறலை குழந்தை அறிந்ததோ என்னவோ உறங்கிக் கொண்டிருந்த ரித்விக் திடீரென விழித்து அவளைப் பார்த்து தன் மழலை மொழியில் விரல்களை நீட்டி ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தான். 

ரயில் வேகமாக ஓட, நினைவுகளும் அதே வேகத்தில் ஓடின. ஜன்னலுக்கு வெளியே மழை இன்னும் பெய்துகொண்டிருந்தது.

தாரணி மெதுவாக குழந்தையின் தலையைத் தடவினாள். இந்த பயணம் சென்னையை நோக்கி மட்டும் இல்லை. அவளின் கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்தை நோக்கிய ஒரு பயணம்.

…………………………………………………….

மறுபுறம் காலை ஏழு மணிக்கே

சாலைகள் விழித்துக் கொள்கின்றன.

ஹார்ன் சத்தங்கள், பஸ் பிரேக் சத்தம்,

ஆட்டோ ஓட்டுநர்களின் கூச்சல், எல்லாம் கலந்து ஒரு பரபரப்பான இசை.

சிக்னலில் நின்றிருக்கும் வாகனங்கள்.

கையில் காபி கப். முகத்தில் தூக்கத்தின் கடைசி சுவடு. மனதில்

“லேட் ஆகக்கூடாது” என்ற ஒரே கவலை.

ஐ.டி. பார்க் செல்லும் ரோடுகளில்

மனிதர்கள் வெள்ளம் போல் இருக்க,

சிலர் கனவுகளை சுமந்துகொண்டு.

சிலர் கடனை சுமந்து கொண்டு,

சிலர் பொறுப்புகளை..

பஸ்களில் தொங்கும் மனிதர்கள்,

லோக்கல் டிரெயினில் அடித்துக் கொள்ளும் மனிதர்கள், இரு சக்கர வாகனங்களில் கண்களில் பயமும்,

மனதில் அவசரமும்…

இந்த நகரத்தில் நேரம் யாருக்கும் காத்திருக்காது.

இந்த பரபரப்புக்குள் ஒரு பெரிய 

உயரமான கட்டிடங்கள், கண்ணாடி சுவர்கள்.கேட்கேட்டில் நிற்கும் செக்யூரிட்டி.உள்ளே நுழைந்தவுடன்

வெளி உலகம் துண்டிக்கப்படும்.

இது ஒரு அலுவலகம் மட்டும் அல்ல.

இது ஒரு உலகம்..

ஒவ்வொரு மாடியும் ஒழுங்கின் அடையாளம்.இங்கே நேரம் தாமதம் ஆகாது.வேலை தப்பாது.

தவறு செய்தால் மன்னிக்கப்படாது,

காலை ஒன்பது மணிக்குள்

அனைவரும் தங்கள் இடத்தில் இருக்க வேண்டும். ஒன்பது மணிக்கு மேல் ஒரு நிமிடம் ஆனாலே

காற்றில் கூட ஒரு பதற்றம் பரவும்.

ஏன் என்றால்?

ஆதித்யா தீரன் அலுவலகத்துக்குள் வந்திருப்பான். அவன் வரும் போது சத்தம் இருக்காது.ஆனால் அவன் வந்திருப்பதுஎல்லோருக்கும் தெரியும்.

கால்கள் தானாகவே நேராகும்.

முதுகுகள் நிமிரும்.மொபைல்கள் மறையும்,சிரிப்புகள் நிற்கும்.

அவன் இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய அதிகாரத்தில் இருப்பவன், இளமை ததும்ப பார்ப்பவர் மனதை பறிப்பவன், கன்னிப் பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன் என்றே சொல்லலாம்..

ஆனால் அனுபவத்தில் முதிர்ச்சி,அவன் பேசுவது குறைவு. செய்யும் வேலை அதிகம்..

கண்டிப்பு,அது அவனுக்குப் பழக்கம் அல்ல,அவனின் இயல்பு.

அவனின் ஒரு பார்வை மழைத்துளியைக்கூட பாறாங்கல்லை மாற்றும்.அந்த பார்வையில்

ஒரு கேள்வியும் இருக்கும்,

ஒரு தீர்ப்பும் இருக்கும்.

தவறு செய்தவர்களை

அவன் சத்தம் போட்டு கேள்வி கேட்க மாட்டான்.அந்த மௌனம் தான்

அதிக தண்டனை.

அவன் அழகு அதைப் பற்றி அலுவலகத்தில் பேசாத நாளே இல்லை.

சீரான தோற்றம்,அளவான உடல் அமைப்பு,கண்களில் ஒரு ஈர்ப்பு,

சிரிப்பு இல்லாத முகமே அவனுக்கு ஒரு தனி கவர்ச்சி. பெண்கள்

அவன் அருகில் பேசத் துணிய மாட்டார்கள்.ஆனால் அவனைப் பார்க்க

தினமும் ஏதாவது ஒரு காரணம் தேடுவார்கள்.

அவன் நடந்து போனால் பலர் பார்வைகள் அவன் மீது மோதும்.

ஆனால் அவன் ஒரு பார்வையையும் திருப்பிப் பார்க்க மாட்டான்.

அழகு அவனுக்கு ஒரு ஆயுதம் இல்லை.

அவன் அதைக் கவனிப்பதே இல்லை.

அவனுக்குப் பெண்–ஆண் என்ற வேறுபாடு இல்லை.வேலை மட்டுமே.

அவனைப் பற்றி யாரிடமாவது கேட்டால்

“Sir romba strict…”

“Heartless…”

“Machine மாதிரி…”

அப்படி சொல்வார்கள்.

அழகில் மயங்க வைக்கும் ஆண்.

அதிகாரத்தில் நடுங்க வைக்கும் முதலாளி.ஆனால்…

இந்த அலுவலகத்தில்

யாருக்கும் தெரியாத ஒன்று இருக்கிறது.

ஆதித்யா தீரன் ஒரு காலத்தில் காதலிக்க தெரிந்தவன் மட்டுமில்லை காதல் மன்னனாக வளம் வந்தவன். காதலில் பிஹச்டியை முடித்தவன் எனலாம்.அவன் முழுதாக ஒருத்தியின் மனதை படித்தவன். ஆனால் படிக்கும் போது பாதியிலேயே புத்தகம் தொலைந்தது போல், அவன் கையில் இருந்த காதல் புத்தகமோ எங்கேயோ நழுவி சென்று விட்டது..

அந்த காதல் இப்பொழுது எங்கேயோ

அவன் மௌனத்தின் அடியில்

புதைந்திருக்கிறதா என்று தான் தெரியவில்லை.. 

தேய்ந்த வெண்ணிலா எப்படி திரும்ப வளருமோ அது போல் இவனின் காதல் வளருமா ??

இல்லை தொலைந்ததை தேடி எந்த பயனும் இல்லை என்று தனக்கான உலகத்தில் வாழ்வானா பார்க்கலாம்..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page