வெந்து தணிந்த இதயம்-13

நா‌ன் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம் -13

 

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த யாழினியை பனி புகைமூட்டமாக வரவேற்றது. பாதுகாப்பாக தான் கையோடு கொண்டு வந்திருந்த சுவட்டரை அணிந்தவள் நேரே அங்கிருந்து ஆட்டோவைப் பிடித்து வீட்டை அடைந்தாள்.

 

அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டின் கதவைத் தட்டினால், அது முதல் தட்டிலேயே தானாகத் திறந்துகொண்டது. இவ்வளவு அலட்சியமாகக் கதவை திறந்து போட்டுவிட்டா இருவரும் உறங்குகிறார்கள்? என்ற யோசனையுடன் உள்ளே சென்றாள்.

 

சுலேக்கா பாட்டி கொட்டாவி விட்டபடியே அந்நேரம் பார்த்து சிறுநீர் கழிக்க எழுந்தவர், யாழினியைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்கொண்டார்.

 

எடுத்த எடுப்பிலேயே, “எவ்வளவு பணம்டி கொண்டு வந்த? உன் அம்மா நேத்து சாயங்காலம் முழுசும் என்னை தொலைச்சி எடுத்துட்டா. வா அவளை வந்துப்பாரு. ஒரு நிமிசம், நான் நைட்டு கதவை நல்லா பூட்டிட்டு தானே வந்து படுத்தேன்? நீ எப்படி உள்ள வந்த? என்று கேட்க, 

 

“ம்? உன் மூஞ்சி” என்றபடியே பயணப்பொதிகளை தான் நின்ற இடத்திலேயே கீழேப் போட்டவள், 

 

“சரியா பூட்டாம விட்டுட்டு வாயைப் பாரு. ஆமா நீ எனக்கு அனுப்பின லெட்டர் வரை தான் அம்மா எழுதியிருந்தாங்களா? அடுத்து அவங்க எழுதினதையெல்லாம் எங்க வச்சாங்கன்னு கவனிச்சியா?” என்று ஆர்வமாக வினவவும்,

 

“நேத்து நைட் அவ தூங்கினதும் தான் அவ இதுவரை எழுதினது எல்லாத்தையும் மொத்தமா வச்சி உனக்கு போட்டோ எடுத்து அனுப்பினேன். இனிமே வேணும்னா அவ எழுதினா தான் உண்டு” என்று சொல்ல, ஏமாற்றமாகியது யாழினிக்கு.

 

மீதி உண்மைகளை தன் தாயின் வாய் வழியாக அறியும் கொடுப்பினை தான் தனக்கு உண்டு போலும் என நினைத்துக்கொண்டு தன் அன்னை வசந்தியின் அறைக்குச் சென்றாள்.

 

“ஆமா அந்த லெட்டர்ல உன் அம்மா என்னடி எழுதியிருந்தா?” என்று அவளை பின் தொடர்ந்தவர், அவளைப்போலவே தானும் பிரேக்கடித்து நின்றார்.

 

இருவருக்குமே பேரதிர்ச்சி. அவர்களை ஏமாற்றிவிட்டு வெளியே எங்கேயோ ஓடிவிட்டிருந்தார் வசந்தி. 

 

இந்தப் பனியில் எங்கே சென்றிருப்பார் என‌ அக்கம் பக்கம் சுற்றி முற்றி தேடிய இருவரும் தங்கள் தெருக்களை தாண்டிப்போய் தேடத் துவங்கினார்கள்.

 

ஒரு மணிநேரத் தேடலுக்குப்பின் சுலேக்கா கால் வலியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் உட்கார, யாழினி கிழக்குத் திசையைப் பார்த்து, “அம்மா.. அம்மா” என்று அழைத்தபடியே வசந்தியிடம் சென்று அவரின் தோள்களை கட்டிக்கொண்டாள்.

 

அவரோ புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல், “யார் நீ? எனக்கு என் குணசீலன் கிட்டப்போகனும். குணசீலன் குணசீலன்” என்று தேடிக் கொண்டிருந்தார். 

 

பதறிப்போன இருவரும் உடனே அவரை மருத்துவமனை கொண்டுபோய் சேர்க்க, அவரை சோதித்த மருத்துவர், வசந்திக்கு புத்தி பேதலித்து விட்டதாகக் கூறினார். அது சரியாகும் வரை அவர் மனநல காப்பகத்தில் இருப்பது தான் சிறந்தது என்று உடனே அவரை மனநலகாப்பகத்திற்கும் மாற்றினார்.

 

இப்படியொரு கொடுமையை எதிர்பார்த்திராத யாழினிக்கோ கண்கள் இரண்டும் அருவிகளாயின. அவருக்காகத் தான் அவள் இவ்வளவு நாள் ஒரு வீட்டில் வேடமிட்டதே. ஆனால், கை நிறைய பணமிருந்தும் அவளால் அவரை குணப்படுத்த முடியவில்லையே என்று புலம்பித் தீர்த்தாள். 

 

அதுவும் பச்சை சீருடையில் தன் அன்னையை பார்த்ததும் அழுது கதறினாள். சுலேக்கா பாட்டி தான் அவளை அருகிலிருந்து தேற்றிக் கொண்டிருந்தார்.

 

அப்போது மனநல காப்பகத்தின் வரவேற்பறையில் இருந்த தொலைக்காட்சியில் பிரதமர் இல்லத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் நிகழ்ச்சி மறுஒளிபரப்பாக, பற்றிக்கொண்டு வந்தது யாழினிக்கு.

 

இன்று இந்தக் கொடுமை நடக்கப்போவதால் தான் தன் அன்னைக்கு எதன் மீதும் பற்றில்லாமல்போய், தன்னையே மறக்கும் நிலைக்கு அவர் போய்விட்டாரோ என்று மனதுள் கதறித் துடித்தாள்.

 

ஒரு கட்டத்தில் அழுகை முழுதும் ஓய்ந்து, தன் அன்னையின் இந்நிலைக்கு காரணமான ரத்னவேல் பாண்டியனின் ஆணவத்தை அடியோடு சரிக்கும் வெறி அவளுள் கொழுந்துவிட்டு எரிந்தது.

 

தன் அன்னையின் கடிதத்தின் வழியே தன் தந்தையின் இறப்புக்கு காரணம் அவர் தான் என்று நினைத்தவள் அதற்கும் சேர்த்து அவரை பழிவாங்கத் துடித்தாள்.

 

அதில் ஒரு முடிவோடு எழுந்து நின்றவள் சுலேக்காவின் கையில் கொஞ்சம் பணத்தினை திணித்தாள். 

 

அவர் புரியாமல் பார்க்க, “நான் மறுபடியும் தமிழ்நாட்டுக்கு போறேன் கிழவி. இங்க எனக்குனு இருந்த ஒரே சொந்தம் என்‌ அம்மா மட்டும் தான். அவங்களுக்கும் இப்படி ஆனப்பின்னாடி நான் யாரை நம்பி இங்க இருக்க முடியும் சொல்லு?” என்றதும், அதிர்ந்துபோனார் சுலேக்கா.

 

அவள் கூறியதைக்கேட்டு அவருக்கு தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

 

“நான் பணம் பணம்னு அலையுறவ தான். ஆனா என்னைக்காவது உன்னையும் உன் அம்மாவையும் விட்டு தனியா வாழ்றதைப் பத்தி நான் யோசிச்சிருக்கேனாடி? உனக்கு உன் அம்மா மட்டும் தான் சொந்தம்னா, எனக்கு நீங்க ரெண்டு பேர் மட்டும் தான்டி சொந்தம். இனிமே உனக்கு யாரும் இல்லைங்கற மாதிரியெல்லாம் பேசாத. பேசின‌ தோலை உரிச்சிருவேன். ஆமா தமிழ்நாட்டுல யார் இருக்கான்னு அங்கப்போற?” என்று அதட்டியதும்,

 

“அதில்ல கிழவி. நீயும் எத்தனை நாளைக்கு தான் எனக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் சொல்லு? நானோ வயசுப்பொண்ணு. நாளைக்கே உனக்கும் அம்மா மாதிரி எதாவது ஆகிருச்சினா? நான் மொத்தமா உடைஞ்சுப் போயிருவேன். அதான் நான் என் வாழ்க்கையோட அடுத்தக் கட்டத்துக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் கிழவி. மாப்பிள்ளை வேற யாரும் இல்ல. நீ முன்னாடி போன்ல சொன்னியே பலசாலியா, அழகா, பணக்காரனா இருந்தா கல்யாணம் பண்ணிக்கோனு. அவர் தான். இப்ப இருக்கற சூழ்நிலைல உன்னை என்னால அங்க கூட்டிட்டுப் போக முடியாது. ஆனா இன்னும் கொஞ்ச நாள் தான். அதுக்கப்பறம் நான் உன்னை என்னோடவே வச்சிக்கறேன்.” என்று வாக்களித்தாள்.

 

அவளின் பேச்சில் திகைத்துப்போனவரோ, “நீ உண்மையா தான் சொல்றியாடி? அந்தக் குடும்பம் உன்னை ஏத்துக்குமா? எல்லாத்துக்கும் மேல அந்தப் பையன் நல்லவன் தானா? முதல்ல அவனை உனக்கு பிடிச்சிருக்கா?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கியதும், விரக்தியாக சிரித்தாள் யாழினி.

 

மனதிற்குள்ளோ, ‘என் அம்மாவுக்கு கிடைச்ச கொடுப்பினை எதுவும் எனக்கு கிடைக்கலை கிழவி. காதலே இல்லாம வெறும் பழி உணர்வுக்காக மட்டும் தான் நான் கல்யாணம் பண்றேன்’ என்றாள்.

 

பின், அதையே சொன்னால் அவர் தன்னை விடமாட்டார் என்பதால், “நாளாக நாளாக எல்லாரும் என்னை ஏத்துக்குவாங்க கிழவி. அப்பறம் அவர் கொஞ்சமே கொஞ்சம் நல்லவர் தான். அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். எனக்கும் தான்.” என்றாள் முயன்று சிரித்து.

 

இருப்பினும் மனம் கேட்கவில்லை சுலேக்காவிற்கு. 

 

“இங்கப்பாரு உனக்கு எப்ப எந்த பிரச்சனை வந்தாலும், உனக்கு நான் இருக்கேங்கிறதை நீ மறந்திடக்கூடாது. சரியா?”  என்று அவளின் கன்னங்களை ஏந்திக் கூறினார்.

 

யாருக்கு கிடைக்கும் இப்படியொரு உறவு? அந்த வார்த்தைகளில் தெரிந்த உண்மையில் அவரை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தாள் யாழினி.

 

பின், தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, “நான் இப்ப பிளைட் ஏறினா மட்டும் தான் சரியா நேரத்துக்கு அங்கப்போய் சேர முடியும். நீ அடிக்கடி அம்மாவை இங்க வந்து பார்த்துக்கோ சரியா? ஏதாவது பணம் தேவைனாலும் சொல்லு. நான் அனுப்பி வைக்கிறேன்.” என்று சொல்லவும்,

 

“நீ பயப்படாமப் போடி. நான் இருக்கேன்ல? எல்லாம் இங்க வந்து பார்த்துக்கறேன்.” என்று உறுதியளித்தவர், அவளுடனே வீட்டிற்கு வந்து அவளின் பயணப்பொதிகளை தயார் செய்தார். 

 

ஆனால், அப்போது யாழினி அறியவில்லை. அவள் பயணம் செய்யவிருக்கும் அதே விமானத்தில் தான் ரத்னவேல் பாண்டியனும் தனது விருதை பெற்றுக்கொண்டு குறிஞ்சிகுளம் திரும்பவிருக்கிறார் என்று.  

 

அவரின் கண்களில் படாமலே அப்பயணத்தை முடித்தவள் மதுரை விமானநிலையத்தில் முகத்தை மறைத்தபடியே வெளியேறினாள். 

 

ஆனால், அங்கும் ரத்னவேல் பாண்டியனை மாலை மரியாதையுடன் வரவேற்கும் விதமாய் ஒரு கூட்டத்தை கூட்டி வைத்திருந்தான் பத்ரவேல் பாண்டியன். 

 

அதை வெறுப்பாகப் பார்த்தவள், அவனிடமும் தான் பிடிபட்டுவிடக் கூடாதென்று மறைவாக சென்று அங்கிருந்த ஒரு‌ வாடகைக்காரில் ஏறினாள்.

 

நேரே கண்ணியமானதொரு தங்கும் விடுதிக்குச் சென்று அறையெடுத்து தங்கியவள், முதல்வேலையாக அலைபேசியில் சஷ்டிக்கு‌ அழைப்பு விடுத்து தனது திட்டத்தை விவரித்தாள்.

 

எதிர்புறம் இருந்தவனோ நிதானத்துடன் இருந்தான்.

 

“அவசரப்படாத யாழினி. இதுல உன் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு. எனக்கு நல்லது செய்யப்போய் நீ மாட்டிக்கக்கூடாது. உன் சம்பந்தப்பட்டவங்க நாளைக்கு என் சட்டைக்காலரை பிடிச்சிரக்கூடாது. இதுக்கு நீ முழுமனசோட தான் சம்மதிக்கிறியா?” என்று அளவளப்போடு கேட்டதும், யாழினி அவனுக்கு புரியும்படி எடுத்துச்சொல்லி சம்மதிக்க வைத்தாள். 

 

இவையெல்லாம் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகத்தில் இருந்தவனுக்கு தனது குடும்ப மானத்தை விடவும் தெய்வானையின் மீதிருந்த காதலே மேலோங்கித் தெரிந்ததால் அவளின் இத்திட்டத்திற்கு சிறு அணிலாய் உதவி புரிய சம்மதித்தான்.

 

ஆனால், இவையெதையும் அறியாமல் குறிஞ்சி குளமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. பத்மஸ்ரீ விருதோடு ரத்னவேல் பாண்டியன் காரில் தன் வீட்டின் முன்பு வந்து இறங்கவும், சண்டைமேளம் முழங்கி அனைவரின் காதுகளையும் கிழித்தது.

 

சாவித்ரியும் பார்வதியுமாய் சேர்ந்து வந்து தங்கள் கணவருக்கு ஆரத்தி எடுக்க, பணத்தை வாரி இறைத்தான் பத்ரி. வாயெல்லாம் பல்லாக நின்ற ரத்னவேல்‌ பாண்டியனுக்கு தெரியவில்லை நாளை இதே சிரிப்பு தன் உதடுகளில் இருந்து காணாமல் போகப்போகிறதென்று.

 

தன் மூத்த மகனின் திருமணத்தை கோலாகலமாக நடத்த அவர் தீட்டியிருந்த திட்டத்தின்படி தான் அனைத்து ஏற்பாடுகளும் செம்மையாக செய்யப்பட்டிருந்தது. 

 

வீதிதோறும் சீரியல் பல்புகள், வாழை மர இணைகள், பந்தல்கள், மைக்செட் தோரணங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் என்று அமர்க்களப்படுத்தச் சொல்லியிருந்தவர், மறுநாள் மூன்று வேளைக்கும் ஊருக்கே விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

 

வரவேற்பறையில் மனம் முழுவதும் பரவசமாக உட்கார்ந்திருந்தவரிடம் பத்ரி ஒரு பையை கொண்டு வந்து நீட்டினான்.

 

யோசனையாக அதனை வாங்கிப் பார்த்தவர் உள்ளே காணாமல் போன தாலிகளனைத்தும் இருப்பதைக் கண்டு புருவங்களை நெற்றிக்கு உயர்த்தினார்.

 

பின், “சாதிச்சிட்ட பத்ரி. சாதிச்சிட்ட. என் ஜாதகத்துல சுக்கரன் இன்னைக்கு உச்சத்துல இருக்கான் போல. அதான் நல்ல நல்ல விசயமா‌ என் கண்ணு முன்னாடி நடந்துக்கிட்டிருக்கு” என்று ஆகாயம் பறந்தார்.

 

மேலும், பத்ரியின் பராக்கிரமங்களை சுற்றியுள்ளோரிடம் மெச்சினார். 

 

“பார்த்தீங்களாடா? என் புள்ளை எப்படி காணாமல் போனதையெல்லாம் கண்டுபிடிச்சிட்டான்னு? சந்தேகமே இல்ல. எனக்கு அப்பறம் இனி எல்லாமே இவன் தான்” என்று பத்ரியை பிள்ளையாய் பெற்றதற்கு உச்சி குளிர்ந்தார்.

 

அதை வேடிக்கைப் பார்த்த சாவித்ரிக்கு ஆனந்தக்கண்ணீர் வந்ததென்றால் பார்வதிக்கோ வயிறு கொழுந்துவிட்டு எரிந்தது. 

 

தன் மகன் சஷ்டியை ஓரவஞ்சனையாக ஒதுக்கி வைத்து அந்த பத்ரியை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவதை அவரின் தாய் மனம் ஏற்கவில்லை. தன் கையிலிருந்த பலகாரத் தட்டை நங்கென்று டீபாயில் வைத்துவிட்டு உள்ளேப்போனார்.

 

அந்த சத்தத்தில் தரைக்கு வந்த ரத்னவேல் பாண்டியனோ, “ஆமா இந்த தாலிங்களையெல்லாம் எப்படி கண்டுபிடிச்ச பத்ரி? இந்தத் திருட்டை துணிகரமா செஞ்ச திருட்டுப்பயல் யாரு? அவன் யாராயிருந்தாலும் சரி. அவனை நான் துவம்சம் பண்ணாம விடப்போறதில்ல.” என்றார் தொடையைத்தட்டி.

 

தொடரும்…

லைக் கரோ, 

கமெண்ட் கரோ 

ஷேர் கரோ தங்கோம்ஸ்:)

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,857 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page