வெந்து தணிந்த இதயம்-14

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-14

 

சற்றுமுன் இருந்த மகிழ்ச்சி மறைந்து வில்லத்தனமாய் பேசுபவரை பத்ரவேல் பாண்டியன் சமயோஜிதமாய் சமாளித்தான். 

 

அவரிடம் யாழினியை மாட்ட வைக்க அவனுக்கு விருப்பம் இல்லாததால் ஒரு பொய்யைத் தயாரித்துக் கூறினான்.

 

“அதுவந்து எல்லாம் நம்ம சாமியார் மகிமையினால தான் ப்பா. நான் நீங்க என்னை நகைங்கல்லாம் தொடர்ந்து காணாமப்போறது வச்சி கோபமா பேசினதும், ரொம்ப மன உளைச்சலுக்கு உள்ளாகிட்டேன். எந்நேரமும் அதைப் பத்தியே யோசிச்சிட்டு இருந்தப்ப தான் சாமியார் ஞாபகம் வந்தது. அவரைப் பத்தி‌ நம்ம பசங்கக்கிட்ட விசாரிக்கச் சொன்னேன். அதிர்ஷ்டவசமா அவர் நம்ம ஊருக்கு பக்கத்துல தான் இருக்கறதா தெரிஞ்சது. நேரா கிளம்பிப் போயிட்டேன். ரொம்ப நேரமா தியானம் பண்ணினவரு கண்ணை திறந்ததும் முதல் வார்த்தையா நான் இப்ப சொல்றதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது. நீயேப் போய் தான் உன் கையால எடுக்கனும். காணாமப்போன தாலிங்கல்லாம் உங்க ஊர் குளத்துல தான் முங்கிக்கிடக்கு. போய் எடுத்துக்கோனு‌ சொன்னாரு. நானும் நீங்க டெல்லிக்குப் போன சமயமா பார்த்து தாலிங்களை எடுத்துட்டேன்” என்றதும், 

 

கும்பிடு போட்டு முருகனை வேண்டிக்கொண்ட ரத்னவேல் பாண்டியன், “ஆமா அதை திருடினது யாருனு கேட்டியா?” என்று ஆர்வமாகக் கேட்டார்.

 

பத்ரி எந்த விதமான தயக்கமுமின்றி மீண்டுமொரு பொய் சொன்னான்.

 

“அது வந்துப்பா இதை திருடினவன் பெரிய முருக பக்தனாம். அவனை காட்டிக் கொடுத்தா முருகன் அவரை மன்னிக்க மாட்டாராம். அதனால பொருள் இருக்க இடத்தை மட்டும் சொல்றேனு சொன்னாரு. நானும் கிடைச்சவரை லாபம்னு அவரை தூண்டித் துருவல.” என்று நிஜம் போல் கண்ணை விரித்து சொன்னான்.

 

ரத்னவேல் பாண்டியன், “ச்சே! திருடினவன் யாருனு தெரியாமப்போச்சே” என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, 

 

அருகில் நின்ற ஜெயந்தி, “ஆமா சாமியார்கிட்ட தாலிங்க காணாமப்போனதை மட்டும் சொல்லியிருக்கியே, நம்ம வீட்டுல இருந்த பரம்பரை நகைங்க காணாமப் போனதை பத்தி சொல்லலையா? இதைவிட அது தான்டா இப்ப முக்கியம்.” என்று சொல்லி தனது புத்திசாதூர்யத்தை நிரூபித்தார். 

 

ரத்னவேல் பாண்டியன், “சரியா சொன்ன ஜெயந்தி. ஆமா அதைப் பத்தி கேட்கலையா பத்ரி?” எ‌ன்றதும்,

 

‘அய்யோ! அக்கா நீ வேற ஏன் என்னை கோர்த்து விடுற?’ என்று மனதிற்குள் புலம்பியவன், 

 

“ஆமா உன் வீட்டுக்காரர் எப்ப ஃபாரின்ல இருந்து வர்றாரு? அப்பாவே வந்தாச்சி. இதுல மாமாவுக்கென்ன இவ்வளவு தாமதம்? அவருக்கு அப்பா மேல அவ்வளவு குளிர் விட்டுப்போச்சா?” என்று பேச்சை மாற்றியதும், 

 

“அவருக்கு கடைசி நேரத்துல வேலை கொஞ்சம் இழுத்துருச்சாம். இன்னும் ரெண்டு மணி நேரத்துல வீட்டுல இருப்பாரு. நீ பேச்சை மாத்தாம விசயத்தை சொல்லு.” என்று கழுத்தில் கத்தி வைத்தார் ஜெயந்தி.

 

அவனோ, “என்ன இன்னும் ரெண்டு மணிநேரத்துல வந்துருவாரா? மாமா ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை தான் ஊருக்கே வர்றாரு. அவரை நான் போய் வெல்கம் பண்ணாம எப்படி? அதுலயும் அவர் எனக்கு இப்ப மாமனார் வேற ஆகப்போறாரு.” என்று வெளியே ஓடித் தப்பித்தான்‌.

 

ஜெயந்தியோ விடாமல், “நீ நம்ம சாமியாரை எங்க பார்த்தன்னாவது சொல்லிட்டுப் போடா. அவர் ஒவ்வொரு வருசமும் முத்தூர் முருகன் கோவிலுக்கு அப்பாவோட பிறந்த நாளைக்கு மட்டும் தான் வருவாரு. இப்ப நாம அவரை எங்கப்போய் தேடிப்பிடிக்கறது?” என்று சலித்தார் ஜெயந்தி.

 

அவருக்கு அவரின் மகளுக்கு அந்த பரம்பரை நகைகளை சூட்டிப் பார்க்க வேண்டும். அது தான் கிடந்து துடியாய் துடிக்கிறார்.

 

அனைத்தையும் பார்த்துக்கொண்டு ஓரமாக நின்ற சாவித்ரிக்கோ அந்த காணாமல் போன நகைகளை நினைத்து மனம் கனத்தது. தனது மாமியார் தன்னிடம் ஆசையாகக் கொடுத்ததை இப்படி பாதுகாக்காமல் கோட்டை விட்டு விட்டோமே என்று வருந்தினார். 

 

ஆனால், விதி அவரின் மருமகளின் மூலமே அதனை மீண்டும் கிடைக்கச் செய்யப்போகிறது என்பதை அப்போது அவர் அறியவில்லை.

 

விமானநிலையம் வந்த பத்ரியோ, தனது பயணப்பொதிகளை நகர்த்தும் வண்டியில் தள்ளிக்கொண்டு வந்த சாமிநாதனைக் கண்டதும், மாமா என்று ஓடிப்போய் கட்டியணைத்து கொண்டான்.

 

தானும் அவனை ஆரத்தழுவிக் கொண்டவர் அவனின் ஒவ்வொரு பருவத்திலும் அவனது அழகைக்கண்டு ஆச்சரியப்பட்டவராக தற்போதும் அவனது கம்பீரத் தோரணையில் சரணாகதியடைந்தார்.

 

மேலும், தன் மகளுக்கு அவனை மணவாளனாக அடையப்போவதில் பெருமிதம் கொண்டார்.

 

“என்ன பத்ரி. உன் அக்கா செய்ய வேண்டியதையெல்லாம் நீ செய்யுற? எங்க அவளை? நான் அவளைத்தான் ஏர்போட்டுல எதிர்பார்த்து வந்தேன்” என்று தனது ஏமாற்றத்தை அவர் அப்பட்டமாகத் தெரிவிக்கவும்,

 

“அக்கா தானே மாமா. உங்களுக்கு தெரியாததா? பேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர்னு ரொம்ப பிஸி. வாங்க வீட்டுல போய் அதை வச்சிக்கலாம்.” என்று அவரை மேற்கொண்டு யோசிக்கவிடாமல் காரில் வீட்டிற்கு அழைத்துச்‌ சென்றான்.

 

ஆனால், செல்லும் வழியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடியே வந்தார் சாமிநாதன்.

 

“ஏன் பத்ரி, இன்னும் இந்த குறிஞ்சிகுளம் மாறாம அப்படியே தான் இருக்கு இல்ல? கிழக்குத்தெரு மேற்குத்தெரு பாகுபாடு இன்னும் தீரவே இல்லைல? என்ன இந்த அடிதடி வெட்டுக்குத்து மட்டும் குறைஞ்சிக்கு.” என்றவர் அவதானித்து கேட்க,

 

“இங்க எதுவும் எப்பவும் மாறாது மாமா. ஆனா உங்களை மாதிரி ஆளுங்க ஓடி ஒளிஞ்சிக்கிட்டு மாற்றத்தைப் பத்தி பேசுறது தான் வேடிக்கை.” என்றான் குத்தலாக.

 

“என்ன செய்ய சொல்ற பத்ரி? பொன்னி புருசன் மாதிரி என்னையும் சாகச் சொல்றியா? வெறுத்துருச்சி எல்லாம். அந்த மனுசன் ரொம்ப நல்லவரு. சாதுவானவரு. அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்க வேணாம்.”

 

“நீங்க இன்னும் அதை மறக்கலையா மாமா?”

 

“எப்படி மறக்க முடியும் பத்ரி? ரெண்டு சாதிக்காரனுங்களும் பஞ்சாயத்துல வார்த்தை முத்தி ஒருத்தனுக்கொருத்தன் வெட்டிட்டு சாக கையில அரிவாள் எடுத்தப்ப பொன்னி புருஷன் தானே இடையில அதை மறிக்கப்போய் அநியாயமா கழுத்துல வெட்டு வாங்கி செத்தாரு. அவர் துடிதுடிச்சி செத்தக்காட்சி இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்குது. ஆனா, உன் அப்பா வெட்டினது தன் ஆளுனு தெரிஞ்சதும், அவன் மேல கேஸு கீஸு ஒன்னும் போடவிடாம அவனை காப்பாத்திட்டாரு. பெத்த பொண்ணுக்கே பெரிய துரோகத்தை செஞ்சிட்டாரு. போன ஒரு உசுருக்கு நீதி கிடைக்காதது எவ்வளவு பெரிய கொடுமை? அதெல்லாம் விடு பத்ரி. உன் அக்கா கதைக்கு வருவோம். முன்னாடி கூட எனக்கு புது ரத்தம் ஒன்னும் தெரியல. ஆனா வயசு ஆக ஆக மனசு உன் அக்காவை ரொம்பத் தேடுது. அவளை என் கூடவே அழைச்சிட்டுப் போகனும்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா? பைத்தியக்காரி தன் பொண்ணே உலகம்னு கிடக்கறா. ஆனா தெய்வானைக்கு கல்யாணம் முடிஞ்சப்பறம் தான் அவளுக்கு என் அருமை புரியும்னு நெனைக்கிறேன். மகளுக்காகவே வாழ்ந்து பழகிட்டா. அவ வாழ்க்கையைப் பத்தி ஒரு நாள் யோசிப்பா பாரு? அப்ப அவளுக்கு ஒரே வாய்ப்பா நான் மட்டும் தான் தெரிவேன். அந்த நாளுக்காகத் தான் காத்திட்டிருக்கேன்” என்பவரை  தேற்றும் புன்னகை புரிந்தான் பத்ரி.

 

அவர் திடீரென, “ஆமா நீ என் பொண்ணை விரும்புறியா பத்ரி?” என்றதும், அக்கேள்வியில் ஸ்தம்பித்தான்.

 

“என்ன மாமா இப்படியெல்லாம் கேட்கறீங்க?” என்று மழுப்பினான்.

 

“இல்ல சொல்லு பத்ரி. எனக்கு உங்க ரெண்டு பேர் சந்தோசமும் முக்கியம்” என்று பத்ரிக்கும் ஒரு தகப்பனாக அவர் யோசிக்க,

 

“உங்களுக்கும் அக்காவுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி காதல் எதுவும் இருந்ததா மாமா? எல்லாம் இந்த மஞ்சள் கயிறு செஞ்ச மாயம் தானே? எங்களுக்கும் அந்த மாயம் நடக்கும்” என்ற நம்பிக்கையை மட்டும் அவருக்கு தந்தான்.

 

வீட்டிற்கு வந்தபோதோ ஜெயந்தி வாசலில் நின்று தன் கணவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். வாகனம்‌ உள்ளே நுழைவதைக் கண்டதும், ஆரத்தி தட்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்தார். 

 

காரை விட்டு இறங்கிய சாமிநாதன் முழுதாக நரைத்திருக்கும் தன் தலைமுடிகளுக்கு சாயம் பூசாமல் வந்திருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், அலைபேசியிலேயே தனது காதல் மொத்தத்தையும் கடத்தி விடுபவரை உணர்ச்சி ததும்ப வரவேற்றார் ஜெயந்தி. 

 

அவரின் தோளில் கரம் போட்டு உள்ளே சென்றவர் அனைவரிடம் நலம் விசாரித்துவிட்டு ரத்னவேல் பாண்டியனின் காலில் விழுந்து எழுந்தார்.

 

அப்போது இரண்டு கைகளிலும் மருதாணியுடன் ஓடிவந்த‌ தெய்வானை, “அப்பா” என்று அவரை கட்டியணைத்துக் கொண்டாள். 

 

அவரின் முதுகு முழுவதும் மருதாணிக் கறையானது. அதைக்கண்ட ஜெயந்தி மகளை கடிந்தார். 

 

“மருதாணி கோலத்தை இப்படி அலங்கோலமாக்கிட்டியேடி” என்று புலம்பினார்.

 

அந்நிகழ்வே சாமிநாதனுக்கு பெரிய அபசகுனமாகத் தோன்றியது. அதுவும் மணப்பெண் போலல்லாமல் சோபையிழந்து காணப்பட்ட மகளின் முகத்தை கூர்ந்து கவனித்தார். 

 

இரவில் தன்னுடன் தனித்திருந்த மனைவியிடம் அது குறித்து விசாரித்தபோதோ, ஜெயந்தி “அவ சம்மதத்தோட தாங்க எல்லா ஏற்பாடும் நடக்குது. நீங்க வேற ஏதாவது கேட்டு வச்சு அவ மனசு சங்கடப்பட்டுறப் போறா” என்றதும், மகளிடம் விசாரிக்கும் யோசனையை கைவிட்டார் சாமிநாதன்.

 

நாளைப் பற்றிய எண்ணத்தில் அவ்விரவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக கழிய, வெய்யோன் விடிந்ததும் மாமன் முறை உள்ளவன் போல்‌ பார்ப்பவர்கள் மேலெல்லாம் மஞ்சள்‌ ஒளிக்கீற்றை பாய்ச்சி விளையாடிக் கொண்டிருந்தான்.

 

ரத்னவேல் பாண்டியன் கோவிலுக்கு கிளம்பி நின்ற அனைவரையும் அவரவர் வாகனங்களில் சென்று ஏறிக்கொள்ள சொல்ல, பத்ரி அவர் வாகனத்தை நோக்கி வந்தான்.

 

தங்கக்கரையிட்ட பட்டு வேஷ்டி சட்டையில் எப்போதும் போல் மிகக் கம்பீரமாக மிளிர்ந்தவன் அவரின் வண்டியை ஓட்ட முயல, அவனை தடுத்து நிறுத்திய ரத்னவேல், “இல்ல பத்ரி இன்னைக்கு நம்ம சஷ்டி காரை ஓட்டட்டும். நீ புதுமாப்பிள்ளையா ஜம்முனு தெய்வானை பக்கத்துலப் போய் உட்காரு.” என்றார்.

 

சஷ்டியை முறைத்தபடியே சென்று மற்றொரு காரில் தெய்வானையின் அருகில்போய் அமர்ந்தான் பத்ரி.

 

சஷ்டியோ, ‘இதுக்கே இப்படினா எப்படிடா? மணமேடைலயும் உன் இடத்தை‌ நான் தான் ஆக்கிரமிக்கப்போறேன்’ என்று வன்மமாக எண்ணிக்கொண்டான்.

 

அவன் என்றுமில்லாத திருநாளாய் தன்னை வண்டி ஓட்டச் சொன்ன தந்தையை ஆராய்ந்து பார்த்தபடியே சென்று காரை ஓட்டினான். 

 

அவரோ, “உனக்கு தெய்வானையை விட நல்லப்பொண்ணாப் பார்த்து கட்டிவைக்கிறேன் சஷ்டி.” என்றதும், அவரை உறுத்து விழித்தான்.

 

“எனக்கான பொண்ணை நானே தேடிக்குவேன். உங்க உதவி ஒன்னும் எனக்கு அவசியமில்ல” என்று நறுக்குத் தெறித்தான்.

 

“கோபத்துல அப்படியே என் அப்பா வஜ்ரவேல் பாண்டியன் தான் நீ.”

 

“இதே மாதிரி பத்ரிக்கிட்ட ஒரு நூறு தடவை சொல்லியிருப்பீங்களா?”

 

“ஏன் அவன் கூடயே போட்டிப்போடுற நீ?”

 

“அந்தப் போட்டியை உருவாக்கினதே நீங்க தானே? நானும் என் அம்மாவும் இப்பவரை ஒட்டுண்ணி வாழ்க்கை தான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். எப்பவும் எல்லாத்துலயும் முதலிடம் அவனுக்கு தான். நான்லாம் எதுக்கும் ஆசைப்படவே தகுதியில்லாதவன் இல்ல?”

 

“ச்சே! நான் அப்படியெல்லாம் நினைக்கவேயில்ல சஷ்டி. எனக்கு பத்ரி ஒரு கண்ணுனா நீ ஒரு கண்ணு”

 

“நீங்க சொல்றது உண்மைன்னா நான் கடைசியா உங்கக்கிட்ட கேட்கற ஒரு வரத்தை மட்டும் எனக்கு கொடுங்க. எனக்கு உங்க சொத்து பத்துனு எதுவும் வேணாம். ஆனா, என் தெய்வானையை மட்டும் எனக்கு கொடுத்திருங்க.” என்று உணர்ச்சிப் பெருக்கில் கேட்க, தன்னிடம் நேரடியாகவே தன் காதலை வெளிப்படுத்தியவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தார் ரத்னவேல் பாண்டியன்.

 

“இந்த உலகத்துல காதலிக்காதவங்கன்னே யாரும் இருக்க முடியாது சஷ்டி. அது நேரத்துக்கு நேரம் இடத்துக்கு இடம் மாறுபடுறது தான் விந்தை.” என்றார் திண்ணக்கமாய்.

 

“இப்ப தெய்வானை எனக்கு கிடைக்கலைனா நீங்க பெரிய விளைவை சந்திப்பீங்க!” என்று நேரடியாகவே எச்சரித்தான் சஷ்டி.

 

“என்னை உன்னால தோற்கடிக்க முடியும்னு நினைக்கிறியா சஷ்டி? என் வாக்கு அந்த சிவன் வாக்குக்கு சமம். அதை மாத்த ஒருத்தன் பிறந்து தான் வரணும்” என்று கர்ஜித்தார் அவர்.

 

இனி வீரனுக்கு சொல் அழகல்ல; செயல் தான் என்று இதழ்களுக்கு பூட்டிட்டான் சஷ்டி.

 

தொடரும்…

 

இதுவொரு போட்டிக்கதை தங்கோம்ஸ். உங்க லைக் அண்ட் கமெண்ட்ஸ் தான் எனக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கும்:) கீப் சப்போர்ட் மீ தங்கோம்ஸ்:)

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,882 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page