முதன்முதலாக அப்போதுதான் ராம் அவரின் நண்பன் சசிகுமாரின் மகளை முழுவதுமாக பார்க்கின்றார்… நண்பன் மற்றும் அவனின் மனைவியின் சடலத்துக்கு தள்ளாடி நெருப்பு வைக்க சென்ற நண்பனின் மகளை அணைத்தது போல அழைத்து சென்று அவளுடன் சேர்ந்து நெருப்பு ராம் வைத்தார்.
பெரியதாக அவளை அப்போது கவனிக்க வில்லை… அழுது அழுது தள்ளாடுகிறாள் என்று நினைத்தார்… அவளின் மீதிருந்து வந்த மதுவாடை கூட வெட்டியான் மீதிருந்து வந்ததாக அப்போது நினைத்தார்… ஆனால் இப்போது அவள் அன்றும் குடித்திருக்கிறாள் என்று தோன்றவே அவளை கண்டார்.
அவளோ சார் யாரு என்று கேட்டு ராமின் மீதே விழ அவளை அப்படியே தாங்கிக்கொண்டு வக்கீலை பார்க்க “பாப்பா நல்ல பாப்பா தான்… ஆனால் என்ன? அப்பைக்கு அப்ப டிரிங்க்ஸ் பண்ணும் வெளிநாட்டு கல்ச்சர்ல வளர்ந்துட்டா… அதான்…” என்றார்.
ராம் எதுவும் பேசாமல் அவளை இருகரங்களில் தூக்க “ஐ நான் பறக்குறேன்…” என்று போதையில் விழிகள் திறக்காமல் கரங்கள் இரண்டை விரித்து ஆட்டினாள்.
அவளின் முகத்தை பார்த்த ராமுக்கு ஏனோ கோவம் வரவில்லை… மாறாக அவளின் வயதை இரசித்தார்… இந்த வயதில் நானும் இதுபோல் எந்த குடும்ப சுமையும் இல்லாமல் இருந்திருந்தால் இப்படி தான் மலர்ந்த முகமாக இருந்திருப்பேனோ என்று நினைத்தவர்
“வேற ஏதாவது என்கிட்ட சொல்லணுமா வக்கீல் சார்?” என்று கேட்க
“பாப்பாவோட கார்டியனா நீங்க தான் இருக்கணும்னு எப்பையும் சசிகுமார் சார் சொல்லுவாரு…” என்று கூற
“வேற ஏதாவது…”
“அவ்வளவு தான் சார்… அப்பறம் சார்… பாப்பா கொஞ்சம் அடம் பண்ணுவாங்க… அவங்கள ஓவரா கட்டுப்படுத்துனா பிடிக்காது…”
“ஓகே… இந்த நிமிஷத்துல இருந்து நான் பார்த்துக்குறேன்… சசிகுமார் பேர்ல உள்ள எல்லாமே அவரோட மகள் பேர்ல மாத்துங்க… அதுக்கு எவ்வளவு செலவு ஆகுமோ அத என் கம்பெனியில வந்து வாங்கிக்கோங்க…” என்று கூறி கம்பீரமாக அந்த வீட்டை விட்டு வெளியேற சென்ற ராம் அப்படியே நின்று
“ஆமாம்… இந்த பொண்ணோட பேர் என்ன?” என்று கேட்டார்.
“அடப்பாவி பேர் கூட தெரியாம கோடி கோடியா அள்ளி கொட்ட தயாராயிட்ட…” என்றே மனதில் நினைத்துக்கொண்டு “ரதி தேவி சார்…” என்று கூற
சட்டென திரும்பி வக்கீலை ராம் பார்க்க
“எஸ் சார்… பாப்பா பேர் ரதி தேவி தான்… இந்த பேர் சாருக்கு ரொம்ப பிடிச்ச பேருனு மேடம் சொல்லி கேட்டிருக்கேன்…” என்றார்.
ஒரு பெருமூச்சை விட்டே நண்பனே தன்னிடம் வந்த போல் தான் உணர்ந்து ரதி தேவியை தூக்கிக்கொண்டு ராம் அவரின் காருக்கு சென்றார்.
அவளை காரின் முன் சீட்டில் அமர வைக்க சட்டென ராமின் சட்டையை பிடித்தாள்.
ராம் அவளின் முகத்தை பார்க்க ஒருபக்க சட்டையை பிடித்திருந்தவள் விழிகளை திறக்காமலே “ஏய் குடிச்சிருக்கேன்னு என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ண பார்க்காத… என் டாடியோட பிரண்ட் ஒருத்தன் இருக்கான்… அவன் சரியான ரௌடி பையன்… என்னைய ஏதாவது பண்ணுன உன்னைய கொன்னுடுவான் சொல்லிட்டேன்…” என்றாள் குளறலாக.
“பாருடா… யாரும்மா என்னையே அடிக்கிற அளவுக்கு அந்த பெரிய ரௌடி…” என்று கேட்டே அவளுக்கு சீட் பெல்ட்டை போட்டுவிட
“ம்… அவரு பேர்… பேர் தெரியாதே… ஆனா அவர் தான் என் டாடியோட ஜிகிரி தோஸ்த்… ஸ்கூல் டேஸ்ல இருந்து ரொம்ப நெருக்கமான பிரண்ட்… ஆனா பெருசா ஆக ஆக ரௌடியா ஆகிட்டாராம்… பட் பிரில்லியன்ட் பாய்…” என்று கூறிக்கொண்டே இருக்க
“ஓஓ மெடம் நம்மள தான் சொல்றாங்களா…” என்றே மனதில் நினைத்துக்கொண்டு டிரைவர் சீட்டில் ஏறி காரை ஸ்டார்ட் செய்துவிட்டு அவளின் முகத்தை பார்க்க அப்படியே உறங்கியிருந்தாள்.
ஒருமுறை ரதி தேவி என்று வாய்விட்டு அவள் பேரை கூற “டோன்ட் கால் ரதி தேவி… ஜஸ்ட் கால் ஆர்…” என்று முணகினாள்.
அவள் ஏதோ முணகுகிறாள் என்று தெரிந்தது… ஆனால் அதை காதில் வாங்க வேண்டும் என்று ராம் நினைக்கவில்லை… காரின் வேகத்தை கூட்டினார்… ஏனெனில் மீட்டிங் இருப்பதாக தகவல் அதற்குள் அவருக்கு வந்துவிட நேராக அலுவலகம் சென்றார்.
காரை நிறுத்திய ராமுக்கு ரதியை என்ன செய்ய என்று தெரியவில்லை… சரி போதையில் உறங்கிக்கொண்டு தானே இருக்கிறாள்… மீட்டிங் முடித்துவிட்டு வர வரைக்கும் உறங்கட்டும் என்று சீட்டை நன்கு அவள் உறங்க ஏத்தது போல் சாய்த்துவிட்டு காரை லாக் செய்து சென்றுவிட்டார்.
போனவருக்கு தொடர்ந்து இரண்டு மீட்டிங் இருந்தது… ஆகையால் அவரின் மீட்டிங் முடியும் போதெல்லாம் ரதி தேவி என்ற பெண்ணை காரில் படுக்க வைத்திருப்பதையே மறந்து வேலையில் மூழ்கி விட்டார்.
அப்படியே இப்போது ராம் இருக்கும் நிலையை பார்த்துவிடலாம்… ராம்குமார் இப்போது கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியோட ஓனர்… வாழ்க்கையின் ஓட்டம் ராம்குமார் என்ற அவனை ஓட வைத்து இப்போது ஆர்கே கன்ஸ்டிரக்சன் கம்பெனியின் முதலாளியாக இருக்க வைத்திருக்கிறது.
பத்தாவதில் நல்ல மதிப்பெண் பெற்றதால் பள்ளியின் நிர்வாகமே ராமின் படிப்பின் செலவை எடுத்துக்கொண்டு படிக்க வைத்தது… பள்ளியில் படிப்பதோடு சரி… பள்ளி முடிந்து நேராக அம்மா வேலை பார்க்கும் இடம் சென்று வேலை செய்தான்.
இவ்வாறே பன்னிரெண்டு வரை முடித்தான்… பள்ளியிலும் நல்ல மதிப்பெண் தான்… அவனுக்கு உதவ அப்போதும் கரங்கள் வந்தது… ராம் குடும்பத்திற்கு பணம் தேவை நாள் ஆக ஆக அதிகரித்துக்கொண்டே இருக்க அவன் பெரிய படிப்பு எதுவும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு டிப்ளமோவில் சேர்ந்துக்கொண்டான்.
அதுவும் அவன் அம்மாவுடன் கட்டடம் கட்டும் வேலைக்கு செல்வதால் அதை சார்ந்து படிக்க வேண்டும் என்று அரசு கல்லூரியில் டிப்ளமோவில் சிவில் எடுத்தான்… பாதி நேரம் கல்லூரி மீதி வேலை என்று வளர்ந்தான்.
படித்து முடித்ததும் வேலை தேடி அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக தம்பி தங்கையை படிக்க வைத்துக்கொண்டு வளர்ந்தான்… ராம்குமாரின் இருவத்தி இரண்டாம் வயதின் போது பொறியியல் படித்து முடித்த சசிகுமார் காதலித்த பெண்ணை திருமணம் செய்தாக வேண்டும் என்று வந்து நிற்க பண்ணி வைத்தான்.
சசிகுமாரின் வீட்டில் ஏத்துக்கவில்லை என்றதும் நண்பன் வேலையில் அமரும் வரை ராமே நண்பனின் குடும்ப செலவையும் ஏத்துக்கொண்டு சந்தோஷமாக செய்தான் உன் மனைவி என் கூட பிறந்தவள் என்றே உரிமையுடன்.
நண்பன் வெளிநாட்டில் வேலை அதுக்கு பணம் கட்ட வேண்டும் என்று கையை பிசைந்துக்கொண்டு நிற்க கடன் வாங்கி தந்தான் அம்மாவின் பேச்சை மீறி… சசிகுமார் வெளிநாடு சென்றான்… அடுத்த மாதமே மனைவிக்கு வேலை அங்கு ஏற்பாடு செய்து அவளையும் அழைத்துக்கொண்டான்.
அதன்பின் பத்து வருடம் எந்த ஒரு பேச்சிவார்த்தையும் இல்லை… ராம் உடைய அம்மா ராமை இடைப்பட்ட வருடத்தில் திட்டாத நாளே இல்லை… அதுவும் சின்ன மகனுக்கு டாக்டர் சீட்டுக்கு பணம் கட்ட அங்கு இங்கு கடன் வாங்கும் போதெல்லாம் மகனையும் சசிகுமாரையும் திட்டி தீர்த்தார்.
இதில் சின்ன மகனிடம் உன் அண்ணன் மாதிரி நீ இருக்காதடா இருக்காதடா என்று சொல்லி சொல்லியே வளர்த்தார்… சின்ன மகளுக்கு கல்யாணம் பேசும்போது அப்போதும் அந்த பணம் இருந்தால் நகை இன்னம் சேர்த்து போட்டிருக்கலாம்… நல்ல மண்டபத்துல கல்யாணம் பண்ணலாம் என்றெல்லாம் பேசினார்.
ராம் மனம் வாடியது… ஏனோ நண்பனின் மீது கோபம் கொள்ள மனம் வரவில்லை… அவன் அங்கு குடும்பத்தோடு எப்படி இருக்கிறானோ என்றே நினைத்தான்.
பத்துவருடத்திற்கு பிறகு ஒருநாள் சசிகுமார் மட்டும் ராமை தேடி வந்தான்… வந்தவன் நான் இங்கையே தொழில் தொடங்கலாம்னு இருக்கேன் என்றான்… ராம் மகிழ்ந்தான்… ராமையும் தொடங்க சொன்னான்.
ராம் “என்னிடம் அவ்வளவு பணம் இல்லடா…” என்ற நண்பனை அணைத்து
“மச்சான்… நீ எனக்கு தந்த பணத்த வட்டியோட நான் உனக்கு தரேன்… அந்த பணத்தை வச்சி வாடகைக்கு ஒரு இடத்த பிடி… பேர் வை… கன்ஸ்டிரக்சன் கம்பெனிக்கான லைசன்ஸ் வாங்கு… கம்பெனிய ஆரம்பிச்சதும் உன் கம்பெனியோட முதல் வேலை என் கம்பெனிய நீ கட்டி தரது தான்டா… இந்தா உன் பணம்… இது நீ எனக்கு கட்டித்தரப்போற கம்பெனிக்கான அட்வான்ஸ் பணம்…” என்று தர ராம் திக்குமுக்கு ஆடிபோனான்.
ராம் விழிகள் கலங்கியது… சசிகுமார் கையோடு நண்பனை அழைத்து சென்று ராம்குமார் பேரிலே ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தான்… ஆர்கே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி என்று பெயர் வைத்தான்… லைசென்ஸுக்கும் அன்றே அப்ளை செய்தான்.
ராமுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை… அவன் உழைத்த பணம் எல்லாம் தங்கையை பொறியியல் படிக்க வைக்க, தம்பியை டாக்டர் படிக்க வைக்க, வயதான அம்மாவுக்கான செலவுக்கு, அக்காவின் குடும்ப நாள் கிழமைக்கு சீர் செய்வதுக்கே கையை கடித்தது.
இதில் எங்கிருந்து அவனால் வேலையை தாண்டி ஆசைப்பட்ட தொழிலை தொடங்க முடியும்? ஒரு மடிக்கணினியை வாங்கி கட்டிடத்தை வடிவமைக்கும் வேலையை வீட்டில் அமர்ந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு இன்னும் நிறைவேறவில்லை.
அப்படியிருக்க திடீரென நண்பன் வந்து வாங்கிய பணத்தை வட்டியோடு தந்தது மட்டும்மல்லாமல் தொழில் தொடங்க வழி அமைத்து அதில் பயணம் செய்ய தேவையானதையும் செய்துவிட அதுவரை உயிர் நண்பனாக இருந்தவன்… அதன்பின் உயிருக்கும் மேலாக மாறிபோனான்.
அதன்பின் எல்லாம் ராமுக்கு வேலையில் ஏறுமுகம் தான்… ஆனால் குடும்பத்தில் இறங்குமுகமாக ஆனதை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
சரி தற்போதைய நிலைக்கு வருவோம்…
ஆர்கே கன்ஸ்டிரக்சன் கம்பெனி என்று பெயர் போட்ட அந்த ஐந்து மாடி கட்டிடத்தில் ஐந்தாவது மாடியில் அமர்ந்து அவனின் சிஸ்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவனின் நினைவில் ரதி என்ற பெண் சுத்தமாக இல்லை.
வேலையெல்லாம் முடித்து கரங்கள் இரண்டையும் தூக்கி நெட்டிமுறித்த போது தான் ரதியின் நினைவு வர நெத்தியில் அடித்துக்கொள்ள கூட நேரமில்லாமல் அவளை காண ஓடினான்.
அலுவலக நேரத்தையே கடந்துவிட்டதால் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் கிளம்பியிருந்தனர்… அதனால் சிடுசிடுப்பாக இருக்கும் அவர்களின் அரக்கன் ஓடுவதை அவர்கள் காணவில்லை… கண்டிருந்தால் நெஞ்சில் கை வைத்து மயங்கியிருந்தாலும் ஆச்சரியப்பட இல்லை.
கார் பார்க்கிங் வந்து ரதியை பார்க்க அவளோ அங்கில்லை… அதிர்ந்து வேகமாக ஓடிவந்து கதவை திறந்தவனுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது அவனின் ரதி ரூபத்தில்.
வருவாள் ரதி…
