ஏகா காதலன் – 1
ஏகா காதலன்
அத்தியாயம் 1
அய்யய்யோ தாத்தா…
ஆலமர நிழல் மாதிரி
எங்களை காப்பாத்தின தாத்தா…
கதை சொல்லி தூங்க வச்ச
குரல் இன்னிக்கு மௌனமாச்சே
மண்வாசம் தெரிஞ்ச உன் கைகளு
எங்களை வாழ வச்சதே
கோவிலுக்கு முன்னாடி
கம்பீரமா நடந்த தாத்தா
இன்னிக்கு புகைப்படத்துல
சிரிச்சுக்கிட்டே நிக்கிறியே
பொல்லாத உலகத்துல
நேரம், நியாயம் சொல்லிக் குடுத்த
நீ இல்லாம
வீடும் மனசும் வெறிச்சோச்சே
அய்யய்யோ தாத்தா…
உன் காலடிச் சத்தம்
இன்னும் எங்க காதுல ஒலிக்குதே…
என்ற சத்தம் அந்த அறையெங்கும் ஒலித்தது..
அந்தப் பாட்டிற்கு சொந்தக்காரான தாத்தா திருப்பதி கண்ணாடி பேழைக்குள் எழுந்துக் கொள்ள முடியாத நித்திரையில் இருந்தார்..
ஊரே ஒன்று திரண்டு அங்கே தான் இருந்தது..
“என்ன புள்ள இப்படி அழுதுக்கிட்டே இருந்தா, செத்தவுக எந்திரிச்சு வந்திடுவாங்களா?.. எந்திரிச்சு வா புள்ள” என கேட்டவருக்கு, பதில் சொல்லக் கூட திராணியில்லாமல் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் இளங்கிளி..
திருப்பதியின் மகளின் மகள்..
இப்படி விட்டேற்றியாக அமர்ந்திருப்பவளை பார்த்து, துக்கம் தொண்டையடைத்தது அவருக்கு..
“ஏ புள்ள.. இளங்கிளி..” என அவளின் தோளை உலுக்கிட, அவரின் காலடியிலேயே சரிந்து விழுந்தாள் இளங்கிளி..
இத்தனை நேரம் துக்கத்தை தனக்குள்ளேயே அடைத்து வைத்தவளுக்கு, இதற்கு மேல் முடியவில்லை என்பதை போல் சரிந்து விழுந்தாள்..
“ஏய் புள்ள.. இளங்கிளி.. இளங்கிளி.. இந்தாருங்கய்யா எல்லாரும் ஓடி வாங்க..” சரிந்து விழுந்தவளை தன் தோளில் தாங்கிக் கொண்டார்..
“ஏய்ய்ய்.. தீபா, தண்ணீ எடுத்துட்டு வாடி..” என அழுதக் குரலுடன் ஒருவர் தண்ணீர் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த வீட்டு வாசலில் நின்றது அடர் நேவி ப்ளூ கலர் பிஎம்டபிள்யூ கார் ஒன்று..
அதில் இருந்து கம்பீரமாக இறங்கினான் வல்லாளன்..
31 வயது கம்பீரத்துக்கு சொந்தக்காரன்..
பார்ப்பதற்கே சாக்லேட் பாய் போன்ற தோற்றமுடையவன்..
இளம்பெண்களை எளிதாக கவரக்கூடிய பேரழகன்..
அவனுக்குப் பின்னால் இறங்கினார் விஸ்வநாதன்..
72 வயது மனிதர்..
இறந்துப் போன திருப்பதியின் நண்பர் தான் விஸ்வநாதன்..
கண்கள் கலங்கியபடி நின்றிருந்தவரை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் அவர்களின் வயதை ஒட்டியவர்கள்..
கலங்கிய விழிகளுடன் வீட்டிற்குள் நுழைய, அறைக்குள் இரண்டு மூன்று பெண்களால் தூக்கிச் செல்லப்பட்டாள் இளங்கிளி..
விஸ்வநாதன் திருப்பதியின் அருகில் சென்றார்.. கண்களில் கண்ணிர் அவரையும் மீறி வந்தது..
எத்தனை வருட பால்யகால நட்பு அது..
அவர் இன்று இல்லை என்பதை கனத்த மனதுடன் ஏற்கப் பழகினார் விஸ்வநாதன்..
“வளன்..” என்ற குரலில், வேகமாக தன் கைகளில் இருந்த ஆளூயுர மாலையை கொடுத்தான் வளன்..
மாலையை வாங்கி கண்ணாடிப் பெட்டியின் மீது போட்டார் விஸ்வநாதன்..
இன்னும் சில நிமிடங்களில் இறுதியாத்திரைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது..
அந்த வீட்டின் திண்ணையில் ஓய்ந்து போய் அமர்ந்தார் விஸ்வநாதன்..
“தாத்தா, இங்கேயே நீங்க இருக்கணுமா?.. அதான் பார்த்தாச்சே, போகலாமே” என மெல்லிய குரலில் காதில் கிசுகிசுத்தனை வளனைக் கண்டு முறைத்தவர்,
“அவன் என் சிநேகிதன் மட்டுமில்லை வளன்.. நாம இன்னைக்கு நல்லா இருக்கோம்னா, அதுக்கு அவன் கொடுத்த காசு தான் காரணம்.. ” என முகத்தில் அடித்தாற் போன்று சொன்னவரைக் கண்டு பல்லைக் கடித்தான்..
அவனுக்கு இங்கே இருக்கவே பிடிக்கவில்லை..
“தாத்தா, நான் கார்ல இருக்கேன்..” என்றவள், ‘காசு கொடுத்தா மட்டும் போதுமா?.. நாம ராத்திரி பகல் பார்க்காம, உழைச்சோம்.. அதுனால தான் இவ்வளவு உயரத்துல இருக்கோம்.. உங்க உழைப்போட கிரெடிட்டை இன்னொருத்தருக்கு தூக்கிக் கொடுக்காதிங்க” என மனதுக்குள் நினைத்தவன், விறு விறுவென அங்கிருந்து நடந்துச் சென்றான்..
இருபது அடி தூரத்தில் நிறுத்தி வைத்திருக்கும் தன் காரை நோக்கிச் சென்றவன், காருக்குள் ஏசியைப் போட்டு அமர்ந்து விட்டான்..
அங்கு உயிரே தன்னை விட்டுப் பிரிந்தாற் போன்று துக்கம் தொண்டையடைக்க.. அழக்கூட தெம்பில்லாமல் கட்டிலில் படுத்திருந்தாள் இளங்கிளி..
சிறிது நேரத்திலேயே திருப்பதியின் நல்லடக்கம் ஆரம்பித்தது..
கண்களில் கண்ணீர் வழிய படுத்திருந்தவளை தாங்கிக் கொண்டு வெளியே வந்தனர் அக்கம் பக்கத்தினர்..
“கொள்ளிப் போடுறவங்க முன்னாடி வாங்க..” என்றதும், அங்கே ஒரு கணம் நிசப்தம் தான் நிலவியது..
யாருமே முன்வரவில்லை.. இளங்கிளிக்கோ அழுகை பொத்துக் கொண்டு வந்தது..
தன் தாத்தா இந்த ஊருக்காக எவ்வளவு நல்லது செய்திருப்பார்..
ஐந்து நிமிட மெளனத்திற்கு பின், “நானே கொள்ளிப் போடுறேன்..” என்ற குரலில், இளங்கிளி ஏறிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்..
அங்கு நின்றிருந்தது என்னவோ விஸ்வநாதன் தான்..
கண்ணீர் மல்க, இருகரம் கூப்பி அவரை நன்றியுணர்வுடன் பார்த்தாள் இளங்கிளி..
அவளைப் பார்த்து லேசான புன்னகை ஒன்றை உதிர்த்தார்..
தன் நண்பனுக்காக விஸ்வநாதனே கொள்ளிப் போட்டார்..
அனைத்தும் முடிய உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் களைந்து சென்று விட்டனர்.
இப்பொழுது தனித்து நின்றது என்னவோ இளங்கிளி மட்டும் தான்..
வளனோ காரை விட்டு வெளியே வரவே இல்லை..
விஸ்வநாதன் ஆற்றிலேயே குளித்து விட்டு வந்திருந்தார்..
இளங்கிளியிடம் எந்த உதவி வேண்டுமென்றாலும், தயங்காமல் என் நம்பருக்கு கூப்பிடு..” என சொல்லிவிட்டுப் போகத்தான் வீட்டிற்குள் நுழைந்தார்..
அந்நேரத்தில் தான், “பாவம் இனி அந்த அனாதைப் புள்ள என்னப் பண்ண போகுதோ?..” என்ற குரலில், சட்டென்று நின்று விட்டார்..
“யாரை அனாதை என்கிறார்கள்?..” என நினைக்கும் போதே நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி..
வேகமாக கண்களை சுழற்றினார்.. திண்ணையில் அமர்ந்திருந்த ஒரு பாட்டி தான் பேசினார்..
“என்னத்த சொல்லுறது?.. சும்மாவே அந்தப் பொண்ணை அடையணும்னா நினைக்கிறான் அந்த ராசபாண்டி.. இப்போ யாருமே இல்லை கேட்கவா வேணும்.. ஏதோ பக்கத்துல ஊருக்குப் போயிருக்கானாம்..”
“ஆமாட்டி, கருக்கல்ல (இரவு) வந்து கண்டம் பண்ணிட்டு போயிடுவானோ?” என இருவரும் சற்று பயத்திலேயே பேசிக் கொண்டிருந்தனர்..
“யாரு ராசபாண்டி?..” என்றபடி அங்கு வந்து நின்றார் விஸ்வநாதன்..
“இந்த ஊரு மிராசுத்தேன் ராசபாண்டி.. அவனுக்கு இளங்கிளி மேல ஒரு கண்ணு.. எப்பே பாத்தாலும் அவ பின்னாடியே ஒரசிக்கிட்டு சுத்துவான்.. அடிக்கடி கையைப் பிடிச்சு வம்பிழுப்பான்.. அவ தாத்தா இருந்தவரைக்கும், ஏதோ மிரட்டி கிரட்டி வைப்பாரு.. அவனும் கொஞ்சம் அடங்கிப் போவான்..
ஆனா இனி யார் அவனை அடக்குறது?.. பொட்டப்புள்ள கதி என்னவோ?.” என புலம்பியவர்களை கண்டு அதிர்ந்துப் போனார்..
“நீங்க யாரும், இளங்கிளிக்கு துணையா இருக்க மாட்டீங்களா,”
“அட.. யாருய்யா நீ, அவளுக்குத் துணையா நாங்க இருந்தோம்னா, அவன் எங்க வூட்டு பொண்ணுக எல்லாத்தையும் உரசிப் பார்ப்பான்.. எங்களுக்கு எதுக்கு, வம்பூ, தும்பு எல்லாம்.. நாங்கப் பாட்டுக்கு செவனேன்னு நின்னு வேடிக்கைத் தான் பார்ப்போம்..” என்றவர்களின் மெத்தனமான பேச்சு, விஸ்வநாதனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..
ஒரு வயதுப் பெண்ணுக்கு இந்த ஊரில் பாதுகாப்பு இல்லையா?. என நினைத்துக் கொண்டே, வேகமாக மறுபடியும் திருப்பதி வீட்டிற்குள் நுழைந்தார்..
வீடே துடைத்து வைத்தாற் போன்று இருந்தது..
இப்பொழுது தான் வீட்டை கழுவி விட்டிருப்பார்கள் போல.. தண்ணீர் ஆங்காங்கே தேங்கியிருந்தது..
மெதுவாக வீட்டிற்குள் நுழைய, அங்கு தூணில் சாய்ந்து, வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் இளங்கிளி..
“இளங்கிளி..” என்ற குரலில், மெதுவாக திரும்பினாள்..
எதிரில் இருப்பவரை அடையாளம் கண்டுக் கொண்டாலும், அதிகமாக பேசாததால், அமைதியாகவே நின்றிருந்தாள்..
“நீ எங்க கூட வர்றீயா?..” என்றவரை பேரதிர்ச்சியில் பார்த்தாள் இளங்கிளி..
“என்னச் சொல்லுறீங்க?. நான் உங்ககூட வரணுமா?..” என கேட்கும் பொழுதே நா தந்தியடித்தது..
“ஆமா கிளி.. இங்கே தனியா இருந்து என்னப் பண்ணப் போற?. திருப்பதி இருந்த வரைக்கும் உனக்கு அவன் துணையா இருந்தான்.. இப்போ யாருமே இல்லையே?..” என்ற கணம், இளங்கிளியின் அழுகை விம்மலாக வெளி வந்தது..
“ஆமா, எனக்குத்தேன் யாருமே இல்லையே?.. நாந்தேன் அனாதையா மாறிட்டேனா?..” என விம்மலும், அழுகையுமாக வெளிவந்தன வார்த்தைகள்..
சோபாவில் அமர்ந்து அழுதவளின் அருகில் அமர்ந்தார் விஸ்வநாதன்..
“என்னைப் பத்தி திருப்பதி உன்கிட்ட சொல்லியிருக்கானான்னு எனக்குத் தெரியலை..”
“தெரியும் உங்களைப் பத்தி. நிறையவே சொல்லியிருக்காரு.. அது மட்டுமில்லை.. உங்களைப் பத்தி நியூஸ் பேப்பர்ல வரும்.. அதை இந்த ஊர் முழுக்க காமிச்சு, ரொம்ப சந்தோஷப்படுவாரு..” என்ற இளங்கிளியின் பேச்சில்,
விஸ்வநாதன் கண்களில் கண்ணீர்..
தன் நண்பனின் தன்னலமற்ற பாசத்தில் நெகிழ்ந்து தான் போனார்..
“என் நண்பனோட பேத்திம்மா நீ..
நானும், என் குடும்பமும் இருக்கிற வரைக்கும் நீ என்னைக்கும் அனாதை கிடையாது.. சரியா, நீ என் கூடவே வா.. நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன்..” என்றவருக்கு என்ன சொல்வதென்றே அறியாமல் பேந்த பேந்த முழித்தாள்..
“உங்க விலாசத்தைக் கொடுத்துட்டுப் போறீங்களா, தாத்தாவுக்கு மூணாவது நாள் சாமி கும்பிட்டதும் நான் வர்றேன்..”
“மூணாவது நாள் நானே வந்து உன்னை அழைச்சிட்டுப் போறேன்..” என இளங்கிளியின் தலையை ஆதூரமாக வருடி விட்டவர் எழுந்துச் சென்றார்..
காரில் ஏறிய விஸ்வநாதனைக் கண்டதும் தான் பெருமூச்சே வந்தது வளனுக்கு..
“ஏன் தாத்தா, வர்றதுக்கு இவ்வளவு நேரமா?.. உங்களுக்காக காத்தே கிடக்கணுமா நானு?..”என எகிறிப் பாய்ந்தான்.
“சரி டா, அதான் இப்போ வந்துட்டேனே?.. அப்புறம் எதுக்கு வள்ளுன்னு விழுற?” என அவனுக்கும் மேலாக சிடுசிடுத்தார்..
“தாங்க் காட்.. இப்போவாது வந்தீயே?.. எனக்கு எப்போ டா ஊருக்குப் போவோம்னு இருந்திச்சு?.. மனுஷன் இருப்பானா, இந்த ஊர்ல” என்றவன் காரை ஸ்டார்ட் பண்ணினான்..
“நாம இப்போ ஊருக்குப் போகலை வளன்..” என்றதும் கோபத்துடன் அவரின் புறம் திரும்பினான்..
“அப்போ, வேற என்னப் பண்ண போறோம்?.. ” என்றவனின் முகமே கடுகடுவென இருந்தது..
“திருப்பதிக்கு மூணாவது நாள் சாமி கும்பிடுவாங்க.. அதுனால இங்கே ஹோட்டல்ல தங்கிட்டு, மூணாவது நாள் சாமி கும்பிட்டு கிளம்பலாம்..”
“இங்கே பாரு தாத்தா, நீ பாட்டுக்கு எதையாவது பண்ணாதே.. அங்கே போட்டது போட்டபடி இருக்கு.. அப்படியே விட்டுட்டு, உனக்காக டிரைவர் வேலை பார்த்துட்டு வந்திருக்கேன்.. இப்போ போய், மூணு நாள் இருன்னா, என்ன அர்த்தம்?..” என கோபத்தில் எரிந்து விழுந்தான்..
“அங்கே இருக்கிற வேலையெல்லாம் போன் மூலமா பார்த்துக்கோ.. நாம மூணு நாள் கழிச்சித் தான் போறோம்..” என்றார் உறுதியாக,
“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது தாத்தா.. ஏன் தான் இவ்வளவு அடம் பிடிக்கிறீயோ?..” என்றவன், அங்கேயே பிரபலமான ஹோட்டல் ஒன்றின் வாசலில் வண்டியை நிறுத்தினான்..
என்னதான் தாம்தூம் என்று குதித்தாலும், அவனுக்கு தாத்தா என்றால் உயிர்..
அவருக்காக மட்டுமே எதுவும் செய்வான்..
அவனின் பெயரிலேயே ரூம் எடுத்து தங்கினார்கள்..
அடுத்த நாளும் ரூமிலேயே கழித்தனர் இருவரும்..
வளனுக்கோ அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.. எரிச்சலாக வந்தது.. போன் பார்த்தே நேரத்தைக் கழித்தான்.
மூன்றாவது நாள் விடிந்ததும் மறுபடியும் திருப்பதி தாத்தா வீட்டுக்குச் சென்றனர்..
அன்று காலியாக இருந்த வீட்டில், இன்று கூட்டமாக இருந்தது..
“எதற்கு இவ்வளவு கூட்டம்?..” என வாசலை எட்டிப் பார்த்தவரின் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி..
இளங்கிளியின் கையைப் பிடித்து ஒருவன் இழுத்துக் கொண்டுச் சென்றான்..
“விடு என்னை.. நான் உன் கூட வரலை.. என்னை விட்டுரு..” என கதறி அழுதுக் கொண்டிருந்தாள் இளங்கிளி..
“என்னடி விடணும்?.. உன் தாத்தன் உசிரோடு இருக்கும் போது தான் பொண்ணு தரமாட்டேன்னு சொன்னா.. இப்போ தான் மண்டையை போட்டுட்டானே கிழவன்.. இனி நீ எனக்குத்தேன்.. மஞ்சக் கயிறு கட்டித்தான் நான் உன் கூட வாழணும்னு இல்லை.. மஞ்சக்கயிறு இல்லாமலே நாம வாழ ஆரம்பிக்கலாம்..” என்றபடி அவளை அலேக்காக தோளில் தூக்கிப் போட்டான்..
“டேய்ய்ய்.. டேய்ய்ய்..” என விஸ்வநாதன் அவனை வழிமறித்து நின்றார்..
“போய்ய்யா.. கிழம் போல்டு..” என விஸ்வநாதனை தள்ளி விட்டான்..
அப்பொழுது தான் காரை விட்டு இறங்கிய வளனின் முகமோ கோபத்தில் சிவந்து, தன் சட்டையை முட்டி வரை ஏற்றி விட்டவன், ராசபாண்டியின் முதுகிலேயே ஓங்கி மிதித்தான்..
அவன் மிதித்த மிதியில், இருவருமே தரையில் விழுந்தனர்..
நல்லவேளையாக இளங்கிளிக்கு பெரிதாக அடிபடவில்லை..
வேகமாக அங்கிருந்து எழுந்துச் சென்று விஸ்வநாதனின் அருகில் வந்து நின்றுக் கொண்டாள்..
ஊரே வேடிக்கைப் பார்க்கும் போது, அவர் தான் அவளைக் காப்பாற்ற எண்ணியது..
“டேய்ய்ய். யாருடா நீ, என்ன அடிக்கிற?..” என கேட்டுக் கொண்டே எழும்பி வந்த ராசபாண்டியின் முகத்தில் ஓங்கி குத்தியிருந்தான்.
“எவ்வளவு தைரியம் இருந்தா, என் தாத்தா மேல கை வைப்ப?..” என கர்ஜித்தபடி, அவனின் கை முஷ்டியை இறுக்கினான்.
“ஆஆஆஆஆ..” என அலறினான் ராசபாண்டி..
வளன் கராத்தே ப்ளாக் பெல்ட்..
ராசபாண்டியோ ஊருக்குள் சண்டித்தனம் பண்ணிக் கொண்டு சுற்றுபவன், அவனால் வளனின் அடியை தாக்குப் பிடிக்க முடியவில்லை..
அவனின் அடி தாங்க முடியாமல், வேட்டியைக்கூட மறந்து ஓடிச்சென்றான் ராசபாண்டி..
“இனி தாத்தா மேல கை வச்சிப் பாரு.. உன்னை உசிரோட கொன்னுப் புதைச்சிடுறேன்..” என்றவன், வேகமாக திரும்பிப் பார்த்தான்..
அங்கு தன் தாத்தாவின் அருகில் அழுதுக் கொண்டு நின்றிருந்த இளங்கிளியைப் பார்த்ததும் விறுவிறுவென வந்தது அவனுக்கு..
“எல்லாம் இவளால் வந்தது?..” என உள்ளுக்குள் கறுவிக் கொண்டான்..
“தாத்தா, சாமியைக் கும்பிட்டு வாங்க.. நாம கிளம்புவோம்.. எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலை..” என்றான் தடித்த குரலில்,
அதன் பின் திருப்பதிக்கு மூன்றாவது நாள் படையல் வைத்து சாமி கும்பிட்டனர்..
இளங்கிளிக்கோ அழுகை தான் வந்தது..
தன் வாழ்க்கை இப்படி நட்டாத்தில் நிற்கிறதே?.. இனி தனக்கு யார் துணை?.. என்ற கவலையே அவளுக்குப் பெரிதாக அரித்துக் கொண்டிருந்தது..
