ஏகா காதலன் – 2
அத்தியாயம் 2
கவலையும், கண்ணீரும், அழுகையுமாக விழிகள் ததும்ப நின்றிருந்தாள் இளங்கிளி..
சிறிது நேரத்தில் அனைவரும் சாப்பிட்டு முடித்து புறப்பட்டு விட்டனர்..
வளனோ சாப்பிட மட்டுமே உள்ளே நுழைந்தான்..
அதன் பின் வெளியே சென்று விட்டான்..
சிறிது நேரத்தில் அனைவரும் புறப்பட்டு விட, எஞ்சியது என்னவோ இளங்கிளியும், விஸ்வநாதனும் தான்..
“உனக்குத் தேவையான பொருளை எடுத்து வச்சிட்டுக் கிளம்பும்மா..” என்றவரின் பின்னால் செல்வதை தவிர, அவளுக்கு வேறு வழியில்லாமல் போனது..
அவரின் தாத்தாவும், கடைசியாக சொன்னது, “நான் இறந்தால், என் நண்பனுடன் சென்று விடு என்று தானே..”
அதற்காகவே விஸ்வநாதனுடன் செல்ல தயாராகினாள்..
“சரிங்க ஐயா..” என்றவள், தனக்குத் தேவையான முக்கியமான பொருள்கள், போடுவதற்கு துணிமணி என அனைத்தையும் இரண்டு பையில் அடக்கிக் கொண்டு வந்தாள்..
“பக்கத்துல வீட்டுல சொல்லிட்டு வந்திடுறேன் ஐயா..” என்றவள், வேகமாக பக்கத்து வீட்டுக்குச் சென்றாள்..
“தினமும் சாயிந்திரம் வந்து விளக்கு மட்டும் ஏத்துங்க பாட்டி..” என்றாள் அவள்..
“கண்டிப்பா செய்யுறேன் தாயி.. இனியாவது உன் வாழ்க்கை.. சுபிக்ஷமா இருக்கணும்.. ராசா மாதிரி ஒரு மாப்பிள்ளை உனக்கு அமையணும்..” என்றவரை பார்த்து விரக்தியாக புன்னகைத்தாள்..
காரினுள் அமர்ந்திருந்தே வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த வளனுக்கு, விஸ்வநாதனும்.. இளங்கிளியும் ஒன்றாக வருவது நெஞ்சுக்குள் சற்று நெருடலாக இருந்தது..
“இவர், ஏன் இந்தப் பொண்ணை அழைச்சிட்டு வர்றாரு?..” என நினைத்தபடி கண்களை சுருக்கினான்..
“வளன், வண்டியை எடுப்பா..” என்ற விஸ்வநாதனை ஏகத்துக்கும் முறைத்தவன்,
“இவ எதுக்கு நம்ம கூட வர்றா?..” என்றான் கடுமையாக,
அவனின் கேள்வியில் விக்கித்துப் போனாள் இளங்கிளி..
அனாதரவாக நிற்கும் பெண்ணைப் பார்த்து என்ன கேள்வி கேட்டு விட்டான்?.. மனதில் சுருக்கென்ற வலி..
“என்னடா பேசுற?.. அவளுக்கு இங்கே யாருமே இல்லை டா.. இனி இவ நம்ம வீட்டுப் பொண்ணு..” என்றவரை திரும்பிப் பார்த்து முறைத்தான்..
“நம்ம வீட்டுப் பொண்ணா, என்ன விளையாடுறீங்களா நீங்க?.. ஒரு இழவு வீட்டுக்குப் போனாமோ, வந்தோமோன்னு இருக்கணும்.. அங்கே இருக்கிற பிரச்சினையை தன் தோள்ல தூக்கிப் போட்டு வரக்கூடாது..” என்றான் எரிச்சலுடன்,
அவனின் வார்த்தை, ஈட்டியைக் கொண்டு இதயத்தில் பாய்ச்சினாற் போன்று அப்படியொரு வலி இளங்கிளிக்கு..
“என்னை இறக்கி விட்டுடுங்க.. நான் போறேன்..” என்றாள் மெல்லிய குரலில்,
“என்னடி பசப்பு காட்டுறீயா?.. இப்போ நீ இறங்கிப் போவ, என் தாத்தா என்கிட்ட சண்டைக்கு வர்றதுக்கா, இப்படித்தான் ஊருக்குள்ள சண்டை இழுத்து விட்டுட்டு சுத்துறீயா நீ?.” என்றான் கணீர்க்குரலில்..
அவனின் அபாண்டமான பேச்சில் வாயடைத்துப் போனாள் இளங்கிளி..
“இல்லை.. நான் யாருக்கும் சண்டையெல்லாம் மூட்டி விடலை..” என்றாள் அழுகையுடன்,
“அப்போ பொத்திக்கிட்டு உட்காரு.. வந்துட்டா பெரிய இவ மாதிரி.. இர்ரிட்டேட்டிங்க் இடியட்..” என்றான் சீற்றமாக,
“மைண்ட் யுவர் வார்ட்ஸ் வளன்.. அந்தப் பொண்ணை நாம பார்த்துக்கிறோம்னு சொல்லித்தான் அழைச்சிட்டு வந்திருக்கோம்.. நீ இப்படி பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கலை..” என்றார் விஸ்வநாதன் சற்ற வருத்தமான குரலில்
“ஓஹோ.. இவளுக்காக என்னைப் பிடிக்கலையா தாத்தா உங்களுக்கு?..” என்றான் நக்கலும், கிண்டலும் கலந்த தொணியில்..
“நான் எப்பாே டா உன்னைப் பிடிக்கலைன்னு சொன்னேன்?..”
“அதான் இப்போ சொன்னீங்களே, மகாராணிக்காக என்னையே ஒதுக்கி தள்ளி வைக்கிறீங்களே?..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தார் விஸ்வநாதன்.
இதற்கு மேல் என்ன சொல்லி வாதாடுவது என்றே அவருக்கேத் தெரியவில்லை..
இளங்கிளி ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.. அவனுக்குத் தான் உடன் வருவது பிடிக்கவில்லை என்று..
அழுகையுடன் தான் காரில் அமர்ந்திருந்தவள்.. வேறு போக்கிடம் அவளுக்கில்லையே..
கண்ணீர் மட்டும் துணையாகிப் போனது..
அவளின் அழுகையைக் கண்ட விஸ்வநாதனுக்கு வளனின் மேல் கோபம் கூட வந்தது..
இப்படி ஒரு பெண்ணை அழ வைத்துக் கொண்டே வருகிறானே என்று..
சென்னை வரும் வரை, அவளின் அழுகை ஓயவில்லை.. வளன் அவளை திட்டுவதையும் நிறுத்தவில்லை..
சென்னை தி.நகரில் உள்ள மிகப்பெரிய வீட்டின் முன்பாக தான் வண்டியை நிறுத்தினான் வளன்..
“இறங்கு..” என்றான் அதிகாரமாக,
வேகமாக இறங்கியவள், காரின் பின்னால் வந்து நின்றாள்.. அங்கு தானே அவளின் பைகளை வைத்திருந்தார்..
கார் வந்து இறங்கவும், “அண்ணா.. சித்தப்பா..” என ஓடி வந்து வளனை அணைத்துக் கொண்டனர் இருவர்..
அவர்களின் அணைப்பில் நின்றுக் கொண்டிருந்த வளனின் முகத்தில் புன்னகையின் சாயல்..
டிக்கியில் இருந்து பையை இறக்கினாள் இளங்கிளி..
அவர்கள் அணைப்பில் இருந்து விலகிய வளன் பார்த்தது என்னவோ இளங்கிளியைத் தான்..
அவளைப் பார்த்ததுமே சுறுசுறுவென வந்தது அவனுக்கு..
எரிச்சலுடன் அங்கிருந்து வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டான்..
அவனின் வேக நடையில் ஆரத்தியின் முகம் சுருங்கியது..
“அண்ணா ஏன் தாத்தா கோபமா போறான்?..” என்றவள், அப்பொழுது தான் இளங்கிளியைப் பார்த்தாள்..
“யாரு தாத்தா இந்தப் பொண்ணு?.. பார்க்க அழகா க்யூட்டா இருக்கா?..”
“சொல்லுறேன்.. உள்ளே வா..” என்றவர் உள்ளே சென்று விட்டார்..
அவரின் பின்னாடியே சென்றாள் இளங்கிளி..
ஆர்த்தியோ, தன் அண்ணன் மகள் சம்யுக்தாவை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்..
ஹால் சோபாவில் அமர்ந்தார் விஸ்வநாதன்..
இளங்கிளியோ அமரவே இல்லை.. அவரின் பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தாள்..
“ஆர்த்தி எல்லாரையும் கூப்பிடு ம்மா..”
“அம்மா, அப்பா.. அண்ணா, அண்ணி.. அத்தை, மாமா.. இதயா” என ஊரே கேட்கும் வண்ணம் கத்தினாள் ஆர்த்தி..
அவளின் காட்டுச்சத்தத்தில் படியேறிக் கொண்டிருந்த வளன், அவளை திரும்பிப் பார்த்து முறைக்கவும் தவறவில்லை..
“ஐய்யோ.. அண்ணா ஏன் நம்மளை முறைக்குது?..” என நினைக்கும் நேரத்தில் அவள் அழைத்தவர்கள் அனைவரும் ஹாலுக்கு வந்தனர்..
“இது தான் என் பையன் பிரதிப் அவனோட மனைவி வந்தனா.. இவுங்களுக்கு இரண்டு பையன் ஒரு பொண்ணு.. பெரியவன் தீபன். ரெண்டாவது வள்ளாலன்.. மூணாவது பொண்ணு ஆர்த்தி..
தீபனோட மனைவி யுக்தா.. இது அவுங்க குழந்தை சம்யுக்தா..
இது என்னோட பொண்ணு.. பேரு காவ்யா அவரோட ஹஸ்பெண்ட் செழியன்.. இவ அவுங்களோட பொண்ணு இதயா..
ஒட்டுமொத்தக்கூட்டமும் இப்பொழுது அவரை தான்உற்றுப் பாரத்தது..
ஏதுக்கு இந்த அறிமுகப்படலம் என்பதை போல்..
“இவ இளங்கிளி.. என் நண்பன் திருப்பதியோட பேத்தி.. அவனுக்கு மட்டுமில்லை.. எனக்கு இனி இவ பேத்தி தான்.. இங்கே தான் இனிமேல் இருக்கப் போறா?..” என்றதும் பிரதிப்பும், வந்தனாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்..
“சாவு வீட்டுக்குப் போனோமோ, வந்தோமோன்னு இல்லாம.. என்ன தாத்தா இதெல்லாம்?..” என்றாள் இதயா..
அப்படியே வளனின் பெண் ஜெராக்ஸ் போன்று நின்றிருந்தாள்..
“என்ன பேசுற இதயா?..” என கடுமையாக கேட்டார் வந்தனா..
அவரின் குரலில் சற்று அடங்கினாள் இதயா..
பின்னே வருங்கால மாமியார் அல்லவா அவர்.. அதனால் சற்று அடங்கிப் போவதை போல் நடித்தாள்..
“மாமா, இது உங்க வீடு.. நீங்க திருப்பதி மாமாவை பத்தி நிறைய சொல்லியிருக்கீங்க.. இப்போ அவரோட பேத்திக்கு அடைக்கலம் தரணும்னு நினைக்கிறீங்க?.. அதுல எங்களுக்கு எந்தவித ஆட்சபனையும் இல்லை.. தாராளமா அந்தப் பொண்ணு இங்கே தங்கட்டும்..” என் புன்னகை முகத்துடன் சொன்னார் வந்தனா..
அவரின் வார்த்தையில் தான் சற்று நிம்மதியானார் விஸ்வநாதன்..
“சரி ம்மா.. இந்தப் பொண்ணுக்கு ரூம்..” என்றார் விஸ்வநாதன்..
“நீ தனியா படுத்துப்பீயா ம்மா..” என்றார் வந்தனா.. இளங்கிளி சற்று பயத்துடன் கண்களை உருட்டினாள்..
“நீ தனியா படுக்கப் பயமா இருக்குன்னா, ஆர்த்தி ரூம்ல தங்க வைக்கிறதுக்காகத் தான் கேட்டேன்..”
“இல்லை நான் தனியா இருந்துப்பேன்..” என்றாள் இளங்கிளி..
“சரிம்மா.. அந்த ரூம்ல தங்கிக்கோ..” என்றதும், அவர் கைக்காட்டிய ரூமை நோக்கிச் சென்றாள் இளங்கிளி..
அறைக்குள் நுழைந்ததும் தான் தாமதம், ஏனென்றே தெரியாமல் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது..
அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையெல்லாம் ஒன்று திரட்டி அழுதுக் கொண்டிருந்தாள் இளங்கிளி..
இறந்துப் போன தன் தாத்தாவை நினைத்து அழுதாளா?.. இல்லை தன் வாழ்க்கையை நினைத்து அழுதாளா?..
இல்லை தன்னை நட்டாற்றில் விட்டு விட்டுச்சென்ற தாய், தந்தையை நினைத்து அழுதாளா?.. என்று அவளுக்கேத் தெரியவில்லை..
ஒரு கட்டத்தில் அழுதழுது ஓய்ந்து தரையிலேயே படுத்து உறங்கினாள்..
அடுத்த நாள் காலையில் தான் கண்களை விரித்தாள் இளங்கிளி..
அழகிய காலைப் பொழுதே, முதலில் தான் எங்கே இருக்கிறோம் என்றே அவளுக்குப் புரியவில்லை..
கண்களை நன்றாக இறுக்க மூடிக் கொண்டே, ஒரு நிமிடத்திற்குப் பின் மீண்டும் கண்களை திறந்தாள்..
தன் தாத்தாவின் ஞாபகம் தான் வந்தது..
அழுகையுடனே மெல்ல விழிகளை நிமிர்த்திப் பார்த்தாள்..
ஜன்னல் வழியாக சூரியக்கதிர்கள் அறைக்குள் தெளிவாக விழுந்தது..
தரையில் இருந்து எழுந்தவள், ஜன்னலை திறந்து விட, அரைகுறையாக உள்ளே வந்த வெளிச்சக்கதிர்கள்.. எந்த வித தடையுமின்றி வெப்பக்கதிர்களை அள்ளி வீசியது..
அதையும் ரசித்தாள் இளங்கிளி..
கண்களை மூடி ஒரு நிமிடம் நின்றிருந்தாள்..
உள்ளம் எதையோ உணர்த்த, வேகமாக கண்களை திறந்தாள்.. ஜன்னல் வழியாக தோட்டத்தில் நின்று அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த வளன் தான் கண்களுக்குத் தெரிந்தான்..
இருவரின் பார்வையும் ஒன்றொடொன்று மோதிக் கொண்டது..
அவனோ அவளை ஆராய்ச்சிப் பார்க்க, அவளோ சிறு பயத்துடனே பார்த்தாள்..
பிடிக்காத ஒருவனின் முகத்திலேயே காலையிலேயே முழிக்க வேண்டுமென்ற மனம் சுணங்கியது..
கதவு தட்டும் சத்தம் தான் இருவரையும் கலைத்தது..
“யார் அது?..” என நினைத்துக் கொண்டே கதவைத் திறந்தாள்.. ஆர்த்தி தான் நின்றிருந்தாள்..
“ஹாய்..” என்றாள் சிநேகப் புன்னகையுடன்,
“ஹாய்..” என்றாள் இளங்கிளி..
“ப்ரண்ட்ஸ்..” என கை நீட்டினாள்..
“ப்ரண்ட்ஸ்..” என்றாள் இளங்கிளியும்..
“அப்புறம், உங்க தாத்தா இறந்துட்டதா தாத்தா சொன்னாங்க..” என்றதும்,
அதுவரை தெளிந்த முகம் சற்று கசங்கிப் போனது..
“ஹேய்ய்.. சாரி.. சாரி.. பீல் பண்ணாதே.. அப்புறம் பக்கத்துல நிக்கிற உன் தாத்தா, என்னை அடிக்க வரப் போறாரு?..” என்றாள் கிண்டலாக,
இளங்கிளியின் முகம் அவளின் கிண்டலில் சற்று தெளிந்தது..
“என் தாத்தாவுக்கு, அடிக்க எல்லாம் தெரியாது?..”
“ம்ம்ம்.. என் தாத்தாவும் சொன்னாங்க.. ரொம்ப நல்லவராமே.. அவர் தான் எங்களுக்கு அப்பவே 5 லட்ச ரூபா பணம் கொடுத்தாங்களாம்.. அந்தப் பணத்தை முதலீடா வச்சித்தான், எங்க தாத்தா பிசினஸ் பண்ணாங்களாம்.. அப்புறம் அப்பா, அண்ணா எல்லாரும் சேர்ந்து எங்க பிசினஸ் இப்போ கொடிகட்டிப் பறக்குது..” என்றாள் ஆர்த்தி கள்ளங்கபடமில்லாமல்,
“ஓஹ்..” என முடித்துக் கொண்டாள் இளங்கிளி..
அவளுக்குமே இந்த விஷயங்கள் எல்லாம் தெரியும்.. அதனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
“சரி.. எவ்வளவு நேரம் ரூம்க்குள்ளேயே இருப்ப?. வெளியே வர்றீயா?..” என கேட்பதற்கும்,
“அத்தை..” என சம்யுக்தா ஓடி வந்து, ஆர்த்தியை அணைப்பதற்கும் சரியாக இருந்தது..
“சம்முக்குட்டி..” என ஆர்த்தியும் அவளை அணைத்துக் கொண்டாள்..
“அத்தை.. வா..” என ஆர்த்தியின் குர்தியை பிடித்திழுத்தாள்..
“உனக்கு எப்பவும் விளையாடிக் கிட்டே இருக்கணும்.. வா..” என அவளின் பின்னால் செல்ல.. அமைதியாக நின்றிருந்த இளங்கிளியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் ஆர்த்தி..
இளங்கிளிக்குமே அறையில் அடைந்துக் கிடப்பது பிடிக்கவில்லை..
அறையில் இருந்து மூவரும் வெளியே வர, “அத்தை எனக்கு அந்த தும்பியை பிடிச்சிக் கொடுங்க..” என்றாள் சம்யுக்தா..
“ஹேய்ய்.. எனக்கு தும்பி எல்லாம் பிடிக்கத் தெரியாது.. நீயே போய் பிடிச்சிக்கோ.. போ..”
“அத்தை எனக்கு தும்பி வேணும்..”
“உனக்கு வேணும்னா, நீதான் போய் பிடிக்கணும்.. எனக்கு இதெல்லாம் தெரியாது..”
“இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்திருக்கீயே, உனக்கு இதுக்கூட தெரியாதா?..”
“அடிங்.. வாலு.. உனக்கு தேவைன்னா நீ பிடி டி..” என இவளும் முரண்டு பிடிக்க..
“இப்போ நீ பிடிச்சித் தரலை.. நீ லவ் பண்ற விஷயத்தை வீட்ல போட்டுக் கொடுத்திடுவேன்..” என்றவளின் வாயை கப்பென்று அடைத்துக் கொண்டாள் ஆர்த்தி..
எதிரில் நின்றிருந்த இளங்கிளியைப் பார்த்து அசட்டுப் புன்னகை ஒன்றை உதிர்த்தவள், கண்களை சுருக்கி “யார்க்கிட்டையும் சொல்லிடாதே ப்ளீஸ்.. அண்ணாவுக்கு தெரிஞ்சா என்னைக் கொன்னுப் போட்டுரும்..” என்றாள் கெஞ்சுதலாக..
