என் வாழ்க்கை எனும்
கவிதையில் சிதைக்கப்பட்ட வரிகளின் வலியோ என் காதல்…!
காதலும் குறையவில்லை.
அதனால் ஏற்படும் ரணங்களும் மறையவில்லை…!
உன்னில் சிறையாகிறேன் – 13
“யாழிம்மா நீங்க விளையாடுங்க தங்கம், அம்மா போய் உனக்கு பால் எடுத்துட்டு வரேன்” என்று குழந்தையிடம் கூறி விட்டு கீழே வந்த அருவி,
நேராக சமையலறைக்குள் நுழைந்தாள்.
அதைக்கண்ட சமையல்காரர் பதறிப் போய் தடுத்தார்.
“அம்மா அம்மா, நீங்க கிச்சனுக்குள்ள வரக்கூடாதுன்னு சின்னய்யா சொல்லிருக்காரும்மா, அதையும் மீறி வந்தா, என்னோட வேலை போயிரும்மா” என்று தயக்கத்துடன் கூறினார் சமையல்காரர்.
“நீங்க உங்க சின்னாய்யாவுக்கு வேலை செய்யுறதை விட, போடா நீயும் உன் வேலையும்னு சொல்லி வேலையை விட்டுட்டு போறதே பெட்டர்” என்றாள் அருவி.
“வீட்ல பொண்டாட்டி புள்ளைன்னு என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கேம்மா, அவர்களுக்காகவாவது வேலை செஞ்சுதானே ஆகணும். அதையும் தாண்டி, எங்க சின்னய்யா ரொம்ப நல்லவருங்க,”” என்றார் சமையல்காரர்.
“உங்க சின்னய்யா எவ்ளோ நல்லவர்ன்னு எனக்கு தெரியும், அதை நீங்க சொல்லித் தெரிஞ்சுக்க வேண்டாம். இப்போ என் குழந்தைக்கு பால் வேணுமே, உள்ள வராம எப்படி ரெடி பண்றது?” என்று கேட்டாள் அருவி.
“அதுக்கு தாம்மா நான் இருக்கேன், நான் போட்டுத் தர்றேன்” என்று கூறி,
ஐந்தே நிமிடத்தில் பால் காய்ச்சி அதில் தேன் கலந்து கொண்டு வந்து கொடுத்தார் சமையல்காரர், அதை வாங்கிக் கொண்டாள் அருவி.
“அம்மா உங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட்டுக்கு என்ன மெனுன்னு சொன்னீங்கன்னா சமைச்சி உங்க ரூமுக்கே குடுத்து விடுவேன்” என்று கேட்டார் சமையல்காரர். அருவி சிறிது யோசித்துவிட்டு,
“எனக்கு எதுவும் வேண்டாம், பாப்பாவுக்கு மட்டும் காரமில்லாத இட்லி செஞ்சு கொடுங்க” என்று சொல்லிவிட்டு தன்னறைக்குத் திரும்பினாள்.
சமையல்காரர் கொண்டு வந்து கொடுத்த உணவை யாழினிக்கு ஊட்டிவிட்டு, அவளை மீண்டும் விளையாட வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள் அருவி.
அக்னி அலுவலகம் சென்ற பிறகு, அந்த வீடே ஒருவித மயான அமைதிக்குள் மூழ்கியது, மாடியின் நீண்ட வராண்டாவில் நின்று அந்த மாளிகையை ஒருமுறை முழுதாகப் பார்த்தாள்,
பளிங்குத் தரைகள், கலைநயமிக்க வேலைப்பாடுகள், விலை உயர்ந்த அலங்காரப் பொருட்கள் என அனைத்தும் அந்த வீட்டின் அந்தஸ்தைப் பறைசாற்றின, ஆனால், ஏனோ அந்தப் பிரம்மாண்டம் அவளை மூச்சு முட்ட வைத்தது.
”பெண்கள் இல்லாத ஆண்கள் வாழும் வீடு அர்த்தமற்றதாக தோன்றியது, அவளுக்குள் ஒரு மெல்லிய நடுக்கம் பரவியது,
சமையல்காரர், வாட்ச்மேன், தோட்டக்காரர் என அவள் பார்த்த முகங்கள் அனைத்தும் ஆண்களாகவே இருந்தது,
இந்த வீட்டில் ஒரு பெண் வாசனை கூட இல்லையா, குறைந்தது வேலைக்குக் கூட ஒரு பெண் இல்லையா, என்ற கேள்வி அவள் உள்ளத்தைக் குடைந்தது.
”இவ்வளவு பெரிய வீட்டில் வாழ வேண்டிய பெண்கள் எங்கே, அக்னியின் அம்மா, அவனது பாட்டி, அல்லது அவர்களின் ஒரு புகைபடம் கூடவா இல்லை” என்று எண்ணினாள் மகிழருவி,
அவளது தேடல் அவளை ஒவ்வொரு சுவரிலும் இருந்த ஓவியங்களை கவனிக்க வைத்தது, ஆனால் எங்கும் அவளுக்கான விடை இல்லை,
அவளின் மண்டைக்குள் ஓடும் பலவிதமான கேள்விகளை யாரிடம் கேட்பது? கீழே வேலை செய்யும் சமையல்காரரிடம் கேட்டால், அவர் உடனே அந்த முரடனோட புகழாரத்தை பாட ஆரம்பிச்சிடுவார்.
இங்கிருப்பவர்கள் அனைவரும் அக்னியின் அவன் மீது அலாதி விஸ்வாசம் கொண்டவர்கள், அவளிடம் அவர்கள் உண்மையைச் சொல்வார்களா என்பது சந்தேகமே,
”இந்தத் திருவாசகம் தாத்தா அவர் மட்டும் தான் என்னிடம் கனிவாகப் பேசுறார், அவரிடம் கேட்கலாமா, ஆனால் அவரே ஏதோ ஒரு ரகசியத்தை மறைச்சு தான் என்னை இந்த வீட்டுக்குள் கூட்டிட்டு வந்திருக்கிறார் என்பது மட்டும் உறுதியா தெரியுது” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள்,
ஏதோ ஒரு யோசனையில் உழன்றவள் எதார்த்தமாக
அவள் கைகள் தானாக அவள் கழுத்தைத் தடவ அதில் இருந்த தாலி தட்டுப் பட்டது, அதை எடுத்துப் பார்த்தாள்,
“உனக்கும் எனக்கும் இங்க மதிப்பே இல்ல” என்று கூறி தன் நெஞ்சுக்குழிக்குள் பத்திரப் படுத்தினாள் மகிழருவி.
மறுநாள் காலை, திருவாசகம் தோட்டத்து பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அக்னி அலுவலகம் கிளம்புவதற்கு முன் சில கோப்புகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது வாசலில் ஒரு கார் வந்து நின்றது, அதில் இருந்து இறங்கி அக்னியின் பி.ஏ (P.A.) திலீப் உள்ளே நுழைந்தான்,
கையில் ஒரு பெரிய லேப்டாப் பேக் மற்றும் சில ஃபைல்களுடன் வந்த திலீபன், அவன் போர்டிகோவில் நுழையும்போது போது அங்கே அருவி யாழினியுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
அப்படியே சிலையாக நின்றான், அவன் கண்களைத் தேய்த்துக் கொண்டு மீண்டும் பார்த்தான், அவனால் நம்ப முடியவில்லை, வீடு மாறி வந்து விட்டோமா என்ற சந்தேகமும் வந்தது,
அப்போது அருவி திரும்பி அவனைப் பார்த்தாள். திலீபன் பதற்றத்தில் கையில் இருந்த ஃபைல்களைக் கீழே போட்டான்.
”ஐயோ, மன்னிச்சுடுங்க மேடம், நான் தெரியாம வேற ஏதோ வீட்டுக்கு வந்துட்டேன்னு நினைக்கிறேன், இது அக்னி சார் வீடு இல்லையா” என்று கேட்டபடி அவசர அவசரமாக பைல்களைப் பொறுக்கி எடுத்தான்,
அவனின் செய்கையைப் பார்த்து யாழினி ‘கல கல’வெனச் சிரித்தாள்,
சிரிப்பு சத்தம் கேட்டுத் திருவாசகம் மெல்ல எழுந்து வந்தார், அங்கே திலீபன் இருக்க அவனைப் பார்த்தவர்,
”என்னப்பா திலீப் என்ன ஆச்சு” என்று கேட்டார்,
“தாத்தா சார், நல்ல வேளை நீங்க வந்தீங்க, நான்தான் வீடு மாறி வந்துட்டேன்னு நினைச்சேன். நீங்களும் வீடு மாறி வந்துட்டீங்களா? சரி சரி வாங்க,
நம்ம வீட்டுக்கு போவோம், அக்னி சாரு எனக்காக வெயிட் பண்ணுவார், அப்புறம் லேட்டானா அதுக்கு சம்பளத்துல கை வச்சுடப் போறார். வாங்க போவோம்” என்று திருவாசகத்தை அழைத்தான் திலீபன்.
“டேய் என்ன காலங்காத்தால உளறிட்டு இருக்க, தலையில அடிபட்டு எல்லாத்தையும் மறந்துட்டியா, கண்ணைத் திறந்து நல்லா பாருடா” என்றார் திருவாசகம்.
சுற்றும் முற்றும் பார்த்தது விட்டு திரும்பியவன், முன்னால் அனலாக முறைத்துக் கொண்டு நின்றான் அக்னி.
“சார்… நீங்களா?” என்றான் இழுவையாக,
“உன்னை எத்தனை மணிக்கு வரச் சொன்னா நீ எத்தனை மணிக்கு வந்திருக்க? வந்ததே லேட்டு. இதுல வாசல்ல நின்னு வெட்டிக் கதை பேசிட்டு இருக்கியா?” என்று அடிக்காத குறையாக மிரட்டலான தோரணையில் கேட்டான் அக்னி.
“அது.. வந்து.. சார், இந்த வீட்ல ஒரு ஈ, எறும்பு கூட ஆம்பளையாத்தான் இருக்கும்னு இவ்வளவு நாள் நினைச்சேன், ஆனா இப்போ இங்கே ஒரு தேவதை நின்னதும் அதுதான் வீடு மாறி வந்துட்டனோன்னு நினைச்சு கன்பியூஸ் ஆகிட்டேன்” என்று திலீபன் சொல்ல அக்னி கடுப்பானான்,
“உன் கண்ணில் ஏதோ கோளாறாகிடுச்சுன்னு நினைக்கிறேன். உளறாம உள்ளே வா, எல்லாத்தையும் சரி பண்ணி விடுறேன்” என்று கூறி அருவியை முறைப்பாக பார்த்தவன் திரும்பி உள்ளே வேகமாக சென்றான்.
திருவாசகம் விடவில்லை,
“உனக்கு மட்டும் இல்ல, எனக்கே சில நேரம் டவுட் வருது. அருவி வந்தப்புறம் இந்த வீடே மாறிப் போச்சு. இந்த வீட்டுக்கு வர்ற யாருமே இனி வீடு மாறி வந்துட்டோம’ன்னு தான் நினைப்பாங்க. அந்த அளவுக்கு அருவி இந்த வீட்டை வீடா மாத்திட்டா” என்று அக்னியின் காதுகளில் விழும்படி கத்தலாக சொன்ன திருவாசகம்,
“இவ தான் எங்க வீட்டு மருமக என் பேரன் அக்னியோட பொண்டாட்டி பேரு அருவி” என்று திருவாசகம் திலீபனிடம் அருவியை அறிமுகப் படுத்தி,
திலீபனால் நம்ப முடியவில்லை.
“சாரி மேடம், நீங்க யாருன்னு எனக்குத் தெரியாம ஏதோ மிஸ் அண்டர்ஸ்டேன்டிங் ஆகிடுச்சு, நான் அக்னி சார் கிட்ட நாலு வருஷமா வேலை பார்க்கிறேன், அவருக்கு மேரேஜ் ஆயிடுச்சுங்கிறதே எனக்கு பெரிய ஷாக் தான் தப்பா எடுத்துக்காதீங்க மேடம்” என்றான் ஆச்சரியம் விலகாமல்,
“இட்ஸ் ஓகே” என்றாள் அருவி, திலீபனும் அக்னியை தேடி அவனின் அலுவலக அறைக்குச் சென்றான்,
“சார், நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்களா? அதுவும் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டீங்களா? என்னால நம்பவே முடியல சார்.
“ஏன் சார், எங்கிட்ட கூட சொல்லாம பண்ணீங்க? ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானும் நீங்க தாலி கட்டுறதைப் பார்த்து சந்தோஷப் பட்டிருப்பேன், இல்ல சார்?” என்று திலீபன் பூரிப்பாக சொல்ல,
“ஒழுங்கா வந்த வேலைய மட்டும் பாரு திலீப், இல்லன்னா உன்னை வேலையை விட்டு இப்பவே தூக்கிடுவேன்” என்று மிரட்டினான்.
”வேலை என்ன சார் பெரிய வேலை, உங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்கு அது கூட தெரியாம பத்து நாளா வெளியூர்ல வேலை பார்த்துட்டு இருந்திருக்கேன்,
உங்களுக்கு நடந்தது கல்யாணம் இல்ல சார், அது எங்களுக்கு நியூயர், பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்மஸ் விட பெருசா கொண்டாட வேண்டிய செலிபிரேஷன் சார்.
உங்க கல்யாண நாளை விட இந்த நாளை உங்க லைஃப்ல மறக்க முடியாத நாளா மாத்திடுறேன் சார். அதுக்கு இப்ப உங்கிட்ட பர்மிஷன் வாங்கிக்கறேன். வரட்டுமா சார்” என்று கூறி விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான் திலீபன்.
“இங்க என்ன நடக்குதுன்னே தெரியாம, இவன் வேற ஏதேதோ உளறிட்டு போறானே, ஏதாவது ஏடாகூடமா பண்ணித் தொலைச்சிருவானோ, இவன் ஒரு சரியாகாத லூசாச்சே, என்ன பண்ணப் போறானோ,
“டேய் அக்னி, இந்த வீட்லதான் தான் அவ இருக்கான்னு தெரியும் இல்ல? அப்புறம் ஏன்டா இந்த லூசுப்பயல வரவழைச்ச? உனக்கு சூனியம் யாரும் வைக்க வேணாம், நீயே போதும்” என்று தனக்குத் தானே புலம்பினான் அக்னி.
“என்னடா போன வேகத்துல திரும்பி வந்துட்ட, உன் சாரு வேலையை விட்டு துரத்திட்டானா” என்று திருவாசகம் கேட்க,
“அவரே விரட்டினாலும் நான் போகமாட்டான், உலக அதிசயத்துல ஒன்னா அக்னி சாருக்கு கல்யாணம் ஆகிடுச்சு, அதை செலிபிரேட் பண்ணி கொண்டாட வேண்டாமா அதுக்கு தான் ராக்கெட் ஸ்பீடுல போயிட்டு இருக்கேன், குறுக்க யாரும் வந்து தடுக்காதீங்க தாத்தா சார்” என்று கூறிச் சென்றான் திருவாசகம்,
“என்ன தாத்தா இது? இவரு என்னென்னமோ சொல்லிட்டு போறாரு. எனக்கு ஒன்னும் புரியலை” என்று அருவி குழப்பமாக கேட்க,
“படத்துல வர்ற காமெடி சீன் மாதிரி அவனவன் எடுக்கிற முடிவெல்லாம் நமக்கு சாதகமாத்தான் அமையுது. உங்க கல்யாண விஷயத்தை எப்ப எல்லார்கிட்டயும் சொல்லலாம்ன்னு யோசனையா இருந்தேன்.
அதுக்கு வேலையில்லாம போயிடுச்சு, இனிமே நான் நினைச்சது எல்லாம் தானா நடக்கும், நாம நடக்கிறதை வேடிக்கை மட்டும் பார்த்தா போதும்” என்று கூறி விட்டுச் சென்றார் தாத்தா.
தாத்தாவையே புரிந்து கொள்ள முடியாத புதிராக பார்த்தாள் மகிழருவி.
தொடர்ந்து வாசிப்போம் வாங்க.
