அத்தியாயம்- 2

பாகம் – 2. கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சு.

கணவன் சொன்னதுமே அவன் தோள்களில் ஆசையாய் சாய்ந்து கொள்கிறாள்..
“ஆனா எனக்கு ஏனோ உங்களை பார்த்தா பயமா தான் இருக்கும்.வீட்ல பெரியவங்க கிட்ட சொல்லி உங்களை மிரட்டலாம்னு கூட நினைச்சேன் ..ஆனா அன்றைக்கு கோவிலில் கூட்டம் இல்லை ..நீங்களும் நானும் மட்டும்தான் ..நான் கூட அப்படியே திரும்பி விடலாமா.. கூட்டம் வந்த பிறகு வந்து சாமி கும்பிடலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் செய்த காரியம் தான் என்னை உங்களிடம் பேச வைத்தது.. ” சொன்னவள் சிரிக்கிறாள்..

அரவிந்தோ “ஏன்டி அதைப் போய் ஞாபகம் மூட்டுகிறாய்.. ” என அசடு வழிகிறான்..

“உங்களுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை..ஆனால் அந்த தருணம் எனக்கு உங்கள் மீது மிகுந்த நம்பிக்கையையும் மதிப்பையும் கொடுத்தது.. யார் என்றே தெரியாத ஒரு பெண்ணின் காலில் விழுந்து நீ தான் என்னுடைய குலதெய்வம் என்று சொன்னால் அந்த பெண்ணுக்கு எத்தனை ஆனந்தமாய் இருக்கும் தெரியுமா..”

“இப்ப நல்லா சொல்லு. அந்த டைம்ல எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. இப்படியே உன்னை சுற்றிக் கொண்டு இருந்தால் பார்ப்பவர்கள் என்னை பொறுக்கி என்று ஆள் வைத்து அடித்தாலும் அடிப்பார்கள்.. நீயோ என்னை பார்த்தாலே பயந்து பயந்து ஓடுகிறாய்..அதனால்தான் சுற்றிலும்  பார்த்து யாரும் இல்லை என்றதும் உடனே உன் கால்களில் விழுந்து உன்னிடம் சரணாகதி அடைந்து விட்டேன் ..அப்பொழுது விழுந்தவன் தான்டி இன்னமும் எழுந்திருக்கவே முடியவில்லை .. அம்மா அகிலாண்டேஸ்வரி தாயே என்னை பத்திரமாக பார்த்துக் கொள்ளடி .. “

அரவிந்த் பேசவும் மித்ராவுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை..”ஐயோ போதும் ரொம்பத்தான் .. இப்படி பேசியே தான் என்னை மயக்கி விட்டீங்க ..இல்லா விட்டால் எனக்கு இருந்த பயத்திற்கு நான் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன் .யாரும் பார்ப்பவர்கள் என்ற பதட்டத்தில் உங்களைத் தொட்டு தூக்கி நிற்க வைத்து விட்டேன் .. “

விட்டதை அவன் தொடர்கிறான்.. “ஆமா செய்து விட்டாயே தவிர, உன்னுடைய உடம்பு படபடவென்று நடுங்கியது.. எனக்கு அப்போது எப்படி தெரியுமா இருந்தது .உன்னை இறுக கட்டி அணைத்து உனக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று தோன்றியது .. “

“ஏன் அப்படி செய்ய வேண்டியது தானே.. “

“இப்ப நல்லா வாய் பேசு .. அப்படி செய்திருந்தால் என் நெற்றியில் ரவுடி என்று அச்சு குத்தி அதோட என்னை திரும்பி பார்க்காமலே ஓடிப் போயிருப்ப.. “

“நீங்க சொல்றதும் உண்மைதாங்க.. நீங்க கண்ணியமாக என்னிடம் பேசினீங்க. “சார் ஏன் இப்படி வயசு பொண்ணு காலில் விழுறீங்கன்னு நான் கேட்டதும், “என்னுடைய குலதெய்வமே நீதாம்மா..  எனக்காக இந்த பக்தனுக்காக கொஞ்சம் கருணை காட்டி என்னை உன்னோடு வைத்துக் கொள்ளடி ..அம்மா தாயே ஈஸ்வரி .. “என்றதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது ..

வீட்டுக்குப் போய் உங்களைப் பற்றியே தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படி கூடவா லவ் ப்ரொபோஸ் பண்ண முடியும் என்று..வெளியில் யாரிடமாவது சொன்னால் உங்களை சரியான பழம் என்று கிண்டல் செய்வார்கள்.. ஆனால் எனக்கு இப்படித்தான் பிடித்திருந்தது.. நீங்கள் ரோட்டில் நின்று ரோஜாவை நீட்டி ஐ லவ் யூ என்று சொல்லி இருந்தால் கூட நான் உங்களை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் .. “

“நீதான் சரியான சாமி பக்தையா இருக்கியே.. அதனால் தான் நானும் உன் பக்தனாய் மாறி விட்டேன்..தாயே ரொம்ப நேரமாக பேசி விட்டோம் ..இந்த பக்தனுக்காக கொஞ்சம் மனம் இரங்கி அந்தக் கட்டில் பக்கமாய் வர முடியுமா..” என்றதும் மித்ராவுக்கு சிரிப்பு வந்து விடுகிறது..அவனை செல்லமாய் அடிக்கிறாள்..

” சீ நாயே சாமியை பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது சிந்தனை எல்லாம் எங்கே போகிறது.. “

” பக்தன் கேட்டால் தெய்வம் மறுக்கவே கூடாது தாயே.. ” சொன்னவன் அவளை கையில் அள்ளி தூக்கிச் செல்கிறான். அதற்குப் பிறகு அங்கே பேச்சு என்ன வேண்டி கிடக்கிறது..

சொல்வது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறது ..அவர்கள் ஒரு வருடம் வரை குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார்கள் ..ஆனால் மறுநாள் காலையில் மித்ராவுக்கு எழுந்ததில் இருந்தே வயிற்றைப் பிரட்டிக் கொண்டு தலையை சுற்றுகிறது..

கணவனைத் திட்டுகிறாள் .. “போங்க எல்லாம் உங்களால தான் ..ராத்திரி போதும் போதும் என்று சொன்னாலும் எங்கே என்னை விடுகிறீர்கள். எனக்கு தூக்கம் போதாமல் எழுந்ததுமே தலையை சுற்றுகிறது .. என்னால முடியாதுப்பா..நான் போய் தூங்க போகிறேன்..இன்றைக்கு காலை உணவை நீங்கள் தான் தயார் செய்ய வேண்டும் .. “

“சரிடி எனக்கு அதை விட்டு வேறு என்ன வேலை .இப்பொழுது நீ நன்றாக தூங்கினால் தான் இரவு எனக்கு சரிப்பட்டு வரும்.. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்கு போ .. “என்று மனைவி தூங்குவதற்கு அனுப்பி விடுகிறான் அவளும் படுத்ததுமே அசந்து தூங்கி விடுகிறாள்.. எழுந்ததும் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருப்பதைப் போல உணர்கிறாள்..

” பார்த்தீங்களா  தூங்கி எழுந்ததும் உடம்பு நன்றாகி விட்டது ..என்ன சாப்பாடு செய்தீர்கள்.. ” கேட்டு கணவன் செய்த சாப்பட்டை ஆசையுடன் சாப்பிட்டு முடிக்கிறாள்..

” உங்கள் சாப்பாடு ரொம்ப அருமைங்க.. நான் நிறைய சாப்பிட்டு விட்டேன்.. என்ன ஆகப் போகிறதோ.. ” சொல்லி வாயை மூடுவதற்குள் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு அப்படி ஒரு வாந்தி வருகிறது.. பாத்ரூமுக்கு வேகமாக ஓடுகிறாள்..

அவனும் பின்னேயே பதறி கொண்டு ஓடி வருகிறான்.. அவள் தலையை பிடித்து விட்டு வாந்தி எடுத்ததும் அழைத்து வந்து ஆசுவாசம் செய்து படுக்க வைக்கிறான்..

” மித்ரா குட்டிக்கு என்ன ஆச்சு..  நன்றாக தானே இருந்தாய் ..காலையில் இருந்து ஏதாவது மாற்றி மாற்றி செய்து கொண்டே இருக்கிறது ..நேற்று இரவு என்ன சாப்பிட்டாய் .. “

அவள் பதிலே சொல்லாமல் அப்படியே இருக்கவும் மனைவி பயத்தில் அழுகிறாளோ என்ற கவலையுடன் ” என் மித்ரா குட்டிக்கு உடம்பு ஏதாவது செய்கிறதா.. ஏன்டி அழற..பயப்படாதே எதுவும் இருக்காது.. வா உடனே டாக்டரிடம் போய் வருவோம்.. ” அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்கிறான்..

அவள் முகமோ வெட்கத்துடன் மலர்ந்த தாமரையாய் மகிழ்ச்சியுடன் தென்படுகிறது ..அப்பொழுதும் அரவிந்துக்கு எதுவும் புரியவில்லை..

“அடியே வாந்தி எடுத்துட்டு சிரிக்கிற ஒரே ஆள் நீயாதான்டி இருப்ப..நான் வேற வீட்டில் பெரியவங்க யாரும் இல்லையேன்னு பயந்து கொண்டு இருக்கிறேன்.. நீ வேற சிரிக்கிறாயே..”

மித்ரா சிரித்த படியே அவன் கையை தன் வயிற்றில் வைத்து அவனைப் பார்த்து  புன்னகை செய்கிறாள்.. அப்பொழுது தான் அவனுக்கு புரிகிறது .தன்னுடைய உயிர் புதிதாக முளைத்திருப்பதை ..

அவ்வளவுதான் அவளை தூக்கி வைத்து சுற்றுகிறான்..” என் தங்கமே என்னை அப்பாவாக்கிட்டடி. உனக்கு ரொம்ப ரொம்ப தேங்ஸ்டி..”மனம் முழுக்க நிறைந்த அந்த சந்தோஷத்தில் அவனுக்கு அழுகையே வரும் போல இருக்கிறது ..

அவளை சுற்றவும், ” போதும்  அரவிந்த். எனக்கே மயக்கமாக இருக்கிறது.. நீங்கள் வேறு இப்படி வைத்து சுற்றுகிறீர்கள்.. கீழே இறக்கி விடுங்க..” அவள் சொன்னதும் தான் அவள் நிலைமை அவனுக்கு புரிகிறது ..

அதன் பிறகு அம்மாவுக்கு அம்மாவாய்,கணவனாய் , தன் குழந்தைக்கு தந்தையாய் எல்லா வகைகளும் மித்ராவை பத்திரமாய் கவனித்துக் கொள்கிறான்..

மனம் கோணாமல் அவளை கவனித்தாலுமே எப்பொழுதும் அவள் முகம் வாடியேக் கிடப்பதை கண்டு கொள்கிறான்..

” உனக்கு ஏதாவது செய்கிறதாடி.. ஏன் இப்படி வாட்டமாகவே இருக்க..”

” அதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்லை.. நான் நன்றாகதான் இருக்கிறேன்.. நீங்கள் அப்படி நினைத்துக் கொள்கிறீர்கள் ..எனக்கு என்ன குறைச்சல் ..இப்படி ஒரு நல்ல புருஷன் என் அருகில் இருக்கும் போது நான் ஏன் கவலைப்பட வேண்டும்.. “

வாய் சொல்கிறதே தவிர அவள் மனம் முழுக்க தன்னை பெற்றவர்களையும் தன் தங்கைகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் ..

அவனிடம் சொன்னால் கண்டிப்பாக அழைத்து வருவான் தான்..’ஆனாலும் தன் அப்பா அம்மா வர வேண்டுமே .. என் ஆசைக்காக போய் கூப்பிட்டும் அவமரியாதை செய்தால் என்னால் என் கணவனுக்கு தானே அவமானம்.., அவள் எண்ணுவதை அவள் சொல்லாமலேயே புரிந்து கொள்கிறான்..

மறுநாள் காலையில் அசந்து தூங்குகிறாள்.. இப்பொழுது எல்லாம் தாமதமாக எழுந்து அவன் தயார் செய்த உணவுகளை பிடிவாதமாய் சாப்பிட்டு மாத்திரை மருந்துகளை விழுங்கி அதன் பிறகு முழுக்க ஓய்வுதான்.. இன்று என்னவோ காலையில் இருந்து ஒரே சத்தமாக இருக்கவும் அவளுக்கு  தூக்கம் பிடிக்காமல் அந்த சப்தம் தொந்தரவாக இருக்கிறது ..

கண்களை திறக்காமலேயே,”அரவிந்த் என்ன சத்தம் காட்டிக் கொண்டே இருக்கீங்க.. என்னால் தூங்கவே
முடியல.. “

கனவில் அம்மாவின் குரல் கேட்பதைப் போல இருக்கிறது.. அந்த குரலை கேட்க மித்ராவுக்கு ஆனந்தமாக இருக்கிறது..

“நல்லா இருக்குடி புருஷனை சமைக்க விட்டுட்டு நீ தூங்குறியா ..

அவளும் கனவிலேயே பதில் சொல்கிறாள்.. “ஆமாம்மா எனக்கு நீங்க யாருமே இல்ல ..பிறகு அவங்க தானே என்னை கவனித்துக் கொள்ள வேண்டும்.. வேற என்ன செய்வது.. ” சொன்னவள் திரும்பவும் தூங்குகிறாள்..

” அடியே நான் பாட்டுக்கு கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன் ..நீ என்ன திரும்பவும் தூங்குற ..எழுந்து உட்கார போறியா இல்லையா..” இப்போது அம்மாவின் குரல் நிஜமாகவே கேட்கவும் உடனே எழுந்து உட்கார்ந்து கொள்கிறாள்..

சுற்றிலும் தன் உயிர்கள் நிற்கவும் அவளால் கண் கொண்டு அதை காண முடியவில்லை..வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு அம்மா அப்பா தங்கைகளை ஏறெடுத்துப் பார்க்கிறாள்..

தங்கைகள் ஓடி வந்து அக்காவை கட்டிக் கொள்கிறார்கள் ..எதிரே அரவிந்த் குறும்புடன் சிரிக்கிறான் ..

“எல்லாம் நீங்க செய்த வேலை தானா..” சொன்னவள் கையெடுத்து கும்பிட்டு அழுகிறாள்..

அவள் செய்வதை பார்த்ததுமே அவனுக்கு மனம் உருகுகிறது.. ஏன்டி எதற்காக இப்படி செய்கிறாய்..சும்மா இரு,உண்மையிலேயே அத்தையும் மாமாவும் ரொம்ப நல்லவங்க தான்.. நம்ம தான் அவங்களை புரிந்து கொள்ளாமல் இவ்வளவு நாள் விலக்கி வைத்திருக்கிறோம்.. “

அவன் செய்ததற்கு பிரதி உபகாரமாக தானும் ஒன்று செய்ய வேண்டும் என்று மித்ரா எண்ணுகிறாள்..

உடனே , ” என் அப்பா அம்மாவை மட்டும் வர சொன்னால் போதுமா. உங்க அப்பா அம்மா வர வேண்டாமா அரவிந்த்..”

“அவங்க தான் நம்மளை சேர்த்துக் கொள்ளவே இல்லையே.. பிறகு எப்படிடி நான் கூப்பிடுவது .. “

“சிறிது நேரத்துக்கு முன்பு என்ன சொன்னீங்க..நம்ம தான் புரிந்து கொள்ளாமல் விலக்கி வைத்திருக்கிறோம் என்று.. அதே தான் அத்தைக்கும் அம்மாவுக்கும் .. முதல்ல உங்க போனைக் கொடுங்க ..நான் அத்தையிடம் பேசுகிறேன் .. ” சொன்னவள் அவன் என்ன சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாய் இருக்கிறாள்..

 அரவிந்த் கல்யாணமான ஆரம்பத்தில் இரண்டு பேருக்கும் அடிக்கடி போன் செய்து தான் பார்த்தான் ..முதல் முறை செய்து பார்த்த பிறகு இருவரின் போனுமே சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது..

“மித்ரா இது தேவையில்லாத வேலை.. அவங்க என்னுடைய நம்பரை ப்ளாக்கில் போட்டு விட்டார்கள்..போன் வேலை செய்யாது ..நான் எத்தனையோ முறை முயற்சி செய்து இருக்கிறேன்..”

” நீங்கள் முதலில் போன் போட்டு கொடுங்க.. ரிங் போகிறதா என்று பார்ப்போம்.. “வேறு வழியில்லாமல் ஃபோன் செய்து கொடுக்கிறான்..

“என்னமோ சொன்னீங்க ..இதோ சாங்ஸ் போகுது இருங்க, இருங்க.. “

“கிழவி நான் போன் செய்யவில்லை என்றதும் தைரியமாக சுவிட்ச் ஆஃப் எடுத்து விட்டதா..” அவன் திட்டுவதற்குள் அரவிந்தின் அம்மா கயல் பேசுகிறார்.. மித்ரா கணவனும் கேட்கட்டும் என்று ஸ்பீக்கரில் தான் போட்டு வைக்கிறாள்..

தொடரும்

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page