அத்தியாயம் – 4

பாகம் – 4

“அப்படி என்றால் நீங்களும் என்னிடம் மறைத்து விட்டீர்களா.. உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் .. “

“ஆமாடி என்ன செய்வது ..உனக்கே உடம்பு சரியில்லாமல் இருக்கு.. ஏதாவது அதிர்ச்சியான செய்தியை கேட்டு ஏதாவது ஆகி விட்டால் இத்தனை வயசுக்கு மேல் எனக்கு யாரடி பெண் கொடுப்பாங்க ..அதனாலதான் அமைதியா இருந்து விட்டேன்..”

” அப்படியா செய்தி உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்று தெரிந்தால் நான் என்றைக்கோ என் மருமகளை வீட்டுக்கு அழைத்து வந்திருப்பேனே.. எல்லாவற்றையும் மூடி வைத்து கழுத்தை அறுத்து இப்பொழுது பாருங்கள்.. என் பேரப்பிள்ளை வந்து தான் சேர்த்து வைத்திருக்கிறான்.. சரி எல்லாம் போனது போகட்டும்.. இனிமேலாவது எது நடந்தாலும் என்னிடம் வந்து சொல்லித் தொலையுங்கள்.. “மிரட்டி விட்டு உள்ளே நுழைந்த கயல் வாசலில் நின்ற மீனுவையும் சக்தி வேலையும் பார்த்து விட்டு மகனிடம் கேள்வி கேட்கிறார்..

“இவங்க இரண்டு பேரும் யாருடா..”

” என்னுடைய அப்பாவும் அம்மாவும் .. “மித்ரா பதில் சொல்லவும் மகனிடம் திரும்பவும் சண்டைக்கு போகிறார்..

” உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்டா ..முதல்ல இந்த செய்தியை என்கிட்ட தானே சொல்லணும் ..அது என்ன அவ அம்மா அப்பா கிட்ட சொல்லி இருக்க..”

அம்மாவின் தோளில் கை போட்ட படியே உள்ளே நடத்திச் செல்கிறான்..” சரிமா எதுவா இருந்தாலும் உள்ளே போய் பேசிக்கலாம் ..எனக்கு ரொம்ப பசிக்குது.. சீக்கிரமா சாப்பாடு வை.. “

மகன் பசிக்கிறது என்று சொன்னதுமே உடனே கயலுக்கு எல்லாம் மறந்து விடுகிறது .. “அச்சோ அண்ணி சமையல் ஆயிடுச்சா ..இவனுக்கு பசிக்குதாம்ல.. சீக்கிரமா வாங்க நம்ம சாப்பாடு பரிமாறுவோம் .. “என்று மீனுவின் கையை பிடித்து இழுத்துச் செல்கிறார்..

கொஞ்சம் பயந்து நின்ற மீனு இப்பொழுது தைரியமாகிறார்.. ‘அப்படி என்றால் மாப்பிள்ளையின் அப்பாவும் அம்மாவும் நல்லவர்கள் தான் ..,என்று ..

‘என் மகள் கடைசிவரை சந்தோஷமாய் நிம்மதியாய் வாழ வேண்டும் ..,என்று கடவுளை வேண்டிய படியே உள்ளே சந்தோஷமாக செல்கிறார்..

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் மித்ராவின் குழந்தை அவள் வயிற்றில் அழகாய் வளர்கிறது.. இப்பொழுது கயல் தாங்கள் இருந்த வீட்டிற்கு மகனையும் மருமகளையும் அழைத்து சென்று விடுகிறார்..இருவருக்குமே நல்ல கவனிப்பு ..

மித்ராவும் தன்னை பெற்றவர்களைப் போல மாமியார் மாமனாரை பிரியமுடன் பார்த்துக் கொள்கிறாள்.. மீனுவும் சக்திவேலும் மகள்களுடன் வாரம்  ஒரு முறை வந்து மகளை பார்த்து விட்டு போகிறார்கள்..

“ஏன் அண்ணி கடல் மாதிரி இவ்வளவு பெரிய வீடு இருக்கும் போது நீங்கள் இங்கேயே இருந்தால் என்ன ..எதற்கு வந்து வந்து பார்த்து சிரமப்படுகிறீர்கள்.. ” கயல் கேட்பதற்கு மீனு பதில் சொல்கிறார்..

“இல்லங்க அண்ணா  எங்கள் குடும்பம் பெருசு வேற.. அதெல்லாம் பட்ஜெட் பத்தாது.. “

“என்ன அண்ணி இப்படி சொல்றீங்க..  உங்களுக்கு சாப்பாடு போடுவதற்கா கணக்கு பார்க்கப் போகிறேன்.. ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் .நீங்கள் இப்படி சொன்னது எனக்கு வருத்தம் தான்..”

” இல்லங்க அண்ணி நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.. இரண்டு குட்டிகளும் ஆளுக்கு ஒரு காலேஜில் படிக்கிறார்கள்.. சின்னவள் ஸ்கூல் படிக்கிறாள்..அதனால் எனக்கு அங்கே தான் பக்கம். அதுதான் நாங்கள் லீவு விட்டாலே உடனே வந்து விடுகிறோமே பிறகு என்ன .. “

மனமே இல்லாமல் கயல், ”  நீங்கள் சொன்னால்  சரியாகத் தான் இருக்கும்.. ” என்று விட்டு விடுகிறார்.. திருமணத்திற்கு செய்யாத செலவுகளையும் கொண்டாட்டத்தையும் வளைகாப்பில் நடத்திக் காட்ட ஆசைப்படுகிறார்கள் மித்ரா அரவிந்தை பெற்றவர்கள் ..

திருமணத்திற்கு என்று பட்டுப்படவை எடுக்காததால்  தன்  மருமகளுக்கு எந்த விதமான பட்டுப்புடவை எடுக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டு இருந்தாரோ கயல் ,அதைப் போலவே விலை உயர்ந்ததாய் எடுத்துக் கொடுக்கிறார் ..அதற்கு மேட்சிங்காக அவனுக்கும் பட்டு வேட்டி சட்டை.. மீனுவும் சக்திவேலும் பூரித்து தான் போகிறார்கள்..அதே சமயம் சங்கடமும் ஆகிறார்கள்.. இப்படி ஒரு மாப்பிள்ளையையும் அவரைப் பெற்றவர்களையும் நாம் ஒதுக்கி தள்ளினோமே என்று ..

திருமணத்திற்கு தான் யாரையும் கூப்பிடவில்லை ..வளைகாப்புக்காவது எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்று பதினைந்து நாட்களுக்கு முன்பு இருந்தே வீடு வீடாக சம்மந்திகள் இருவரும் சொல்லி ஊரே திரண்டு வந்து உட்கார்ந்து இருந்தது..

அரவிந்த் மித்ரா பட்டுப் புடவையை கட்டியதும் அவளைக் கிண்டல் செய்கிறான்..

” இந்த வயிறு மட்டும் மேடா இல்லாம இருந்திருந்தால் இந்த பட்டுப்புடவை சூப்பரா இருந்திருக்கும்டி.. இவ்வளவு பெரிய தொப்பையை வைத்துக் கொண்டு எப்படித்தான் இந்த கனமான புடவையை கட்டிக் கொண்டு நிற்கிறாயோ.. சீக்கிரம் பிள்ளையை பெற்று முடித்து விட்டு வா ..மறுபடியும் நமக்கு சாந்தி முகூர்த்தம் வைத்துக் கொள்வோம்..அன்றைக்கு இதே பட்டுப் புடவையை கட்டிக் கொண்டு வெட்கத்துடன் என்னிடம் நீ வர வேண்டும்டி .. “கனவுலகத்திற்கு செல்கிறான் அரவிந்த்..

“என்ன ஐயா திரும்பவும் முதலிலிருந்து வாழ்வதற்கு கனவு கண்டு கொண்டு இருக்கிறீர்களா..”மித்ராவை அவனை கிண்டல் செய்கிறாள்..

“ஆமாம் டி எனக்கு நம்ம அவசரமாய் கல்யாணம் செய்தது ஒரு வருத்தம் தான்.. கொஞ்சம் பொறுமையாய் காத்திருந்து பெரியவர்களிடம் சம்மதம் பெற்று அதன் பிறகு கல்யாணம் செய்து இருக்கலாம்.. “

“நம்ம தான் அவசரமாய் கல்யாணம் செய்து விட்டோம்.. இல்லா விட்டால் இதெல்லாம் நமக்கு அப்பொழுதே கிடைத்திருக்கும் அல்லவா .. “அது ஒரு வருத்தம் தான் அவனுக்கு..

” இப்போ என்ன உங்களுக்கு.. எல்லாம் நல்ல விதமாக தானே நடந்து கொண்டிருக்கிறது.. இதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.. அப்புறம் அதுவே உங்களுக்கு ஒரு மன உளைச்சலாகி விடும் ..நம்மளுடைய ஜாதகத்திற்கு இப்படித்தான் என்று இருந்திருக்கும் .. அதனால் தான் நம்ம திருட்டு கல்யாணம் செய்து இருக்கோம்.. இப்பொழுது எல்லோருடைய ஆசீர்வாதத்துடன் சந்தோஷமாக தானே இருக்கிறோம் ..ஏன் வீணாக கவலை படுகிறீர்கள்.. ” என்று கணவனை சமாதானம் செய்கிறாள்..

மித்ராவையும் அரவிந்தையும் அருகருகே உட்கார வைத்து எல்லாரும் அவளுக்கு வளையல் அணிகிறார்கள்.. பெரியவர்கள் எல்லோருமே அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்து விட்டு போகிறார்கள்.. அரவிந்த்துக்கு உண்மையிலேயே இன்றுதான் திருமணம்  நடப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது ..அவளுக்குமே அப்படித்தான் கண் கலங்குகிறது..

அதைக் கண்டு லேசாக அவளை இடித்தவன், “என்னடி எனக்கு சமாதானம் சொல்லி விட்டு உனக்கு கண் கலங்குகிறது.. “

“நம்ம கல்யாணத்தின் போது பயம் மட்டும் அதிகமாய் இருந்தது.. இந்த பரவசமான உணர்வு ஏற்படவே இல்லை ..இப்பொழுது தான் அந்த நல்ல உணர்வு கிடைத்து இருக்கிறது.. என்னதான் நம்ம தப்பு செய்தாலும் நம்மை மன்னித்து ஏற்றுக் கொண்டாங்க பாருங்க.. அதை நினைத்ததும் தான் எனக்கு கண் கலங்கி விட்டது .. “

“ஆமாம்டி எனக்குமே ஒரு மாதிரி பீலிங்கா தான் இருக்கு ..நம்ம அவங்க எல்லாரையும் பத்திரமா பார்த்துக் கொள்ளணும்..” என்கிறான் ..

சாப்பாடுமே தடல்புடல் விருந்தாய் வடை பாயாசத்தோடு அதோடு சேர்த்து கட்டு சோறும் பரிமாறப்படுகிறது ..எதை சாப்பிடுவது எதை விடுவது என்று மக்கள் யோசிக்கும் அளவிற்கு எல்லாமே அத்தனை ருசியோடு செய்யப்பட்டுள்ளது ..

நல்ல விதமாய் வளைகாப்பு முடிந்து நாட்கள் ஒடிய ஓட்டத்தில் டெலிவரிக்கும் நாள் நெருங்குகிறது.. எப்பொழுதுமே ஹாஸ்பிடலுக்கு அரவிந்த் தான் அழைத்து செல்கிறான் .. ஆஸ்பிட்டலுக்கு முதல் மாதம் போன போதே மித்ராவுக்கு ஒரே பயம் ..

எனக்கு ஹாஸ்பிடல் என்றாலே அவ்வளவு பயமா இருக்கும்ங்க.. ஊசி என்றால் அதை விட பயம்.. யாராவது தெரிந்த ஆள் இருந்தால் தான் கொஞ்சமாவது தைரியமாக இருக்கும் .. என்ன செய்வது என்று தெரியவில்லையே..” புலம்பிக் கொண்டே வந்தவளுக்கு தெய்வமே அனுப்பி விட்டதை போல அவளுடைய பள்ளி, கல்லூரித் தோழி புவனா தாதிப்பெண்ணாய் நிற்கிறாள்..அரவிந்த் டாக்டர் எப்பொழுது வருவார் என்று விசாரிப்பதற்காக ரிசப்ஷன் அருகே செல்கிறான்..

இவளை பார்த்ததுமே ஓடி வந்து கட்டி கொள்கிறாள்.. ” எப்படி இருக்கடி எரும மாடு .. “அவளுக்கு தோழி எதற்காக ஹாஸ்பிடலில் வந்தாள் என்று யூகம் செய்ய தெரியவில்லை..

“ஏன்டி பார்க்க பளபளன்னு நன்றாக தானே இருக்க.. உடம்புக்கு என்ன எதற்காக ஹாஸ்பிடல் வந்து இருக்க..”

வெட்கத்துடன் தகவலைக் கூறுகிறாள்.. ” அடிப்பாவி உனக்கு கல்யாணம் ஆனதையே சொல்லவில்லை.. வயிற்றை தள்ளிக் கொண்டு வந்து நிற்கிறாயா.. உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் .. ” என்று வம்பு செய்கிறாள்..

அரவிந்த் வரவும் மித்ரா அவளுக்கு அறிமுகம் செய்கிறாள்.. ” உன்னை விட மாப்பிள்ளை இன்னும் அழகாய் இருக்கிறார் டி..”

” என்னை வைத்துக் கொண்டே என் புருசனை சைட் அடிக்கிறியாடி .. உன்னை உதைப்பேன் .. ” என்றதும் புவனா பயந்தவளாய் நடிக்கிறாள்.. சிரித்த படியே, ” பாருங்கள் அண்ணா உங்கள் மனைவி என்னிடம் வம்பு செய்கிறாள்.. ” என்று புகார் கூறுகிறாள்..

முதல் பார்வையிலேயே அரவிந்துக்கு புவனாவை கொஞ்சம் பிடித்து தான் விடுகிறது ..மனைவிக்குத் துணையாய் அவள் தோழியே இங்கு இருக்கிறாள் என்று..அப்பொழுதுதான் அரவிந்த் புவனாவைப் பற்றி அவர்களின் நட்பை பற்றி எல்லாம் விசாரித்து தெரிந்து கொள்கிறான்..

புவனா மித்ராவை பற்றி வாய் ஓயாமல் புகழ்ந்து தள்ளுகிறாள்.. ” நாங்க ரொம்ப ஏழை பட்ட குடும்பம் அண்ணா..
மித்ராவின் பக்கத்து வீடுதான் நாங்களும்..எனக்கு அப்பா அம்மா ஒரு தம்பி இருக்கிறான்.. மித்ராவின் அம்மாதான் அவளுக்கு சாப்பாடு கட்டி கொடுப்பதோடு எனக்கும் சேர்த்து கொடுப்பாங்க ..புவனாவின் உடைகள் தான் எனக்கு மாற்று உடைகளே..
அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் நான் மிகவும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன்.. “மனம் உருகி சொல்கிறாள்..

“அடியே ஏன் இப்படி எல்லாம் சொல்கிறாய் ..நீ என்னுடைய தோழி, அதோடு என் தங்கை இல்லையா.. ஏதோ வேறு வீட்டு பெண் மாதிரி பேசுகிறாயே..”
என்று மித்ரா திட்டுகிறாள்..

அதற்குள் , “ஆமாம் டி என்ன இருந்தாலும் நான் உன்னுடைய தங்கை தான்.. ஏனென்றால் நான் உன்னை விட மூன்று மாதம் வயதில் குறைந்தவள் அல்லவா..” என்றதும் மித்ரா சிரிக்கிறாள்..

” உனக்கு எப்பொழுதுடி கல்யாணம்.. “

” வரன் பார்த்துக் கொண்டே இருக்காங்கடி ..சீக்கிரமா செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன் .. “

” அடி எனக்கு பிள்ளை பிறக்கும் வரை இந்த ஹாஸ்பிடலில் இருடி.. அதன் பிறகு நீ கல்யாணம் செய்து போய் கொள்ளலாம்.. “

” ஆமாடி எனக்கு ஜாதக ரீதியாகவே அடுத்த வருடம் தான் கல்யாணம் ஆகுமாம் .. அதற்குள் ஓரளவு நானும் சம்பாதித்து பணத்தை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.. “

மித்ரா , “ஏங்க இவள் கல்யாணத்திற்கு நம்மளும் ஏதாவது உதவி செய்ய வேண்டும் .. “

“தாராளமாய் உன்னுடைய தோழியை தங்கை என்கிறாய் ..உன் தங்கைக்கு  நாம் செய்யாமலா..” இப்போது அரவிந்தும் புவனாவிடம் இலகுவாக பேச தொடங்குகிறான்..

தொடரும்..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page