மயூரியைக் காண அடுத்த நாள் காலை ரஞ்சனின் தாய் மரகதம் வந்திருந்தார். அவரை மெல்லத் தலை நிமிர்ந்து பார்த்தாள் மயூரி. ஐம்பது வயதை நெருங்கும் அந்தப் பெண்மணி மிகவும் பாந்தமாக இருந்தார். அவரின் பார்வையில் அவ்வளவு கனிவு இருந்தது.
மயூரியால் அவரை வெறுக்க முடியவில்லை.தன் தாயை விட அவரின் பார்வையும் தொடுகையும் மிகக் கனிவாக இருந்தது.அவர் தனித்து வந்திருந்தார், உடன் கார் டிரைவர் மட்டுமே.
மயூரி குளித்துத் தலையைப் பின்னி முடிக்கும் முன்னரே அவர் வந்துவிட்டார். ஒரு தட்டில் பழங்களும், ஸ்வீட்ஸும், இன்னொரு தட்டில் பூக்களுடனும் வந்திருந்தார். அவைகளை ஹாலில் இருந்த டீப்பாயில் வைத்துவிட்டு, பூவை மட்டும் எடுத்துக்கொண்டு மயூரியைத் தேடி அவள் அறைக்குள் பிரவேசித்தார்.
அவள் அப்பொழுதுதான் தன் ஈரக் கூந்தலைத் துவட்டி சீப்பைத் தலையில் வைத்தாள். அவரைக் கண்டதும் தலை குனிந்து அமைதியாக இருந்தாள். அவர் புன்னகைக்க, மயூரியின் தாய் மாலினி அவளைச் சற்று கடிந்து கொண்டார்.
“இவ்வளவு நேரமாவா ரெடி ஆகிறது?” என்று கேட்டபடியே, மயூரியின் கையில் இருந்த சீப்பை வாங்கி வேகமாகத் தலையைச் சிக்கெடுக்கத் துவங்கினார்.
அவர் வேகமாக இழுக்க, அதில் ஏற்பட்ட வலியில் மயூரியின் முகம் சுளித்தது. தலையில் முடியைத் தன் கையால் பிடித்துக் கொண்டாள். சட்டென அருகில் வந்த மரகதம்,
“பார்த்துப் பார்த்து… அவளுக்கு வலிக்கப் போகுது. ஈர முடியோட வேற இருக்கா, மெதுவா செய்யுங்க. இப்ப எதுவும் அவசரம் இல்லை,” என்றார்.
மாலினியோ, “இல்ல இல்ல, நீங்க எவ்வளவு நேரம் காத்திருப்பீங்க?” என்றவர் மீண்டும் வேகமாக இழுத்தபடி,
“ஒன்பது மணிக்கு நீங்க வந்துடுவீங்கன்னு எட்டு மணிக்கே சொல்லிட்டேன். ஒரு பெண் பிள்ளை சட்டென பத்து நிமிஷத்துல ரெடியாக வேண்டாமா? இவ்வளவு நேரம் எடுத்துக்கிட்டா நாளைக்கு உங்க வீட்ல வந்து அவ தானே கஷ்டப்படுவா?” என்றபடி சீப்பைக் கொண்டு மீண்டும் சிக்கெடுத்தார்.
அருகில் வந்த மரகதம் அவர் கையைப் பற்றி சீப்பை வாங்கிக் கொண்டார். “ஒன்னும் கஷ்டப்பட மாட்டா, அதான் நான் இருக்கேன் இல்ல! அதுவும் இல்லாம ஒன்பது மணினு சொல்லிட்டு எட்டரை மணிக்கே வந்து நின்னா பாவம் அவ என்ன செய்வா? விடுங்க, நானே என் மருமகளுக்குத் தலை பின்னி விடுறேன்,” என்றவர் மெல்லச் சிக்கலை எடுத்தார்.
மாலினியைப் பார்த்து, “நீங்க எங்க ரெண்டு பேருக்கும் காபி எடுத்துட்டு வாங்க, கூடவே கொஞ்சம் ஸ்நாக்ஸும்,” என்றார்.
அவர் வாயிலைத் தாண்டும் முன் மீண்டும் அழைத்து, “மயூரி அம்மா, நான் கொண்டு வந்த ஸ்வீட்ஸ் ஒரு பிளேட்ல வச்சு கொண்டு வந்துருங்க,” என்றார். மாலினி ஒரு அசட்டுப் புன்னகையுடன் அங்கிருந்து சென்றார்.
மரகதம் கண்ணாடியின் ஊடே மயூரியைப் பார்த்து, தலையைத் தடவியபடி மெல்லக் கேட்டார், “நான் சீக்கிரம் வந்ததனால தான்,உங்க அம்மா அப்படி வேகமா சீவி உன் தலை வலிக்குற மாதிரி இழுத்து விட்டுட்டாங்க…”
அவளும் கண்ணாடியின் வழியே அவரைக் கண்டு, “இல்ல… பரவாயில்லை,” என்றாள். சற்று சங்கடத்துடன்.
அவளின் பாரமான மனநிலை லேசாகக் குறைந்தது போல இருந்தது. அவள் நினைத்தது போல் தன் மாமியார் ஒன்றும் ‘சீரியல் மாமியார்’ இல்லை என்று அவளுக்குத் தோன்றியது.
அவர் புன்னகையுடன் அவளுக்குத் தலையைப் பின்னி விட்டார்.
“உனக்கு முடி நல்லா மெதுவாகவும், நீளமாகவும் இருக்குமா… மெத்து மெத்துன்னு இருக்கு!” என்று தடவியபடி கூறினார்.
“ரஞ்சன் முடி கோரை முடி, பிரஷ் போல இருக்கும். அவங்க அப்பா போல… எனக்குப் பாதி கொட்டிருச்சு,” என்றார்.
“அப்படி ஒன்னும் ரொம்பக் கொட்டல ஆன்ட்டி,” என்றாள் மயூரி லேசாக அரும்பிய புன்னகையுடன்.
“போம்மா, நீ தான் சொல்ற, எனக்கு அப்படித் தோணவில்லை. வாழ்க்கையில் பாதி நாள் ரஞ்சன் அப்பாவை நெனைச்சுப் போச்சு, இப்போ அவனை நினைச்சுப் போகுது. ஆனா எனக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கு… நீ வந்தப்புறம் எனக்குக் கவலையே இருக்காதுன்னு என் உள்மனசுல ஒரு மணி அடிக்குது. அது சரிதானே?” என்று அவளைத் தன் பக்கம் திருப்பிக் கேட்டார்.
மயூரி தலைகுனிந்து, “ட்ரை பண்றேன் ஆன்ட்டி,” என்றாள்.
“அதுவே போதும்டா மா,” என்றபடி அவள் உச்சியில் முத்தம் பதித்தவர், அவளை மீண்டும் திருப்பி அவள் தலையில் தான் கொண்டு வந்திருந்த பூச்சரத்தை மென்மையாகச் சூட்டினார்.
அவளை முழுதாக ஒருமுறை பார்த்தவர், “ரொம்ப அழகா இருக்கமா… போட்டோவை விட நேர்ல உன் அழகு இன்னும் ஜொலிக்குது,” என்றார்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி,” என்றாள் மயூரி.
“நிறுத்து! ஆன்ட்டினு கூப்பிட்டா ‘உன் பையனை எனக்குப் பிடிக்கல, வெளியே போ’ன்னு சொல்ற மாதிரி இருக்கு,” என்றவர் அவள் கை பற்றி அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார்.
“உனக்கு ரஞ்சனைப் பிடிச்சிருக்கா? அப்படின்னா என்னை உரிமையோட ‘அத்தை’ என்று கூப்பிடு,” என்றார்.
அவள் அதிர்வுடன் அவரை நிமிர்ந்து பார்க்க, கண்கள் கலங்கத் துடித்தது. அதை அடக்கித் தலை குனிந்த நேரத்தில் மாலினி உள்ளே வந்தார்.
மரகதம் கேட்டது அவர் காதில் விழுந்ததால் சட்டெனப் பதில் சொன்னார். “அதெல்லாம் பிடிக்காமல் போகுமா சம்பந்தி? நீங்க எவ்வளவு பெரிய இடம்… எங்க பொண்ணுக்காக இறங்கி வந்துருக்கீங்க, எப்படிப் பிடிக்காமல் போகும்?” என்றபடி காபி, ஸ்நாக்ஸை டேபிளில் வைத்தார்.
மயூரி அருகே வந்து அவள் தோளில் கையை வைத்து லேசாக அழுத்தினார்.
மயூரி அவர் கையைப் பார்த்துவிட்டு அமைதியாக இருந்தாள். மரகதம், மயூரியின் நிலையைப் புரிந்து கொண்டார். பின் மாலினியைப் பார்த்து,
“ஆமா அது சரிதான் சம்பந்தி. அப்புறம் வெளியே டிரைவர் இருக்காங்க, அவருக்குக் கொஞ்சம் காபி ஸ்நாக்ஸ் கொடுத்துடுங்க,” என்றார்.
மாலினி தயக்கத்துடன் மயூரியின் தோளை மீண்டும் ஒருமுறை அழுத்திவிட்டு வெளியே சென்றார்.
அவர் சென்றதும், மரகதம் டேபிளில் இருந்த ஸ்வீட்ஸ் தட்டை எடுத்துக்கொண்டு மயூரியை நோக்கி மெல்ல நடந்தார்.
“எனக்கு எல்லாமே தெரியும்… நீ விருப்பம் இல்லாம தான் இருக்கேன்னு எனக்கு நல்லாவே புரியுது,” என்றார்.
அவள் நிமிர்ந்து பார்க்க, “ஆனா என்னால ஒரு வாக்குறுதி கொடுக்க முடியும் மயூரி. என் மகன் முழுசா கெட்டவன் இல்ல, கொஞ்சம் நல்லவன் தான். அவன் கண்டிப்பா ஒரு நாள் உன்னை புரிஞ்சுக்குவான். அதுவரைக்கும் உனக்கு முழு சப்போர்ட்டா நான் இருப்பேன். ஒரு தாயா, தோழியா நான் உனக்கு இருப்பேன். நீ அவனை மாற்றுவ என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நான் சொல்றதை நம்பி நீ இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கிறதா இருந்தா, இந்த ஸ்வீட்டைச் சாப்பிடு,” என்று அவள் வாய் அருகே கொண்டு சென்றார். மயூரி கண்கள் பனிக்க,
“உங்களுக்காக… உங்களுக்காக மட்டும்,” என்று கூறி அந்த ஸ்வீட்டை வாங்கிக் கொண்டாள்.
மரகதம் அவள் தலையை ஆதரவாகத் தடவி, “நான் இருக்கேன் மா, எல்லாம் சரியாயிடும்,” என்றார் வாஞ்சையாக.
மறுநாள் காலை திருமணம் என்று முடிவாகி இருந்தது. காலை ஒன்பது மணி முகூர்த்தம் என்பதால் விரைவாகக் கிளம்ப வேண்டும். மாலினி மயூரியைச் சீக்கிரமாகத் தூங்கச் சொல்லி அறைக்கு அனுப்பிவிட்டார். வெளியே அவள் தந்தை முத்துவும், தமயன் மகேந்திரனும் ஏதோ தீவிரமாகப் பேசியது அவள் காதில் விழுந்தது.
கதவு சாத்தி இருந்ததால் தெளிவாகக் கேட்கவில்லை. இந்தத் திருமணம் அவர்களுக்கே ஒரு அதிர்ச்சியைத் தந்திருப்பதை உணர்ந்தாள். இப்பொழுது நினைத்தாலும் திருமணத்தை நிறுத்த முடியாது என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
தப்பிக்க நினைப்பதோ, அழுது தவிப்பதோ வீண் என்று புரிந்தது. அந்த நொடியே அவள் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
யார் அவன்? தன்னை இத்தனை நெருக்கடியிலும், பிடிக்கவில்லை என்று தெரிந்தும் கல்யாணம் செய்தே தீருவேன் என்று நினைக்கும் அந்த அதிபுத்திசாலி ‘வீரன்’ யார்?
என்று யோசித்தவள் சட்டென “வீரனாவது சூரனாவது… சரியான பேக்கு! தப்பிச்சு ஓடிப்போனவளைக் கட்டிக்க நினைக்கும் லூசுப் பய!” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.
அவன் பெயர் ‘ரஞ்சன்’ என்று மட்டும் தெரியும்.தனக்குள் சொல்லி பார்த்துக்கொண்டாள்.
“ரஞ்சன்… ரஞ்சன்… பெயர் நல்லாதான் இருக்கு. அத்தை ரசனையோடு தான் வச்சிருக்காங்க. ஆனா பெயருக்கு ஏத்த மாதிரி இருப்பானா?” என்று யோசித்தவள், யாரிடம் கேட்பது என்று தவித்தாள்.
“ஓவராக ரியாக்ட் பண்ணி வீட்டை விட்டு ஓடிட்டு, இப்போ போய் அப்பா அம்மா கிட்ட கேட்டா காரித் துப்புவாங்க. இந்த லூசு பிரியாகிட்டயும் கேக்க முடியாது. வாழ்க்கை எதை நோக்கிப் போகுதுன்னே தெரியலையே மயூரி!” என்று புலம்பியபடி மணியைப் பார்த்தாள்.
நேரம் ஒன்பதரையைத் தாண்டி இருந்தது.
“யார் அந்த ரஞ்சன்? மிஸ்டர் முத்துவை இப்படிச் சுத்தல்ல விடுறவன்..யாருன்னு தெரிஞ்சிக்கணுமே! சரி, இன்னும் பன்னிரண்டு மணி நேரத்துல தெரிஞ்சிடப்போகுது. அதுவரைக்கும் பொறுமையா இரு மயூரி. நாளைக்கு நிறைய சவால்கள் காத்திருக்கு, இப்போ தூங்கு,” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு உறங்கிப் போனாள்.
தன் தந்தையே பயப்படும் அந்த மனிதன் நாளை தன்னை என்ன செய்யப்போகிறான் என்பது தெரிந்திருந்தால் அவள் நிம்மதியாகத் தூங்கியிருக்க மாட்டாள்.
மறுநாள் காலை, மயூரி ஒரு அழகான பதுமை போல் தயாராகி இருந்தாள். அவள் மாமியார் எடுத்துக் கொடுத்திருந்த மெரூன் நிறப் பட்டுச் சேலையில் தங்கச் சிலையாக ஜொலித்தாள். கண்ணாடி முன் நின்று தன்னையே ரசித்தவள், சூடியிருந்த பூவைச் சரி செய்தாள். அழகான புன்னகை அவள் இதழ்களில் தோன்றியது.
சட்டெனத் தன் கன்னத்தில் அவளே அறைந்து கொண்டாள். “வெட்கமா இல்ல? சீ.. த்தூ! உனக்கெல்லாம் இந்த இளிப்பு தேவையா? வாழ்க்கையில் பெருசா… சாதிக்கப் போறேன், என் பாதையை நானே அமைச்சுக்குவேன்னு சபதம் போட்ட… இப்போ கல்யாணத்துக்கு ரெடியாகிட்டு ரசிக்கிறியா? உன்னை என்ன செய்யறேன்னு பாரு!” என்றபடி,
அங்கிருந்த மஸ்காராவை எடுத்து கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்திற்கு ஒரு ‘சேட் ஸ்மைலி’ வரைந்தாள். பின் பெரிய கொம்பு மீசையும் வரைந்து பார்த்தாள்.
“இப்பதான் அழகா இருக்க! இப்படியே கல்யாணத்துக்குப் போ,” என்று கூறிவிட்டு, தலையில் அடித்துக் கொண்டாள்.
“மயூரி, கன்பார்மா டென்ஷன்ல உனக்கு முத்திடுச்சு. அந்த ரஞ்சன் மட்டும் என் கையில மாட்டட்டும்… அப்படியே சட்னி ஆக்கிடுறேன்!” என்று கைகளை நம்பியார் போல ஒன்றோடு ஒன்று தேய்த்து கொண்டாள்.
அப்போது கதவு தட்டப்பட்டது. மயூரி கதவை திறக்க,மாலினி உள்ளே வந்தார். மயூரியைக் கண்டு புன்னகைத்தவர், தன் கணவரை அழைத்து,
“அவ, ரெடி ஆகிட்டா, நம்ம கிளம்பலாம்,” என்றார்.
மகளைக் கண்ட தந்தையின் கண்கள் கலங்கின. இதையெல்லாம் பார்த்த மயூரி, “இந்தச் சென்டிமென்ட் சீனுக்கு எல்லாம் குறைச்சலே இல்லை,” என்று நினைத்தாள்.
பின் மூவரும் ரஞ்சன் அனுப்பிய காரில் ஏறி கோயிலுக்குச் சென்றனர்.அங்கு ஏற்கனவே மரகதம் ஐயரிடம் தாலி உள்ளிட்ட பூஜை பொருட்களைக் கொடுத்துவிட்டு நின்று கொண்டிருந்தார். மயூரியைக் கண்டதும் வரவேற்றவர், அவள் நெற்றியில் முத்தமிட்டார்.
“ரொம்ப அழகா இருக்கம்மா,” என்றார் வாஞ்சையுடன். பின் “ சாமி கும்பிட்டுக்கமா.. “ என்றவர் அவரும் கண்கள் மூடி வணங்கினார்.
மயூரியோ கைகளை கூப்பியபடி சுற்றிலும் பார்வையை தாழ்த்தியபடி கவனித்தால், எதிரிலும் யாரும் இல்லை,எனில் அந்த ரஞ்சன் எங்கே..? என்று சிந்தித்தவள்.
பின் “சரி,சரி எப்படியும் வருவான் நம்ம கடவுள் கிட்ட அவனை சமாளிக்க சூப்பர் பவர்ஸ், ஸ்பெஷல் பவர்ஸ், எல்லாத்தையும் கேட்போம்.. “ என்று மனதினுள் நினைத்துக் கொண்டு கண்களை மூடி வேண்டினாள்.
அவள் தோளை தட்டி “மேடம் சாமி கும்பிட்டது போதும்.. எதுக்க இருக்க உங்க லைஃப் வில்லன பாருங்க..!” என்று கூறினால் பிரியா.
“ பிரியா.. நீயும் வந்துட்டியா..!” என்று திரும்பி மயூரி அவளை சந்தோஷமாக வரவேற்க..,ப்ரியாவோ தன் கண்களை உருட்டி எதிர் திசையை காட்டினாள்.என்ன என்பது போல் பார்வையில் சைகையுடன் திரும்பி பார்த்தாள் மயூரி..
அங்கே நின்றிருந்தான் ரஞ்சன்.
மயூரிக்கு ஆச்சரியம்! அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள்.
ஆறடிக்கு மேலான உயரம், கருத்த அலை அலையான சிகை. கண்களில் ஒரு கூர்மை. அதன் வீச்சுக் கண்டு சற்று பயந்தே போனாள். ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசை… அந்தத் தாடிக்குள்… ஒளிந்திருந்த சில தழும்புகள்… அவள் புருவத்தைச் சுருங்கச் செய்தது.
அவன் கைகளிலும் சில தழும்புகள் இருந்தன. அவனது இடது கையில் ஒரு எல்போ கார்டு இருந்தது.
மீண்டும் அவன் விழிகளைப் பார்த்தாள்.
அவன் கூர்மையாக அவளை ஆராய்ந்தாலும், இதழ்கள் ஏளனமாக வளைந்தன. மயூரிக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் அவன் ஒரு ஊன்றுகோலின் உதவியுடன் மெல்ல நொண்டி நடந்து சென்றான்.
மயூரி அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் தாயும் தந்தையும் அவளை விட அதிக அதிர்ச்சியில் இருந்தனர். மகேந்திரன் தன் தந்தையிடம் வந்து ஆத்திரமாகக் கேட்டான்,
“அப்பா… என்னப்பா இது? ஒரு நொண்டிக்கா மயூரியைக் கட்டி வைக்கப் போறீங்க?”
அவன் கேள்வியில் சற்றே அதிர்ந்தாள் மயூரி.
அவள் தாய் அமைதியாக இருக்க,அவள் தந்தை கூறினார்.
“எனக்கே இப்பதான் தெரியும் மகேந்திரா… நான் மட்டும் இவளுக்கு இப்படி ஒரு வரன பாப்பேனா…? என்ன பணம் இருந்து என்ன..? ஒரு நொண்டியை கட்டிக்கிட்டு என் மகள் எவ்வளவு கஷ்டப்படுவாளோ..! “என்றார் தழுதழுத்த குரலில் கண்களை துடைத்தபடி
மாலினி அவர் தோளை பிடித்துக் கொள்ள
“அப்ப இந்த கல்யாணத்தை நிறுத்துங்கப்பா..!” என்றான். மகேந்திரன் ஆதங்கமாக
ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர் “ இனி முடியாது பா..! அது முடிஞ்சிருந்தா இவ கோயில்ல தான் இருந்தான்னு தெரிஞ்ச அப்பவே நிறுத்தி இருப்பேன். எப்ப இவ வீட்டு படி தாண்டி போனாளோ..! அப்பவே நம்ம கையை மீறி எல்லாம் போயிடுச்சு.., இப்ப நடக்கிறது எல்லாம் அவனோட வேலை…அந்த ரஞ்சன் நடத்துறான்… நம்மளால எதுவும் செய்ய முடியாது..!” என்றார் தவிப்புடன்
“அப்பா காசு இருந்தா என்ன வேணா செய்வானா அவன்..! நான் நிறுத்துறேன் இந்த கல்யாணத்தை..மயூரி இங்க இருந்தா தானே கல்யாணம் நடக்கும்! அவள இங்கிருந்து கூட்டிட்டு போயிடறேன்.. ரொம்ப தூரத்துக்கு..!அப்ப என்ன செய்றான் இந்த நொண்டி பயன்னு நானும் பார்க்கிறேன்.!”என்று ஆத்திரமாக கூறியவன்.
மயூரியின் கையை பற்றி “வா மயூரி” என்று இழுக்க அவள் சிலையாக நின்றாள்.
மகேந்திரன் திரும்பி அவளை பார்த்து
“ என்ன மயூரி! வா.. போலாம்.. இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம்.. இந்த நொண்டி…” என்று அவன் சொல்வதற்குள்
அவன் கைகளை உதறியவள் காதுகளை இறுக பொத்திக்கொண்டு
“ஐயோ.. முதல்ல நிறுத்து ண்ணா…அவர நொண்டினு சொல்றத நிறுத்து…!” என்றாள் சற்று சத்தமாக..
அவளை அனைவரும் அதிர்ந்து நோக்கினர்…
