ரசிகை – 6

நள்ளிரவு நேரத்து ஃப்ளைட்டில் சென்னை வந்து இறங்கினான் சூர்யா. விமான நிலையத்தில் அந்நேரத்திலும் பரபரப்பு குறைவதாக இல்லை. முட்டி மோதிக்கொண்டு அவன் முகம் பார்க்க அலைமோதினார்கள் பொதுமக்கள். கார்ட்ஸ் உதவியோடு அவர்கள் எல்லோரையும் விலக்கிவிட்டு, அவன் வீடு வந்து சேர அதிகாலை இரண்டு மணி ஆனது. ஊரே அடங்கிப்போய் இருக்க, பங்களாவும் நிசப்தமாய் இருந்தது. செக்யூரிட்டிகள் கதவைத் திறந்துவிட்டதும், நேராகத் தன் அறைக்குச் சென்றான்.

உள்ளே நுழைந்தவன், லைட் சுவிட்சில் கை வைக்கப் போக, விரல் அப்படியே அந்தரத்தில் நின்றது. ஜன்னல் வழியே கசிந்த நிலவின் வெளிச்சத்தில், அங்கே தரையில் ஒரு ஓரமாகக் சுருண்டு படுத்திருந்தாள் பூர்ணிமா.

ஏசியின் குளிரில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நினைத்தாளோ, அல்லது அவன் பார்வையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள நினைத்தாளோ தெரியவில்லை. தன் மெல்லிய ஷாலை உடல் முழுக்க இறுகச் சுற்றிப் போர்த்தியிருந்தாள். அதைக் கண்டு சூர்யாவின் இதழ்கள் ஏளனமாய் வளைந்தன.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் மீது ஒரு பக்கெட் தண்ணீர் ஊற்றப்பட, சடாரென அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தாள். மூச்சுத் திணறியதில், முகம் முழுக்க வழிந்த தண்ணீரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல், அதிர்ச்சியில் கண்கள் விரியச் சூர்யாவைப் பார்த்தாள்.

“என்னடி? நான் இல்லாத ரெண்டு நாள்ல உனக்கு குளிர் விட்டுப் போயிடுச்சு போல? வெறும் தரையில கூட இவ்வளவு நிம்மதியா தூங்குற?” என்றான், அவளை ஊடுருவி விழித்தபடி.

தூக்கக் கலக்கம், குளிர் நடுக்கம், எப்போது என்ன செய்வான் என்று தெரியாத அந்த மரண பயம் அத்தனையும் ஒரே நேரத்தில் அவளைத் தாக்க, பூர்ணிமா சிலையென உறைந்து நின்றாள். 

“முழிக்காத, எழுந்து போய் எனக்கொரு டீ போட்டு எடுத்துட்டு வா…” என்றான் கட்டளையாக.

அவள் கண்கள் பாவமாகச் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தன. மணி இரண்டைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. பேய்கள் கூடத் தங்கள் உலாவை முடித்துவிட்டு ஓய்வெடுக்கும் இந்த நேரத்தில், இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“என்ன முறைப்பு? போறியா இல்லையா?” என அவன் குரலை உயர்த்த, 

“இதோ போறேன்…” என்று முணுமுணுத்தபடி, தன் துப்பட்டாவால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கிச்சனை நோக்கி விரைந்தாள்.

இருவரும் பேசி பத்து வருடங்கள் இருக்கும் என்றாலும், அவனுக்கு இஞ்சி டீ என்றால் கொள்ளைப் பிரியம் என்பது அவளுக்கு இப்போது வரை மறக்கவில்லை. அதற்காகவே இஞ்சியை நசுக்கி, அவனுக்காகப் பக்குவமாக டீ தயாரித்துக் கொண்டு வந்தாள். அவன் அதை வாங்கிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தான். எதிரில் கணினி அவன் இம்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

“உன்னால தரையெல்லாம் தண்ணியா ஆயிடுச்சு பாரு. கிளீன் இட் ஃபர்ஸ்ட்!” என்றான் அதிகாரமாக.

‘நானாடா தண்ணியைக் கொட்டுனேன்?!’ என்று அவளது உள் மனது புலம்பினாலும், வாயைத் திறந்து பேசத் துணிவின்றி, துணியை எடுத்துத் தரையைத் துடைக்க ஆரம்பித்தாள். அவளது நனைந்த கூந்தலிலிருந்து சொட்டும் தண்ணீர், அவள் துடைக்கும் இடத்திலேயே மீண்டும் விழுந்து அவளைச் சோதித்தது. 

“அறிவிருக்கா? போய் டிரஸ் மாத்திட்டு வந்து தரையை துடைடி முட்டாள்…” என்று அதற்கும் திட்டினான்.

அவள் அனைத்தையும் முடிக்கும் பொழுது மணி இரண்டே முக்கால். அதே நேரம் அவனும் தன் வேலையை முடித்துவிட்டு எழுந்தான்…

“ரெண்டு நாளும் தூக்கமே இல்ல. ஏனோ இப்பவும் எனக்குத் தூக்கம் வரமாட்டேங்குது” என்றவன், ஒரு குரூரமான புன்னகையோடு அவளைப் பார்த்தான். 

அதிகாலை பனியில் குளித்த ஊட்டி ரோஜாவைப் போல, ஃப்ரெஷ்ஷாக இருந்தது அவள் வதனம். அவன் விழிகள் தன்னை அளவெடுப்பது புரிய, அவள் கால்கள் தன்னிச்சையாக பின்னால் நகர்ந்தன.

“எங்க போக முயற்சி பண்ற?” என்று அவன் கேட்டதும், அவள் கால்கள் அப்படியே நின்றுவிட்டது.

“சரி, உன்னை பார்த்தாலும் பாவமா இருக்கு. உனக்கொரு ஆஃபர் தர்றேன். என்னை நீ இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல தூங்க வச்சுட்டா, நாளைக்கு நீ அபியைப் பார்க்கலாம். இந்த டீலுக்கு வர்றியா?”

அபி எனும் பெயரைக் கேட்டதுமே பூர்ணிமாவின் கண்கள் மின்னின. அவன் விரிக்கும் அந்த வலையின் சூது தெரியாத பேதை, தன் தங்கையைச் சந்திக்கும் அந்த ஒரே ஆசையில், “சரி சூர்யா, நான் சம்மதிக்கிறேன்!” எனத் தலையாட்டினாள்.

வில்லனின் விழி இரண்டிலும் விஷம் கூடியது.

சூர்யா மெத்தையில் சாய்ந்து படுத்துக்கொண்டான். அவனது கண்கள் பூர்ணிமாவை ஏளனமாகப் பார்த்த‌ன. அவளுக்கு அந்த கட்டிலை நெருங்கவே அச்சமாக இருந்தது. ஆனாலும் தங்கையின் நினைப்பு வேறு, மனம் முழுவதும் நிறைந்து தழும்பியது. இது வெறும் சவால் மட்டுமல்ல, தன் தங்கையைச் சந்திப்பதற்கான ஒரே வழி என்று தனக்குத் தானே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டாள்.

மெல்ல, அடிமேல் அடி வைத்து கட்டிலை நெருங்கியவள், அவன் தலை மேட்டில் அமர்ந்தாள். நடுங்கும் கைகளால் அவனது தலைமுடியை மென்மையாக வருடினாள். அபி உறங்க மறுக்கும் நேரங்களில் இப்படித்தான் உறங்கவைப்பாள். ஆனால், இப்போது அவள் வருடுவது, ஒரு சிங்கத்தின் பிடரியை! அது எந்த நேரம் வேண்டுமானாலும் தன் மேல் பாயும் என்ற அச்சம் அவள் விரல்களை நடுங்கச் செய்தது.

பூர்ணிமா தன் பன்னீர் விரல்களால் அவன் நெற்றியை இதமாய் நீவிவிட்டாள். அவளின் மென்மையான விரல் வருடல் இதமாய் இருந்தது அவன் இதயத்திற்கு.  ஐந்து நிமிடத்திலேயே அவன் சுவாசத்தில் ஒரு நிதானம் தெரிந்தது. லேசாக கண்கள் சொருகினான்…

பூர்ணிமாவுக்கோ உடலின் வெப்பநிலை உச்சத்தில் இருந்தது. காரணம், ஒவ்வொரு முறை அவள் நீவி விடும் போதும், அவன் விடும் சூடான மூச்சுக் காற்று அவளது மணிக்கட்டில் பட்டுத் தெறித்தது. அந்த மெல்லிய வெப்பம் பூர்ணிமாவின் நரம்புகளுக்குள் புது மின்னலைப் பாய்ச்சியது. அது அவளுள் பலவித இரசாயன மாற்றங்களை உண்டாக்கியது.‌ போதா குறைக்கு இத்தனை அருகில், இவ்வளவு நெருக்கமாக அவளை பார்த்துக் கொண்டே படுத்துக் கிடக்கிறான். 

அள்ளி அணைத்துக்கொள்ள அவளுக்கும் ஆசைதான். ஆனால் அதற்குத்தான் கொடுப்பனை இல்லையே! இறுக்கம் தளர்ந்த அந்த அமைதியான முகமும், அவளுக்குள் உறங்கிக் கிடந்த பழைய சந்தோஷ தருணங்களை நினைவூட்டியது. பத்து வருடங்களாக அவள் இதயத்தின் ஆழத்தில், யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த காதல் உணர்வுகள், இப்போது ஒரு எரிமலையாய் வெடிக்கத் துடித்தது.

‘வேண்டாம் பூர்ணிமா… அதெல்லாம் கடந்த காலம். இப்போ அவன் முழுக்க முழுக்க உன்ன காயப்படுத்துறத மட்டுமே வேலையா வச்சிருக்கான். அவன் பக்கம் மனச சரிய விடாத!’ என்று அவளது புத்தி எச்சரித்தது. 

ஆனாலும், அவளது மனம் அனைத்து கட்டுப்பாடுகளையும் உடைத்துக் கொண்டு, அவன் மீதான அன்பை ஒரு முத்தத்தில் வெளிப்படுத்தச் சொல்லி அவளை உந்தி தள்ளியது.

தன் காதலை வெளிப்படுத்தத் துடிக்கும் உள்ளத்தையும், அவனை எதிரியாகப் பார்க்குச் சொல்லும் புத்தியையும், சமன் செய்ய முடியாமல், இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தாள் அவள்.

அவள் மனம் இத்தனை அலைப்புறுதல்களில் சிக்கி இருக்க, அவனை கவனிக்க மறந்துவிட்டாள். திடீரென ஞாபகம் வந்தவளாய் அவன் முகம் பார்த்தாள். இமைகளுக்குள் கருவிழி இரண்டும் இடம் வளமாய் உருள துவங்கியது. ‌ 

‘அவனுக்கு உறக்கம் வந்து விட்டதா?’ பூர்ணிமாவின் இதயம் நம்பிக்கையில் படபடத்தது. 

‘இன்னும் சில நிமிடங்கள் தான், இப்படியே தூங்கிவிடு சூர்யா!’ எனத் தன் இஷ்ட தெய்வங்களை வேண்டினாள்.

கடிகார முட்கள் இரக்கமின்றி வேகமாய் நகர்ந்தன. பதிமூன்றாவது நிமிடம், சூர்யா அசைவற்று மரக்கட்டை போல இருந்தான். அடுத்த ஒரு நிமிடத்திற்கு அவன் நெற்றியை வருடி கொடுத்துக் கொண்டிருந்தவள், அதற்பின் மெல்லத் தன் கைகளை விலக்க முயன்றாள்.

உறக்க நிலைக்கு போயிருந்த சூர்யா, திடீரென அவளது மணிக்கட்டை இரும்புப் பிடி பிடித்தான். சட்டெனக் கண்கள் திறந்தவன், ஒரு குரூரமான புன்னகையோடு கடிகாரத்தைப் பார்த்தான்.

“பதினைந்து நிமிஷம் முடிஞ்சது! ஆனா நான் தூங்கலையே?” என்றான் கேலியாக. பூர்ணிமா அதிர்ந்து போனாள். 

“சூர்யா… நீ… நீ வேணுமுன்னே இப்படிச் செய்யுற! உனக்குத் தூக்கம் வந்தது. தூக்கத்துல இருந்து எழுந்துட்டு, உறங்கலனு சாதிக்கிற… இது அநியாயம் சூர்யா!” என்று அவள் குரல் தழுதழுத்தது.

“அநியாயமா? டீல்னா டீல்தான். நீ தோத்துட்டனு ஒத்துக்க…” என்று கொஞ்சமும் இரக்கமில்லாமல் திரும்பி படுத்துக் கொண்டான். பூர்ணிமாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. 

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவளை எழுப்பி, அவளுடைய பாசத்தை வைத்து ஒரு விளையாட்டு விளையாடி, அவள் உணர்வுகளை ஒரு பொருட்டாக மதியாது தூக்கி எறிந்துவிட்டு, அவன் போக்கில் நிம்மதியாக உறங்குவதை கண்டு துடித்தாள்.

“ஏய், அழணும்னா என் ரூமை விட்டு வெளியில போய் அழு. காது பக்கத்துல உட்கார்ந்து ஒப்பாரி வைக்காத…” என்று திட்டி அனுப்பினான். 

குறைந்தபட்சம் அழுவதற்காவது அனுமதித்தானே! என்ற நினைப்போடு எழுந்தவள், அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

அப்போது கிச்சன் லைட்டுகள் ஆன் செய்யப்பட்டு இருக்க, “இதையெல்லாம் நான் ஆஃப் பண்ணிட்டு தானே போனேன்?” என்ற குழப்பத்தோடு கிச்சனுக்கு வந்தாள். 

அங்கே கோகிலா நின்று கொண்டிருந்தாள்.

மூன்று மணிக்கு பூர்ணியை பார்த்ததும் பதறிப்போனவள், “நீ இங்க என்ன பண்ற?” என்றாள் கோபமாய்.

“சூர்யாக்கு டீ வச்சு கொடுத்தேன். அந்த பாத்திரத்தை கழுவி வைக்க வந்தேன். நீங்க இங்க என்ன பண்றீங்க?” என்றாள் இவளும் சந்தேகத்தோடு. 

“நாளைக்கு சமையலுக்கு கொண்டைக்கடலை ஊற வைக்க மறந்துட்டேன். அதான்…” என்று பல்லைக் காட்டியவள், கிச்சன் உள் பக்கமாக இருந்த கதவை திறந்து கொண்டு தன் அறைக்கு போனாள்.

நான்கு மணி வரைக்கும் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்த பூர்ணிமா, இறுதியில் உறக்கம் கண்களை சுழற்றிக்கொண்டு வர அவன் அறைக்குச் சென்றாள். சூர்யா எந்த கவலையும் இல்லாமல், பஞ்சு மெத்தையில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தான். பூர்ணிமா ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, தன் இடத்தில் படுத்துக்கொண்டாள். 

சரியாக ஆறு மணிக்கு, சூர்யாவின் அறை கதவில் யாரோ தாளம் போடும் சப்தம் கேட்டது. 

“இப்ப என்னடா வேணும் உனக்கு?” என்று சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டு தன் இடத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள். அவள் எதிரில் அவனும் அதே போல கடுப்பான முகத்தோடும், கலைந்த தலையுடனும் எழுந்து அமர்ந்திருந்தான். ஒரு நிமிடம் இருவர் பார்வையும் மோதிக்கொண்டன.

‘அப்போ அந்த சத்தம்?’ எனும் யோசனையோடு அவள் பார்வை கதவு பக்கம் நகர்ந்தது.

“இப்படியே பார்த்துட்டு இருக்க போறியா? போய் கதவை திறடி…” என அதற்கும் அந்தக் காட்டான் இவளிடம் தான் சீறினான்.

வாரிச்சு சுருட்டியபடி எழுந்து சென்று கதவைத் திறந்தாள். கதவைத் திறந்த அடுத்த நொடி அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். சூர்யாவின் அச்சுப் பிரதி போல, அதே முகவெட்டு, அதே கண்கள், ஆனால் இதழ் நிறைந்த குறும்புச் சிரிப்போடு அங்கே ஒரு இளைஞன் நின்றிருந்தான்.

பூர்ணியைப் பார்த்ததும், “டேய் அண்ணா, யார்ரா இது? வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்க? ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்…’ அப்படின்னு எனக்கு மட்டும் பக்கம் பக்கமா கருத்து சொல்லுவ! இப்போ இதுக்கு என்னடா பதில் சொல்லப் போற?” என்று படபடவெனக் கேள்விகளைக் கொட்டினான்.

சூர்யா அலட்சியமான முக பாவனையுடன் கட்டிலில் இருந்து இறங்கி வந்தான்.

“உனக்கு ஏன்டா நான் பதில் சொல்லணும்?” என்று கேட்டபடி அவனை தள்ளிக் கொண்டு வெளியேறிச் சென்றான். 

வழக்கமாக எழுந்ததும் ஒரு மணி நேரம் சூர்யாவின் ஜிம் டைம் என்பதால், அந்த நேரத்தில் எப்பேர்ப்பட்ட விஷயமாக இருந்தாலும் யாரும் அவனைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இப்போதும் சூர்யாவை தடுத்து நிறுத்த தோன்றாமல், அவன் முதுகினை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் அவனின் ஜெராக்ஸ் காப்பி.

பூர்ணிமாவுக்கு அவனது முகம் ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியது.

“நீ ஆர்யா தான?” என்று கேட்கும் முன்பே அவள் குரல் தழுதழுத்து விட்டது. 

“எஸ், இட்ஸ் மீ! உங்களுக்கு என்னை தெரியுமா? ஆனா எனக்கு உங்களை ஞாபகம் இல்லையே?” என்று அவளை உற்றுப் பார்த்தான். இருந்தும் அவனுக்கு எதுவுமே ஞாபகம் வரவில்லை.

“ம், ஞாபகம் வராது…” என்று நெகிழ்ச்சியோடு பேசியவள், அவன் நெற்றி ஓரம் இருந்த தழும்பினை தன் தளிர் விரலால் தொட்டு வருடினாள். ஏனோ அவனுக்கு அந்த நொடி, அவள் முகம் தனக்கு பழக்கமானது போல ஓர் எண்ணம் தோன்றி மறைந்தது.

“நீங்க எனக்கு என்ன உறவு?” என்று அன்பாக பேசினான் அவன்.

அவள் தன்னைப்பற்றி எதையும் சொல்லவில்லை. தன் அடையாளத்தைச் சொன்னால், அவனும் தன்னை விரோதியாக பார்ப்பான் என்று அவளுக்குத் தெரியும். அதனால், மௌனமாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சமையல் வேலைகளைக் கவனிப்பதற்காக விறுவிறுவெனக் கீழே இறங்கிச் சென்றுவிட்டாள். 

“கிரேஸி கேர்ள்!” என்று தோளைக் குலுக்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டான் ஆர்யா.

கிச்சனில் கோகிலா பூரிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தாள்.

“நான் பாதி வேலைய பாக்குறேன்” என்று பூர்ணிமா பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டாள்.

சமையல் பாதி முடிந்திருந்த நேரம், வாசல் பக்கம் ஏதோ பழக்கமான குரல் கேட்டது. யாரென ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவள், தன் பெரியப்பா பிரபா வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் அகம் மகிழ்ந்து போனாள். 

‘என்னதான் தன்மீது வேண்டா வெறுப்போடு இருந்திருந்தாலும், இன்று ஒரு பிரச்சனை என்றதும் தன்னை தேடி வந்திருக்கிறாரே!’ என யோசித்தவளுக்கு, இத்தனை நாட்கள் ஏன் வரவில்லை என யோசிக்க தோன்றவில்லை.

முகத்தினை அழுத்தமாக துடைத்துக் கொண்டே வாசல் நோக்கி நடக்க, புயல் வேகத்தில் சூர்யா அவளுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தான். 

🪷🪷🪷🪷🪷

டேய்! அந்தாளு, ஏற்கனவே மெண்டலு. ரெண்டு பேரும் பேசி, இப்ப என்ன புது பிரச்சனைய ஆரம்பிக்க போறீங்க? 

கதை பிடிச்சா ஒரு கமெண்ட் தரலாமேப்பா????

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page