அத்தியாயம் 5

அவன் அன்னை தான் அழைத்திருந்தார். என்னடா எங்கே இருக்கே?  காலையிலேயே டிபன் கூட சாப்பிடல, காலேஜ்க்கு போலையா? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு கொண்டே போக, வரேன்மா! என்று சுரத்தே இல்லாமல் அவன் குரல் ஒலித்தது. வீட்டுக்கு வந்ததும் நேரே தன் அறையில் போய் அடைந்துக் கொண்டான். வெகு நேரம் யோசித்தான். பின் நான் அவளை காதலிப்பதால் அவளும் என்னை காதலித்து தான் ஆகவேண்டும் என்று நினைப்பது தவறல்லவா! நான் அவளை காதலிக்கிறேன், மனதார நேசிக்கிறேன்,அவள் என்னை காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே! அவள் என்னோடு இல்லாமல் போனால் தான் என்ன! அல்லது அவளுக்கு திருமணம் ஆனால் தான்  என்ன! அவளை என்றும் என் மனம்  காதலித்துக் கொண்டேதான் இருக்கும். அவளை தொந்தரவு செய்யாமல் வாழ்நாள் முழுவதும் அவளை காதலித்கொண்டே தான் இருப்பேன். அவள் தான் என் முதல் காதல். கடைசி காதலும் அவள்தான்.அவளை நினைத்துக் கொண்டே  வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துடுவேன், என்று நினைத்துக்கொண்டே இருக்கும் போதே தொலைக்காட்சியில் இருந்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடல் ஒலித்தது.

. “எனக்குன்னு இருப்பது ஒரு மனசு அது உனக்கென தருவது சுகம் எனக்கு 

    “எனக்குன்னு இருப்பது ஒருஉசிரு அது உனக்கென தருவது வரம் எனக்கு 

      நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீ தான் என் ஒளி விளக்கு 

       என்றும் நீ தான் எந்தன் ஒளி விளக்கு.”  

 

ஒரு வாரம் ஓடிவிட்டது. இந்த ஒரு வாரமும் அவன் வர்ஷினியை பார்க்கவில்லை. காலையில் எழுவான், கல்லூரிக்கு செல்வான். பின் வீட்டுக்கு வருவான், தன்னுடைய அறையில் போய் அடங்கிக் கொள்வான். கவிதா சாப்பிட அழைத்தால் போய் சாப்பிடுவான். முன்பு போல் கலகலப்பு அவனிடத்தில் இல்லை. யாராவது அவனிடத்தில் பேசினாலும் ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டு சென்று விடுவான். அவன் அண்ணன் விக்னேஷுக்கு இந்த மாற்றம் புதிதாக இருந்தது. ஏனென்றால் விக்னேஷ் பேசாவிட்டாலும் கௌரி அவனிடம் ஏதாவது பேசிக் கொண்டே தான் இருப்பான்.  எப்போதும் தன்னுடைய பேச்சாலும் சிரிப்பாலும் அந்த வீட்டையே கலகலப்பாக வைத்திருப்பான். 

 

விக்னேஷ் தன் தம்பியிடம் ஆயிரம் போட்டி பொறாமை இருந்தாலும் கௌரியின்  இந்த மாற்றம்  அவனுக்கு ஒரு மாதிரியாக தான்  இருந்தது. அவனுக்கு தன் தம்பியின் காதல் விஷயம் எதுவும் தெரியாது. அவன் வீட்டில் எல்லோரிடத்திலும் பேசினால் தானே தெரிவதற்கு! வெகு நாள் கழித்து விக்னேஷ் கௌரியிடம் பேசினான். அதுவும் நலன் விசாரித்தான். கற்பாறையிலும் கனிவு வந்துவிட்டது போலும். என்ன கௌரி ஒரு மாதிரியா இருக்க? உடம்பு சரியில்லையா? என்று விசாரித்ததை பார்த்து அனைவருக்கும் ஆச்சரியம் தான். கவிதா விழி விரித்து அவனை பார்த்து, விக்னேஷ் நீயா அவன்கிட்ட அக்கறையா பேசினே? இல்ல என் காதுலே தான் தப்பா விழுந்திருச்சா? என்று கேட்க, விக்னேஷ் தன் அன்னையை முறைத்துக் கொண்டே எதுவும் பேசாமல் அங்கு இருந்து தன் அறைக்குள் சென்றுவிட்டான். உடனே கௌரி, அம்மா, ஏம்மா அண்ணனை ஓட்டிறீங்க! இப்பதான் அவன் அதிசயமா பாசமா இரண்டு வார்த்தை பேசினான், அதுக்குள்ள அவனை கிண்டலடித்து விரட்டி விட்டுடீங்க!  ஆமாண்டா! நான் தான் உன்னுடைய பாசமிக்க அண்ணனை உங்கிட்ட பேச விடாம பண்ணிட்டேன். இவ்வளவோ நாளா உன்கிட்ட ஏதாவது அக்கறையா பேசி இருப்பானா! நீ என்ன படிக்கிற? எப்படி படிக்கிறேனு எதையாவது கேட்டிருப்பானா?   சின்ன வயசில் இருந்தே உங்கிட்ட போட்டி தான் போடுவான், அப்படிப்பட்டவன் உங்கிட்ட அக்கறையா விசாரிச்சா எனக்கு ஆச்சரியமாக இருக்காதா?அதனால் தான் கேட்டேன் என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே வெளியே கதவு தட்டும் ஓசை கேட்டது. கவிதா தான் சென்று கதவை திறந்தார் அங்கு வர்ஷினி, அவள் தாய் தந்தையுடன் கையில் பெட்டியுடன் நின்றிருந்தாள். கவிதா அவர்களையே பார்த்துக் கொண்டு நிக்க, கஸ்தூரி முன் வந்து நாங்க பெங்களூருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறோம். இன்னும் திருமணத்திற்கு மூன்று நாள் தானே இருக்கு. இப்பவே போன தான் அங்கே திருமணம் வேலை எல்லாம் பாக்க முடியும். போகும்போது உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம் தான் வந்தோம். நீங்க எல்லோரும் திருமணத்திற்கு வந்துருங்க என்று அழைத்தார். அவர் பேசும் போதே தெரிந்தது வர்ஷினி எதுவும் தன் பெற்றோரிடம் சொல்லவில்லை என்பது. கவிதாவும் சுரத்தே இல்லாமல் தலையாட்ட, ஏனோ வர்ஷினிக்கு தான் கௌரியை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் அவனிடம் அன்று காதலுக்கு மறுப்பு சொன்ன பிறகு அவனை பார்க்கவே இல்லை. திருமணத்திற்கு பிறகு அவனை பார்ப்பது பேசுவது என்பது கடினம், இப்பவே அவனிடத்தில் பேசவேண்டும் என்று ஒரு மனது துடிக்க, இன்னோரு மனமோ உனக்கு திருமணம் ஆகப்போகிறது இதெல்லாம் தவறு என்று உரைக்க, அவன் என்  சிறு வயது தோழன் என்மீது அன்பும் அக்கறையும் உடையவன் அவனிடத்தில் சாதாரணமாக பேசுவது  தவறு ஒன்றும் இல்லையே  என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு, ஆண்ட்டி நான் கௌரியிடம் சொல்லிட்டு போறேன், அவனை கூப்பிடுகிறீர்களா? என்று ஒரு வழியாய் கவிதாவிடம் சொல்ல, கௌரிக்கு வெளியில் நடக்கும் உரையாடல்கள் எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தது. இருந்தாலும் அவன் வெளியில் வரவில்லை. அப்படியே சிலையாக தான் நின்றிருந்தான். கவிதா வந்து அழைக்கவும் தான் அவளுடன் வெளியில் வந்தான். வர்ஷினி, சங்கர் நான் போயிட்டு வரேன். நான் ஏதாவது உன் மனச காயப்படுத்தற மாதிரி பேசியிருந்தா என்னை மன்னிச்சிடு! மறக்காம என் கல்யாணத்திற்கு வந்துடு! என்று கூற, கௌரி அவளை நிமிர்ந்து கூட பாராமல் வெறுமனே தலையசைத்தான். எங்கே நிமிர்ந்து பார்த்தால் தன்னையும் அறியாமல் கண்களிருந்து கண்ணீர் வந்துவிடுமோ என்ற பயத்தினாலேயே அவளை பார்ப்பதை தவிர்த்தான். 

 

அனைவரும் அங்கிருந்து சென்றவுடன் கவிதா கதவை தாளிட்டு திரும்ப கௌரி அவளை கட்டிப்பிடித்து மௌனமாய் கண்ணீர் வடிக்க, அவனது கண்ணீர் அவளது தோள்பட்டையில் பட்டு தெளிக்க, சிரிக்க பேசி எல்லோரையும் சந்தோசமா வச்சி இருக்கிற என் பிள்ளையை இப்படி அழ வச்சிட்டாளே! என்று தாய் மனம் துடிதுடிக்க அவன் முதுகை ஆதரவாய் தட்டி கொடுத்தார். 

அழாதேடா! இவ போன என்ன! இவளை விட நல்ல பொண்ணா, படிச்ச அழகான பொண்ணா பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறன்டா! நீ இப்படி உடைஞ்சு  அழுறது என்னால தாங்க முடியலடா  என்று அவளும் கண்ணீர் வடிக்க, அம்மாவின் கண்ணீர் கண்டதும் கௌரி சட்டென்று அவளிருந்து விலகி, அம்மா நீங்க எனக்காக அழக்கூடாதும்மா. உங்க சொல்லை நான் எப்போவுமே தட்ட மாட்டேன் அம்மா, எப்போதும் உங்களுக்கு புடிச்ச பிள்ளையாத்தான் நடந்துக்குவேன்,ஆனா எனக்காக ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்க! என்னப்பா வேணும்? என்று கவிதா கேட்க, இனிமேல் தயவு செய்து என் விருப்பம் இல்லாம என் கல்யாணத்தை பத்தி பேசாதீங்க! என்ன கல்யாணம் பண்ணிக்க தொந்தரவு செய்யக்கூடாது. எல்லா பெண்களும் என் வர்ஷினி இல்லம்மா! அவகிட்ட மட்டும் தான் என்னால் கணவனாக நடந்துக்க முடியும். இதை மட்டும் எனக்காக பண்ணுங்க போதும் என்று கூறி தன் அறையில் சென்று அடைந்துக் கொண்டான். அவன் கூறியதை கேட்ட கவிதா காலங்கள் உன் காயத்தை ஆற்றும்பா. கண்டிப்பாக ஒரு நாள் நீ கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோடு வாழ்வே! நான் வணங்குற முருகன் அதுக்கு கண்டிப்பா அருள் செய்வான். உன்னை குடும்பத்தோடு பார்த்த பின்பு தான் என் கட்டையே வேகும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். 

வர்ஷினியின் திருமணத்திற்கு கவிதா வீட்டில் இருந்து யாரும் செல்லவில்லை. என் பிள்ளைக்கு என்ன குறை என்று அவனை நிராகரித்து விட்டு செல்கிறாள் என்று அவளுக்கு உள்ளுக்குள் கோபம் தான். அவள் வீட்டில் உள்ள யாரையும் கூட அவள் திருமணத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. அதன் பிறகு வர்ஷினியின் குடும்பம் சென்னைக்கு வரவே இல்லை. சில மாதங்கள் கழித்து கரண் மட்டும் வந்து வீட்டை காலி செய்து விட்டு, நாங்கள் பெண்ணுக்கு உதவியாக பெங்களூரிலே அவள் வீட்டுக்கு அருகில் குடி பெயர்ந்து செல்கிறோம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். கவிதாவும் அவரிடம் வர்ஷினி மீது உள்ள கோவத்தினால் எதுவும் கேட்கவில்லை. ஆனால் மறு வீட்டு அழைப்புக்கு கூட இந்த பெண் சென்னை வரவில்லை. மாப்பிள்ளை எப்படி தான் இருக்கிறார் என்று பார்க்கலாம் என்றால் கூட முடியவில்லை என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள். 

 

அதன் பிறகு அவன் இன்று தான் வர்ஷினியை வாடிய பூங்கோடியாய் பார்த்தான். பழைய நினைவலைகளிலிருந்து திரும்பி வந்த அவன் மனம் கனத்து தான் இருந்தது.அவள் எப்படி இங்கு வந்தாள்? அவளுக்கு என்னதான் ஆயிற்று? ஏன் என்னை பார்த்ததும் உன்னை எனக்கு தெரியாது என்று அங்கிருந்து விரைந்து செல்ல வேண்டும்? என்ற ஆயிரம் கேள்விகள் அவன் மண்டையை போட்டு குடைந்துக் கொண்டு இருந்தது. மறுநாள் வழக்கம் போல் எழுந்து தன் காலை கடன்களை முடித்துக் கொண்டு புதிய வேலைக்கு செல்ல ஆயத்தமானான். காலை சிற்றுண்டி உண்ண டைனிங் டேபிள் வந்ததும் கவிதா அவனுக்கு உணவை பரிமாறிக்கொண்டே கௌரி, புதிய வேலைக்கு போறே, சாமி கும்பிட்டு போடா, என்றதும் கௌரியும் சரிம்மா! என்று கூறி சாப்பிட்டு முடித்ததும் பூஜை அறைக்கு சென்ற அவன் மனம் வர்ஷினியை எப்படியாவது பார்க்கவேண்டும் அவளுக்கு என்ன குறை என்று கேட்டு என்னாலான உதவியை அவளுக்கு செய்ய வேண்டும் என்று மட்டும் தான் வேண்டிக் கொண்டது. 

 

புதிய வேலை, புதிய நண்பர்கள் என்று அவனுக்கும் வேலை பிடித்து நல்ல மாற்றமாக தான் இருந்தது. இருந்தாலும் அவன் மனம் வர்ஷினியைத்தான் தேடிக் கொண்டு இருந்தது. வேலைக்கு போகும் போதும் வரும் போதும் அவள் எங்கேயாவது தென்படுகிறாளா? என்று கண்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவன் அலுவலக கேன்டீன்க்குள் நுழையும் போதெல்லாம் வர்ஷினி தென்படுகிறாளா என்று தான் பார்த்துக் கொண்டிருப்பான். அதற்காகவே அவன் தினமும் கேன்டீனுக்கு வருவான். அன்றும் வழக்கம் போல் அவன் கேன்டீனுக்கு வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த பெண் வந்தாள். ஆம்! வர்ஷினியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மித்ரா தான் அங்கு வந்தாள். வந்தவள் காபி வரவழைத்து அருந்திக்கொண்டிருந்தாள். கௌரி, அவளிடம் சென்று எப்படி வர்ஷினியை பற்றி விசாரிப்பது? எப்படி அவளை அணுகுவது, அன்றைக்கே அவள் அப்படி கோபப்பட்டாள், என்று யோசித்துக் கொண்டே இருக்கையில் சந்தோஷ் அங்கு வந்தான். 

 

கௌரி மித்ராவிடம் சென்று வர்ஷினியை பற்றி விசாரித்தானா? மித்ரா சொன்ன அதிர்ச்சியான தகவல் தான் என்ன? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமோ மக்களே! 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
826 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page