தூவானம் -7

அவளது மௌனம் அந்த இடத்தையே நிசப்தத்தில் ஆழ்த்த, கண்ணாடிக்கு பின்னால் இருந்த அவளது இமைகளின் ஓரத்தில், மழையின் ஈரம் போலக் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.

அதனை கண்டவன் பதற்றத்துடன், “ஹலோ… என்ன ஆச்சு? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?” என ஆகாஷின் குரலில் இப்போது அக்கறை வெளிப்பட்டது.

“அப்படியெல்லாம் இல்லை பாஸு,” என்று சொல்லிவிட்டு, அவள் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“அப்புறம் ஏன் உன் கண்ணு கலங்குது? ஏதாவது கஷ்டம்னா சொல்லு… நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்,” என்று ஆகாஷ் சொல்ல, அவள் லேசாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் கண்ணீரும் கலந்திருந்தது.

“இந்த உலகத்துல சில விஷயங்களைச் சொல்லாம இருக்கிறதுதான் அழகு பாஸு. என் பிறந்தநாள்ல என் மனசுல இருக்கிற பாரத்தைச் சொல்லி உங்க டீயோட ருசியைக் கெடுக்க விரும்பல,” என்று சொல்லிவிட்டு, தன் மூக்குக்கண்ணாடியைக் கழற்றி,  சேலையின் முனையை எடுத்து மை கலையாதபடி தன் விழிகளில் வடிந்த நீர்துளியை மெல்லத் துடைத்துக் கொண்டாள்.

“சில நேரம், சில விஷயம்… யார்கிட்டயாவது ஒருத்தர்கிட்ட மட்டும் தான் சொல்லணும்னு தோணும் பாஸு. இன்னைக்கு என்னமோ என் நேரம், அந்த ரகசியத்தை உங்ககிட்டச் சொல்ல வைக்குது போல!” என்று அவள் சொல்லத் தொடங்கியபோதே அவளது குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.

“இந்தக் கம்பெனிக்கு வந்து இதோட ரெண்டு வருஷம் ஆகுது. ஆனா, இதுவரைக்கும் யாருமே என்கிட்ட இப்படி ஒரு கேள்வியைக் கேட்டதில்லை. எல்லாரும் வேலை, டார்கெட், அந்த மங்கூஸ் மண்டையனோட டார்ச்சர்னு அவங்கவங்க உலகத்துல தான் ஓடிட்டு இருந்தாங்க. நான் எப்போதும் கலகலப்பா பேசுறதால என் சிரிப்புக்கு பின்னாடி இருக்கிற மௌனத்தை யாருமே கவனிச்சதில்லை,”

“நீங்க முதல் முதல்ல அந்த விடை தெரியாத கேள்வியைக் கேட்டதால, எனக்குள்ள ஒளிச்சு வச்சிருந்த பதிலைச் சொல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கேன். நான் ஏன் ஊர் ஊரா மாறினேன்னு கேட்டீங்கல்ல? நான் ஏன் விடை தெரியாத கேள்வின்னு சொன்னேன்னு தெரியுமா?”

அவளது கண்கள் இப்போது ஆகாஷின் கண்களைத் தேடின. “எனக்கு அப்பா கிடையாது. அவர் யாருன்னே எனக்குத் தெரியாது.”

அவளது அந்த வார்த்தைகள், அந்த அதிகாலை மழையின் சில்லிப்பை விடவும் மிகக் கொடூரமாக ஆகாஷின் இதயத்தைத் தாக்கியது.

“ஏன்… என்ன ஆச்சு?” என்று ஆகாஷ் பதற்றத்துடன் கேட்க, அவள் மீண்டும் கலங்கிய தன் கண்களைத் துடைக்காமலேயே அவனை நேராகப் பார்த்தாள். அந்தப் பார்வையில் இதுவரை இருந்த குறும்பு மறைந்திருந்தது.

“நான் ஒரு அனாதை பாஸு…!” அவள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை, ஆகாஷின் கோடிக்கணக்கான சொத்துக்களையும் கௌரவத்தையும் ஒரு நொடியில் அர்த்தமற்றதாக்கியது.

“கோயம்பத்தூர்ல ஒரு அனாதை ஆசிரமத்துல தான் வளர்ந்தேன். அங்கே தங்கிப் படிச்சு முடிச்சுட்டு, என் சொந்தக் காலில் நிக்கணும்னு வேலை தேடி இந்தச் சென்னைக்கு வந்தேன். இப்போ ரெண்டு வருஷமா இந்தக் கம்பெனில வேலை செஞ்சுட்டு இருக்கேன். எனக்குன்னு சொல்லிக்க, எனக்காகக் காத்துக்கிட்டு இருக்க இந்த உலகத்துல யாருமே கிடையாது,” என்று அவள் சொல்லச் சொல்ல, அவளது குரல் நடுக்கத்தில் கம்மியது.

“ஏன்… இன்னும் சொல்லப்போனா, இன்னைக்கு உண்மையாவே என்னோட பிறந்தநாலான்னு கூட எனக்குத் தெரியாது பாஸு. ஏதோ ஒரு நாளைக் குறிப்பிட்டு என் பர்த் சர்டிபிகேட்ல ஆசிரமத்துல எழுதி வச்சிருக்காங்க. அதைத்தான் இன்னைக்கு வரைக்கும் எனக்கான நாளா நினைச்சு நான் கொண்டாடிட்டு இருக்கேன். எனக்குன்னு ஒரு சொந்தம் இல்லாதப்போ, இந்த ஒரு நாளாவது எனக்கானதா இருக்கட்டுமேன்னுதான் எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்து சந்தோஷப்படுறேன்…”

அவள் சொல்லி முடித்தபோது, அந்த இடமே ஒரு நிமிடம் உறைந்து போனது. ஆகாஷிற்குத் தொண்டையை என்னவோ அடைப்பது போல இருந்தது. அவளை ஒரு குறும்புக்காரப் பெண் என்று மட்டுமே நினைத்திருந்தவனுக்கு, அவளது இந்த போராட்டம் அவனை நிலைகுலையச் செய்தது.

லண்டனில் சகல வசதிகளுடன் வளர்ந்த ஆகாஷிற்கு, ‘அப்பா இல்லை’ அல்லது ‘சொந்தம் இல்லை’ என்பது வெறும் சினிமா கதையாகத்தான் தெரிந்திருந்தது. ஆனால், தன் கண் முன்னால் ஒரு பெண், இவ்வளவு வலியைச் சுமந்து கொண்டும் பிறருக்குச் சாக்லேட் கொடுத்துச் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது, அவனது இதயம் முதன்முறையாக ஒரு பெண்ணுக்காகத் துடித்தது.

மழை கொட்டும் சாலையை பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்களில் அணை உடைந்து கண்ணீர் தாரை தாரையாக வழியத் தொடங்கியது. கண்ணாடிக்கு பின்னால் மறைந்திருந்த அந்தத் துயரம் இப்போது மழையாய் கொட்டியது.

அவன் அவளது அழுகையை நிறுத்த என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான். அவனது கை இயல்பாக அவளது கண்ணீரைத் துடைக்க நீண்டது, ஆனால் ஒரு கணம் தயங்கித் தன் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டான்.

“சாரி… நான் தெரியாமக் கேட்டுட்டேன்,” என்று ஆகாஷ் தழுதழுத்த குரலில் சொல்ல,

அவள் சட்டென்று தன் பழைய சிரிப்பை மீட்டெடுத்தாள். “அட விடுங்க பாஸு! இன்னைக்கு என் பர்த்டே… சோகமா இருக்கக் கூடாது. நீங்க கேட்டீங்க, நான் சொல்லிட்டேன், அவ்வளவுதான்!” என்று சொல்லிவிட்டுத் தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்தாள்.

ஆகாஷிற்கு இப்போது அவள் மீது இருந்த ரசிப்பு, ஒரு மரியாதையாக மாறியிருந்தது. ஒரு சாதாரண ஊழியராகத் தன் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தப் பெண்ணின் பின்னால் இவ்வளவு பெரிய கதை இருக்கும் என்று அவன் நினைக்கவே இல்லை. அவளது அந்த ‘விடை இல்லாத கேள்வி’ இப்போது ஆகாஷின் மனதிற்குள் ஒரு பெரிய விடையைத் தேடத் தொடங்கியது.

தேவை இல்லாமல் ஒரு மலரைப் போன்ற மனதை நோகடித்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு ஆகாஷின் மனதை ஆட்கொண்டது. “சாரி… உன் சந்தோஷமான நாள்ல உன்னை ரொம்பவே காயப்படுத்திட்டேன் போல” என்று அவன் தழுதழுத்த குரலில் கூற.…

அந்தச் சோகத்தையும் ஒரு மெல்லிய புன்னகையோடு கடந்தவள், “அப்படியெல்லாம் இல்லை பாஸு… சில நேரத்துல பழைய நினைவுகள் வர்றதும் நல்லதுதான். அப்போதான் நாம கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானதுன்னு நமக்கே புரியும்,” என்று முதிர்ச்சியோடு கூறிவிட்டு கைகழுவ எழுந்தாள்.

அவள் முன்னால் நடக்க, ஆகாஷ் அவளைத் தொடர்ந்து பின்னாடியே சென்றான். அப்போது வீசிய மழைக் காற்றில், அவளது சேலைத் தலைப்பு பறந்து வந்து ஆகாஷின் முகத்தில் மென்மையாக உரசிச் சென்றது. அந்த நொடிகள் அப்படியே உறைந்தான். மழையில் நனைந்த அந்தச் சேலையின் ஈரம், ஆகாஷின் இதயத்தில் ஒரு அழகிய கவிதையை எழுதிக்கொண்டிருந்தது.

பின்னர் டீக்கும் போண்டாவுக்கும் பணம் செலுத்துவதற்காக அவள் கவுண்டருக்குச் செல்ல, ஆகாஷ் பதற்றத்துடன் தன் சட்டைப்பையிலும் பேண்ட் பையிலும் துழாவினான். பல கோடி ரூபாய்களை விரல் நுனியில் கையாளும் அந்தத் தொழில் அதிபரிடம், அந்தச் சிறு கடைக்குத் தேவையான சில்லறைப் பணம் அப்போது கைவசம் இல்லை. அவனிடம் இருந்ததெல்லாம் பிளாட்டினம் கார்டுகளும், மொபைல் வாலட்களும் மட்டுமே! அந்தச் சிறிய ஓலைக் கடைக்காரரிடம் கார்டு மெஷின் இல்லை என்பதைப் பார்த்ததும் ஆகாஷ் திகைத்து நின்றான்.

அவனது அந்தத் தவிப்பையும், “பணம் இல்லையோ?” என்று தேடும் அவன் முகபாவனையையும் சட்டென்று புரிந்துகொண்டவள் அவனைப் பார்த்து ஒரு குறும்புச் சிரிப்பை உதிர்த்தாள்.

“பரவாயில்லை பாஸு… கவலைப்படாதீங்க. இன்னைக்குத்தானே உங்களுக்குக் கம்பெனில முதல் நாள்? கைல காசு இல்லாம இருக்கிறது சகஜம்தான். நீங்க சம்பளம் வாங்கினதும் எனக்கொரு பெரிய ட்ரீட் கொடுங்க. இப்போதைக்கு என்னோட பிறந்தநாள் ட்ரீட்டா நானே உங்களுக்கும் சேர்த்து கொடுத்திடுறேன்,” என்று கூறி, அவனது கௌரவம் அடிபடாதவாறு அழகாக அந்தச் சூழலைக் கையாண்டவள்.

மூவருக்கும் சேர்த்து அவளே பணத்தைக் கொடுத்தாள். அந்தச் சில ரூபாய் தாள்கள், ஆகாஷின் பார்வையில் அவளது உயர்ந்த குணத்தை விடவும் மதிப்புமிக்கதாகத் தெரிந்தது.

“இது சரியில்லை,” என்று அவன் சொல்ல முற்பட,

“ஒன்னும் தப்பில்லை பாஸு… அக்கா கிட்ட காசு வாங்கிக்கிற மாதிரி நினைச்சுக்கோங்க,” என்று அவனை ஒருமையில் சொல்லிவிட்டு விறுவிறுவெனச் சென்று காரில் ஏறி அமர்ந்தாள்.

“எது அக்காவா … !” என ஆகாஷ் பிரமிப்பில் அப்படியே நின்றான்.

காரின் கதவைச் சாத்திவிட்டு அவள் ஜன்னல் வழியே அவனைப் பார்த்து, “என்ன பாஸு… மழை நின்னுடுச்சு, ஆனா நீங்க அப்படியே நிக்குறீங்க? சீக்கிரம் வாங்க!” என்று அழைக்க, ஆகாஷ் ஒரு புதிய உத்வேகத்துடன் காரின் உள்ளே புகுந்தான்.

கார் அந்த டீக்கடையை விட்டு நகர்ந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு வரை ஒரு கல்யாணச் சத்திரத்தைப் போலக் கலகலப்பாகப் பேச்சும் சிரிப்புமாய் இருந்த அந்தச் சிறிய கார், இப்போது நிசப்தமான ஒரு நதியைப் போலச் சாலைகளில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அவளது கடந்த காலத்தை அனாவசியமாகத் தோண்டி எடுத்து அவளை அழ வைத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு ஆகாஷின் மனதை ஒரு பாரமான மேகமாய் சூழ்ந்து கொண்டது.

அவள் மௌனமாகிவிட்டாள். ஆனால் ஆகாஷிற்கு அந்த மௌனம் கூட ஒரு கவிதையாகவே தெரிந்தது. அவள் பேசிய வார்த்தைகளை அவன் காது கொடுத்துக் கவனித்தானோ இல்லையோ, அவள் பேசும்போது அவளது உதடுகளின் அசைவிற்கும், மொழியின் வேகத்திற்கும் ஏற்ப தாளமிட்ட அவளது செவியோர ஜிமிக்கிகளின் நடனத்தை அவன் ஒரு ரசிகனாக ரசித்துக் கொண்டே வந்தான்.

மழையில் நனைந்த அவளது சிரிப்பழகு, எதார்த்தமான பேச்சு மொழி, இப்போது ஆழ்ந்திருக்கும் இந்த அமைதி என அவளது ஒவ்வொரு பரிமாணத்தையும் அவன் தன் மனக்கண்ணால் அணு அணுவாகச் செதுக்கிக் கொண்டிருந்தான்.

கார் மெல்ல நகர, அவள் மீண்டும் ஜன்னல் கண்ணாடியைச் சற்றே கீழே இறக்கினாள். குளிர்ந்த காற்று காருக்குள் புகுந்து அவளது கூந்தலை வருடியது. வெளியே பெய்து கொண்டிருந்த மெல்லிய சாரலில் தன் மெல்லிய விரல்களை நீட்டி, அந்தத் துளிகள் தன் நகங்களில் பட்டுத் தெறிப்பதை ஒரு குழந்தையைப் போல ரசித்துச் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில் துளிகூடக் கள்ளமில்லை. அவளது விரல்கள் மழையில் நனைவதை விட, அவளது அந்தச் சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சியில் ஆகாஷின் இதயம் நனைந்து கொண்டிருந்தது.

இருந்தாலும், அவளது செய்கையில் ஒரு மாற்றம் தெரிந்தது. அடிக்கடி தன் கைக்கடிகாரத்தைப் பார்ப்பதும், காரின் ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்ப்பதுமாக அவள் சற்றுப் பரபரப்பாக இருந்தாள்.

“என்ன… ஆபீஸ்க்கு லேட்டாகிடுச்சுன்னு ரொம்பப் படபடப்பா இருக்கா?” என்று ஆகாஷ் அக்கறையுடன் கேட்டான். நானே உன்னோடு இருக்கும்போது உனக்கு என்ன பயம்?’ என்ற எண்ணம் அவன் அடிமனதில் இருந்தாலும், அவள் ஒரு சாதாரண ஊழியர் என்பதால் அந்த அச்சம் அவளுக்கு இருக்குமோ என்று நினைத்தான்.

“ச்ச… ச்ச… அதெல்லாம் இல்ல பாஸு!” என்று அவள் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு மீண்டும் கடிகாரத்தைப் பார்க்க, குழப்பத்துடன் அவளைப் பார்த்தவன் முகம் ஒரு பெரிய கேள்விக்குறியானது.

ஆகாஷின் குழப்பமான முகத்தைக் கண்டதும், தன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு நக்கலாகச் சிரித்தவள், என்ன பாஸ் அப்படிப் பாக்குறீங்க? ஆபீஸ்க்கு லேட்டா போனா ஜாலிதான்! ஏன்னா, போற நேரம் வரைக்கும் மழையை நல்லா ரசிச்சுட்டு ஜாலியா போலாமே. ஒருவாட்டி ஆபீஸ்க்கு உள்ள போய்ட்டா… அப்புறம் மறுபடியும் அந்த ரோபோ முன்னாடி உட்கார்ந்துட்டா மாலை வரைக்கும் லொட லொடன்னு கீபோர்டுல அடிச்சுக்கிட்டுத் தானே இருக்கணும்!” என்று அவள் முகத்தை ஒரு கோணலாக வைத்துக் கொண்டு சலித்தபடி கூறினாள்.

அவளது அந்த எதார்த்தமான பேச்சைக் கேட்டதும், ‘தன் கம்பெனியைப் பற்றியும் வேலையைப் பற்றியும் ஊழியர்கள் இவ்வளவு வெளிப்படையாகவா நினைக்கிறார்கள்?’ என்று எண்ணிய ஆகாஷிற்குப் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளுக்குத் தெரியாமல் மெல்லத் தலையைத் திருப்பிக் கொண்டு தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

மழை ஓய்ந்து, வானம் மெல்ல வெளுக்கத் தொடங்கியிருந்தது. கம்பெனியைப் பற்றியும், மேனேஜரின் ‘மவுசு மூக்கன்’ லீலைகளைப் பற்றியும் அவள் பேசப் பேச, நேரம் போனதே தெரியவில்லை. கார் கம்பெனியின் பிரம்மாண்டமான முகப்பை வந்தடைந்தபோது மணி அதிகாலை 5யை தொட்டிருந்தது.

“அண்ணா! வண்டியை இங்கேயே நிறுத்திக்கோங்க… நான் இங்கேயே இறங்கிடுறேன். இவரை மட்டும் நேரா வாசல் பக்கம் இறக்கிடுங்க… பாவம் புதுசு, வழி தெரியாது,” என்று டிரைவரிடம் உரிமையோடு கூறிவிட்டு, விறுவிறுவெனக் காரிலிருந்து இறங்கியவளை,

“ஹலோ… ஒரு நிமிஷம்!” என்று அவன் குரல் கொடுக்க, அவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

“உங்க பேர் என்ன?” என ஆகாஷின் கேள்வி எழுப்ப

தன் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டே, “ஏன் பாஸ்? கம்பெனி பத்தி நான் இவ்வளவு பேசினேன்னு யார்கிட்டயாவது என்னைக் கம்ப்ளைன்ட் பண்ணப் போறீங்களா?” என்று குறும்பாகக் கண்ணடித்தாள்.

“ச்ச ச்ச… அதெல்லாம் இல்ல. சும்மா… உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமேனுதான்,” என்று ஆகாஷ் சமாளிக்க.

அவள் தன் பையில் இருந்த சாக்லேட் கவரைத் தூக்கிக் காட்டி, ஒரு அழகான புன்னகையை உதிர்த்தவள். “ஓ… தாராளமா தெரிஞ்சுக்கலாமே! என் பேரு அகல்யா…”

அகல்யா…! பெயருக்கு ஏற்றார்போலவே அகலமான கண்களும், அதைவிட அகலமான மனமும் கொண்டவள் என்பதை இந்த ஒரு மணி நேரப் பயணத்தில் ஆகாஷ் உணர்ந்திருந்தான்.

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page